DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் இருபதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் இருபதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

3 mins
64


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருபது


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)

 

காஸினோ அனுபவங்கள்!


 ‘காசிக்குப் போயும் கருமம் தொலைக்காதவர்களும், கங்கைக்குப் போயும் முழுகாதவர்களும்’ இருக்க மாட்டார்கள். அதே போல் ‘லாஸ்வேகாஸ் போய் ‘கேஸினோ’ போகாதவர்களும்’ என்கிற ஒரு அடைமொழியும் பிரபலம். விளையாடுகிறார்களோ இல்லையோ! காஸினோக்களுக்குள் சென்றாலே சொர்க்கலோகத்துக்குள் நுழைந்தது போல் இருக்கும். ஒவ்வொரு காஸினோவும் ஒவ்வொரு ‘தீம்’ இல் அமைக்கப்பட்டு ஜ்வலித்துக் கொண்டிருக்கும்.

                                                          

                                            ‘காஸினோ என்பது சூதாட்ட விடுதி!

எனவே அமெரிக்காவின் மிகப் பிரபலமான லாஸ்வேகாஸ் நகரில் வாழும் என் மகன் – மருமகள் வீட்டிற்கு போய்ச்சேர்ந்த அடுத்த நாளே ‘காஸினோவுக்கு எப்பொ போலாம்?’ என்று அரிக்கத் தொடங்கினேன். ‘சூதாடுவது தவறு என்று எங்களுக்கு மட்டும் சிறிய வயதில் போதித்தீர்களே..’ என்றெல்லம் அதிகப்பிரசங்கித் தனமாக கேள்வி கேட்டுக் கொண்டு இராமல் பெருந்தன்மையுடன் அந்த வாரக்கடைசியில் அழைத்துப் போவதாக மகன் உறுதி அளித்தார்.

ரத/கஜ/துரக/பதாதிகள் – ட்ரவுசர்/டீசர்ட்/ஜீன்ஸ்/சூடிதார்/சல்வார்/கமீஸ்/சூ!

 

ஒர் இனிய மாலை (ஏழு மணிப்) பொழுதில் - மகனிடமிருந்து கடனாகப் பெற்ற அரை ட்ரவுசரும், , ‘when v r in vegas’ என்று வாசகம் பொருந்திய டீ சர்ட்டும் ஷூவும் அணிந்து கொண்டு தயாரானேன். (கொஞ்சம் ஒல்லியாக – ஏன் - இந்த வயதிலும் கொஞ்சம் அழகாக - ஓரிரு வெள்ளை முடிகளை கறுப்பாக்கிக் கொண்டு இருந்த) என் மனைவியை என் மருமகள் மிகுந்த சந்தோஷத்துடன் தன்னுடைய (ஜீன்ஸ் பேண்ட் சரிவர ஃபிட் ஆகாததால்) சூடிதார்-சல்வாரையும் – கமீஸையும் மாட்டி விட்டு இந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக நாங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த ஷூவையும் (அமெரிக்காவில் இதுவே ஐம்பது டாலர் ஆகும் – அமெரிக்காவில் வாக்கிங் போவதற்கு என்றே இந்தியாவில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது) காலில் திணித்து தயார் செய்திருந்தார்.


நாங்கள் நால்வரும் ஏதோ தர்பாருக்குப் போகும் ராஜ குடும்பத்தவரைப் போல காசினோவை நோக்கிப் புறப்பட்டோம். காஸினோக்களின் சொர்க்கபுரியாக விளங்கிய ‘ஸ்ட்ரிப் ஸ்ட்ரீட்’டுக்குள் கார் நுழைந்தபோது அசந்து விட்டோம். (‘ஸ்ட்ரிப்’ பற்றி தனித் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களைப் பார்க்கவும்) நியூயார்க்கில் ‘டைம் ஸ்கொயரில்’ பார்த்த பிரம்மாண்ட மின் ஒளி அலங்காரத்தைப் போல நூறு மடங்கு ’ஜொலிப்புடன்’ விளங்கியது அந்தப் பிரதேசம்.



இரவினில் ஆட்டம்.. சூதாடும் கூட்டம்..!

 

தெருவெங்கும் ஆங்காங்கே இளைஞர்கள் மிக சத்தமாக ‘ட்ரம்ஸையும்’ ‘ட்ரம்பெட்டுக்களையும்’ அலற விட்டுக் கொண்டிருக்க ஆங்காங்கே யுவன்களும்-யுவதிகளும் சூப்பர் நடனம் ஆடி அசத்திக் கொண்டிருந்தார்கள்.. காஸினோக்களின் உள் அலங்காரங்கள், சொர்க்கத்தின் உச்சத்தையே காட்டியது. மிகப்பிரமலமாக விளங்கிய ‘சீசர் பேலஸ்’, ‘பெல்லாஜ்ஜியோ’, எம்.ஜி.எம்., போன்ற காஸினோக்களைப் பார்த்து விட்டு ‘சீசர் பேலஸ்ஸில்’ குறைந்த பட்சம் ஐந்து டாலர் பந்தயம் கட்டி விளையாடக் கூடிய ‘மூனு சீட்டு போக்கர்’ ஆட்டத்தின் முன் கொண்டுபோய் நிறுத்தினான் என் மகன்.


                                                     

     


பல நூற்றுக்கணக்கான ‘ஸ்லாட்’ இயந்திரங்கள் இருக்கும். (‘ஸ்லாட் இயந்திரம்’ என்பது தொலைக் காட்சி திரை போன்ற ஒரு திரையும் ஒரு கீபோர்டும், காசு போட உண்டியல் ஓட்டையைப் போன்ற ஒரு ஒட்டையும் கொண்டதாக இருக்கும்.) அதற்குள் டாலர்களை செலுத்தி கீபோர்டில் குறிப்பிட்ட சில பட்டன்களை ‘டொக்கு.. டொக்கு’ என்று தட்டிக் கொண்டிருப்பார்கள். ஒரு தட்டுக்கு எவ்வளவு காசு என்று தேர்வு செய்து தட்டிக் கொண்டிருப்பார்கள். தட்டுக்கு அதிக காசு பந்தயம் கட்டினால் அதிக காசு பரிசு வரும். எந்த தட்டிற்கு பணம் வரும் என்பது நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. எவ்வளவு வரும் என்பது அதை விட சஸ்பென்ஸான ஒன்று. பெரும்பாலான தட்டுக்கள் பயனற்றதாக இருக்கும். எல்லா தட்டுக்களுமே பயனற்றதாக போகக்கூடிய வாய்ப்புக்களும். உண்டு. ‘உதிரி உதிரியாக’ சில காசுகளும் வரலாம். ‘ஜாக்பாட்’ போன்று ஒரு உயர்ந்த தொகையும் வரலாம்.


இதைத்தவிர, ‘டை’ உருட்டி விளையாடும் விளையாட்டுக்கள் உண்டு. சக்கரத்தை சுழற்றி விளையாடும் விளையாட்டுக்கள் உண்டு. ‘கீனோ’ என்றொரு விளையாட்டு உண்டு. சீட்டுக்கட்டு வைத்து விளையாடும் ‘போக்கர்’ (போக்கரில் பல வகை விளையாட்டுக்கள் உண்டு) ‘ப்ளாக்ஜாக்-21’ போன்ற விளையாட்டுக்கள் உண்டு. ஒவ்வொரு விளையாட்டிலும் சாதாரண வெற்றி/தோல்வியால் வரும் லாப/நஷ்டத்தை விட, ஈர்ப்பு தரும் பல போனஸ் வகை பரிசுகளை வைத்திருப்பார்கள்.


இந்த காஸினோக்களைப் பற்றிய தகவல்களை படிக்கும் போது தெரிந்து கொண்ட, குறிப்பிடப்படத்தக்க சில தகவல்கள்:


இந்த விளையாட்டுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால், இவற்றிற்கு கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் உண்டு. காஸினோ நடத்துபவர்கள், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைதான் தாங்கள் வெற்றி கொள்ளும் வகையில் விளையாட்டு விதிகள் இருக்க வேண்டும். பெரும்பங்கான சதவிகிதம், விளையாட்டை ஆட வருபவர்கள் அடையும் வண்ணம் இருக்க வேண்டும். இப்படி நிறைய விதிகள் இருக்கிறது.


நடையா… இது.. நடையா…!

 

இடையிடையே, இடையே இருக்காதோ என்று நினைக்கத் தூண்டும் சில இளம் பெண்கள், இன்றியமையாத அளவு உடை மட்டும் அணிந்து கொண்டு வந்து, விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு குளிர்பானம், பீர், மது, தேனீர், காபி, தண்ணீர் என்று கேட்பவற்றை இலவசமாக.. ஆம்.. இலவசமாக வினியோகிக்கிறார்கள். இவை அந்த ‘காஸினோ’க்களின் சார்பில் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, விளையாடிக் கொண்டிருப்பவர்கள், ஓரிரு டாலர்களை ‘டிப்ஸ்’ தருகிறார்கள். (இந்த ஓரிரு டாலர்களுக்காக அவர்கள் இப்படி வந்து நிற்க வேண்டி இருக்கிறதே என்று நம் இந்திய மனம் வருந்தாமல் இல்லை.)


ஒவ்வொரு விளையாட்டையும் நடத்துவதற்கு என்று ‘காஸினோக்கள் சார்பில் ‘டீலர்’ ஒருவர் இருப்பார். சீட்டுக்கட்டை (அதற்கான ராக்கில் கலைத்து) போடுவது, ‘டை’ உருட்ட உதவுவது, பணம் வாங்கிக்கொண்டு டோக்கன்கள் (chips) கொடுப்பது, முடிவுகளுக்கேட்ப பணம் கொடுப்பது/சேகரிப்பது என்று பலவிதமான பொறுப்புக்களை செய்கிறார்கள். அவர்களுக்கும், நிறைய காசு ஜெயிப்பவர்கள், ‘டிப்ஸ்’ கொடுப்பது உண்டு.


குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை ‘டீலர்கள்’ மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு விளையாட்டையும் காமெரா கண்காணித்துக் கொண்டே இருக்கும். ‘டீலர்கள்’ அல்லது விளையாடுபவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதில் தெரிந்து விடும்.


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 21ல் ............. தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics