Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

DEENADAYALAN N

Classics


4  

DEENADAYALAN N

Classics


அத்தியாயம் ஒன்பதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் ஒன்பதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

5 mins 23.6K 5 mins 23.6K

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஒன்பது


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்

(கோவை என். தீனதயாளன்)

 


ந..யா..க..ரா!

 

 

 


ந..யா..க..ரா!


நம்மில் பலர் அவ்வப்போது கேட்டிருக்கும் வார்த்தை. ஒரு இளைஞியைப் பார்த்து ஒரு இளைஞன் அதிகமாக ‘ஜொள்’ளு விட்டால், அவரது நண்பர்கள் ‘டேய்..மச்சி.. அவன் வாயில பாருடா நயாகரா வீழ்ச்சி’ என்று கிண்டல் செய்வார்கள்.


சிலர் பேசினால் வாயிலிருந்து நீர் வீழ்ச்சி போல் சாரல் தெளிக்கும். அவர்களைப் பார்த்து ‘டேய்.. இவன் வாயிலே நயாகரா வாட்டர் ஃபால்ஸ் இருக்குடா..’ என்போம்.


மிக நீளமாக முடி உள்ள பெண்ணைப் பார்த்தால் ‘அவள் முடியைப் பார் - நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல் நீண்டு இருக்கிறது!’ என்று சக பெண்மணிகள் தங்கள் இரு காதுகளிலும் புகை வெளி வர ஆச்சரியத்தை வெளிப் படுத்துவார்கள்.


இப்படி நம்மில் பலர் நயாகராவைப் பார்க்காமல் இருந்தாலும் சர்வ சாதாரணமாக அந்த வார்த்தையை உபயோகத்திருப்போம்.


பாராமல் இருந்த அந்த பிரம்மாண்டத்தை பார்க்கும் வரையில் நான் கூட ‘என்னத்தே.. நீரு.. வீழ்ச்சி..’ என்று ‘என்னத்தே கன்னையா’ பாணியில் நினைத்திருந்தேன். அது அப்படி ஒரு உற்சாக மகிழ்வை ஏற்படுத்தும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை.


நயாகராவின் தோற்ற அழகை, படிப்பவர்களுக்கு எப்படி உவமைப் படுத்துவது என்று நான் யோசித்தேன். உடனே கம்பராமாயணத்தில் ராமனின் அழகை வியக்கும் கம்பனின் இந்த வரிகள் நினைவுக்கு வந்தது!


வெய்யோன் ஒளி தன் மேனியின்

விரி சோதியின் மறைய,

பொய்யே எனும் இடையாளொடும்,

இளையானொடும் போனான் -

‘மையோ, மரகதமோ, மறி

கடலோ, மழை முகிலோ,

ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்

அழியா அழகு உடையான்


இதைப் போல் எளிமையாகச் சொல்லி விளங்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. (பயப்படாதீர்கள். கவிதை எல்லாம் எழுதி உங்களை பயமுறுத்தும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.)


நிலவில் முதன் முதலில் கால் வைத்து அனுபவித்த உணர்வை ‘ஆர்ம்ஸ்ட்ராங்’ நமக்கு சொல்லலாம். ஆனால் அந்த உணர்வின் முழு உணர்ச்சிப் பிரவாகத்தை அப்படியே நம்மால் அனுபவித்து விட முடியாது.


எவெரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் தொட்டவர் அனுபவித்து வியந்த அருமையான தருணத்தை அவரின் சொல் அல்லது எழுத்து மூலம் நாம் அடைந்து விட முடியாது.


பெற்றெடுத்த ஒரு பெண் பிரசவ வலியை சொல்லலாம். ஆனால் அதன் முழு பரிமாணத்தை அவளால் நம்மை உணர வைத்து விட முடியாது.


‘ப்..ப்..ப்பா!’

 

நயாகரா ஆற்றின் மேல் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியை இரு நாடுகள் பங்கு போட்டுக் கொள்கின்றன. அதாவது அமெரிக்கா – கனடா நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கிறது. ‘ரெயின்போ’ என்னும் பாலம் அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கிறது. தொள்ளாயிரத்து ஐம்பது அடி நீளம் கொண்டது.


இரு நாடுகளிலிருந்தும் நயாகராவை அணுகலாம். நாங்கள் அமெரிக்கா பக்கத்திலிருந்து கண்டு களித்தோம். சுமார் நூற்று அறுபத்தைந்து அடி உயரத்திலிருந்து வீழும் அருவியின் வீழ்வேகம் வினாடிக்கு எண்பத்தைந்தாயிரம் கண சதுர அடி என்று குறிப்பிட்டார்கள்!


நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’ விஜய்சேதுபதி பாணியில் - ‘ப்..ப்..ப்பா’ என்று - நம் கண்கள் விரிந்து விரிந்து ஒரு எல்லைக்கு மேல் விரிய முடியாமல் தவித்துப் போகிறது.


நயாகரா நுழைவுவாயிலில் நுழைந்து சில நூறு அடிகள் நடந்த உடனேயே நீர் வீழ்ச்சி நம் கண்ணில் பட்டு விடுகிறது. ஆனால் அது நாம் காணவிருக்கும் பிரும்மாண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் என்பது, நாம் ‘Maid of the Mist Boat Tour’ –க்கான அனுமதிச் சீட்டை வாங்கி படகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பிக்கும் போதுதான் புரியத் தொடங்குகிறது.


“ஏலோலோ ‘த்ரில்’லுஸா!”

 

இந்த படகு சவாரி. துவங்கும் முன் பல்வேறு அறிவிப்புகளும் சிற்சில வரலாற்று நினைவூட்டல்களும் கொடுக்கிறார்கள். அருவியை அருகில் சென்று காண்பதற்கு இவை நம்மை தயார் படுத்துகின்றன. அதோடு “பயனித்து-எறி’’ மழை அங்கியையையும் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். இதை சாரல் தடுப்பு அங்கி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


(பயனித்து-எறி – பயன்படுத்தி தூக்கி எறி – அதாவது ‘Use&Throw” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல். அடடே! தமிழில் ஒரு புது சொல்லைக் கண்டு பிடித்து விட்டேன் போல் இருக்கிறதே! தமிழறிஞர்கள் கண்ணில் இது பட வேண்டும்! பட்டு - என்னைப் பாராட்டினால் தமிழ் நாட்டில் பிறந்த முழுப் பயனையும் அடைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்!)


அந்த அங்கியின் தவிர்க்க முடியாத பயன் பாட்டை, நீர்வீழ்ச்சியின் அருகில் செல்லும் போதுதான், நாம் முழுமையாக உணர முடியும்.


படகு சில நிமிடங்கள் நிலை நீரில் செல்கிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க நம்முடைய - உற்சாகமான பரபரப்பான கிளர்ச்சியான விறுவிறுப்பான ஆர்வமூட்டும் உத்வேகமுள்ள - தருணங்கள் துவங்குகின்றன! அருகில் செல்ல செல்ல நீர் வீழ்ச்சியின் சாரல்களின் தாக்கம் வேகம் எடுக்கிறது. கொடுக்கப்பட்ட சாரல் தடுப்பு அங்கியை நம் கைகள் தானாகவே நமக்கு அணிவித்து விடுகின்றன. பயணம் தொடர தொடர மெது மெதுவாக குளிர் நம்மை ஆரத்தழுவிக் கொள்ள நடுக்கம் எகிறத் தொடங்குகிறது. இன்னும் அருகே அருகே செல்ல செல்ல நீர்வீழ்ச்சியின் தாக்கம் ஒவ்வொரு சதவிகிதமாக ஏற ஆரம்பிக்கிறது. நீர் வீழ்ச்சியை படகு இன்னும் இன்னும் இன்னும் என்று நெருங்க நெருங்க நெருங்க நம் ஆர்வமும் விறுவிறுப்பும் கிளர்ச்சியும் உத்வேகமும் உற்சாகமும் அதே ஒவ்வொரு சதவிகிதமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் நீர்வீழ்ச்சியின் அருகே செல்ல செல்ல, படகில் இருந்த, நாடு மொழி இனம் தெரியாத ஆயிரக்கணக்கான மக்களின் பயம் மகிழ்ச்சி ஆச்சரியம் அனைத்தும் கலந்து ஒருமித்த குரலாக ‘ஹா..ஹோ..க்ர்ச்..’ என்ற ஒலிகள் வயிற்றின் அடித்தளத்திலிருந்தும் தொண்டையின் கீழ்த் தளத்திலிருந்தும் அருவியின் இரைச்சலையே மிஞ்ச முயற்சி செய்து தோற்றுப்போவதும் பின் மீண்டும் முயல்வதும் அருவியின் இறைச்சலோடு போட்டி போடுவதுமாக தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் நான் கேட்டது மக்களின் ‘ஹா’ என்ற உற்சாக சத்தமும் ‘ஹோ’ வென்ற அருவி வீழும் சத்தமும் ‘ஜோ’ வென்று கண் எதிரில் மிகப் பிரம்மாண்ட விஸ்தீரணத்தில் வீழ்ந்து கொண்டிருந்த அருவியையும் தவிர வேறொன்றுமில்லை.


‘சுயம் மறந்தேன்..!’

 

அதன் பின்னர் தான் எங்கள் ‘பீட்’ இன்னும் எகிற ஆரம்பித்தது. ஆம்! படகு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின் மெதுவாக சுழல (படகு சுழல்கிறது என்பதைக் கூட நம்மால் உணர முடியாத மிக மிக மெதுவான வேகத்தில்) ஆரம்பித்தது. அது வரை எதிரில் பட்டையாய் தெரிந்த நயாகரா நீர் வீழ்ச்சி பின் ஓர் அரை வட்டமாக நம் கண் முன் பரந்து விரிய விரிய நூற்று அறுபத்தைந்து அடி உயரத்திலிருந்து வினாடிக்கு எண்பத்தைந்தாயிரம் கண சதுர அடி வேகத்தில் ‘ஸ்லோ மோஷனில்’ என் கண் முன் வீழ்ந்து கொண்டிருந்த அந்த மாயா ஜாலத்தை மகேந்திர வித்தையை நயாகரா நீர் வீழ்ச்சியின் அழகை அல்லது அதிசயத்தை அல்லது பிரம்மாண்டத்தை அல்லது பயத்தை அல்லது ஆனந்தத்தை அல்லது சாந்தத்தை அல்லது கிளர்ச்சியை அல்லது ஆண்மையை அல்லது பெண்மையை அல்லது இயற்கையின் இயற்கையை (எனக்கு எல்லாமே வழங்கிய இறைவா – இன்னும் கொஞ்சம் பாண்டித்யத்தை தமிழில் கொடுத்திருக்கலாமே) எப்படி நான் விவரிப்பது?


என் உற்சாகத் துள்ளல் இத்தோடு நின்றிருந்தாலே எனக்கு ஆயிரம் மடங்கு மன நிறைவு ஏற்பட்டிருக்கும். ஆனால் இயற்கை அன்னை – என்ன நினைத்தாளோ தெரியவில்லை! என்னை திக்குமுக்காடச் செய்து மூச்சடைத்து விடுவது என்று நினைத்தாளோ என்னவோ!. படகு அரை வட்ட கோணத்திலிருந்து மேலும் அதே ‘ஸ்லோ மோஷனில்’ ஒவ்வொரு டிகிரியாக சுழல ஆரம்பிக்க, கடவுள், அண்டம், பால்வெளி, நட்சத்திரங்கள், கிரகங்கள், உலகங்கள், கண்டங்கள், நாடுகள், ஊர்கள், மக்கள், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் (என் அன்புப் பேரன் விவானைத் தவிர) எதுவும் என் உணர்விலோ மனசிலோ அறிவிலோ நிற்கவில்லை. ஒரு நிலையில், என்னைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது டிகிரி கோணத்திலும் நீர் வீழ்ச்சி வீழ்ந்து கொண்டிருக்கிறது போலவும் நான் நட்ட நடுவில் நின்றிருப்பது போலவும் உணர்கிறேன். நீர்விழ்ச்சியும், அவ்வபோது என் பேரன் விவானின் தோற்றம் அதில் ‘ஸூபர் இம்போஸ்’ ஆகி சிரிப்பதும் பின் மீண்டும் நீர் வீழ்ச்சியும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருந்தது. என்னை நானே தொலைத்திருந்த அந்த நிலையில் எத்தனை நேரம் போனதோ தெரியவில்லை. பின் மீண்டும் படகின் சுழற்சி என்னை (என் அன்புப் பேரன் விவானோடு) சொந்த பந்தங்களுக்கு, குழந்தைகள், மனைவி, அம்மா, அப்பா, மக்கள், ஊர்களுக்கு, நாடுகளுக்கு, கண்டங்களுக்கு, உலகங்களுக்கு, கிரகங்களுக்கு, நட்சத்திரங்களுக்கு, பால்வெளிக்கு, இந்த அண்டத்திற்கு, கடவுளுக்கு மெது மெதுவாக கொண்டு வந்து சேர்த்தது!


சில பேர் ஹெலிகாப்டரில் ஏறி மேலிருந்து கீழாக ஒரு பறவையின் பார்வையில் பார்த்து வந்து அந்த காட்சியை விவரித்தார்கள். சிலர் நீர் வீழ்ச்சியின் இரவுநேர தோற்றத்தை படங்களில் காண்பித்து பிரஸ்தாபித்தார்கள். அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை மொத்த நீர்வீழ்ச்சியும் ஒரு பனிப் பாறையாக உறைந்து கிடக்குமாம். சிலர் அந்தக் காட்சியை புகைப்படத்தில் காண்பித்து வியந்து மாய்ந்தார்கள். நான் அருகில் சென்று அனுபவித்த இதே அனுபவத்தை அவர்கள் அனுபவித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி அனுபவித்திருந்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.


அதன் பிறகு படகு மெதுவாக கரைக்குத் திரும்ப அதிலிருந்து இறங்கியபோது மனம் முழுக்க ஒரு பிரமிப்பு நிறைந்திருந்தது!


அதன் பிறகு ‘Cave of the Wind’ என்னும் மற்றொரு பார்வையில் நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம். அதாவது நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டு நிலையிலிருந்து அதன் அழகைப் பருகும் போது, பீய்ச்சி அடிக்கும் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் உருவாகும் பேய்க் காற்று, நமக்கு குளிரையும் சாரலையும் பீதியையும் கிளர்ச்சியையும் ஒரு சேர அளிக்கும் பாருங்கள்.. அந்த ‘த்ரில்’ ஒரு தனி ரகம். இந்த பார்வையிலும் நாங்கள் அடைந்த புலகாங்கிதத்தை எவ்வளவோ விவரிக்கலாம் என்றாலும், முன் விவரித்த ‘Maid of the Mist’ ஏற்படுத்திய பிரம்மிப்புக்கு முன் இது அவ்வளவு எடுபடாது என்பதால் இதை மேலும் பெருக்காமல் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.


(‘அப்பா.. . தப்பிச்சோம்...!’ என்று யாரங்கே முணுமுணுப்பது…!)


நயாகரா முடித்து மீண்டும் நடைப் பயணமாகவே அறைக்குத் திரும்பினோம். வழியில் இந்தியன் கிட்சன், வில்லேஜ் ஆப் இன்டியா என இரண்டு மூன்று இந்திய உணவங்களைப் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. இரவு உணவை பார்சல் வாங்கி வந்து உண்டு முடித்து விட்டு (சப்பாத்தி / சப்ஜிதான்) உறங்கி விட்டோம்.
அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பத்தில் தொடரும்…


Rate this content
Log in

More tamil story from DEENADAYALAN N

Similar tamil story from Classics