DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் ஆறுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் ஆறுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

5 mins
22.5Kநான்கு பரிமாண படக் காட்சி!

 

‘மேடம் டுஸ்ஸாட்ஸ்’ ஸில் ஒரு பிரத்தியேக காட்சி ஒன்றைக் காட்டினார்கள். அது நான்கு பரிமாண படக் காட்சி. உள்ளே சென்று அமர்ந்தவுடன் ஒரு படம் ஓட ஆரம்பித்தது. இடையில் வெள்ளம் வந்தால் நம் மீது உண்மையான தண்ணீரே பீய்ச்சி அடிப்பதைப் போல் உணர்வோம். ஏதாவது இடி இடித்தால் நம் தலை மீதே இறங்குவது போல் இருக்கும். சத்தம் நேராக நம் காதில் மட்டுமல்லாது மூளைக்கே சென்று தாக்குவதைப் போல் இருக்கும்.


நம் ஊரில் அவதார்-கோச்சடயான் போன்ற முப்பரிமாண திரைப் படங்கள் பார்க்கப் போகும்போது இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு கண்ணாடி கொடுப்பார்கள். பின் படம் முடிந்து வெளியில் வரும்போது கண்ணாடியை அவர்களிடம் கொடுத்து விட்டு அந்த இருபது ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


ஆனால் இங்கு அப்படி செய்யவில்லை. நம் மீது மிகுந்த நம்பிக்கை. உள்ளே போகும்போது கண்ணாடியை கையில் கொடுக்கிறார்கள். வெளியில் வரும்போது அங்கிருக்கும் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் வாளியில் நாமே போட்டு விட்டு வர வேண்டும். நான் சற்று நின்று கவனித்த வரை எல்லோருமே கண்ணாடியை அந்த வாளியில் போட்டு விட்டுதான் வந்தார்கள். அது மட்டுமல்ல. அதை ‘ஸ்டெரிலைஸ்’ (கிருமிநாசினி திரவம்) செய்து விட்டுத்தான் அடுத்த காட்சிக்கு கொடுப்பார்கள் என்றும் தெரிந்தது.


                                        

 

துபாய்..துபாய்குறுக்குசந்து-துபாய்மெயின்ரோடு!

 (jetlag)


வந்த முதல் நாளே நியூயார்க்கில் இவ்வளவு சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருக்கும் நாங்கள் உங்களுக்கு ஒரு முக்கிய விளக்கத்தை அளிக்க வேண்டும்!


இல்லையென்றால், ஏற்கனவே அமெரிக்கப் பயணம் போனவர்கள், ‘அமெரிக்கா போனாங்களாம் - அடுத்த நாளே சுறுசுறுப்பா சுத்துனாங்களாம்..! டேய்.. அமிஞ்சிக்கரைப் போய்ட்டு வந்து சும்மாங்காட்டியும் பீலா உர்ற டுபாக்கூர் பார்ட்டிடா இது’ – என்று வித்தியாசமான பாஷையில் கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள்!


‘துபாய் - துபாய் குறுக்குசந்து –துபாய்மெயின் ரோடு - கப்சா பார்ட்டிடா இது’ என்று பார்த்திபனின் (ஒத்தசெருப்பு) வாய்ஸில் ‘கஞ்சிகாச்சி கழுவி கழுவி ஊத்த’ மற்றொரு கூட்டம் அலைமோதும்!


பொதுவாக அமெரிக்கா சென்று வந்தவர்களைப் பார்த்து, ‘ஜெட்லாக்’கில் (Jetlag) கஷ்டப்பட்டீர்களா?’ என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் மிக முக்கியமான ஒன்று. அதாவது நமக்கு இந்தியாவில் இரவாக இருக்கும்போது அமெரிக்காவின் பெருவாரியான மாநிலங்களில் பகலாகவும் நமக்கு பகலாக இருக்கும்போது அங்கு இரவாகவும் இருக்கும்.


(ஒரு துணைத் தகவல்: இதனால்தான், இந்தியாவிலிருந்து கொண்டே, அமெரிக்காவுக்காக கணினித் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் பெரும்பாலான நமது இளைஞர்கள்/இளைஞிகள் அமெரிக்கர்களுக்கு ஏற்றவாறு இரவில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். எல்லாம் பொழப்புக்காகத்தான் மச்சி!)


இது பூமி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படும் மாற்றம். இந்தியாவில் நாம் தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய இரவு நேரத்தில், அமெரிக்காவில் இருந்தோமானால் – அது பகலாக இருந்தாலும், நமக்கு தூக்கம் தள்ளும். அதே போல அமெரிக்காவில் தூங்க வேண்டிய இரவு நேரத்தில், நம் உடற்கூறு இந்திய பகலுக்கு பழக்கப்பட்டு இருப்பதால், தூக்கம் வராது. ஒரு நான்கைந்து நாட்களுக்கு அமெரிக்க சூழ்நிலைக்கு பழக்கப்பட்ட பிறகே, நம் உடல் அமெரிக்க இரவில் தூங்கி அமெரிக்க பகலில் சுறுசுறுப்பாய் இருக்கப் பழக்கப் படும். அந்த நான்கைந்து நாட்களும் நமக்கு ஒரு மந்தமாக, மதக்கமாக, ‘பூஸ்’ அடித்தவர்களைப் போல் இயங்குவோம். இதையே ‘ஜெட்லாக்’ எனக் குறிப்பிடுவார்கள்.


சரி, விஷயத்துக்கு வருவோம்! நாங்கள் எப்படி இந்த ‘ஜெட்லாக்’ பிரச்சினையை சமாளித்தோம்?


எங்கள் அமெரிக்கப் பயணத்திட்டப்படி, நாங்கள் இந்தியாவில் இருந்து இந்தியகாலை ஏழு மணிக்கு புறப்பட்டு சுமார் இருபத்திரண்டு மணி நேரம் கழித்து நியூயார்க்கை அடையும் போது இந்தியாவில் காலை ஐந்து மணியாக இருக்கும். ஆனால் நியூயார்க்கில் இரவு எட்டு மணியாக இருக்கும்.


அதாவது விமானத்திலேயே நாங்கள் பயணத்தின் கடைசி பத்து மணி நேர இந்திய இரவில் தூங்கி விட்டிருப்போம். எனவே நியூயார்க்கில் இறங்கியவுடன் மீண்டும் இரவென்றால் எங்களுக்கு தூக்கம் வராது. அப்படி இரவு முழுவதும் உறக்கம் வராமல் கொட்ட கொட்ட முழித்திருந்து பின் காலை எழுந்து நியூயார்க்கில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டால் தூக்கக் கலக்கத்தில் எப்படி நாங்கள் ‘என்ஜாய்’ பண்ண முடியும்?


இந்த கஷ்டத்தை என் மகன் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டிருந்ததால் இந்தியாவிலேயே இதற்கு ஒரு உபாயம் கண்டு பிடித்தோம். இதனால் இனி அமெரிக்கா பயணப் படும் சகல பயணிகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் – நாங்கள் கண்டு பிடித்திருக்கும் இந்த உபாயத்திற்கு எந்த விதமான காப்புரிமையையும் நாங்கள் வாங்கி வைக்கவில்லை. அப்படி ஒரு காப்புரிமையை இனி வரும் எதிர் காலத்திலும் வாங்குவதாக எண்ணம் இல்லை. எனவே நீங்கள் எல்லோரும் இந்த உபாயத்தை பயன் படுத்திக் கொள்வதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை!


நாங்கள் பயன் படுத்தி எங்களுக்கு மிகவும் பயன் அளித்த இந்த உபாயம்

இது தான்: இந்தியாவில் காலை ஏழு மணிக்கு விமானம் ஏற வேண்டிய நாங்கள் அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் சற்றும் உறங்கவில்லை. எங்களைக் காண வந்திருந்த உறவினர்களுடன் இரவு முழுதும் அரட்டை, சீட்டாட்டம் என்று பொழுது போக்கி தூங்காமல் இருந்து விட்டோம். ஓர் இந்திய இரவு (அதாவது அமெரிக்க பகல்) நாங்கள் தூங்காததால் எங்களுக்கு எல்லாம் ஓரளவிற்கு தானகவே செட்டாகி, அமெரிக்காவில் முதல் பகலிலேயே சுறுசுறுப்பாக இயங்கினோம்.


சரி நான் மேலே கூறிய விஷயங்களால் குழப்பம் அடைந்திருக்கும் நீங்கள், சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பின் மெதுவாக கூட்டி,கழித்து பாருங்கள். எல்லாம் சரியா வரும்! இதன் முழுப்பயனும் நீங்கள் அமெரிக்காப் போகும்போது உங்களுக்குப் புரியலாம்-பயன்படலாம்.
ஹோட்டல் சரவணபவன்!

 

இப்படியாக நியூயார்க்கின் ப்ராட்வேயில் எங்கள் நடைப் பயணத்தை நாங்கள் சுறுசுறுப்பாக தொடர்ந்தோம். ‘Ripley’s Believe it or not’ நிகழ்ச்சியை பிரபலமான டிவிக்களிலும் இணையத்திலும் நாம் பார்த்திருப்போம். அதை நடத்தும் புகழ் பெற்ற நிறுவனத்தைக் கண்டோம்.


உலகின் உயரமான ஆள், உலகின் அருவருப்பான பெண், வியப்படைய வைக்கும் நிகழ்வுகள் என ஆச்சரியங்களுக்கு பெயர் போன அந்த ‘‘Ripley’s Believe it or not’ ஆடிடோரியம் நியூயார்க் சிடியின் டைம் ஸ்கொயரில், 42வது தெருவில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இத்தகைய ஆடிடோரியம் அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.


நாம் உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம், ஆனால், அந்தந்த குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து நம்மைத் தட்டி எழுப்பிவிடும் ஒரு நபர் இருக்கிறார்.


அவர் வேறு யாருமல்ல. மிஸ்டர் பசி தான்!


மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டதால் வயிறு என்னும் வாகனம் உணவு என்னும் பெட்ரோலைப் போட்டே ஆக வேண்டும் என்று மல்லு கட்ட ஆரம்பித்தது. ஆனால் பசியையும் மீறி ஒரு பயம் பற்றிக் கொண்டது. பாஸ்தா, பேகல், பிசா, பர்கர், இலை தளைகள் உள்பட, நமக்குப் புரியாத, பிடிக்காத எது எதையோ உள்ளே வைத்து, மேலும் கீழும் ரொட்டி அல்லது பன் இவற்றால் அரண் அமைத்து, இங்கு ஹோட்டல்களில் விற்கப்படும் ஐட்டங்கள் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது. எங்களின் அசுரப் பசியையும் ஒரு அமுக்கு அமுக்கி என்ன சாப்பிடப் போகிறோமோ என்கிற ஒரு கவலையையும் கொடுத்தது.


இப்பொழுது மட்டும் பொன்னி அரிசி சாப்பாடு, முருங்கக்காய் சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, வெள்ளைப் பூசனி மோர் குழம்பு, தக்காளி பருப்பு ரஸம், அவரைக்காய் பொரியல், உருளைக் கிழங்கு கறி, கேரளா பப்படம், கத்தி வைத்துதான் அறுக்க வேண்டும் என்னும் நிலையிலுள்ள புளிப்பில்லா மணக்கும் கட்டித் தயிர், நார்த்தங்காய் ஊறுகாய் இப்படி எல்லாம் கிடைத்தால் எப்படி இருக்கும்?


எல்லோர் மனதிலும் ‘ஜொள்ளு’ ஊறி, உருகி ஓடி, வாய் வழியே வந்து, சற்றே எட்டிப் பார்க்க ‘ஜெய் விஜயீ பவ’ என்பது போல ‘கிடைக்கும்’ என்றது என் மருமகளின் குரல்! (‘கிடைக்கும்’ என்பதை நல்ல போல்டு லெட்டரில் போட்டு, முடிந்தால் ‘ஜங்….’ என்று ஒரு பன்ச் ம்யூஸிக்கும் போடுங்கள் அச்சாளர் அவர்களே!)


எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தோம். கையில் இருந்த ஸ்மார்ட் போனில் ஆராய்ந்து கொண்டே, ‘அதுவும் நம் ஊர் ‘ஹோட்டல் சரவணபவனே இங்கே இருக்கிறது’ என்கிற இனிப்பு – இல்லை.. இல்லை.. ‘சுவையான’ - செய்தியை சொல்லி விட்டு, ‘ஆனால் சற்றே நடக்க வேண்டும்’ என்றாள்.


‘நடையா! ஏழு உலகம் தாண்டி, ஏழு கடலைத்தாண்டி, ஏழு மலையைத்தாண்டி போக வேண்டும் என்றாலும் நாங்கள் தயார்’ என்று எல்லோரும் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு கிளம்பினோம். பல நாள் கழித்து, சொந்த ஊருக்கு ‘புள்ளை குட்டிகளை’ப் பார்க்க புறப்பட்டுப் போகும் ஒரு வீரனைப் போல், மருமகள் காட்டிய பாதையில் நடக்கத் துவங்கினோம். மருமகள் ஸ்மார்ட் போன் காட்டிய வழியில் போய்க் கொண்டிருந்தாள்.


‘போனோம்.. போனோம்.. போய்க்கொண்டே இருந்தோம்..’ என்றெல்லாம் சொல்ல விடாமல், சுமார் ஒரு மைல் (இங்கே எல்லாம் கிலோ மீட்டர் கிடையாது - மைல் தான்) தூரத்திலேயே சரவணபவன் ‘E26st’ கார்னரில் ‘சரவணாஸ்’ என்று ஸ்டைலாக ஒரு புறமும் ‘சரவணபவன்’ என்று மறுபுறமும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டு அதன் ‘HSB’ ‘லோகோவுடன்’ எங்களைப் பார்த்து வரவேற்றது. என்ன எதிர்பார்த்துப் போனோமோ அது - அதே சுவையுடன் கிடைத்தது. விலையைப் பற்றியெல்லாம் கேட்காதீர்கள். நான் டாலரில் சொல்ல நீங்கள் அதை நம் இந்திய ரூபாயில் மாற்றம் செய்து பார்த்தீர்களானால்.. மயக்கம் போட்டு விடுவீர்கள்!


(செய்கிற செலவை அமெரிக்க டாலரில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றம் (convert) செய்து பார்க்காதீர்கள் – இந்தியாவில் ரூபாயில் வாங்கும் சம்பளம் வேறு. இங்கே டாலரில் வாங்கும் சம்பளம் வேறு. அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற்போல் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். – என்று என் மகன் ஏற்கனவே எங்களுக்கு நடத்தியிருந்த பாலபாடத்தின் பொருள் இப்போதுதான் எனக்கு விளங்கியது. என்றாலும் நடைமுறையில், நாங்கள் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும், எங்கள் மனசு, எங்களையும் அறியாமல், எங்கள் மகனுக்கும் தெரியாமல், இந்த ‘கன்வெர்சன்’ வேலையை நடத்தி ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு இருந்ததை எங்களால் தடுக்க இயலவில்லை!)

 

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஏழில் தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics