Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

DEENADAYALAN N

Classics

3.6  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதினைந்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பதினைந்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

5 mins
38



                                                      சொந்த வீடு வாங்க/விற்க:

சொந்தமாக வீடு வாங்குவது என்றால், எக்கச்செக்கமான இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் உரிமம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஏரியா மற்றும் வசதிகளைப் பொறுத்து, வீடுகள், ஒரு லட்சம் டாலரிலிருந்து பல லட்சம் டாலர்கள் வரை விலை இருக்கிறது.


வீடு வாங்க / விற்க என விளம்பரங்களில் வரும் விபரங்களைப் பாருங்கள்:

நான்/நாங்கள் (இடைத்தரகர்) பல வருடமாக இந்த தொழிலில் இருக்கிறேன்/றோம்..

கமிஷன் 1% மட்டுமே. மறைமுக கட்டணம் கிடையாது.

விற்கும் சொத்துக்கு மிக உயர்ந்த விலை உத்திரவாதம்.

உயர்ந்த விலை இல்லையென்றால் கமிஷன் வேண்டாம்.

மிக குறுகிய கால விற்பனைக்கு ஏற்பாடு – அதிக விலை உத்திரவாதம்.

வங்கிக்குச் சொந்தமான – குறைந்த விலை வீடுகள்.

மிக விரைவில் முன்னேறிக் கொண்டிருக்கும் பகுதி

உங்களுக்கு திருப்தியான வீட்டை எனக்கு முன்னால் நீங்கள் கண்டு பிடித்து முடித்து விட்டால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.

அவசரத்தேவைக்கு விற்கப்படுவதற்கென்று விலையிடப்பட்ட வீடுகள்

கடன் வசதி ஏற்பாடு.

குறைந்த downpayment வீடுகள்


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


தரகர்களாக பெரும்பாலும் இருவர் அல்லது ஒரு குழுவாக செயல் படுகிறார்கள்.. சரிசமசமாக / சற்று அதிகமாகவே பெண்களும் தரகர்களாக செயல் படுகிறார்கள்.


வேலை நேரம்!

இங்கு நிறுவனங்கள், கடைகள், மருத்துவர்கள் போன்றவர்களின் வேலை நேரங்களை பொதுவாக குறிக்காமல் நாள் வாரியாக அறிவிப்பு பலகையில் போடுகிறார்கள்.


உதாரணமாக நம் ஊரில் :

வேலை நேரம்: காலை 9.00 முதல் மாலை 7.00 மணி வரை.

        ஞாயிறு விடுமுறை

என்று எழுதி வைத்திருப்பார்கள்.


ஆனால் இங்கு:

வேலை நேரம்: திங்கள் காலை 9.00 முதல் மாலை 7.00 வரை

        செவ்வாய் காலை 9.00 முதல் மாலை 7.00 வரை

        ………….

       வெள்ளி காலை 9.00 முதல் மாலை 7.00 வரை

       சனி, ஞாயிறு விடுமுறை.

என்று குறித்து வைத்திருக்கிறார்கள்.



மருத்துவர் கலந்தாலோசனைக் கட்டணம்!

நம் ஊரில், ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம், யார் சென்றாலும் எப்பொழுது சென்றாலும் மருத்துவர் கலந்தாலோசனை கட்டணம் (consultation fees) ஒரே தொகையாகத்தான் இருக்கும் (உதாரணம்: ரூ.300/-)


ஆனால் இங்கு, நான் பார்த்த அளவில், மருத்துவர் கலந்தாலோசனைக் கட்டணம் கீழ்க்கண்டவாறு வேறு படுகிறது:


ஒரு மருத்துவரிடம் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு முன்னால் ‘முன்பதிவு’ செய்து விட்டு வந்தால், கலந்தாலோசனைக் கட்டணம் (உதாரணத்திற்கு) எழுபத்தைந்து டாலர்கள் என்று வசூலிக்கப்படும்.


அதே மருத்துவரிடம் நாற்பத்தெட்டு மணிநேரத்துக்குள் முன்பதிவு செய்துவிட்டு வந்தாலும் அல்லது முன்பதிவு செய்யாமல் நேராக வந்தாலும் அவசர சிகிச்சை (emergency) என்று கருதப்பட்டு நூறு டாலர்கள் வசூலிக்கப்படும்.


அதே வியாதி சம்மந்தமாக மீண்டும் ஐந்து நாட்களுக்குள் (அல்லது சில குறிப்பிட்ட நாட்களுக்குள்) வந்தால் இருபது டாலர்கள் மட்டும் கொடுத்து மருத்துவம் பெறலாம்.




 

‘லேடீஸ்’ டைமிங்!

நம் ஊர்களில் பெண்கள் – அதிலும் குறிப்பாக நடுத்தர வயது பெண்கள் - நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானங்கள் போன்ற சில இடங்களுக்கு அவ்வளவாக செல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு ஆசை இல்லாமல் இல்லை. ‘ஆண்களுக்கு முன்னால் எப்படி?’ என்கிற தயக்கம்தான். நம்மில் ஓரிரு ஆண்களும் அதற்கேற்றார் போலத்தான் நடந்து கொள்வார்கள். வெறித்துப் பார்ப்பது, கிண்டல் அடிப்பது, ஜாடை பேசுவது, வெளி இடங்களில் அதைப் பற்றி ‘கமெண்ட்’ அடித்து பெண்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது என சில தகாத செயல்களை செய்யாமல் இருப்பதில்லை.


அதனால் சில பெண்கள், ‘பெண்களுக்கு மட்டும்’ என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிட்டு விட்டால் அந்த நேரத்தில் நீச்சல் பயிற்சி, உடல் பயிற்சி, விளையாட்டு போன்றவற்றிற்கு ஆர்வமாக வந்து, இது போன்ற இடங்களை பயன் படுத்துகிறார்கள்.


ஆனால், தற்போதெல்லாம் பெங்களூரு போன்ற சில மெட்ரொ நகரங்களில் பெண்கள் தயங்குவதில்லை. நேரம் பார்க்காமல் தங்களுக்கு சௌகரியப்பட்ட நேரங்களில் வந்து போய் விடுகிறார்கள்.


ஆனால் லாஸ்வேகாஸில் பெண்களுக்கு என்று தனி நேரம் கிடையாது. ஆண்-பெண்-குழந்தைகள் என்று பேதம் கிடையாது. இங்கு குழந்தை குட்டிகளோடு வந்து நீந்தி குதூகலிப்பவர்கள் உண்டு. கணவன் மனைவி மட்டும் வந்து ஜாலியாக இருப்பதும் உண்டு. உடல்பயிற்சிக்கு என வயது வித்தியாசம் இல்லாமல் இளையோர் முதல் முதியோர் வரை வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் இருபத்திநாலு மணி நேரமும் இவை திறந்து வைக்கப் படுகின்றன. ஏறத்தாழ எல்லா குடியிருப்புகளிலும் நீச்சல் குளமும், உடல் பயிற்சி நிலையமும் நிச்சயமாய் இருக்கின்றன. எல்லா நவீன உபகரணங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.


ஆனால், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம் போன்றவற்றில் சாதாரணமாக எந்த அலுவலரோ பயிற்சியாளரோ இருக்கவில்லை. நாமே கற்றுக் கொள்ள வேண்டியதுதான். நீச்சல் குளங்களும் அவ்வளவு ஆபத்தானவையாக இல்லாமல் குறைந்த அளவு ஆழமுள்ளதாகவே இருக்கும். அத்தோடு, இந்த இடங்களை ‘ஸ்ப்ரிங் லாக்’ கொண்டு பூட்டிதான் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் இதற்கென ஒரு சாவி கொடுத்து விடுவார்கள். நாமே சென்று கதவைத் திறந்து பயன் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். எனவே அந்த சாவியை பத்திரமாக வைத்து குழந்தைகள் தாங்களாகவே அங்கு செல்லாமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஒரு ஆச்சரியம். உடல் ஆரோக்யத்தின் மீது மிகுந்த அக்கறை வைத்திருப்பவர்கள் அதிகம் என்றாலும், உடல் எடை பார்க்கும் எந்திரத்தை, பொது இடங்களிலோ, உடல்பயிற்சி நிலையத்திலோ பார்க்க முடியவில்லை. கேட்டால் சிலபேர் வீட்டிலேயே வைத்திருப்பார்கள் என்றார்கள். ஆனால் சுமார் இரண்டு மாதங்களாக முயற்சித்தும் என்னால் என் உடல் எடையைப் பார்க்க முடியவில்லை. (நம் ஊரில் ஒவ்வொரு மாலிலும், புகைவண்டி நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், சில சமயம் நடைபாதைகளிலும் (ஒரு ரூபாய்க்கு உடல் எடை) உடல் எடை காட்டும் எந்திரங்கள் நிறைந்திருக்கும்!)



ஐஸ் க்ரீமா தயிர் க்ரீமா!

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்! கொழுப்பு சேரும்! என்பது நம் சித்தாந்தம். ஒருமுறை ‘யோகர்ட் லாண்ட்’(Yoghurt Land) என்னும் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்றிருந்தோம். நாமே நமக்கு தேவையான சுவைகளில் ஐஸ்க்ரீமை தேர்வு செய்து, அதில் நம் விருப்பப்படி தேன், உலர்பழங்கள், பானங்கள், முந்திரி, பாதாம் முதலியவற்றை கலந்து இருக்கிற எடைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடலாம். வாங்கி சாப்பிட்டோம்! (நம் ஊரிலும் இப்படி சில கடைகள் இருக்கின்றன.) அவ்வளவு சுவையாக இருந்தது. ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சளி பிடிக்கும்; கொழுப்புச் சத்து’ என்று நான் சொன்னபோது, ‘அது ஐஸ்க்ரீம் அல்ல கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட தயிர் க்ரீம். உடலுக்கு நல்லது’ என்று சொன்னார்கள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது!



வெயில்கால பழங்கள்!

நம் ஊர் தர்பூஸ் பழம், கோசாபழம் எல்லாம் இங்கு கிடைக்கிறது. ‘ஹனி ட்யூ’(honeydue), ‘கேன்டலோப்’(cantalop), ‘அவகேடோ’(avocado) போன்ற பழங்கள் இங்கு வெயில் காலத்துக்கு ஏற்றதாக விரும்பி சாப்பிடப்படுகிறது.


அடைப்புப் பிரச்சினைகள்!

‘வாஷ் பேசின்’ அடைப்பு, ‘சின்க்’ அடைப்பு போன்றவை நாம் நாள் தோறும் சந்திக்கும் ஒரு கசப்பான அனுபவம். எத்தனை முறை சரி செய்தாலும் அடிக்கடி நம் உயிரை எடுக்கும் வெறுப்பான அனுபவம். ஆனால் இங்கெல்லாம் ஒவ்வொரு ‘வாஷ்பேசின் மற்றும் ‘சின்க்’ குழாய்களுடன் ஒரு கொக்கி (lever) போன்ற அமைப்பை கொடுத்திருக்கிறார்கள். அதை இயக்கினால் அடைப்புகள் பெரும்பாலும் நீங்கி விடுகின்றன.


தூசு துறும்புகள்!

நம் ஊரில் மணல் லாரிகள், சிமெண்ட் லாரிகள், கூழாங்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் காற்றாய் பறந்து கொண்டிருக்கும். ஆனால் அவை பெரும்பாலும் ‘தார்பாலின்’ கொண்டு நல்ல முறையில் மூடப்படுவதில்லை. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் தூசு துரும்பினால் பெருத்த அவஸ்தைக்கு ஆளாகிறோம். அதிலும் ‘ஆஸ்த்மா’ பிரச்சினை உள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடு பற்றி எந்த விழிப்புணர்வும் நம் வாகன ஓட்டிகளுக்கு இருப்பதில்லை.


ஆனால் இங்கு அப்படி இல்லை. இப்படிப்பட்ட பொருள்களை ஏற்றி வரும் எந்த லாரியும் ஒரு துளி தூசு கூட வெளியில் வராதபடி கெட்டியான மேலுறையிட்டு மூடியபடிதான் வருகின்றன.


பெரும்பாலான லாரிகள் திறந்த வெளியாக இல்லாமல் மூடப்பட்டவையாகவே இருக்கின்றன. ஒரு செவ்வக வடிவில் நல்ல நிறங்களில் மின்னிக் கொண்டு வருகின்றன. அளவில் நம் லாரிகளைப் போல் இரு மடங்குகள் பெரிதாக இருக்கின்றன.


கார் சுத்தம்!

நம் ஊரில் ஏறத்தாழ எல்லா குடியிருப்புகளிலும் ‘கார் துடைக்க’ என்று ஒரு பணியாளர் இருப்பார். மாதம் நானூறு ஐநூறு என்று அவருக்கு பணம் கொடுத்து கார்களை தினந்தோறும் சுத்தம் செய்யச் சொல்வோம். ஆனால் இங்கு அப்படி எல்லாம் ஆட்கள் இருப்பதில்லை. காரை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் அவரவர்களே செய்து கொள்ள வேண்டும். அல்லது கார்களை சுத்தம் செய்யும் இடங்களுக்கு எடுத்துச் சென்று கட்டணம் கொடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நாம் காருக்குள் உட்கார்ந்திருக்கும் போதே, சன்னல்களை அடைத்து, பீய்ச்சும் நீர் கொண்டு வெளியில் சுத்தம் செய்து விடுவார்கள். உள்ளே சுத்தம் செய்ய, பெரிய அளவில் ‘வேக்குவம் க்ளீனர்களை’ (vacuum cleaners) நிறுவி இருப்பார்கள். அவைகளை இலவசமாக பயன்படுத்தி நாமே சில நிமிடங்களில் உள்ளே சுத்தம் செய்து விடலாம்.


 

மது என்னும் அரக்கன்!

நம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் பள்ளி அருகில் இருக்கக் கூடாது. கோயில் அருகில் இருக்கக் கூடாது. என்றெல்லாம் விதிகள் இருக்கின்றன. மதுக் கடைகளின் அருகில் ஓரிருவர் சண்டையிட்டுக் கொள்வதுண்டு. அசிங்கமாய் பேசிக் கொள்வதும் உண்டு. இன்னும் ஓரிருவர் குடித்து விட்டு மனைவியை அடிக்கும் அவமானகரமான செயலையும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது.


இங்கு மதுக் கட்டுப்பாடு கிடையாது. என்றாலும் பொது இடங்களுக்கு ஆயிரம் அடிகளுக்குள் மது அருந்தக் கூடாது. இருபத்தியோரு வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு மது/புகையிலை பொருள்கள் விற்கப் படமாட்டாது. நாற்பது வயதுக்குக் கீழ் பட்டவர்கள், அடையாள அட்டை காண்பித்துதான் மது வாங்க முடியும்.  இப்படி விதிகள்/நடைமுறைகள் எல்லாம் இங்கும் இருக்கின்றன. மது குடித்து விட்டு தெருவில் ஆட்டம் போடுபவர்களை பார்த்ததில்லை. குடித்து விட்டு மனைவியை அடிப்பது என்கிற செயலையும் கண்டதில்லை. அதே போல் பெண்கள் சிகரெட் குடிப்பது என்பது இங்கு சாதாரண விஷயம்.



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-16 ல் ............. தொடரும்…



Rate this content
Log in

More tamil story from DEENADAYALAN N

Similar tamil story from Classics