DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர்-நான்கு

அமெரிக்கப் பயணத் தொடர்-நான்கு

5 mins
23.8K






லண்டன் டு நியூயார்க்!


விமானம் (ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்) லண்டனிலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்டது. விமானத்தில், சன்னலோரமாக இல்லாமல், ஓர் ஓர இருக்கையும், ஒரு நடு இருக்கையும் எங்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது, என் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி!!


‘Would U like to sit comfortably in the window seat?’ என்று எங்கள் வரிசையில் சன்னலோர இருக்கையில் இருந்த ஒரு அமெரிக்க இளைஞன் வேண்டுகோள் விடுத்தால் இப்போது என் மனைவி என்ன செய்வாள் என்று எனக்குள் ஒரு கற்பனையை ஓட்டிப் பார்த்தேன். சூடு கண்ட பூனை அல்லவா! நிச்சயமாக, ‘ஹு..ம்ம்ம்..அஸ்கு புஸ்கு‘ என்று சொல்லாத குறையாக, ‘No thanks please – I’m very comfortable here’ என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பிக் கொள்வாள் என்று நினைத்துப் பார்த்து நானே புன்னகை பூத்துக் கொண்டேன்.


பெரும்பாலான நேரம் தூக்கத்திலேயே கழிந்ததால், இந்தப் பயணத்தில் குறிப்பிடும் படி சுவாரஸ்யமாக ஏதும் இல்லை.


(அப்படியானால்… நீ இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் சுவாரஸ்யமாக இருந்ததாக நினைப்பா – என்று நீங்கள் என்னை நோக்கி கோபமாக வருவதாகத் தெரிகிறது! சாரி பாஸ்.. வாங்க பயணத்தை தொடருவோம்!)




அடைந்தோம் நியூயார்க்!






எட்டு மணி நேர பிரயாணத்திற்கு பிறகு, நியூயார்க்கில், ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் டெர்மினல் ஏழில் இறங்கி, கஸ்டம்ஸ்/இமிக்ரேஷன் செக்கிங்குக்காக காத்திருந்தோம்.


கஸ்டம்ஸ்/இமிக்ரேஷன் செக்


இமிக்ரேஷன் என்பது ஒரு முக்கியமான சோதனை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமெரிக்க விசா பத்து வருடங்களுக்கு செல்லும். ஆனால் ஒரு முறை அமெரிக்கா சென்றால் அதிகபட்சம் ஆறு மாதங்கள்தான் அங்கு தங்க முடியும். ஆறு மாதங்கள் தேவை என்று நாம் கேட்கலாம். ஆனால், நம் பயணத்தின் நோக்கம், தேவை இவைகளைப் பொறுத்துதான் நாம் எவ்வளவு நாள் அங்கு தங்கலாம் என்று அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்கள் எவ்வளவு நாள் குறித்துக் கொடுக்கிறார்களோ அவ்வளவு நாள்தான் அங்கு தங்க முடியும். அமெரிக்காவில் இறங்கிய பின் தான் அதை அவர்கள் குறித்துக் கொடுப்பார்கள். அது வரை நமக்கு ஒரு வித ‘டென்ஷன்’ இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சாதாரணமாக, அங்கே தங்கி இருக்கும் நம் குழந்தைகளுடன் ஆறு மாதம் வரை தங்கி இருக்க, பெரும்பாலும் அனுமதித்து விடுகிறார்கள் என்றுதான் சொல்கிறார்கள். .


இந்த இமிக்ரேஷன் செக் முடித்து வெளியில் வந்து எங்கள் லக்கேஜுகளுக்காக அதற்கான பகுதியில் (baggage claim area / carousel) காத்திருக்க ஆரம்பித்தோம்.



இந்த இடத்தில் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். எங்கள் மகன்-மருமகள் வசிப்பதென்னவோ அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸில்தான். ஆனால் நாங்கள் ஏன் நியூயார்க் நகரில் இறங்கினோம்? லாஸ் வேகாஸிலிருந்து என் மகனும் மருமகளும் நியூயார்க் வந்து விட்டார்கள். அதே போல் அமெரிக்காவில் டென்னிஸ்ஸி மாநிலத்தில் வசித்து வந்த என் மருமகளின் சகோதரி, அவரது கணவர் மற்றும் குழந்தை ஆராத்யாவுடன் நியூயார்க் வந்து விட்டனர். நாங்களும் நியூயார்க்கில் இறங்கி அவர்களுடன் இணைந்து நியூயார்க் சுற்றிப் பார்ப்பது எங்கள் திட்டம்.


‘லக்கேஜ் கலெக்‌ஷன்’ செய்யும் இடத்திற்கே வந்து விடுகிறோம் என்று கூறியிருந்த எங்கள் மகனும் மருமகளும் ஏனோ வரவில்லை. (அன்றைக்கு அனுமதி மறுத்து விட்டார்கள் என்று பிற்பாடு அறிந்து கொண்டோம்.)



ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்..!


லக்கேஜ் கலெக்‌ஷன் பற்றி சற்று விரிவாக இங்கே கூறுவது, முதல்முறையாக வெளிநாடு செல்லும் பாமர வாசகர்களுக்கு சற்று உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


விமானப்பயணிகளுக்கு – குறிப்பாக மூன்று நான்கு ராட்சச வடிவ பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளிநாடு செல்லும் விமானப் பயணிகளுக்கு இந்த தகவல் மிகவும் பயன்படலாம். நூற்றுக்கணக்கான சூட்கேஸ்களும், பெரிய பெட்டிகளும், பைகளும் ஒரு கன்வேயர் பெல்ட் அமைப்பிலான சுற்றுப்பாதையில், சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. முதல் பதினைந்து நிமிடங்களுக்கு எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்களது நான்கு பெட்டிகளும் கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை. சுற்றி சுற்றி வந்த லக்கேஜுகள் எங்கள் தலையையும் சுற்ற வைத்து விட்டன. இத்தனைக்கும் எங்கள் பெட்டி அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவே – சிலரின் அனுபவ அறிவுரையை ஏற்று – ஒரு ரோஸ் நிற ரிப்பனை எல்லாப் பெட்டிகளின் கைப்பிடியிலும் கட்டியிருந்தோம். ஆனால்… ஏறத்தாழ எல்லாப் பெட்டிகளிலும் வண்ண ரிப்பன்கள் கட்டப் பட்டிருந்தன. ஆனால், என்ன ஆச்சரியமோ தெரியவில்லை, அதில் பெரும்பான்மையானவை ரோஸ் நிறமாகவே இருந்தன.


இரண்டு மூன்று சுற்றுக்களை தவறவிட்டு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகே, ‘ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்..’ என்பது போல ‘ஓடும் பெட்டி ஓட எங்கள் பெட்டி வரும் வரை’ காத்திருந்து, களத்தில் இறங்கினோம்.


“அதோ நம் கருப்புப்பெட்டி.!!” என்று (ஏமாற்றி விட்டு ஓடிப்போன சீட் கம்பெனிக்காரனை பார்த்து விட்டதைப் போல) திடீரென்று கத்தினாள் என் மனைவி. நான் பாய்ந்து சென்று அந்தப்பெட்டியைப் பிடிக்க முயன்றேன். பற்பல பெட்டிகள் முன்னும் பின்னும் தொடர, ‘ஜம்’ என்று அமர்ந்து கொண்டு - கன்வேயர் பெல்ட்டில் சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பெட்டியோ, என்னை டபாய்த்துக் கொண்டு திமிறிக் கொண்டு எனக்கு கடுக்காய் கொடுத்து விட்டு விரைந்தது. ‘விட்டேனா பார்!’ என்று என் அருகில் என்னைப் போலவே பெட்டிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தருந்தவர்களை முட்டி மோதித் தள்ளி ஓடினேன். தொடர்ந்து போராடி பெட்டியை சிறைப் பிடித்துக் கொண்டு, ஒரு சிறிய சிராய்ப்புடன், வெற்றியோடு வெளியே வந்தேன்.


இப்படியாக, எங்களின் வீர பராக்கிரமத்தைக் காட்டியே எங்கள் நான்கு பெட்டிகளையும் நானும் என் மனைவியும் ஜோடி போட்டுக் கொண்டு கைப் பற்றினோம். ஜோடியாக நாங்கள் நடத்திய மீட்பு ஆட்டம் மற்றவர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. . இதை மட்டும் ஜோடி நம்பர் ஒன் போட்டியிலோ அல்லது மானாட மயிலாட கலா மேடமோ பார்த்திருந்தார்கள் என்றால் எங்களுக்கே முதல் பரிசை தாரை வார்த்து விட்டு வேறு வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள்!


சரி! இப்படியாக நான்கு ராட்சச பெட்டிகளையும் இரண்டு கைப்பெட்டிகளையும் நாங்கள் இருவர் மட்டும் எப்படி வெளியில் தூக்கிக் கொண்டு அல்லது தள்ளிக் கொண்டு போவது? ஓரிரு அமெரிக்கர்கள் தள்ளு வண்டியை வைத்திருந்ததைப் பார்த்து அவர்களிடம் ‘where is this vehicle(!?)’ என்று விசாரித்தேன். அவர்கள் விசித்திரமாக பார்த்துக் கொண்டே தூரத்தில் ஒரு இடத்தைக் காட்டினார்கள். அங்கே நூற்றுக் கணக்கான வண்டிகள் வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தன.


யார் லூஸு!


அடப் பைத்தியங்களா! இத்தனை வண்டிகளிருந்தும் பெரும்பாலோனார் ஏன் தங்கள் கணத்த பெட்டிகளை தாங்களே உருட்டிக் கொண்டு போகிறார்கள்?


உதவி செய்யும் விதமாக நானும் என் மனைவியும் ‘கார்ட்.. கார்ட்’ என்று அந்த வண்டிகளை அவர்களுக்கு சுட்டிக் காண்பித்தோம். ஆனால் ஒவ்வொருவரும் (‘மூன்றாம் பிறை’ பட கடைசிக் காட்சியில் கமலை அம்போ என்று விட்டு விட்டு ரயிலில் சென்ற ஸ்ரீதேவியைப் போல) எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சட்டை செய்யாமல் பெட்டிகளை உருட்டிக் கொண்டு போவதிலேயே முனைப்பாக இருந்தனர்.


எல்லாம் சரியான லூசுகள் என்று முடிவு கட்டிக் கொண்டு, என் மனைவியை எங்கள் லக்கேஜ் அருகில் நிறுத்தி விட்டு, வண்டிகள் நிறுத்தப் பட்டிருந்த இடத்தை நோக்கி வீரமாக நடை போட்டேன். வண்டியின் அருகில் சென்று ஆசையாய்த் தடவி ஒரு வண்டியை தனியாக இழுக்க முற்பட்டேன். ‘ஹூஹும்.. வண்டி அந்தக் கால எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கட் வாங்க ராயல் தியேட்டரில் வரிசையில் நின்ற ஒரு ரசிகனைப் பிடித்து இழுத்ததைப் போல்’ முரண்டு பிடித்தது!


‘ஹேய் வ்வாழ்ட்ட் ஆழ்ர் ய்ய்யூ ழூயிங்’ (இவ்வளவுதாங்க அமெரிக்க இங்கிலிஷ். எல்லா வார்த்தைகளின் மேலும் ஒரு ‘ழ்’ போட்டு அழுத்தி நீட்டி முழக்கிப் பேசி விட்டால் அது அமெரிக்கன் இங்கிலீஷ் ஆகி விடும்!) என்று என் பிடரியில் கை வைக்காத குறையாக என் தோளில் கையை வைத்து அழுத்தினார் ஒருவர். சற்றே அதிர்ந்தாலும் சமாளித்து நானும் என் ழ்+இங்கிலீஷை எடுத்து விட்டேன் - ‘ஹே.. ஐ வாழ்ண்ட் எ காழ்ர்ட்’ என்றேன்.


‘கீ..வ்வ்வ் மி சீ..க்ஷ் டாழ்ழ்லழ்ர்ஸ்’ என்றார்.


‘ஆறு டாலர்களா? எண்ட குருவாயூரப்பா! இந்த வண்டிக்கு வாடகையாக ஆறு டாலர்களா..?’


ஆனால் வேறு வழி? அமெரிக்கப் பயணத்தின் என் முதல் செலவாக ஒரு இருபது டாலர் நோட்டை – மன்னிக்கவும் – கரன்சியை எடுத்து கொடுத்தேன். அவர் தந்த மீதி பதினாலு டாலர்களையும், கருணை கூர்ந்து வரிசையிலிருந்து ஒரு பூட்டை திறந்து விடுவித்த வண்டியையும் எடுத்துக் கொண்டு என் மனைவியை நோக்கி நடந்தேன். இப்போது வண்டி ‘ரஹ்மான் மனசில் காற்றாகப் புகுந்து இசையாக மாறி’ என் கூடவே நல்ல பிள்ளையாய் பயணித்தது!

                                           

இப்போதுதான் யார் லூஸு.. யார் பைத்தியம் என்று புரிந்தது! இந்த ஆறு டாலர் விஷயம்தான், பெரும்பாலோரை தங்கள் கைகளாலேயே லக்கேஜுகளை தள்ளிக் கொண்டு போக வைத்திருக்கிறது!




அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஐந்தில் தொடரும்…





Rate this content
Log in

Similar tamil story from Classics