DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதினாறுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

அத்தியாயம் பதினாறுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

4 mins
35


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பதினாறு


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)


மின்அழுத்தம்(Voltage)&மின்அடைப்பான்(plug points) வித்தியாசங்கள்!

ம் ஊரில் எல்லா மின்சார உபகரணங்களும் 230 வோல்ட்ஸில் வேலை செய்பவை. ஆனால் அமெரிக்காவில் இது 110/120 வோல்ட்ஸ் ஆகும். எனவே அமெரிக்காவில் வாங்கும் ஒரு மின் சாதனம் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது இந்தியாவில் வாங்கும் ஒரு மின் சாதனம் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்றாலோ, ஒரு மின் அழுத்த மாற்றி (converter) தேவைப்படும். அதே போல் அமெரிக்கா நாட்டு மின் அடைப்பான்கள் (Three/Two-way-pin-Plug) நம் நாட்டுக்கு பொருந்தி வராது. அதற்கான ‘மாற்றி’ பயன்படுத்த வேண்டும்.

அதே போல் மின் துளைகள் (sockets) சிறியதாக/வித்தியாசமாக இருக்கும்.


மாசக் கடைசி!

மக்கெல்லாம் மாசக் கடைசி என்பது 28ம் தேதிக்குப் பின் தான் வரும். சிலருக்கு 15ம் தேதியே வந்து விடும் என்பது வேறு விஷயம். ஆனால் அமெரிக்காவில், மாதம் இரண்டு முறை (13ம் தேதிக்கு மேல் மற்றும் 28ம் தேதிக்கு மேல்) வரும். ஏனென்றால் இங்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் கொடுப்பார்கள். அதாவது ஒரு மாதத்திற்கு கொடுக்க வேண்டியதை, இரண்டாகப் பிரித்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கொடுத்து விடுவார்கள்.


‘ஹாய்.. குட்மானிங்’

 ஹாய்’, ‘குட்மானிங்’ ‘ஹவ் ஆர் யு’, ‘ஹேவ் எ குட் டே’. என்பவை இங்கு நாள்தோறும் நம்மை வியப்பில் ஆழ்த்தி மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வார்த்தைகள். பேருந்தில் ஏறும்போது ஓட்டுனர் ஆகட்டும். கேசினோக்களில் இருக்கும் ஒரு ‘டீலர்’ ஆகட்டும். உணவங்களில் இருக்கும் ஒரு அலுவலர் ஆகட்டும். நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம் முதலிய பொது இடங்களில் சந்திக்கும் பொது மக்கள் ஆகட்டும். இவ்வளவு ஏன்? தெருவில் நடந்து சென்றால் எதிரில் வருபவராகட்டும்! எல்லோரும் சொல்லும் வார்த்தைகள் இவை.


நமக்கு தெரிந்தவராய் இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. முன் பின் பார்த்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தோற்ற வித்தியாசம் எதுமில்லை. ஆண் பெண் பேதமில்லை. வயது வித்தியாசமில்லை. யாராய் இருந்தாலும் (பெரும்பாலும்) பார்த்த உடன் ஒரு புன்னைகை புரிந்து இந்த வார்த்தைகளை சொல்லி விடுகிறார்கள்.


இதனுடைய பலன் என்ன என்று நான் யோசித்துப் பார்த்தேன். ஒரு மனிதரை பார்த்ததும் அவரை எடை போடும் இயல்பு நம்முள் சற்றே தலை தூக்கும். அதை வைத்து அவர் நல்லவர், கெட்டவர், இளிச்சவாயர், புத்திசாலி, அகம்பாவி, கர்வி, கோபக்காரர், லூசு என்று நாமாக ஒரு யூகம் செய்து கொள்வோம். அவருடன் ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் (வழி கேட்பது) அவரைப் பற்றிய நம்முடய ‘உடனடி அபிப்பிராயத்தை’ வைத்து நல்லவர் , புத்திசாலி என்றெல்லாம் தோன்றினால் பேசுவோம். இல்லாவிட்டால் அடுத்த ஆளை பார்த்துக் கொண்டு போய் விடுவோம்.


பார்த்தவுடன் ‘ஹாய்’, ‘குட்மானிங்’ என்று சொல்லும் இந்த பழக்கம், மற்றவர்களுடைய குணாதிசயம் பற்றி நாம் கற்பனை செய்வதற்கு முன்னரே அவரைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை நம்முள் உருவாக்கி விடுகிறது. தேவை ஏற்படின் (‘இந்த இடத்திற்கு எப்படி போவது?’) அவரிடம் நாம் நம்பிக்கையுடன் பேசுவோம்.


பரஸ்பரம் இரு மனிதர்களுக்குள் நம்பிக்கை உதயமாகி விட்டால், வெறுப்புணர்வு, அசுயை, இகழ்வான எண்ணங்கள் மாயமாக மறைந்து விடும். தற்காலிகமான தேவை என்றாலும் சரி., அல்லது தேவையே இல்லை என்றாலும் சரி. இந்த எண்ணம் இரு மனங்களில் உதயமாவது சகிப்புத் தன்மையயும் அன்பையும் வளர்க்கும். யாரும் நமக்கு எதிரிகள் அல்ல என்ற நம்பிக்கையை உருவாக்கும். இன்றைய கால கட்டத்திற்கு இது தேவையானது. மனிதகுல நாகரித்திற்கு அவசியமானதும் கூட!



சுத்தம்.. சுத்தம்..கிருமிநாசினிகள்!

 அமெரிக்காவில் நாங்கள் பார்த்த பெரும்பாலான பொது இடங்களில் (Sanitizer) கிருமிநாசினி திரவம் வைத்திருக்கிறார்கள். (நான் சொல்வது கொரோனா காலத்திற்கு வெகு முந்தைய காலம்). உதாரணமாக உடற்பயிற்சி செய்யும் ‘ஜிம்’மில் வைத்திருக்கிறார்கள். கைகளில் அதைப் பூசிக் கொண்டுதான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். முடித்தவுடன் அங்கே வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி தடவப்பட்ட ‘டிஸ்யூ’ தாள்களை வைத்து, தங்கள் கைப்பட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தி விடுகிறார்கள். பெரிய மால்களில் ‘ட்ராலி’களை வைத்திருக்கும் இடங்களில் கூட கிருமிநாசினியில் முக்கிய தாள்களை வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கொண்டு ட்ராலியில் கைகள் படும் இடங்களை சுத்தப் படுத்திக் கொண்டுதான் ‘ட்ராலிகளை’ வாடிக்கையாளர்கள் பயன் படுத்துகிறார்கள்.


எல்லா இடங்களிலுமே, உபயோகப்படுத்தப் பட்ட அந்த தாள்களைப் போடுவதற்கு, அருகிலேயே ஒரு குப்பைக் கூடையையும் வைத்திருக்கிறார்கள்.



தெரு நாய் தொல்லை!

டன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்!’

என்பது நாம் அனைவரும் அறிந்த மொழி.


இதை இப்படியும் கூறலாம்:

‘நாய் கண்டார் நெஞ்சம் போல் நடுங்கினான் நம் குடிமகன்’


எனக்கு பேய் பயமில்லை. எதிரி பயமில்லை. ரவுடி பயமில்லை. எனக்கு பொண்டாட்டி/புருஷன் பயமில்லை. எனக்கு மாமியார்/மருமகள் பயமில்லை. எனக்கு அப்பா/அம்மா பயமில்லை. இடி மின்னல் பயமில்லை. கரப்பான்பூச்சி பயமில்லை. ஏன் எனக்கு சாமி பயம் கூட இல்லை. இப்படியெல்லாம் நம் மக்கள் நிறைய பேர் பெருமை பீற்றிக் கொள்வார்கள்.


ஆனால் ‘நடுநிசியில் நடுத்தெருவில் நடந்து போக எனக்கு பயமில்லை’ என்று யாராவது நம் ஊரில் கூறினால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம் அல்லது அவர் ‘நடுத்தெருவில் நடுநிசியில் நடந்ததில்லை’ என்றுதான் அர்த்தம்.


நடுநிசியில் என்ன? பட்டப்பகலில் கூட சில தெருக்களில் நாம் நடந்து செல்ல முடியாது. நடந்து என்ன? குறைந்த பட்சம் இரு சக்கர வாகனத்தைக் கூட ஓட்டிப் போக முடியாது. அந்த அளவுக்கு தற்போது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது தெரு நாய்கள் தான்.


நாய்கள் தொல்லைப் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எந்த நேரத்தில், எங்கிருந்து வந்து, எப்படி பாய்ந்து, எதைப் பிடுங்கும் என்று, யாராலும் யூகிக்க முடியாது. துரத்தித் துரத்தி ‘லவ்’ பண்ணினான் என்பது போல துரத்தித் துரத்தி ‘பவ்...’ பண்ணும் இந்த நாய்கள். 


அதை விட நாய் கடித்த பின் படும் அவஸ்தை இருக்கிறதே.. அது மகா கொடுமை! ‘தொப்புள் சுத்தி 14 ஊசி’ என்று பயமுறுத்துவார் ஒருவர். ‘இப்பொ எல்லாம் ஒரே ஊசிதான்..’ என்று ஆறுதலாக இன்னொருவர் சொல்லுவார். அது பொறுக்காத மற்றொருவர், ‘எதுக்கும் நாய் உயிரோட இருக்கான்னு ஒரு பதினாலு நாளுக்கு போய் போய் ‘செக்’ பண்ணிக்கோங்க. இல்லேன்னா கொஞ்சம் டேஞ்ஜர் தான்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார். ‘நாய் உயிரோடு இருந்தா இன்னொரு ஊசி போடணும்!’ என்று வயிற்றில் ஆசிட் ஊற்றுவார் இன்னொருத்தர்.


‘நாய் கடிக்கிற வரைக்கும் நீங்க என்ன சார் பண்ணிகிட்டிருந்தீங்க? (ம்.. எல்லாம் ஒரு வேண்டுதல் தான்!’) என்று கடிந்து கொள்வார் ஒருவர். (உரிமையாம்!!)


‘நீங்க எதுக்கு சார் அந்த நேரத்துலே அந்த தெரு வழியா வந்தீங்க! நான் எப்பவுமே ராமசாமி தெருவுல பூந்து கிருஷ்ணசாமி தெருவழியா வந்து கந்தசாமி தெருவுக்குள் வந்துருவேன்’ என்பார் இன்னொருவர். (அவர் தப்பித்துக் கொண்டாராம்!)


‘நல்ல வேளை! காயம் அவ்வளவு ஆழமா இல்லை..’ மற்றொருவர். (வருத்தமா.. சந்தோஷமா..?)


அப்புறம் நாய் வளர்ப்பவர்களை ஒரு பிடி பிடிப்பார்கள். அப்புறம் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசாங்கத்தை ஒரு பிடி பிடிப்பார்கள்.


எல்லாம் பேசி விட்டு அவரவர் பாட்டுக்கு அவரவர் வீட்டுக்கு போய் விடுவார்கள். கிடந்து அவஸ்தை படப் போவது என்னவோ நாய் கடிபட்டவர்தான்.


ஆனால், நியூயார்க்கிலோ / லாஸ்வேகாஸிலோ, ஒரே ஒரு தெரு நாயைக் கூட பார்க்க வில்லை. தெருவில் ஓரிருவர் நாய் அல்லது நாய்களை (இழுத்து அல்ல) அழைத்து வருவதைப் பார்த்திருக்கிறோம். நம்மை விட, அவர்கள் அதை எச்சரிக்கையாக பிடித்துக் கொள்வார்கள்.


அது மட்டுமல்ல. அவர்கள் நாய்களை அழைத்து வரும்போது கையில் சில தாள்களையும் ஒரு சிறிய பையையும் எடுத்து வருகிறார்கள். நம் ஊர் நாய்களைப் போல அந்த நாய்களும் ஒரு கம்பத்தையோ அல்லது மரத்தையோ பார்த்து விட்டால், ஒரு காலை தூக்கி ‘மூச்சா’ போகத்தான் செய்கின்றன. ஆனால் அவை ‘ஆய்’ போனால், நாய் உரிமையாளர், அதைப் பேப்பரில் எடுத்து அந்தப் பையில் போட்டுக் கொள்கிறார்.


நம் ஊரில் பிராணி வதை தடுப்பு சங்கத்தினரும் (பிராணி வதைத் தடுப்பை நானும் மனதார ஆதரிக்கிறேன்), என்.ஜி.ஓ.க்களும் / அரசாங்கமும் இதற்கு ஒரு வழி செய்தால், மக்கள், குறிப்பாக, ‘பொழப்புக்காக’ இரவு ஷிப்ட்டுக்குப் போய் விட்டு நடந்து அல்லது இரு சக்கர வாகனங்களில் வரும் மக்கள் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருப்பார்கள்!



வாஸ்தா? த்ருஷ்டியா?

 

ம் ஊரில், த்ருஷ்டிக்காக பூசனிக்காய் கட்டுவதைப் போல், இங்கு சில சீனப் பொருள்களை வீட்டின் முன் அல்லது பால்கனிகளில் தொங்க விடுகிறார்கள். மெல்லிதாக ஒலி எழுப்பும் உலோக அலங்காரப் பொருட்கள், சில சீனப் பொருட்கள் போன்றவைகளை அழகுக்காகவே தொங்க விட்டிருப்பதாக கூறுகிறார்கள்.



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-17ல் ............. தொடரும்



Rate this content
Log in

Similar tamil story from Classics