STORYMIRROR

DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பத்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பத்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

4 mins
23.2K


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பத்து


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)

 

நியூயார்க் ரிடர்ன்!

 

மறு நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு நியூயார்க்கை நோக்கி எங்கள் எட்டு மணி நேர கார் பயணத்தைத் துவக்கினோம். அவ்வளவு விரைவில் எழுந்து புறப்படுவதற்கான காரணம் இருந்தது.


நியூயார்க்கிலிருந்து லாஸ் வேகாஸிற்கு அன்று மாலை ஐந்து மணிக்கு விமானம். நியூயார்க்கில் ஜான் எஃஃப் கென்னடி விமான நிலையத்தில் நாங்கள் இரண்டு மணிக்கெல்லாம் ‘ரிப்போர்ட்’ செய்ய வேண்டும். அப்போதுதான் ‘செக்-இன், செக்யூரிட்டி செக்’ – போன்ற நடைமுறைகளை முடித்து விமானம் பிடிக்க எளிதாக இருக்கும். மகனும் மருமகளும் உடன் இருந்ததால் நடைமுறைகளை அவர்கள் கவனித்துக் கொள்ள நானும் என் மனைவியும் ராஜா-ராணி போல் வேடிக்கைப் பார்த்து சந்தோஷித்துக் கொண்டிருந்தோம்.


அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் இருந்து வந்து எங்களுடன் இணைந்து எங்கள் பயணத்தை மிகவும் இனிமையாக்கிய எங்கள் மகள் போன்ற சிந்து, மகன் போன்ற அவர் கணவர் ராக்கேஷ், அன்பு செல்லம் குழந்தை ஆராத்யா ஆகியோர் அவர்களின் விமானத்தை வேறு ஒரு விமான நிலையத்தில் மாலை ஏழு மணி அளவில் பிடிக்க வேண்டும்.

எனவே மதியம் இரண்டு மணி அளவில் எங்களை எங்கள் விமான நிலையத்தில் இறக்கி விட்டார்கள். அவர்கள் அவர்களின் விமான நிலையத்திற்கு சென்று (எங்களின் வாடகைக் காரை அந்த விமான நிலையப் பகுதியில் எடுத்திருந்ததால் கணக்கை நேர் செய்து ஒப்படைத்து விட்டு) அவர்களின் விமானம் ஏறினார்கள்.


யுவர் அட்டென்ஷன் மிஸ்டர் தீன்நார்ன்சாம் அன் மிஸஸ் ஜம்ந்தீந்தைல்…! – அதிர்ச்சி தந்த அழைப்பு!

 

நியூயார்க்கிலிருந்து லாஸ் வேகாஸிற்கு நாங்கள் ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் செல்ல வேண்டும். இடையில் நியூயார்க் விமான நிலையத்தில் ஒரு சிறு அதிர்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அமெரிக்க ஆங்கில அறிவிப்பு ஒரு வாக்கியமாக சிதறி வந்து கொண்டிருந்தது. அதில் ‘தீன்நார்ன்சாம்’ ‘ஜம்ந்தீன்தைல்’ என்னும் உச்சரிப்பு என்னை அதிர வைத்தது. ‘என் பெயரை சொல்லுவதைப் போல் இருக்கிறதே’ என்று என் மகனிடம் சொன்னேன். அமெரிக்க ஆங்கில உச்சரிப்புக்கு பழக்கப்பட்டிருந்த அவர் மீண்டும் அந்த வாக்கியத்தை கவனித்தார். என்னையும் என் மனைவியையும் (தீனதயாளன் நாரயணசாமி, ஜமுனா தீனதயாளன்) அழைப்பதாக கூறினார். மகனும் உடன் வர ஒரு வித அழுத்தத்துடனேயே அழைப்பு வந்த கௌண்ட்டரை அடைந்தோம்.


ஒரு அயல் நாட்டு விமான நிலையத்தில் அதிலும் அமெரிக்காவில் எங்கள் பெயர்களை சொல்லி அழைத்தவுடன் சற்றே அச்சம் வந்து விட்டது.


பயத்துடன் அணுகினோம். எங்கள் பயம் சற்று நேரத்தில் விலகியது!


நாங்கள் சக்கர நாற்காலி தேவை என்று விமான டிக்கட் வாங்கும்போது குறிப்பிட்டிருந்தோம் அல்லவா! தேவையை உறுதி செய்யுபடி கூறினார்கள். சக்கர நாற்காலி வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்த போதுதான் நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினோம்.



லாஸ் வேகாஸ் லேண்டிங்! (landing)!



 

எங்கள் விமானம் நியூயார்க் நகரில் இருந்து சரியான நேரத்திற்கு புறப்பட்டது. ஐந்தரை மணி நேர பிரயாணத்திற்கு பிறகு லாஸ் வேகாஸ் மெக்காரென் (McCarran) விமான நிலையத்தில் தரை இறங்கியது. தரை இறங்கும் சமயத்தில் ஆகாயத்திலிருந்து நாங்கள் பார்த்த லாஸ் வேகாஸ் – இரவு நேரம் என்பதால் – எதோ தேவலோக சொர்க்கம் போல் வண்ண விளக்கு வெளிச்ச மழையில் நனைந்து மிகவும் ரம்மியமாக ஜ்வலித்துக் கொண்டிருந்தது.


இப்படிப்பட்ட ஒரு சொர்க்கத்தை ஏன் ‘பாவநகரம்’ (SinCity) என்று சொன்னார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன்!


விமான நிலையத்தில் டிவி பெட்டிகளைப் போல் நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார்கள். வீடியோ கேம் எந்திரங்கள் போன்ற தோற்றம் கொண்ட அவைகள் எல்லாம் என்ன என்று நான் என் மகனிடம் கேட்க, ‘..ம்..போக போக தெரியும்.. ஸ்ட்ரிப்பிற்கு போனால் புரியும்’ என்று மர்மமாக புன்னகைத்துக் கொண்டே கூறினார். இன்னொரு சஸ்பென்ஸ் எங்களுக்கு கூடிப் போனது!


யோசனை தொடர்ந்து கொண்டே இருக்க, விமான நிலைய நடைமுறைகளை நிறைவேற்றி விட்டு, எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த என் மகனின் நண்பர்களின் காரில் ஏறி கணத்த லக்கேஜுகளுடனும் லேசான மனசுடனும், சஸ்பென்ஸ் நிறைந்த எண்ணங்களுடனும் என் மகன் வசிக்கும் ‘வார்ம் ஸ்ப்ரிங்’ (WarmSprings) ஏரியாவை நோக்கி புறப்பட்டோம்.



லாஸ்வேகாஸ் (LasVegas)!


 ‘லாஸ்வேகாஸ்’ என்பது அமெரிக்க

ாவில், நிவேடா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். வேகாஸ் பள்ளத்தாகில் அமைந்திருக்கிறது. சீரா நிவேடா மலைகளாலும் (Sierra nivada Mountains), ஸ்ப்ரிங் மலைகளாலும் (Spring Mountains) சூழப்பட்ட இந்த நகரம் ஒரு பாலைவனப் பிரதேசம் ஆகும். நூற்றுப்பதிமூன்று சதுர மைல் சுற்றளவில் அமைந்துள்ள இந்த நகரின் வருடாந்திர சராசரி மழையளவு 4 இன்ச்சுகள்.


‘லாஸ் வேகாஸ்’ என்பது ‘பச்சைப்பசேல்’ என்னும் பொருள்படும் ‘ஸ்பானிஷ்’ மொழி வார்த்தை. 1800களில் அவ்வழியே சென்ற பயணிகளுக்கு பசுமையான பள்ளாத்தாக்கு பாதையையும், நீரூற்றையும் கொண்டிருந்ததால் இப்பெயர் அமைந்ததாக சொல்கிறார்கள். உண்மையில் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஒரு நகரம் இது.

நம்மில் பலர் இந்த நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. உல்லாச வாழ்க்கையின் உச்சத்தைக் காட்டக்கூடிய உலக நகரங்களில் லாஸ்வேகாஸ் நகரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. உல்லாசப் பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் பெரும்பாலும் இந்த நகரத்தை பார்க்காமல் வர மாட்டார்கள்.

அமெரிக்காவில் வேறு வேறு இடங்களில் நெடுநாள் தங்கி இருப்பவர்கள், தற்காலிகமாக சில வருடங்கள்/மாதங்கள் தங்குபவர்கள் கூட இந்த நகரத்தை காண விரும்புவார்கள் / கண்டிருப்பார்கள்.



மகனும் மருமகளும் வாழும் நகரம்!

 

இந்த நகரத்தில்தான் எங்கள் மகன் வேலைப் பார்த்து வந்ததால், நாங்கள் இங்கு ஐந்து மாதங்கள் தங்கி இருந்தோம். எனவே நாம் இங்கு குறிப்பிடும் பல விஷயங்கள், பெரும்பாலும் இந்த நகரின் அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டவைகளாகவே இருக்கும். என்றாலும் நாங்கள் அவ்வப்போது இங்கிருந்து சென்று வந்த மற்ற அமெரிக்க ஊர்களைப் பற்றிய அனுபவங்களும் நிறைய இடம் பெற்றிருக்கும்.


‘கேஸினோ’ என்னும் சூதாட்ட விடுதிகள் மிகுதியாக கொண்டிருக்கும் நகரம் இது. 1931-ல் ‘கேஸினோ’ எனப்படும் சுதாட்ட விடுதி விளையாட்டுகள், அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தில், சட்டபூர்வம் ஆக்கப்பட்டதாம். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ‘கேஸினோ’க்கள் இங்கு இருக்கின்றன.


‘உலகின் சூதாட்ட தலைநகரம்’ என்னும் அடை மொழியும் இந்த நகருக்கு உண்டு. ‘SinCity’ என்று குறிப்பிடப்படும் நகரமும் இதுதான். போக்கர், ப்ளாக்ஜாக்(21), ஸ்லாட், ரௌலெட், பெக்காராட், அதிர்ஷ்ட சக்கரம், கீனோ (Poker, Craps, Black Jack(21),Slots,Roullette,Baccarat,Wheel of Fortune,Keno) போன்றவை இங்கே விளையாடப்படும் சில விளையாட்டுக்கள். இந்த காஸினோக்கள் அனுபவம் பற்றி, ஒரு தனி தலைப்பில் சற்று விரிவாக பிற்பாடு பார்ப்போம்!


‘ஸ்ட்ரிப்’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மையான கேஸினோக்களும், தங்கும் விடுதிகளும், உணவகங்களும், இரவு விடுதிகளும், உல்லாச விடுதிகளும் அமைந்துள்ளன. பெரும்பாலான கேஸினோக்களுடன் மிகப் பிரம்மாண்ட தங்கும் விடுதிகளும், உணவகங்களும் ஒருங்கிணைந்தே அமைந்திருக்கின்றன. கேஸினோக்களுக்கு வரும் வெளியூர் மற்றும் அயல் நாட்டவர்களுக்கு விடுதி வாடகை (மற்ற அமெரிக்க நகரங்களை ஒப்பிடும்போது) குறைவுதான்.


ஏறத்தாழ 1,50,000 அறைகள் - பல் வேறு ஹோட்டல்களில் - இங்கு அமைந்திருப்பதாக சொல்கிறார்கள். லாஸ் வேகாஸ் வளத்திற்கு அடிப்படையாக இருக்கும் மக்களுள் இருபது சதவிகித மக்கள் வெளிநாட்டு பயணிகள் என்று குறிப்பிடுகிறார்கள். உலகின் மிகப்பிரம்மாண்ட ‘ஹோட்டல்’களின் முதல் இருபது இடங்களில் பல ஹோட்டல்கள் இடம் பெற்றிருப்பது லாஸ்வேகாஸ் நகரில்தான் என்கிறார்கள்.


மேலும் கட்டணம் கொடுத்து நாமே பயன் படுத்திக் கொள்ளும் கார்கள் மற்றும் கார் பந்தய மைதானங்கள் உண்டு. துப்பாக்கி சுடும் கேளிக்கை மைதானங்கள் (GunRanges), Buggy எனப்படும் சிற்றூர்திகள் வைத்து விளையாடும் பொழுது போக்கு இடங்கள் உள்ளன. கலை ஓவியக்கூடங்கள் காணலாம். மேலும் நூற்றுக் கணக்கான அழகு மையங்கள்(Beauty Parlour), உடல் நல குளிப்பு மையங்கள்(spa), மற்றும் இரவு விடுதிகள் என நிறைந்திருக்கும் ஊர். இருபத்திநாலு மணிநேரமும் பொழுதைப் போக்கும் அம்சங்கள் எக்கச்செக்கம்!


அமெரிக்காவின் மிக உயரமான (1149அடி) வான் ஆய்வுக்கூடம் ‘ஸ்ட்ரேட்டோஸ்பியர்’ (Stratosphere) லாஸ் வேகாஸில்தான் அமைந்திருக்கிறது.


இலட்சோபலட்ச விளக்குகளின் ஒளியில் ஜ்வலிக்கும் லாஸ் வேகாஸ் நகரம் பூமியின் பிரகசமான நகரங்களில் ஒன்று என்கிறார்கள். ‘ஃப்ரெமாண்ட் தெரு’ என்னும் பகுதியில் நடைபெறும் ஒலி-ஒளி காட்சிகள் குறிப்பிடத்தக்கது. 12.5 மில்லியன் LED விளக்குகளுடனும், 5,50,000 watt ஒலி அமைப்புடனும் நள்ளிரவில் அதிர வைக்கும் இந்த அனுபவம் பிரம்மிக்கத்தக்கது. சுமார் நூறடி உயரத்தில், ஏறத்தாழ ஒரு மைல் நீளத்திற்கு, அன்னாந்து பார்த்து மகிழக்கூடிய, பிரத்தியேக LCD மிக அகண்ட வளைந்த திரை அமைப்பும், அதில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளும் பிரம்மிப்பூட்டுபவை.


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பதினொன்றில் தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics