DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதினொன்றுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!(கோவை என். தீனதயாளன்)

அத்தியாயம் பதினொன்றுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!(கோவை என். தீனதயாளன்)

3 mins
42



பயணம் இனிதே தொடர்கிறது..!

தொடரும் இந்த நம் இனிய பயணத்தை, ஒரு தொடரைப் போல் மட்டும் தொடராமல், என் மனதிற்கு வித்தியாசமாகப் பட்ட சில நிகழ்வுகளையும் சொன்னால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றும் சில அனுபவக் குறிப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். எளிமைக்காக சிறு சிறு தலைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்.



பேருந்து பயணம்!

நம் ஊரில் பேருந்தின் உள்ளே..

‘சார் படிச்சவங்க நீங்களே இப்பிடி பண்ணலாமா.. படிக்கட்டுலே நிக்காதீங்க சார் உள்ளே வாங்க…’


‘யோவ் சாவு கிராக்கி.. எத்தினி தபா சொல்றது.. சோர் துன்றியா வேற எதுனா துன்றியா.. முன்னாடி போய்யா..’


‘லேடீஸ் சீட்டைக் காலி பண்ணுப்பா..


‘டேய்.. என்னடா என் ஆளு இன்னிக்கி இந்த ஸ்டாப்புலே ஏறலே..’


நம் ஊரில் பேருந்துக்கு உள்ளே அன்றாடம் கேட்கும் உரையாடல்கள் சில .




நம் ஊரில் பேருந்துக்கு வெளியே..

‘என்ன சார் இது.. எந்த பஸ்ஸும் ஸ்டாப்புலேயே நிக்க மாட்டேங்கறாங்க..’


‘ஒன்பது ரூபா பஸ் வேண்டாம் சார்.. நின்னுகிட்டாவது மூனு ரூபா பஸ்லேயே போயிடலாம்.. ‘


‘சார் எட்டு பத்துக்கு வர வேண்டியது சார் இந்த நாலாம் நம்பர்.. இன்னிக்குப் பாருங்க எட்டு அம்பதுக்கு வருது. இவங்கள நம்பி எப்பிடி சார் வேலைக்கு போக முடியும்..’


இவை பேருந்துக்காக வெளியே காத்திருக்கும் மக்களிடமிருந்து சர்வ சாதாரணமாக கேட்கக்கூடிய புலம்பல்கள் சில.


 

 

அமெரிக்காவில் பேருந்து

 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நான் பார்த்த வரை ஒரு முறை கூட, மேற்கண்ட ஒரு வாக்கியத்தைக் கூட, நான் கேட்கவில்லை.


(‘அவங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே! எப்படி கேட்க முடியும்? ஆங்கிலத்தில் பேசியிருப்பார்கள்!’ என்று யாரோ ஒரு மொக்கை போடுவது என் காதில் கேட்கிறது.)


முதலாவதாக, இங்கே பேருந்தில் நடத்துனர் என்று ஒருவர் கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். (மிகப்பெரிய ட்ரெயிலர் போன்ற பேருந்துகளைத் தவிர ) பெரும்பாலான பேருந்திற்கு ஒரே கதவுதான். அதுவும் மூடிதான் இருக்கும். நம் ஊரைப் போல பேருந்து நிறுத்தம் பெரிதாக இல்லை. ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் நிற்குமளவு சிறிய மேற்கூரையுடன் இருக்கிறது. பேருந்து சரியான நேரத்திற்கு வருகிறது. சரியாக மிகச் சரியாக ‘பஸ் நிறுத்த’த்தில் நிற்கிறது.


பேருந்தை நிறுத்தி தொலை இயக்கக் கருவி மூலம் கதவைத் திறப்பது, ஏறும் ஒவ்வொருவருக்கும் புன்னகையுடன் ‘ஹை’ சொல்லி காசு வாங்கிக் கொள்வது, டிக்கட் கொடுப்பது, கதவை மூடுவது, எல்லோரும் அமர்ந்தபின் வண்டியை எடுப்பது, பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை சொல்லி பயணிகளை இறக்கி விடுவது.. என எல்லாமே ஓட்டுனர்தான். பெரும்பாலோர் ‘ஸ்வைப்’ செய்து கட்டணம் செலுத்தும் பிரத்தியேக போக்குவரத்து அட்டையை வைத்திருக்கிறார்கள். பணம் கொடுப்பவர்களுக்கு ஓட்டுனர் மீதி சில்லரையை பைசா (இங்கே சென்ட்) வாரியாக கொடுத்து விடுகிறார். இறங்கும் போது ‘இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கட்டும்’ என்று வாழ்த்தி அனுப்புகிறார்.


பேருந்தினுள் யாரும் நின்று கொண்டு போவதில்லை. படிக்கட்டு பயணம் சாத்தியமில்லை. ஆண்/பெண் தனித் தனி இருக்கை இல்லை. ‘டிக்கட்’ வாங்காமல் பயணம் சாத்தியமில்லை. கசக்கும் கூட்டம் இல்லை. விசில் சத்தம் இல்லை.


மூனு ரூபா பஸ், ஒண்பது ரூபா பஸ் என்றெல்லாம் எதுவுமில்லை. இறங்க இறங்க அல்லது ஏற ஏற பேருந்தை நகர்த்துவதில்லை.


ஆனால் ஒரு விஷயம். இங்கு பேருந்துகளும் குறைவு. பேருந்தை பயன் படுத்துபவர்களும் குறைவு.


இன்னொரு விஷயம். இங்கு சிலர் சைக்கிளில் வந்து, சைக்கிளை பேருந்தின் முன்னால் அதற்கென இருக்கும் பிரத்தியேக கொக்கி போன்ற அமைப்பில் வைத்து விட்டு, பேருந்தில் ஏறி, இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, சைக்கிளை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து மீண்டும் சைக்கிளில் போய் விடும் காட்சிகளை எல்லாம் அடிக்கடி பார்க்கலாம்!


கடைகள்

வால்மார்ட், மேசி’ஸ் போன்ற பிரபலமான கடைகள் ஆங்காங்கே இருக்கின்றன. நம் ஊரில் ரிலையன்ஸ், நீல்கிரீஸ், ஸ்பென்சர் போன்றவைகளுக்கு ஒப்பானவை. ஆனால் அவைகளைப் போல் பலப்பலப்பல மடங்குகளுக்கு மேல் பெரியவை. பெரும்பாலானவை 24 மணி நேர சேவை வழங்குகின்றன. ஒவ்வொன்றும் நம் ஊர் ‘ஷாப்பிங் மால்’ களைப்போல் இருபது முப்பது மடங்குகள் பெரியதாக இருக்கின்றன. பெரும்பாலும் தானியங்கி முறைதான். மிகக் குறைந்த ஆட்களே பராமரிக்கின்றனர்.


மளிகை, அழகுசாதனம், குளிர்பானம், வளர்ப்புப் பிராணிகளின் தேவை, காய்கறி, இறைச்சி என்று நூற்றுக்கணக்கான பகுதிகளின் பெயர்களையும்,  அவற்றின் உபபகுதிகளின் பெயர்களையும் தெளிவாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டு விடுகின்றனர். நாமே தள்ளு வண்டிகளை எடுத்துக் கொண்டு, நாமே பொருள்களை தேர்ந்தெடுத்து, நாமே பில் போட்டுக் கொண்டு, நாமே பண அட்டையை சொருகி பணத்தை கொடுக்க வேண்டியதுதான். உதவி தேவைப் படுபவர்களுக்கும், அட்டையின் மூலம் இல்லாமல் பணமாக கொடுப்பவர்களுக்கும் (இவர்கள் சொற்பமே) அலுவலர்கள் முன் வந்து உதவுகிறார்கள்.


உடல் ஊனமுற்றவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் வண்டிகள் தனியாக இருக்கின்றன. அதில் அமர்ந்து அவர்கள் ‘ஷாப்பிங்’ செய்யலாம். தேவை என்றால், ஒரு அலுவலர் அவர்கள் கூடவே இருந்து உதவுகிறார்.


தள்ளுவண்டிகளை நம் கார் வரை அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை எடுத்து வரலாம். அந்த எல்லைக்கு மேல் வண்டிகளை எடுத்துச் செல்ல முயன்றால் அவை தானாக ‘லாக்’ ஆகிக் கொள்கின்றன.


 

பில் போடா விட்டால் கீ.. கீ..

சரி. நாமே பில் போட்டுக் கொள்கிறோம். ஏதாவது ஒரு பொருளை யாரோ ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ(!) பில் போட தவறி விட்டால்…? கடையின் கதவுகளைத் தாண்டும் போது ‘கீ.. கீ.. ‘ என்று அலாரம் கொடுத்து கடைப் பாதுகாவலர்களை அங்கே வரவழைத்து விடும். தெரிந்தே ‘பில்’ போடாமல் எடுத்து வந்திருந்தால்.. நிலைமை சற்று கவலைக்கிடம்தான்!


(இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு பேக்கிங் மீதும் அந்த பேக்கிங்கிற்கு என்று ஒரு (unique) குறியீட்டுஎண் (barcode) இருக்கும். நாம் பில் போடும்போது, கடைக்காரரின் கணினியில், இந்தக் குறியீட்டுஎண் உள்ள பொருள் பில்லிடப்பட்டு விட்டது என்று பதிந்து விடும்.


நாம் பொருள்களை வெளியில் எடுத்து வரும் போது, ஒவ்வொரு பொருளின் குறியீட்டு எண்ணும் வாசலில் இருக்கும் ஒரு ‘சென்ஸார்’ மூலம் கணினிக்கு அனுப்பப்பட்டு விடும்.


கணினியில் பில் போடப்பட்டு விட்ட பொருள்களின் குறியீட்டு எண்களின் பட்டியலில் இந்த குறியீட்டு எண்ணும் உள்ளதா என்று கணினி சோதிக்கும்.


அந்தப் பட்டியலில் இந்தப் குறியீட்டுஎண் இல்லை என்றால் அலாரம் எழுப்பப்படும்.) 

 

 

 

   அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-12 ல் ............. தொடரும்…



Rate this content
Log in

Similar tamil story from Classics