அமுக்கும் ஆவி
அமுக்கும் ஆவி


கலை அன்று சீக்கிரமாக உறங்க சென்றுவிட்டாள். ஆனால் சரியாக அதிகாலை 3.07 மணிக்கு அவள் விழித்துக்கொண்டாள் மணியைப் பார்த்ததும் அவளுக்கு சட்டென நினைவில் வந்தது அவள் சில நாட்களுக்கு முன் பார்த்த காஞ்சூரிங் படம் தான்.
அதில் அந்த சூனியக்காரி இறந்த நேரம் 3.07 AM என்றும், அந்த நேரத்தில் அவளின் சக்தி அதிகரித்து அங்கு உள்ளவர்களை கொன்றுவிடுவாள் என்றும் கூறுவர். அதை நினைத்தப் பிறகு அவளுக்கு தூக்கமே வரவில்லை.
எண்ணங்களை எங்கெங்கோ திசை திருப்ப முயன்றும் அவளால் அந்த பய உணர்வை விட்டு வெளியே வர முடியவில்லை. நேரம் ஆக ஆக அவளையறியாமல் உறங்கிப்போனாள்.
தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
திடீரென அவள் கழுத்தை போர்வைக்கு மேலிருந்து ஏதோ அமுக்குவது போல் இருந்தது, மூச்சு விட சிரமம் ஏற்பட , அவள் தன் கை,கால்களை வேகமாக ஆட்டி தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளது உடலின் எந்த பகுதியையும் அவளால் அசைக்க கூட முடியவில்லை.
அம்மா, அப்பா என்று கத்த முயற்சிக்கிறாள் சத்தம் அவள் காதுகளுக்கே கேட்கவில்லை.
நெஞ்சம் படபடக்க தன் முழு சக்தியையும் ஒன்றுதிரட்டி மறுபடியும் முயற்சித்தாள், இப்போது அவளை அமுக்கிய கை அவள்மேல் இல்லை. ஆனாலும் அவள்மேல் உள்ள போர்வையை விலக்க அவளுக்கு கடினமாக இருந்தது, ஒருவழியாக முயற்சித்து போர்வையை விலக்கினாள்.
ஒரு உருவம் கருப்பாக, வெள்ளை முடியுடன் எதிரில் இருக்க பயத்தின் உச்சியில் துள்ளி எழுந்து ஓட முற்பட்டாள்.
அடியே மணி எத்தன ஆவுது இன்னும் தூக்கமா?
எழுப்பி விட்டா, இப்புடி குதிக்கிறன்னு அவள் பாட்டி பூமாது கேட்க, அடச்சே! எல்லாம் கனவா, என எழுந்து சென்றாள். ஆனாலும் அந்த பயம் அவள் மனதைவிட்டு விலகவில்லை. சிறிது நேரம் கழித்து இது போன்ற கனவுக்கு என்ன அர்த்தம் என்று பாட்டியிடம் கேட்டாள்.
அதற்கு பாட்டி இது கனவு அல்ல, இது நம் மூளையின் மாயை, நாம் நன்றாக உறங்கும்போது எதாவது இடையூறு ஏற்பட்டால் நம் மனது விழித்துக் கொள்ளும். ஆனால் உடம்பிற்கு மூளையிடமிருந்து கட்டளை வருவதில் தாமதம் ஏற்படும்போது நாம் எழ நினைத்தாலும் நம் உடம்பு ஒத்துழைக்காது. நம்மை எழ விடாமல் ஏதோ அமுக்குவது போல் தோன்றும்.
தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை தான் இதற்கு காரணம். மருத்துவ உலகில் இதை ஸ்லீப் பேரலைசிஸ் -னு சொல்லுவாங்க.
இதை புரியாதவர்கள் பேய் அமுக்குது என்று கூறி காலம் காலமாய் சொல்லி, அனைவரையும் நம்ப வைத்து விட்டார்கள்.
அதுவும் நீ பேய் படமா பார்ப்ப அதுனால உனக்கு அது இன்னும் பயத்தை ஏற்படுத்தி இருக்கும்-னு பாட்டி சொல்ல, நீ பெரிய அறிவாளி தான் பாட்டி, புரளிய கிளப்புற பாட்டிங்களுக்கு மத்தியில நீ ஒரு ராக்ஸ்டார் -னு சொல்லி கட்டியனைத்தாள்.