sangeetha muthukrishnan

Drama Horror Tragedy

4.8  

sangeetha muthukrishnan

Drama Horror Tragedy

மறைபொருள்

மறைபொருள்

4 mins
1.5K


ராஜி காபி கோப்பைகளை டிவியை நோண்டிக்கொண்டிருந்த தன் தம்பி ஆகாஷிடம் நீட்டினாள். "எங்க டா உங்க மாமா?" என்றாள் கேள்வியாக.

"வேற எங்க.. மொபைல் நியூஸ்பெபேர் எல்லாம் தூக்கிட்டு போய் பாத்ரூம் ல செட்டில் ஆகி அரை மணி நேரம் ஆச்சு" என்று நக்கலடித்தான்.

"என் புருஷன காலங்கார்த்தால வம்பிழுக்காதே" என்று அவள் சொல்லும்போதே சரத் கதவை தட்டினான். "ஏய் திறங்க கதவை.. யாரு பூட்டினது வெளிய?" என்று.

ஆகாஷ் சிரித்துக்கொண்டே போய் கதவை திறந்துவிட்டு, "மகா கேடி மாமா உங்க பொண்டாட்டி.. உங்கள உள்ள வச்சு பூட்டிட்டு பாவமா மூஞ்ச வச்சிட்டு நீங்க எங்கன்னு என்கிட்டே நடிக்குறா".


சரத் அவளை செல்லமாய் முறைத்த போது ராஜி நமட்டு சிரிப்புடன் அவனுக்கு காபி கோப்பையை கொடுத்தாள்.


அம்மா அழைத்தாள். "சொல்லுமா.."

"ம்ம்ம்.. ரெண்டு பேரும் சாப்பிடறாங்க. இப்போ கிளம்பிடுவாங்க. எனக்கு தான் புது இடம்.. தூக்கமே வரல. கெட்ட கெட்ட கனவா வருது. நேத்து கூட யாரோ செத்துப்போன ஒருத்தர் கிட்ட பேசுற மாதிரி கனவு. பதறி அடிச்சு எழுந்தா இவரு நல்லா குறட்டை விட்டு தூங்குறாரு"


அவள் பேசிக்கொண்டிருந்ததை பற்றி மாமனின் காதில் கேலி பேசினான் ஆகாஷ். இருவரும் வாய் விட்டு சிரித்துக்கொண்டார்கள்.


"சரி நான் அப்புறமா கூப்பிடுறேன் மா.. வேலையெல்லாம் முடிச்சுட்டு. பாரும்மா என் கனவு பத்தி சொன்னதை கேட்டு ரெண்டு பேரும் சிரிக்குறாங்க" என்று குறை கூறிக்கொண்டே போனை வைத்தாள்.


முறைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்த இருவரிடமும் டிபன் காரியர்களை கொடுத்து வழியனுப்பினாள்.


ஆண்கள் வீட்டை விட்டு கிளம்பியவுடன் அடுத்த வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு பெண்கள் சோபாவில் சாய்ந்து இரண்டு நிமிடம் ஆயாசமாக கண்களை மூடுவது போன்ற இன்பம் வேறெதுவும் இல்லை. அது அவர்களுக்கான தருணம்.


ராஜியும் சாய்ந்து அமர்ந்து இரண்டு நிமிடம் கண்களை மூடினாள். ஆகாஷ் ஒரு வருடமாகவே வேலை கிடைத்து சென்னையில் தான் இந்த அபார்ட்மெண்டில் தான் தங்கியிருக்கிறான். அம்மாவுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது ஓய்வு பெற. அதுவரை திருச்சியிலிருந்து வர முடியாது. சரத் வேலை மாற்றம்ஆனதும் மூன்று மாதங்களுக்கு முன் வந்து மச்சானோடு சேர்ந்து கொண்டான். ராஜிக்கு அவ்வளவு சீக்கிரம் வேலையை விட முடியவில்லை. அவளால் ஒரு வாரத்துக்கு முன் தான் இங்கே வந்து சேர முடிந்தது. புது வேலைக்கு பல இடங்களில் விண்ணப்பித்திருந்தாள். அதுவரை இல்லத்தரசி தான்.      


பிற வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு தொலைக்காட்சியை போட்டால் அதில் உருப்படியாக ஒன்னையும் காணோம். கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அந்த குடியிருப்பின் பூங்கா நோக்கி நடந்தாள். நல்ல மத்தியான நேரம் யாரும் இருக்கமாட்டார்கள். பொதுவாக காலையும் மாலையும் களைகட்டும் பூங்கா மதிய நேரங்களில் ஆளரவமின்றி காணப்படும். உள்ளே போய் மர நிழலில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் கால் நீட்டி சாய்த்து ஆசுவாசமாக அமர்ந்து கையில் இருந்த புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து வாசித்தாள். 

சில நிமிஷங்களுக்கு பின் அங்கு யாரோ நிற்பது போல் உணர்ந்து தலை நிமிர்த்தி பார்த்தாள் ராஜி. நல்ல ஆஜானுபாகுவான ஒரு முதியவர் . கதர் சட்டையும் பைஜாமாவும் அணிந்திருந்தார். முகத்தில் ஒரு தேஜஸ். அவள் அவரை கேள்வியாய் நோக்கும்போதே அவர் பேசினார்.


"நான் இங்கே உட்காரலாமா?" ராஜி யோசனையோடு அங்கே இருந்த மற்ற சிமெண்ட் பெஞ்சுகளை பார்த்தாள்.


"பொன்னே! இந்த பூங்காவில் நான் இளைப்பாற வேற இடங்கள் உள்ளது. அனால் தனியாக அமர்வதை விட உன்னோடு பேசி கொண்டிருக்கலாம் என்று தான் உன்னை கேட்கிறேன்" என்றார்.


ராஜி உடனே சுதாரித்து கால்களை மடக்கி இடம் விட்டு அவரை நோக்கி புன்னகைத்தாள்.


அவர் அமர்ந்து கொண்டே "என்ன படிக்குறே?" என்று அவள் புத்தகத்தில் அட்டையை நோட்டம் விட்டார். 


"அடடே பேஷ்.. மிஸ் ஜானகி.. தேவன் எழுதினது.

  

ராஜி அவரை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

"இந்த காலத்து பிள்ளைங்க இதெல்லாம் வாசிக்குறீங்கன்னு நெனச்சா மனசுக்கு ஆறுதலா இருக்கு."


ராஜி இப்போது மௌனம் உடைத்து பேச ஆரம்பித்தாள். "பழைய நாவல், சிறுகதைகள் வாசிக்குறதுல ஒரு த்ரில் இருக்கு..." என்று இழுத்தாள்.


"தாத்தானு கூப்பிடுமா" என்று எடுத்து கொடுத்தார்.


"அதிவேக வாகனங்கள், டெலிபோன், மொபைல் இதெல்லாம் இல்லாத காலகட்டத்துல வெளியான கதைகள் தர சுவாரசியம் இப்போ இல்லைங்கறது என் அபிப்ராயம் தாத்தா" என்றாள்.


"ம்ம்ம்.. ஆனா எனக்கு இந்த காலத்து கதைகள் கவிதைகள் எல்லாம் பிடிக்குது பொன்னே.. ஒரு நிதர்ஸனம் இருக்கு. தினசரி பிரச்சனைகளை வச்சு புனையப்படற கதைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்குது" என்றார்.


" நல்லா இருக்கே! நம்ம கருத்து வேறுபாடும் வயசு வேறுபாடும்" என்று விட்டு சிரித்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தாத்தா ஒரு விஞ்ஞானி என்று தெரிந்து ஆச்சர்யபட்டாள்.


பசி வயிற்றை கிள்ளிய போது அவரே "போ மா நேரமாகுது பசிக்கும். இந்த கிழட்டு பய கிட்ட மாட்டிகிட்டோமே இன்னைக்குனு மனசுக்குள்ள தோற்றத்துக்கு முன்னாடி போய் சாப்பிடு" என்றார்.


"சரி தாத்தா.. சாயங்காலம் வாக்கிங் வருவேன் அப்போ பாக்கலாம் என்று எழுந்தாள்.


"நான் கூட்டம் அதிகமா இருக்கிற நேரங்கள்ல இங்க வர்ரதில்ல பொன்னே.. நாளைக்கு இதே நேரம் வந்தியனா பாக்கலாம்" என்றார்.


சாப்பிட்டு முடித்து ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து பார்த்த பொழுது மணி ஐந்து. ராஜி எழுந்து முகம் கழுவி நடை பயிற்சி செய்வதற்காக மொபைல் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியபோது அலைபேசி ஒலித்தது.. ஆகாஷ் தான் அழைக்கிறான்.


"சொல்லு டா"


"அக்கா இன்னிக்கு லஞ்ச் சூப்பர்.. மதியமே கூப்பிட்டேன். நீ போன் எடுக்கவே இல்ல."


"ஆஹா.. உன் வாயில இருந்து பாராட்டா? மதியம் புக் எடுத்துட்டு பார்க் போயின் டா. அங்க ஒரு தாத்தா கிட்ட பேசிடிருந்தேன் நேரம் போனதே தெரில. வந்து சாப்பிட்டு தூங்கிட்டேன். மொபைல் பாக்கவே இல்ல. பாத்திருந்தா கூப்பிட்டுருப்பேன்."


"பாரேன் ஒரு வருஷமா எந்த தாத்தாவும் எங்கிட்ட பேசுனதில்ல. நீ வந்த ஒரு வரத்துலயே உன் வயசுக்கு தகுந்த மாதிரி பாய்பிரென்ட் தேடிகிட்ட"


"டாய்.. போடா.. நல்ல தாத்தா.. ஜாலியா அரட்டை அடிச்சாரு. அவரு சயின்டிஸ்ட் தெரியுமா?"


"என்னக்கா நீ யாரை சொல்லற.. சரியாய் சொல்லு", இப்பொது அவன் குரலில் ஒரு அவசரம் இருந்தது.


"வெங்கட்ராமன்னு சொன்னார். நல்ல உயரமா கதர் சட்டை போட்டுக்கிட்டு.." அவள் முடிக்கும் முன்பே ஆகாஷ் நிறுத்தினான்.


"ஐயோ அக்கா அன்பீலிவைப்பில்.. நீ சொல்லறவரு செத்து போய் ரொம்ப நாள் ஆச்சு. அவர் வீட்லயே லேப் செட்டப் பண்ணி ரிட்டையர் ஆனப்பறமும் எதோ ஆராய்ச்சி செஞ்சிருக்கார்.அதுல ஏற்பட்ட விபத்துல அவர் இறந்துட்டார். இது நடந்து சில மாசம் ஆச்சு. நீ காலைல சொன்ன மாதிரியே செத்துப்போன ஒருத்தரோட பேசியிருக்க"


"என்னடா சொல்லற"


"ஐயோ அக்கா.. ஆமா நீ திரும்பவும் அவரை பார்த்தா பேச முயற்சிக்காத. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்."


அதற்குமேல் ராஜியின் மனம் உடல் எதுவும் அவள் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. பதட்டம் தொற்றிக்கொண்டது. வீட்டு ஜன்னல்களை இருக்க மூடினாள். திரை போட்டு மூடி வைத்தாள். பூஜை அரை சென்று விளக்கேற்றி சஷ்டி கவசம் சொன்னாள்.


கதவு தட்டும் ஓசை கேட்டு பயத்தினூடே வந்து கதவை திறந்தாள். ஆகாஷ் "என்ன அக்கா இவ்ளோ நேரம்" என்று உள்ளே வந்து அமர்ந்தான். சட்டை எல்லாம் ஒரேய மண். "என்னடா ஆச்சு."


"ஒன்னும் இல்லே அக்கா.. வீடு பக்கத்துல வரும்போது கொஞ்சம் வழுக்கிடுச்சு. வண்டியோட விழுந்துட்டேன். அடி எல்லாம் படலை. போய் குளிச்சா சரியாய் போய்டும்" என்றுவிட்டு நகர்ந்தான்.


"சே.. இன்னிக்கு ஒண்ணுமே சரி இல்ல.." என்றுவிட்டு திறந்த கதவை மூட சென்ற போது அவள் அங்கே தாத்தாவும் பக்கத்து வீட்டு டீச்சர் பத்மாவும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தாத்தா பேசி விட்டு மெல்ல மாடிப்படியேறி செல்வதை பார்த்துவிட்டு அவசரமாக ஓடிப்போய் பத்மாவிடம் "ஆண்ட்டி அவர் யாரு?" என்றாள்.


"சயின்டிஸ்ட் தாத்தா. அவர் ஒருத்தருக்கு தான் இங்க இருக்குறவங்க எல்லாரையும் தெரியும். ஆளுக்கு தகுந்த மாதிரி பேசி பழகிக்குவாரு. நல்ல மனுஷன். எப்போ பார்த்தாலும் ரெண்டு வார்த்தை பேசாம போக மாட்டாரு." என்றாள்.


இப்பொது புரிந்தது. காலையிலேயே மச்சானும் மாமனும் தன்னை ஏமாற்ற முடிவு செய்து பேசி வைத்துக்கொண்டார்கள் போல. இன்று அவள் யாருடன் பேசியிருந்தாலும் அவர்களை கொன்றிருப்பார்கள். மோசமானவர்கள். உள்ளே சென்று பாத்ரூம் கதவை தாளிட்டாள். சத்தம் கேட்டு ஆகாஷ் கத்தினான். "ஏய் அக்கா கதவை பூட்டிட்டாயா திற.."


"போடா என்னையா ஏமாத்துற.. ராஸ்கல்"


"தெரிஞ்சு போச்சா.. சரி திற.."


"கொஞ்ச நேரம் உள்ளேயே கிட"


 போன் அடித்தது. சரத் தான் பேசினான். "ராஜி மனச திடமா வச்சிக்கோ. ஆகாஷ் வீட்டுக்கு வர வழில ஒரு விபத்து ஏற்பட்டு அந்த இடத்துலயே நம்ம விட்டு போய்ட்டான். நீ கலங்க கூடாது. பயப்பட கூடாது. நான் சீக்கிரம் வந்துடறேன்" என்றான்.


ராஜி பதத்தோடு செய்வதறியாது நின்ற போது குளியலறையின் உள்ளே இருந்து குரல் கேட்டது "கீழ விழுந்தது உடம்பெல்லாம் வலிக்குது. கதவை திற அக்கா"


Rate this content
Log in

Similar tamil story from Drama