sangeetha muthukrishnan

Drama

4.3  

sangeetha muthukrishnan

Drama

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

4 mins
293


அறுத்து, பூச்சி இருக்கிறதா என்று பார்த்து பாட்டி தண்ணீரில் போடும் கத்தரிக்காய்களை தாத்தா வாஞ்சையுடன் பார்த்தார். "எல்லாரும் எங்கே? ஆத்துல பூனைக்குட்டிய கூட காணலியே!" என்றார். கத்தரிக்காயே கருத்தாக "பேரன் ஹரிஷ் நண்பன் டேவிட் கல்யாணமோல்லியோ இன்னிக்கு! அங்க போயிருக்கா.. வர நாழியாயிடும். அதான் நமக்கு அளவா அரிசி உப்மா செய்துடறேன்..." என்று பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும் போதே "ஆஹா! தொட்டுனுட கத்திரிக்கா கொத்சு போலேயே பேஷ் பேஷ்" என்றார்.

செல்லமாக சிரித்துக்கொண்டே "வயசு எண்பதை தாண்டறது! நாக்கு நப்பு கொறையறதா பாருங்கோ! சந்தான ராமன்ர பேருக்கு பதிலா சாப்பாட்டு ராமன்னு வச்சிருக்கலாம்" 


"ஹா! ஹா! சொல்லிண்டு போங்கோ! என்ன கொறஞ்சிடுது இப்போ! ஆனா ஜானகி, நான் மெட்ராஸ் வந்த புதுசுலே ஒரு பைனான்ஸ் கம்பெனியில குமாஸ்தாவா இருந்தேன் நினைவிருக்கா? அங்க இருந்தாரே முதலாளி அவரு கூட இப்புடி தான் தமாஷா கூப்பிடுவாரு... முதல் முறை அவர் என்னை அப்டி கூப்பிட்ட ஞாபகம் கூட அப்டியே இருக்கு எனக்கு" என்றார் அந்த நினைவுகளில் உழன்றபடி.

"ஆஹா! நடராஜ செட்டியார் கம்பெனி காலமா? அறுபது வருஷ பழங்கதையாச்சே! சொல்லுங்கோ கேட்போம்" என்றார் பாட்டி. 


சந்தான ராமன் கையில் சாப்பாட்டு பையையும் கல்கி வார இதழையும் வைத்துக்கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த நேரம் சிறு ஹார்ன் ஒலியோடு ஒரு மோட்டார் கார் அவர் முன்னே வந்து நின்றது. உள்ளேயிருந்து முதலாளி நடராஜ செட்டியார் எட்டிப்பார்த்தார். "சந்தானம் வந்து உள்ளே ஏறு! பஸ்சுக்காக நிக்கறப்போலே!"என்று தன் வண்டியில் ஏற்றிக்கொண்டார்.

"அப்புறம் எந்த ஊரப்பா நீ? அலுவலகத்திலே சகஜமா பேச நேரம் அகப்படறதில்லே!" என்றார்.

"சிதம்பரம் சார்!" என்றார் சந்தானம் பவ்வியமாக.

"ஆஹா! மெட்ராஸ் எல்லாம் பழகியாகிறதா? பெண்டாட்டி பிள்ளைகளோடு வந்து குடிபெயர்ந்தாச்சா?" என்றார்.

சங்கோஜ சிரிப்புடன் "போன வருஷ கடைசிலதான் கலியாணம் ஆயித்து. சம்சாரத்தோடதான் தங்கியிருக்கேன். இன்னும் பெருசா இந்த ஊர் பழகலை எங்களுக்கு" என்றார்.

அப்போது கார் மௌன்ட் ரோடு வழியாக செல்லவும் "இந்த எல்.ஐ.சி கட்டிடம் பாத்திருக்கிறாயா? இந்தியாவிலேயே பெரிய கட்டிடம்" என்று அவர் பிரஸ்தாபிக்கும் போதே "இந்த வருஷம் பம்பாய்காரன் ஒன்னு கட்டிபுட்டான் சார் இத விடவும் பெருசா" என்றார் சந்தானம் வருத்தம் தோய்ந்த குரலில்.


"அடேடே! அப்படியா! போறது போ நாடு போற வேகத்திலே இன்னும் நிறைய கட்டிடங்கள் இந்த மாதிரி வரும். மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு கட்டிடமா கட்டி தள்ள போறாங்க பாரேன். அது என்ன கையில?"

சந்தானம், "கல்கி சார்!"

செட்டியார், "அதெல்லாம் படிக்கறதுக்கு காலம் போதறதில்ல.ஏதாச்சும் சரித்திர கதை வருதா இப்போ?"

"ஆமாம் சார்! ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கதை வர்றது! அகிலன் எழுதறார். நன்னா இருக்கு. நான் படிச்சுட்டு என் ஆத்துக்காரி கிட்ட குடுத்துருவேன் அவ ஒவ்வொரு அத்யாயமா சேகரிச்சு புஸ்தகம் பண்ணிடுவா" என்றார்.

"பலே! பலே! ராஜ ராஜன் மகன் கதையா? என்ன பேரு?"

"வேங்கையின் மைந்தன் சார்"

 "பொருத்தமான பெயர்தான்!" என்றார்.


"சாப்பாடெல்லாம் என்ன பன்ற! நம்ம பியூன் நடேசன் கிட்ட சொன்னா பக்கத்துக்கு மெஸ்ல இருந்து வாங்கிட்டு வந்து தந்திடுவானே!"

சந்தானம், "அதெல்லாம் தேவை படாது சார். என் ஆத்துகாரி நன்னாவே சமைப்பா. தினமும் எதுனாச்சும் செஞ்சு கட்டி குடுத்துருவா. இன்னிக்கு கூட ஒடம்பு சொஸ்தமில்லே போலெ படுத்துண்டா ஆனாலும் சாப்பாடு தயார் பண்ணி கட்டி மேசை மேல வச்சுட்டா. நான் எடுத்துண்டு வந்துட்டேன்" என்றார்.


அவர் ஆச்சரியமாக பார்க்கும் போதே தொடர்ந்து "நேத்து தேனிலவு போனோம்! அந்த களைப்பா இருக்கும்" என்றார் மெதுவாக.

செட்டியார், " என்னப்பா நீ! நேத்து உன்னை ஆபிஸ்ல பாத்தேன் நீயானா தேனிலவுக்கு போனென்றியே"

கொஞ்சம் சிரித்துவிட்டு , " இது படம் சார். ஜெமினி கணேசன் நடிச்சது. செகண்ட் ஷோ அழைச்சிண்டு போனேன் அவளை"

"அஹ்ஹா! சுத்தம் போ! எனக்கு எங்க ஒழியறது? வீட்ல குழந்தைகள் அடம் பிடிச்சு பாசமலர் போய் பார்த்தோம். அப்புறம் ஒன்னும் பாக்கலை. அது சரி. உன் மனைவி கிட்ட சொல்லி ஒரு நாள் எனக்கு அப்பளம் வத்தல் குழம்பு செஞ்சு கொண்டு வந்து கொடுப்பா. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு பெண்களுக்கு உங்க பக்கம் வைக்குற மாதிரி வராது. செய்யத்தெரியும் தானே உன் மனைவிக்கு? என்றார் நடராஜன்.


போதுமே சந்தான ராமனுக்கு, "என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க! அவ சமையல்ல குயின் சார்.. எல்லா வகையான சமையலையும் அசத்துவா! அப்பளம் குழம்பு கூட தொட்டுக்க பருப்பு உசிலி செய்வா பாருங்கோ.. ஆஹான்னு இருக்கும். அப்பளம் குழம்பு அந்த பக்கம் நிக்குற மாதிரி இருக்கும் அவ செய்யுற பருப்பு உருண்டை குழம்பு.. இன்னும் மா, சுண்டைக்காய் எல்லாம் போட்டு வத்தல் குழம்பு வைச்சா தெருவே மணக்கும்"

நடராஜன் சிரித்துக்கொண்டே "நீ சந்தான ராமன் இல்லைப்பா, சாப்பாட்டு ராமன்.. ஆனாலும் நல்லா இருக்கு நீ சொல்றதெல்லாம். சொல்லு கேப்போம் வேற என்ன உங்க வீட்ல ஸ்பெஷல்?"

கேட்டதே போதும் என்று, " எல்லாமே நன்னா செய்வா சார். கறிவேப்பிலை குழம்பு, பிரண்டை துவையல், புடலங்காய் பால் கூட்டு, வாழைப்பூ திரட்டல் எல்லாம்.

பொரிச்ச கூட்டுன்னு எங்க பக்கத்திலே செய்வோம். தேவாம்ருதம் தோத்துடும் போங்கோ! ரசம் சொல்லுங்க ஏகப்பட்ட வெரைட்டி தெரியும் அவளுக்கு. தக்காளி, எலுமிச்சை, சீரகம் , இஞ்சி , பருப்பு ரசம் எல்லாம் கேள்விப்பட்டிருப்பிங்கோ. ஆனா மோர் ரசம் சாப்பிட்ருக்கேளா? கொட்டு ரசம், கிள்ளு ரசம், திப்பிலி ரசம் எல்லாம் அசாதாரணமா செய்வா. அவ வைக்கிற மைசூர் ரசத்துக்கு ஈடு இணையே இல்லை. டம்ளர்ல ஊத்திண்டு குடிக்கலாம்.

"வேற.. இந்த கோவில் பிரசாதம் எல்லாம் நல்ல செய்விங்களே" என்றார் ஆர்வமாக.

"இல்லியா பின்னே? தத்தோஜனம், சித்ரான்னம், உளுந்தோரை, கடுகோதரை, வரதராஜ பெருமாள் கோவில் இட்லி கிட்டத்தட்ட அதே டேஸ்ட் கொண்டு வந்துருவா. புளியோதரைல மூணு விதமா பண்ணுவா.

சாதத்தை விட்டுத்தள்ளுங்கோ தொட்டுக்க செய்யுறது வச்சுண்டு சப்பிட்டே முடிச்சுறலாம். வாழைக்காயை சுட்டு ஒரு பொடி பண்ணுவா பாருங்கோ அது இருந்தா போறும். அது போலவே தான் சுட்ட கத்திரிக்கா மோர் பச்சடி, கருவடாம் போட்டு கூட்டு வெச்சா அஹ்ஹா..."


"இந்த இனிப்பு, காரம் வகையறாக்கள் எல்லாம்?" ஆசையோடு கேட்டார் நடராஜன்.

"அதுவும் தான். காசி அல்வா, அசோகா அல்வா எல்லாம் தண்ணி பட்ட பாடு. மார்கழில அக்காரவடிசல், சம்பா சாதம், அம்மினி கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, தேன்குழல், தட்டை முறுக்கு , சீடை , மாலாடு இப்புடி சொல்லிண்டே போலாம்.

மங்களூர்லே அவ சித்தி இருக்காங்க, அவங்க சொல்லி குடுத்ததுன்னு சொல்லி கடுபுன்னு ஒரு பதார்த்தம் பண்ணினா பாருங்க மஞ்சள் இலைல கட்டி கொழுக்கட்டை மாதிரியே.. அந்த இலை வாசத்தோட வாயில வச்ச உடனே கறையுற மாதிரி. ஆஹா!" என்று தன்னை மறந்து பேசிக்கொண்டே போக அலுவலகம் வந்தடைந்து இருந்தார்கள்.

நடராஜன் சிறு சிரிப்பினூடே "சாப்பாடு ராமா உன் சாப்பாடு பையை நான் எடுத்துக்குறேன் இன்னிக்கு. என் வீட்ல இன்னிக்கு சைவம் தான் அது தான் உனக்கு. உன் வீட்டு சாப்பாட்டை நான் தான் சாப்பிட போறேன்" என்று சொல்லி அவன் பையை எடுத்துக்கொண்டார்.

சந்தானராமன் சங்கோஜத்துடன், "அவளுக்கு உடம்பு முடியலை. என்ன எப்புடி செய்துருப்பான்னு தெரியலே" என்றார்.

"ஆகட்டும் ராமா! வெறும் தயிர் சாதமா இருந்தாலும் இன்னிக்கு பரவால்லே எனக்கு." என்று கூடையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் சுடச்சுட முதலாளி வீட்டிலிருந்து என்னை கத்திரிக்காய் குழம்பும் உருளை கிழங்கு புட்டும் வந்தது சந்தானத்திற்கு. ஒரு பிடி பிடித்து விட்டார். ஒன்றரை மணி போல முதலாளி கூப்பிடுவதாக நடேசன் வந்து அழைத்தார்.


ஜானகி பாட்டி சுத்தம் செய்த கத்தரிக்காய்களை சிறுதுண்டுகளாக வெட்டிக்கொண்டே "தேவையா இந்த பிரஸ்தாபம் உங்களுக்கு? அன்னிக்குனு பார்த்து ஏதாச்சும் சொதப்பிட்டேனா? இல்லே வெறும் தயிர் சாதம் தானா? அதுவும் இல்லாதே பழையது போட்டு கொடுத்தனுப்பிட்டேனா?" என்றார்.

"இல்லை இல்லை! அதுக்கும் மேலே" என்றார் தாத்தா புன்னகையினூடே.

நடராஜ செட்டியார், "இந்தாப்பா இதுலே என்னவோ இருக்கறது நீயே பாரு" என்றார்.

சந்தானம் இரண்டு அடுக்கு கேரியரை திறந்து பார்த்த பொழுது உள்ளே சிறு பையில் சாம்பார் பொடியும், வத்தல் வடாம் வகைகளும் இருந்தது. கூடவே ஒரு சிறு காகித துண்டு. அதில் "என்னாலே ஒன்னும் முடியலே இன்னிக்கு. பக்கத்து மெஸ்லே எதுனாச்சும் சாப்பிட்டுக்கோங்கோ! சாயந்திரம் ஒரு எட்டு, சிரமம் பாக்காம போய் இதெல்லாம் உங்க நுங்கம்பாக்கத்து தங்கை ஆத்திலே கொடுத்துட்டு வந்துருங்கோ" என்று இருந்தது. விஷயத்தை சொல்லி அசடு வழிந்த சந்தான ராமனை பாவமாக பார்த்தார் நடராஜன்.

ஜானகி பாட்டி, " அடேடே! என்னாலே உங்களுக்கு இப்படி ஒரு தர்மசங்கடமா? பாவம் கார்த்தாலே அவ்வளவு சிறப்பா சொல்லிட்டு மதியம் சாப்பாடே கொடுத்து விடலேன்னு அவர் ஒரு மாதிரியா நெனச்சிருப்பார். இதுல கடுதாசு வேற. எனக்கு என்னவோ ஒண்ணுமே நினைவில்லே போங்கோ.. சாயந்திரம் ஆத்துக்கு வந்து பட்ட அவமானத்துக்கு நன்னா கேட்டிருப்பேள்!" என்றார்.

"பின்ன சும்மா விடமுடியுமா எவ்வளவு அவஸ்த்தையா போச்சு. நன்னா நிக்க வச்சு கேட்டேன், கேள்வியை நாக்கை பிடுங்கிக்குற மாதிரி" என்றார்.

"அப்படியா? என்னதான் கேட்டேள்?"

தாத்தா கனிந்த குரலில் "உடம்பு முடிலைனு எழுதிருந்தியே இப்போ பரவால்லியோன்னு கேட்டேன். வேற ஏதும் கேட்கல" என்றார்.

காயில் இருந்து கண்ணெடுத்து கணவனை பார்த்தாள் பாட்டி. சுருக்கம் விழுந்த அந்த நான்கு கண்களில் கடலளவு காதல் இருந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama