sangeetha muthukrishnan

Abstract Drama Tragedy

3.6  

sangeetha muthukrishnan

Abstract Drama Tragedy

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சி

4 mins
35.5K


மதுரா அம்மா போட்டுவிட்ட ரெட்டைப்பின்னலை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு பள்ளி பையையும் சாப்பாடு பையையும் கையில் எடுத்துக்கொண்டு பள்ளி பேருந்துக்காக காத்திருந்தாள். வெளியே அப்பாவின் சத்தம் கேட்டது. ரிப்பேர் ஆன மோட்டாரை நோண்டிக்கொண்டிருந்தவர், "கண்ணு அம்மாகிட்ட கேட்டு அந்த எறும்பு மருந்து பொடி கொண்டாந்து குடு. எவளோ இருக்குது பாரு. பூராம் செவ்வெறும்பு கடிச்சா அவ்ளோதான்"என்றார். 

"ஐயோ நான் மாட்டேன் பா.. அது சாவடிக்க என்கிட்டே உதவி வேறே கேக்கறீங்க. பாவம்..." என்றாள். 

அப்பா சிரித்துக்கொண்டே "அப்டியே விட்டா நம்மை கடிக்குமே. கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்றார் . அதற்குள் பேருந்து வந்து விட "அப்போ நீங்களே சாப்பிடுங்க" என்று விட்டு ஓடியவள் திரும்பி அம்மாவை பார்த்து "இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு லேட் ஆகும். ஸ்கூல் பஸ்ல வர மாட்டேன். தேடாதேமா" என்று கூறி பேருந்தில் ஏறிக்கொண்டாள்.


கணக்கு பேப்பர் திருத்தப்பட்டு வந்தது. மதுரா எல்லா கேள்விகளுக்கும் சரியான விடையளித்து ஒரு பத்து மார்க் கணக்கை பதிலளிக்காமல் விட்டிருந்தாள். "என்ன மதுரா அநியாயமா பத்து மார்க் விட்டியே! ஏன் நேரம் போதலயா" என்றார் வாத்தியார் சந்திரன். 

"இல்லை சார் அது எனக்கு புரியலை சரியாய். தப்பா போட வேண்டாம்னு விட்டேன்." பயந்து கொண்டே கூறியவளைப்பார்த்து சரி வகுப்பு முடிஞ்சதும் ஸ்டாப் ரூம் வா. நான் சொல்லி தரேன் என்று முடித்துவிட்டார். 


சிறப்பு வகுப்பு முடிந்து புத்தகத்தில் அந்த கணக்கை குறித்துக்கொண்டு ஆசிரியர் அறைக்கு சென்றாள் மதுரா. எல்லாரும் கிளம்பி விட்டிருந்தனர். ஒன்றிரண்டு ஆசிரியர் மட்டும் இருந்தார்கள் அவர்களும் கிளம்பி ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அவளுக்காக காத்திருந்து கணக்கை தெளிவாக புரியும்படி கற்றுக்கொடுத்தார் சந்திரன். நேரம் ஆகிவிட்டது அவரும் இவளோடே கிளம்பி வெளியே வந்து "நல்லா புரிஞ்சுதுல்ல? ஏதாச்சும் சந்தேகம்ன்னா உடனே கேளு. இப்போ கிளம்பு. நேரமாச்சு பாரு" என்றார். அதுவரைக்கும் சரிதான். கிளம்ப சொன்னவர் அசடு வழிய சிரித்து அவள் தோளில் தட்டி லேசாக அழுத்தினார். 


மதுராவுக்கு அது சரியாக படவில்லை. அவர் தன்னை ஒரு மகளாக பாவித்து கூட அப்படி செய்திருக்கக்கூடும் என்று சமாதான படுத்திக்கொள்ள முயன்றாள். இருப்பினும் அந்த அழுத்ததில் ஒரு தப்பு இருந்த மாதிரி தோன்றியது அவளுக்கு. அவள், அவர் கைகளை தட்டி விட்டிருக்க வேண்டுமா? அல்லது முகத்தை சுழித்திருக்க வேண்டுமா ? இதே போல இன்னொரு முறை நடந்தால் செய்து விட வேண்டும். இன்னொரு முறையும் நடக்குமா ? அவளுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. யோசனையோடு பேருந்தில் ஏறிக்கொண்டாள் .


நல்ல கூட்டம். நிற்கக்கூட இடம் இல்லாமல் நெறுக்கித்தள்ளினார்கள். பையை அமர்ந்து இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு கம்பியில் சாய்ந்து நின்றுகொண்டாள். இன்னும் கணக்கு வாத்தியார் தோளை அழுத்தியது எந்த மாதிரி நோக்கத்தில் என்று அவளுக்கு புரியவில்லை. யோசனைக்கு நடுவே எதோ உறுத்தியது. பின்னே கூட்டத்தை சாக்காட்டி ஒருவன் உரசிக்கொண்டிருந்தான். இம்முறை விட்டு விட கூடாது. "சார் கொஞ்சம் மேல படாம நில்லுங்க" என்றாள் கொஞ்சம் சத்தமாகவே. அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. "இடம் இருந்தா நிக்க மாட்டேனம்மா . எனக்கு என்ன ஆசையா" என்று விட்டு மீண்டும் தன் நூதன உரசலை தொடங்கினான். இம்முறை அவன் கண்களில் ‌உன்னால் ஒன்றும்‌ செய்ய முடியாது என்ற திமிர்‌ தெரிந்தது. அவள் வீட்டுக்கு முன் நிறுத்தத்திலேயே இறங்கி விட்டாள். நடந்தே போய் விடலாம் இனி முடியாது இதை சகித்துக்கொள்ள என்று தோன்றிவிட்டது.


வாத்தியார் மறந்து பஸ் ஆசாமி மனதில் ஆக்கிரமித்தான். ஏன் இப்படி? சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னை எதிர்க்க முடியாதவர்களிடம் இந்த மாதிரி அத்துமீறல்கள் எப்படி நியாயம்? இதில் என்ன கிடைத்துவிட போகிறது ? எண்ணங்களுக்கு மத்தியில் ஒரு குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சந்தியா அவள் வகுப்பு தோழி. "என்ன மது இங்கயே இறங்கிட்ட? அடுத்த ஸ்டாப் தானே உங்க வீடு ?" என்று அக்கரையாக விசாரித்தாள்.

"ஆமா சந்தியா.. ரொம்ப கூட்டம் அதான் நடந்தரலாம்ன்னு." மதுராவிற்கு பஸ்ஸில் நடந்தவற்றை‌ கூற இஷ்டமிருக்கவில்லை. 

"நல்லா சொன்ன போ.. இப்போவே மணி ஆறுக்கு மேல ஆகுது. இன்னும் ரெண்டு கிலோமீட்டர் பக்கம் போகணும். நீ எங்க வீட்டுக்கு வா. உன் அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லிக்கலாம்" என்று அழைத்து சென்றாள். போகும் வழியில் சந்தியாவின் அம்மா தென்பட்டார். விஷயத்தை சொன்னதும் "சரி நான் பக்கத்துல கடைக்கு போய்ட்டு வந்துடறேன். நீங்க வீட்ல போய் இருங்க. அடுப்புல பால் இருக்கு. காபி போட்டு குடு இந்த பாப்பாவுக்கு. இதோ வந்துடுறேன்" என்று விட்டு கடையை நோக்கி விரைந்தார்.


வீட்டுக்கு சென்று அவள் அப்பாவின் அழைபேசியில் அழைத்து சந்தியாவின் வீட்டிற்கு வழி சொன்னாள். அப்பா பத்து நிமிடத்தில் வந்து விடுவார். சந்தியாவின் பாட்டி அவளிடம் பேச்சுக்கொடுத்தார். உன் பேரு என்னம்மா ? எந்த ஊரு ? அங்க யாரு பொண்ணு . ஓ.. உன் தாத்தா பேரு சிவராமன் தானே என்று தொடர் கேள்விகள். சமையலறை பக்கம் போன சந்தியாவை உடை மாற்ற அனுப்பி விட்டு பாட்டியே காபி போட்டுக்கொண்டு வந்தார். ஒரு சின்ன பேப்பர் கப்பில் கொஞ்சமாக வந்த காபியை வாங்கி அருந்த ஆரம்பித்தாள் மதுரா. உடை மாற்றி வந்த சந்தியாவின் கைகளில் சில்வர் டம்ளர் கொடுக்கப்பட்டபோது உள்ளே சென்ற காபி தொண்டையிலேயே சிக்கிக்கொண்டார் போல இருந்தது. இப்போது என்ன செய்ய வேண்டும் ? அருந்தாமல் வைத்து விட வேண்டுமா ? கண்டுக்கொள்ளாமல் குடித்து முடித்து விடவேண்டுமா? அவளுக்கு பேப்பர் கப்பை கசக்கி எறியவேண்டும் போல இருந்தது. வெளியே அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது தான் தாமதம். எழுந்து நன்றி வரேன் என்று கூறி விட்டு ஓடிப்போய் அப்பாவுடன் வண்டியில் ஏறிக்கொண்டாள். பாவம் சந்தியா. அவளுக்கு புரிந்திருக்கும். அவளுக்கும் இது அவமானமே. மதுரா வீட்டை அடைந்ததும் ஓடி சென்று அறைக்குள் புகுந்து கொண்டாள். அன்றைய நிகழ்வுகள் ரொம்ப மோசமாக அவளை தங்கியிருந்தது. சிரமப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டாள். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு கரப்பான் அவள் காலில் உட்கார்ந்தது.


 ஒரு நொடி பயந்து போனாள். கோவமாக வந்தது. பாத்ரூமிற்குள் நுழைந்து கரப்பான் கொல்லி மருந்தை எடுத்து வந்து தரையில் பறந்து பறந்து ஆடிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சியின் மேல் சர்ர்ர் என்று அடித்தாள். அது பறக்க முடியாமல் குப்புறக்கவிழ்ந்து விழுந்தது. குண்டூசி சைஸ் கை கால்களை உதறியது ; தலையின் மேல் இருந்த அதன் உணர்ச்சிகொம்புகள் இந்த நெடியை தாங்க முடியாமல் தவித்ததது. கொஞ்ச நேரத்துக்குமுன் பறந்து திரிந்த பூச்சி . அதன் துடிப்பை பார்த்த போது ஏனோ ஆசிரியர் தொடுகையும் , பஸ்காரன் உரசலும் , தன் முன்னே நீண்ட பேப்பர் கப்பும் அப்போது அவளுக்கு ஏற்பட்ட துடிப்பையும் நினைவூட்டியது. மதுரா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அம்மா உள்ளே ஓடி வந்து என்னவோ எதோ என்று பதட்டமாகி பின் துடிக்கும் பூச்சியை பார்த்து சமாதானம் ஆனாள். ஏன் அழறா என்ற அப்பாவின் கேள்விக்கு "உங்க பொண்ணு அஹிம்சாவாதியாச்சே.. ஒரு பூச்சிய கொன்னுட்டா. அதான் லூசு மாதிரி அழுவுது" என்று சிறு அட்டையில் துடிக்கும் கரப்பானை எடுத்து சென்றாள். மதுரா தேம்பல்களுக்கு நடுவே "அவர்களுக்கு நான். எனக்கு நீ . வெரி சாரி" என்றாள்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract