STORYMIRROR

sangeetha muthukrishnan

Drama

4  

sangeetha muthukrishnan

Drama

தேறல்

தேறல்

4 mins
512


மதன், சந்துரு, ஜஸ்டின் மூவரும் தரையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அருணாச்சலம் மெல்ல தொண்டையை செருமினார். "என்ன விஷயம்னு சொல்லுங்கப்பா. நாங்க முன்னாடியே ரொம்ப நொந்து போயிருக்கோம்.எங்க பொண்ணு ராத்திரி மாடி ரூம்ல போய் கதவை சாத்தினவ இன்னும் வரல வெளிய. வெறும் அழுகை சத்தம் தான் கேக்குது. எங்களுக்கு நெறய வேலை இருக்கு, கல்யாணத்துக்கு அழைச்ச எல்லாருக்கும் போன் போட்டு கல்யாணம் நின்னு போச்சுன்னு சொல்லணும்." சொல்ல சொல்ல அவர் குரல் தழுதழுத்து கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது.


மேலும் அமைதியே நிலவ, அவர் பொறுமையற்று எழுந்தார். “கல்பனா இவங்களுக்கு காபி, டி ஏதாச்சும் குடுத்து என்ன சொல்றங்கனு கேட்டு வை, நான் போய் மண்டபம் வேண்டாம்னு கான்செல் பண்ணிட்டு வரேன்" என்று எழுந்தார்.பின்பு ஏளனமாக "டி, காபி எல்லாம் குடிப்பிங்களா?" என்றார். அங்கிருந்த மூவருக்கும் அவர் அப்படி கேட்டதன் உள் நோக்கம் புரிந்தது. ஜஸ்டின் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் "சார் அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும்" என்றான்.


"எனக்கும் ஆசை தான். எத்தனை ஏற்பாடுகள் பண்ணிருக்கேன் தெரியுமா? ஒன்னொன்னும் மாப்பிளைக்கு எது பிடிக்கும் கேட்டு பாத்து பாத்து பண்ணிருக்கேன். இப்போ நிலைமையை பார்த்தா வெல்கம் ட்ரின்க் 'வ்கிஸ்கிய' தரணும் போல" என்றார் வெறுப்போடு.


மதன், "சார் கொஞ்சம் தயவு செஞ்சு நாங்க சொல்றத கேளுங்க. சிவா அப்படி பட்டவன் இல்ல. அவனுக்கு அந்த பழக்கமே இல்ல. எங்களுக்கு தான் பழக்கம் இருக்கு. ஒவ்வொரு தடவ நாங்க குடிக்கும் போதும் அவன் பக்கத்துல உக்காந்து மொபைல் பார்த்துட்டு தீனி கொரிச்சிட்டு இருப்பான். எங்களை எப்போவுமே பத்திரமா வீடு சேர்க்க பொறுப்பு அவனுது தான். நேத்தும் அது தான் நடந்துச்சு."


மதன் விட்ட இடத்திலிருந்து சந்துரு தொடர்ந்தான். "சார் , என் மேல தான் தப்பு. நேத்து ரொம்ப குடிச்சுட்டேன். மதன் வீட்டு மொட்டை மாடில ரொம்ப சத்தம் போட்டுட்டேன். குடியிருக்கறவங்க திட்ட ஆரம்பிச்சுட்டாங்கனு சிவா என்னை கொண்டு வந்து வீட்ல விட்டு போனான். அப்போ தான்.." மேலே சொல்ல கூச்சப்பட்டு நிறுத்தினான்.


மதன் , " சார் எங்களை தெரிஞ்ச எல்லாருக்கும் சிவா கெட்ட பழக்கம் ஒன்னும் இல்லாதவன்னு தெரியும். நீங்களும் விசாரிச்சு தான் பொண்ணு குடுக்க சம்மதிச்சிருப்பீங்க. இப்போ கல்யாணத்துக்கு ரெண்டு நாள் இருக்கிற சமயத்துல எதுக்கு இந்த வீண் குழப்பம்?"


அருணாச்சலம் புருவத்தை சுருக்கி யோசனையாய் அவர்களை பார்த்தார். "எப்படிப்பா உங்கள நம்பறது ? நேர்ல பாத்தது என் மகளாச்சே.என்னாலயும் குருட்டு தைரியத்துல தெரிஞ்சே தப்பானவனுக்கு பொண்ணு குடுத்து நாளைக்கு தப்பு பண்ணிட்டோமேனு நினைக்க கூடாது. மத்தபடி ஆறு மாசம் காத்திருந்து பாத்து பாத்து ஒன்னொன்னும் பண்ணி ரெண்டு நாள் இருக்கறப்போ கல்யாணத்தை நிப்பாட்டுறதுல எனக்கும் உடன்பாடு இல்ல தான்"

"இவங்க சொல்றதெல்லாம் நம்பி அந்தாளுக்கு கழுத்தை நீட்டி நாளைக்கு நடுத்தெருவில் நிக்க எனக்கு உடன்பாடில்லை பா" என்றபடி மாதவி அங்கு வந்து நின்றாள்.


"நீங்க பேசுனதெல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். ஒவ்வொரு விஷயமும் என்கிட்டே சொல்லிட்டு தான் பண்ணுவாரு. நேத்து உங்க கூட சேர்ந்து குடிக்கறதை சாரி நீங்க குடிக்கும் போது அங்க இருப்பேன்னு ஏன் என்கிட்டே சொல்ல? நான் என் பிரிஎண்ட்ஸ் ஓட கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவ நைட் ஷோ போகணும்னு அவர் கிட்ட பெர்மிஸ்ஸின் வாங்கிட்டுதான் போனேன். திரும்பி வர வழியில நீங்க ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணிக்க போற ஒருத்தர் போலீஸ் பிடிச்சு உக்கார வெச்சிருக்காங்க குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதுக்காக. எப்படி இருக்கும்னு தெரியுமா?" ஆக்ரோஷமாக பேசி நிறுத்தினாள் மாதவி.


மதன், "சிஸ்டர் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கறவங்கள பிடிக்காது, தன் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்குனு தெரிஞ்சா எங்க சரியாய் பழக மாட்டிங்களோனுதான் சொல்லல அவன். அவன் எங்களுக்கு எப்போமே அட்வைஸ் பண்ணுவான் இதெல்லாம் விட்ருங்கடானு. நேத்து ராத்திரி டெஸ்ட் எடுத்த

ு பார்த்துட்டு சந்துரு குடிச்சிருந்ததுனால கார் விட்டு வெளிய வர சொன்னாங்க. உயர் அதிகாரி வர்ற வரைக்கும் அங்க வெயிட் பண்ண சொல்லிருக்காங்க, அப்போதான் நீங்க பாத்துட்டு அவனும் குடிச்சிருக்கானு தப்பா நினைச்சிருக்கீங்க"


மாதவி, "அப்புறமென்னாச்சு"

சந்துரு, " வேற ஒரு அதிகாரி வந்ததும் அவரு சிவாவ டெஸ்ட் பண்ணி பாத்துட்டு அவன் குடிக்கலைனு தெரிஞ்சதும் கொஞ்சம் அறிவுரை சொல்லிட்டு கிளம்ப சொல்லிட்டாரு"


ஜஸ்டின், " காலைல உங்க வீட்ல கல்யாணத்த அவன் குடிகாரன்னு காரணம் சொல்லி நிறுத்திட்டீங்கனு ரொம்ப நொந்து போயிட்டான். அவன் அப்பா அம்மாவே அவனை நம்பாத மாதிரி கேள்வி எதோ கேட்டாங்க போல. நேரா என் வீட்டுக்கு வந்துட்டான். அழுது கண்ணெல்லாம் சிவப்பா இருந்துச்சு. என் மொபைலில் இருக்கும் எந்த ஆபீஸ் பிரிஎண்ட்ஸ்க்கு வேணாலும் கூப்டு கேளுங்க சிவா எப்படி பட்டவன்னு. நாலு வருஷமா எங்க கூட இருக்கான். ஒரு ஆர்வத்துல எப்படி தான் இருக்கும்னு தொட்டு வாயில வெச்சது கூட கிடையாது" 


"அவனுக்கு நீங்கன்னா உயிரு. லீவு கிடைக்கலனு பொய் சொல்லி வச்சிருக்கான் உங்க கிட்ட. ஆனா ரெண்டு வாரம் மேனேஜர் கிட்ட கெஞ்சி லீவு வாங்கிருக்கான். பாலி போகிறதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணிட்டான். எல்லாமே சரியாய் நடந்திருந்தா உங்க கிட்ட நான் இப்போ இத சொல்லிருக்கவேமாட்டேன்"


மாதவி தயங்கி நிற்கவும் அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து அருணாச்சலம் தன் நண்பர் ஒருவருக்கு அழைத்து " சார் நேத்து பெரம்பூர் ரோட்ல இருந்த டிராபிக் போலீஸ் யாருனு கொஞ்சம் பாத்து சொல்ல முடியுமா ஒரு முக்கியமான விஷயம்." சில மணிநேர தேடுதலுக்கு பின் அவருக்கு ஒரு எண் கிடைத்தது. சந்துரு தானே அழைத்தான் "சார் நேத்து பெரம்பூர் ரோடுல ராத்திரி குடிச்சுட்டு வண்டில வந்தோமே" என்று இழுத்தான்.

"நேத்து நூறு கேஸ் புடிச்சோம் , நீ யாரு அதுல" என்றார்.

"இல்ல சார், நான் குடிச்சிருந்தேன் என் நண்பன் வண்டி ஓட்டிட்டு வந்தான். மோதிரம் ஒன்னு காணலை. அங்க எதாவது இருந்து நீங்க பார்த்து எடுத்து வச்சிருப்பீங்களானு கேக்கத்தான், வைர மோதிரம் சார்"

" ஐயோ, இல்லையே பா. நேத்து நீ பண்ண அலப்பறைக்கு விட்டிருக்கவே மாட்டேன். அந்த பையன் முகத்துக்காகதான் விட்டேன். அங்க தொலைச்சிருந்தா தேடறது வீண்." என்று இல்லாத வைர மோதிரத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் மாதவிக்கு விடை கிடைத்து விட்டது. அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.


அவள் கண்ணீரை பார்த்த மற்றவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது, அவள் மனம் மாறிவிட்டது. நண்பனுக்காக வந்து நாள் பூரா இங்கே கெஞ்சியது வீண் போகவில்லை என்று இருந்தது அந்த மூவருக்கும். நிம்மதி பெருமூச்சு வந்தது.


"அவர் எங்க இப்போ?" என்றாள் அவள் அழுகையினூடே.

ஜஸ்டின் "அல்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் ராமர் படத்து முன்னாடி உக்காந்து இருக்க போறேன்னு சொல்லிட்டு போனான். நாங்க இங்க வந்தது அவனுக்கு தெரியாது"


மகளின் மாற்றத்தை கண்டு "ரொம்ப நன்றிப்பா.. எப்படியோ நடந்துருச்சு விடாம நண்பனுக்காக இவ்ளோ தூரம் வந்து நாள்பூராம் இருந்து சமாதானப்படுத்தி முடிவு தெரியிற வரைக்கும் பச்சை தண்ணி குடிக்காம.. மாப்பிள்ளை உங்கள மாதிரி நண்பர்கள் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும், ஆனா தயவு செஞ்சு அந்த குடியை விட்ருங்க. இருந்து சாப்பிட்டுட்டு போங்க நான் போய் சம்பந்தி வீட்டுக்கு பேசி விஷயத்தை விளக்குறேன்" என்று விட்டு நகர்ந்தார்.


"கண்டிப்பா இனி அந்த சனியனை மனசுல கூட நினைக்க மாட்டோம் சார். குடி குடியை கெடுக்கும்னு புரிஞ்சு போச்சு" என்று மதன் கூற எல்லாருக்கும் சிரிப்பு கூட வந்தது.


அப்போது வெளியே இரும்பு கதவை யாரோ காலால் உதைத்து தள்ளினார்கள், மேலும் வெளியே சென்று பார்த்தபோது சிவா கலைந்த தலையும் கையில் புட்டியுமாக போதையில் கத்தினான், "அடியே மாதவி வாடி வெளிய. இப்போ மொதோ தடவையா நிஜமாவே குடிச்சுருக்கேன். யோவ் அருணாச்சலம் காலைல எங்கப்பன் கிட்ட சொன்னதை இப்போ என்கிட்டே சொல்லுய்யா பாக்கலாம்" என்றான்.


Rate this content
Log in

Similar tamil story from Drama