sangeetha muthukrishnan

Crime

4.5  

sangeetha muthukrishnan

Crime

அவனா இவன்?

அவனா இவன்?

5 mins
707


"இந்த மாப்பிளைய எங்கயோ பாத்துருக்கேன் உமா" என்றாள் சரயு.

 "ம்ம்ம்.. அப்படிங்கற? எங்கன்னு சொல்லு அப்ப" சீண்டினாள் உமா.

சரயு, "அதான் யோசிக்குறேன் சட்டுனு நினைவுக்கு வர மாட்டேங்குது..

"இந்த நீட்டு மூஞ்சி.. இந்த கண்ணு.. எங்கயோ.. ஆனா சரியாய் ஞாபகம் வரமாட்டேங்குது.".

உமா, "இவ ஒருத்தி ஏதாச்சும் ஞாபகம் வரலைனா.. அது என்னன்னு கண்டுபிடிக்கற வரைக்கும் ஓய மாட்டா" என்று அலுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் உமாவும், சரயுவும் நெருங்கிய தோழிகள். உடன் வேலைபார்க்கும் ராதா தன் தங்கை திருமண வரவேற்புக்கு அழைத்தபோது இவர்கள் இருவருக்குமே போகும் எண்ணம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணம் சொல்லி நழுவிக்கொண்டபோது இவர்கள் இருவரும் மாட்டிக்கொண்டார்கள் . ஆளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு வாங்கிய வெள்ளி காமாட்சி விளக்கை கலர் பேப்பர் சுற்றி கௌரவப்படுத்தி கையோடு எடுத்து வந்திருந்தார்கள்.


"பொண்ணு புடவை கலர் நல்லாவே இல்லைல?" என்று அங்கலாய்த்த உமா சரயுவின் முகத்தைப்பார்த்து லேசாக அதிர்ந்து சிரித்தாள். "இன்னுமா யோசிக்குற விட்டு தள்ளு போய் பரிசை குடுத்திட்டு இவ்ளோ தூரம் மெனக்கெட்டு வந்ததுக்கு சாப்பாட்டை நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு கிளம்புவோம்" என்றாள்.

"இல்ல.. நல்லா மனசுல பதிஞ்சு போன முகம். என்னால எங்கே எப்போ பார்த்தேன்னு நினைவுக்கு கொண்டு வர முடியல. ஆனா நான் பாத்துருக்கேன்" என்று திரும்பவும் யோசனையோடு புருவத்தை சுருக்கினாள்.

"ஏதாச்சும் படத்துல சின்னதா ரோல்ல வந்திருப்பாரு. எந்த படம்ன்னு யோசி.. சும்மா விடு சரயு.. சுத்தி வேடிக்கை பார்த்து அரட்டை அடிக்காம ஏதோ கொலைகாரன் கொள்ளைக்காரன கண்டுபிடிக்கற போலீஸ் மாதிரி தீவிரமா யோசிக்குற" என்றாள்.

அவள் பேசிய வார்த்தைகளை கேட்டு தூக்கி வாரிப்போட்டு நிமிர்ந்தாள் சரயு. திரும்ப ஒரு முறை மணமேடையில் நிற்கும் மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தாள். இப்போது அவளுக்கு எல்லாமே புரிந்தது. அவள் நினைவுகள் சில மணி துளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்று சில சம்பவங்களை அசை போட்டுத்திரும்பியது.   


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரயு எம்.பி.எ இறுதி ஆண்டு தேர்வுக்காக சென்னையின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அந்த கல்லூரிக்கு சென்றிருந்தாள். வேலைபார்த்துக்கொண்டே எப்படியோ முதுகலைப்படிப்பையும் முடித்துவிடப்போகிறோம் என்ற திருப்தி அவளுக்கு. பரிட்சைக்கு சில நிமிடங்கள் இருந்த காரணத்தால் படித்ததை கொஞ்சம் அசை போட்டுக்கொண்டிருந்தாள். "ஹலோ!" என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.


வெளிர் ஊதா நிறத்தில் சுரிதார் அணிந்து அந்தப்பெண் சரயுவை நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். "ஹாய்" என்றாள் பதிலுக்கு.

"இந்த சம் டாலி ஆகலை. உங்களுக்கு தெரியுதா பாக்குறீங்களா.?"என்று புத்தகத்தை நீட்டினாள். அதை வாங்கிப்பார்த்து மண்டையை உடைத்து இருவரும் போராடி பதிலை கண்டுபிடித்தார்கள். அடுத்து பேச வாய்ப்பில்லாமல் மணி அடித்து தேர்வை தொடங்கினார்கள். பரஸ்பரம் "ஆல் தி பெஸ்ட்" என்பதோடு அறையின் உள்ளே சென்றார்கள் இருவரும். தேர்வு முடிந்து வெளியே வந்த போது திரும்ப அவள் குரல் பின்னால் இருந்து ஒலித்தது "அந்த மாதிரி கேள்வியே வரல. உங்க நேரத்தையும் சேர்த்து வீணடிச்சுட்டேன்"

"சேச்சே.. நான் நல்லா தான் எழுதிருக்கேன். நீங்க?" என்று பேசிக்கொண்டே கல்லூரியின் வெளியே வர எத்தனித்தார்கள். அலைபேசியை பார்த்து "என்ன வீட்ல இருந்து இத்தனை தடவ கால் செஞ்சிருக்காங்க?" என்று யோசனையோடு அவள் செல்போனை காதுக்கு பொருத்தி வீட்டிற்கு தொடர்பு கொண்டாள்.பின்பு கலவரமாக சரயுவின் புறம் திரும்பி "அம்மாக்கு உடம்பு முடியல. ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்களாம். நான் உடனே போகணும். இந்த ஏரியால பேருந்துக்கு காத்திருந்தா நேரமாயிடுமே. அண்ணா நகர் போகணும்" என்றாள்.

"டாக்ஸி, ஆட்டோ ஏதாச்சும் பிடிக்கலாம்" என்று சரயு சொல்லிகொண்டிருக்கும் பொழுதே அவள் கை நீட்டி வழியே வந்த காரை நிறுத்தினாள்.


"அண்ணா நகர் போகணும். நீங்க அந்த வழியா போனா எங்கனாலும் நடுவில விட்ருங்க ப்ளீஸ். ரொம்ப அவசரம்" என்றாள். கார்க்காரன் கைகள் நீண்டு வந்து கதவைத்திறந்து விட்டது. அவள் நன்றி கூறி ஏறிக்கொண்டாள். சரயு சற்று முன்னால் நகர்ந்து அவன் முகத்தைப்பார்க்க முயன்றாள். சரியாக பார்க்க முடியவில்லை நீட்டு முகம், சற்று இடுங்கிய கண்கள் என்று அவள் நினைக்கும் போதே அந்த கார் புறப்பட்டது. அட அவள் பேரைக்கூட கேட்கவில்லையே! அண்ணா நகர் போக வேண்டுமானால் வண்டியை அவன் வளைவில் திருப்பிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று நினைத்து சரயு கார் போன திசையை பார்த்தாள். அது அதிவேகமாக நேரே சென்று கொண்டிருந்தது.


அடுத்த நாள் அவள் வரவில்லை. பரீட்சை முடிந்து கிளம்பும் பொழுது எழுதி முடித்தவர்களை அறையிலேயே இருக்க சொன்னார்கள். காவல் அதிகாரிகள் இருவர் எல்லோரையும் பார்த்து "நேத்து உங்க கூட பரிட்சை எழுதின மாளவிகாங்கற பொண்ணு சாயங்காலம் புளியந்தோப்பு பகுதியில இறந்து கிடந்தாங்க" என்று ஆரம்பித்து அவளுக்கு என்ன நேர்ந்திருக்க கூடும் என்று விவரித்த பொழுது எல்லோருக்கும் உடம்பு நடுங்கியது. "தயவு செஞ்சு நேத்து இங்க இருந்து அவங்க எங்கே யாரோட போனாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சா பகிர்ந்துக்கோங்க. குற்றவாளிய பிடிக்க எங்களுக்கு உதவியா இருக்கும்" என்று கூறி நிறுத்தி எல்லோர் முகத்தையும் பார்த்தார். சரயு பெரும் மனப்போராட்டத்திற்குப்பிறகு சொல்ல வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாள். தேவை இல்லாத வம்பு எதற்கு? வேற எப்படியாவது கண்டுபிடித்துக்கொள்ளட்டும். ஒரு வேலை அந்த கார்காரன் மேல் எந்த தப்பும் இல்லையெனில்? எதிர்புறம் கார் சென்றதை அவள் தான் கவனிக்காமல் விட்டிருப்பாள் என்று என்னென்னவோ சொல்லி மனதை தேற்றிக்கொண்டு எல்லாரையும் போல அவளும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.


இது நடந்து இரண்டு வருடத்தில் பல முறை அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் மனதில் மாளவிகா என்ற அந்த பெண்ணின் முகம் தான் முன்வந்து போகும். அன்று இருந்த பயத்தில் எதற்கு வம்பு என்று விட்டிருக்க கூடாது. அது எவ்வளவு பெரிய தவறு! போலீசில் தெரிந்தவரை விவரங்களை சொல்லியிருக்க வேண்டும் என்று பல முறை விசனப்பட்டிருக்கிறாள். அந்த கார்காரன் இந்நேரம் எங்கேயாவது ஜாலியாக இருப்பான். அவன் தண்டிக்கப்படாமல் போனதற்கு தானும் ஒரு காரணம் என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சியில் நொந்திருக்கிறாள். இத்தனை நாட்களில் உமாவிடம் ஒன்றிரண்டு முறை இதைப்பற்றி அவள் அங்கலாய்த்ததுண்டு.


இப்பொது திரும்ப அந்த தவறை செய்துவிடக்கூடாது. அவசரமாக ஆனால் யாருக்கும் கேட்காத குரலில் உமாவின் காதுகளில் விவரத்தை சொன்னாள் சரயு.

சரயு எதிர்பார்த்த அளவு உமா அதிர்ச்சி அடையவில்லை. "அன்னிக்கு சொல்லாம தப்பு பண்ணிட்ட சரி. ஆனா இன்னைக்கு சொல்லி தப்பு பண்ணிட கூடாது" என்றாள் நேர்மாறாக.

"என்ன சொல்லற நீ? இது வெறும் வரவேற்பு தானே? காலையில் தான் கல்யாணம். இப்போ சொன்னா இந்த பொண்ணு வாழ்க்கையாவது காப்பாத்தலாம்.", சரயு.

உமா, "சரி. ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓரிரு நொடிகளே பார்த்த ஒரு முகத்தை, சரியாய் நினைவில்லாத ஒரு முகத்தை நீயா இவன்தான்னு முடிச்சுப்போட்டு ஒரு முடிவுக்கு வந்து கல்யாணத்த நிறுத்தி, அவனை அசிங்கப்படுத்தி ஒரு வேளை அது இவன் இல்லைன்னா ரொம்ப பெரிய தப்பாய்டும் சரயு" என்றாள்.

சரயுவிற்கு அவள் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. வரவேற்பு வரை வந்து உறுதியாக தெரியாத ஒரு பழியை சுமத்தி அது வேறு மாதிரி இருந்து விட்டால் இந்த இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாவதோடு இன்னும் என்னென்ன நெருக்கடிகள் வரும் என்று மனம் யோசித்து பார்த்து சலித்துப்போனது.


நொந்துவிட்ட குரலில் "இப்போ என்ன பன்றது உமா? இது அவனான்னு எப்படி கண்டு பிடிக்கிறது?" என்றாள்.

"யோசிக்கலாம். அதுக்குள்ள உனக்கு அன்னிக்கு நீ பார்த்த அளவுல எதாவது ஸ்பெசிபிக்கா ஞாபகம் வருதான்னு யோசி இந்த மாதிரி முக அமைப்பு, கண்ணு, மூக்கு வாய் ஜாடைல இந்த மண்டபத்துலயே நெறய பேர் இருகாங்க.. யோசி நல்லா"

"எனக்கு வேற ஒண்ணுமே தோனலையே! அந்த பொண்ணு ஆத்மா தான் வழி காட்டணும். இல்லைனா இப்டியே விட்டு போய்ட வேண்டியது தான். என்ன நடக்குதோ நடக்கட்டும்னு. அன்னிக்கு பண்ண தப்ப விட இன்னிக்கு தப்பு பண்ணிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு உமா." என்றவளின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது.

உமா, "சே.. பைத்தியம் கலங்காதே., யோசிக்கலாம் இரு.. ம்ம்ம்... இப்படி பண்ணலாம் வேணும்னா.."

"என்ன.. என்ன பண்ணலாம் சொல்லு உமா"

"பரிசு குடுக்க மேடை ஏறிப்போய் நின்னு போட்டோக்கு போஸ் குடுக்கும் போது மாளவிகாங்கற பேர அவன் காதுல விழற மாதிரி சொல்லணும். அவன் முகம் காட்டுற பாவனைகளை வச்சு அவனா இருக்க வாய்ப்பு இருக்கானு பாக்கணும். கண்டிப்பா அவனுக்கு அந்த பொண்ணோட பெயர் தெரிஞ்சிருக்கும்.. என்ன சொல்லற"

"ஓகே. நல்லா ஐடியா தான். ஒண்ணுமே பண்ணாம திரும்பவும் குற்ற உணர்ச்சியோடு சுத்தறதுக்கு ஒரு முயற்சி செஞ்சு பாக்கலாம்.. ஆனா அவ பேர என்னனு சொல்லறது?"

"அவனுக்கு என் பேரு என்னன்னு தெரியவா போகுது? என்னை மாளவிகான்னு கூப்பிடு. அதுக்குள்ள வேற ஏதாச்சும் க்ளு கிடைக்குதா பாரு" என்றாள் உமா.

இருவரும் மேடையேற காத்திருந்த வரிசையில் நின்று கொண்டார்கள். சரயு திரும்ப திரும்ப அன்று நடந்ததை நினைவு வந்த வரையில் அசைபோட்டு பார்த்தாள். தங்களுக்கு முன்னே ஒரு தம்பதியும் பின்னே ஒரு நடுத்தரவயதுக்காரரும் நின்று கொண்டிருந்ததால் மேலே எதுவும் பேச முடியவில்லை.


மேடை மேல் இருவரும் ஏறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்போது இவர்களைக்கண்டு விட்ட ராதா சட்டென்று மேலே வந்து பெண் மாப்பிள்ளையிடம் "இது சரயு, உமா என்னோட வேலை பாக்குறவங்க" என்று அறிமுகப்படுத்தினாள். இனி எங்கே பொய்யாக பெயரை சொல்லுவது என்று உமா யோசித்து "வேறு வழி இல்லை, சும்மா மாளவிகா வெளியே காத்திருக்கான்னு சொல்றேன். அவன் முகத்தை கவனி" என்றாள் மெதுவாக சரயுவின் காதுகளில்.

புகைப்படம் எடுத்து முடித்து நகரும் பொழுது வாயை திறந்த உமாவின் கைகளில் கிள்ளி இழுத்து அமைதியாயிரு என்பது போல் கண்ணசைத்தாள் சரயு. அவனிடம் சென்று கைகளைநீட்டி வாழ்த்துத்தெரிவித்தாள். அவன் கை குலுக்கியதும் ராதா சாப்பிட போலாம் வாங்க என்று வழி காட்டினாள். அவளோடு கூட நடந்து "நல்லா யோசிச்சு பாத்தப்போ கார் கதவை திறந்த அந்த கைகள்ல பெரிய தீக்காயம் இருந்துச்சு. அதான் கைகுலுக்கும் போது ரெண்டு கையையும் கவனிச்சேன். இது அவன் இல்ல" என்றாள் சின்ன நிம்மதிச்சிரிப்போடு.


இவர்கள் பின்னே வந்த நபரை மணப்பெண்ணிடம் "மீட் டாக்டர் சஞ்சீவி. சென்னையில் புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன்" என்று மாப்பிள்ளை அறிமுகப்படுத்தியது சரயுவின் காதுகளில் விழுந்ததா?


Rate this content
Log in

Similar tamil story from Crime