sangeetha muthukrishnan

Abstract Romance Fantasy

4.2  

sangeetha muthukrishnan

Abstract Romance Fantasy

அசரீரி

அசரீரி

4 mins
383


சிவா தன் மடிக்கணினியை எடுத்து அதற்கான பையில் போட்டு மூடி அதை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினான். கார் சாவியை கையில் எடுத்த போது மதன் அழைத்தான் "நானும் கிளம்பிட்டேன்! இருங்க ஜி வரேன். ஒரு டீ சாப்பிட்டு போலாம்." என்று வந்து அவனோடு இணைந்து கொண்டான். மணி நாலரை ஆகியிருந்தது. தேநீரை உறிஞ்சிக்கொண்டே மதன், "இன்னிக்கு மீட்டிங்ல அந்த மேனேஜர் நம்மள வச்சி செஞ்சுட்டாரு" என்றான். சிவா சின்ன முறுவலுக்குப்பின் "மாசம் முதல் தேதி இந்த பேச்சு கேக்கணும்னு நம்ம தலைல எழுதிருக்கு. சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் மீட்டிங்ல சொல்லி ஒருத்தர் பண்ண சாதாரண தவறுகளை பூதகாரமா சுட்டி காட்டி.. அடச்சே" என்றான்.


மதன் தேனீரை அருந்திக்கொண்டே தலையை அசைத்து அவன் சொன்னதை ஆமோதித்தான். "சரி விடுங்க ஜி. இன்னிக்கு ஒண்ணாம் தேதி என்ன ஸ்பெஷல்?" என்றான் புன்முறுவலோடு.


"ஸ்பெஷலா ? நீங்க வேற. வெளிய இருந்து பாக்குறவனுக்கு ஐ.டி வேலை. கை நிறைய சம்பளம், கார், வீடு எல்லாம் மட்டும் தான் தெரியும். உண்மை நிலவரம் இப்டி கன்னா பின்னான்னு திட்ற மேனேஜர், வீடு, கார் வாங்கினதுல ஈ.எம்.ஐங்கற பேர்ல காணாம போற சம்பளம். கல்யாணம் ஆகி அஞ்சு வர்ஷமாயும் குழந்தை இல்லங்கிற மன வருத்தம் இது எல்லாம் தெரியாது. எனக்கு அப்போப்போ தோணும் இந்த உலகமே வேண்டாம் டா சாமின்னு வேற ஒரு உலகத்துக்கு போய்டணும்னு" என்று தன் ஆற்றாமையை கொட்டித்தீர்த்தான்.


"வேற உலகமா.." லேசாக சிரித்தான் மதன்.

"ஆமா அது எப்படின்னா" என்று ஆரம்பித்து சிவா பேசும்பொழுது இடைமறித்து "உங்க கார் இங்க இருக்கு. பேசிட்டே வந்ததுல கவனிக்கல" என்று மதன் அவனை நிறுத்தினான். அதற்குள் இருவரும் இறங்கி கார் பார்க்கிங்கிற்கு வந்திருந்தார்கள்.

 "அட ஆமாம் பாருங்களேன்." என்று அவன் நின்றதும் "சரி சொல்லுங்க என்ன சொல்லிட்டு இருந்திங்க" என்றான் மதன்.


"என்ன சொல்லிட்டு இருந்தேன்.. ஐயோ மறந்துடுச்சே. ஏதோ சொல்ல நெனச்சேன்.. சரி பரவால்ல.. ஞாபகம் வந்தா சொல்றேன்" என்று சொல்லி அவனுக்கு விடை கொடுத்து காரில் ஏறிக்கொண்டான் சிவா. ஏறியபின்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. அடடே என்று கைப்பேசியை எடுத்து மதன் எண்னை தேடினான். அப்போது அது நிகழ்ந்தது. ஒரு குரல் மட்டும் எங்கிருந்தோ வந்தது. அது, "அவனை அழைக்காதே. அவனிடம் ஏதும் சொல்லாதே" என்றது. சிவா குரல் எந்த திசையில் இருந்து வருகிறதென்று புரியாமல் எல்லாப்புறமும் பயத்துடன் பார்த்தான்.


"யா.. யாரு?"

மௌனம்.

கைபேசி கீழே விழுந்திருந்தது. அதை எடுக்க அவன் கை நீண்ட பொழுது மறுபடியும் "அவனிடம் சொல்லாதே" என்றது குரல்.

"யார்னு கேக்கறேன்ல. முன்னாடி வாங்க" என்றான் பீதியுடன்.

"நான் ஒரு தேவதை. எனக்கு உருவம் கிடையாது. குரலை கட்டுப்பத்துகிற தேவதை என்பதால் எனக்கு உருவம் கிடையாது."


"என்னது? விளையாடாதீங்க யாரு நீங்க? எதுக்காக என்ன பயமுறுத்துறீங்க?"

"நானா? உன்னையா? இல்லவே இல்லை. நான் குரலை கட்டுப்படுத்தும் தேவதை தான். சில நிமிடங்களுக்கு முன்பு உனக்கு சொல்ல வந்த விஷயம் மறந்து போனதில்லையா? அது என் வேலை தான். சில விஷயங்கள் பரிமாறிப்படக்கூடாதவை. அவற்றை தடுப்பது என் வேலை"

"இல்லை. நம்ப மாட்டேன். நான் என்ன சொல்ல வந்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது எப்படின்னா.. இந்த பால் வெளியில எத்தனையோ கிரஹங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் இருக்கும். ஆனா அதுல நமக்கு தெரிஞ்சது ஒரு நெல்மணி அளவு தான். வேற ஒரு சூரிய குடும்பத்துல மனுஷங்க வாழற மாதிரி அதாவது நம்ம பூமி மாதிரி ஒரு கிரஹம் இருந்தா அங்க போய்டணும்ன்னு நினைப்பேன். இது தானே நீ சொல்ல வந்தது.?"


அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இதெல்லாம் நிஜமாய் நடக்கிறதா இல்லை கனவா என்று தெரிந்து கொள்ள லேசாக கிள்ளிப்பார்த்தான். வலித்தது.

"என்னால் நம்பவே முடியல"

"அது பரவாயில்லை. அனால் இதை நீ வேறு யாரிடமும் சொல்லக்கூடாது"

"இது என்ன அவளோ பெரிய விஷயமா?"

"ஆமாம். இது பிரபஞ்ச ரகசியம். ஒரு முறை உன்னை நான் தடுத்து விட்டேன். மறுமுறை உனக்கு நினைவுக்கு வராமல் தடுக்க தவறி விட்டேன். இது என் பிழை ஆகையால் நானே கேட்கிறேன். யாரிடமும் சொல்லாதே"


"சொன்னா கொன்னுடுவியா?"

"எனக்கு அந்த அதிகாரம் இல்லை"

அவனுக்கு இப்பொது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. பயம் விலகியது.

"என் பொண்டாட்டிகிட்ட மட்டும் சொல்லிக்கிறேன்."

"இல்லை. கூடாது."

"இதென்ன பெரிய ரகசியம்? நீங்க இங்கிலீஷ் படம் எல்லாம் பாக்குறதில்லயா? எத்தனை வந்துருக்குது இந்த மாதிரி!"

"இவ்வளவு துல்லியமாய் யாருக்கும் தோன்றியதில்லை"

"என்னது.. அப்படினா நான் சொன்ன மாதிரி ஒரு இடம் இருக்குதா?"

"ஆமாம். அதை மனிதர்கள் அறிந்து கொள்ள கூடாது"

"அப்படினா.. ஒரு டீல். நா ஒரு தடவ அங்க போகணும்."

"நீ கேட்பது அதிகம் இல்லியா?"


"நீ செஞ்ச தப்புக்கு சின்ன கூலி" சிறு அமைதிக்குப் பின்,

"ம்ம்.. சரி.. இப்போது அங்கே உன்னை அனுப்புகிறேன். நீ நினைக்கும் போது திரும்பி விடலாம். திரும்ப வந்த பிறகு உன்னால் மறுபடியும் அங்கு செல்ல முடியாது"

"சரி, நீயும் கூட வா"

"நான் அங்கும் இருப்பேன்"

"சரி" என்ற அடுத்த நொடி அவன் ஒரு பெரிய பாலைவனத்தினில் இருந்தான். பெரிய மணல் பரப்பு கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஜீவராசிகள் தென்படவில்லை. சிறிது தூரம் நடந்த பிறகு அவன் குரலை மனதினுள் நினைத்தான்.

"என்ன?"

"இதென்ன காஞ்சு போன பூமி. இதை பாக்கவா உன் கூட அவ்ளோ நேரம் மல்லுக்கட்டினேன்?"

"பின்னே?"


"வேற எதாவது எனக்கு பழக்கப்பட்ட மாதிரி இடம் எதாவது.."

"அங்கு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல"

"என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லியே?"

"இருக்காது"

"அப்டினா அங்க கூட்டிட்டு போய் விடு"

மறுபடியும் அவன் கண் மூடி திறந்த பொழுது அவன் வீட்டு வாசலில் நின்றான்.


"ஏய் இது என் வீடுயா"

"இல்லை. உன் வீடு மாதிரி ஆனால் உன் வீடு இல்லை. உன்னை போல ஒருவன் ஆனால் நீ இல்லை" என்று சொல்லி முதல் முறையாக சிரித்தது. என்ன ஆனாலும் சரி இதை தன் மனைவியிடம் சொல்லியே ஆவது என்று முடிவு செய்துகொண்டான். செஞ்ச தப்புக்கு இந்த குரலோட மேனேஜர் கிட்ட அது திட்டு வாங்கிக்கட்டும்.


யோசித்துக்கொண்டே அவன் உள்ளே சென்றான். அவன் வீடு போலேயே தான் இருந்தது. நோட்டம் விட்டு எதாவது வித்யாசமாக இருக்கிறதா என்று அவன் தெரிந்துகொள்ள முற்பட்டபோது அவன் மனைவி போல் இருந்த அந்த பெண் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்த போது அந்த சிறு வித்தியாசம் தெரிந்தது.


அவன் மனைவியை நினைத்துப்பார்த்தான். எப்போதும் அந்த நாலு அழுக்கு நைட்டியில் ஒன்றைத்தான் அணிந்திருப்பாள். நீளமான கூந்தலை கொண்டை போட்டு கட்டியிருப்பாள். இவளானால் பள பளவென்று இருந்தாள். பளிச்சென்று ஆடை அணிந்திருந்தாள். முதுகு வரைக்கும் மட்டும் அலை அலையாய் சுருண்டு விழுந்த கூந்தல் மேலும் அழகூட்டியது.

"உக்காருங்க. காபி போட்டு கொண்டுவரேன்" என்று திரும்ப சமையறைக்குள் நுழைத்தவள் பின்னே தன்னை மீறி சென்றான் சிவா.


"என்ன பின்னாடியே வந்துட்டீங்க?" என்று சிரித்து அவன் மார்பில் செல்லமாய் தலையை முட்டினாள். அவளிடம் தனியானதொரு நறுமணம் வீசியது. இவள் கணவன் வந்து விட போகிறான் என்று நினைத்து வாசற்படியை அடிக்கடி பார்த்துக்கொண்டான். செய்வது தவறு என்று புத்திக்கு உரைத்தும் அவனுள் கட்டுபாடில்லை. அவளை லேசாக அணைத்துக்கொண்டான். அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் தைரியம் கூடியது நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான்.


அடுத்து அவன் அவளை நோக்கி பார்த்த போது அவள் லேசான சிணுங்கலுடன் பேசினாள். "என்ன இன்னிக்கு உங்களுக்கு! ஒரு ஹேர் கட்டுக்கும், பேஷியலுக்கும் இத்தனை சக்தியா?" என்றாள் சிரித்துக்கொண்டே. அவன் அதிர்ந்து போய் தேதியை பார்த்தான். மார்ச் ஒன்று! கடிகாரம் மணி ஐந்தரை என்றது. அவளை விலக்கி நிறுத்தினான். சின்னதாக சிரித்து "காபி போட்டு கொண்டு வா. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துறேன்" என்று விட்டு வெளியே வந்து குரலிடம் நான் என் வீட்டுக்கு போகணும் இப்போவே உடனே ப்ளீஸ் என்றான்.


அடுத்த நொடி அவன் வீடு வாசலில் நின்றான். சற்று தயங்கி உள்ளே வந்த பொழுது அவன் மனைவி "என்னங்க பத்து நிமிஷம் ஆகும்ன்னு சொன்னிங்க. உடனே வந்துட்டீங்க!" என்றாள் கேள்வியாக. அவன் பேந்த விழித்து நின்ற போது அவனுக்கு அந்த குரல் கடைசி தடவையாக கேட்டது "மகனே! இப்போ சொல்லுடா பாக்கலாம்" என்றது அது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract