sangeetha muthukrishnan

Drama Romance Tragedy

4.5  

sangeetha muthukrishnan

Drama Romance Tragedy

அன்பிற்குரிய அனு...

அன்பிற்குரிய அனு...

8 mins
1.8K


நான் அனுவிற்காக காத்திருக்கிறேன். இந்த அர்த்த ராத்திரியில் யாருக்கும் தெரியாமல் இந்த மின்தூக்கியின் மூன்றாம் மாடியில் அனுவிற்காக காத்திருக்கிறேன். அவள் வரும் வரை உங்களோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று பார்க்கிறேன். என் ஊர் திருச்சி பக்கத்திலே ஒரு சிறிய கிராமம். எல்லோரையும் போல நானும் இன்ஜினியரிங் தான் படித்தேன். கடவுள் புண்ணியத்தில் ஒரு சிறு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. சென்னை வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. புது வேலை, புது இடம் , புது மக்கள் திருச்சியின் ஆரவாரமில்லா கிராம வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவனுக்கு சென்னையின் சுறுசுறுப்பும் ரொம்பவே பிடித்துத்தான் இருந்தது. கை நிறைய சம்பளம். நண்பன் ஒருவனோடு வீடு வாடகைக்கு எடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறேன்.


அன்று முதல் நாள் நைட் ஷிபிட் முடித்துவிட்டு ஒரு மூன்று மணியளவில் வந்து சேர்ந்தேன். "என்னப்பா இந்த நேரத்துக்கு வர்ற? நைட் ஷிப்ட்டா?" என்று வாட்ச்மென் கேட்ட கேள்விகளுக்கு புன்னகையையும் தலை அசைவையும் மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு நான் நகர்ந்தபோது, "நீ பூபாளம் பிளாக் எட்டாவது மாடில இருக்குற பையன் தான? நேரம் ஆனாலும் பரவால்லை நீ படியிலேயே போப்பா, லிப்ட்ல போகாத. இந்த நேரத்துல அப்போப்போ அங்க அழுகை சத்தம் கேக்குது. நானே நெறைய வாட்டி கேட்ருக்கேன்" என்றவரிடம் மறுபடியும் தலையாட்டி விட்டு பூபாளம் பிளாக் அருகே வந்து லிப்ட் பொத்தானை அழுத்தினேன்.


மூன்றாம் மாடியில் இருந்து மின்தூக்கி மெதுவாக நழுவி வந்து கீழே நின்றது. கதவு திறந்து உள்ளே செல்லலாம் என்று எத்தனித்தபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. உள்ளே ஒரு பெண் குத்துக்காலிட்டு லிப்ட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவள் தலையை முட்டிகளின் மேல் கவிழ்த்திருந்ததால் அவள் முகம் எனக்கு தெரியவில்லை. எட்டாம் எண்ணை அழுத்தி விட்டு அவளை லேசாக நோட்டம் விட்டேன். கால் இருந்தது. அப்பாடா பேய் இல்லை. அந்த வாட்ச்மென் சொன்னது போல எதுவுமோ என்று ஒரு சில கணம் பயந்தேவிட்டேன். அப்புறம் " சே! படிச்சவன் தானே" என்று என்னையே நொந்து கொண்டேன். எட்டாம் மாடி வந்து நான் இறங்கும் வரை அவள் நிமிரவே இல்லை.


அப்புறம் எப்படியோ வியாழன் கிழமை வரை தாக்குபிடித்து பார்த்தேன். அவள் முகத்தை பார்க்கவே முடியவில்லை. வெள்ளிக்கிழமை கனைத்து பார்த்தேன் செருமி பார்த்தேன். அவள் தலையை நிமிர்த்தி பார்க்கவேயில்லை. எட்டாவது மாடியில் லிப்ட் நின்றதும் வெளியே இறங்கி அவளைத்திரும்பி திரும்பி பார்த்து விட்டு மனசு கேட்காமல் கதவு மூடும் தருணத்தில் கை வைத்து நிறுத்தி உள்ளே போய் பூஜ்யத்தை அழுத்தினேன். அவள் நிமிர்ந்து பார்த்தே விட்டாள். அடிப்பாவி இவ்வளவு அழகாக இருந்து கொண்டு தான் தலையைத்தூக்க மாட்டேன் என்று அடம் பிடித்துத்தொலைத்தாயா? அவள் கண்களில் நீர் இருந்தது. ஆழமான சோகத்தின் வெளிப்பாடாக வரும் ஆரவாரமில்லாத கண்ணீர். கண்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. லிப்ட் கீழே நின்றதும் நான் வெளியே வந்து மாடி படிகளில் ஏற ஆரம்பித்தேன். லிப்ட் மறுபடியும் மேலே சென்றது. நான் மேலே ஏறி செல்லும் போது மூன்றாம் மாடியில் லிப்ட் எந்த சலனமுமின்றி நின்று கொண்டிருந்தது.


சனி, ஞாயிறு எனக்கு விடுமுறை தான். இருந்தாலும் அவளைப்பார்த்து விடும் எண்ணத்தோடு சரியாக அலாரம் வைத்து எழுந்தபோது நண்பன் "என்னடா இந்த நேரத்துல தூங்கி தொலையேண்டா" என்றான். என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிப்பதற்குள் அவன் மறுபடியும் தூங்கிப்போனான். நான் லிஃப்டுக்காக காத்திருந்தேன். இந்த முறை அவள் குனிந்திருக்கவில்லை. நன்றாக நிமிர்ந்து அமர்ந்து இருந்தாள். கண்ணீர் இல்லை. ஆனால் அழுத்த சுவடு தெரிந்தது, கொஞ்ச நேரமாக அழாமல் இருந்திருக்கிறாள். எனக்காவா? கதவு மூடிக்கொண்டதும் திரும்பி வேறு பக்கம் பார்க்கிறாள். நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "என் பேரு வாசு. உங்க பேரு?" எங்கேயோ பார்த்துக்கொண்டு ஒரு பெரு மூச்சுக்குப்பின் "அனு" என்கிறாள்.


இன்னும் வரவில்லை பாருங்களேன். உங்களுக்கு முழு கதையும் சொல்லும் வரை வரமாட்டாள் போல. சின்ன கோபம் இருக்கும் ஆனால் வராமல் இருக்க மாட்டாள்.


"தினமும் ஏன் இந்த நேரத்துல இங்க வரீங்க? பயமா இல்லை? எந்த தளத்தில் உங்கள் வீடு இருக்கிறது?" எதற்கும் பதில் இல்லை. உனக்கெல்லாம் பெயர் சொன்னதே பெருசு போடா என்பது போல இருந்தது அவள் எங்கேயோ பார்த்துக்கொண்டு உட்கார்திருந்தது. அரை மணி நேரம் ஆகி விட்டது அவள் பதுமை போல தான் அமர்ந்திருந்தாள். இது வேலைக்காகாது என்று எட்டாம் எண்ணை அழுத்தி இறங்கும்போது "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றேன். பதில் இல்லை. பெருமூச்சொன்றை விட்டுவிட்டு இறங்க போகும் பொழுது லேசான குரலில் அவள் கேட்டாள் "நாளைக்கு வருவீங்களா?". நம்ப முடியாமல் திரும்பிப்பார்த்த பொழுது அவள் சின்னதாக புன்னகைப்பது தெரிந்தது. "இப்படியே சிரிச்சிட்டே இருங்க. கண்டிப்பா வருவேன்" என்று விட்டு விசிலடித்தபடி வீடு நோக்கி நடந்தேன்.


அதற்கு அப்புறமும் அவள் ரொம்ப பேசினாள் என்று இல்லை. பெரும்பாலும் நான் தான் என்னைப்பற்றி ஏதாவது பேசிக்கொண்டே இருந்தேன். அவள் எப்போதாவது பேசினாலும் அது என்னைபற்றிய கேள்வியாகவே இருக்கும். அவள் என்னைப்பக்கத்தில் உட்காரவோ நிற்கவோ அனுமதித்தது இல்லை. எங்களுக்குள் ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருந்தது. அவளைப்பற்றி பெயர் தவிர வேறு எந்த தகவலும் அவள் சொன்னாளில்லை.நானாக ஏதாவது யோசித்து என் வீட்ல இருக்குறவங்க போட்டோ பாக்குறீங்களா என்று கிட்டே போக பார்த்தாலும் "இப்போ வேண்டாம் அப்புறம் பாக்குறேன்" என்று விடுவாள். நானே பேசிட்டு இருக்கேன் எப்போ பாத்தாலும் நீங்க ஏதாச்சும் சொல்லுங்க" என்று ஒருமுறை கேட்ட பொழுது, ரொம்ப தயங்கித்தயங்கி " எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நா எப்போவோ இழந்த ஏதோ உங்க கிட்ட இருக்குற மாதிரி தோணுது" என்றாள். அவள் சொன்னதில் குஷியாகி மேலும் துருவலாம் என்று பார்த்தபோது மறுபடியும் அவன் கண்கள் நீரில் நனைவது பார்த்து அமைதியாகிக்கொண்டேன் .


"அனு, பைத்தியமே அழு மூஞ்சு எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் நெனச்சுட்டே இருப்பியா? நடந்த எதையோ நெனச்சு அழுதுட்டே இருப்பியா? நீ சிரிசிச்சா எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? ஆனா உனக்கு அவ்வளவு சீக்கிரம் சிரிப்பு வந்து தொலையமாட்டேங்குது. நான் நாள் முழுக்க உன்கிட்ட பேசற அந்த சில நிமிஷங்களுக்கு தான் காத்துக்கிட்டிருக்கேன் தெரியுமா? அவனவன் பேசி அஞ்சே நிமிஷத்துல சினிமா, பார்க், பீச்னு சுத்த ஆரம்பிச்சுடறாங்க. ஆனா நான் உன்கூட பழகி எவ்வளவு நாள் ஆகுது. உன் பக்கத்துல வந்து உக்கார்ந்திருப்பேனா? உன் கையை பிடிச்சு என் கைக்குள்ள வச்சு பேசி இருப்பேனா? எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்து பாரு அனு அழுது அழுது சலிச்சு போன உன் கண்களுக்கு கண்ணீர்ன்னா என்னன்னே மறந்து போக வெக்குறேன். சிரிப்பு ஒன்னு தான் உன் சொத்துனு மாத்துறேன்." இன்னும் என்ன எல்லாமோ எழுதி ஒரு கடிதத்தை பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டேன். அன்றும் கொஞ்ச நேரம் எப்பொழுதும் போல பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பும் பொழுது கடிதத்தை அவளிடம் நீட்டினேன். கண்கள் விரிய என்னை பார்த்தவளிடம் "படிச்சு பாத்து முடிவு சொல்லு அனு" என்றேன். அதற்குள் கீழே யாரோ லிப்ட்டை அழுத்தி விட்டார்கள். நான் வேறு வழி இல்லாமல் கடிதத்தை அவளை நோக்கி வீசி விட்டு பார்த்தேன். அது அவள் கால்களின் பக்கம் விழுந்திருந்தது. அவள் அதை எடுக்க கை நீட்டுவதை மூடும் மின்தூக்கியின் கதவுகளுக்கு நடுவில் நான் பார்க்கிறேன்.


பிரச்சனையே இங்கே தான், சும்மா இருந்திருக்கலாம். ஒரு வாரமாக அவள் வரவில்லை, நான் இவ்வளவு நாட்கள் அவளை பார்க்காமல் இருந்ததில்லை. நடுவே ஊருக்கு செல்லும்போதும், அலுவல் விஷயமாக வெளியூர் செல்லும்போதும் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவேன். அவளானால் நாள் தவறியதில்லை. என்ன செய்வதென்று புரியாத ஒரு நிலை. ஒரு வாரம் கழித்து தொய்ந்து போய் லிப்ட்டில் ஏறினாள் உள்ளே அவள்! என் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. கண்களில் லேசாக நீர் கூட எட்டிப்பார்த்தது. கதவு மூடியதும் கை கட்டிக்கொண்டு லிப்ட் கதவில் சாய்ந்து நின்று அவளை "இது நியாயமா?" என்பது போல் பார்த்தேன். முதல் நாள் போலவே முட்டியின் நடுவே முகம் புதைத்துத்தேம்பித்தேம்பி அழுதாள். "நான் உங்களுக்கு வேண்டாம் வாசு. உங்க உலகம் வேற என் உலகம் வேற. என்னால உங்களுக்கு கஷ்டம் தான் மிஞ்சும். இதோட விட்ருங்க. கொஞ்ச நாள் என்னையும் சிரிக்க வச்சு சந்தோஷமா இருக்க வச்சதுக்கு நன்றி" என்றாள் அழுகையின் நடுவே.


நான் விடவில்லை. "காரணம் சொல்லு. பிடிக்கலைன்னா பிடிக்கலைனு கூட சொல்லிட்டே போய்டு. ஆனா காரணம் வேணும் எனக்கு" என்றேன் தெளிவாக.

ஆழ்ந்த பெரு மூச்சுக்குப்பின் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல, "சரி. ரெண்டு நாள் கழிச்சு பாக்கலாம் இனி. அன்றைக்கும் இதே மன நிலையில நீங்க இருந்தா நான் என்ன பத்தி முழு உண்மையையும் சொல்றேன். அப்புறமும் முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான். இன்னையிலயிருந்து ரெண்டு நாள் கழிச்சு மூணாவது நாள் நீங்க இங்க வரலைனா அப்புறம் சில நாட்களுக்கு என்னை பாக்கவே முடியாது" என்றாள் வேறே பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு.


அவள் இரண்டு நாட்கள் கழித்து என்று சொன்ன பொழுது கூட நான் அவள் வரக்கூடுமோ என்று தினமும் எதிர்பார்த்தே சென்றேன்.

அவள் வரவில்லை. என்னவாக இருக்கும்? ஏதாவது முதல் காதல்? காதலன் ஏமாற்றியிருக்கலாம். கல்யாணமே கூட ஆகியிருக்கலாம். அவர்கள் பிரிந்திருக்கலாம், அவன் இறந்து போயிருக்கலாம். இல்லை அந்த கால்கள் தான் பிரச்சினையா? அவள் என் முன் எழுந்து நடமாடி நான் பார்த்ததே இல்லையே. ஏதேனும் விபத்தில் காலில் ஏதேனும் ஆகியிருக்கும். இன்னும் பல்வேறு விதமாக யோசித்து காரணம் கண்டுபிடித்து தோற்ற பிறகு எனக்கு ஒன்று மட்டும் உறுதியாக விளங்கியது. அவளுக்கு என்ன நடந்திருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. அவள் முடிவை என்னிடம் தான் விட்டிருக்கிறாள். "நீ என்ன சொன்னாலும் எனக்கு ஒன்றும் கவலையில்லை அனு." என்று எனக்கே ஒரு முறை சத்தமாக சொல்லிக்கொண்டு தூங்கிப்போனேன்.


அன்று வேலையில் ஒரு சிறு கோளாறு. வேலை முடியவே நெடு நேரம் ஆகி விட்டது. இன்று விட்டால் பார்க்க முடியாது என்று அவள் கூறியிருந்தது கொஞ்சம் பயமாக இருந்தது. நான் வரவில்லை என்றதும், அவளின் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை என்று நினைத்து அதற்குப்பிறகு வராமலே போய் விட்டால்? அரக்க பறக்க ஓடி ஒரு ஆட்டோவை பிடித்து, கொள்ளை வாடகை சவாரிக்கு சம்மதித்து கிளம்பினால் பாதி வழியில் ரிப்பேர் ஆகி நின்றது, அந்த நடு இரவில் வேறு வாகனங்களைக்காணோம். ரொம்ப நேரம் காத்திருந்து ஒரு பைக்க்காரரிடம் லிப்ட் கேட்டு வந்து சேர்ந்த பொழுது விடிந்து விட்டிருந்தது! 


ஆயாசமாக வந்து குறிப்பேட்டில் கையெழுத்து போடும்போது வாட்ச்மென் "என்ன தம்பி இப்போல்லாம் தான் அழுகை சத்தம் வரதில்லையாமே. லிப்ட்லயே போய்டுங்க" என்றார். எப்படி வரும்? என்று மனதுக்குள் சந்தோஷமாக நினைக்கும்போதே அவள் என்ன நினைத்திருப்பாளோ! என்று சற்று பதற்றமாகவும் இருந்தது. அப்போது பேப்பர் போடும் நபர் வந்து வாட்ச்மேன்னிடம் பேச்சு கொடுத்தார். "என்னப்பா போஸ்டர் எல்லாம் ஒட்டிருக்குது போல. அந்த பொன்னு செத்து ஒரு வருஷமா ஆகிப்போச்சு? நாள் ஓடுது போ" என்றார். சுவாரசியம் இல்லாமல் திரும்பி போஸ்டர் பார்த்த எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க பார்க்கலாம். அதில் அடிக்கடி அணியும் நீல வர்ண சுரிதாரில் அனு சிரித்துக்கொண்டிருந்தாள். கீழே தோற்றம் மறைவு என்ற இடத்தில் ஒரு வருடத்திற்கு முன் இதே தேதி போடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போய் போஸ்ட்டரை காட்டி வாட்ச்மேனிடம் திரும்பிய போது அவர் "அதுவா தம்பி பூபாளம் பிளாக் மூணாவது மாடி வக்கீல் ராமரத்னம் அவுங்க பொன்னு. போன வருஷம் ஒரு விபத்துல போயிடுச்சு. நல்ல பொன்னு ரொம்ப அமைதியான குணம்" என்று அவர் மேலே மேலே ஏதேதோ சொல்லிக்கொண்டே போக நான் சுயத்துக்கு வந்து, திரும்ப அந்த போஸ்ட்டரை பார்க்கிறேன். பெயர் என்ற இடத்தில் அனுசுயா என்றிருந்தது.


எனக்கு ஒன்றுமே ரொம்ப நேரத்துக்கு விளங்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தது போல் இருந்தது. அவளை நான் தொட்டு பார்க்காமல் இருந்தது, ஒரு தூரத்திலேயே அவள் என்னை நிறுத்தியது, அவள் என் முன் நடமாடாமல் இருந்தது, உங்கள் உலகம் வேறு என்று சொன்னது எல்லாமே புரிந்தது. சேரவே முடியாது என்று தெரிந்து தான் அவ்வளவு நொந்திருக்கிறாள். பைத்தியமே பிடிப்பது போல இருந்தது எனக்கு. எனக்கு புரிந்து விட்டது அவள் முடிவை ஏன் என்னிடம் விட்டாள் என்று. கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு எழுந்தேன். இனி நமக்கு ஒரே உலகம் தான் அனு. நீ இந்த உலகத்துக்குள் வர முடியாமல் போனால் என்ன? நான் வருகிறேன் உன் உலகத்துக்கு. வீட்டில் எலித்தொல்லைக்காக வாங்கி வைத்திருந்த மருந்தை முழுங்கிவிட்டு படுத்துக்கொண்டேன். சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாக தப்புகிறது. என் நண்பன் குளித்துவிட்டு என் அறைக்கு வருகிறான். என்னை பார்த்து அதிர்ந்து போய் என்னடா வாசு வாயில என்று பதறுகிறான். கத்துகிறான் யார் யாரோ வருகிறார்கள். என் நினைவு தப்புகிறது. கைத்தாங்கலாக தூக்கி வந்து லிஃப்டுக்குள் ஏற்றுகிறார்கள். மூன்றாவது மாடியை நெருங்கும் போது ஒருவர் "போயிடுச்சுப்பா" என்று சொல்லி என் மணிக்கட்டை விடுவிக்கிறார். நான் எங்கிருந்தோ என்னைப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.


 இன்று அமளி துமளி எல்லாம் அடங்கி இரவாகிறது. நான் காத்துக்கொண்டிருக்கிறேன் அவளுக்காக. உன் உலகமும் என் உலகமும் ஒன்றுதான் என்று கூற. இன்னமும் காணோம் பாருங்கள். அதோ ஏதோ சத்தம் கேட்கிறது. முதல் முறையாக அவள் நடந்து வருவதை பார்க்கிறேன். அதே நீல சுரிதார். மெதுவாக வந்து எப்பொழுதும் போல ஓரமாக சென்று அமர்ந்திருக்கிறாள். இன்று அழுகை துக்கம் எல்லாவற்றுக்கும் மேல் ஒரு வெறுமை நிலவுகிறது அவள் முகத்தில். அனு! அனு! என்று நான் இரண்டு முறை அழைக்கிறேன் அவள் திரும்பவேயில்லை. கேட்டும் கேளாதது போல அமர்ந்திருக்கிறாள். மெதுவாக சென்று அவள் தோளை தொடுகிறேன். என்னால் முடியவில்லை . திரும்ப முயற்சிக்கிறேன் அப்போது கதவு திறந்து வேறு ஒரு பெண் நுழைகிறாள். " என்னடி இங்க வந்து உக்காந்திருக்க? உங்க அப்பாக்கு தெரிஞ்ச என்ன நெனைப்பாரு வா உள்ள" என்று அவள் கையை பிடித்து இழுக்கிறாள். அவளால் அனுவை தொட முடிகிறது!


 அனு என்றும் இல்லாமல் கதறி அழுகிறாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. " அவனை ரொம்ப விரும்பினேன் கவி. ஏன் இப்படி செஞ்சான். எதனால இந்த முடிவு எடுத்தான்? எனக்கு ஒண்ணுமே புரியல. அன்னிக்கு முழுக்க அவன் வருவான்னு காத்திருந்தேன். அப்புறம் ஒரு வாரத்துக்கு பாட்டி ஊருக்கு போறதா இருந்தது. அக்கா அந்த விபத்துல இறந்ததை ஏத்துக்கவே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு. ஒன்னா பிறந்து வளர்ந்து கூடவே இருந்து திடீர்னு அவ இல்லைங்கறத என்னால தாங்க முடியவே இல்ல. மன அழுத்தம் காரணமா எனக்கு கொஞ்ச நாள் மனநல மருத்துவம் தேவை பட்டது. கொஞ்ச கொஞ்சம் தேறி வரும் போது தான் எனக்கு வாசு அறிமுகமானான். எப்படி சிரிக்க சிரிக்க பேசுவான் தெரியுமா? அவன் விரும்புறேன்னு சொன்னப்ப எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? ஆனா எனக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டத அவன்கிட்ட சொல்ல தயக்கமா இருந்துச்சு. எல்லாம் சொல்லிடலாம். அப்புறம் அவனே முடிவு பண்ணட்டும்னு நெனச்சேன், ஆனா அதுக்குள்ள ஏன் இப்புடி போனான் கவி?" என்று அவள் வீறிட்டு அழுதாள்.


அந்த கவி என்பவள் அவளை ஆசுவாசப்படுத்தி தோளோடு அனைத்துக்கொள்கிறாள். கேவிக்கேவி அழுது சலித்து நொந்து போன குரலில் அனு அவளிடம் கேட்கிறாள் "என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே! இல்ல அவன் நண்பர்கள் யார் கிட்டயாவது பேசியிருக்கலாமே? என்கிட்டே காரணம் வேணும்னு அழுத்தமா கேட்டான். ஒருத்தருக்கும் இப்போ காரணம் தெரிலையே. எதுவா இருந்தாலும் செத்துப்போனா சரியாயிடுமா? ஒரு நொடி நிதானிச்சிருக்க வேண்டாமா?" அவள் கேள்விகள் செத்துப்போன என்னை சாகடிக்கிறது. ஒரு நொடி நிதானித்திருக்கலாம். வாழ்க்கை அடுத்த நொடி திருப்பங்களும் ஆச்சரியங்களும் நமக்கு கொடுக்கக்கூடியது. அவசரப்பட்டு அதை முடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம்? ஆனால் அதை திருத்திக்கொள்ள முடியாத தொலை தூரத்துக்கு வந்துவிட்டேன்."அனுபமா! கவி!" என்று ஒரு ஆணின் குரல் கேட்கிறது. "அப்பா எழுந்துட்டாரு பாரு! கண்ணை தொடச்சுக்க. உள்ளே போலாம்" என்று எழுப்புகிறாள். நான் விரக்தியோடு அவள் நடந்து போவதையே கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.Rate this content
Log in

Similar tamil story from Drama