sangeetha muthukrishnan

Drama

4.8  

sangeetha muthukrishnan

Drama

அவரும் அவளும்

அவரும் அவளும்

4 mins
452


அவள் கண்களை இறுக மூடியிருந்தாள். தன் உடலின் பாரத்தை தானே தாங்க இயலாதவள் போல காரின் கதவில் சாய்த்து வைத்திருந்தாள். அருகில் அமர்ந்திருந்த சேது நொடிக்கொரு முறை முன்னே சாலையையும் அவளையும் கவலையாக மாறி மாறி பார்த்துக்கொண்டே வாகனத்தை செலுத்தினான். எதையும் பேச யோசனையாக இருந்தது. மெதுவாக வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் "அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுமா.. அவர் சரியாய்டுவார். நேத்து வரைக்கும் நல்லா தானே பேசிக்கிட்ருந்தார்."


அவள் மெல்ல வாய் திறந்து ஈன சுரத்தில் "அதானே நேத்து வரைக்கும் நல்லா தானே பேசிக்கிட்ருந்தார். இன்னிக்கு என்ன வந்தது", என்றாள். கண்களில் நீர் கரகரவென்று வழிந்து இறங்கியது. சேதுவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அம்மாவுக்கு அறுபத்தேழு வயதாகிறது. இவ்வளவு சோர்வாக இதுவரை அவளை அவன் பார்த்ததில்லை.


மஞ்சள் முகமும், நெற்றி நிறைய குங்கும பொட்டும், வைரக்கல் பேசரியும், சின்ன ஜரிகையிட்ட பட்டு புடவையும் எப்போதும் பொலிவாகவே இருப்பாள். அப்பா கூட அடிக்கடி சொல்லுவார் "அவ முகத்தை பார்த்தா போதும்டா சேது, புது தெம்பே வந்துடும்". அம்மாவையோ அப்பாவையோ யாரும் தனித்தனியே சிந்திக்க முடியாது. அவ்வளவு அன்னியோன்யம்.


சேதுவுக்கு தெரியும் அப்பா இன்னும் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க மாட்டார் என்று. அவன் நண்பன் மருத்துவமனையில் தான் இப்பொது அனுமதிக்கபட்டிருந்தார். அவன் அவர் உடல் நிலையை சேதுவிற்கு தெளிவாக சொல்லி விட்டான். "எவ்வளவு சீக்கிரம் அம்மாவை கூட்டி வர முடியுமோ வாடா. உயிர் இருக்கும் போதே முகத்தை பார்த்துக்கட்டும்" என்று. அப்பா வியாபார விஷயமாக சென்னை சென்று தன் நண்பரின் வீட்டில் தங்கி வேலைகளை முடித்துவிட்டு நாலு நாட்களில் வருவதாக சொன்னவர், இரண்டாவது நாள் மாலையில் நெஞ்சுவலியில் விழுந்தார். அம்மாவும் அவனும் கோவையில் இருந்து சென்றுகொண்டிருந்தார்கள். 


அம்மா மெல்ல பேச ஆரம்பித்தாள். "உனக்கு தெரியுமாடா சேது? நான் அவருக்கு ரெண்டாம் தாரம்" சொல்லி நிறுத்தி சேதுவை பார்த்த போது அவன் ஆச்சரியமாக அவளை பார்த்து " அம்மா?" என்றான் கேள்வியுடன். " ஆமா! இந்த வரன் என் அக்காவுக்கு வந்தது. அக்கா நல்லா படிப்பா. அவளுக்கு மேல படிக்கணும்னு ஆசை. வீட்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணப்போ தான் இந்த சம்பந்தம் வந்தது.


ரெண்டாம் தாரம்னு கேள்வி பட்டதும் அவ தலைல அடிச்சுட்டு அழுதது இன்னும் நியாபகம் இருக்கு. பாவமா இருந்தது. நான் பண்ணிக்கிட்டா அவளை படிக்க விடுவிங்களானு கேட்டு சத்தியம் வாங்கிட்டு அவரை கட்டிகிட்டேன். என்ன பண்றது என் அக்கா அதிர்ஷ்டம் அவ்ளோதான். நான் தான் கொடுத்து வைத்தவள்" அம்மா தன்னை மீறி பேச ஆரம்பித்தாள். அவள் கண் முன்னே பல வருடங்களுக்கு முன் நடந்தவை எல்லாம் நேற்று நடந்த மாதிரி காட்சியாக விரிந்தது.


முதலிரவின் தனிமையில் அவர் அவளைப்பார்த்து தயங்கி தயங்கி கேட்டார் "இப்போ கேக்குறேனேன்னு கோச்சுக்காதேமா. உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தான?" அவள் மௌனத்தில் சலித்து மேலும் தொடர்ந்தார் "எனக்கு பெருசா விருப்பம் இல்லைம்மா. எனக்கு திருமணமாகி ரெண்டே மாசம் தான் அவ போய்ட்டா. நல்ல பெண். ரெண்டு மாசம் வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழ்ந்தோம்னு தான் சொல்லணும். இப்படி அல்பாயுசுல போவான்னு தெரியல. கல்யாணமே வேண்டாம்னு ஒரு வருஷம் தாக்கு பிடிச்சேன். பெரியவங்க விடல. எனக்கு ஒரு மாதிரி வெறுப்பாயிடுச்சு. என் மனச தேத்திக்கிட்டேன் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது என் பொறுப்பு. என்ன ஒண்ணுமே பேசல நீ?"


"நான் ரெண்டாம் தாரம்னு சொன்னதும் வயசான தாத்தாவா இருக்கும்னு நெனச்சேன். உங்கள எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள் வெகுளியாக. வாய் விட்டு சிரித்தார் அவர்.


வீட்டின் முற்றத்தில் முதல் மனைவியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் மாட்டியிருந்தது. அவள் அதையே யோசனையாக பார்த்துவிட்டு தனிமையில் அவரிடம் "அவங்க என்ன விட நல்லா அழகா இருக்காங்க" என்றாள் ஏக்கத்துடன். அவர் பதில் ஒன்றும் சொன்னாரில்லை. அடுத்த நாள் அந்த புகைப்படம் அங்கே இல்லை.அவள் கேட்ட போது, "இங்க பாரு அவ என் வாழ்க்கைல ஏற்பட்ட ஒரு இனிய நியாபகம் அவ்வளவுதான். உன்னை சந்தோஷப்படுத்த அவள் ஒரு மோசமான பிசாசுன்னு நான் பொய் சொல்ல மாட்டேன். அவள் நல்ல மனைவி. ஆனா அது ரொம்ப குறுகிய காலம். ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போன கதை. இனி உனக்கு நான்தான் எனக்கு நீதான். இத பத்தி நீ நினைக்கவோ பேசவோ கூடாது; நானும் மாட்டேன். அது சம்மந்தமான எந்த விஷயமும் உன்னை இந்த வீட்டில் இனி உறுத்தாது." என்று தீர்மானமாக கூறினார்.

"படிக்கிறியா?"

"ம்ம்.. விகடன், குமுதம் எல்லாம்தான் படிக்கிறேன்."

"அசடே! பத்தாவதோட நிக்குறியே மேலே படிக்குறியா?"

"ஐயே சே சே கல்யாணம் பண்ணிட்டு எப்படி போய் பள்ளிக்கூடத்தில!"

"பள்ளிக்கூடத்துக்கெல்லாம் போக வேண்டாம் பி.எ சேர்த்து விடுறேன் தபால்ல படிக்குறியா?"

" நிஜமாவா ?"

"அட ஆமாங்குறேன். என்ன படிக்கணும்னு சொல்லு"

"பொருளாதாரம்"

"வாறே வா" என்று சிரித்தவர் அவளை முதுகலை பொருளாதாரம் வரை படிக்கச்செய்தார்.


உன் பொண்டாட்டி எப்போ பாரு ரேடியோவை கட்டிட்டு அழறா என்று வீட்டில் எல்லோரும் கேலி பேச "பாட்டுன்னா பிடிக்குமா?"

"ம்ம்ம்.. ஆனா பாடவெல்லாம் வராது. சும்மா கேப்பேன்."

"பாட்டு கிளாஸ் போறியா"

"ஐயோ வேணவே வேணாம்."

"பின்னே?"

"பாட்டெல்லாம் வேண்டாம் வீணை வாசிக்கணும்னு ஆசை"

"அவ்ளோதான் விஷயமா? வாசிச்சுட்டா போச்சு" ஓரளவு ஆசைக்கு கற்றுக்குக்கொண்டு வீட்டில் ஒரு வீணை வாங்கி வைத்துக்கொண்டாள்.


"வீட்ல சும்மாவே இருக்க போர் அடிக்குது"

"வேலைக்கு போகணுமா"

"இல்லை தையல் கத்துக்கணும்"

"அவ்ளோதானே காத்துக்கிட்டா போச்சு"


"ஊஞ்சல் வேணும்"

"போட்டுட்டா போச்சு"


அவளின் எந்த ஆசைகளையும் நிராகரித்ததில்லை அவர். கடிந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. சமைத்ததை குறை கூறியதில்லை. எல்லாவற்றிலும் அவளே அவரின் பிரதானம். முழுமையான வாழ்க்கை. திருமணமாகி பல வருடம் குழந்தை இல்லை என்ற ஒரு குறை. எத்தனையோ மருத்துவர்கள் எவ்வளவோ மாத்திரைகள். அவள் உடல் வேதனையை பொறுக்காமல் "போதும் இனி பிள்ளை குட்டின்னு ஒடம்ப போட்டு வறுத்தெடுக்காத. என் நண்பனுக்கு தெரிஞ்சவங்க ஒரு தம்பதி போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டாங்க. பையன் நல்ல சூட்டிப்பு தப்பிச்சுட்டான் . அஞ்சாவதோ ஆறாவதோ படிக்குறான். ஹாஸ்டல்ல இருக்கான். விவரம் தெரிஞ்ச பையன், கேட்டு பாப்போம் அவனையே; நம்ம கூட வர இஷ்டமானு. வந்தா சரி இல்லைனா இந்த பேச்சை இதோட விடு" என்றார் தீர்க்கமாக.


"ஊர் உங்கள..."


"ஊர் எப்படியும் ஏதாச்சும் சொல்லும். நான் சொன்னது யோசிச்சு என்ன பண்ணலாம்னு சொல்லு" என்றவரிடம் "உங்க இஷ்டம்" என்றாள். சேது வந்தது அப்படித்தான். அவனை படிக்க வைத்து விருப்பம் போல திருமணம் செய்துவைத்து சந்தோஷபட்டர்கள் . அவர் வேலை ஓய்வு பெற்ற பின்பு வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்தது. வீட்டு வேலைகளை இருவரும் செய்தார்கள். பேசிக்கொண்டே சமைப்பது, வீடு சுத்தம் செய்வது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது. பழைய படங்களாக தேடி தேடி பார்ப்பது என்று சுவாரசியமாக இருந்தது அவளின் வாழ்க்கை.பொழுது போக சின்ன சின்ன ரியல் எஸ்டேட் வேலைகள் செய்வார். அது வேலையாக தான் அவர் சென்னை சென்றது.

அவளுக்கு பட படப்பாக இருந்தது அவரில்லாமல் போனால் என்ன செய்வது. அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.ஊரிலுள்ள எல்லா கடவுள்களுக்கும் வேண்டிக்கொண்டாள்.


கார் வேகம் குறைந்து மருத்துவமனை வளாகத்தில் வந்து சேர்ந்தது. அவருக்கு ஒன்றும் ஆகாது. தன் முகத்தை கார் கண்ணாடியில் பார்த்து அழுத்த கண்களை துடைத்து முடியை சீர் செய்துகொண்டாள். "சேது நீ வேனா பாரேன் அவர் என்னை பார்த்ததும் எழுந்து உக்காந்துடுவார். ஒண்ணுமில்லை எனக்கு. எதுக்கு இவ்வளவு வேகமா வந்து சேர்த்திங்க பொறுமையா நாளைக்கு வரவேண்டியது தானேனு கேப்பார் பாரேன்"


அம்மா பிதற்றுவது புரிந்து மௌனமாக கூட நடந்தான் சேது. அவசர பிரிவு முன் அவன் நண்பன் நின்று கொண்டிருந்தான். அவள் புறம் திரும்பி "அம்மா மனச தேத்திக்கோங்க நாங்க முடிஞ்ச வரை போராடி பாத்துட்டோம். இன்னும் கொஞ்ச நிமிஷங்கள் தான் தாக்கு பிடிக்க முடியும். நீங்க போய் பார்த்து பேசுங்க. நினைவு லேசா திரும்பும் போதெல்லாம் உங்க பேரத்தைத்தான் பங்கஜம் பங்கஜம்ன்னு சொல்லிகிட்டே இருக்கார். போங்க போய் சீக்கிரம் பாருங்க". சேது யோசனையாய் பார்க்க அம்மா உணர்ச்சி துடைத்து விட்ட குரலில் "என் பேரு கல்யாணி. பங்கஜம் அவர் முதல் மனைவி பேரு. சேது போய் என்னனு பாரு" என்றுவிட்டு எதிப்புறமாக நடந்தாள். 


Rate this content
Log in

Similar tamil story from Drama