sangeetha muthukrishnan

Drama Romance Tragedy

4.4  

sangeetha muthukrishnan

Drama Romance Tragedy

முதல் காதல்

முதல் காதல்

5 mins
1.4K


ஆர்வமில்லாமல் தொலைக்காட்சியின் சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்தான் அரவிந்த். பழைய படம் எதாவது பார்க்க வேண்டும் போல் இருந்தது. கே டிவியில் வந்து நின்றான். ஓரளவு புதுப்படம் தான். ரயில் நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நாயகனும் நாயகியும் ரயிலை தவற விட்டு ஒரு ஹோட்டல் அறையில் தங்குகிறார்கள். நாயகன் தன் காதலிக்கு இன்று திருமணம் என்கிறான் நாயகியிடம். வேதனைப் படுகிறான். நாயகி அவனை தேற்ற ஒரு உபாயம் சொல்கிறாள். ம்ச்..இந்து சுவாரசியம் இல்லாமல் எழுந்தாள். "காதலி படத்தை எரிஞ்சு தூக்கி போட்டா எல்லாம் மறந்துடுமா? சுத்த ஹாம்பக். பால் சாப்பிடறீங்களா?.. " என்றாள்.


அவன் தலையாட்டியதும் இந்து பிரிட்ஜ் ஜைத் திறந்து பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சமையலறையில் நுழைந்தாள். காதலி என்ற வார்த்தையின் விளைவாக அரவிந்தின் மனம் பன்னிரண்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது. மறந்து விட்டது என்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம்! காதலி என்ற மாத்திரத்தில் பக்கத்தில் மனைவி இருந்தும் கூட அவள்தான் நினைவுக்கு வருகிறாள். பார்த்த விஷயங்கள் , பேசிய சொற்கள் , போன இடங்கள் என்று எதை எடுத்தாலும், நினைத்தாலும் தேவியின் முகம் நிழலாடுவதை எத்தனை முயன்றும் மாற்ற முடியவில்லை. பழகிய நாட்களில் பேசி சிரித்தவை நொடியில் தோன்றி நிம்மதியை குலைக்கும். கண்களை மூடி அமர்ந்தான் அரவிந்த். அவள் குரலும் முகமும் மனம் முழுக்க மறுபடியும் நிறைந்தது.


"எனக்கு சொல்லி தரீங்களா சீனியர்.. நான் பயாலஜி குரூப். எனக்கு அகவுண்ட்ஸ் , கமெர்ஸ் , எகனாமிக்ஸ் எதுவும் வராது. நீங்க தான் காலேஜ் டாப்பர் ஆச்சே". அதற்கு பிறகு அடிக்கடி சந்தேகம் என்று புத்தகத்தை தூக்கிக்கொண்டு வந்து நின்று விடுவாள். இருவருக்குமே பிடித்திருந்தது. இருவருக்குமே சொல்லத்தயக்கம். 


"மார்ஜினல் யுடிலிட்டி தியரி படிச்சியா. ரொம்ப முக்கியம் அது". 

"அப்படியா ? பெருசா புரியல எனக்கு". 

"அது ரொம்ப சிம்பிள் ஆச்சே". 

"இப்போ நீ ஒரு மாம்பழம் சாப்புட்ற.. உனக்கு அது ரொம்ப பிடிக்குது. அப்புறம் ரெண்டு , இன்னும் சாப்புட்ற மூணு , அப்ரோ நாலு ... இப்படி உன் கன்சம்ஷன் அதிகம் ஆகும்போது என்ன ஆகும்?" கேட்டு அரவிந்த் நிறுத்திய போது தேவி, "டியாபெடிஸ் வரும்". 

அவள் ஒரு பெருமூச்சுக்குப்பின் "எனக்கு பாடம் எல்லாம் புரியுது. நான் படிக்கறதுக்காக உங்க கிட்ட வந்து நிக்கல". என்றாள் தலையைத் தாழ்த்தி.


"சரி வேற எதுக்கு வரணும் நீ ". அரவிந்தின் கேள்வியில் அவள் உதடுகள் துடித்து முகம் சிவந்து கண்களில் எட்டிப்பார்த்த அழுகையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றது இன்றளவும் மறக்கமுடியாது அரவித்தால் .


ஒரு பெண் முதலில் காதலை சொல்வது ரொம்பவும் குறைவு தான். அப்படி சொல்ல நினைத்தாலும் கொஞ்சம் கோடி காட்டினால் ஆண்கள் புரிந்து கொண்டு முந்திக்கொண்டு சொல்லி விடுவது இயல்பு. தேவி இவ்வளவு சொன்ன பிறகும் அரவிந்த் எதற்கு என்று கேட்ட போது அவளுக்கு கூச்சம் , அவமானம் , துக்கம் , இயலாமை எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கண்ணீர் தான் வந்தது. அவனுக்கு பாவமாக போயிற்று. "ஹே... ப்ளீஸ் அழாத. நீ எதுவும் சொல்ல வேண்டாம் . நமக்குள்ள இருக்கறது என்னனு எனக்கும் தெரியும்; உனக்கும் தெரியும். நீ சொல்லி தான் தெரியனுமா ம்ம்ம் ?" அவன் சொல்லும் போதே அவள் முகம் மாறியது.. அவமானம் வெட்கமாகவும் , துக்கம் நிம்மதியாகவும் மாறியபோதும் அவள் உதடுகள் இன்னும் துடித்துக்கொண்டே தான் இருந்தது. கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது... 


அந்த முகம் அவன் மனதில் பதிந்து போனது.."இந்தாங்க பால் . குடிச்சுட்டு டம்ளரை அப்டியே வச்சிராம சிங்க்ல போடுங்க. நா போய் படுக்கறேன்..."


திரும்பவும் பழைய நினைவுகள்... எகனாமிக்ஸ் புலி , மன்மோகன் சிங் என்று அவள் தேர்ந்தெடுத்த செல்ல பெயர்களில் கூட கேலி இழையோடும்.. மரியாதை மறந்து நீ வா போ என்ற போதும் சீனியர் என்று தான் அழைப்பாள்.. அதில் ஒரு அந்தரங்கமான நேசம் இருக்கும். 


அன்றும் எல்லா நாட்களைப் போல ஒரு சாதாரண நாள் என்றுதான் நினைத்தான்.. ஆனால்...  

"என்ன சீனியர் இன்டெர்வியூ என்னாச்சு".  

"செலக்ட் ஆயிட்டேன்" சிரித்தான் அரவிந்த்.

"அப்பாடா.. நான் படிப்பை முடிக்க ரெண்டு வருஷம் இருக்கு. அதுக்குள்ள நல்லா செட்டில் அய்டலாம்னு தோணுது.. இன்னும் நாலு வருஷத்துல பையன் பொறந்து 'ஆடம் ஸ்மித்'னு பேரு வச்சிருப்போம் " என்றாள் சிரித்துக்கொண்டே.


"அட கொஞ்சம் உன் கற்பனை கழுதையை கட்டி வை. நான் வேலை பார்க்க போறதில்ல. மேல படிக்க போறேன். முதுகலை பொருளாதாரம்." அவனை ஆச்சரியமாக பார்த்து , "சரி ரெண்டு பேரும் ஒன்னா படிப்பை முடிப்போம். அப்போவும் நல்ல வேலை கிடைக்கும் ". தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்

"கிடைக்கும்தான். ஆனால் நான் எம். பில் , பி. ஹெச் .டி பண்ண போறேன் " .

"விளையாடுறிங்களா சீனியர்?எனக்கப்புறம் ரெண்டு தங்கைகள் இருக்காங்க. அவ்ளோ நாள் சமாளிக்க முடியாது வீட்ல".


"நான் இப்போவே கூட பேசி புரியவெக்குறேன் உங்க வீட்ல. ஆனா என் முடிவுல மாற்றம் எதுவும் இல்லை". "இது என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு? எல்லாம் படிச்சுட்டு இதே பத்தாயிரம் சம்பளம் தானே வாங்க போறீங்க ? கிடைச்ச நல்ல வேலைய விட்டு... அங்கங்க வேலைய விட்டு தூக்கிட்டு இருக்காங்க இவரு என்னடானா ... சுத்த முட்டாள்தனம்.." அவள் முடித்து நிறுத்திய வார்த்தை அவனுக்கு ஆத்திரத்தையூட்டியது. 

ஆத்திர மிகுதியில் வார்த்தையை துப்பினான். 


"உனக்கு எப்படியோ தெரியாது. எனக்கு படிப்பு பேஷன். நான் என்ன படிக்குறேனோ அது சம்பந்தமான வேலை என் மனசுக்கு புடிச்சு தான் பாப்பேன். கேம்பஸ் இன்டெர்வியூ வேலைனு இதுக்காக என் முடிவை மாத்திக்க முடியாது. உன்ன மாதிரி லவ் பண்றதுக்கு ஒரு துருப்புசீட்டா நான் படிப்பை நினைக்கல" சொல்ல சொல்லவே சொன்ன வார்த்தைகளின் தாக்கம் புரிய நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தபோது அவள் அங்கிருந்து திரும்பி நடந்து கொண்டிருந்தாள்.


அடுத்த நாள் அவளைத்தேடிப்போய் " "நான் பேசியதும் தப்பு தான். சாரி என்றான்".

"என் மேலயும் தப்பு இருக்கு சீனியர். நான் பேசினத்துக்கும் சாரி . ஆனா ஒடஞ்சத ஒட்ட வெக்க வேணாம் விட்ருங்க" எதோ கோவம் சரி ஆகிவிடும் என்று நினைத்தது கடைசி வரை மாறவில்லை.. அவன் நினைத்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். ஆனால் பழைய கனவு என்று நினைத்த ஞாபகங்கள் அவனை விட்டு விலகுவதாக இல்லை. சிரித்து மகிழ்ந்த நாட்களை அசைபோட்டுக்கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்து

கட்டிலின் அருகே சென்றவன் கவலையின்றி குழந்தை போல் தூங்கும் மனைவியை பார்த்தான். 


எவ்வளவு நிம்மதி.. எல்லாம் அவனை நம்புவதால் வரும் உறக்கம். 

இந்து சொந்த மாமா பெண். 'பட்டிக்காட்டுல வளர்ந்த பொண்ணு டா நீ சென்னையின் நவநாகரீகம் எதிர்பார்த்தா கிடைக்காது' என்று அம்மா எச்சரித்த போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. இனி என்ன கல்யாணம்? என்ன வாழ்க்கை? போகிற போக்கில் போகட்டும்.. 


ஆனால் இந்து வேறே மாதிரி இருந்தாள். நடை , உடை பாவனைகளில் இல்லாத நாகரிகம் அவள் நடத்தையில் இருந்தது. அவனுக்கு தேவையானது சரியாய் நடந்தது , வீடு நன்றாக பராமரிக்கப்பட்டது . அவன் என்ன சொன்னாலும் அதை சரி என்று கேட்டு அதன் படி நடந்தாள். எது செய்தலும் ஏன் எதற்கு , எப்படி என்ற நச்சரிப்புகள் இல்லை. ஏன் லேட்? , இந்த மெசேஜ் அனுப்புற பொண்ணு யாரு? கேள்விகள் தொடுப்பதில்லை ; சிகரட் பிடிக்காதீங்க உடம்புக்கு கெடுதி! கம்ப்யூட்டர் பாத்துட்டே இருந்த கண்ணு கெட்டு போய்டும் , வீட்டுக்கு வந்தும் என்ன வேலை ? என்ற மாதிரியான தொனப்பல்கள் இல்லை. புடவை வேணும்! நகை வேணும்! நச்சரிப்புகள் இல்லை. கல்யாணமாகி ரெண்டு வர்ஷமாச்சே ஏதேனும் உண்டா?என்பவர்களிடம் புலம்பல்கள் இல்லை. ஆண்டவனக்கு தெரியும் எப்போ தரணும்னு என்று சிரித்த முகத்தோடும் சொல்லி விடுகிறாள்.


அந்த ஆறாம் நம்பர் பிளாட் டீச்சர் இல்லை! என்று ஆரம்பிப்பவர்களிடம் அடுத்தவன் கதை நமக்கெதுக்கு என்று முடித்து விடுகிறாள். வீடு என்றால் நிம்மதி கிட்டுவது இவளால் தான். தேவியை மறந்துதான் ஆக வேண்டும். அவள் நினைவுகளை மறக்காவிட்டாலும் அதன் தாக்கத்தை குறைக்கவாவது எதாவது செய்ய வேண்டும். சற்றுமுன் பார்த்து இந்து குறைகூறி சென்ற காட்சி நினைவு வந்தது.


சத்தம் எழுப்பாமல் மெதுவாக சென்று அவனின் பிரத்தியேக லாக்கரை திறந்து தான் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தான். கூட படித்தவன் ஒருவனின் கேமரா மொபைலில் எடுத்தது அது. அதை காப்பி எடுத்து ஆளுக்கொன்று வைத்துக்கொண்டார்கள். தேவியின் கையெழுத்தில் அரவிந்த் வெட்ஸ் தேவி என்று எழுதி அவனும் , அவன் அதே போல எழுதிய புகைப்படத்தை அவளும். எத்தனை குழந்தைத்தனம்! அதை ஆசை தீர ஒருமுறை அதைப் பார்த்து பின் வேகமாக சமையலறைக்கு சென்றவன் கண்களை இறுக மூடிக்கொண்டு அடுப்பைப்பற்ற வைத்து, மனமின்றி புகைப்படத்தை அதில் இட்டு பொசுக்கினான்.


மிச்சமிருந்த ஒரே நினைவுச்சின்னம் அழிந்த போது அவனுக்கு லேசாய் ஒரு திருப்தி ஏற்பட்டது.. மனசு கொஞ்சமே கொஞ்சமானாலும் லேசாகியிருந்தது.. கருகிய படத்தின் சாம்பல்களை அள்ளி குப்பைத்தொட்டியில் போட அதன் மூடியை திறந்தான். உள்ளே போட்டு கைகளை உதறியபோது தக்காளி வெங்காய தோல்களுக்கு மத்தியில் பாதி எரிந்த புகைப்படம் ஒன்றும் இருந்தது கண்டு உரைந்து‌ நின்றான் அரவிந்த்.


Rate this content
Log in

Similar tamil story from Drama