sangeetha muthukrishnan

Drama Fantasy

4.5  

sangeetha muthukrishnan

Drama Fantasy

கனவு மெய்ப்படும்

கனவு மெய்ப்படும்

5 mins
212


அந்த பெரிய வீட்டின்  வாசலில் மாட்டியிருந்த பெயர்ப்பலகை டாக்டர் பட்டாபிராமன் என்று தங்க நிறத்தில் வீட்டின் எஜமானரின் பெயரைத்தாங்கியிருந்தது. பிரபு ஒரு முறை தயங்கி நின்று விட்டு மறுகணம் ஏதோ முடிவுக்கு வந்தவன் போல உள்ளே சென்றான். இவ்வளவு பெரிய வீட்டில் காவலுக்கு ஒரு ஆள் கூடவா இல்லை? உள்ளே செல்லும் நடை பாதையின் இருபுறத்திலும் புல்தரை பசுமையை பரப்பிக்கொண்டிருந்தது. அங்கங்கே கற்சிலை பொம்மைகள் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தது. மனைவி அபிராமியை மனதில் நினைத்துக்கொண்டான். அவள் இது மாதிரி கலை, அழகு சம்மந்தப்பட்ட பொருட்களில் அதிக ஆர்வம் காட்டுவாள். மேலே அவளைப்பற்றி சிந்திக்க வழியில்லாமல் ஒரு மரக்கதவு வந்தது. தயங்கி நிற்கும்போதே "கம் ஆன் மிஸ்டர் பிரபு.. உள்ளே வாங்க" என்று கணீர் குரலில் பட்டாபிராமன் அவனை வரவேற்றார்.


உள்ளே சென்ற போது, "பரவாயில்லை வந்துட்டீங்களே இவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணி.இடத்தைக்கண்டுபிடிச்சு! சாரி பிரபு நான் பொதுவா வாரக்கடைசில இங்க வந்திடுவேன். யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிறதில்ல. நீங்க ரொம்ப பதற்றமா பேசினதாலயயும் தனிமைல சந்திக்கனும்னு கேட்டுக்கிட்டதுக்காகத்தான் இங்க வர சொன்னேன்."


பிரபு, "பரவாயில்லை டாக்டர். என் பிரச்சனைக்கு வழி கிடைச்சா போதும்.அதுக்காக எங்கே எப்போ வரணும்னாலும் வருவேன்."


டாக்டர் , "ஹூம்! சரி வாங்க அந்த அறைக்குள் போய்டலாம்" என்று அழைத்து சென்றார். பட்டாபிராமன் சென்னையின் தலைசிறந்த மனநல மருத்துவர். அவரை பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பிரபு அவருடைய மொபைல் எண்ணை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு தனிமையில் தன் பிரச்னையை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இசைந்து விடுமுறையில் அவனுக்கென நேரம் ஒதுக்கி தன் ஈ.சி.ஆர் பங்களாவில் வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார்


அந்த உள்ளறையும் கலைத்துவத்தோடுதான் இருந்தது. ரவி வர்மாவின் தமயந்தியும், மோனாலிசாவும் எதிரெதிர் பக்கங்களில் மாட்டப்பட்டிருந்தார்கள். அந்த ஓவியங்களைபோலேயே அங்கிருந்த பொருள்களில் ஒரு வித முரண்பாடு இருந்தது போல பட்டது அவனுக்கு. ஒரு பெரிய மேஜையின் பின்புறம் இருந்த சுழற்நாற்காலியில் அமர்ந்து எதிரே பிரபுவை அமருமாறு கைகாட்டிவிட்டு டாக்டர் தொடர்ந்தார்.


"சொல்லுங்க பிரபு. என்ன விஷயம்? என்ன மாதிரி பிரச்சனை?" பிரபு ஒரு முறை தயங்கித்தயங்கி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான். டாக்டர் சிரித்துக்கொண்டே " யாரும் இல்லை இங்க. தைரியமா பேசுங்க" என்றார்.

பிரபு, "எனக்கு இனிமேல் நடக்கப்போறதெல்லாம் முன்னாலேயே தெரியுது டாக்டர்" என்றான். டாக்டர் லேசாக சிரித்து, " இது மாதிரி கேஸ் நா நெறைய பாத்துருக்கேன். நீங்க பயப்படற அளவு ஒன்னும் இல்ல இது. சொல்லுங்க எப்படி தெரியுது? கனவுல வருதா? எத்தனை நாட்களுக்கு அப்புறம் அது நடக்கறதை உணர முடியுது உங்களால?"

பிரபு, " கொஞ்ச நாட்கள் இல்லை டாக்டர். கொஞ்ச நேரம்தான்".


"என்னது ?" முதல் முறையாக டாக்டர் குரலில் சிறு ஆச்சரியம் தொனித்தது. மறு வினாடியே இயல்புக்கு திரும்பி," இன்டெரெஸ்ட்டிங்! மேலே சொல்லுங்க. எப்போ உங்களுக்கு இது தெரிய வந்தது?"


அவன் யோசனையோடு பேச ஆரம்பித்தான். "எப்போன்னு சரியாய் நியாபகம் இல்ல டாக்டர். ஆனா சமீப காலமாதான். ஏதாச்சும் யோசிக்கவோ, இல்லை கொஞ்சம் ஓய்வு எடுக்கவோ கண்களை மூடும் போதெல்லாம் எனக்கு அடுத்த ரெண்டுலேர்ந்து அஞ்சு நிமிஷத்துக்கு என்ன நடக்கும்னு தெரியும். முதல்ல ஏதோ தற்செயலா நடக்கறதுன்னுதான் நெனச்சேன். ஆனா போகப்போக இது ஒரு தீராத தொல்லை ஆகிடுச்சு"


டாக்டர், "சரி நீங்க கண் மூடும் போது என்ன மாதிரி தோணுது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க."


அவன்,"ஒரு திரைப்படம் மாதிரி ஓடுது டாக்டர். மனைவி வந்து சேனல் மாத்தப்போறது, பையன் ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்து கேக்கபோறது, பாஸ் பைலை மூஞ்சில விட்டெறிஞ்சு திட்ட போறது, எனக்கு முன்னாடி போறவன் நடக்கும் போது தடுக்கி விழுவான்னு கூட எனக்கு தெரியும். ஆனா எனக்கு எதையும் சரி பண்ண அவகாசம் கிடையாது. எதிர்பாரத எதுவும் நடக்கறது இல்ல. ஆனா சின்ன சின்ன விஷயங்கள்தான் என்றாலும் மனப்போராட்டம் அதிகம் டாக்டர். யோசிச்சு பாருங்க என்னை சுற்றி என்ன நடக்கும்னு எனக்கு சில நிமிஷங்களுக்கு முன்னாலேயே தெரியும்.

டிவி பாத்துட்டே என் மனைவி காய்கறி வெட்டிக்கிட்டிருந்தா. அவ விரல வெட்டிக்கப்போறன்னு தெரிஞ்சு "பாத்து வெட்டிக்கப்போறன்னு சொன்னேன். சொன்ன நிமிஷம் கையில இருந்து ரத்தமா வழியுது. என்ன வாயோ உங்களுக்கு நல்லதே வாயில வராதான்னு எரிஞ்சு விழறா" என்றான் சிறு புன்னகையினூடே. "நல்லதும் இப்படித்தான். சாப்பிட உக்காரும் பொழுது இன்னிக்கு அருண் வீட்ல முள்ளங்கி சாம்பாரும் பீட்ரூட் பொரியலும்னு சொன்னேன். அவன் பொண்டாட்டி என்ன சமைப்பாங்கன்னு உனக்கு எப்டிடா தெரியும்னு கேலி பேசறாங்க. எல்லாத்தையும் விட எனக்கு அடுத்து என்ன ஆகும்னு நொடிக்கு நொடி தெரிஞ்சுக்குற ஆர்வம் அதிகமாகுது. என்னால ராத்திரி தூங்க முடியல. நான் சராசரியா வாழனும். என்னால மாற்ற முடியாத எதுவும் நான் தெரிஞ்சுக்க விருப்பப்படல. கண்ணை மூடினா 

ஒரு சின்ன இருட்டு , பூக்கள் , அன்பான என் மனைவி , அழகான என் பையன் இது மாதிரி ஏதாச்சும் தெரிஞ்சா போதும் எனக்கு. ப்ளீஸ் எப்படியாச்சும் சரி பண்ணுங்க டாக்டர் .


டாக்டர் ஆசுவாசமாக "வெல்! பிரபு இது நிஜமாவே தற்செயலா இருக்கலாம். மனைவி சேனல் மாத்தறது, விரலை வெட்டிக்கறது, தப்பா செஞ்ச வேலைய பிடிக்காம மேனேஜர் திட்றது, முன்னாடி போறவன் பாதையை கவனிக்காம இடறி விழுறது, மணத்தை வச்சு என்ன சமையல்னு கிரஹிக்கிறது. பரீட்சை முடிஞ்ச நேரத்துல மார்க்சீட்ல பையன் கையெழுத்து கேக்கறது எல்லாமே சீம்ஸ் வெரி நார்மல். வேற ஏதாவது ஸ்பெசிபிக்கா சொல்லுங்க பாக்கலாம்" என்றார் ஒத்துக்கொள்ளாத பாவனையுடன்.


பிரபு அவரை எப்படியாவது நம்பவைத்து விடுவது என்று தீர்மானித்து , "இல்லை டாக்டர். எனக்கு தோன்றது அப்படியே நடக்கறது. இங்கே வர்ரதுக்கு முன்னாடி கூட உங்க வீடு பெயர் பலகை நான் பாக்குறது எனக்கு தெரிஞ்சது. உங்க பேர் தங்க நிறத்துல இருந்ததும் நான் இவ்ளோ பெரிய வீட்டுக்கு காவலுக்கு ஆள் இல்லையான்னு நினைச்சதும். அப்புறம் தெரு உள்ளே வந்து உங்க வீட்டை அடைஞ்சப்போ என்னை அறியாமலே நான் அதெல்லாம் நெனைச்சேன்" என்றான் பதற்றமாக.


"ஓகே! காம் டவுன்! அதுக்கு அப்புறம் நீங்க ஏதாச்சும் நெனைச்சீங்களா? ஐ மீன் பெயர்பலகையை பாத்ததுக்கு அப்புறம்?"


"இல்லை டாக்டர் அதுக்கு அப்புறம் உங்க கூட பேசிட்டு இருக்குறதால நா எதையும் யோசிச்சு பாக்கல."


"பிரபு இது ரொம்ப சிம்பிள் கேஸ். இப்போவே இது வெறும் கோய்ன்ஸிடென்ஸ் தான்னு உங்களுக்கு நான் நிரூபிக்கிறேன்" என்றார் வெற்றிச்சிரிப்பினூடே


"எ.. எப்படி டாக்டர்?"


"ம்ம்ம்.. ஒரு சின்ன டெஸ்ட் தான். நீங்க இப்போ கண்களை மூடி அடுத்த ரெண்டு நிமிஷத்துல நான் என்ன சொல்லுவேன்னு சொல்லுங்க. உங்க கண்களுக்கு என்ன தெரியுதுனு சொல்லுங்க. நான் அதுக்கு நேர் மாறா வேற ஒரு விஷயத்தை சொல்லறேன். உதாரணத்திற்கு நான் உங்கள அடுத்த வாரம் திரும்ப வந்து பாருங்கனு சொல்லற மாதிரி உங்களுக்கு தோனினா நான் சில மெடிகேஷன்ஸ் குடுத்து இன்னிக்கே உங்களை அனுப்பிடறேன். வைஸ் வெர்ஸா. என்ன சொல்றிங்க ட்ரை பண்ணலாமா? நீங்க உங்க கண் முன்னாடி என்ன தோனுதுங்கறத அப்படியே எனக்கு சொல்லிட்டு வாங்க, நான் நோட் செய்துக்குறேன். யஎஸ் ஸ்டார்ட்" என்றார். 


பிரபு கண்களை மெதுவாக மூடி புருவங்களை சுருக்கி பேச ஆரம்பித்தான். "புல்ஷிட்! வாட் நான்சென்ஸ்னு சொல்லறீங்க டாக்டர். நான் ஒருவித பதட்டத்தோட ஓடி உங்கள நாற்காலில இருந்து கீழே தள்ளி, தரையில இருக்குற மார்பில் கல்லை நகர்த்துறேன். அங்கே நிறைய தங்க பிஸ்கட்ஸ், நோட்டுக்கட்டுகள் எல்லாம் இருக்கு. நீங்க எழுந்து வந்து என்னைத்தாக்க பாக்குறீங்க ஆனா நான் அதுக்குள்ள அந்த சுரங்க அறைக்குள்ள இருந்த துப்பாக்கியால் உங்க மார்ல சுடறேன்." என்று தான் சொன்னதை தானே நம்ப முடியாத பாவனையில் கண்ணைத்திறக்கிறான். டாக்டர் முகமெல்லாம் வெளிறிப்போய் வியர்த்து வழிய "புல்ஷிட்! வாட் நான்சென்ஸ்" என்கிறார் தன்னை மறந்து...


அதற்கு மேல் பிரபு தாமதிக்கவில்லை, அவன் கண்ட நோட்டுக்கட்டுகளும் தங்க பிஸ்கட்களும் கண் முன்னால் வந்து அவனை ஆட்டுவித்தது. சரேலென்று ஓடி டாக்டரை கீழே தள்ளி மார்பிளை நகர்த்தி பணம் நகைகளை பார்த்து, காவலாளி இல்லாத பெரிய வீடு என்பதை சட்டென்று நினைவில் நிறுத்தி நெருங்கி வரும் டாக்டரை கையில் கிடைத்த துப்பாக்கியில் சுட்டு அவர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும்பொழுது பணம், தங்கம் எல்லாவற்றையும் எடுத்து ஒரு பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு ஆயாசத்தோடு நாற்காலியில் அமர்ந்தான்.


என்னவெல்லாம் நடந்து விட்டது! எப்படி இதை மறைப்பது எப்படி இதிலிருந்து தப்பிப்பது? ஒன்றும் புரியாமல் தலை முடியை கோதி கண்களை மூடி யோசித்தான். அவன் கண்களின் முன்னால் அந்த வீட்டின் இரும்புக்கதவுகளை தள்ளிக்கொண்டு போலீஸ் உடையில் நான்கு ஐந்து பேர் நுழைவது தெரிந்தது. அதில் ஒருவர் வேலையாள் போல இருக்கும் மற்றொருவரை பார்த்து "ஊர்லயே பெரிய புள்ளி. பெயர் வாங்கின டாக்டர் , சிலை திருட்டு கேஸ்ல அவ்வளவு சாதாரணமா அர்ரெஸ்ட் பண்ணிட முடியாது. ஆதாரங்க இருக்குற இடம் உனக்கு தெரியும் தான?" என்று கேட்கிறார். அவன் பவ்வியமாக "தெரியுங்க சாமி! அந்த ஐயா நாற்காலிக்கு கீழேயே எதோ இருக்குதுங்க. நான் பாத்துருக்குறேனுங்க" என்கிறான்.

மரக்கத்தவருகில் ஆளரவம் கேட்கிறது,


தப்ப வழியில்லை என்பது தெரிந்து விரக்திப்புன்னகையோடு துப்பாக்கியை திருப்பித்தன் நெற்றி மேல் வைத்து கண்களை மூடி அழுத்துகிறான். இம்முறை அவன் கண்களை மூடும்பொழுது இடுப்பில் மகனுடன் மனைவி அபிராமி சிரிப்பது போல் ஒரு பிம்பம்தெரிகிறது.

சற்று முன் அவன் டாக்டரிடம் கெஞ்சிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்து.. "என்னால மாற்ற முடியாத எதுவும் நான் தெரிஞ்சுக்க விருப்பப்படல. கண்ணை மூடினா 

ஒரு சின்ன இருட்டு , பூக்கள் , அன்பான என் மனைவி , அழகான என் பையன் இது மாதிரி ஏதாச்சும் தெரிஞ்சா போதும் எனக்கு. ப்ளீஸ் எப்படியாச்சும் சரி பண்ணுங்க டாக்டர்" . சரிந்து கீழே விழும்பொழுது "நன்றி டாக்டர்!" என்கிறான் விரக்திப்புன்னகையோடு.


Rate this content
Log in

Similar tamil story from Drama