DEENADAYALAN N

Action Crime Thriller

3.0  

DEENADAYALAN N

Action Crime Thriller

இது விபத்தாயிருக்க வாய்ப்பில்லை!

இது விபத்தாயிருக்க வாய்ப்பில்லை!

6 mins
476


                                    


‘ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருங்க சார்.. இப்பொ முடிஞ்சிடும்’ நித்தினிடம் பவ்யமாக சொன்னார் அந்த பிரபல ஆண்கள் அழகு நிலைய மேலாளர். ‘இட்ஸ் ஓகே..’ என்று வசதியாக தன்னை வாங்கிக் கொண்ட காத்திருப்பு இருக்கையில் சாய்ந்தான் நித்தின்.


நித்தின் ஒரு டிடெக்டிவ். பல வழக்குகளில் துப்பறிந்து. உளவு பார்த்து பல எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகளை வெளியே கொண்டு வந்தவன். காவல் வட்டாரத்தில், நித்தினின் ஒன்று விட்ட சகோதர்கள் விவான், அவ்யுக்த், ரிஷி, ரோஹன் இவர்களுக்கு இணையாக நித்தினின் பெயரும் மிகவும் பிரபலம்.


‘அப்பாயிண்ட்மென்ட்’ வாங்கிதான் வந்திருந்தான் நித்தின். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பலவிதமான அழகு கூட்டும் முறைகளைக் கையாண்டு நல்ல தொகையை விலையாகப் பெறும் பணி நடுவம் அது. அங்கே ‘முடிதிருத்தம்’ செய்வதற்காகவே நித்தின் வந்திருந்தான். மணி காலை ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் கண்கள் சற்றே தாழ்ந்த போது ஒரு நாளிதழ் கண்ணில் பட அதை எடுத்து விரித்தான். தலைப்பு செய்திகளை மட்டும் மேய்ந்து கொண்டு வந்த போது ஐந்தாம் பக்கத்தில் ஒரு விபத்து செய்தி அவனை ஈர்த்தது.


புல்டோசரில் இடித்து விபத்து!

இயக்குனர் வில்வராஜ் மரணம்!


என்கிற செய்தி அவனை ஈர்த்தது. செய்தியின் விரிவைப் படித்தான்:

இயக்குனர் வில்வராஜின் தோட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த புல்டோசரில் கார் மோதி விபத்து. இதில் இயக்குனர் வில்வராஜ் மரணம்….


‘வாங்க சார்’ என அழகு நிலைய மேலாளர் அழைத்தார். அதற்குள் செய்தி விவரங்களைப் படித்திருந்தான் நித்தின். செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு முடிதிருத்த அறையின் முகப்பை நோக்கி நடந்தான் நித்தின். தான் அறையில் நுழைந்தது, முடிதிருத்த இருக்கையில் அமர்ந்தது, அதற்கான முன்னேற்பாடுகளான மணம் நிறைந்த தண்ணீரை முடிதிருத்தும் ஊழியர் முடிகளில் ‘பீச்சி’ அடித்தது, ஊழியர் ஏதோ சொன்னது என எதையும் உணராமல், செய்தியிலேயே நித்தினின் மனம் ஓடிக் கொண்டிருந்தது.


இயக்குனர் வில்வராஜின் பண்ணை வீட்டிற்கு ஒரு வழக்கு விஷயமாக துப்பறியும் நோக்கில் ஒரு முறை நித்தின் சென்றிருக்கிறான். புல்டோசர் நிறுத்தியிருந்த இடம் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதனருகே ஒரு ‘பல்சர்’ பைக் நின்றிருந்ததும் அவனுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எனவே ஒரு கார் முழுதாக சென்று அந்த புல்டோசரில் மோதுவதற்கான சாத்தியமே இல்லை. ஆனால் செய்தியில் கார் மோதியதாக சொல்லப் பட்டிருக்..


‘சார்… சார்…’ முடிதிருத்த ஊழியரின் குரலின் டெசிபல் சற்றே கூடி ஒலிக்க,


‘ஓ.. சாரி.. சொல்லுங்க.. ‘ என்றான் நித்தின்.


‘இல்லே சார் முடியை ஷார்ட் பண்ணீரலாமா..’ – ஊழியர்.


‘இல்லே கொஞ்சம் மீடியமாவே ‘கட்’ பண்ணீருங்க..’


வேலை முடிந்து வெளியில் வந்து தன் பிரத்தியேக வாகனத்தில் ஏறி அமர்ந்தான் நித்தின். ஆனால் பின்புலத்தில் அவனுக்கு வில்வராஜ் விபத்து பற்றிய எண்ணமே சுழன்று கொண்டிருந்தது. அந்த பண்ணை வீட்டு முன்புறச் சூழலில் ஒரு விபத்து நடக்க வாய்ப்பே இல்லை என்பது போல் தோன்றியது அவனுக்கு.


நித்தின், முன்பு அந்த பண்ணை வீட்டிற்கு சென்ற போது எடுத்த சில புகைப்படங்கள் அவன் கைபேசியில் இருந்தது. அந்த புகைப்படங்களைத் தேடி திரையில் கொண்டு வந்து நிதானமாக பார்த்தான். அவை, அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த கருத்துக்களை ஆமோதிப்பது போல் தான் இருந்தது.


வீட்டுக்கு வந்து குளித்து முடித்தவுடன் தன் உயர் அதிகாரியை கைபேசியில் அழைத்தான். தன் சந்தேகங்களை சொன்னான்.


‘ஓ கே நித்தின். உங்கள் நோக்கில் நீங்கள் ‘ப்ரொசீட்’ செய்யுங்க. ஒரு இரண்டு நாட்கள்லே எனக்கு அப்டேட் பண்ணுங்க’ என்றார் மேலதிகாரி.


அடுத்த ஒரு மணி நேர பயணத்தில் இயக்குனர் வில்வராஜின் பண்ணை இல்லத்துக்குள் நித்தினின் கார் நுழைந்தது!அந்த வீடு, பரந்து விரிந்த ஒரு கிராமத்து பெருந்தனக்காரர் வீடு போல் இருந்தது அந்த வீட்டின் பின்புறம் பல ஏக்கர்களில் பரந்து விரிந்து இருந்த பச்சைப் பசேல் பகுதி உள்ளத்தை கொள்ளை கொண்டது. நித்தினைப் பார்த்து விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருந்த ஒரு வேலைக்காரர் ஓடோடி வந்தார். அவர் அருகில் வந்த போது, அவரைப் பார்த்த நினைவு வந்தது, நித்தினுக்கு.


‘யாரு சார் நீங்க, என்ன வேணும்’ என்று பதற்றத்துடன் கேட்டார் அந்த ஆள்.


‘நான் போலீஸ்... உன் பேரென்ன?’


‘இல்லே சார்.. இங்கே வந்து யார் எதை கேட்டாலும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க சார்..’


‘யார் சொன்னாங்க?’


‘அது வந்து.. வந்து..’


‘ஒ.. உனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு சொல்லு..’


‘இல்லே சார்.. எனக்கு ஒன்னும் தெரியாது சார்…’


‘அப்போ ஏன் ‘இங்கே வந்து யார் எதை கேட்டாலும் சொல்லக் கூடாது’ன்னு உங்கிட்டே சொல்லி இருக்காங்க.. அப்போ உனக்கு இங்கே நடந்தது எல்லாம் தெரியும் தானே.. சொல்லு.. உனக்கு யார்கிட்டையும் ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு உத்தரவு போட்டது யாரு?‘


‘வந்து மரகஸ்னா அக்கா சார்..’


‘யாரது நடிகை மரகஸ்னா வா...’


‘ஆமா சார்..’


‘சரி சொல்லு.. இந்த கொலைய யார் செஞ்சது?’ அவன் கண்களை ஊடுருவிக்கொண்டே நித்தின் ஒரு ‘பிட்’டைப் போட்டான்.


‘ஐயோ.. கொலையா.. எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க சார்.. நீங்க அவங்கிட்டேயே பேசிக்கோங்க சார்..’ என உளறத்தொடங்கினான்.


‘சரி கிளம்பு.. நீ இங்கே சரிப்பட்டு வரமாட்டே.. ஸ்டேஷன் போவோம்.. அங்கே கேக்கற மாதிரி கேட்டா எல்லாத்தையும் சொல்லீறப் போறே..’


‘ஐயோ வேண்டாம் சார்.. நீங்க கேளுங்க சார்.. எனக்கு தெரிஞ்சத சொல்லீர்றேன் சார்’


அதன் பிறகு நித்தின் சேகரித்த விவரங்கள் இதுதான்: என் பேரு மல்மர் சார்.. மூனு வருஷமா இங்கே வேலைப் பார்க்கிறேன். உள்ளூரில் இருந்தால் வார இறுதியில் வில்வராஜ் சார் இங்கு வந்து விடுவார். உடன் ஆண் பெண் நண்பர்களும் வந்து போவாங்க. அவ்வப்போது மரகஸ்னா அக்காவும் வருவாங்க. மரகஸ்னா அக்கா எங்கிட்ட சகஜமாக பேசி பழகுவாங்க. எப்பொவாவது போன்லையும் பேசி நலம் விசாரிப்பாங்க. போன வாரம் ஒரு ப்ரொடக்‌ஷன் மேனேஜரும், ஒரு ஐம்பது வயசு இருக்கும் ஒரு அம்மாவும் வந்திருந்தாங்க. அப்போது சுமார் ஒரு மணி நேரம் ஒரே சத்தமாக சண்டைப் போட்டார்கள். ஏதோ படம், தயாரிப்பு, கால்சீட், கையெழுத்து. சொத்து, ன்னு சில வார்த்தைகளையே என்னாலே கேட்க முடிஞ்சது. வேறு விவரம் புரியலை. அப்போது மரகஸ்னா அக்காவும் உடன் இருந்தாங்க. நடுவுலே மரகஸ்னா அக்காவுக்கும் அந்த அம்மாவுக்கும் ஒரு சின்ன கைகலப்பு கூட நடந்தது. அப்புறம் எல்லோரும் கோவமாக கிளம்பிப் போயிட்டாங்க. வில்வராஜ் சார் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே குடிச்சிட்டு உளறிகிட்டே இருந்தார். அப்புறம் நாலு நாள் முன்னாடி எனக்கு ஒரு போன் வந்தது. மரகஸ்னா அக்கா பண்ணினாங்க. திங்கள், செவ்வாய்க் கிழமை பண்ணைத் தோட்டத்தில் ஒரு பார்ட்டி நடக்கப் போறதாகவும், அப்போது நான் இருக்க வேண்டிய அவசியமில்லைன்னும், ‘நீ வேணுமின்னா உங்க ஊருக்கு போயிட்டு, ரெண்டு நாள் கழிச்சி வான்னும் சொல்லிட்டாங்க. நானும் லீவு கெடச்சிதுன்னு சந்தோஷமா கிளம்பீட்டேன். ஆனா திரும்பி வந்து பார்த்தா, வில்வ சார் கார் புல்டோசர் மேலே மோதி அவுரு இறந்துட்டதா சொன்னாங்க.’ என்று மல்மர் சொன்னான்.


‘ஆமா.. இந்த புல்டோசர் எப்பவுமே அந்த அந்த மெயின் கேட்டுக்கு பின்னாடிதானே நிக்கும்.. இது இந்த இடத்துக்கு எப்பிடி வந்தது?’


‘நான் ஊருக்கு கெளம்புன அன்னைக்கு மரகஸ்னா அக்கா சொன்னாங்கன்னு ஒரு ஆள் வந்து புல்டோசர இங்கே கொண்டு வந்து நிறுத்திட்டு போயிட்டாரு சார். ‘ஏன்?’னு கேட்டேன். ‘ரெண்டு நாளைக்கி பண்ணை வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க. அதனாலே பிரச்சினை இல்லே’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு சார். நான் கூட நெனச்சேன்.. மரகஸ்னா அக்கா பார்ட்டி இருக்குன்னாங்க. ஆனா இந்த ஆளு யாரும் வர மாட்டாங்கன்னு சொல்றாரேன்னு..’

‘வேற யாராவது வேற எப்பொவாவது வில்வராஜ் கூட சண்டை கிண்டை தகராறு அது இதுன்னு ஏதாவது நடக்குமா?’


‘அப்பிடியெல்லாம் இல்லே சார்.. ஆனா அப்பப்போ ஒரு போன் வரும் சார்.. இவுரு கார சாரமா ஏதோ சண்டை போல பேசுவாரு.. அந்த சைட்லே யாருன்னு தெரியலே சார்.. இவுரு ‘அம்மா’ ‘அம்மா’ ன்னு சொல்றமாதிரிதான் இருக்கும். ஆனா, பயங்கரமா சத்தம் கேட்கும்.. ‘இந்த பண்ணை வீடு உன் பேருலதாம்மா இருக்கு.. இதோட மதிப்பு ஆறு கோடி’ அப்பிடீன்னு ஒரு தடவை சொல்லிகிட்டிருந்தாருங்க சார்.’


‘சரி வா அப்பிடியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்று மல்மரை அழைத்துக் கொண்டு நித்தின் வலம் வந்தான். ‘இங்கே தான் சார்.. அந்த நாலு பேரும் சத்தம் போட்டு சண்டை போட்டுகிட்ட இடம்’ என்று ஒரு வெராண்டாவை காண்பித்தான் வேலையாள். அந்த இடத்தை சிறிது நேரம் ஆராய்ந்தான் நித்தின். ‘மினு.. மினு’ என்று இருந்த ஒரு பொருளை எடுத்து வைத்துக் கொண்டான்.


‘சரி.. நான் உனக்கு அப்பப்போ போன் பண்ணுவேன். நீ ரகசியமா எங்கிட்டே இங்கே யார் வந்தாலும், போனாலும், என்ன நடந்தாலும், எனக்கு தகவல் கொடுக்கணும்.. இல்லேன்னா உன்னை பிடிச்சி உள்ளே போட்ருவாங்க.. தெரிஞ்சிதா..’


‘சரி சார்.. எதுன்னாலும் சொல்றேன் சார்.’அடுத்த நாள் காலையில் நடிகை மரகஸ்னா வீட்டில் தன் விசாரணையை துவக்கினான் நித்தின்.


‘ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக்.. உங்களுக்கும் வில்வராஜுக்கும் எப்படிப்பட்ட உறவுன்னு..’


‘சார் நாங்க ரெண்டு பேரும் மனமாற விரும்பினோம். இந்த கொரானா முடிஞ்ச உடனே திருமணம் செய்துக்க முடிவெடுத்திருந்தோம். இது வில்வராஜின் சித்திக்கு பிடிக்கலே.. வில்வராஜை வளர்த்து ஆளாக்கினது அவங்கதான்.. அவங்களை ‘அம்மா’ன்னுதான் வில்வராஜ் கூப்பிடுவாரு. எல்லா சொத்தும் தன் பேருக்கு வரணுமின்னு எப்பவும் வில்வராஜ்கிட்டெ சண்டைதான். தனக்கு ரெண்டு படம் பண்ணி தரணுமின்னும் வற்புறுத்திகிட்டிருந்தாங்க. அதுக்கு அவங்க கூட இருந்த ப்ரொடக்‌ஷன் மேனேஜரையும் சப்போர்ர்ட்டா வெச்சிகிட்டாங்க. ஒரு வழியா அந்த பண்ணை வீட்டை அந்தம்மா பேருக்கு மாத்தி குடுத்துட்டாரு வில்வராஜ். அப்புறமும் அந்தம்மா அடங்கலை. எதுக்குன்னு தெரியலே சார். போன வாரம் நான் பேசின மாதிரி குரலை மாத்தி போன்லே பேசி பண்ணையாள் மல்மர்கிட்டே லீவுலே போக சொல்லிட்டாங்க. அதே போல அந்த புல்டோசர் ட்ரைவர்கிட்டையும் நான் பேசுற மாதிரி பேசி, புல்டோசரை இடம் மாத்தி நிறுத்தியிருக்காங்க. அப்புறம்தான் விபத்து ஏற்பட்டு வில்வராஜ் இறந்துட்டதா செய்தி வந்தது. அதுக்கப்புறமும், மல்மருக்கு போன் செய்து நான் பேசறது போல் யாரோ பேசி இருக்காங்க. அவரோட சித்தியை விசாரிச்சா எல்லா விஷயமும் வெளிலே வந்துரும் சார்.’ 

 


மதியம் இரண்டு மணிக்கு வில்வராஜின் சித்தி வீட்டிற்குள் நுழைந்தான் நித்தின். முதலில் பண்ணை வீட்டிற்கு தான் வந்ததே இல்லை என்று நாடகமாடிய அந்தப் பெண்மணி, நித்தின் பண்ணை வீட்டில் கண்டெடுத்த, அந்த அம்மாவின் பெயர் பதித்த மோதிரத்தைக் காண்பித்தவுடன் இறங்கி வந்தார். தனக்கும் வில்வராஜுக்கும் இருந்த சொத்துப் பிரச்சினைகளை ஒத்துக் கொண்டார். மரகஸ்னா பேசுவது போல் பேசி, பண்ணை வீட்டு வேலையாளை ஊருக்கு அனுப்பியதையும், புல்டோசரை இடம் மாற்றி நிறுத்தியதையும், யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று சொன்னதையும் ஒப்புக் கொண்டார். அப்படிச்செய்தால் மரகஸ்னாவின் மேல் சந்தேகம் வரும் என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார். சம்பவ தினத்தன்று, வில்வராஜை மிரட்டி சில வெற்றுத்தாள்களில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, கூலி ஆள் வைத்து விபத்து என்ற பெயரில் அவரின் கதையை முடித்து விட்டதையும் ஒத்துக் கொண்டார்.


அங்கிருந்தே, வில்வராஜின் சித்தியையும், அவரோடு இருந்தவரையும், மற்றும் மல்மரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான். அதோடு மரகஸ்னாவையும் வரச் சொல்லி விட்டான். அன்று மாலை ஐந்து மணிக்கு உயரதிகாரிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டான்.


உயரதிகாரிகளின் சந்திப்பு ஆரம்பமானது. வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் வெளி அறையில் காத்திருந்தனர். யாரையும் விட்டு வைக்காமல், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து உயரதிகாரிகள் விசாரித்தார்கள். உயரதிகாரிகள் நடத்திய, அவர்களின் பங்கிற்கான விசாரணைகளின் முடிவுகள், நித்தினின் உளவுத் திறனை பறைசாற்றி உறுதி செய்தது.


நித்தினைப் பாராட்டி விட்டு அதிகாரிகள் செல்ல, தன்னுடைய பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு வாகனத்தில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, டிடெக்டிவ் நித்தின் கிளம்பினான்.

Rate this content
Log in

Similar tamil story from Action