DEENADAYALAN N

Drama Horror Thriller

4.6  

DEENADAYALAN N

Drama Horror Thriller

பேய்களின் சாம்ராஜ்ஜியம்!!!கோவைஎன். தீனதயாளன்

பேய்களின் சாம்ராஜ்ஜியம்!!!கோவைஎன். தீனதயாளன்

7 mins
1.3K



 

அன்பு வாசகர்களே! வணக்கம்!


எனக்கு பேய்களின் மீது நம்பிக்கையில்லை. அதாவது பேய் என்று ஒன்று இருக்கும் என்று நம்பிக்கையில்லை! ஆனால் பேய் என்றால் பயம் உண்டு.


அதென்ன “நம்பிக்கையில்லை… ஆனால் பயம் உண்டு?”


இதை விளங்கிக் கொள்வதற்கு இன்னொரு உதாரணம்: என் மனைவியிடம் ‘ஒரு இடத்திற்கு போகிறேன்’ என்று (பொய்) சொல்லிவிட்டு, அந்த இடத்திற்குப் போகாமல், வேறொரு இடத்திற்குப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் செல்வதாக சொன்ன ‘இட’த்திற்கு அவள் வருவாள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் வந்து விடுவாளோ என்ற பயம் உண்டு.


என்ன? ஒன்றும் புரியவில்லையா..? இதுதான் பேய்க் குழப்பம் என்பது!


யாராவது ஒருவர் என்னுடன் வந்தால் போதும். நள்ளிரவு இரண்டு மணிக்குக் கூட சுடுகாட்டுக்குப் போய் புளிய மரத்தில் ஆனி அடித்து விட்டு வந்து விடுவேன். ஆனால் தனியாகப் போய் இரவு இரண்டு மணிக்கு இந்த காரியத்தை என்னை செய்யச் சொன்னால் சற்று யோசிப்பேன்!


ஏனெனில் எனக்கு பயம்!


என் இளம்பிராயம். சுமார் முப்பது வயது இருக்கும். திருமணமாகி ஆறு மாதந்தான் ஆகி இருந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள்.


வந்தனா தியேட்டரில் ‘எக்ஸார்ஸிஸ்ட்’ படம் போட்டிருந்தார்கள். பழைய ஆங்கிலப் படம். பேய்ப் படம். அந்த படத்திற்கு போக விருப்பம் இருந்தாலும் பயம்.


அந்த நேரம் பார்த்து, ‘தைரியம் இருந்தால் அந்த படத்திற்கு செகண்ட் ஷோ தனியாக போய் விட்டு வந்து ‘டிக்கட்’டைக் காட்டு பார்க்கலாம்’ என்று நண்பன் ஒருவன் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டி சவால் விட, என்னுள் ஒரு உத்வேகம் எழுந்தது. சவாலை ஏற்றுக் கொண்டேன்.


போதாக்குறைக்கு, விஷயத்தைக் கேள்விப்பட்ட என் மனைவி, ‘நீங்களா..? “எக்ஸார்ஸிஸ்ட்” படத்திற்கா..? இரவு இரண்டு மணி ஆட்டத்திற்கா..? தனியாகவா..? அம்போகர..!’ என்று அடுக்கடுக்காக கலாய்த்துத் தள்ள,. என் ரோஷம் இன்னும் பத்து டிகிரி கூடியது!


அந்த இரவும் வந்தது! ஒரு டார்ச், ஒரு தடி, கொஞ்சம் பொரி**, பிய்ந்த விளக்குமாறு**, பிய்ந்த செருப்பு** இவற்றை சேகரித்துக் கொண்டு என் சைக்கிளில் கிளம்பினேன்.


இங்கே கதையை சற்றே நிறுத்தி ** க்கான விவரங்களைப் பார்ப்போம்.


** விவரங்கள்

என் பாட்டி பேய்கள் பற்றி எனக்கு நிறைய சொல்லி இருக்கிறார். ஆனால் அவற்றை கதையாக சொல்லாமல் சம்பவங்களாகத்தான் சொல்வார். ஒரே ‘த்ரில்’லாக இருக்கும். அப்படி அவர் சொன்ன போது, பேய்களின் குணாதிசயங்களை பற்றியும் சொல்லி இருக்கிறார். அவற்றுள் சில..


நள்ளிரவில் தனியாக கும்மிருட்டில் வர நேர்ந்தால், பேய்கள் நம்மைத் தொடர்ந்து பின்னாலேயே வந்து கொண்டிருக்கும். பேய்களில் பல வகை இருக்கிறது. அந்த வகைக்கு ஏற்றவாறு நாம் சில செயல்களை செய்தால், அவை நம்மை தொந்தரவு செய்யாமல் போய் விட வாய்ப்புண்டு. அவையாவன:


‘ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..’ பேய்கள்:

சில பேய்கள் நம்மைப் பின் தொடர்ந்து வரும்போது ‘ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..’ என கொலுசு சத்தம் கேட்கும். அப்படி கொலுசு சத்தத்துடன் வந்தால் அவை பெரும்பாலும் பெண் பேயாகத்தான் இருக்கும். அவைகள் தங்களுடைய ஆசைகள் நிறைவேறாமல் ‘அகால’ செயற்கை மரணம் அடைந்திருக்கும். அவ்வாறு ‘ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..’ என கொலுசு சத்தத்துடன் வந்தால், அந்தப் பேய்களுக்கு ஒரு அரைப் படி பொரியை விட்டெறிந்து விட்டால், அவை ஆனந்தக் கூத்தாடி அந்தப் பொரியை ஒவ்வொன்றாக பொறுக்கி பொறுக்கி சாப்பிட ஆரம்பித்து விடும். அந்த ஆனந்தத்தில் நம்மைத் தொடர்ந்து வருவதை மறந்து விடும். அதைப் பயன் படுத்திக் கொண்டு நாம் வேகமாக ஓட்டமெடுத்து விடலாம். ‘சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்..’ பேய்கள்:

இன்னொரு வகைப் பேய் இருக்கிறது. அது நம்மைப் பின் தொடர்ந்து வரும்போது ‘சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்..’ என சத்தம் கேட்கும். அந்த சத்தம் டயர்களால் செய்த செருப்புகளில் இருந்து வருவதைப் போல இருக்கும். அப்படி சத்தம் வந்தால் அவை பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண் பேயாகத்தான் இருக்கும். அவைகள் சாகும்போது தங்களுடைய ‘வைப்பாட்டிகளை’ விட்டுப் பிரிய வேண்டிய நிலையில் இருந்திருக்கும். அதனால் அந்த ஆத்மாக்கள் சாந்தி அடையாமல் ஆவிகளாகவும் பேய்களாகவும் அல்லாடிக் கொண்டிருக்கும். எப்போதும் கடுமையான ஆக்ரோஷத்துடன் அலைந்து கொண்டே இருக்கும். பெண்களைக் கண்டால் ‘ஓ..’ வென்று குரலெடுத்து, கர்ணகடூரமாக ஒப்பாரி வைத்து பாட ஆரம்பித்து விடும்

 அந்தப் ஒப்பாரி இப்படி இருக்கும்..

  ‘என்

வெப்பாட்டி சக்களத்தி  வெப்பாட்டி சக்களத்தி

 

  உன்னெ

  நிப்பாட்டி கேக்குறன் நான்

  நிப்பாட்டி கேக்குறன் நான்


  பொண்ணே 

  தீப்பெட்டி வச்சு உன்னெ

  கொளுத்தாமெ விட்டுருவேன்


  அடியே

  கருப்பட்டி சீனி போல

  கண்ணாக வெச்சிக்குவேன்


  என்

  வெப்பாட்டி பொம்பளைய

  எங்காச்சும் பாத்தையாநீ

  …  ….  ….


இப்படிப் போகும் ஒப்பாரி!


ஆண்களைக் கண்டால் அவ்வளவுதான்.. அவர்களை வெளுத்து வாங்கி ஏறி மிதித்து விடும். அப்பேற்பட்ட - ‘சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. புர்ர்ர்ரக்..’ என டயர் செருப்புகளின் சத்தத்துடன் வந்தால் - பிய்ந்த செருப்பு ஒன்றைத் தூக்கி, அந்தப் பேய்களைத் தாண்டி போகும்படி, எவ்வளவு தூரம் வீச முடியுமோ அவ்வளவு தூரத்தில் வீசி எறிந்து விட வேண்டும். அந்த செருப்புகள் அவற்றின் மீது பட வேண்டிய அவசியமில்லை. உடனே அவை ‘அgggக்கோ…’ என அந்த செருப்புகளை நோக்கி பாய்ந்து ஓடும் அந்த சமயத்தை பயன் படுத்திக் கொண்டு நாம் அங்கிருந்து பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்து விட வேண்டும்.


‘ஆ.. அ.. அ.. ஆ.. அ.. அ.. ஆ.. ஆ……அ ஹம்மிங்’ பேய்கள்:

அடுத்த வகைப் பேய் விசித்திரமானது. அது நம்மைப் பின் தொடர்ந்து வரும்போது ‘ஆ.. அ.. அ.. ஆ.. அ.. அ.. ஆ.. ஆ……அ’ என ஏறத்தாழ ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ட்யூனில், முதலில் வரும் ‘ஹம்மிங்’கை ஹம் செய்து கொண்டே பின்னால் வந்து கொண்டே இருக்கும். திரும்பிப் பார்த்தால் அவ்வளவுதான். ஒரே போடாக நம் கழுத்தில் போட்டு விடும்! இந்த வகைப் பேய்கள், பதினாறு முதல் பத்தொன்பது வயதுக்குள் நிராசையுடன் மரணம் அடைந்திருக்கும் பருவப்பெண் பேயாகத்தான் இருக்கும். அவைகள் சாகும்போது நிராசையாக இறந்து விடுவதால் தங்கள் தாபங்களைத் தணித்துக் கொள்ள தவியாய்த் தவிக்கும். அதிலும் அந்தப் பேய்களுக்கு காதலன் இருந்து அவன் ஏமாற்றி விட்டுப் போய் இருந்தால் அவைகளின் ஆக்ரோஷம் எப்போதும் உச்சகட்டத்தில் இருக்கும். வசீகரமான ஆண்களைக் கண்டால் அவ்வளவுதான். பிடறியில் ஓங்கி ஒரு சாத்து சாத்தி அந்த ஆளை அப்படியே சின்னபின்னமாக்கி விடும். பதின்பருவப் பெண்களைப் பார்த்தால் பொறாமையால் அவர்களை அடித்துப் போட்டு பந்தாடி விடும். அத்தகைய ‘ஆ.. அ.. அ.. ஆ.. அ.. அ.. ஆ.. ஆ……அ ஹம்மிங்’ பேய்கள் வந்தால் - பிய்ந்த விளக்குமாற்றை அவற்றின் மீது பலம் கொண்ட மட்டும் விட்டெறிந்து விட வேண்டும். அந்த பிய்ந்த விளக்குமாற்றின் ஒவ்வொரு ஈர் குச்சியும் ஆங்காங்கே பரவிச் சிதறி விழும்படி வீசி விட வேண்டும். உடனே அவை ‘ஓ… ‘ என ஒப்பாரி வைத்துக் கொண்டு ஒவ்வொரு குச்சியாக பொறுக்கி எடுத்து அவைகளை அடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தை பயன் படுத்திக் கொண்டு நாம் அங்கிருந்து தலைகால் தெரிக்கும்படி ஓட்டம் எடுத்து விட வேண்டும்.

இப்படி என் பாட்டி எனக்கு இன்னும் பல வகையான பேய்களின் குணாதிசயங்களை சொல்லி இருக்கிறது. அவற்றை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.




இப்போது கதையை விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்!


இப்படி டார்ச், தடி, பொரி, பிய்ந்த விளக்குமாறு, பிய்ந்த செருப்பு இவற்றை எடுத்துக் கொண்டு என் சைக்கிளில் கிளம்பினேன் அல்லவா..


சரியாக பத்து மணிக்கு வந்தனா தியேட்டரில் இருந்தேன். இரவுக் காட்சி என்பதாலோ என்னவோ கூட்டம் சற்று குறைவுதான். சைக்கிளை, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி ‘டோக்கன்’ வாங்கிக் கொண்டு, டிக்கட் கவுண்டரை நோக்கி நடந்தேன். நீளமான வெள்ளை தாடியை வைத்துக் கொண்டு, கண்கள் கோவைப் பழம் போல் மின்ன, பெரியவர் ஒருவர் கவுண்டரில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே ஏதோ ஒரு அமானுஷ்ய மனிதரைப் போல் இருந்தது.


‘என்னப்பா.. இந்தப் படத்தைப் பார்க்க ராத்திரி ரெண்டாவது ஆட்டத்துக்கு தைரியமா வந்திருக்கே..’ என்று முகத்தை உற்றுப் பார்த்தார்.


‘ஏன் .. ராத்திரி ரெண்டாவது ஆட்டத்துக்கு வரக்கூடாதா.. ?’


‘வரலாம்.. ஆனா…’ என இழுத்தார்.


பிறகு, ‘ஆமா.. தனீ..யாவா வந்தே..!’ என்று தொடர்ந்தார்.


‘ஆமா தனீ…யாதான்… ஏன் தனியா வரக்கூடாதா…?’


‘வரலாம்.. ஆனா..’ என்று மறுபடியும் இழுத்தார்.


பின், ‘படம் முடிய ராத்திரி ஒன்னரை மணிக்கு மேலே ஆயிடும் தெரியும்ல…’ என்றார்.


‘ஏன்.. ஒன்னரை மணிக்கு மேலே ஆனா என்ன..?’


‘ஆகலாம்.. ஆனா..’ என்று இழுத்து விட்டு ‘ சரி.. போ..’ என்று முடித்துக் கொண்டார்.


அவருடைய ஒவ்வொரு கேள்வியும் உள்ளூர எனக்கு உதறல் கொடுத்தாலும், ஏதோ அவரிடம் வீராவேசமாக பேசி விட்டேன்.


ஐநூறு பேர் அமரக்கூடிய அந்த தியேட்டரில் சுமார் ஐம்பது இருக்கைகளில்தான் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்.


அதுவே ஒரு மயான அமைதியாகத்தான் இருந்தது. ‘வந்து மாட்டிக் கொண்டோமோ’ என்று ஒரு கிலி தொற்றிக் கொண்டது.


செய்தி, விளம்பரம் முடிந்து ஒரு வழியாக பதினோரு மணிக்கு படம் துவங்கியது. ‘பின் ட்ராப் சைலன்ஸ்’ என்பார்களே.. அப்படி படம் ஓடிக் கொண்டிருந்தது. பெரும்பாலான நேரங்களில் நான் நடுநடுங்கி கண்களை மூடிக்கொண்டேன். இருந்தாலும் சில காட்சிகள் நெஞ்சின் படபடப்பை நிகரில்லாமல் எகிறச் செய்தன. சில சமயம் பயத்தில் அழுகையே வந்து விட்டது.


அதிலும் அந்த கட்டில் குலுங்கும் காட்சியில் வந்திருந்த அத்தனை ஜனங்களும் ‘ஓ..’ வென்று அலறியதில் ஒரு சத்தம் மட்டும் வித்தியாசமாக கேட்டது.


இடைவேளை வந்தது. டீ-காபிக்கு கூட யாரும் எழுந்திருக்கவில்லை. ‘ஒன்று’க்கு கூட போகாமல், இருக்கையிலேயே ஆடாமல் அசையாமல் ஆனி வைத்து அடித்தது போல அமர்ந்திருந்தார்கள்.


தனித்து ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தவர்களெல்லாம், நைசாக, ஜனங்கள் கும்பலாக இருந்த இடங்களுக்கு மாறிக் கொண்டார்கள்.


மீண்டும் படம் தொடங்கி நள்ளிரவு 1.30க்கு முடிந்தது. நெஞ்சு முழுக்க பயத்துடன் வெளியில் வந்தேன். என் சைக்கிள் மட்டும் அனாதையாகக் கீழே விழுந்து கிடந்தது. மற்றவர்களெல்லாம் அசுர வேகத்தில் ஓடி விட்டிருந்தார்கள்.


சைக்கிளை எடுத்துக் கொண்டு கும்மிருட்டில் வெளியில் வந்தேன். ஒரு ஆள் கூட அருகில் காணவில்லை. மேலும் பயம் கவ்வ, சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினேன்.


ஒரு வண்டிப் பாதை இருந்தது. அதில் போனால் அரை மணி நேரம் முன்னதாகவே போய் விடலாம். அந்த வழியாக போய் விடலாமா என்று நினைத்த மாத்திரத்தில், என் சைக்கிள், யாரோ பிடித்துத் தள்ளியது போல் வண்டிப் பாதையில் இறங்கி ஓடத் தொடங்கியது.


விஸ்ஸ்… என்று ஊதல் காற்று வீசிக் கொண்டிருந்தது. லேசான மழைத் தூரல் வேறு ஆரம்பித்தது. இருமருங்கும் செடி கொடிகளிலிருந்து ‘சர.. சர..’ என்று சத்தம் வந்து கொண்டிருந்தது. ‘பாம்பு கீம்பு இருக்குமோ..’ மனம் படபடத்தது.


திடிரென பத்தடிக்கு முன்னால் ஏதோ வெள்ளையாக ஒன்று குறுக்கே ஓடியது. அனேகமாக முயலாக இருக்கலாமோ.. ஆனால் இங்கு பகலில் முயலெல்லாம் பார்த்ததில்லையே.. குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே ‘பெடலை’ முடிந்த வரை அமுக்கினேன்.. ஊஹும்.. பாதையில் நிறைய மேடுபள்ளம் இருந்ததால் சைக்கிள் முரண்டு பிடித்தது.


சைக்கிளிலிருந்து, செயின் சத்தமா, பெடல் சத்தமா, ஹேன்டில் பார் சத்தமா தெரியவில்லை. ‘கிர்ர்ர்ர்.. ரிச்… கிர்ர்ர்… ரிச்’ என்று சத்தம் எழுப்பி ஒரு வித பயத்தை உண்டு பண்ணியது. ஏனடா இந்தப் பாதையில் வந்தோம் என்று பயம் தொற்றிக் கொண்டு விட்டது.


இது போதாதென்று திரையில் பார்த்த அத்தனை பயங்கரமான காட்சிகளும் என் கண் முன்னாடி வந்து வந்து போய்க் கொண்டே இருந்தன. வடுக்களும் வெடிப்புக்களும் நிறைந்து முகம் முழுக்க ரத்த விளாருடன் வரும் அந்த பெண்ணின் முகம் வேறு அடிக்கடி தோன்றி என் ரத்தக் கொதிப்பை உயர்த்தி நெஞ்சை வெடிக்கச் செய்து விடும் போல் இருந்தது.


திரும்பிப் போய் விடலாமா என்று திரும்பி வந்த திசையைப் பார்த்தேன். ‘பகீர்’ என்றது தொலை..வா..ன தூ..ரத்தில், ஒரு உருவம் அசைந்து அசைந்து வருவது போல் தோன்றியது. ‘வடு-வெடிப்பு-ரத்த-விளார்’ பெண்ணின் முகம் ‘பளிச் பளிச்’ என்று மின்னல் போல் தோன்றி தோன்றி மறைந்து மறைந்து ‘லப்டப்’பை எகிறச் செய்தது கொண்டிருந்தது.


இனி திரும்பக்கூடாது என்று முடிவு செய்து சைக்கிள் ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த பொருள்கள் அடங்கிய பையை ஒரு தடவை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். முடிந்த வரை வேகமாக ஓட்டினேன்.


திடீரென யாரோ பிடித்துத் தள்ளியது போல் இருந்தது. ‘தொபுக்கடீரென’ கீழே விழுந்தேன். இடையில் வந்த ஒரு பள்ளத்தால் விழுந்தேனா அல்லது ஏதோ ஒரு உருவம் பிடித்து தள்ளி விட்டு விழுந்தேனா தெரியவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டு மீண்டும் சைக்கிளில் ஏறி அமுக்கினால் ‘பொடக்’ என்று சைக்கிள் செயின் கழன்று விட்டது.


நின்று செயினைப் போடுவதற்கு உடம்பில் தெம்போ மனதில் தைரியமோ இல்லை. எப்படியாவது அந்த இடத்தை விட்டு ‘ஒரே ஓட்டமாக ஓடி விடு’ என்று மனசு துரத்தியது.


திரும்பிப் பார்த்தால் சுமார் இருநூறு மீட்டருக்கு அப்பால் மீண்டும் அந்த உருவம்…! (‘வடு-வெடிப்பு-ரத்த-விளார்-முகம்..’ பளிச்!) அவசர அவசரமாக நான் கொண்டு வந்திருந்த பிய்ந்த செருப்பை அதை நோக்கி வீசி எறிந்தேன். பின் திரும்பிப் பார்க்காமல் சைக்கிளை இழுத்துக் கொண்டு ஓடினேன்.


ஐந்து நிமிடத்தில் எல்லாம் அடங்கி ஆழ்கடல் இருள் போல் இருந்தது. நைசாக திரும்பிப் பார்த்தால்.. அந்த உருவம் இன்னும் வேக வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

 

பதற்றம் தொற்றிக் கொள்ள ‘மளமள’வென்று பிய்ந்த விளக்குமாற்றை தூக்கி - உருவத்தைக் குறிப்பாக பார்க்காமல்- முடிந்த மட்டும் பலத்தைத் திரட்டிக் கொண்டு வீசி எறிந்தேன். ஏதோ ஒரு விசித்திரமான சத்தம் எழுந்து அடங்கியது.


பிறகு ‘ரிஸ்க்’ வேண்டாம் என்று பொரியையும் எடுத்து – திரும்பிக் கூட பார்க்காமல் - தூக்கி எறிந்து விட்டு சைக்கிளை இழுத்துக் கொண்டு இன்னும் வேகமாக ஓட்டம் பிடித்தேன்.


அதன் பிறகு திரும்பிப் பார்க்கவேயில்லை!


ஒரு வழியாக வண்டிப்பாதை முடிந்து பிரதான சாலை வந்தது. சைக்கிளை நிறுத்தி அவசர அவசரமாக ‘செயினை’ மாட்டினேன். பிடித்தேன் ஓட்டம். எப்போது.. எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை.


‘டபடப’ என்று கதவைத் தட்டினேன். பல முறை தட்டியும் கதவு திறக்கப் படவில்லை. எனக்கு நடுக்கம் அதிகமானது. மீண்டும் ‘டமடம’ என்று தட்ட.. ‘பட்டக்’ என்று கதவு திறக்கப்பட்டது!


அங்கே… (‘வடு-வெடிப்பு-ரத்த-விளார்-முகம்..’ பளிச்!)


என் மனைவிதான் நின்று கொண்டிருந்தாள்!


எங்கே எப்படிப் படுத்தேன்.. எப்படி எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியாது.


அடுத்த நாள் ‘டிக்கட்’டை எடுத்துக் கொண்டு என் நண்பனைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போனேன்.


அவன் 101 டிகிரி ஜுரத்தில் படுத்து ‘பினா’த்திக் கொண்டிருந்தான்.


எனக்கு ஜுரம் வந்து நான் ‘பினா’த்திக் கொண்டிருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. இதென்ன இவன்…?


‘இப்பொதாண்ணா மசூதிக்குப் போய் மந்திரித்துக் கொண்டு வந்தோம்.. ராத்திரி எங்கோ போய் பயந்து விழுந்தடிச்சி ஓடி வந்திருக்காரு. கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாரு. ‘பேந்தப் பேந்த’ முழிக்கிறாரு.’ நண்பனின் மனைவி அழாத குறையாக புலம்பினார்.


ஒரு வழியாக நண்பனைத் தேற்றி, விஷயத்தைக் கேட்ட போது தெரிய வந்த தகவல்கள்:

நேற்று இரவு நான் போன அதே படத்திற்கு, நண்பனும் வந்திருக்கிறான் – படம் முடிந்த போது பயம் தொற்றிக் கொண்டது – திரும்பி வர யாரும் துணை இல்லாமல் போனது – திரும்பி வரும்போது வண்டிப் பாதை வழியாக வந்தது – அப்போது தன்னிலிருந்து சற்றே நெடுந்தொலைவுக்கு முன்னால், ஒரு கரு கரு உருவம், விசித்திரமான குட்டிச்சாத்தானைப் போன்ற ஏதோ ஒன்றை இழுத்துக் கொண்டு, போய்க் கொண்டிருந்தது – அது அவ்வப்போது திரும்பிப் பார்த்து, தன் மீது செருப்பு, விளக்குமாறு, பொரி என கைக்கு கிடைத்ததையெல்லாம் விட்டெரிந்தது – பின் திடீரென அந்த உருவம் மறைந்து போனது – பின், ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தது – என்று பல விவரங்களை நண்பன் சொல்ல சொல்ல எனக்கு எல்லாம் புரிந்தது.


உங்களுக்கும் எல்லாம் புரிந்திருக்கும்தானே!


சினிமாப் பட டிக்கட்டை எடுத்து நீட்டினேன். திரு திரு என்று விழித்தான் நண்பன்!



Rate this content
Log in

Similar tamil story from Drama