STORYMIRROR

Durga Chidambaram

Drama Horror Thriller

5.0  

Durga Chidambaram

Drama Horror Thriller

நிழலாய் தொடர்வேன்....

நிழலாய் தொடர்வேன்....

60 mins
2.1K


நிழல் 1


மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை. நள்ளிரவு பன்னிரண்டு மணி. டிரைவரை மட்டும் சுமந்து கொண்டிருந்த அந்த இன்னோவா கார் 'சோலை குறிச்சி' என்றப் பச்சை நிறப் பெயர்ப்பலகையைத் தாண்டி 120-இல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.


தூரத்தில் ஒரு உருவம் போல தெரிந்தது. சற்று வேகத்தைக் குறைத்து அதை நெருங்க நெருங்க டிரைவர் கண்டது ஒரு இளம் பெண். வயது இருபது முதல் இருபத்து ஐந்திற்குள் இருக்கலாம். முகத்தில் இருந்த பொலிவிற்கும் அவளது கந்தலான, சற்றே கிழிந்திருந்த உடைகளுக்கும் சம்பந்தமே இல்லை. தரையைத் தொடும் அளவு நீண்ட ஸ்கர்ட் மற்றும் சற்றுத் தொள தொளவென சட்டையும் அணிந்திருந்தாள்.

தலை பல நாட்களாக வாரப்படாதது போல இருந்தது அவள் தோற்றம்.


இன்னும் நெருங்கிய பொழுது அவள் காரை மறிக்கிறாள் என்று தெரிந்தது. 'ஏதோ பைத்தியக்கார பொண்ணு போல இருக்கு..பாவம்...' என்று எண்ணிய டிரைவர் வண்டியைச் சற்று வளைத்து அவளைக் கடந்து சென்றான்.


சிறிது தூரத்திற்குச் சென்ற பின் திரும்பிப் பார்த்தால் அவள் அங்கு இல்லை.


ஊர் எல்லையை நெருங்கிய நேரம் கார் சடாரென நின்று போனது. என்ன செய்தும் காரைக் கிளப்ப முடியவில்லை. நொந்து போன டிரைவர் தண்ணீர் குடிக்கலாம் எனத் தண்ணீர் பாட்டில்-ஐ எடுத்தான். தண்ணீர் இல்லை. இரவு சாப்பிடாததால் வயிறு வேறு பசித்தது.


என்ன செய்யலாம் என்று சுற்றி முற்றி பார்த்தான். வயல் வெளிகளுக்கும் தென்னந்தோப்புக்கும் நடுவே ஒரு பெரிய பங்களா. சுற்றிலும் வேறு எந்த வீடோ ஆள் நடமாட்டமோ இருந்ததாகத் தெரியவில்லை.


இந்த மாதிரி பெரிய வீடுகளில் இரவுக்குக் காவலுக்கு யாரேனும் இருப்பார்கள். அவரிடம் உதவி கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே வயல் வெளி வழியே நடந்தான். யாரோ தொடர்வது போல இருந்தது.


திரும்பிப் பார்த்தால் நிலா வெளிச்சத்தில் அவனது நிழல் மட்டுமே தெரிந்தது. ஒன்றும் இல்லை என்று மனதில் சொல்லிக் கொண்டு வீட்டை நெருங்கினான்.


வீட்டின் வெளியே யாரும் இல்லை. வீட்டிலும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு கவனிக்கப்படாமல் விட்டு, சற்று பாழடைந்து இருந்தது. வந்தது வந்தாயிற்று எதற்கும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டு அந்தப் பெரிய கேட்-ஐத் திறந்தான். அது "கிரீரீரீரீரீரீீச்..." என்ற சத்தத்துடன் இரண்டாய்ப் பிளந்து அவனுக்கு வழி விட்டது.


உள்ளே சென்றவனை, பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே வளர்ந்து கிடந்த மரங்களும், செடிகளும், நீண்ட புற்களும் நிறைந்த தோட்டம் வரவேற்றது. அங்கேயே நின்று "சார்... சார்... யாராச்சு இருக்கீங்களா..." என்று குரல் கொடுத்தான்.


சிறிது நேரம் எதுவும் ஓசை இல்லை. சில நிமிடங்கள் கழித்து "யார் அது?.. என்ன வேணும்?" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது. நிம்மதி பாதியும் சந்தேகம் மீதியுமாய் மெல்ல வீட்டை நெருங்கினான்.


கதவருகில் வந்து "மேடம் என் கார் வழில நின்னு போச்சு என்ன செஞ்சும் கிளப்ப முடியல. காலைல தான் மெக்கானிக்க கூப்டு பாக்கணும்.. பசி வேற, வீட்ல எதாவது சாப்பிட இருக்குமா? இல்லனா கொஞ்சம் தண்ணி மட்டும் கூட போதும்" என்றான். "சரி உள்ள வாங்க.. கதவு திறந்து தான் இருக்கு" என்றது அதே பெண் குரல்.


ஏதோ நெருட மெதுவாகக் கதவைத் தள்ளினான். கதவு வழியே வந்த நிலவொளியைத் தவிர வேறு வெளிச்சம் இல்லாமல் வீடு இருட்டாக இருந்தது. பாக்கெட்டில் இருந்து எடுத்த அலைபேசியின் குறுவெளிச்சத்தில் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.


"இந்தா தண்ணீ...." என்று தண்ணீர்க் குவளையை ஒரு கை அவன் பின்னே இருந்து நீட்டியது. கைகளைக் கண்டான். ரத்தம் இன்றி வெளிறிப் போய் ஆங்காங்கே காயங்களுடன் கூர் நகங்களுடன் கோரமாக இருந்தது. 


சட்டென்று அலைபேசியின் வெளிச்சத்தை அவள் முகத்தில் பரப்பினான். அவள் தான்... அவளே தான்.. ஊருக்குள் நுழையும் போது அவன் காரை மறித்த அதே 'அவள்'..!!


முகம் மிக அருகில் பார்க்கக் கோரமாக இருந்தது. வெறியில் ரத்தம் போல் சிவந்து மின்னிய கண்கள், கூரிய மூக்கு, கறை படிந்த பற்கள் தெரியக் காய்ந்த உதடுகளில் ஒரு வெற்றிச் சிரிப்பு.


அதிர்ச்சியில் ஆடிப்போனான். "நீ.. நீ.." அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. உதடும் நாவும் தந்தி அடித்தது. உடல் முழுதும் வியர்த்துப் போனது.


"நீ இங்க வருவன்னு எனக்கு அப்போவே தெரியும்" என்று கூறி அவள் கோரமாகச் சிரித்தாள். மிகவும் கடினப்பட்டு வார்த்தைகளைத் திரட்டி, "நீ அந்த எல்லையில இருந்து இங்க இவ்ளோ சீக்ரம்.. கார்ல வந்த எனக்கு முன்னாடியே.. எப்படி வந்த" என்று கேட்டான்.


"ஹா ஹா ஹா... நான் எங்க உனக்கு முன்னாடி வந்தேன்? உன் கூடவே தானே வந்தேன்.. உன் நிழல் மாதிரி" என்று கூறி மீண்டும் கோரமாகச் சிரித்தாள். அதற்குமேல் அங்கு எந்தச் சத்தமும் இல்லை, அந்த டிரைவரின் அலறலைத் தவிர!!


காலையில் ஊர் மக்களும் போலீஸும் கண்டது அந்த டிரைவர் அவன் வண்டியின் பின் இருக்கையில் பிணமாய்க் கிடந்ததைத் தான். அவன் கண்களில் ஏதோ பயங்கரத்தைக் கண்ட அதிர்ச்சி. வாய் பிளந்து, இல்லை இல்லை பிளக்கப் பட்டு இருந்தது. உடல் வெளிறி போய் இருந்தது.


மற்றபடி உடலில் எந்த வித காயமோ, ஏன் சிறு கீறல் கூட இல்லை. காரிலோ உடலிலோ அவனைத் தவிர வேற யாருடைய கை ரேகையோ வேறு எந்தத் தடையமோ இல்லை.


அந்த வருடத்தில் இது ஐந்தாவது சம்பவம். ஆம் இதே போல் சாவுகள் அந்த ஊரில் ஏற்கனவே நடந்து இருந்தது. ஆனால் இது வரை காரணமோ தடையமோ இல்லை.


"எல்லாம் அந்த பெரிய வீட்டு பேய் வேலை தான்", "காட்டேரி ரத்தம் குடிச்சருக்கு அதான் இப்டி இருக்கு உடம்பு", "இதே மாதிரி தான நம்ம வண்டிக்காரன் பாண்டி பொண்ணும் செத்து கிடந்துச்சு", "இதுக்கு முன்னாடி செத்த நாலு பேரு பொணமும் இப்டித்தான இருந்துச்சு" என்று ஆங்காங்கே ஊர் மக்களிடம் சலசலப்புச் சத்தம்.


பிரேத பரிசோதனை அறிக்கையும் குழப்பமாகவே இருந்தது. ஏதோ அதிர்ச்சியில் மாரடைப்பு வந்ததாகவும், மேலும் உடம்பில் ரத்தம் சுத்தமாக ஒரு சொட்டு கூட இல்லை என்பதுவுமே அந்த அறிக்கையின் சுருக்கம். போலீஸும் மருத்துவர்களும் குழம்பினர்.


நிழல் 2


இப்போ நம்ம ஹீரோயின்ஸ் இன்ட்ரொடக்ஷன். சாரி சாரி... நம்ம கதைல ஒரே ஹீரோயின் தான். அவங்கள போன எபிசோட்லயே இன்ட்ரொட்யூஸ் பண்ணியாச்சு. இப்போ சும்மா சப்போர்ட்டிங் கேரக்ட்டர்ஸ் பத்தி பாப்போம்..


லட்சுமி @ லட்சு - வயது 23. சென்ற வருடம் கணினியியல் பொறியியலில் முதுகலை முடித்துத் தற்போது மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரைவாளராகப் பணியாற்றுகிறாள். ஒரு வருடம் முன்பே இவளுக்கு இவளது மாமா மகன் விஷ்ணு-வைத் திருமணம் முடிக்க உறுதி செய்து விட்டனர். இன்னும் ஒரு வருடம் கழித்துத் தான் திருமணம் வைக்க வேண்டும் என்று ஜோசியர் ஸ்ட்ரிக்டாகக் கூறி விட்டதால் தற்போது மதுரையில் ஜாலியாகப் பறந்து கொண்டிருக்கும் ஜோடிப் புறாக்கள் இவர்கள். இவர்களது குடும்பங்கள் தற்போது மதுரையில் வசித்தாலும் இவர்கள் சொந்த ஊர் சோலை குறிச்சி கிராமம்.


வெண்ணிலா @ நிலா - வயது 23.சென்ற வருடம் MCA முடித்து இந்த வருடம் IT உலகில் அடி எடுத்து வைத்திருக்கிறாள். மதுரையில் உள்ள பிரபல IT நிறுவனத்தில் டெவலப்பராகத் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறாள். தன் உயிர்த் தோழியின் அண்ணன் சூர்யா-வை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகிறாள். அவனும் தான்.


சக்தி @ சகி - வயது அதே 23 தான். நடராஜன் - பத்மாவதி தம்பதியரின் கடைக் குட்டி. சூர்யாவின் ஆசைத் தங்கை. நடராஜனுக்குச் சிறு வயதில் இருந்தே காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆசை, அது முடியாமல் போகவே மதுரையில் சொந்தமாக ஒரு பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.


சகி, தான் எதற்குப் பொறியியல் இளங்கலை படித்தோம் என்றே தெரியாமல் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டுப் படித்து, பெற்றோரையும் ஆசிரியர்களையும் பாடாய்ப் படுத்தி, எப்படியோ தேர்ச்சி பெற்று, அதன் பிறகு படிப்பிற்குச் சம்பந்தமே இல்லாத ஆனால் தனக்குப் பிடித்த பத்திரிக்கைத் துறை சார்ந்த படிப்பை (Journalism) படித்து இப்போது 'உங்கள் தமிழகம்' என்ற வாரப் பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராகச் செய்திகளைச் சேகரித்துக் கொண்டு இருக்கிறாள். "சிங்கள் டா கெத்து டா" என்று பீற்றிக் கொண்டு சுற்றும் கூட்டத்தைச் சேர்ந்தவள் இவள்.


'நந்தவனம்' - மதுரையின் முக்கிய இடத்தில உள்ள தனித் தனி வீடுகள் கொண்ட குடியிருப்பு. லட்சு, நிலா, சகியின் கோட்டை. இம்மூவரும் பள்ளி மற்றும் கல்லூரி இளங்கலை ஒன்றாய்ப் பயின்ற உயிர்த் தோழிகள். மூவரின் வீடுகளும் ஒரே குடியிருப்பில் இருப்பதால் வேலை நேரம், காதல் நேரம் போகச் சேர்ந்தே சுற்றுவர். சிறு வயதிலிருந்தே இவர்கள் அந்தக் குடியிருப்பின் தொல்லைகளாகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தனர்.


மூவருமே அடிப்படையில் குறும்பு தான் என்றாலும், சற்று வேறுபாடு இருக்கும். லட்சு வீட்டில் ரொம்ப அமைதி, பெற்றோர் சொல்படி நடப்பவள். தன் இரு தோழிகளிடமும் காதலனிடமும் மட்டுமே வாய் இருக்கும். நிலா, வீட்டிலும், தோழிகளிடமும், காதலனுடனும் வாய் பேசுவளே தவிர வெளியில் பயங்கர அமைதி. சகிக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாரபட்சமே கிடையாது. எல்லோரையும் ஒரு வழி செய்து விடுவாள். இவர்கள் என்னதான் படுத்தினாலும் எல்லோர் மீதும் அன்பாய் அக்கறையாய் நடந்து கொள்வதால், எல்லாருக்கும் செல்லப் பிள்ளைகள்.


"ஆண்ட்டி சகி இருக்காளா? ஃபோன் பண்ணேன் எடுக்கவே இல்ல" என்றபடி நிலா சகியின் வீட்டினுள் நுழைந்தாள். "வா நிலா. அது எதோ ஆர்ட்டிகிள் எழுதுறேன்னு நையிட்டெல்லாம் உருட்டிட்டு இப்போ இவ்ளோ நேரம் தூங்குது. நானும் காலைல எட்டு மணில இருந்து எழுப்புறேன் மணி ஒம்போதரை ஆகுது இன்னும் எந்திச்ச பாடில்ல. நீ போய் எழுப்பி அவள எங்கயாச்சு ஓட்டிட்டு போ. அப்போதான் எனக்கு நிம்மதி" என்று புலம்பித் தள்ளினாள் பத்மா. நிலா சிரித்துக் கொண்டே சகியின் அறையினுள் நுழைந்தாள்.


படுக்கையில் ஆங்காங்கே செய்தித் தாள்களும் புத்தகங்களும் சிதறிக் கிடக்க, அதற்கு நடுவில் தூங்கிக் கொண்டிருந்தாள் சகி. அவளுக்கு மறுபடியும் அலைபேசி மூலமாக அழைத்தாள் நிலா. தளபதி படத்தில் வரும் நட்பு பாடல் ஒலிக்க, சகி லேசாகக் கண் விழித்துத் தன் அலைபேசியின் திரையைப் பார்த்தாள்.


அது நிலா என்ற பெயரோடு நிலாவும் சகியும் சேர்ந்து இருந்த புகைப்படத்தைக் காட்டி மின்னியது. "இவ ஒருத்தி, காலங்காத்தால.. லூசு" என்று அதை சைலன்ட்-இல் போட்டு விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.


இதைக் கண்டு கடுப்பான நிலா, அவள் கையில் நறுக்கென்று கிள்ளினாள். "ஆஆஆஆஆஆ" என்று கத்திக்கொண்டு எழுந்த சகி நிலாவைப் பார்த்து முறைத்துப் பின் மீண்டும் படுத்தாள்.


"அடியே எந்திரிடி. காலைல இருந்து உனக்கு எவ்ளோ தடவ ஃபோன் பண்றேன். சீக்ரம் கிளம்பு பதினோறு மணிக்கு ஷோ.. அதுக்குள்ள போகணும் ப்ளீஸ் டி" என்று கத்தலில் ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தாள் நிலா.


"சரி சரி அழாத.. ஒரு பதினஞ்சு நிமிஷம் உன் ஆளு கூட போய் கடல போட்டுட்டு இரு, நான் கெளம்பி வந்துர்றேன்" என்று சற்று தயவு காட்டினாள் சகி. "அவர்லாம் காலைலயே வேலை விஷயமா வெளிய போயாச்சு, நீ கிளம்பி வா நான் முன்னாடி உக்காந்திருக்கேன்" என்றாள் நிலா. "பார்றா... வீட்ல இருக்க எனக்கு தெரியல உனக்கு தெரியுது... எல்லாம் நேரம்" என்று நொந்து கொண்டவாரே கிளம்பச் சென்றாள் சகி.


சொன்னது போல் பதினைந்து நிமிடங்களில் கிளம்பி வந்தாள் சகி. இருவரும் லட்சு வீட்டுக்குச் செல்ல, லட்சு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். "ஹைய்யோ இதுகள வச்சுக்கிட்டு நான் பட்ற பாடு..." என்று தலையில் அடித்துக் கொண்டாள் நிலா.


சகி வாயை மூடிச் சிரித்துக் கொண்டிருந்தாள். வந்த கடுப்பில் தலையணையை எடுத்து லட்சுவை மொத்த ஆரம்பித்தாள் நிலா. அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்த லட்சு என்ன நடந்தது என்று உணர்ந்து தலையணையை எடுத்து நிலாவைச் சாத்தினாள்.


சகி வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க, சற்று நேரத்தில் போர் நிறுத்தப்பட்டது. பின் லட்சுவும் கிளம்பி வர, மூவரும் அந்த ஆங்கிலத் திகில் படம் பார்க்கக் கிளம்பிச் சென்றனர், அப்படி ஒரு திகிலான அனுபவம் தங்களுக்காக உண்மையிலேயே காத்திருப்பதை அறியாமல்.


நிழல் 3


மேலும் சில கதாபாத்திரங்கள்:


விஷ்ணு @ விசு - லட்சு-வின் மாமா மகன். மதுரையில் ஒரு பெரிய நிறுவனத்தில் கட்டடப் பொறியியலாளராக ஏழு வருடங்களுக்கு மேல் பணி புரிகிறான். சாந்தமும் அமைதியும் கலந்த குணம் உடையவன்.


சூர்யா @ சூரி - சகியின் அன்பு அண்ணன். சட்டம் படித்து விட்டு ஏழு வருடங்களாகப் பகுதி நேரமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறான், நிலாவின் காதலனாக முழு நேர வேலையும் பார்த்து வருகிறான். ஏழு வருடங்களுக்கு முன்பு நிலாவிடம் காதலைச் சொல்லி ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் சம்மதத்தைப் பெற்றான். சற்று கலகலவென பேசுபவன். யாருடனும் உடனே பேசிப் பழகிவிடும் சாமர்த்தியம் உடையவன் (லாயர் ஆச்சே!!).


ருத்ரன் @ ருத்ரா - IPS-ஆக தேர்ச்சி பெற்று ஐந்து ஆண்டுகளாகக் காவல் துறையில் ஒரு உயர்ந்த பதவி ஏற்றுப் பணியாற்றி வருகிறான். தற்போது திருநெல்வேலி-இல் இருக்கிறான். சிரிப்பு என்றால் விலை என்ன என்று கேட்கும் வகை. சுறுக்கென்ற கோவமும் அதற்குச் சமமாக நல்ல குணமும் கொண்டவன். (உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இவன் தான் நம்ம சகிக்கு ஜோடின்னு. பாவம் விதி யாரை விட்டது)


இவர்கள் மூவரும் முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவர்கள். விசுவும் சூரியும் தங்கள் காதலிகள் மூலம் அறிமுகம் ஆகி ஓரிரண்டு முறை நேரில் பார்த்து இருக்கின்றனர். ருத்ரா-வை இதுவரை யாரும் சந்திக்கவில்லை ஏன் நம் சகி கூட இன்னும் பார்க்கவில்லை.


----------------


மதுரையைச் சுற்றிப் பார்க்க வந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் நான்கு பேர், பக்கத்தில் உள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டு, அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அழகர் குறிச்சி கிராமத்திற்குச் சென்றனர்.


சோலை குறிச்சி எல்லையைத் தாண்டிய அடுத்த கிராமம் தான் அழகர் குறிச்சி. அந்த கிராமத்தின் ஊர்த் தலைவர் மூலமாக அவர்கள் தங்குவதற்கு அந்த கிராமத்திலேயே ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.


இவர்கள் தங்கி இருந்த வீட்டிலிருந்து பார்த்தால் சோலை குறிச்சியின் எல்லையில் இருந்த வயல் வெளிகளும் தென்னை மாந்தோப்புகளும் "அந்த பெரிய வீடும்" தெரியும்.


அந்த நான்கு பேரில் ஒருவன் (பெயர் ஷேன்) தங்கள் வீட்டில் உதவிக்கு இருக்கும் அந்த கிராமத்தவன் முனியனிடம் அந்த வீடு அழகாக இருக்கிறது என்றும் அங்கே சுற்றிப் பார்க்கலாமா என்றும் கேட்டான்.


ஆங்கிலம் தெரியாத முனியன், அந்த வீட்டைப் பற்றித் தான் ஏதோ கேட்கிறான் என்று புரிந்து கொண்டு, வேண்டாம் என்று தலையை ஆட்டிப் பின் அங்கு பேய் இருக்கிறது என்று செய்கையில் சொல்லிக் காட்டினான். வெள்ளைக்காரனுக்கு என்ன புரிந்ததோ சிரித்துக் கொண்டே வீட்டினுள் சென்று விட்டான்.


இரவு பதினோறு மணி. அந்த கிராமமே ஒரு சின்ன சத்தம் கூட இல்லாமல் அடங்கிப் போய் இருந்தது. சுற்றிப் பார்க்க வந்த நால்வரும் மது அருந்திக் கொண்டு இருந்தனர். 


அப்போது அந்த வீட்டின் ஜன்னல் வழியாக ஷேன் அந்தப் பெரிய வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலவொளியில் யாரோ ஒரு பெண் அங்கு நடமாடுவது தெரிந்தது. குழப்பம் அடைந்தவன் தன் டார்ச்சை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தான்.


வயல்வெளியையும் தென்னந்தோப்பையும் கடந்து, அந்த வீட்டின் தோட்டத்தைத் தாண்டிக் கதவு அருகில் வந்து லேசாகத் தட்டினான். எந்த சத்தமும் இல்லாமல் போகவே சற்றுப் பலமாகத் தட்டினான். அப்போதும் சத்தமில்லாது போகவே 'காலையில் பார்த்துக்கொள்ளலாம்' என்று அங்கிருந்து நகர்ந்தான்.


அப்போது அந்தக் கதவு மெல்லத் திறக்கும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை, ஆனால் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்றான். டார்ச் வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை.


திடீரென்று அதுவும் வேலை செய்யாமல் போகவே, சற்று நேரத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. டார்ச்சைத் தட்டித் தட்டிப் பார்த்தான். பின் அது ஒளியைக் கக்கியது. அந்தத் திடீர் வெளிச்சத்தில் அவன் கண்டது அவளை, அதே கோர உருவத்தை. அலறப் போனவனின் வாயை அந்த உருவம் தன் கையைக் கொண்டு மூடி "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...." என்றது.


விடிந்ததும் அழகர் குறிச்சியில் முனியன் இவர்கள் தங்கி இருந்த வீட்டில் தன் தினசரி வேலைகளைச் செய்ய வந்தான். அப்போது அந்த வீட்டின் தோட்டத்தின் மரத்தடியில் ஒரு நாற்காலியில் ஷேன் முதுகு காட்டி உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.


"என்ன சார் சீக்கிரமே முழிச்சுட்டீங்க?" என்றபடி அவன் முன் போய் நின்றவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. உடல் நடுநடுங்க அந்த இடத்தை விட்டு ஓடினான். அவன் கண்டது வாயைப் பிளந்து, கண்கள் விரிந்து, வெளிறிப்போய் இருந்த ஷேனின் பிணத்தை. முனியன் ஊருக்குள் ஓடிச் சென்று தகவல் சொல்ல, அடுத்த பதினைந்து நிமிடங்களில் அங்கு கூட்டம் கூடியது.


இது அந்த ஊரின் ஆறாவது குழப்பமான மரணம்!! பிரேத பரிசோதனை அறிக்கையும் முன்பு இருந்த அதே ஐந்து சம்பவங்களை ஒத்து இருந்தது.


இறந்திருப்பது வேற்று நாட்டவன் என்பதால் காவல் துறை துரீதப் படுத்தப்பட்டது. விரைவில் மரணத்தின் கரணம் அல்லது அது கொலையானால் கொலையாளியைப் பிடிக்க வேண்டும் என்று மேல் இடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி ருத்ரன் திருநெல்வேலி-இல் இருந்து மதுரைக்கு மாற்றலாகி வந்தான். அவனுக்கு மதுரையில் வேலையுடன் சேர்ந்து காதலும் காத்து இருந்தது.


நிழல் 4


மதுரையின் பிரபல மால். சகியும் சூர்யாவும் ஒரு துணிக் கடையில் நின்று கொண்டிருந்தனர். நிலாவின் பிறந்தநாள் இரண்டு நாட்களில் வருவதால், அவளுக்காக ஒரு புடவை எடுத்துப் பரிசளிக்கலாம் என்று எண்ணினான் சூர்யா.


எண்ணியதில் ஒன்றும் தவறில்லை. அதைத் தேர்ந்தெடுப்பதற்கு அவன் தேர்ந்தெடுத்த ஆள் தான் தவறு. அந்த மால்-இல் இருந்த அனைத்து கடைகளையும் பிரித்து மேய்ந்துவிட்டு இந்தக் கடையையும் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தாள் சகி.


காலை பத்து மணிக்கு வந்தவர்கள், இப்போது மாலை ஆறு முப்பது மணி ஆகி விட்டிருந்தது. இதில் மதிய உணவு வித விதமான பதார்த்தங்களை வாங்கி ஒரு கட்டு கட்டி விட்டாள் சகி. அவ்வப்போது நொறுக்குத் தீனிகளும் சில பல ஐஸ் கிரீம்களும் வேறு.


கடுப்பான சூர்யா, "ஏய் எரும... காலைல வந்தது. நைட் டின்னர்க்கும் என் பர்சுக்கு உலை வைக்க பாக்கியா? சீக்ரம் செலக்ட் பண்ணு" என்று அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தான். அதற்கு சகி, "நான் என்னமோ எனக்கு விடிய விடிய செலக்ட் பண்ற மாதிரி பேசுற, உன் ஆளுக்கு தான பண்றேன். உனக்காக இன்னைக்கு என் ப்ரோக்ராம்ஸ்லாம் கேன்செல் பண்ணிட்டு வந்தேன் பாரு, என்ன சொல்லணும். நீயாச்சு உன் ஆளாச்சு.... நீயே பண்ணிக்கோ போடா" என்று முறுக்கிக் கொண்டாள்.


சூர்யாவோ, "ப்ளீஸ் டி.... ப்ளீஸ் டி... என் செல்லம்ல... என் புஜ்ஜில... சாரி டா.. சின்ன பையன் தெரியாம பேசிட்டேன்.... நீ செலக்ட் பண்ணுடா தங்கம்" என்று அவள் கன்னத்தைக் கிள்ளிக் கொ(கெ)ஞ்சினான்.


யாருடைய துரதிர்ஷ்டமோ தெரியவில்லை, அப்போது அந்தக் கடைக்குள் நுழைந்த ருத்ரனின் காதுகளில் விழுந்தது சூர்யாவின் கொஞ்சல்கள் மட்டுமே. அவன் கண்டதும் அவள் கன்னத்தை அவன் கிள்ளியது மட்டுமே.


ஒரு மணி நேரம் முன்னால், ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே எஸ்கலேட்டர்-இல் ஏறிய சகியைப் பார்த்த ருத்ரனின் மனதில் அவள் ஏதோ மாயம் செய்ய, அவளைத் திரும்பவும் பார்க்கும் ஆவலில் மால் முழுதும் தேடி அலைந்து கடைசியில் அவளை இந்தக் கடையில் கண்டு, ஏதோ மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தவன், தான் கண்ட காட்சியில் முகம் இறுகித் திரும்பிச் சென்று விட்டான்.


பார்க்கிங் வந்து தன் ராயல் என்ஃபீல்ட்-ஐக் கிளப்பியவனுக்குச் சகி மேல் பயங்கரமாகக் கோவம் வந்தது. காரணம் தெரியவில்லை. 'ச்ச... பப்ளிக் ப்ளேஸ்ல அவன் அவள கொஞ்சுறதும் அவ சிரிக்கிறதும்' என்று யோசித்துச் சகியை மனதில் திட்டித் தீர்த்தான். 'கொஞ்சுனா உனக்கென்ன வந்துச்சு' என்று அவனது மனம் அவனை இடித்துக் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் விழித்தான்.


அவன் திட்டிய திட்டில் இங்கு சகிக்குப் புரை ஏறியது. "ஏன்டா வெளில கெஞ்சிட்டு மனசுக்குள்ள திட்டுறியா?" என்று சூர்யாவை இரண்டு மொத்து மொத்தினாள். பின் புடவைகளை ஆராய்ந்து, கடல் நீல நிறத்தில் ஆங்காங்கே மெல்லிய தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகள் கொண்டிருந்த ஒரு அழகிய புடவையை எடுத்துச் சூர்யாவிடம் காட்டினாள்.


சூர்யா மனதிற்குள் அந்தப் புடவையுடன் நிலாவைச் சித்தரித்துப் பார்த்தான். 'பரவால்ல.... நம்ம குட்டச்சி எல்லா ட்ரஸ்லயும் கியூட்டா தான் இருக்கா' என்று நினைத்துக் கொண்டு, "இது ஓகே... பில் பண்ணிரலாம்" என்று சகியிடம் கூறினான். அந்தப் புடவையை கிப்ட் ராப் செய்து வாங்கிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினர்.


ருத்ரன் மதுரையில் பொறுப்பேற்க இன்னும் ஒரு வாரம் இருந்தது. அவன் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த காவலர் குடியிருப்பில் இருந்த வீட்டில் அமர்ந்து அந்த மர்ம சம்பவங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

ஆறு பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஒன்றாய் இருந்ததே தவிர வேறு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மேலும் இறந்த ஆறு பேருக்கும் எந்த வித சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.


அவ்வப்போது நினைவில் தோன்றிய சகியைத் திட்டி அனுப்பினான். அடுத்த இரு நாட்களையும் இப்படியே கழித்தான்.


நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலா ஏதோ சத்தம் கேட்டு லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தாள். இருட்டில் ஒரு உருவம் அவள் கட்டிலின் அருகில் நின்று கொண்டிருந்தது.


கத்தப் போனவளது வாயைத் தன் வலிய கரங்களால் மூடி, அவளைப் பால்கணி நோக்கி இழுத்துச் சென்றது அந்த உருவம். நிலாவிற்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்கியது. இது கனவா என்று ஒரு நொடி எண்ணிப் பார்த்து, அந்த உருவத்தின் கையில் நறுக்கென்று கிள்ளினாள். அது "ஆஆஹ்ஹ்ஹ்....." என்று அலறியது. அந்தக் குரலைக் கண்டு கொண்ட நிலா, அந்த உருவத்தின் முகத்தை மூடியிருந்த துணியை இழுத்து அகற்றினாள்.


"இப்டியாடி கிள்ளுவ பிசாசு.. ஸ்ஸ்ஸ் வலிக்குது.." என்று கடிந்து கொண்டவன் நம் சூர்யாவே தான். அனல் பறக்கப் பார்வையை வீசிக் கொண்டிருந்த நிலாவைக் கண்டு ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, "ஹேப்பி பர்த்டே செல்லம்.." என்று தன் பரிசை நீட்டினான்.


அதில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் (வெண்)என் நிலா' என்று எழுதி அவன் கையெழுத்து இட்டிருந்தான். 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல' என்று அவனை மனதில் செல்லமாகத் திட்டிக் கொண்டே அதைப் பிரித்துப் பார்த்தாள்.

உள்ளிருந்த புடவையைக் கண்டவுடன் அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவளை நெருங்கி, "புடிச்சிருக்கா?" என்று கேட்டான் சூர்யா. அவன் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவளுக்குப் பேச்சே வரவில்லை. "ம்ம்ம்" என்று மட்டும் கூறினாள். அதற்குள்ளேயே அவள் கன்னங்கள் சிவந்தது.


பின் ஏதோ நினைவு வந்தவளாக, "ஆமா நீங்க எப்டி வந்திங்க?" என்று வினவினாள். "பால்கணி வழியா தான்.." என்று பதில் கூறினான். "சரியான கொரங்கு... எப்டி பயந்துட்டேன் தெரியுமா? ரூம்ல வாய மூடுனப்பவே சொல்லிருக்க வேண்டியதான. எதுக்கு இங்க வர இழுத்துட்டு வந்திங்க? ஒரு நிமிஷம் நடுங்கி போய்டுச்சு" என்று இன்னும் கண்களில் பயம் நீங்காமல் சொன்னவளை இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டு, "வானத்துல இருக்க அந்த நிலாவுக்கு தெரிய வேணாமா, நம்மள விட அழகா ஒரு நிலா பூமியில பிறந்து இருக்கான்னு..." என்று அவள் கண்களைப் பார்த்துக் கூறினான்.


மீண்டும் செம்மை பூசிய கன்னங்களுடன், "இப்டி பேசி பேசியே ஆள கவுத்துருவிங்க... சரியான திருடன்" என்று செல்லமாக அவன் முடியைக் கலைத்துவிட்டாள். "சரி இனிமேல் பேசல.." என்று கூறி அவள் செம்மை படர்ந்த கன்னத்தில் இதழ் ஒற்றினான். வெட்கத்தில் நிலா சூர்யாவின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


சிறிது நேரம் இருவரும் பேசவே இல்லை. "நிலா.. நிலா.." என்று மென்மையாக அழைத்தான். "ம்ம்ம்ம்" என்ற பதில் மட்டுமே வந்தது. "என் மேல நல்ல சாஞ்சுகிட்டே தூங்குனது போதும், உள்ள போய் தூங்கு போ..." என்று அவன் கிண்டல் செய்ய, நிலா, "அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்ன கிண்டல் பண்ணாட்டி தூக்கம் வராதோ.." என்று அவனை மொத்தி எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.


நிழல் 5


நந்தவனம் குடியிருப்பு, காலை ஏழு மணி. "அம்மா டிபன் ரெடியா இருக்கா?" என்று கேட்டபடியே படியில் இறங்கி வந்தாள் சகி. "எங்கடி இவ்ளோ சீக்ரம் கெளம்பிட்ட? திடீர்னு டிபன் கேட்டா நான் எங்க போக? சீக்ரம் வேணும்ன்னா நேத்து நைட்டே சொன்னா என்ன?" என்று மகளைக் கடிந்து கொண்டார் பத்மா.


"காலைல தான் மா JP அங்கிள் (பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர், ஜெய பிரகாஷ் என்பதன் சுருக்கம்) ஃபோன் பண்ணாரு சீக்ரம் வர சொல்லி... நீ குடுக்குற பில்ட் அப்ஸ்லாம் பாத்தா, நான் என்னவோ நீ அஞ்சு மணிக்கெல்லாம் எந்திச்சு எல்லாம் ரெடி பண்ணுவேன்னு நினைச்சேன்... நீ இப்டி ஏழு மணிக்கு தான் எந்திப்பன்னு எனக்கு எப்படி தெரியும்.. சரியான சோம்பேறியா இருக்கியே மா" என்று கிண்டல் செய்து கொண்டே நடராஜனுக்கு ஒரு ஹைபை குடுத்தாள்.


கடுப்பான பத்மா, "நான் அஞ்சு மணிக்கு தான் எந்திரிக்கிறேன். எந்திச்சதும் உங்கப்பாக்கு ஸ்ட்ராங் காஃபி வேணும்.... உன் அண்ணனுக்கு கிரீன் டீ வேணும்.. அவன் ஜாகிங் போயிட்டு வர்றதுக்குள்ள அவனுக்கு ராகி கஞ்சி போட்டு வைக்கணும்... உனக்கு ஹார்லிக்ஸ் போட்டு வைக்கணும்.. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் மதியம் கொண்டு போக லஞ்ச் ரெடி பண்ணனும்... இவ்ளோவும் பண்றேன் பாரு என்ன சொல்லணும்" என்று கோபித்துக் கொண்டார்.

"சரி சரி... விடுமா நான் வெளில சாப்டுக்குறேன்... லஞ்ச் மட்டும் எடுத்து குடு" என்றவளைப் பார்த்த நடராஜன் , "எப்டியோ நீயாச்சு நல்ல சாப்பாடு சாப்டு குட்டிமா... எனக்கு தான் குடுத்து வைக்கல...

ஹம்ம்ம்ம்ம்.." என்று பெருமூச்சு விட்டார். "உங்களுக்கென்ன அடுத்து? அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இதே வேல தான்..." என்று கையை இடுப்பில் வைத்து இருவரையும் முறைத்தார் பத்மா.


"சும்மா டா பத்து மா... முப்பத்தோறு வருஷமா நான் உன் கையால தான சாப்டுட்டு இருக்கேன்.... புடிக்காமயா சாப்பிட்றேன்" என்று சரணடைந்தார் நடராஜன். ஏதோ ஞாபகம் வந்தவராக, "சகி நம்ம வாசு மாமா ஒரு வரன் கொண்டு வந்தாரு டி, நீ ஃபோட்டோ பாத்து..." என்று பத்மா முடிப்பதற்குள், "டைம் ஆச்சு... டாட்டா மா டாட்டா பா..." என்று கூறிச் சிட்டாய்ப் பறந்து விட்டாள் சகி.


வீட்டின் வெளியே வந்து தனது கருநீல நிற வெஸ்பா-வைக் கிளப்பினாள். 'இந்த அம்மாவுக்கு இதே வேலையா போச்சு, எப்போ பாத்தாலும் கல்யாணம் ஜாதகம் ஃபோட்டோன்னு கடுப்பேத்திக்கிட்டு ச்ச....' என்று மனதில் கடுப்படித்துக் கொண்டே வண்டியை ஒட்டியவள், வேகத்தைக் குறைக்காமல் சடாரென ஒரு குறுகிய பாதையின் வளைவில் வண்டியைத் திருப்பி அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த அடர்பச்சை நிற ராயல் என்ஃபீல்டுடன் மோதி, வண்டியுடன் பொத்தென்று கீழே விழுந்தாள்.


அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. முகம் தெரியாதபடி ஹெல்மெட் அணிந்திருந்த அந்த ராயல் என்ஃபீல்ட்காரனும் ஏதோ வேடிக்கை பார்ப்பது போல வண்டியில் உட்கார்ந்தபடியே இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


"விழுந்தவளுக்கு ஹெல்ப் பண்ணாம இப்டி வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருக்கு பாரு... தடி மாடு... தடி மாடு...." என்று மனதில் திட்டுவதாக நினைத்துக் கொண்டு வெளியே சொல்லிவிட்டாள் சகி.


எதிரில் இருப்பவளைத் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் திட்டியதில் கலைந்து நினைவிற்கு வந்து, ஹெல்மெட்-ஐக் கழற்றினான். கடுகும் கருவேற்பிலையும் போட்டால் தாளித்து விடலாம் என்ற அளவிற்கு முகத்தை வைத்துக் கொண்டு அவளை நெருங்கி கையை நீட்டினான்.


'இவனா!!...' என்று அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் கையை நீட்டியதும் அதைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள். 'தேங்க்ஸ்' எனச் சொல்ல வாயெடுத்தாள், அதற்குள், "ஒழுங்கா பாத்து வரமாட்ட? எவனையாச்சு நினைச்சுகிட்டே வண்டி ஓட்டுனா இப்படித்தான்.." என்று பொறிய ஆரம்பித்தான் ருத்ரன்.


அவன் வார்த்தைகளைக் கேட்ட சகிக்குச் சுறுசுறுவெனக் கோவம் வந்தது. "ஹேய்... என்ன ரொம்ப ஓவரா பேசுற? நீயும் தான வந்து மோதின.. ஏதோ என் மேல மட்டும் தான் தப்புங்கிற மாதிரி பேசுற... அண்ட் நான் யார வேணாலும் நினைச்சுட்டு என் வண்டிய ஓட்டுவேன்.. அத கேக்க நீ யாரு?" என்று பதிலுக்குக் கொடுத்தாள்.


அவள் ஒருமையில் பேசுவதைக் கேட்டுக் கோவத்தின் உச்சிக்கே சென்ற ருத்ரன், "ஏய் மரியாதையா பேசு... இல்ல...." என்று பல்லை கடித்தான். "ஓஹ்... நீ மட்டும் ரொம்ப மரியாதையா பேசினியோ" என்று மீண்டும் சண்டைக்கு நின்றாள் சகி.


"ச்ச... உன்னல்லாம் எப்டியோ போன்னு விட்டுட்டு போயிருக்கணும், தூக்கி விட்டேன் பாரு என்ன சொல்லணும்..." என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வண்டியைக் கிளப்பினான்.


"வெவெவெவ..." என்று அவனைக் கிண்டல் செய்தாள் சகி. 'சரியான திமிரு புடிச்சவ. இவள ஏன்தான் திரும்ப பாத்தேனோ ச்ச...' என்று மனதில் நொந்தவாறே வீடு சென்றான்.


சகி அவனை முதல் முறை பார்த்ததை மனதில் அசை போட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினாள். அன்று நிலாவிற்குப் புடவை எடுக்கச் சென்றபோது அந்த மால்-இன் மூன்றாம் தளத்தில் இருந்த ஒரு கடைக்கு வெளியே நின்று கீழ்த் தளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சகி.


அப்போது நீல நிற ஜீன்ஸும், கருப்பு நிற, முழங்கை வரை மடித்து விடப்பட்ட முழுக்கைச் சட்டையும், மெத்தென்ற காக்கி நிற பூட்சும் அணிந்து இரண்டாம் தளத்தில் நின்று காஃபி குடித்துக் கொண்டிருந்தான் அவன்.


அவள் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த 'ட்ரீம் பாய்' இப்படித்தான் இருப்பானோ என்று வைத்த கண் எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காபி குடித்து முடித்துத் தன் கூலிங் கிளாஸ்-ஐப் பாக்கெட்டிலிருந்து ஒற்றைக் கையில் எடுத்துக் கண்களில் மாட்டியவன் ஒரு கடைக்குள் புகுந்தான். இங்கு சூர்யாவும் அவளை அழைக்க, அவளும் சென்று விட்டாள்.


அதற்கு அடுத்த நாள் முழுதும் அவனைப் பற்றியே லட்சுவிடமும் நிலாவிடமும் பேசிக் கொண்டிருந்தாள். "ஹே நான் அடிக்கடி சொல்லுவேன்ல டி எனக்கு வரப்போறவன் எப்டி இருக்கணும்னு, அப்டியே இருந்தான் தெரியுமா. கருப்பா நெட்டையா ஹயிட்க்கு ஏத்த வெயிட்டோட... நல்ல அடர்த்தியா மீசை வச்சு... ட்ரிம் பண்ண தாடியோட.." என்று புலம்பியவளை, "போதும் .... இதோட பத்து தடவை ஆச்சு, நிறுத்து..." என்று அடக்கினாள் லட்சு.


"இவளே கடுப்பாய்ட்டான்னா அப்போ நீ எங்கள எவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்கேன்னு பாத்துக்கோ" என்ற நிலாவை முறைத்து விட்டுச் சென்று விட்டாள் சகி. மனதில் 'அவன் கேரக்ட்டரும் ப்ரொஃபெஷனும் கூட எனக்கு பிடிச்ச மாதிரி இருக்குமா?' என்று நினைத்து கொண்டாள்.


இதை நினைத்துக் கொண்டே வண்டி ஒட்டியவளுக்குச் சிறிது நேரத்திற்கு முன் அவனுடன் நடந்த சண்டை நினைவிற்கு வரவே, 'நீ ஒன்னும் என் ட்ரீம் பாய் இல்ல போடா...' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.


அலுவலகத்திற்குள் நுழைந்த சகி, தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு ஹாய் சொல்லி விட்டு, 'R.ஜெய பிரகாஷ், சீஃப் எடிட்டர்' என்ற பலகையைத் தாங்கி நின்ற கதவை லேசாகத் திறந்து, "எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று உள்ளே வர அனுமதி கேட்டாள்.


"எஸ்... கம் இன்.." என்று முகத்தை நிமிர்த்தாமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தபடியே சொன்னார் JP. "குட் மார்னிங் சார்" என்று புன்னகைத்துக் கொண்டே கூறியவளை நிமிர்ந்து முறைதவர், "உன்ன எப்போ வர சொன்னா, நீ எப்போ வர்ற? ஜர்னலிசம்ல பங்ச்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்ன்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா?" என்று கண்டித்தார்.


"சாரி சார்.. வர்ற வழில...." என்று ஆரம்பித்தவளை முடிக்க விடாமல், "ஐ டோன்ட் நீட் யுவர் சில்லி எக்ஸ்க்யூஸஸ். உனக்கு நிறைய திறமை இருக்குங்கிறனாலதான் உனக்கு நான் இங்க வேல குடுத்திருக்கேன்... உன் அப்பா என் ஃபிரெண்ட்ங்கிறதுக்காக இல்ல... பட் மத்தவங்க நீ ஏதோ அட்வாண்டேஜ் எடுத்துகிறதா நினைப்பாங்க. ப்ரொஃபெஷன் வேற, பர்சனல் வேற" என்று சொல்லியவருக்கு வெறும் தலையை மட்டும் உருட்டினாள்.


"சரி போய் வேலைய பாரு" என்று அவர் விடை கொடுத்தவுடன் திரும்பிச் சென்றவளின் கை முட்டியில் இருந்த சிராய்ப்பைப் பார்த்தார். "நில்லுமா... என்ன இது இப்டி அடி பட்டிருக்கு..." என்று அவர் கேட்டதும் தான் தன் கை முட்டியைப் பார்த்தாள் சகி.


"வர்ற வழில பைக்ல இருந்து விழுந்துட்டேன் அங்கிள்... அதுல பட்டிருக்கும் போல.. நானே இப்போ தான் பாக்குறேன்" என்றவளை வலுக்கட்டாயமாய்ப் பிடித்து ஒரு இருக்கையில் அமரவைத்து, அங்கு இருந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்து அந்தக் காயத்தைச் சுத்தம் செய்து, மருந்திட்டுக் கட்டு போட்டார் JP.


"நெக்ஸ்ட் வீக் புதுசா ஜாயின் பண்ணப்போற அசிஸ்டன்ட் கமிஷனர் மதுரைக்கு ஃபோர் டேஸ் முன்னாடியே வந்துட்டாராம். அதான் அவரு ஃப்ரீயா இருக்கும் போதே அவர ஒரு சின்ன இன்டர்வியூ மாதிரி எடுத்து போடலாம்ன்னு உன்ன வர சொன்னேன். எட்டரை மணிக்கு அவரோட குவாடர்ஸ்க்கே வர சொன்னாரு... நீ என்னடானா எட்டு இருபதுக்கு இங்க வந்து நிக்குற" என்று சீக்கிரம் வரச் சொன்னதற்கான காரணத்தை விளக்கினார்.


"இன்னும் டென் மினிட்ஸ் இருக்குல்ல அங்கிள்.... நான் ஃபாஸ்ட்டா போய்டுவேன்" என்று கிளம்பப் போனவளை மறித்து, "எதுக்கு? மறுபடியும் இப்டி கையக் கால பேத்துட்டு வந்து நிக்கவா? நான் அப்போவே ரகு-வ அனுப்பிட்டேன்.... நீ போய் உன் ஆர்ட்டிகிள்ள கன்டின்யு பண்ணு.." என்று கூறினார்.


கதவு வரை சென்றவள் ஏதோ நினைவு வந்தவளாக, "அங்கிள்... அந்த சோலை குறிச்சில நடந்த மர்டர்ஸ் பத்தி விசாரிக்க தான இப்போ புது AC வந்திருக்காரு.. அந்த ஊர்ல கூட இதே மாதிரி இதுக்கு முன்னாடி அஞ்சு மர்டர்ஸ் நடந்திருக்குல்ல.. நாம ஏன் அதப் பத்தி ஒரு கவர் ஸ்டோரி மாதிரி எழுத கூடாது..." என்றவளை ஆச்சர்யமாக பார்த்து,


"எனக்கும் இதே தான் தோணுச்சு, அண்ட் அதுக்கு சரியான ஆள் நீ தான்னும் தோணுச்சு... ஆனா ஒரு பொண்ணு அந்த ஊர்ல தனியா போய் தங்கி வேல பாக்கிறது எனக்கு ஸேஃபா படல.. அதுவும் இல்லாம உன்ன இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ணா உங்க அம்மா என்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவா.." என்று கூறினார்.


"என்ன அங்கிள் இது... இப்போ தான சொன்னிங்க ப்ரொஃபெஷன் வேற, பர்சனல் வேறன்னு.. இப்போ மாத்தி பேசுறிங்களே... என் ஃபிரெண்ட் லக்ஷ்மியோட பாட்டி வீடு அங்க தான் இருக்கு.... நான் அங்க ஸேஃபா இருப்பேன்.. அண்ட் அம்மாட்ட நான் ஃபிரெண்ட்ஸ் கூட சும்மா அந்த ஊர சுத்திப் பாக்க போறேன்னு சொல்லிக்கிறேன். ப்ளீஸ் அங்கிள்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...." என்று மூச்சு விடாமல் பேசியவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "சரிரிரிரி.... சரிரிரிரிரிரிரிரி.... நீயே அந்த ஆர்ட்டிகிள் பண்ணு... பட் ஸேஃப்டி தான் முக்கியம் சரியா.... வீணா ஏதும் ஆபத்துல மாட்டிக்காத..." என்று அனுமதி வழங்கினார்.


"தேங்க் யு சோ மச் அங்கிள்...." என்று துள்ளிக் குதித்துக் கொண்டே தன் கேபினிற்குச் சென்றாள், தனக்கு அந்த ஊரில் காத்திருக்கும் ஆபத்தைப் பற்றித் தெரியாமல். 


நிழல் 6


உற்சாகமாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சகிக்கு அன்று காலை நடந்தது நினைவு வந்தது. 'ச்ச... AC-அ இன்டர்வியூ பண்ண வேண்டியது, அவனால போச்சு.. சரியான காட்டான். எப்டி பேசுறான்.. JP அங்கிள் கூப்டதுனால சீக்ரம் வர வேண்டியதா போச்சு.. இல்லனா அவன் பின்னாடியே போய் அவனை ஒரு வழி பண்ணிருப்பேன்' என்று மனதில் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரம் கழித்து அவனைப் பிறகு திட்டிக்கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டுச் சோலை குறிச்சி செல்ல வீட்டிலும் தோழிகளிடமும் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


'சுத்தி பாக்க போறோம்ன்னு அம்மாட்ட சொல்லிட்டு லட்சு நிலா இல்லாம நான் தனியா போனா சந்தேகம் வருமே.. இதுங்க கிட்ட உண்மைய சொன்னா அதுகளும் வராதுங்க, அம்மா கிட்டயும் போட்டு குடுத்திரும்ங்க.. பேசாம ஏதாச்சு பொய் சொல்லி அதுகளையும் இழுத்துட்டு போயிற வேண்டியதான்' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


காலை எட்டரைக்குக் காவலர் குடியிருப்பிற்குச் சென்ற ரகு, அங்கு AC-யின் வீடு பூட்டி இருக்கவே வெளியே நின்றான். பத்து நிமிடங்கள் அவனைக் காக்க வைத்து விட்டு வந்த ருத்ரன், தாமதத்திற்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு ஒரு ஐந்து நிமிடங்களில் தயார் ஆகி வருவதாகக் கூறி, அவனை ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு உள்ளே சென்று சொன்னதுபோல், ஐந்து நிமிடங்களில் வந்தான். சில பல கேள்விகளும் பதிலுமாய் சென்ற அந்த நேர்க்காணல் அரை மணி நேரத்தில் முடிவு பெற்றது.


'அவளால தான் லேட்.. வந்து வண்டில இடிச்சது மட்டும் இல்லாம வேணும்னே சண்டைக்கு இழுத்து லேட் பண்ணி விட்டா.. சரியான சண்டைக்கோழி.. இதுல நானும் கவனம் இல்லாம வந்து இடிச்சேன்னு வேற சொல்லறா...' என்று சகியைத் திட்டியவனின் மனசாட்சி 'அவளா உன்ன சண்டைக்கு இழுத்தா? நீ அவள நினைச்சுட்டு தான வேண்டிய ஓட்டிட்டு இருந்த?' என்று தட்டிக் கேட்டது. அவன் அதைத் திட்டி அடக்கினான்.


மாலை வீடு வந்த சகி தன் திட்டத்தைச் செயல் படுத்த எண்ணினாள். வீட்டிற்குள் நுழைந்தவளிடம், "என்னடி ஆச்சு? கைல என்ன கட்டு?" என்று பதறினார் பத்மா. "வண்டில இருந்து ஸ்கிட் ஆகி..." என்று முடிப்பதற்குள் பத்மா, "இதுக்கு தான் இந்த வேலையே வேணாம்ன்னு சொன்னா கேக்குறியாடி நீ? ஆம்பள பிள்ள மாதிரி வெயில்லயும் இருட்டுலயும் போய் அலைஞ்சுட்டு இப்போ பாரு கைய ஒடச்சுட்டு வந்து நிக்குற.. எல்லாம் உங்க அப்பா குடுக்குற செல்லம்.." என்று வசை பாடத் துவங்கினார்.


"ம்மா..ம்மா... என்ன கொஞ்சம் பேச விட்றியா.. நான் இந்த வேலைல இல்லனாலும் பைக்ல ஸ்கிட் ஆகி விழுந்திருப்பேன்.. அப்றம் எனக்கு கை ஒடையெல்லாம் இல்ல, லேசான ஸ்க்ரேட்ச் தான்.. JP அங்கிள் தான் இப்டி பெரிய கட்டா போட்டு விட்டுட்டாரு" என விளக்கினாள்.


"வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல உனக்கு அந்த வேலையும் குடுத்து இப்போ கட்டும் போட்டு விட்றாரா அவரு? இங்க வரட்டும் கேக்குறேன்" என்று JPக்குத் திட்டு விழும்போது சரியாக அங்கு வந்தார் JP.


"என்னமா என் பேரு அடி படுது?" என்றவர், 'ஒருவேளை இவ அந்த ஊருக்கு போறத உளறிட்டாளோ..' என்று நினைத்துச் சகியைக் கேள்வியாக நோக்கினார். அவர் மனதைச் சரியாய்ப் புரிந்த சகி, இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்டி எச்சரித்தாள்.


"அண்ணா இவளுக்கு அந்த ரிப்போர்ட்டர் வேலைலாம் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டீங்களா நீங்களும் இவரும்? அவ ஆசப்படி இருக்கட்டும்ன்னு சொல்லி என் வாய அடைச்சுட்டிங்க.. இப்போ எங்கயோ விழுந்து வாரிட்டு வந்திருக்கா" என்று JPயிடம் முறையிட்டார் பத்மா.


மேலும் தொடர்ச்சியாக, "சரி கல்யாணம் ஒன்னு பண்ணி வச்சுட்டா இவ பாடு இவ புருஷன் பாடுன்னு இருக்கலாம்ன்னு பாத்தா, ஒரு வருஷமா அதுக்கும் மழுப்பிகிட்டே வர்றா.. அதையாச்சு கேளுங்கண்ணா" என்று முடித்தார்.


"அது விஷயமா தான்மா பேச வந்தேன். என்னோட கஸின் ஒருத்தன் அமெரிக்கால இருக்கான் இல்லையா, அவன் பையனுக்கு நம்ம சகிய கேக்கறாங்க. பையன் பிறந்து வளந்தது அமெரிக்கானாலும் நல்ல பையன்... நம்ம கல்ச்சர மதிக்கிறவன். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சொந்தமா வச்சு நடத்துறான்.


நம்ம சகி ஃபோட்டோவ பாத்ததுமே அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. உங்களுக்கு ஓகேனா நெக்ஸ்ட் மன்த் நேர்ல வந்து பேசி முடிக்கலாம்ன்னு சொல்லறாங்க" என்று தன் பங்குக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார் JP.


"அங்கிள் நீங்களுமா?" என்று நொந்து கொண்டாள் சகி. "என்ன குட்டிமா... கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல உனக்கு என்ன பிரச்சன. எனக்கு பையன் இருந்திருந்தா உங்க அப்பன்ட்ட வந்தா கேட்டுட்டு இருப்பேன்? உன்ன எப்போவோ மருமகளா கூட்டிட்டு போயிருப்பேன்.. ரெண்டும் பொண்ணா போச்சு" என்ற JP, அவள் பதிலுக்காகக் காத்திருந்தார்.


பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தன் செல்லத் தந்தையை நோக்கினாள். இன்றைக்கு ஒரு முடிவு தெரிந்து தான் ஆக வேண்டும் என்பது போல இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரும் சகியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


'ஆஆஹா.. ஒன்னு கூடிட்டாய்ங்களே... சகி ஏதாச்சு சமாளி' என்று மனதிற்குள் எண்ணியவளின் கண்ணில் பாவம் சூர்யா தான் தென்பட்டான். "ஃபர்ஸ்ட் இவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க, ஆல்ரெடி அரக்கிழவன் ஆயிட்டான். அப்பறமா எனக்கு பாக்கலாம்" என்று அவனை மாட்டிவிட்டாள்.


இதை எதிர்பாராத சூர்யா என்ன சொல்வது என்று விழித்துக் கொண்டிருக்கையில் பத்மாவே அவனைக் காப்பாற்றினார். "தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் பண்ணிக்குவேன்ன்னு உன் அண்ணன் உக்காந்திருக்கான்... அவனுக்கும் வயசு ஏறிட்டே இருக்கு, உன்னால என் பிள்ளைக்கு பொண்ணே கிடைக்காம தான் போகப்போது" என்று பத்மா புலம்ப,


"டேய் தடியா, எல்லா திருட்டுத்தனமும் செஞ்சுட்டு அதெப்டிடா நல்லவன் மாதிரியே சீன் போட்ற" என்று அவன் காதில் முணுமுணுத்தாள். அவன் கேட்டும் கேட்காதவன் போல் நிற்க, மீண்டும் எல்லோருடைய பார்வையும் சகி பக்கம் திரும்பியது.


"யாரையாச்சு விரும்புறியா குட்டிமா? அப்டி இருந்தா நாங்க வேண்டாம்ன்னா சொல்ல போறோம்.. சொல்லுடா" என்றார் நடராஜன். இப்படி கேட்டதும் அவள் மனதில் ஒரு நொடி ருத்ரன் தோன்றி மறைந்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.


பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அப்டிலாம் ஒன்னும் இல்லப்பா... சரி சரி எப்டியோ தள்ளி விடணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க... நான், லட்சு, நிலா எல்லாம் லட்சுவோட சொந்த ஊருக்கு ஜாலியா ஒரு ஒன் மன்த் வெக்கேஷன் போலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்... அதுக்கு அப்புறம் இத பத்தி பேசலாம்" என்று இரு விஷயங்களையும் ஒன்றாகக் கூறிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி விட்டாள்.


அவள் சென்றது லட்சுவின் வீட்டிற்கு. முன் அறையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த லட்சுவின் தந்தைக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு லட்சு-வின் அறைக்குள் நுழைந்தாள்.


அங்கு இருந்த நிலாவைக் கண்டு, "நீயும் இங்கதான் இருக்கியா... நல்லதா போச்சு. நாம இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டி வீட்டுக்கு போறோம் லட்சு. ஒன்னு மன்த் ரிலேக்ஸ்டா என்ஜாய் பண்ண போறோம்" என்றாள்.


'என்ன முத்திருச்சா??' என்பது போல இருவரும் அவளைப் பார்த்தனர். "என்னடி சொல்ற!!!" என்று நிலா கத்தியே விட்டாள். "ஹேய் லட்சு உனக்கு ஒன் மன்த் இப்போ செமஸ்டர் லீவு தான.... நானும் JP அங்கிள் கிட்ட ஒன் மன்த் பிரேக் கேட்ருக்கேன்.. நிலா நீயும் லாங் லீவு சொல்லு, இல்லனா ஒர்க்-ஃப்ரம்-ஹோம் எடுத்துக்கோயேன், ப்ளீஸ்டி... நாம ஜாலியா அங்க இருந்துட்டு வரலாம்" என்றாள்.


"எல்லாம் ஓகே டி பட் என்ன அவசரம் இப்போ?" என்று லட்சு கேட்டதற்குத் தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளையும் அதிலிருந்து தப்பிக்க இப்படிச் சொல்லி விட்டதையும் விளக்கினாள் சகி. ஒருவாறாக அவர்களைச் சம்மதிக்க வைத்து, லட்சு நிலா வீடுகளிலும் அனுமதி வாங்கியாயிற்று.


அன்று இரவு சகி-யை அழைத்த JP, "சோலை குறிச்சி ஆர்ட்டிகிள் நீ பண்ண போறேல்ல, நான் அந்த AC கிட்ட சொல்லி நீ அவரை மீட் பண்றதுக்கு நாளைக்கு மதியம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிருக்கேன்மா... நாளைக்கு இங்க ஆஃபீஸ்க்கு வந்துட்டு மதியம் அவர் குவார்டர்ஸ் போய் மீட் பண்ணிட்டு வந்திரு. ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ மாதிரி தான்மா... அவரே டைரக்ட்டா இந்த கேஸ எடுக்கிறனால நமக்கு நிறைய இன்ஃபர்மேஷன் கிடைக்கலாம்... உனக்கும் ஒரு ஸேஃப்ட்டியா இருக்கும்" என்றார். சரி என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் சகி. பின் கண்களை மூடி அதில் தெரிந்த ருத்ரனைத் திட்டிக்கொண்டே தூங்கினாள்.


நிழல் 7


அடுத்த நாள் அலுவலகம் வந்த சகி, தங்கள் பத்திரிக்கையின் பிரதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். மதுரையின் புதிய AC பற்றி ரகு எழுதிய குறிப்பில் இருந்த ருத்ரனின் புகைப்படத்தில் அவள் கண்கள் நிலைத்து நின்றன.


'இவன் தான் ACயா?!! இது தெரியாம அவன்ட்ட வேற சண்ட இழுத்து வச்சிருக்கோமே.... சகி உனக்கு எல்லாத்துலயும் அவசரம் தான்டி' என்று தன்னையே நொந்து கொண்டவள் பின், 'அவன் யாரா இருந்தா எனக்கென்ன... அவன் தான ஃபர்ஸ்ட் திட்ட ஆரம்பிச்சான்' என்று முறுக்கி கொண்டு, அவனைப் பற்றிய சிறு சிறு குறிப்புகள் இருந்த பகுதியை வாசிக்கத் தொடங்கினாள்.


அதன் கடைசி வரியைக் கண்டதும் அவளுக்குக் கோவம் தலைக்கேறியது. 'இன்டர்வியூக்கே லேட்டா வந்த நம்ம புது AC, கேஸயாச்சு சீக்ரம் முடிப்பாரா? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்....' என்று கிண்டலாக முடித்திருந்தான் ரகு.


அதை எடுத்துக் கொண்டு ரகுவின் இடத்திற்குச் சென்றாள் சகி. “ரகு.. என்ன பண்ணி வச்சிருக்க நீ? எதுக்கு இப்டி ACய கிண்டல் பண்ணி எழுதியிருக்க?” என்று கிட்டத் தட்டக் கத்தினாள். ஏளனமாக அவளை நிமிர்ந்து பார்த்த ரகு, “அத கேட்க நீ யாரு? என்னோட பாஸா, இல்ல அந்த ACக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப வேண்டப்பட்டவளா?” என்று அழுத்தம் கொடுத்து ஒரு மாதிரிக் குரலில் கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு JPயின் அறைக்குள் நுழைந்தாள்.


நடந்ததைக் கேட்ட JP, ரகுவையும் தன் அறைக்கு அழைத்துப் பேசத் துவங்கினார். “இந்த வார ஆர்ட்டிகிள்ஸ் எல்லாம் ஆல்ரெடி வெரிஃபை பண்ணிட்டேன். AC ஆர்ட்டிகிள் மட்டும் நேத்து ஈவினிங் ரெடி ஆனதால நான் அத வெரிஃபை பண்ணல. ரகு, நான் உங்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? எனக்கு கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருக்கு, உன்ன நம்பி அந்த ஆர்ட்டிகிள விட்றேன், பாத்துக்கோன்னு. அப்புறம் எப்டி நீ இப்டி செய்யலாம்?" என்று கேட்டார்.


ரகு, “நான் ஒன்னும் பொய்யா எழுதலையே நடந்தத தான எழுதுனேன்” என்று பதில் கூறினான். “அவ்ளோ பெரிய போலீஸ் ஆஃபிசர், அவருக்கு எவ்ளோ திறமை இருந்தா அவர இங்க உடனே மாத்தி இந்த கேஸ ஹேண்டில் பண்ண சொல்லிருப்பாங்க.... அப்டிபட்டவருக்கு எவ்ளோ வேல இருக்கும்... அப்டி அவரு லேட்டா வந்தது உனக்கு தப்பா தெரிஞ்சிருந்தா நேத்தே நேர்ல அவர்கிட்ட கேட்ருக்கணும், இல்லனா இன்டர்வியூ பண்ணாம திரும்பி வந்திருக்கணும்... அத விட்டுட்டு இப்டி இன்சல்ட் பண்ண கூடாது” என்று பொறிந்து தள்ளினாள் சகி.


“ஏய் நிறுத்துடி.... பெரிய இது மாதிரி கத்திட்டே போற.. நான் சார் கிட்ட தான பேசிட்டு இருக்கேன்.. உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..” என்றவனை JP நிறுத்தி, “பிஹேவ் யுவர்ஸெல்ஃப் ரகு. அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு? ஃபர்ஸ்ட் கொஞ்சம் மேனர்ஸோட பேச கத்துக்கோ... அப்புறம் உண்மைய எழுதலாம்” என்று அவனை அடக்கினார்.


“ஓஹ்.... தெரிஞ்ச பொண்ணுனால சப்போர்ட் பண்றீங்க, அப்டித்தான? எனக்கு இப்டிபட்ட வேலையே தேவ இல்ல. நான் போய் உங்களுக்கு என் ரெசிக்நேஷன் லெட்டர் அனுப்புறேன்” என்று எழுந்தவனை நிறுத்தி, “தேவ இல்ல ரகு.... உங்க டிஸ்மிஸல் லெட்டர் உங்க மெயில்க்கு வரும், உங்க சேலரி பேலன்ஸ் உங்க பேங்க் அக்கௌன்ட்க்கு வரும்... யு மே கோ நவ்.." என்று கதவைக் காட்டினார் JP. சகியை முறைத்து கொன்டே அவன் வெளியே சென்று விட்டான்.


“சாரி மா... இந்த வார காப்பீஸ்லாம் எப்படியும் ஈவினிங் தான் சேல்ஸ்க்கு போகும்.... நான் அத நிறுத்திறேன். இன்னைக்குள்ள அந்த ஆர்ட்டிகிள சரி பண்ணி நாளைக்கு நாம சேல்ஸ்க்கு அனுப்பலாம்.. நீ போய் ACய மீட் பண்ணிட்டு வந்திரு....” என்று சகியிடம் கூறினார்.


“என்ன அங்கிள் அந்த ராஸ்கல்காக நீங்க சாரிலாம் கேட்டுகிட்டு.. சரி நான் கிளம்பறேன் அங்கிள்..." என்று விடை பெற்று வண்டியைக் கிளப்பியவள், 'இதுக்கெல்லாம் நான் தான் காரணமோ? என்னால தான லேட்டா ஆயிடுச்சு அன்னைக்கு..' என்று நினைத்துக் கொண்டாள்.


அடுத்த இருபது நிமிடங்களில் காவலர் குடியிருப்பிற்குள் நுழைந்து, ருத்ரனின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினாள். சற்றுத் தயங்கிக் கொண்டே அழைப்பு மணியை அழுத்த, “கதவு திறந்து தான் இருக்கு, உள்ள வாங்க...” என்று உள்ளிருந்து அவன் குரல் கேட்டது.


உள்ளே வந்தவளைக் கண்டு திகைத்தான். “நீயா... நீ எப்படி.. என்ன வேணும்” என்று அவன் குழம்பிக் கொண்டிருக்கையில், “ஐ ஆம் சக்தி, உங்கள் தமிழகம் பத்திரிக்கைல ரிப்போர்ட்டர்...” என்று முடிக்கும் முன் பத்திக்ரிகையின் அந்த வாரப் பிரதியை அவள் முகத்தில் விட்டெறிந்தான்.


“எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி ஒரு ஆர்ட்டிகிள போட்டுட்டு, என்ட ஹெல்பும் கேக்க வருவ...” என்று உறுமினான். வெளியாகாத இந்தப் பிரதி எப்படி இவனிடம் வந்தது என்று குழம்பி, “இல்ல சார் இந்த காப்பி...” என்று நடந்ததை விளக்க எண்ணியவளின் கையை இறுகப் பற்றிய ருத்ரன், “எல்லாம் உன்னால தான்டி... அன்னைக்கு நீ வந்து என் வண்டில மோதினனால வந்தது.. உன்னால எவன் எவனோ இந்த ஆர்ட்டிகிள பாத்து சிரிக்க போறான்.. இனிமேல் என் கண்ணு முன்னாடி வந்த... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...” என்று முகம் நிறைய கோபத்துடன் திட்டித் தள்ளினான்.


சகிக்குக் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. 'என்ன நடந்துச்சுனு ஒரே ஒரு வார்த்தை கேக்க மாட்டியா?' என்பது போல அவனைப் பார்த்தாள். அதைக் கண்ட அவன் பிடி இறுகியது.


“என்ன? செய்றது எல்லாம் செஞ்சுட்டு இப்போ அழுதுட்டு நிக்குறியா? போடி... போய் நான் இப்போ திட்டுனதையும் உன் பத்திரிக்கைல எழுது... நீயே வெளிய போய்ட்டா மரியாதையா இருக்கும்...” என்று பொறிந்துகொண்டு இருக்கையில், அவன் அலைபேசிச் சத்தம் கேட்டது.


அதைத் தன் படுக்கை அறையில் விட்டதை நினைவு கூர்ந்தவன், படிகளில் ஏறி மேலே சென்று அதை எடுத்துப் பேசினான்.


“ஹலோ சார் திஸ் இஸ் JP. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் வெரி சாரி... அந்த ஆர்ட்டிகிள நான் வெரிஃபை பண்ணாம விட்டதுனால வந்தது. அந்த காப்பிஸ் சேல்ஸ் போறதுக்கு முன்னாடியே நான் ஸ்டாப் பண்ணிட்டேன், பட் உங்களுக்கு அதுக்கு முன்னாடியே அனுப்பி வச்ச காப்பி பத்தி எனக்கு இப்போ தான் தோணுச்சு... அதான் கால் பண்ணி இன்ஃபார்ம் பன்றேன் ...இன்னைக்கு அத கரெக்ட் பண்ணி, நாளைக்கு தான் சேல்ஸ்க்கு அனுப்ப போறோம்” என்று கடகடவெனப் பேசினார் JP.


அதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சி. “என்ன அத ஸ்டாப் பண்ணிட்டீங்களா?” என்று முணுமுணுத்தான். “ஆமா சார்.... நான் நேத்து சொன்னனே ரிப்போர்ட்டர் சக்தி, இன்னைக்கு காலைல அந்த ஆர்ட்டிகிள ரீட் பண்ணதுமே, எப்டி நீங்க இப்டி போடலாம்... அவர் எவ்ளோ பெரிய ஆஃபிசர்.. அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்ன்னு என்ன ஒரு புடி புடிச்சுட்டா..


இன் ஃபேக்ட், அந்த ஆர்ட்டிகிள எழுதுன ரிப்போர்ட்டரோட அவ சண்ட போட்டு, அவன் வேலைய விட்டே போய்ட்டான்... இப்போ கூட அங்க வந்திருப்பாளே... ஓகே சார் நான் வைக்கிறேன்..


அப்புறம் ஒரு பர்சனல் ரெக்வஸ்ட், சகி என் ரிப்போர்ட்டர் மட்டும் இல்ல.. என் க்ளோஸ் ஃபிரண்டோட டாட்டர்... இன்வால்வ்மென்ட் ரொம்ப ஜாஸ்தி... போற எடத்துல எந்த ஆபத்துலயும் சிக்காம அவள கொஞ்சம் பாத்துக்கோங்க..." என்றவற்கு, “கண்டிப்பா...” என்று பதிலளித்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடின. பின், படிகளில் விரைந்தான். கீழே அவள் இல்லை. 'பாவம் அவள பேசவே விடாம அழ அழ திட்டி அனுப்பிட்டனே' என்று தன்னையே நொந்து கொண்டான். அதற்குப் பிறகு அவனுக்கு வேறு வேலையே ஓடவில்லை. அவளின் நினைவுகளே.


இரவு உணவு உண்ணத் தோன்றாமல் படுக்கச் சென்றான். மூடிய கண்களுக்குள் அவள் அழுது கொண்டே நின்ற காட்சி தெரியத் தூக்கமும் வரவில்லை. 'சோலை குறிச்சில பாக்குறப்போ கண்டிப்பா சாரி சொல்லிறனும்' என்று நினைத்துக் கொண்டான்.


'சக்தி...சகி... அப்டித்தான அந்த எடிட்டர் சொன்னாரு.. எவ்ளோ தைரியமா சண்ட போட்டா அன்னைக்கு...' என்று அவளை முதன் முதலில் பார்த்ததும் இரண்டாம் முறை பார்த்தபோது அவளுடன் சண்டை போட்டதும் நினைவிற்கு வந்து, அவன் உதடுகளில் லேசான முறுவல் தோன்றியது.


அவள் ஒருமையில் அவனை அழைத்தது மனதின் ஓரத்தில் இனித்தது. அந்தச் சுகமான நினைவுகளிலேயே தூங்கிப் போனான். அவனுக்கும் அவளுக்கும் திருமணம் ஆவது போல் கனவு கண்டு அதிகாலையில் கண் விழித்தான்.


பின் அவன் அன்று மால்-இல் கண்ட காட்சி நினைவிற்கு வர, 'ச்ச.... அவ இன்னோருத்தனோட காதலி... இனிமேல் இப்டி நினைக்க கூடாது' என்று மனதிற்குக் கடிவாளம் போட்டுக் கொண்டான்.


காவலர் குடியிருப்பில் இருந்து மாலை வீடு திரும்பிய சகி, நேராகத் தன் வீட்டிற்குச் சென்று, தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துவிட்டுக் கட்டிலில் விழுந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து மீண்டும் அழத் தொடங்கி, அப்படியே உறங்கியும் போனாள்.


அடுத்த நாள் அவள் எப்போதும் போல இருப்பதாகக் காட்டி கொண்டாலும், வீடு முதல் அலுவலகம் வரை எல்லோரும், "ஏன் டல்லா இருக்க சகி?” என்று கேட்க, 'ச்ச... அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது.. நாம ஏன் கவலை படணும்.. கோவம் தான வரணும்... இனிமேல் அவனுக்கும் எனக்கும் அஃபீஷியல் டாக்ஸ் தான் இருக்கணும்.. மத்தபடி ஒன்னும் வச்சுக்க கூடாது' என்று நினைத்தவளின் மனம், 'இதுவரைக்கும் அவன அஃபீஷியலா நினைக்கலயா?' என்று கேட்டு, பதில் கிடைக்காமல் விட்டுவிட்டது.


அடுத்த நாள் காலை, மூன்று தோழிகளும் சோலை குறிச்சிக்குக் கிளம்பிச் சென்றனர். அவர்களுக்காக அங்கு அவள் காத்திருந்தாள்.


நிழல் 8


ருத்ரன் அன்று மதுரையில் பதவி ஏற்றான். சோலை குறிச்சி கேஸ் முடியும் வரை தான் அங்கேயே தங்கி அந்த மர்மங்களைக் கண்டுபிடிக்கப் போவதாய்க் கூறிவிட்டபடியால், அந்த ஊர்த் தலைவரிடம் சொல்லி அவனுக்கு அங்கேயே ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருகில் இருந்த காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்றே சோலை குறிச்சிக்குத் தன் பைக்-இல் சென்றான்.


சோலை குறிச்சி வந்த தோழியரை லட்சு-வின் பாட்டி காமாட்சி வரவேற்றார். மாடியில் இருந்த அறைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார். தங்கள் காதலர்களுடன் இரவில் பேச வேண்டும் என்று தனித் தனி அறையை எடுத்துக் கொண்டனர் தோழியர்.


சகிக்கும் தான் வந்த வேலைக்கு அது தான் சரி என்று படவே, ஒத்துக் கொண்டாள். மூவரும் தங்கள் அறைகளுக்குச் சென்று அவர்களது பொருட்களை அதற்கு உரிய இடத்தில அடுக்கி விட்டு, மதிய சாப்பாட்டுக்குக் கீழே வந்தனர்.


ஒரு பெரிய விருந்தே செய்து வைத்திருந்த பாட்டியைப் பாராட்டிவிட்டு, நாளையிலிருந்து ஏதேனும் சாதாரணமாகச் செய்தால் போதுமெனக் கூறிவிட்டு, தோட்டதுப்பக்கம் சென்று அமர்ந்தனர்.


“ஹேய் லட்சு, உங்க ஊரு சூப்பர்.... எவ்ளோ க்ரீனிஷா சுத்தி வயல்.. வெயிலே தெரியாம குளு குளுன்னு காத்து வீசுது.. அப்டியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமா?” என்று கேட்ட சகியை முறைத்தாள் நிலா.


"ஏன்டி முறைக்குற? நான் என்ன அப்டி கேட்டேன்?” என்ற சகியிடம், “இது அவ தூக்கத்துல ஏழாவது உலகத்த நோக்கி ட்ரேவல் பண்ற டைம்... இப்போ போய் வெளிய கூப்பிட்டா கடுப்பாகாம என்ன செய்வா?” என்று லட்சு சிரித்துக் கொண்டே கூறினாள்.


மேலும், “இப்போ நாமளும் போய் கொஞ்சம் படுக்கலாம்... ஈவினிங் ஒரு நாலு மணி போல வெளிய போலாம்” என்றாள் லட்சு. “சரிடி... நீங்க போய் படுங்க.... நான் கொஞ்ச நேரம் இந்த எதுத்தாப்ல இருக்க வயல பாத்துட்டு வர்றேன்” என்று சகி கூற, லட்சுவும் நிலாவும் சரி என்று வீட்டிற்குள் சென்றனர்.


சகி அங்கு இருந்த வயல் வழியாகச் சென்று பக்கத்தில் இருந்த மாந்தோப்பிற்குள் நுழைந்தாள். அப்போது, “ஹலோ” என்று அவள் பின்னே இருந்து குரல் கேட்கவே திரும்பிப் பார்க்க, அங்கு ருத்ரன் ஒரு மெல்லிய புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.


'இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா' என்று ஆச்சர்யத்தில் ஒரு நொடி கண்ணை விரித்தவள், அன்று அவன் திட்டியது நினைவிற்கு வரவே அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கு இருந்து செல்ல எத்தனித்தாள்.


“ஒரு நிமிஷம் சகி, உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று அவள் வழியை மறைத்தான். “என்ன பேசணும்?? ஏதாச்சு இன்னும் திட்டுறதுக்கு மிச்சம் மீதி இருக்கா?” என்று அவள் கேட்க, அவனுக்கு அவள் மனம் புரிந்தது.


“நான் அன்னைக்கு உன்ட என்ன ஏதுன்னு கேக்காம கத்திட்டேன்... அம் ரியலி சாரி... எனக்கு அப்போ JP சார் கால் பண்ணி எல்லாம் சொன்னாரு... அப்பறம் கீழ வந்து பாத்தா உன்ன காணும்.. எனக்காக ஆஃபிஸ்ல சண்டலாம் போட்டியாமே.. தேங்க்ஸ்...” என்று விளக்கினான்.


“உனக்காகலாம் ஒன்னும் இல்ல... அது தப்புன்னு தோணுச்சு அதான்.. அப்பறம் கழுத்த புடிச்சு தள்ளாத குறையா வெளில போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க நான் என்ன உன்னோட...” என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தினாள்.


“நீ என்ன என்னோட...??” என்று கேட்டவனின் கண்களில் குறும்பு மின்னியது. அவன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, எங்கோ பார்த்துக் கொண்டு, “சாரி தான் கேட்டாச்சுல்ல... வழிய விடு” என்றாள்.


அவன் விடாமல், “வீட்டுக்கு வந்தப்போ கைல ஏதோ கட்டு போட்டிருந்தியே.. அன்னைக்கு விழுந்ததா சகி..” என்று அக்கறையாக அவள் கையைப் பற்றிக் காயத்தை ஆராய்ந்தான். அதற்குள் அன்று விழுந்த போது அவன் கத்தியது நினைவிற்கு வர, தன் கையை உருவிக் கொண்டு, “இங்க பாரு, இந்த கேஸ் விஷயத்த தவற நமக்குள்ள எதுவும் கிடையாது..” என்றாள்.


“சரி உன் ஃபோன் நம்பர் குடு..” என்று கேட்டவனை முறைத்தாள். அதைப் புரிந்து கொண்டு, “கேஸ் விஷயமா தான்..." என்று பதில் அளித்தான். “உன் நம்பர் குடு.. ஏதாச்சு வேணும்னா நானே கூப்பிட்றேன்” என்று கூறியவளுக்கு, அவன் எண்ணைக் கொடுத்தான். “ஓகே தேங்க்ஸ்...” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.


'நல்ல பொண்ணு தான்... சின்ன புள்ளையாவே இருக்கா இன்னும்.. எப்டி கோவம் வருது.. அப்பறம் ஏதோ சொல்ல வந்தாளே...' என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு மால்-இல் நடந்தது நினைவிற்கு வந்து தொலைந்தது. இனி அவளைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று தன்னையே திட்டிக் கொண்டு கிளம்பினான்.


தன் அறைக்குள் நுழைந்த சகி, சிறிது நேரம் கட்டிலில் படுத்திருந்தாள். தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். 'அன்னைக்கு அவ்ளோ திட்டினான்... இன்னைக்கு எவ்ளோ ஸ்வீட்டா பேசுறான்... இது தான நான் என் ட்ரீம் பாய் பத்தி யோசிச்சு வச்ச கேரக்டர்... அப்பறம் ப்ரொஃபஷனும் கூட கெத்தா இருக்கனும்ன்னு நினைச்சேன்.. அதே மாதிரி போலீஸ் ஆஃபிசர்.. ஒருவேளை எனக்கு அவன.... ச்ச ச்ச... அப்டிலாம் எதுவும் இல்ல..' என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவளது அறை கதவு தட்டப்பட்டது.


திறந்து பார்த்தால், லட்சுவும் நிலாவும் நின்று கொண்டிருந்தனர். “சுத்தி பாக்கணும்ன்னு சொன்னேல்ல, வா கீழ போய் காபி குடிச்சுட்டு போலாம்” என்று லட்சு அழைத்தாள். உடனே தன் கேமராவை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சகி. கீழே சென்று பாட்டியுடன் பேசிவிட்டு, காபி குடித்து விட்டு, வெளியே கிளம்பினர். இருட்டுவதற்குள் வந்து விட வேண்டும் என்று பாட்டி அவர்களை எச்சரித்து அனுப்பினார்.


வயல் வெளிகள், தோப்பு, ஆறு என்று ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்து விட்டு ஊர் எல்லைக்கு வந்தவர்களுக்கு, தூரத்தில் அந்தப் பெரிய வீடு தெரிந்தது. “ஹேய் அந்த வீடு செமயா இருக்குல்ல. அங்க போய் ஃபோட்டோஸ் எடுத்துக்கலாம் வாங்க..” என்று சகி அழைத்ததற்கு, லட்சு தயங்கி, “வேணாம்டி... அது பேய் வீடுன்னு ஊருக்குள்ள அந்த வீட்டை பத்தி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கத சொல்றாங்க..” என்றாள்.


நிலாவும் அங்கு வேண்டாம் என்று கூற சகி, “அதெல்லாம் ஒன்னும் இருக்காதுடி.. சும்மா வெளிய நின்னு பாத்துட்டு வந்துரலாம்” என்று கூறி அவர்களை இழுத்துச் சென்றாள். அங்கே சென்று வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்ததும் சகி, “ஹேய் கதவு திறந்து தான் இருக்கு... வா உள்ள எட்டி பாக்கலாம்” என்றாள். அவர்கள் மறுக்கவே, “இருங்க நான் பாத்துட்டு வரேன்” என்று கூறி அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.


வீடு இருள் சூழ்ந்து இருந்தது. ஆங்காங்கே இடிந்து கிடந்த துவாரங்கள் வழியாகவும் ஜன்னல் இடுக்குகளின் வழியாகவும் திட்டுத் திட்டாக வெளிச்சம் தெரிந்தது. கீழ்த் தளத்தைச் சுற்றிப் பார்த்த சகி, அங்கு இருந்த பொருட்களை ஆராய்ந்தாள்.


மாடியில் ஏதோ சத்தம் கேட்டதும், தயக்கமாகப் படிகளில் ஏறி மேலே சென்றாள். இங்கு லட்சுவிற்கும் நிலாவிற்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “என்னடி போனவள இன்னும் காணும்.. இவ இப்டித்தான் சொன்னா கேக்கவே மாட்டா...” என்று நிலா பதறிக் கொண்டிருக்கையில் , “ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ...” என்ற சகியின் அலறல் அவர்களுக்குக் கேட்க, எந்த யோசனையும் இன்றி அந்த வீட்டிற்குள் தன் தோழியைத் தேடி ஓடினர்.


நிழல் 9


உள்ளே வந்த தோழியர் இருவரும் ஒவ்வொரு பக்கமாகச் சென்று சகியைத் தேடினர். நிலா மேலே சென்று தேடலாம் எனப் படிகளில் ஏறினாள். மேலே ஒரு அறையில் எதோ சத்தம் கேட்க, உள்ளே எட்டிப் பார்த்தாள்.


அப்போது அவள் பின்னிருந்து யாரோ அவள் பெயரைக் கோரமாக, “நிலாஆஆஆ....” என்று அழைக்கப் பின்னே திரும்பிப் பார்த்தாள். தன் முகத்தில் அலைபேசி வெளிச்சத்தைப் பரப்பிப் பேய் போலச் செய்து காட்டிய சகியைப் பார்த்து "வீஈஈஈல்....." என்று கத்தியே விட்டாள் நிலா. பின் சகி தான் அது என்று தெரிந்ததும், “லூசு லூசு... ஏன்டி இப்டி பண்ண..” என்று அவளை மொத்த ஆரம்பித்தாள்.


கீழே லட்சு சகியைத் தேடிக் கொண்டு இருந்தாள். அவள் பின்னே யாரோ வருவது போலவே இருந்தது, ஆனால் திரும்பிப் பார்த்தல் அங்கு யாரும் இருக்கவில்லை. ஒரு அறைக்குள் நுழைந்தாள்.


அங்கு இருந்த நாற்காலியில் ஏதோ ஒரு உருவம் அமர்ந்து இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் சரியாய்த் தெரியவில்லை. அவள் “சகி... சகி..” என்று அழைத்துக் கொண்டே அந்த உருவத்தை நெருங்கினாள். “இங்க தான் இருக்கேன் வா...” என்று அந்த உருவத்திடம் இருந்து சத்தம் வந்தது. ஆனால் அது சகியின் குரல் போல இல்லை.


அந்த உருவத்தை நெருங்கித் தன் அலைபேசியின் வெளிச்சத்தை அதன் மேல் பரப்பிய அதே நேரம், “லட்சு... லட்சு...எங்க இருக்க?" என்று சகி மற்றும் நிலாவின் குரல் வெளியே கேட்டுத் திரும்பினாள். இந்தப் பக்கம் அலைபேசியின் வெளிச்சத்தில் தெரிந்தது 'அவள்'. சத்தம் கேட்டதும் லட்சு வெளியே ஓடி வந்து விட்டாள், அவளைப் பார்க்காமல்.


மூவரும் வெளியே வந்ததும் சகி விழுந்து விழுந்து சிரிக்க, லட்சுவும் நிலாவும் சேர்ந்து அவளை அடிக்கத் துவங்கினர். அதன் பின் வீடு வந்து, பாட்டியுடன் சிறிது நேரம் கதை பேசி விட்டு இரவு உணவை உண்டு விட்டு, மூவரும் மாடியில் இருந்த தொலைக்காட்சி அறையில் உட்கார்ந்து தாங்கள் எடுத்த படங்களை மடிக்கணினியில் பார்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.


அந்த வீட்டிற்குப் பக்கத்தில் எடுத்த படங்கள் வரவே, ஏதோ ஞாபகம் வந்தவளாக லட்சு, “சகி நான் உன்ன கீழ தேடிட்டு இருந்தப்போ, ஒரு ரூம்ல யாரோ சேர்ல உக்காந்து இருந்த மாதிரி இருந்துச்சு டி... நான் நீ தான்னு நினைச்சு உன்ன கூப்டுகிட்டே பக்கத்துல போனேனா... 'இங்கதான் இருக்கேன் வா' ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. அதுக்கு பக்கத்துல போனப்போ உங்க சத்தம் வெளிய கேட்டு ஓடி வந்துட்டேன்” என்றாள்.


“ஏன்டி எங்களுக்கு தெரியாம தண்ணி கிண்ணி அடிச்சிருகியா?” என்று கேட்ட சகியை முறைத்தாள் லட்சு. “எல்லாம் உன் மன பிராந்தி லட்சு குட்டி... நாம வேணும்ன்னா நாளைக்கு போய் பாக்கலாம் அது யாருன்னு...” என்று சொன்னதும், “ஒன்னும் வேண்டாம்.... இனிமேல் அந்த வீட்டு பக்கம் யாரும் போக வேணாம்... இப்போ போய் படுக்கலாம்” என்று முடிவாகச் சொல்லி விட்டு, எழுந்து விட்டாள் லட்சு.


தன் அறைக்கு வந்த சகி, லட்சு சொல்லியது போல் ஒரு வேளை அங்கே யாராவது இருப்பார்களோ என்று சிந்திக்கத் துவங்கினாள். எதற்கும் நாளை நேரிலேயே போய் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தவள், 'இதுங்களுக்கு தெரிஞ்சா விடாதுகளே.. எப்டி சமாளிச்சு போறது...' என்று யோசிக்க ஆரம்பித்து அப்படியே உறங்கியும் விட்டாள்.


அடுத்த நாள் விடிந்தது. அதிகாலையிலேயே கண் விழித்துக் கீழே இறங்கி வந்த லட்சு, அங்கே இருந்த சமையல்கார அம்மாவிடம் காபியை வாங்கிப் பருகி கொண்டே, “பாட்டி இல்லையா அக்கா?” என்று கேட்டாள்.


“இப்போ தான் கோயிலுக்கு போனாங்க மா.. இன்னைக்கு வெள்ளி கிழமைல.. வர ஒரு மணி நேரம் ஆகும்” என்று கூறினார். சரி என்றுவிட்டுக் கோப்பையை மேசை மீது வைத்துவிட்டுத் தோட்டதுப் பக்கம் நடந்தாள்.


மனம் நேற்று அந்த வீட்டில் நடந்ததையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது வலிய கரம் ஒன்று அவளை மரத்தின் பின் இழுக்கப் பதறிக் கத்தப் போனவள், அந்த கரத்திற்குச் சொந்தக்காரனைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.


அங்கு விஷ்ணு நின்றிருந்தான். “ஹேய் விசு, என்ன இப்டி திடீர்னு வந்திருக்கீங்க நிஜமாவே நீங்கதான.... என்று கேட்டவளை முறைத்து அவள் கன்னத்தைக் கிள்ளினான். “ஆஆஆஆஆஆ வலிக்குது..” என்று அவன் கையில் செல்லமாக அடி வைத்தாள் லட்சு.


“உனக்கு என்னடி சந்தேகம்...” என்று வினவினான். “அதில்ல.. நேத்து தான இங்க வந்தேன், அதுக்குள்ள நீங்களும் வந்து நிக்குறீங்களே அதான் கேட்டேன்” என்றவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு, “என் டீச்சரம்மாவா பக்காம இருக்க முடியல... அதான்..” என்றான்.


“உண்மைய சொல்லுங்க விசு என்னனு...” என்று விடாமல் கேட்டவளை முறைத்து, “இன்னைக்கு என்ன டே?” என்று கேட்டான் விஷ்ணு. சற்றும் யோசிக்காமல், “ஃப்ரைடே..” என்று பதில் கொடுத்தவளை என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.


“இன்னைக்கு ஃபெப் 14 டி... வேலெண்டின்'ஸ் டே...” என்று அவன் சொன்னதும் அசடு வழிந்த லட்சு, “ஆமால்ல... நான் மறந்தே போய்ட்டேன்..” என்றாள். “உனக்கு எது தான் ஞாபகம் இருந்திச்சு...” என்று அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான்.


அதைப் பிரித்துப் பார்த்தவள் அசந்து போனாள். அதில் அவர்களுக்குத் திருமணம் உறுதியாகிய இந்த ஒரு வருடத்தில், அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பு போல் அமைத்திருந்தான். “வாவ்.. தேங்க்ஸ் விசு..” என்றாள்.


“வெறும் தேங்க்ஸ்காகவா இவ்ளோ தூரம் வந்தேன்....” என்று கூறி அவன் கண் சிமிட்ட, அவள் செம்மை பூசிக் கொண்டாள். அதை ரசித்துக் கொண்டே, “சரி நாம வெளிய போகலாம்.. இன்னைக்கு ஃபுல்லா என் கூடத்தான்.... பாட்டி வந்ததும் சொல்லிட்டு போலாம்” என்றான்.


தன் அறையில் கண் விழித்த சகிக்கு ஒரு யோசனை தோன்றியது. 'நாம அங்க போனதையும், லட்சு சொன்னதையும் அந்த சிடு மூஞ்சி கிட்ட சொன்ன என்ன?' என்று யோசித்து, உடனே ருத்ரனின் எண்ணிற்கு அழைத்தாள்.


இரவு எல்லாம் அந்தக் கிராமத்தைச் சுற்றி வந்து விட்டு, அதிகாலையில் தூங்கிய ருத்ரன், தனது அலைபேசி அலறும் சத்தத்தைக் கேட்டு அழைப்பை ஏற்றுக் கண்ணை மூடிக் கொண்டே, “ஹல்லோஓஓஓஓஓ” என்று தூக்கம் கலையாமல் சொன்னான்.


அதைக் கேட்ட சகிக்கு என்னவோ செய்தது. 'ச்ச பாவம்... நல்ல தூக்கத்துல எழுப்பிட்டேன் போல' என்று எண்ணினாள். மீண்டும் அவன், “ஹலோ யாரு...?” என்றதும், “ஹலோ.. நான்... நான் தான்...” என்று அவளுக்கு வார்த்தை வரவில்லை.


குரலைக் கேட்டதும் அது சகி தான் என்று தெரிந்து கொண்ட ருத்ரனுக்குத் தூக்கம் போயே போய் விட்டது. அவளைச் சற்று சீண்டிப் பார்க்கலாம் என்று நினைத்தவன், “நான் தான்னா யாரு?” என்றான்.


“நான்... நான்... சகி... உன்ட்ட கொஞ்சம் பேசணும்..." என்று தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தாள். “சொல்லு சகி, எதுவும் ப்ராப்ளமா?” என்றான் அக்கறையாக. “இல்ல ப்ராப்ளம்லாம் இல்ல... கொஞ்சம் பேசணும், ஃபோன்ல வேண்டாம் நேர்ல மீட் பண்ண முடியுமா?” என்றதும் அவனுக்குச் சந்தோசம் தாங்கவில்லை.


“சரி எங்க வரணும்” என்றவனின் கேள்விக்கு, “ஊரு எண்ட்ரன்ஸ் பக்கத்துல ஒரு பெரிய அரச மரம் இருக்குல்ல... அங்க ஒரு ஒன் ஹவர்ல வர முடியுமா?” என்றாள். “சரி... பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். களைப்பு எல்லாம் பறந்து போகக் கட கடவெனத் தயார் ஆகி, அவசரமாக உணவு தயாரித்து உண்டு விட்டுத் தன் வண்டியைக் கிளப்

பினான்.


சகி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்று அவளுக்காகக் காத்திருந்தான். சகி சரியான நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும் பொழுது அவள் கேசம் காற்றில் கலைந்து பறந்து அவள் முகத்தில் ஆடிய காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.


“சீக்ரமே வந்துட்டியா? எனக்கு கால் பண்ணிருந்தா நானும் வந்திருப்பேன்ல.. இங்க பக்கத்துல தான் வீடு..” என்றாள். “லேட்டா வந்தா மறுபடியும் மேகசின்ல போட்ருவீங்கன்னு பயந்து தான்...” என்று குறும்பாக அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் சற்று சுருங்க, “ஓய் சும்மா சொன்னேன்... நான் இப்போதான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் முன்னாடி வந்தேன்... என்ன பேசணும்? சொல்லு” என்றான்.


நேற்று அந்தப் பெரிய வீட்டிற்குச் சென்றது முதல் லட்சு சொன்னது வரை அனைத்தையும் சொல்ல, அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். “சரி.. நான் பாத்துக்குறேன்.. நீ இனிமேல் அந்த பக்கம் எல்லாம் போகாத.. உன் ஆர்ட்டிகிள்க்கு எதுவும் இன்ஃபர்மேஷன் வேணும்னா என்கிட்ட கேளு சரியா....” என்று அக்கறையாகச் சொன்னவனைப் பார்த்துத் தலையை மட்டும் உருட்டினாள்.


“அப்பறம்...” என்றவனை, 'வேறென்ன' என்பது போல் பார்த்தாள். “அவ்ளோதானா.. மேடம் காலங்காத்தாலையே ஃபோன் பண்ணீங்களா... வேற ஏதாச்சு இருக்கும்ன்னு நினைச்சேன்” என்று குறும்பாகக் கூறினான்.


“வேற என்ன நினைச்ச.?” என்று புரியாமல் கேட்டாள் சகி. “ஹ்ம்ம்... நேத்து நீ ஏதோ சொல்ல வந்து பாதில ஸ்டாப் பண்ணியே.. அது என்னனு சொல்லு, நானும் சொல்றேன்..” என்று குறும்பாகக் கூறி அவன் கண் அடித்துக் காட்டத், தன்னை அறியாமல் கன்னங்கள் சிவந்தன சகிக்கு. அதை அவன் ரசித்துக் கொண்டிருக்கையில் ஒரு பைக்கின் ஹாரன் சத்தம் அவர்களைக் கலைத்தது.


அந்தப் பல்சர்-இல் இருந்தவனைப் பார்த்தவுடன் இருவரின் முகங்களும் மாறின. சகிக்கு மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் என்றால், ருத்ரனுக்குப் பொறாமையும் கோவமும். இதற்குக் காரணமானவன் நம் சூர்யாவே தான்.


அவனைப் பார்த்ததும் சகி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினாள். “டேய் நாங்க நேத்து தானடா வந்தோம், அதுக்குள்ள இப்டி வந்து நிக்குற?” என்றாள். “இன்னைக்கு வேலெண்டின்'ஸ் டே டி... அதான் என் செல்லக்குட்டிய பாக்க ஓடி வந்துட்டேன்... சாரி பைக்ல வந்துட்டேன்... இன்னைக்கு ஃபுல்லா மூவி, கேன்டில் லைட் டின்னர்ன்னு ஒரே என்ஜாய்மென்ட் தான்... சரி சரி ஏறு... எனக்கு வீடு தெரியாது” என்று கூறி, அவளையும் அழைத்துச் சென்றான்.


போகும்பொழுது ருத்ரனிடம், 'ஃபோன் பண்றேன்' என்று சைகையில் காட்டி, சூர்யாவுடன் பறந்து விட்டாள். பைக் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்த ருத்ரனுக்கு எரிச்சலும் கோவமும் வந்தது.


'ச்ச... நான் பாட்டுக்கு இருந்தேன்... இங்க வா அங்க வான்னு சொல்லி... அவன் என்னமோ செல்லக்குட்டின்னு சொல்றான், டி போட்டு பேசுறான்.. இவளும் உரிமையா டான்னு சொல்றா.. இதெல்லாம் பாக்கத்தான் கூப்டாளா.. இவ கூப்டான்னு தூக்கத்த விட்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும்.. இனிமேல் இவள பத்தி நினைக்கவே கூடாது' என்று மனதில் அவளைத் தாளித்து எடுத்தான்.


நிழல் 10


விஷ்ணுவைப் பார்த்த பாட்டி, “என்னடா இந்த பக்கம்?” என்று கேட்டார். “அது... அது.. நம்ம வயல் வேலைலாம் கொஞ்சம் இருக்குல்ல... ஒரு ரெண்டு நாள் அதெல்லாம் பாத்துட்டு அப்டியே வேல செய்றவங்களுக்குலாம் சம்பளம் குடுக்கலாம்ன்னு...” என்று இழுத்தவனைப் பார்த்து, “வழக்கமா உங்க அப்பா தான வருவான்..” என்று சந்தேகமாகக் கேட்டார்.


அதைக் கேட்ட லட்சு கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க விஷ்ணுவோ, “இவ ஏதோ மதுர வர போயிட்டு வரணும்ன்னு சொன்னா... அதான் அப்பா கிட்ட இந்த வாரம் நான் அப்டியே வேலையெல்லாம் முடிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டேன்” என்று லட்சுவை இழுத்துவிட்டான்.


அவள் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்த சகி, “ஆமா பாட்டி, அவ காலேஜ்ல நேத்து கால் பண்ணி ஏதோ வர சொன்னாங்க.. இங்க இருந்து மூணு பஸ் மாறி போகணுமேன்னு அண்ணாவ வர சொல்லிருந்தா..” என்று கூறிக் காப்பாற்றினாள். “சரி போயிட்டு வாங்க” என்று பாட்டி அவர்களை அனுப்பி வைத்தார்.


'ஹப்ப்பாடா... ஒரு டிக்கெட்ட கிளப்பியாச்சு' என்று சகி நிம்மதி அடைகையில், பாட்டி சூர்யாவைப் பார்க்க, “இது என்னோட அண்ணன் பாட்டி.. இவனுக்கு இந்த இயற்கை எல்லாம் ஃபோட்டோ எடுக்க புடிக்கும்... நான் இந்த ஊர பத்தி சொன்னதும் இங்க வந்துட்டான்... நானும் நிலாவும் இவன் கூட போய் ஊர சுத்தி காட்டிட்டு வர்றோம் பாட்டி” என்று அடுத்த டிக்கெட்டையும் கிளம்பினாள்.


நிலா அறைக்குச் சென்று அவளை அழைத்து வெளியே வந்த சகி, சூர்யாவிடம் “என் வேல முடிஞ்சுது... இனிமேல் நீயாச்சு என் அண்ணியாச்சு” என்றாள். “எப்டி டி இன்ஸ்டன்ட்டா இப்டி பொய் சொல்ற.. ஒரு லாயர், எனக்கு கூட இப்டிலாம் வராது..” என்று ஆச்சர்யப்பட்டான் சூர்யா.


“அதெல்லாம் அப்டித்தான்...” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள் சகி. “என்ன சூரி இது, இவள தனியா விட்டுட்டு நாம எப்படி போறது? லட்சுவும் இல்ல... பாட்டிகிட்ட வேற வெளிய போறோம் சொல்லி வச்சிருக்கா... எங்க போவா?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டாள் நிலா.


சூர்யா சற்று குழம்பி யோசிக்கத் தொடங்கியதைக் கண்ட சகி, “இந்த ஊரோட இயற்கை வளம் எல்லாம் பத்தி ஒரு ஆர்ட்டிகிள் எழுதலாம்ன்னு இருக்கேன்... நீங்க போயிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுக்கலாம்ன்னு இருக்கேன்.. ஊருக்குள்ள நாலு அஞ்சு சின்ன பசங்கள புடிச்சு வச்சிருக்கேன்.. அவங்க கூட தான் போறேன்” என்று சமாளித்தாள்.


சரி என்று சூர்யாவும் நிலாவும் கிளம்பப் பெரு மூச்சு விட்டவள், 'ஆனாலும் இந்த நிலா இன்னைக்கு பாத்து இவ்ளோ புத்திசாலியா இருக்க கூடாது... இதுகள கிளப்புறதுக்குள்ள....' என்று நினைத்துக் கொண்டாள்.


தன் பையில் ஃபோன், தண்ணீர் பாட்டில், மதியம் உண்பதற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு ஆப்பிளும் எடுத்துப் போட்டுக் கொண்டு, கேமராவை எடுத்துக் கொண்டு ஊருக்குள் நடந்த சகி, தனக்குச் சந்தேகமாகப்பட்ட இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.


சில ஊர் மக்களிடம் மெதுவாகப் பேச்சு குடுத்து, இதற்கு முன் இதே போல் இறந்தவர்களைப் பற்றி விசாரித்தாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்ல, அதில் பெரும்பாலும் பொதுவாகப் பொருந்தியது அந்த பெரிய வீடு தான்.


அதற்குள் மதியம் இரண்டு மணி ஆகி விடத் தான் கொண்டு வந்திருந்த ஆப்பிளை எடுத்துச் சாப்பிட்டாள். 'அந்த வீட்டுக்கும் இந்த டெத்ஸ்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு, உண்மையிலேயே பேயா இருக்குமா.. இல்ல வேற யாரும்... சம்திங் ராங்' என்று எண்ணினாள் சகி.


எதற்கும் அந்த வீட்டிற்கு இன்னொரு முறை போய் பார்க்கலாம் என்று நினைத்தவளுக்கு, அங்கு செல்ல வேண்டாம் என்று ருத்ரன் சொன்னது நினைவு வந்தது. 'பேசாம அவனையும் வர சொன்னா என்ன' என்று நினைத்தவள், தன் அலை பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.


வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ருத்ரனின் அலைபேசி ஒலிக்க, ஓரமாக நிறுத்தி விட்டு அதை எடுத்துப் பார்த்தான். 'இவள நினைக்க கூடாதுன்னு நினைச்சா இவ வேற...' என்று அழைப்பைத் துண்டித்தான். மீண்டும் ஒரு முறை அவள் அழைக்க, மீண்டும் துண்டித்தான்.


அவள் விடாமல் அழைத்துக் கொண்டே இருக்க, அதை ஏற்றவன், “என்ன வேணும் உனக்கு?” என்று சற்றே எரிச்சலாகக் கேட்டான். “உன்ன பாக்கணும், ஒரு இடத்துக்கு..” என்றவளை முடிக்க விடாமல், “எனக்கென்ன உன் கூடயே சுத்துறது தான் வேலைனு நினைச்சியா.. உன் இஷ்டத்துக்கு அங்க வா இங்க வான்னு கூப்டுகிட்டே இருக்க.. இன்னொரு தடவ என்ன டிஸ்டர்ப் பண்ண... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று பொறிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


சகிக்குக் கண்களில் கண்ணீர்க் குளம் கட்டியது. அதைக் கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டு, 'நம்ம தப்பு தான்... அவன் அப்டித்தான்னு தெரிஞ்சும் அவன்ட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணாம இப்டி அசிங்க பட்டுகிட்டே இருக்கோம்.. ச்ச... தனியாவே அந்த வீட்டுக்கு போகலாம்' என்று அந்த வீட்டின் பாதையில் நடந்தாள்.


ஆள் நடமாட்டமே அந்த இடத்தில் இல்லை. அந்த வீட்டை அடைந்த சகி, மேலும் முன்னேரத் தயங்கி நின்றாள். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த வீட்டின் தோட்டம் வழியே நடந்து வீட்டின் கதவருகே சென்றாள்.


கதவைத் தள்ள வந்தவள் ஒரு நொடி தயங்கி, 'ஜன்னல் வழியா ஃபர்ஸ்ட் பாப்போம்...' என்று எண்ணினாள். பல வருடங்களாகத் திறக்கப் படாத ஜன்னல்கள், அவள் தள்ளத் திறக்கவில்லை. பின் அங்கும் இங்கும் தேடித் தோட்டத்தில் இருந்து ஒரு இரும்புக் கம்பியை எடுத்து வந்து ஜன்னலைத் தள்ளினாள். அது லேசாகத் திறந்தது.


அதன் வழியே தன் அலைபேசியின் வெளிச்சத்தைப் பரப்பி உள்ளே பார்த்தாள். ஒரு உருவம் படிகளில் ஏறிச் சென்றது போலத் தெரிந்தது. இதற்குள், அந்த வீட்டின் மறுபுற தோட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு ஏதோ சத்தம் கேட்க, அவன் வீட்டின் முன் பக்கம் வந்தான்.


ஜன்னல் வழியே யாரோ தனக்கு முதுகு காட்டி வீட்டினுள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, அது சகி போல் தோன்றவும், அவன் அருகில் சென்று சகியின் தோள்களில் கரம் பதித்தான். அதிர்ச்சியுடன் “ஆஆஆஆஆஆ...” என்று கத்தித் திரும்பியவளின் அலைபேசி கீழே விழுந்தது.


அங்கு ருத்ரனைப் பார்த்தவள் சற்று நிம்மதி அடைந்தாள். “உன்ன இங்க வர கூடாதுன்னு சொன்னனா இல்லையா...” என்றவனின் அதட்டலில் சற்றே மிராண்ட சகி, தன்னைத் தேத்திக் கொண்டு, “நீ சொல்றதெல்லாம் நான் ஏன் கேக்கணும்? நான் ஃபோன் பண்ணப்போ டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிட்டு, இப்போ எதுக்கு என்ன கேள்வி கேக்கற?” என்று திருப்பிக் கேட்டாள்.


“இந்த மாதிரி ஏட்டிக்குப் போட்டியா பேசுறதெல்லாம் அவன் கிட்ட வச்சுக்கோ... என்கிட்ட பேசுனா பல்ல தட்டிருவேன்...” என்று அவன் கடுகடுக்க, 'இவன் எவன பத்தி சொல்றான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சகி.


“இப்போ இங்க இருந்து போக போறியா இல்லையா.. இல்லனா JP சார் கிட்ட சொல்லி இந்த கவர் ஸ்டோரிய நிறுத்த சொல்லிருவேன்” என்று மிரட்ட, அவனை முறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றவள், “போடா லூசு..” என்று கத்திவிட்டுக் குடுகுடுவென ஓடிவிட்டாள்.


கோவம் தலைக்கேற அங்கிருந்து கிளம்ப எண்ணியவன், ஜன்னல் அருகே கிடந்த சகியின் அலைபேசியைப் பார்த்து, அதை எடுத்துப் பத்திர படுத்திக்கொண்டான்.


மாலை சகி வீட்டிற்கு வரவும் மற்றவர்கள் வரவும் சரியாக இருந்தது. உள்ளே சென்றவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். இரவு உணவு முடித்து விட்டுத்தான் கிளம்ப வேண்டும் என்று சூர்யாவை வலுக்கட்டாயமாய் இருக்கச் சொல்லிவிட்டார் பாட்டி.


எல்லோரும் அமர்ந்து இரவு உணவு உண்டனர். சூர்யாவிடம் ஊரைப் பற்றி விசாரித்தார் பாட்டி. “ரொம்ப புடிச்சிருக்கு பாட்டி.. இதெல்லாம் சுத்தி பாக்க ஒரு நாள் பத்தல..” என்று அடித்துவிட்டான். அதை உண்மை என்று நம்பிய பாட்டி, “விஷ்ணு இன்னும் ஒரு மூணு நாள் இங்க தான் இருப்பான்.. நீயும் அவன் கூட இருந்து சுத்தி பாத்துட்டு போயேன்” என்று சகிக்குச் சாதகமாக எடுத்துக் கொடுக்க,


சகியும், “ஆமா சூரி.. இங்க இரேன்.. ஜாலியா இருக்கும்.. விசு அண்ணாக்கும் ஒரு கம்பெனி கிடைக்கும்” என்று அவனை ஊக்குவித்தாள். அவளைச் சந்தேகமாகப் பார்த்த சூர்யாவும் கடைசியில், நிலாவுடன் ஊர் சுற்றலாமே என்று ஒத்துக் கொண்டான். இன்று வீட்டிற்குச் சென்று தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு நாளை வருவதாகக் கூறி விடைபெற்றான்.


சிறிது நேரம் கழித்துத் தன் அலைபேசியைக் காணவில்லை என்று வீட்டில் அங்கும் இங்கும் தேடிய சகி, நிலாவின் அலைபேசியில் இருந்து தன் எண்ணிற்கு அழைத்தாள். அது தொடர்பு எல்லைக்குள் இல்லாமல் போகவே, அந்தப் பெரிய வீட்டில் தான் இருக்க வேண்டும், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டாள்.


இரவு தன் வீட்டிற்கு வந்த ருத்ரன், உணவு சமைத்து உண்டுவிட்டு படுக்கை அறைக்குச் சென்று அலுப்பாகக் கட்டிலில் விழுந்தான். பின் நினைவு வந்தவனாக, அவன் சட்டைப் பையில் இருந்து சகியின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.


அதில் ஏதோ ஒரு கார்ட்டூன் படம் வால் பேப்பராக இருக்க லேசாக முறுவல் தோன்றியது அவன் உதடுகளில். அது ஏதோ பேட்டர்ன் போட்டு லாக் ஆகி இருந்ததால், அவனால் அதற்க்கு மேல் ஆராய முடியவில்லை.


அதை அப்படியே அவன் அலைபேசிக்கு அருகிலேயே வைத்துவிட்டுக் கண்ணை மூடித் தூங்க முயற்சிதான். அப்போது சகியின் அலைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தவன் அதில், அவள் பின்னே இருந்து சூர்யாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நிற்பதைப் போல் எடுத்த புகைப்படம் மின்னியத்தைக் கண்டு பற்களைக் கடித்தான்.


பின், படத்திற்கு மேலே, “அண்ணா காலிங்...” என்ற எழுத்துக்களைப் பார்த்தவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கட்டிலில் இருந்து குதித்து எழுந்தவன், 'இவன்...இவன் சகியோட அண்ணனா.. ச்ச இப்டி யோசிக்கவே இல்லையே நாம... அப்போ அவ என்னோட சகி தானா..' என்று நினைத்து மகிழ்ந்தான்.


மீண்டும் கட்டிலில் படுத்து, 'பாவம் அந்த வீட்டுக்கு போகத்தான் நம்மள கூப்டருக்கா போல.. நாம கோவத்துல திட்டிட்டோம்.. என்ன நினைச்சிருப்பா?' என்று சிந்திக்கத் துவங்கினான். 'அதான் போகும் போது சொல்லிட்டு போனாளே, போடா லூசுன்னு' என்று அவன் மனசாட்சி பதில் கொடுக்க, அவன் உதடுகள் புன்னகைத்தன.


ஏதோ நினைவு வந்தவனாக, 'நாம நம்பர என்னன்னு சேவ் பண்ணிருப்பா?' என்று, அவன் அலைபேசியிலிருந்து அவள் எண்ணிற்கு அழைத்தான். சகியின் அலைபேசி 'சிடு மூஞ்சி காலிங்...' என்ற வாக்கியம் மின்ன அலறியது.


அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவன், 'சரியான ஆளுதான்... ஃபோன்லயே இப்டி வச்சிருக்கான்னா, மனசுல என்னல்லாம் திட்டிருப்பாளோ... ராட்சசி' என்று எண்ணிச் சிரித்தான்.


பின் அதில் மின்னிய படத்தைக் கண்டு அதிர்ந்தான். அது அவன் அந்த மால்-இல் காபி குடித்துக் கொண்டிருந்தபோது எடுத்திருக்க வேண்டும். 'அப்போ அன்னைக்கு அவளும் என்ன பாத்தாளா.. ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கான்னா, என்ன அவ்ளோ புடிக்குமா...' என்று நினைத்து மகிழ்ந்தான். அந்தச் சுகமான நினைவுகளிலேயே உறங்கியும் போனான்.


நிழல் 11


காலையில் கண் விழித்த சகியைப் பக்கத்துக்கு ஊரில் உள்ள அருவிக்கு அழைத்தனர் தோழியரும் அவர்களின் காதலர்களும். தனக்கு வேலை இருப்பதாகவும் பாட்டிக்குச் சந்தேகம் எழாமல் இருக்க அவர்களுடன் வருவது போல் வந்து, பின் தனது வேலையைப் பார்க்கச் செல்வதாகவும் கூறி விட்டாள்.


அதன்படி குளித்துத் தயார் ஆகி அவர்களுடனேயே கிளம்பி வெளியே சென்று, சற்று தூரம் சென்ற பின் காரில் இருந்து இறங்கி அவர்களைப் போகச் சொன்னாள். கார் மறையும் வரை பார்த்து விட்டு, அந்தப் பெரிய வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினாள்.


வீட்டை அடைந்து தன் அலைபேசி எங்கேனும் விழுந்து கிடக்கிறதா என்று தேடத் துவங்கியவள், தனக்குப் பின்னல் யாரோ வருவது போல இருக்க திரும்பிப் பார்த்தாள். அங்கு அவள் நிழலைத் தவிர யாரும் இல்லை.


மீண்டும் தன் தேடலைத் தொடர்ந்தாள். 'ஒரு வேள ஜன்னல் வழியா உள்ள விழுந்திருக்குமோ?' என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள்.


“சகிஇஇஇ...” என்று யாரோ தன்னை அடிக்குரலில் அழைப்பது கேட்டுப் பதறித் திரும்பினாள். அவளது பயந்த முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கு ருத்ரன் நின்றிருந்தான். “நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும்” என்றவனுக்கு ஒரு முறைப்பை மட்டும் கொடுத்து விட்டு நடக்க துவங்கினாள்.


“இத தேடி தான வந்த...” என்று அவன் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள், அவன் கையில் இருந்த தன் அலைபேசியில் நிலைத்தன. அவள் அதை வாங்கப் போகையில், அவன் தன் கையைப் பின்னுக்கு இழுத்து, “அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தெரியணும்...” என்றான்.


'என்ன' என்பது போலப் பார்த்தவளிடம், “அன்னைக்கு பாதில நிறுத்துனது....” என்று அவன் சொல்லும் போதே அவனை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். “சரி சரி... இந்தா.. எவ்ளோ கோவம் வருது.. என் பாடு கஷ்டம் தான் போல..” என்று கூறி அவளிடம் அவள் அலைபேசியைக் கொடுத்தான்.


எதுவும் கூறாமல் வெடுக்கென அவன் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள். “இனிமேல் எங்கயும் தனியா போகாத... உனக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சுன்னா என்ன கூப்டு, நான் வர்றேன்..” என்றவனை முறைத்து விட்டு, “சார்க்கு ஏகப்பட்ட வேல இருக்கும்... என் கூடவே சுத்துறது தான் வேலையா?” என்று அவன் நேற்று கூறியது போல் கூறினாள்.


அதைக் கேட்டவன், “சாரி சகி... நான்....” என்றவனைப் பாதியிலேயே மறித்து, “திடீர்னு நல்லா பேசுற... திடீர்னு எரிஞ்சு எரிஞ்சு விழுற.. எனக்கு ஒவ்வொரு தடவையும் எப்டி இருக்கு தெரியுமா..” என்று கூறியவளின் கண்கள் குளம் கட்டின.


அதைக் கண்டு பொறுக்க முடியாத ருத்ரன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “சாரி டா குட்டிமா... நான் எதோ டென்ஷன்ல... நீ இவ்ளோ கஷ்ட பட்டிருப்பன்னு எனக்கு தெரியல... ரியலி சாரி” என்று மென்மையாகக் கூறினான்.


சிறிது நேரம் அப்படியே இருந்தவர்களை சகியின் அலைபேசிச் சத்தம் கலைத்தது. எடுத்துப் பேசியவள், “எந்த லோனும் வேண்டாம்” என்று கூறித் துண்டித்தாள். 'இந்த நேரத்துலயா அந்த லோன்காரன் கால் பண்ணனும்...' என்று நொந்து கொண்டான் ருத்ரன்.


இருவரும் அமைதியாகச் சிறிது தூரம் நடந்தனர். “ஆமா நீ எப்டி உன் ஃபிரெண்ட்ஸ் இல்லாம தனியா வர்ற? அவங்களுக்கு சந்தேகம் வராதா?” என்று அமைதியைக் கலைத்தான். “ஊஹும்ம்ம்” என்று தலையை ஆட்டிய சகி, தன் தோழிகளின் காதலைப் பற்றியும், பாட்டிக்குச் சந்தேகம் வராத படி அவர்களுடனேயே வெளியே வருவது பற்றியும் விளக்கினாள்.


அதைக் கேட்ட ருத்ரனுக்கு மால்-இல் அவளைக் கண்ட போது நடந்ததும், நேற்று காலை சூர்யா சொன்னதும் இப்பொது தெளிவாக விளங்கியது. “அவங்க எப்போ வருவாங்க?” என்றவனுக்கு “ஈவினிங் ஆகும்...” என்று பதில் அளித்தாள்.


“டெய்லி ஈவினிங் வர இப்டித்தான் ஊர்ல தனியா சுத்திட்டிருகியா?” என்று முகம் இறுகக் கேட்டான். “நான் எங்க தனியா சுத்துறேன், அதான் நான் போற எடத்துக்கெல்லாம் நீ வந்து என்ன திட்டி அனுபிட்றியே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.


“சரி சரி... நான் இந்த கேஸ் விஷயமா தான் அலைஞ்சுட்டு இருக்கேன், நீயும் என் கூடவே வா.. தனியா இப்டி சுத்தாத..” என்று கூறினான். “ஹ்ம்ம்... இப்போ எங்க போறோம் AC சார்?” என்றாள் நக்கலாக. “என் வீட்டுக்கு போய் சாப்பிட்டு, இதுவரைக்கும் இருக்க கேஸ் ஹிஸ்டரி உனக்கு தர்றேன்” என்றான். அதன் படி இருவரும் அவன் வீட்டிற்கு நடந்தனர்.


அங்கு சென்று முன்னறையில் அமர்ந்து வழக்கம் போலத் தன் பையில் இருந்த பிஸ்கட்டை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தாள் சகி. ருத்ரன் 'என்ன இது' என்பது போல் அவளைப் பார்க்க, “அவங்க இல்லாம லஞ்ச்க்கு வீட்டுக்கு போனா மாட்டிக்குவேன்ல.. அதான்... நீயும் எடுத்துக்கோ” என்று அவனிடம் நீட்டினாள்.


அவளை முறைத்த ருத்ரன், “அதுக்காக டெய்லி இத போய் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்? அறிவுங்கிறது கொஞ்சம் கூட கிடையாது” என்று அவளைப் பொறிந்து கொண்டே உள்ளே சென்று இரு தட்டுகளில் உணவை வைத்து எடுத்து வந்து, அவளிடம் ஒன்றை நீட்டினான்.


“கொஞ்சம் சிரிச்சுகிட்டே குடுத்தாத்தான் என்ன...” என்று முணுமுணுத்துக் கொண்டே அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் முணுமுணுத்தது அவன் காதுகளில் விழ, “சிடு மூஞ்சின்னா அப்டி தான் இருக்கும்..” என்று அவன் கூறிய பதிலில் சகிக்குப் புரை ஏறியது.


'ஒரு வேள ஃபோன்ல இருக்கிறத பாத்துட்டானோ...' என்று அவனைப் பார்க்க, அவன் ஒன்றும் தெரியாதது போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த சகி, “சாப்பாடு சூப்பர்.. சமையலுக்கு யாரும் வர்றாங்களா?” எனக் கேட்டதற்கு, “நான் தான் செஞ்சேன்... வேணும்னா நாளைல இருந்து நீ வந்து சமைச்சு போடு” என்றான்.


திரு திருவென விழித்தவள், “எனக்கு சமைக்க தெரியாது...” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “சரி விடு, எனக்கு ஓரளவு தெரியும் சமாளிச்சுக்கலாம்...” என்றதும், அவள், “என்ன சமாளிக்கணும்?” என்று கேட்டாள்.


“எப்பயும் கேக்குறது தான்... அன்னைக்கு சொன்னத சொல்லு...” என்றதும், “சரி சரி.... கேஸ் ஹிஸ்டரி எக்ஸ்பிளைன் பண்ணு.. டைம் ஆச்சு” என்றாள். 'ஃப்ராடு' என்று நினைத்துக் கொண்ட ருத்ரன், இதற்கு முன் நடந்த கொலைகளின் வெவ்வேறு அறிக்கைகளையும் அவளிடம் காட்டி விளக்கினான்.


அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவள், அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள். “சகி ஒன் மினிட்.. நானே ட்ராப் பண்றேன்” என்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அதைக் கிளப்பி, “ஏறு..” என்றான். அவள் சற்று தயங்கியதைக் கண்டு அவன் முகம் இறுக, 'அச்சச்சோ... மறுபடியும் முருங்க மரம் ஏறிட போறான்' என்று அவன் பின்னே அமர்ந்து கொண்டாள்.


ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்-ஐ நிறுத்தியவன், அவளை இறங்கச் சொல்லித் தானும் இறங்கி பைக்-இல் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்னாச்சு?” என்று சகி கேட்டதற்கு, “வீட்லயே கேக்கணும்ன்னு நினைச்சேன், மறந்துட்டேன். நேத்து என்ன எதோ சொல்லிட்டு ஓடுனியே..” என்றபடி அவளை நெருங்கினான்.


அவன் முன்னே வர வரப் பின்னே சென்ற சகி, அதற்கு மேல் போக முடியாமல் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றாள். தன் இரு கைகளையும் மரத்தில் ஊன்றி அவளை அங்கேயே சிறை பிடித்த ருத்ரன், “சொல்லு டி... நேத்து என்ன சொன்ன?” என்று குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்கச் சகிக்குப் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது.


“போடான்னு... தெ... தெரியாம.. சாரி... இனிமேல் சொல்ல மாட்டேன்..” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள். “அப்போ சொன்னதுக்கு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா?” என்று கூறி மேலும் அவன் நெருங்கக், கண்களை மூடிக் கொண்டாள்.


சிறிது நேரம் அப்படியே இருந்த சகி, கண்களைத் திறந்து பார்த்தபோது ருத்ரன் அவளைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து கோபமடைந்த சகி, அவனைத் தள்ளி விட்டு முறைத்து கொண்டே விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள்.


“ஹே சகி.. சகி.. சும்மா தான... நில்லு” என்று அவள் கையைப் பற்றித் தடுத்து, “நீ அப்டி கூப்பிட்டது எனக்கு புடிச்சு தான் இருந்துச்சு.. என்னோட சகிக்கு இல்லாத உரிமையா...” என்றான். அதை கேட்ட சகி கண்கள் விரித்துப் பார்த்தாள்.


“இப்டிலாம் பாக்காத... பயமா இருக்கு” என்றவனை, “போடா” என்றாள் செல்லமாக. அவன், “என்னடா ருத்ரா உன் நிலைமை இப்டி ஆகிருச்சே..” என்று சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.


வீட்டிற்குச் சற்று முன்பாகவே இறங்கிக் கொண்டு, அவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் சகி. ருத்ரனும் அவள் உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு வீடு திரும்பினான்.


ருத்ரனின் நினைவுகளால் சகியின் உதடுகளில் உறக்கத்திலும் சிறு கீற்றுப் புன்னகை தவழ்ந்தது. அப்போது அவளது அலைபேசி அலற, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவள், அதில் கேட்ட செய்தியில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.


ருத்ரன் அந்தப் பெரிய வீட்டில் மூச்சற்று விழுந்து கிடப்பதாகவும், அவனது அலைபேசியில் சகியின் எண் கிடைத்ததாகவும், விரைந்து அங்கே வரும் படியும் அந்தப் பெயர் தெரியாதவன் கூறினான்.


சகிக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. தனது அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு விரைந்தாள். அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.


'என் ருத்ராக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது கடவுளே' என்று வேண்டிக்கொண்டாள். அந்த வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்தாள். நிலவொளியில் யாரோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்பது தெரிந்ததும் அங்கே விரைந்தாள்.


குப்புறக் கிடந்தவனை, “ருத்ரா...” என்று அழைத்துத் திருப்ப, வீல் என்று கத்திக் கொண்டு வீட்டின் வெளியே ஓடியவள், ஏதன் மீதோ மோதி நின்றாள். நிமிர்ந்து பார்த்தால், அங்கு ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.


“ருத்ரா... ருத்ரா... உனக்கு ஒன்னும் ஆகலேல்ல... நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா.. என்ன விட்டு போக மாட்டேல்ல..” என்று ஏதேதோ உளறிக்கொண்டு அவனை இறுக அணைத்து, அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு அழுதாள்.


“சகி என்னமா.. என்னாச்சு.. எதுக்கு இப்டி அழுற?” என்று அவன் அவளது முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். தோட்டத்தில் கண்ட காட்சி நினைவிற்கு வர, “ருத்ரா, அங்க யாரோ...” என்று அந்த மரத்தைச் சுட்டிக் காட்டினாள். “அங்க என்ன... வா..” என்று அவளைத் தன் தோளோடு அணைத்தவாறே கூட்டிச் சென்றான்.


அங்கே கிடந்தது ஒரு பிணம். இது வரை நடந்ததைப் போலவே கண்கள் விரிய, வாய் பிளந்து வெளிறிப் போய் இருந்த உடல். அதைக் கண்டு அதிர்ந்தவன், தன் அலைபேசி மூலம் அந்த ஊரின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தான்.


அந்த உடலைச் சற்று உற்றுப் பார்த்த சகி, “இது ரகு... எங்க ஆஃபீஸ்ல வேல செஞ்சான்.. அன்னைக்கு கூட உன்ன இன்டர்வியு பண்ணானே அவன் தான்..” என்றாள். “அவன் எப்படி இங்க....” என்று யோசித்தவன், அங்கு காவல் துறையும் தடயவியல் நிபுணர்களும் வரவே அவர்களிடம் நடந்ததை விளக்கி விட்டுச் சகியைத் தனியாகச் சற்று தள்ளி அழைத்துச் சென்றான்.


“சகி இந்த டைம்ல நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டவனிடம் நடந்ததைச் சொன்னாள். “என்னடி... எனக்கு ஒரு ஃபோன் பண்ணி பாத்திருக்கலாம்ல.. எவனோ சொன்னத வச்சு நடு ராத்திரில இப்படியா வருவ.. உனக்கு ஏதாச்சு ஆகிருந்தா..” என்று அக்கறையுடன் கேட்டான் ருத்ரன்.


“எனக்கு அப்போ பயத்துல அதெல்லாம் தோணவே இல்லடா... என் ருத்ராக்கு ஒன்னும் இருக்க கூடாதுன்னு தான் மைன்ட்ல இருந்துச்சு..” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கின. அவள் கூறியது அவன் மனதில் இனிக்க, அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.


சிறிது நேரம் கழித்து, “சரி வா... விடிய போகுது, அதுக்குள்ள உன்ன வீட்ல விட்டுறேன்” என்று அவளை வண்டியில் அழைத்துச் சென்று வீட்டின் முன் நிறுத்தினான். அவள் இறங்கிச் சற்று தூரம் நடந்ததும், “சகி..” என்று அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் சகி.


“பத்திரமா இரு...” என்று கூறியவனுக்கு, “என்ன பத்திரமா பாத்துக்க தான் நீ இருக்கியே..” என்று தலையைச் சாய்த்துப் புன்னகைத்துக் கூறியவள் உள்ளே சென்று விட்டாள். அவள் பதிலில் குளிர்ந்து போன ருத்ரன் சிறிது நேரம் அங்கேயே நின்று, பின் கிளம்பிச் சென்றான்.


மீண்டும் பிரேத பரிசோதனையில் அதே முடிவுகள். உண்மையைக் கண்டறிவானா ருத்ரன்?


நிழல் 12


நடந்து முடிந்த ஏழாவது கொலை விஷயமாக ருத்ரன் மதுரை செல்ல வேண்டியதாக இருந்தது. இரண்டு நாட்கள் அவன் கால்களில் சக்கரம் கட்டிப் பறந்து கொண்டிருந்தான். சகியின் நினைவுகள் அவ்வப்போது வந்தாலும் அவளுடன் பேச நேரம் கிடைக்கவில்லை.


இங்கு சகி தன் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தாள். தனியாக எங்கும் செல்லக் கூடாதென்றும் முக்கியமாக அந்தப் பெரிய வீட்டுப் பக்கம் போகவே கூடாதென்றும் ருத்ரன் கண்டிப்பாக அவளிடம் கூறி விட்டுச் சென்றிருந்தான். ருத்ரனைப் பார்க்காமல் பேசாமல் இருந்தது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. சூர்யாவும் விஷ்ணுவும் கூட கிளம்பி விட்டிருந்தனர்.


ஒரு நாள் இரவு பாட்டியுடன் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாட்டியிடம் சகி, “பாட்டி இந்த ஊர்ல பேய் கதைலாம் ஒன்னும் இல்லையா?” என்று கேட்டாள். “இவ ஒருத்தி.. பேய் பேய்ன்னு எப்போ பாத்தாலும்” என்று நிலா நொந்து கொள்ள, “அதான.. அடியே அதெல்லாம் இப்ப நைட் தேவையா? பேசாம இரு” என்று லட்சு ஒத்து ஊதினாள்.


“சும்மா இருங்கடி, நைட் கேட்டா தான் நல்லா இருக்கும்.. நீங்க சொல்லுங்க பாட்டி” என்று பாட்டியை ஊக்குவித்தாள் சகி. பாட்டி, “அதெல்லாம் நிறைய இருக்கு கதை... ஆனா பெரும்பாலும் இந்த ஊர்ல பேச பட்றது அந்த பெரிய வீடு பொன்னிய பத்தி தான்” என்றதும், “அந்த ஊர் எல்லைல இருக்க வீடா பாட்டி?” என்று கேட்டாள் சகி.


“ஹ்ம்ம் ஆமா... ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி, அந்த வீட்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. வசதியான பண்ணையார் குடும்பம். பண்ணையார், அவர் மனைவி, அப்புறம் பொன்னின்னு அவங்க பொண்ணு.. மூனு பேருதான்.


அந்த பொண்ணுக்கு ஒரு பதினெட்டு வயசு இருக்கும்போது பண்ணையார் நோய்வாய் பட்டு இறந்துட்டாரு. அவரோட மனைவியும் அந்த கவலைலயே ஒரு வருஷத்துல இறந்துட்டாங்க. சொத்து மேல ஆச பட்ட சொந்தக்காரங்க பொன்னிய ரொம்ப கொடும படுத்தி எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டாங்க.


உயில்படி அந்த வீடு மட்டும் அவ கல்யாணத்துக்கு அப்பறம் புருஷனோட சேந்து கையெழுத்து போட்டா தான் விக்க முடியும்ன்னு இருந்தனால சொந்தத்துலயே ஒரு பையன அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.


அவ அப்பா அம்மா இருந்த வீடுன்னு அத விக்க மாட்டேன்னு சொல்ல, அவன் அவள பண்ண கொடும கொஞ்சம் நஞ்சம் இல்ல.. ஒரு நாள் அந்தப் பாவி அவள என்ன செஞ்சானோ, கோவத்துல அவன சுத்தியாலயே அடிச்சு கொன்னுட்டு, பொன்னியும் அந்த வீட்லயே தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா..


அன்னைல இருந்து அந்த வீட்டை யாரும் சொந்தம் கொண்டாட கூடாதுன்னு அவ ஆவி அந்த வீட்டையே சுத்தி வர்றதாவும், பொண்ணுக்கு தீங்கு நினைக்குறவன சும்மா விடமாட்டா பொன்னினும் ஊருக்குள்ள பேச்சு” என்று முடித்தார் பாட்டி.


ஆர்வமாகக் கதை கேட்ட சகி, “பாவம்ல பாட்டி... எவ்ளோ கஷ்ட பட்ருப்பாங்க... நீங்க அந்த பொன்னிய பாத்திருக்கிங்களா பாட்டி.. அவங்க எப்படி இருப்பாங்க?” என்று பொன்னிக்காக வருந்தி அவளைப் பற்றிக் கேட்டாள்.


பாட்டி “ஹ்ம்ம் அப்போ எனக்கு இருவது வயசு.. எங்கள விட சின்ன பொண்ணுனாலும் எங்க கூடயே தான் சுத்திட்டு இருப்பா.. உன்ன மாதிரி தான் சகி, ரொம்ப சுட்டியான பொண்ணு.. கல கலன்னு பேசுவா..


இதோ நாங்க ஃபிரண்ட்ஸ்லாம் சேந்து அப்போ ஊர்ல புதுசா ஆரம்பிச்ச ஃபோட்டோ ஸ்டுடியோல போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்.. இதுல நாலாவதா நிக்கிறா பாரு, அவதான் பொன்னி” என்று அவர்களிடம் அந்தப் பழைய புகைப்படத்தை நீட்டிக் கூறினார்.


அதை வாங்கிப் பார்த்த தோழியரிடம், “சரி சரி, போய் படுங்க.. நேரம் ஆச்சு” என்று எழுந்து சென்றார் பாட்டி. மேலே செல்லும் போது சகி மனதில் குறும்பு தலை தூக்க, “லட்சு, நீ அன்னைக்கு அந்த வீட்ல யாரையோ பாத்தேன்னு சொன்னியே... ஒருவேள பொன்னியா இருக்குமோ?” என்று நோகாமல் கொளுத்திப் போட, லட்சு அழாத குறையாக, “ஏன்டி... நானே எப்படி தூங்க போறோம்ன்னு தெரியாம உக்காந்திருக்கேன்... நீ வேற” என்று அவளை அடிக்கத் துரத்தினாள்.


“சரி சரி, சண்ட போடாதீங்க.. வாங்க இன்னைக்கு மூனு பேரும் சேந்தே தூங்குவோம்” என்று நிலா இருவருக்கும் இடையில் வெள்ளைக் கோடி பறக்க விட, “இங்க பாருடி, தனியா படுக்க பயமா இருக்குனு எப்படி பிட்டு போட்றான்னு” என்று சகி சொல்ல, அங்கு சிரிப்பலை பரவியது. அன்று இரவு பொன்னியைப் பற்றி வெகு நேரம் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்த சகி நள்ளிரவில் கண் அயர்ந்தாள்.


அடுத்த நாள் சோலை குறிச்சி திரும்புவதாக ருத்ரன் சகிக்கு அலைபேசியில் தகவல் அனுப்பி இருந்தான். அதி காலையிலேயே விழித்த சகி, ருத்ரனைச் சந்திக்க அவன் வீட்டிற்குச் சென்றாள்.


முன்னறையில் அவளுடன் அமர்ந்த ருத்ரன், “என்ன மேடம் இவ்ளோ சீக்ரம் வந்திருக்கீங்க? என்ன விஷயம்?” என்று கேட்டான். “ஹ்ம்ம்... அந்த ரகு மேட்டர் என்னாச்சுன்னு தெரியாம எனக்கு தூக்கமே வரல ருத்ரா.. அதான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்... சொல்லு சொல்லு” என்று கதை கேட்கத் தயாரானாள் சகி.


“அதன பாத்தேன், எங்க என்னதான் பாக்க வந்தியோன்னு சந்தோஷப்பட்டேன்.. நீ கத கேக்கத்தான் வந்தியா” என்று நொந்து கொண்டான். “கத கேக்றதுனா ஃபோன்லயே கேட்ருக்கலாம், நேர்ல ஏன் வரணும்.. சரியான ட்யூப் லைட்” என்று அவள் வந்த காரணத்தை மறைமுகமாய்ச் சொல்ல, அதைப் புரிந்து கொண்ட ருத்ரன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


“சகி அன்னைக்கு உனக்கும் ரகுக்கும் சண்டை வந்து உங்க ஆஃபீஸ்ல இருந்து அவன டிஸ்மிஸ் பண்ணாங்கல்ல, அதுல இருந்து உன் மேல கோவமா இருந்திருக்கான். நீ எங்க போற, என்ன செய்ற எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கான்.


நீ இந்த ஊருக்கு வந்தது, என் கூட சேந்து இந்த கேஸ பாக்குறது எல்லாம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு.. அன்னைக்கு நைட் உன்ன அவன் தான் கால் பண்ணி அந்த வீட்டுக்கு வர சொல்லிருக்கான்.. உனக்கு கால் பண்ணிட்டு அவன் ஃபிரண்டுக்கு கால் பண்ணி அத பத்தி சொல்லிருக்கான்..


அவன் மொபைல்ல இருந்து ட்ரேஸ் பண்ணி அவன் ஃபிரண்ட புடிச்சு விசாரிச்சதுல எல்லாம் சொல்லிட்டான்.. நீயும் யோசிக்காம லூசு மாதிரி உடனே ஓடிருக்க.. ஒரு வேள அவன் சாகலேனா என்னாயிருக்கும்..” என்று கவலையுடன் அவளை நோக்கினான் ருத்ரன்.


“சாகலேனா உன் கையால செத்திருப்பான்” என்று சிரித்துக் கொண்டே கூறிய சகி, “உன்ன பத்தி அப்டி கேட்ட அப்பறம், எனக்கு ஏதும் ஆபத்து வருமான்னுல்லாம் யோசிக்க தோனலடா...” என்றாள்.


அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்ட ருத்ரன், “என்ன அவ்ளோ புடிக்குமா சகி?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். சகிக்கு வார்த்தையே வரவில்லை, தலையை மட்டும் ஆம் என்று ஆட்டினாள்.


“சகி அன்னைக்கு பாதில நிறுத்துனியே.. என்ன சொல்ல வந்த.. ப்ளீஸ் இப்போ சொல்லேன்” என்று அவன் கேட்டதும் சகிக்குக் குறும்பு தலை தூக்க, “என்னைக்கு என்ன சொன்னேன்?” என்றாள். “ஹேய் விளையாடாத சொல்லு” என்றான் விடாமல்.


“எனக்கு இப்போ ஞாபகம் இல்ல, அப்பறம் வந்தா சொல்றேன்.. இப்போ கெளம்பனும் டாட்டா” என்று கூறிக் கிளம்ப எத்தனித்தவளை இழுத்துச் சுவற்றில் சாய்த்துச் சிறை பிடித்து, “இன்னைக்கு உன்ன விட்றதா இல்ல..” என்றான்.


“ருத்ரா ப்ளீஸ் இன்னொரு நாள் சொல்றனே...” என்றவளைக் கண்டு கொள்ளாமல், அவள் பதிலை எதிர் பார்த்துக் குனிந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனைத் தள்ளி விட முயற்சித்துக் கொண்டிருந்தவள் தோற்று, “நீ வெளிய போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க, நான் என்ன உன்னோட பொண்டாட்டியான்னு கேக்க வந்தேன்.. போதுமா டா.. சரியான போலீஸ்காரன்” என்றாள் முகம் சிவக்க.


“ஹ்ம் தெரியும்டி. இருந்தாலும் உன் வாயால கேக்கலாம்ன்னு தான்..." என்றான் ருத்ரன். “கேட்டுட்டேல்ல தள்ளு...” என்று அவனைத் தள்ள முயன்றவளை மேலும் நெருங்கி, “இன்னும் இருக்கு.. உன் ஃபோன்ல என் நம்பர என்னன்னு சேவ் பண்ணி வச்சிருக்க?” என்று கேட்டான்.


“அதான் அன்னைக்கே பாத்துட்டேல்ல அப்புறம் ஏன் கேக்குற? சும்மா எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா வேற என்ன பண்றது... அதான் அப்டி பண்ணேன்” என்றாள் மெல்லிய குரலில். “மேடம் மட்டும் என்ன என்கிட்ட கொஞ்சி கொஞ்சியா பேசிட்டு இருந்திங்க...” என்றான் நக்கலாக.


ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா நீ என் நம்பர் என்னன்னு சேவ் பண்ணிருக்க?” என்று கேட்டவள், அவனது அலைபேசியைப் பிடுங்கி அவன் எண்ணுக்குத் தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். அதில், “பொண்டாட்டி காலிங்...” என்று மின்னியத்தைக் கண்டு அவளுக்குப் பேச்சே வரவில்லை.


அவன் 'என்ன' என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான். பின் அவனே தொடர்ந்தான். “சகி உன்ன ஃபர்ஸ்ட் டைம் ஒரு மால்-ல பாத்தேன்.. ஒரு ஐஸ் கிரீம சாப்ட்டுட்டு அழகா எஸ்கலேட்டர்ல போயிட்டு இருந்த... அப்போவே என்னவோ உன்ன புடிச்சு போச்சு.. அப்புறம் இங்க வந்து உன்ட்ட பழகுன அப்புறம், நீ என்னோட சகின்னு முடிவே பண்ணிட்டேன். சகி, ஐ லவ் யு!” என்று ருத்ரன் தன் காதலைச் சொன்னான்.


அதைக் கேட்டு முகத்தைக் குனிந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் சகி. அவளிடம் பதில் இல்லாமல் போகவே, அவள் நாடியை மென்மையாகப் பற்றி அவள் முகத்தை உயர்த்திய ருத்ரன், “சகி ஏதாச்சு பேசுமா... உனக்கு இஷ்டமில்லயா?” என்றான் கண்களில் ஏக்கத்தோடு.


அவன் முகம் சுருங்குவதைக் கண்ட சகி, “எனக்கு எப்போவோ உன்ன புடிச்சிருந்துச்சு ருத்ரா.. அந்த மால்-ல தான் நானும் உன்ன பாத்தேன்.. நான் எனக்கு வரப் போறவன் எப்படி இருக்கணும்னு மனசுல நினைச்சு இருந்தனோ, அப்டியே நீ இருந்த... ஆனா நீ என்கிட்ட காரணமே இல்லாம எரிஞ்சு விழுந்தப்போ உனக்கு என்ன புடிக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று முகம் சுருங்கச் சொன்னாள்.


“லூசு... உன்ன புடிக்காமதான் உன்னையே சுத்தி சுத்தி வந்தனாடி... கொஞ்சம் கூட அறிவே இல்ல” என்று செல்லமாகத் திட்டி, அன்று மால்-இல் அவன் கண்டதையும் பிறகு சூர்யா இங்கு வந்தபோது அவன் நினைத்ததையும் கூறினான்.


“எனக்கு நீ கிடைக்க மாட்டன்னு என் மேலயே கோவம்.. அத உன் மேல காட்டிட்டேன்.. சாரி டா.. உனக்கு தெரியுமா சகி, அன்னைக்கு நான் உன்ன நினைச்சுட்டே பைக்ல வந்தப்போ தான் உன்ன இடிச்சுட்டேன்” என்றான்.


அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன கதையா சொல்றேன்... ஆஆஆஆன்னு பாத்துட்டே இருக்க... நான் சொன்னதுக்கு பதில் சொல்லுடி..” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.


“அப்பறம் பாக்கலாம், எனக்கு பசிக்குது... என்ன சமைச்ச” என்று அவனைத் தள்ளி விட்டுச் சமையல் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். “உன்னல்லாம்ம்ம்ம்... என்ன படுத்துறதுக்குன்னே வந்து சேந்திருக்கா, சரியான ராட்சசி” என்று அவளைச் செல்லமாகத் திட்டி விட்டு உணவை எடுத்து வைத்தான்.


ருத்ரன் அவளுக்கு உணவை ஊட்டி விட, அவள் சாப்பாட்டு மேசை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பாட்டி சொன்ன பொன்னியின் கதையை அவனிடம் கூறினாள்.


“இதெல்லாம் நீ நம்புறியா?” என்று ருத்ரன் கேட்டதற்கு, “தெரியல ருத்ரா... ஆனா எனக்கு சில விஷயங்கள் மட்டும் புரியல... பொன்னி செத்து போய் அம்பது வருஷம் ஆச்சு, ஆனா எல்லா கொலையும் இந்த ஒரு வருஷமா தான நடக்குது..


அப்டியே பொன்னி தான் கொன்னானாலும் செத்தவங்கள்ல ரகு தவர யார பத்தியும் பேட் ரெகார்ட்ஸ் இல்லையே.. அப்பறம் நீ இதுக்கு முன்னாடி இருந்தவங்க ஃபோட்டோஸ் காட்டுனியே, அதுக்கும் ரகுவோட பாடிக்கும் கொஞ்சம் வித்யாசம் இருந்த மாதிரி இருக்கு..


அப்பறம் இதுக்கு முன்னாடி இறந்த ஆறு கேஸ்ல டெட் பாடிஸ் எதுவுமே அந்த பெரிய வீட்ல இல்ல, அவங்க அவங்க இடத்துல தான் இருந்துச்சு.. ரகுவோடது மட்டும் அந்த வீட்ல கெடந்துச்சு.. மே பி என் ரிப்போர்ட்டர் மூள கொஞ்சம் ஓவரா திங்க் பண்ணுதோ என்னவோ... பட் எனக்கு தோணுறத சொன்னேன்” என்றாள்.


அவள் சொன்னது அனைத்தையும் கவனமாகக் கேட்டவனுக்கு ஏதோ பொறி தட்டியது. “பரவால்ல சகி... உனக்கும் கொஞ்சம் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்ட” என்று அவள் தலையைத் தட்டிக் காண்பித்தவனை முறைத்தவள், “போடா... உன்ட்ட போய் சொன்னேன் பாரு...” என்று கோவித்துக் கொண்டாள்.

“சும்மா டி... என் செல்ல பொண்டாட்டி...” என்று அவள் மூக்கைத் திருகிக் கொஞ்சியவன், “சகி எனக்கு மதுரைல ஒரு முக்கியமான வேல இருக்கு.. உடனே போகணும் நான் உனக்கு நைட் கால் பண்றேன்.. பத்திரமா வீட்லயே இரு.. தனியா எங்கயும் போகாத” என்று கூறி, அவன் போகும் வழியில் சகியைப் பாட்டி வீட்டில் விட்டுச் சென்றான்.


நிழல் 13


அடுத்தநாள் அதிகாலை நான்கு மணி. ரோந்து பணியில் இருந்த அந்த ஊர் காவல் துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெரிய வீட்டு மரக்கிளையில் ஏதோ தொங்குவது போல் இருக்க, அருகில் சென்று டார்ச் வெளிச்சத்தில் அதைப் பார்த்து அதிர்ந்தார்.


அடுத்த அரை மணி நேரத்தில் சோலை குறிச்சி கிராமமே பரபரப்பாக அந்தப் பெரிய வீட்டின் முன் கூடி இருந்தது. காவல் துறை, தடயவியல் நிபுணர்கள், பல்வேறு ஊடகங்களும் இருந்தன. அதே மாதிரியான பிணம், அந்தப் பெரிய வீட்டின் ஒரு மரக்கிளையில் அதன் கால்கள் கட்டப்பட்டுத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தது.


லட்சுவும் நிலாவும் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவர்களையும் தர தரவென்று இழுத்துக் கொண்டு அங்கு சென்றாள் சகி. அந்தப் பிணத்தை வெவ்வேறு கோணங்களில் தன் கேமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த அதிகாரி சொன்ன தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டாள். அங்கு ருத்ரன் வந்திருக்கின்றனா என்று தேடி, அவன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீடு திரும்பினாள்.


வீட்டிற்கு வந்து ருத்ரனுக்கு அழைத்து அந்தக் கொலையைப் பற்றிக் கூறினாள். “நீ எங்க அங்க போன?” என்று அவன் உறுமியதற்கு, “ஊர்ல எல்லாரும் தான் இருந்தாங்க.. நான் நிலா லட்சு கூடதான் போனேன்.. சும்மா சும்மா திட்டாத” என்று அவள் கோவித்துக் கொள்ள, “நான் உன்ன விட்டுட்டு இங்க இருக்கேன்ல, எனக்கு பயமா இருக்குமா அதான்.. என் செல்லம்ல...” என்று கொஞ்சினான்.


“சரி சரி... எப்போ வருவ?” என்று சகி கேட்டதற்கு, “நான் இப்போ வேற ஒரு முக்கியமான கேஸ் பாக்குறனால அத அந்த ஊரு இன்ஸ்பெக்டரே பாத்துக்குறாரு. சோ, நான் இனிமே அங்க அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட் தான்...” என்று பதிலளித்தான். அந்தப் பதிலில் சற்று முகம் சுருங்கிய சகி, “அப்போ வர மாட்டியா? எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு...” என்றாள் சிறுபிள்ளை போல.


“அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட்ன்னு தான சொன்னேன், என் பொண்டாட்டிய பாக்க வர முடியாதுன்னா சொன்னேன்... எப்போ வரணும்னு சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.


“சும்மா... நீ எவ்ளோ பிஸியா இருப்பன்னு எனக்கு தெரியும்... இதுல இங்கயும் அங்கயும் வேற அலைய வேணாம்.. அப்போ அப்போ ஃபோன் மட்டும் பண்ணு” என்று சகி கூறியதற்கு, “சரிங்க மேடம்” என்று சிரித்துக் கொண்டான்.


சகி “ஓகே ருத்ரா... நான் வைக்கிறேன், டாட்டா...” என்றவுடன், “சகி ஒன் மினிட்... நேர்ல தான் சொல்ல மாட்ட... ஃபோன்லயாச்சு சொல்லேன்டி” என்றான் ஏக்கமாக. “வெவெவெவ... போடா.. பை” என்று அழைப்பைத் துண்டித்தாள்.


'கொஞ்சமாச்சு மரியாதை இருக்கா பாரு.. எனக்கு வாய்ச்சது அவ்ளோதான்...' என்று தன்னவளை நினைத்துச் சிரித்துக் கொண்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தான் ருத்ரன்.


அன்றைய எல்லா ஊடகங்களிலும் சோலை குறிச்சியில் நடந்த கொலை, 'ப்ரேக்கிங் நியூஸ்'-ஆக வந்தது. 'மக்கள் சொல்வது போல் இது அந்தப் பெரிய வீட்டுப் பேயின் பலிகளா?' என்று விவாதிக்கவும் தவறவில்லை.


தோழியர் வீட்டிலிருந்து அவர்களுக்கு அழைத்து மதுரைக்குத் திரும்பும்படி கண்டிப்பாகக் கூறி விட்டனர். அவர்களும் நாளை ஒரு நாள் பொறுத்து, நாளை மறுநாள் கிளம்பி வருவதாக ஒப்புக் கொண்டனர்.


அன்று இரவு சகி இதுவரை தான் திரட்டிய செய்திகள், புகைப்படங்களை எல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அரைக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்த தோழியர் இருவரும், அந்த மேசை முழுவதும் பரப்பி கிடந்த படங்களைப் பார்த்தனர்.


“ஹேய் சகி, இதெல்லாம் என்ன? நீ இந்த கிராமத்தோட இயற்கைய பத்தி ஆர்ட்டிகிள் எழுதுறேன்னு தான சொன்ன...” என்று நிலா கேட்க, லட்சுவும் சகியை முறைத்துக் கொண்டிருந்தாள். மாட்டிக்கொண்ட குழந்தையாகத் திரு திருவென விழித்த சகி, வேறு வழியின்றி அவர்களிடம் தான் வந்த காரணத்தையும், ருத்ரன் தனக்கு உதவியதையும் மட்டும் கூறினாள்.


“ஓஓஓஓஓஓ.. ஒரு சாதாரண ரிப்போர்ட்டருக்கு ஹெல்ப் பண்ற அளவுக்கு ரொம்ப நல்ல அசிஸ்டன்ட் கமிஷனரோ? ஒழுங்கா எதையும் மறைக்காம சொல்லு...” என்று லட்சு விடாமல் கேட்க, சகி தானும் ருத்ரனும் ஒருவரையொருவர் விரும்புவதையும் கூறினாள்.


அதைக் கேட்ட நிலா, “அடி பாவி.. நமக்கு தெரியாம இவ்ளோ நடந்திருக்கு பாரேன் லட்சு.. சரியான அமுக்குனி... நம்மள கூட நம்பலாம், ஆனா இந்த சிங்கிள்ன்னு சொல்லிட்டு சுத்துறவங்கள நம்பவே கூடாது..” என்றதற்கு, “நான் அவன பாத்த அப்பறம் எப்போயாச்சு சிங்கிள் சிங்கிள்ன்னு சொல்லிக்கிட்டனா? நீங்க ட்யூப் லைட்டா இருந்தா நான் என்னடி பண்றது...” என்றாள் சகி.


“அடிங்க.. இதுல வேற எங்களையும் அந்த வீட்டுக்குள்ள கூட்டு போய் கொல்ல பாத்துருக்க... பிசாசு..” என்று அவளை மொத்தினாள் லட்சு. “அப்போ சூரிய அன்னைக்கு அதான் இருக்க சொன்னியா..? அப்பறம் ஏதோ எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பாட்டி கிட்ட என்னன்னவோ புளுகி எங்களையெல்லாம் வெளிய கிளப்பி விட்டு, வேலைய பாத்திருக்க” என்று நிலா முறைத்து கொண்டே கேட்டதற்குத் தன் இரு தோள்களையும் குலுக்கி, “ம்ம்ம்.. டெபனெட்லி... டெபனெட்லி...” என்றாள் சகி.


அவளை அடிக்கத் துரத்தி, மூன்று பேரும் மாடி முழுதும் ஓடிக் களைத்து மூச்சு வாங்கச் சிரித்தனர். சகி, “எங்க வீட்டுக்கோ சூரிக்கோ தெரிய வேணாம்... ப்ளீஸ் டா செல்லங்களா... ஊருக்கு போய் நானே சொல்லிக்கிறேன்” என்று கெஞ்சினாள்.


“அப்போ ட்ரீட் குடு” என்று கேட்டாள் நிலா. “ஆமா ஆமா... நீ பொய் சொல்லி இங்க வந்து வேல பாத்ததுக்கு ஒன்னு, அப்புறம் ருத்ரன் அண்ணாவ லவ் பண்றதுக்கு ஒன்னு... ரெண்டு ட்ரீட்...” என்று லட்சு கணக்கு கூற, “அப்பறம் அந்த வீட்ல, பேய் கிட்ட உன்ன கோத்து விட்டு கொல்ல பாத்தாளே லட்சு, அதுக்கு ஒன்னு...” என்று எடுத்துக் கொடுத்தாள் நிலா.


தலையில் அடித்துக் கொண்ட சகி, “எல்லாம் என் நேரம்.. தந்து தொலையுறேன் ட்ரீட் பைத்தியங்களா..” என்றாள். மூவரும் சிறிது நேரம் கலகலத்துவிட்டுத் தங்கள் காதலர்களோடு பேசச் சென்றனர்.


தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சகிக்குக் காலை நடந்த அந்தச் சம்பவம் சற்று குழப்பமாகவே இருந்தது. ருத்ரனிடம் கேட்கலாம் என்று தோன்ற, உடனே அலைபேசியை எடுத்து ருத்ரனின் எண்ணிற்கு அழைத்தாள்.


அவள் அழைப்பை ஏற்ற ருத்ரன், “என்னடி கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசிட்டு வச்ச.. ஒரு வேள அத சொல்லப் போறியா?” என்றான் ஆர்வமாக. “ப்ச்... அதில்லடா.. இது வேற.. எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.. ஏதோ இடிக்குது.. இதுவரைக்கும் நடந்த கொலைல எல்லாம் ஃபர்ஸ்ட் போலீஸ் அப்பறம் போலீஸ் சம்பந்தபட்ட சில டிபார்ட்மெண்ட்ஸ்ன்னு கொஞ்சம் பேரு தான் வருவாங்க.


பட் இன்னைக்கு எப்டி இவ்ளோ மீடியா பீப்பிள் வந்தாங்க? அதுவும் காலங்காத்தால நாலு மணிக்கே. அவ்ளோ சீக்ரம் அவங்களுக்கு யாரு தகவல் சொல்லிருப்பாங்க? எப்போயும் யாராச்சு ஊர் மக்கள் பாப்பாங்க, பட் இந்த தடவ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தான் பாத்திருக்காரு, அப்போ அந்த விஷயம் கான்ஃபிடென்ஷியலா இல்லாம எப்டி வெளிய லீக் ஆச்சு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் சகி.


அதைக் கேட்டுக் கடுப்பான ருத்ரன், “அடியே நைட் மூனு மணி ஆகுதுடி... எதோ ஆசையா சொல்ல போறன்னு ஃபோன எடுத்தா, நொய்யி நொய்யின்னு கேள்வியா கேக்குற... உன்ன கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறனோ... இனிமேல் அதுல கன்ஃப்யூஷன், இதுல கன்ஃப்யூஷன்னு ஃபோன் பண்ண, தோல உரிச்சிருவேன்... ஃபோன வைடி...” என்று பொறிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


'ப்பே... சிடு மூஞ்சி... இதுக்கு போய் கால் பண்ணோம் பாரு, நம்மள சொல்லணும்...' என்று அலைபேசியில் இருந்த அவனது படத்திற்கு இரண்டு அடி வைத்தாள்.


மறுபடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு மேலும் ஒரு சந்தேகம் எழுந்தது. இத்தனை பேர் வந்தும் ஏன் ருத்ரன் வரவில்லை? இதை விட என்ன முக்கியமான வேலையாக இருக்கும்? நம்மிடம் எதுவும் மறைகின்றானோ இல்லை, நாம் தான் அளவுக்கு மீறி கற்பனை செய்து கொள்கிறோமோ? என்று வெகு நேரம் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்.


சகியின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


நிழல் 14


அன்று அதிகாலையே தோழியர் மூவரும் பாட்டியிடம் விடை பெற்று மதுரை வந்து சேர்ந்தனர். சகி சாப்பிட்டுக் கிளம்பி, அலுவலகம் செல்லத் தயாரானாள்.


கீழே இறங்கி வந்தவளிடம் பத்மா, “சகி நீ கேட்ட டைம் முடிஞ்சுது. வாசு மாமா கொண்டு வந்த வரன், JP அண்ணா சொன்ன பையன் ரெண்டு பேரு ஜாதகமும் உன் ஜாதகத்தோட பொருந்துது. நீ யாருன்னு செலக்ட் பண்ணா, மேற்கொண்டு பேசலாம்” என்று அவளிடம் இரு புகைப்படங்களை நீட்டினார். 


“உங்களுக்கு இந்த சிரமமே வேண்டாம் ம்மா... நானே ஒருத்தர செலக்ட் பண்ணிட்டேன்” என்று தன் காதல் விவகாரத்தை வீட்டில் பட்டெனப் போட்டுடைக்க, நடராஜன் சிரித்தார் என்றால், சூர்யா அதிர்ந்தான்.


“என்னடி சொல்ற... யாரு அது? வேலைக்கு போறேன் போறேன்னு இத தான் செய்றியா? என்னங்க, அவ என்ன சொல்றா... நீங்க சிரிச்சுட்டு உக்காந்திருக்கிங்க” என்று பதற ஆரம்பித்தார். “பத்மா... கொஞ்சம் இரு... இப்போ உனக்கு அவ கல்யாணம் பண்ணிக்கணுமா, இல்ல நீ பாத்த பையன தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று நடராஜன் கேட்டதும் பத்மா வாயை மூடிக் கொண்டார்.


சகியிடம் திரும்பிய நடராஜன், “சொல்லு குட்டிமா, யாரு அவர்? உனக்கு எப்டி தெரியும்?” என்று கேட்டார். “மதுரை அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன். நான் சோலை குறிச்சிக்கு வெகேஷன் போகல... அங்க நடந்த கொலைகள பத்தி ஆர்டிகிள் எழுத போனேன். அப்போ பழக்கம். ரொம்ப நல்லவர் ப்பா... எனக்கு வர போறவன் எப்டிலாம் இருக்கனும்ன்னு நினைச்சனோ அப்டியே இருக்காரு பா... நீங்கல்லாம் அவர்கூட பேசி பாருங்க, உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும் பா...” என்று தன் செல்லத் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.


காவல் துறை அதிகாரி என்ற வார்த்தையிலேயே நடராஜன் மனதில் ருத்ரன் உயர்ந்து விட, தன் செல்ல மகளின் மனதையே கவர்ந்திருக்கிறான் என்றால், அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதற்குள் JP-யிடம் இருந்து, தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கச் சொல்லி அழைப்பு வர, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள் சகி.


அனைத்து செய்தி அலைவரிசைகளும் சோலை குறிச்சி கொலைகள் பற்றிய செய்தியைத் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. “சோலை குறிச்சி மர்மங்கள் அம்பலம் - மனித உடல் உறுப்புகளைத் திருடும் மாபெரும் மருத்துவ மோசடி. வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் மதுரையின் வெற்றி நாயகன், ருத்ரன் ஐ.பி.ஸ்” என்று மீண்டும் மீண்டும் அதே செய்தித் தொகுப்பை விளக்கிக் கொண்டிருந்தனர்.


அந்த ஊரில் இதுவரை மர்மமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடிக் கடத்தப்பட்டதாகவும், மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், பிரேத பரிசோதனைக் குழுவும் இதற்க்கு உடந்தை எனவும், செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.


ஒரு வருடமாக மூடியிருந்த இந்த மர்மத்தை, வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த, மதுரையின் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன் ஐ.பி.ஸ்-இற்குப் பிரதமர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று ஒவ்வொருவரின் வாழ்த்துச் செய்திகளும் திரையின் கீழ்ப் பகுதியில் ஓடிக் கொண்டு இருந்தன.


சிறிது நேரத்தில் திரையில் ருத்ரன் வந்தான். அவனை முதல் முறையாக காக்கிச் சீருடையில் பார்க்கும் சகி விழி விரித்தாள். 'போலீஸ் யூனிஃபார்ம்ல என் ருத்ரா எவ்ளோ கம்பீரமா இருக்கான்' என்று மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள்.


தேசிய ஊடகங்கள் முதல் மதுரையின் சின்னச் சின்ன ஊடகங்கள் வரை அனைத்து மைக்களும் அவன் முன்னே வைக்கப் பட்டிருந்தன. ருத்ரன் பேச ஆரம்பித்தான். “இந்த மெடிக்கல் மாஃபியா ஒரு வருஷமா மதுரைல நடந்துட்டு வருது.


சோலை குறிச்சில பேசப்பட்ற பேய்க் கதைய சாதகமா பயன்படுத்தி இத பண்ணிருக்காங்க. இன்னைக்கு தான் சம்பந்தப்பட்டவங்கள அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்கோம். அவங்க வாக்கு மூலங்களோட சீக்ரம் கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணுவோம்.


மேலும் இந்த கேஸ்ல எனக்கு உதவி செஞ்சு, முக்கியமான க்ளூஸ் குடுத்த 'உங்கள் தமிழகம்' பத்திரிக்கை ரிப்போர்ட்டர் சக்திக்கு நன்றி. சின்ன பொண்ணா இருந்தாலும் கொஞ்சம் கூட பயம் இல்லாம இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனாங்க. எனது பாராட்டுக்கள்... நிறைய வேலைகள் இருக்கு.. நோ மோர் க்வெஸ்டின்ஸ் ப்ளீஸ்” என்று கூறி அவன் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டான்.


சகி அவன் தன் பெயரைச் சொல்லுவான் என்று துளியும் எதிர் பார்க்கவில்லை. தன் மகளின் பெயரைச் சொல்லும்போது அவன் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தைக் குறித்துக் கொண்டார் நடராஜன்.


இதுவரை சமாதானம் அடையாத பத்மாவோ, “என் மாப்பிள்ளைய பாத்தா சுத்தி போட சொல்லுடி... ஊரு கண்ணு எல்லாம் அவர் மேல தான் இருக்கு..” என்று கூறிப் பச்சைக் கொடி காட்டினார். “ஓஓஓஓஹோ.. இப்போ மட்டும் உன்ன்ன் மாப்பிள்ளையா...” என்று 'உன்'-இல் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் சகி.


அதைக் கேட்டுச் சிரித்த நடராஜன், “மாப்பிள்ள இன்னைக்கு பிஸியா இருப்பாரு... நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரச் சொல்லுமா... பேசலாம்” என்றார். சந்தோஷமாகத் தலையை ஆட்டிய சகியின் தலையில் கொட்டிய சூர்யா, “இதுக்கு தான் என்ன அங்க தங்க வச்சியாடி... நான் கூட நம்ம தங்கச்சிக்கு நம்ம மேல அவ்ளோ பாசமான்னு அசந்து போய்ட்டேன்” என்றான்.


தலையைத் தேய்த்துக்கொண்டே அவனை, 'இருடா உனக்கு இருக்கு...' என்று பார்த்த சகி, “ஏன் மா... ஜஸ்ட் ஒரு மாசமா லவ் பண்ற என்ன இந்த நோண்டு நோண்டுறியே, உன் சீமந்த புத்ரன் ஏழு வருஷமா லவ் பண்ணிட்ருக்கான். அத மொதல்ல கவனி...” என்று தன் பணியைச் செவ்வனே செய்து முடித்தாள் சகி.


சூர்யாவின் பக்கம் திரும்பிய பத்மா, “ஏன்டா நீயுமாடா? யாருடா சொல்லு...” என்றார். சகியை முறைத்த சூர்யா, தானும் நிலாவும் விரும்புவதைச் சொல்லி முடித்து, “சகி இருக்கும் போது எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்க தோனல மா.. அதான் இவளுக்கு கல்யாணம் முடிவானதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என்று மன்னிப்புக் கூறினான்.


“அவ்ளோ பாசக்காரனாடா நீ?” என்ற சகியின் காதைத் திருகியவன், “ஏன்டி, நானே நேரம் பாத்து சொல்லிருக்க மாட்டனா... எதுக்கு மாட்டி விட்ட..” என்றான். “ஆமா நல்லா பாத்தியே நேரம் ஏழு வருஷமா... நீயெல்லாம் ஒரு லாயர்... போடா” என்று பதில் கொடுத்தாள்.


“இன்னும் இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னலாம் திருட்டுத்தனம் நடக்குது? எல்லாத்தையும் இப்போவே சொல்லிருங்க” என்று புலம்பினார் பத்மா. “எங்க மேட்டர் அவ்ளோ தான் மா. எதுக்கும் அப்பாவ விசாரி... கடைல உக்காந்து எப்போ பாரு ஒரே வாட்ஸாப் ஃபேஸ்புக் தான்” என்று நடராஜனை இழுத்து விட்டான் சூர்யா.


அவர் சூர்யாவிடம், "டேய்... உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்..." என்றுவிட்டு, அவரை முறைத்துக் கொண்டிருந்த பத்மாவைப் பார்த்து, “பத்தும்மா, அப்டிலாம் எதுவும் இல்லமா.. உன்ன விட அழகா எனக்கு யாரு கிடைப்பா சொல்லு...” என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைப் பத்மா தலையின் மீது ஏற்றித் தப்பித்துக் கொண்டார்.


சகி அன்று அலுவலகம் சென்றதும் அவளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. JP மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும், “உங்க அப்பா சொன்னான்மா... ருத்ரன் நல்ல சாய்ஸ்.. கங்க்ராட்ஸ்.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா உன் ஆள..” என்று அவள் தலையைப் பாசத்துடன் வருடினார்.


“தேங்க்ஸ் அங்கிள்... கண்டிப்பா வர்றோம்” என்றாள் சிரித்துக் கொண்டே. எல்லோரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுவிட்டு ருத்ரனுக்கு அழைத்து, “AC சார்... ஒரே நாள்ல ஹீரோ ஆகிட்டிங்க... எங்களல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றாள். “என்னடி கொழுப்பா... நாளைக்கு நேர்ல பேசிக்கிறேன் உன்ன..” என்று அடுத்த நாள் காலை அவள் வரவேண்டிய இடத்தைச் சொன்னான்.


“சும்மா டா... கங்க்ராட்ஸ்.. நாளைக்கு மீட் பண்லாம்.. நானும் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.


சூர்யா நிலாவைத் தான் விரும்புகிறான் என்று அறிந்த பெற்றோர் நிம்மதி அடைந்தனர். அன்று மாலையே பெரியவர்கள் கூடிப் பேசி, சூர்யாவிற்கும் நிலாவிற்கும் உறுதி செய்தனர். பின் மூவரின் பெற்றோரும் ஒன்றாய் அமர்ந்து பேசி, ருத்ரன் வீட்டில் பேசிவிட்டு மூன்று திருமணங்களையும் ஒன்றாய் நடத்த முடிவு செய்தனர்.


அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் 'அவள்' யார்?


நிழல் 15


அடுத்த நாள் ருத்ரனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் சகிக்குத் தூக்கமே வரவில்லை. வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள்.


காலை அலாரம் சத்தம் கேட்டு உற்சாகமாய் எழுந்தவள், கட கடவெனக் கிளம்பி ருத்ரன் வரச் சொன்ன உணவகத்திற்குச் சென்றாள். ருத்ரன் அவளுக்காக அங்கு காத்திருந்தான். இருவரும் காலை உணவு உண்டு முடித்த பின் ருத்ரன் தன் வண்டியைக் கிளப்ப, சகி, “எங்க போறோம்?” என்று கேட்டாள். “பாக்கத்தன போற இரு...” என்றான்.


வண்டி நெடுஞ்சாலையில் சீறிப் பாய ருத்ரனைப் பின்னிருந்து அணைத்து, அவன் வலிய தோளின் மீது தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் வளவளத்துக் கொண்டே வந்தாள் சகி. ருத்ரனுக்குத் தான் பேச்சே வரவில்லை. சகி இதற்க்கு முன் அவனோடு வண்டியில் வந்திருக்கிறாள் தான், ஆனால் அவள் அவனை இப்படி உரிமையோடு அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை.


சகியோ, “வாய திறக்குறானா பாரு.... சரியான ஊமக்கொட்டான்” என்று சத்தமாக மூணுமுணுத்தாள். அதற்கு அவன், “ஒரு முப்பது வருஷ ப்ரம்மச்சாரிய, ஒரு அழகான பொண்ணு இப்டி இறுக்கமா கட்டி புடிச்சுட்டு வந்தா, எப்டி பேச்சு வரும்?” என்றான். அதைக் கேட்ட சகியை வெட்கம் ஆட்கொள்ள, அவனிடம் இருந்து விலகப் போக, அவள் கைகளைப் பற்றி இழுத்து மீண்டும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.


வண்டி செல்லும் பாதையில் இருந்தே அவன் சோலை குறிச்சிக்குத் தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டாள் சகி. ருத்ரன், சோலை குறிச்சி பெரிய வீட்டின் வெளியே இருந்த பாதையில் வண்டியை நிறுத்தினான். அங்கு ஆள் நடமாட்டமே இல்லை.


வண்டியில் இருந்து சகியை இறங்கச் சொல்லித் தானும் இறங்கித் தன் வண்டியின் மேல் சாய்த்து நின்றான். “இங்க எதுக்கு வந்திருக்கோம் ருத்ரா?” என்று கேட்டாள் சகி. “இதுக்காக தான நம்ம ரெண்டு பேருமே இந்த ஊருக்கு வந்தோம்... க்ளோஸ் ஆனோம்.. அப்போ இங்க வரும் போதுலாம் உன் கூட இப்டி ரிலாக்ஸ்டா பேச முடிஞ்சது இல்ல.. அதான் இப்போ உன்ன இங்க கூப்டு வரணும்ன்னு தோணுச்சு” என்று சகியை அருகில் இழுத்து, அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான்.


சிறிது நேரம் அப்படியே அமர்ந்து வயல்களையும் தென்னந்தோப்பையும் பார்த்துக் கொண்டிருந்தனர். “சொல்லு எதோ முக்கியமான விஷயம் பேசணும்னெனு சொன்னியே” என்று மௌனத்தைக் கலைதான் ருத்ரன்.


“ஹ்ம்ம்... அந்த மெடிக்கல் மாஃபியா...” என்று அவள் ஆரம்பித்தவுடன் கடுப்பாகி எழப் போனவனை, “என்னாச்சு” என்று அவன் கையைப் பற்றித் தடுத்தாள் சகி. “பின்ன என்னடி... இதான் அந்த முக்கியமான விஷயமா? நீ லவ்வ சொல்லுவேன்னு எதிர்பாத்து நைட்டெல்லாம் தூக்கம் வராம, எப்படா விடியும்ன்னு எந்திச்சு வந்தா, நீ என்னத்தையோ பேசுற” என்று கடிந்து கொண்டான் ருத்ரன். சகி “சும்மா, உன்ன கோவப் படுத்தி பாக்கலாம்ன்னு தான்... சாரி சாரி.." என்று அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.


“அப்பறம் சொல்லு... நெக்ஸ்ட் என்ன ப்ளான் உன் லைஃப்ல?” என்று கேட்ட ருத்ரனிடம், “நெக்ஸ்ட் என்ன கல்யாணம் தான். ஒன் இயரா வீட்ல பாத்து ரெண்டு பேர ஃபைனலைஸ் பண்ணி வச்சிருந்தாங்க... அதுல ஒருத்தன் அமெரிக்கால இருக்கான்..


நான் தான் சோலை குறிச்சி போயிட்டு வந்து சொல்றேன்னு சொன்னேன்.. நேத்து கேட்டதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்று சகி சொன்னதும், அவளை விட்டு விலகி அமர்ந்த ருத்ரனின் முகத்தில் இறுக்கமும் கோவமும் போட்டி போட்டன.


“இத மொதலையே சொல்லி தொலஞ்சிருந்தா நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போயிருப்பேன்ல.. இப்போ புரியுதுடி லவ்ன்னு சொல்லாமயே சேஃப் சைடுல இருந்துகிட்ட.. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி உன்ன பத்தி வீட்லலாம் சொல்லி... ச்ச...” என்று கோவமாகக் கத்தினான் ருத்ரன்.


சகி மிகவும் கடினப்பட்டுத் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டே, “வீட்ல பையன்லாம் பாத்தாங்க... என்ன பண்றது, எனக்கு இந்த சிடு மூஞ்சிய தான் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.. இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு கூப்டு வர சொன்னாங்க” என்று பொய்யாகச் சலித்துக் கொண்டு தன் தோளால் அவன் தோளை இடித்தாள்.


அவள் சொன்னதன் அர்த்தம் சில நொடிகள் கழித்தே அவனுக்கு விளங்க, அவன் மனம் துள்ளிக் குதித்தது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல், “அப்டி ஒன்னும் நீ சலிச்சுக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க வேணாம்... அந்த அமெரிக்காகாரனையே கட்டிக்கோ போ” என்றான்.


அதற்குச் சற்றும் அசராத சகி, “சரி விடு.. நீயே சொல்லிட்ட, அவனையே ஓகே பண்ணிட்றேன்... கொஞ்சம் இரு, இப்போவே அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்றேன்.. அப்பறம் அவசரப்பட்டு அந்த பையன வேண்டாம்ன்னு சொல்லிற போறாங்க” என்று தன் பையில் இருந்து அலைபேசியை எடுக்கப் போனாள்.


“அடிங்க... உனக்கு வாய் கொழுப்பு கூடிட்டே போகுது... இனிமேல் சும்மா விட கூடாது” என்று அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான். சில நிமிடங்களுக்கு நிலைத்த அந்தச் சிறையில் இருந்து ருத்ரன் அவளை மெல்ல விடுவித்தான்.


சகிக்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தள்ள, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து, “லவ் யு ருத்ரா... லவ் யு சோ மச்” என்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள்.


“லவ் யு டூ செல்லம்.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்று அவளை அணைத்துக் கொண்டான். “இத ஃபர்ஸ்டே சொன்னா கொறஞ்சா போய்டுவ... அதுக்குள்ள அமெரிக்கா.. அது இதுன்னு.. மனுஷன கடுபேத்தி பாக்குறதுல அவ்ளோ சந்தோசம்” என்று அவள் தலையில் கொட்டினான்.


“நீ மட்டும் என்னடா.. எதோ நான் யாரோங்ற மாதிரி, 'உன் லைஃப்ல அடுத்து என்ன பிளான்'ன்னு கேக்குற... அதான் உன்னையும் கடுப்பேத்துனேன்” என்று அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள் சகி. “ஹா ஹா கண்டு புடிச்சுட்டியா... சரி விடு” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ருத்ரன்.


சகி, “ருத்ரா நான் ஒன்னு கேப்பேன், கோச்சுக்க கூடாது... எனக்கு அது தெரியாம தலையே வெடிச்சிரும்” என்று ஆரம்பித்தவளை மறித்த ருத்ரன், “நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும்.. அந்த மாஃபியா பத்தி தான” என்றதும் தயங்கிய படியே ஆம் என்று தலையை ஆட்டினாள்.


“என் ஆர்வக்கோளாறு ரிப்போர்ட்டர் என்ன நினைப்பான்னு எனக்கு தெரியாதா என்ன...” என்றவனிடம், “இல்ல நியூஸ்ல நான் உனக்கு எதோ முக்கியமான க்ளூஸ் குடுத்து ஹெல்ப் பண்ணேன்னு சொன்னியே, அதான்..” என்று தன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததைக் கூறினாள்.


“ஹ்ம்ம் சொல்றேன்... பட் இப்போ நான் இத சொல்லப் போறது என் பொண்டாட்டி கிட்ட, ரிப்போர்ட்டர் கிட்ட இல்ல... போலீஸ் சைடுல இருந்து அஃபிஷியலா நியூஸ் வர்ற வர, இத வெளிய யார்கிட்டயும் சொல்ல கூடாது” என்று அவளிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


“எனக்கும் ஃபர்ஸ்ட் இந்த கொலைகள பத்தி எதுவும் புரியல. போஸ்ட்மார்டெம் ரிபோர்ட்ஸும் ஒரே மாதிரி இருந்தது ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சப்போ எனக்கு கிடைச்ச ஒரே க்ளூ அந்த கொலைகளுக்கு நடுல இருந்த டைம் கேப்ஸ் தான்.


ஒவ்வொரு கொலைக்கு நடுவுலயும் கரெக்ட்டா ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப் இருந்துச்சு. பட் அந்த ஃபாரினர் கொலைக்கும் ரகு கொலைக்கும் நடுவுல அப்டி இல்ல... ரொம்ப ஏர்லியராவே நடந்திருச்சு... அப்போ மறுபடியும் குழம்பிருச்சு.


கிடைச்ச ஒரு க்ளூவும் வேஸ்ட்ன்னு நான் உக்காந்திருக்கும் போதுதான், நீ எனக்கு ஹெல்ப் பண்ண. அன்னைக்கு பாட்டி சொன்னாங்கன்னு ஒரு பேய் கத சொல்லிட்டு, அதோட உன் மனசுல இருக்க சில விஷயங்கள சொன்னியே, ஞாபகம் இருக்கா?


அம்பது வருஷமா கொல்லாத பேய், திடீர்னு ஒன் இயரா ஏன் கொல்லணும்.. அப்பறம் மத்த பாடீஸ்க்கும் ரகு பாடீக்கும் எதோ டிஃபரென்ஸ் இருக்குன்னு நீ கேட்டதுலாம் தான் எனக்கு பெரிய க்ளூஸ்ஸா இருந்துச்சு.


ஒன் இயரா இந்த ஊர சுத்தி என்ன மாறிருக்குன்னு யோசிச்சேன்... மதுரை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல ஒன் இயர் முன்னாடி தான் புது டீன் ஜாய்ன் பண்ணிருந்தாரு... அவர பத்தி அவர் வேல செஞ்ச மத்த ஊர்ல விசாரிச்சப்போ கொஞ்சம் தப்பா இருந்துச்சு.


ரகுவோட பாடிய இன்னோரு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சீக்ரெட்டா ரீ-போஸ்ட்மார்டெம் பண்ண சொன்னப்போ அவன யாரோ கழுத்த திருப்பி கொன்னுருக்காங்கன்னு தெரிஞ்சுது. அந்த ஃபாரினரோட பாடீய இந்த கேஸ் முடியுற வரை யாருக்கும் தெரியாம பாதுகாப்பா ப்ரிசர்வ் பண்ணி வச்சிருந்தனால, அதையும் அந்த டாக்டர் கிட்ட ரீ-போஸ்ட்மார்டெம்க்கு குடுத்தோம்.


அப்போ அந்த பாடீல சில ஆர்கன்ஸ், லைக், கிட்னி, லிவர், அப்பறம் கொஞ்சம் போன்ஸ் இதெல்லாம் இல்லன்னு தெரிய வந்துச்சு. சோ, அப்போவே அந்த கவர்மென்ட் ஹாஸ்பிடல் போஸ்ட்மார்டெம் டீம் தான் காரணம்ன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு.


பட், கையும் களவுமா புடிக்கும்ன்னு, அன்னைக்கு தூக்கு போட்டு சூசைட் பண்ணிக்கிட்டவன் ஒருத்தன் பாடீய அந்த வீட்ல நைட்டோட நைட்டா தொங்கவிட்டோம். நாங்க எதிர் பாத்தபடியே போஸ்ட்மார்டெம் ரிப்போர்ட் சேம்மா வந்துச்சு, புடிச்சுட்டோம்.


நீ சொன்னது மாதிரி ரகுவ தவர மத்த பாடீஸ்லாம் அவங்க அவங்க எடத்துல போட்டதுக்கு காரணம், பேயோட பலின்னு பேச பட்டாலும், அந்த பெரிய வீட்டு மேல போலீஸோட கவனமோ மீடியாவோட கவனமோ திரும்ப கூடாதுன்னு தான்.


அதான் லாஸ்ட்டா நாங்க அங்க பாடீய தொங்க விட்டப்போ, நாங்களே மீடியாக்கும் இன்ஃபார்ம் பண்ணோம். அரெஸ்ட் பண்ணவங்கள விசாரிச்சப்போ, ரஷ்யால இருந்த ஒரு கும்பலோட அந்த டீன் டீல் பேசிருக்காருன்னு தெரிஞ்சுது.


அந்த நாட்டுல இருந்து பாடீ பார்ட்ஸ் தேவ பட்ற பேஷண்ட்ஸ, இங்க டார்கெட் பண்ற விக்டிமோட மேட்ச் ஆகுரவங்களா பாத்து செலக்ட் பண்ணி, ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப்ல இங்க கூப்டு வந்து, இங்க எடுக்குற பாடீ பார்ட்ஸ் வச்சு ஆப்பரேட் பண்ணிட்றாங்க.


செத்தவங்க எல்லாருமே எதோ ஒரு வகைல மதுரை ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்தவங்க தான்.. சோ, ப்ளட் குரூப்ப வச்சு அதுக்கு மேட்ச் ஆகுற மாதிரி பேஷண்ட்ஸ செலக்ட் பண்ணிகிட்டாங்க. கொல்றதுக்கு ஒரு விதமான ரஷ்யன் கம்பனி ட்ரக்க (Drug) இஞ்செக்ட் பண்ணிருக்காங்க... அது கொல்றது மட்டும் இல்லாம, செத்ததுக்கு அப்பறமும் ஒருத்தரோட ஆர்கன்ஸ ஒன் டே வரைக்கும் கெடாம ப்ரிசர்வ் பண்ணும்... சோ, போஸ்ட்மார்டெம்க்கு பாடீ வரும்போது, ஆப்பரேட் பண்ணி ஆர்கன்ஸ எடுத்துக்குறாங்க...


பேயோட பலின்னு காட்ட, அந்த வீட்ட சுத்தி ஒரு பொண்ண பேய் மாதிரி உலவ விட்ருக்காங்க... தென் விக்டிம்ஸ் செத்ததுக்கு அப்பறம் அவங்க வாய பிழந்து, கண்ண விரிச்சு வச்சிருக்காங்க... அந்த ட்ரக்கோட எஃபெக்ட்டால, பாடீஸ் வெளுத்து போய் தெரிஞ்சுது” என்று அனைத்தையும் விளக்கிக் கூறினான்.


அனைத்தையும் விழி விரித்துக் கேட்ட சகி, “ஓய்... அப்போ நான் அன்னைக்கு நைட் உன் கிட்ட கேட்ட டௌட்ஸ்லாம் கரெக்ட் தான... நீ தான் திட்டிட்டு ஃபோன வச்சுட்ட” என்று கோவித்து கொண்டாள்.


“அடியே, நான் எவ்ளோ கஷ்டப்பட்டு மூளைய கசக்கி ஸ்கெட்ச் போட்டா, நீ இப்டி டக்கு டக்குன்னு எல்லாத்தையும் கண்டுபுடிச்சு என்கிட்டயே சொன்னா மனுஷனுக்கு கடுப்பாகுமா ஆகாதா? ஆனாலும் என் பொண்டாட்டிக்கு இவ்ளோ அறிவு இருக்க கூடாது... அன்னைக்கு நானே அசந்து போய்ட்டேன் தெரியுமா... மேற்கொண்டு நீ எதையும் கெஸ் பண்ணிற கூடாதுன்னு தான், உன்ட்ட வாய குடுக்காம கட் பண்ணிட்டேன்” என்றான்.


“சரி, அப்போ நீ சொல்றத பாத்தா அந்த ரகு....” என்று சகி இழுத்தவுடன், “ஹ்ம்ம்.. அந்த ரகுவ இவங்க கொல்லல... விசாரிச்சுட்டு இருக்கோம்... இப்போ அத வெளிய சொல்லி மறுபடியும் மக்கள் மனசுல பீதிய கிளப்ப வேணாம்ன்னு விட்டுட்டோம்” என்று அவன் முடித்துத் தன வண்டியைக் கிளப்பினான்.


'அப்போ ரகுவ யார் கொன்னுருப்பாங்க?' என்று யோசித்தவளுக்கு, 'பொண்ணுக்கு தீங்கு நினைக்குறவன சும்மா விடமாட்டா பொன்னி...' என்று பாட்டி சொன்னது ஞாபகம் வர, அந்தப் பெரிய வீட்டைப் பார்த்தாள்.


அந்த வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொன்னி, சகியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்து கொண்ட சகியின் இதழ்களிலும் புன்னகை பூத்தது.


அதற்குள், “ஓய் என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்குற... ஏறு...” என்று ருத்ரனின் குரல் கேட்கவே, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, பொன்னியைப் பார்த்துக் கை அசைத்துக் கொண்டே சென்றாள் சகி, 'உயிருடன் பல பேய்கள் இங்கு சுற்றிக்கொண்டு இருக்க, இந்த தேவதைக்கு ஏன் பேய் என்று பெயர் சூட்டினர்' என்று மனதில் நினைத்தவாறே...


பெண் என்பவள் உன்னில் பாதி, அவளை அழிக்க நினைத்தால் நீ அழிந்துவிடுவாய்!!


பெண்களை நிழல் போல் என்றும் தொடர்ந்து காத்துக் கொண்டே இருப்பாள் பொன்னி..!!



Rate this content
Log in

Similar tamil story from Drama