துருவின் வாழ்க்கை - 1 - மனதின் உணர்ச்சிகள்: வெறுப்பை கடந்து வாழ்தல்
துருவின் வாழ்க்கை - 1 - மனதின் உணர்ச்சிகள்: வெறுப்பை கடந்து வாழ்தல்


வாழ்க்கை 1 - மனதின் உணர்ச்சிகள்: வெறுப்பை கடந்து வாழ்தல்
பறவைகளின் மாலை நேர சங்கீதக் கச்சேரி காற்றில் கசிந்து கொண்டிருக்க, இயற்கை எழில் கொஞ்சக் காட்சியளித்தது, மதுரை அருகே இருந்த நாம்பனூர் கிராமம்.
பச்சைக் கம்பளி வயல்வெளிகளுக்கு, நெட்டைத் தென்னை மரங்கள் ஒருபுறம் குடை பிடிக்க, மறுபுறம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், நீலமும் பச்சையுமாய் நாம்பன் குட்டை, காற்றின் இசைக்கு ஏற்ப சலசலத்துக் கொண்டிருக்க, இயற்க்கைக்கு நடுவே செயற்கையாய் நீண்டிருந்தது அந்த நெடுஞ்சாலை.
மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் கலங்கிய கண்கள், அந்தக் காட்சிகளை ஏக்கத்துடன் படம்பிடித்துக் கொண்டிருந்தன.
சிறுவயதிலிருந்து அந்த கிராமமே கதியென சுற்றித் திரிந்தவன், முதன் முறையாக ஊரையும் குடும்பத்தையும் பிரிந்து, வெகுதூரம் சென்றுகொண்டிருக்கிறான்.
இளம்பச்சையில் காக்கி கட்டங்களிட்டிருந்த அரைக்கை சட்டையும், கருப்பு நிற கால் சட்டையுமாய், தன் மெலிந்த ஆறடி உடலைக் குறுக்கிக்கொண்டு ஜன்னல் கம்பியில் சாய்ந்திருந்தான்.
பதினேழு வயது நிரம்பியதற்கு அடையாளமாய் முகத்தில் வளர்ந்திருந்த அரும்பு மீசை, அவனது மாநிறத்திற்கு எடுப்பாகவே தெரிந்தது.
காற்றில் கலைந்த அடர்ந்த கேசம் நெற்றியில் தவழ, அந்த ஊர் முடியும் வரை அதன் அழகை மனதில் நிறைத்துக் கொண்டவன், எல்லை தாண்டியதும் கண்களை மூடிக்கொண்டான்.
மனதில், அன்றைய காலைப் பொழுது வீட்டில் நடந்தவை, படமாக ஓடியது -
"ஏய்யா துருவு.. காலேஜிக்கு போக எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சுகிட்டியாய்யா?" என்ற கேள்வியுடன், கையில் தேநீர் குவளையுடன், அந்த ஓட்டு வீட்டிலிருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி.
அவரை நிமிர்ந்து பார்க்காமல் தனது பையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவன், "ஹ்ம்.." என்றதுடன், தேநீர் குவளையை வாங்கி அருகிலிருந்த மேசையின் மீது வைத்தான்.
தாயின் முகம் பார்த்தால் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் யாவும் கண்ணீராய்க் கொட்டிவிடுமோ என்ற பயம் அவனுக்கு.
அவன் துருவ். அந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அந்தப் பள்ளியின் முதலிடத்தைப் பிடித்திருந்தான்.
சென்னையிலிருந்த ஒரு பெரிய தனியார் கல்லூரியில், உதவித்தொகையுடன் அவனுக்கு கணிப்பொறி பொறியியலில் இடம் கிடைக்க, அவனது குடும்பமே பூரித்துப்போனது.
இதோ அதோ என்று அவன் சென்னைக்கு கிளம்பும் நாளும் வந்துவிட்டது.
"டீ சூடு ஆறுறதுக்குள்ள குடி ராசா.." என்று அவனருகே அமர்ந்தார் அவனது தாய்.
அதற்கு மேல் முடியாதவனாய் தாயின் மடியில் முகம் புதைத்தவன், குலுங்கி அழத் துவங்கினான்.
அவனது மனதை அறிந்தவர், சிறிது நேரம் ஏதும் பேசாது அவனது தலைமுடியைக் கோதிக்கொண்டிருக்க, அவரது கண்களும் பணித்தது.
பின், "அழாத ராசா.. இதுக்கு தான இம்புட்டு வருசம் கஷ்ட்டப்பட்டு படிச்ச.. நம்ம குடும்பத்தோட மொதோ பட்டதாரி நீ.. அதுவும் இஞ்சினியரு..
ராணி அத்த சொல்லுச்சு, அந்த காலேஜில எல்லாம் பெரிய பெரிய வூட்டு புள்ளைகதேன் படிப்பாகளாம்.. அம்புட்டு பெரிய காலேஜில போயி படிக்க போவுத.. இப்புடி அழுது வடிஞ்சுட்டு போனா நல்லாவா இருக்கும்?? ராசா மாரி ஜம்முன்னு சந்தோசமாவுல்ல போவணும்..
முன்னால மாரியா?? இப்பந்தேன் போனுலயே பாத்துக்கலாமுல்ல.. அதனால எத பத்தியும் யோசிக்காம நல்லா படிப்பே.. கொஞ்சம் செரமமாத்தேன் இருக்கும்.. பல்ல கடிச்சு நல்லா படிச்சுப்புட்டேன்னு வைய்யி, நாங்க படுற கஷ்டமெல்லாம் நீ படாம ஜம்முன்னு இருக்கலாமுல்ல..” என்று அவனுக்குச் சமாதானம் கூறினார் தாய்.
அறை வாயிலைக் கடந்த துருவின் தந்தை ஓரக்கண்ணால் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இன்னும் நல்லா பொத்தி பொத்தி வள.. குட்டிச்சொவரா போவட்டும்.. கழுத வயசாவுது, ஆத்தா மடியில படுத்து கரையுறாரு தொர..
சீக்கிரம் வந்து கஞ்சிய ஊத்துத்தா, அங்க வயல்ல எல்லாத்தயும் பாதியில போட்டு வந்துருக்கேன்.." என்றவாறே உள்ளே சென்றார்.
“அவுக கெடக்குறாக.. நீ எந்திய்யா எந்திச்சு கண்ணுத்தண்ணிய தொடச்சுப்புட்டு டீய குடி.. மதியத்துக்கு கறிக்கஞ்சி ஆக்கி வச்சிருக்கேன், எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு வந்து ஒரு வா சாப்புடு..." என்றவாறு அந்த அறையைவிட்டு வெளியேறி சமையல் கட்டிற்குள் நுழைந்தார் அவனது தாய்.
உள்ளே அவனுக்குக் கேட்கக் கூடாதென அவர்கள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டது துருவிற்கு நன்றாகவே கேட்டது.
அவனது தாய், "ஐயனும் புள்ளையும் பாம்பும் கீறியுமாத்தேன் சுத்துறீக.. இன்னைக்கு ஒரு நாளு அமைதியா இருக்க கூடாதா? ஊருக்கு போற புள்ளைய கறிச்சு கொட்டிக்கிட்டு.." என்றவாறே அவனது தந்தைக்கு உணவை எடுத்து வைத்தார்.
அவனது தந்தை, "இந்த மோதரத்த போட்டுக்கிட்டு வேல செய்ய முடியல, அதான் கழுத சும்மா கையில கெடக்குறதுக்கு அடகு கடையிலே கெடக்கட்டும்ன்னு வச்சுப்புட்டேன்.. இதுல பத்தாயிரத்தி சொச்சம் இருக்கு, நீயே குடுக்குறமாரி உம்புள்ளட்ட செலவுக்கு வச்சுக்க சொல்லி குடுத்துப்புடு..." என்றார்.
அவனது தாய், "ஏன் நீங்க குடுத்தா என்னவாம்?" என்று நொடித்துக்கொள்ள, அவரிடம் பதிலில்லை.
துருவ் மதிய உணவை முடித்துக் கொண்டு, வீட்டின் வெளியே படர்ந்து வளர்ந்திருந்த வேப்பமர நிழலில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து, "அவன் ரெடி ஆயிட்டானா?? பஸ்சுக்கு நேரமாச்சு.." என்ற தந்தையின் சத்தத்தில் விழித்தவன், வேகவேகமாக எழுந்து, உள்ளே சென்று உடைமாற்றி, தன் பைகளை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தான்.
தாயிடம் விடைபெற, அவர், "இந்தாய்யா இதுல பன்னெண்டாயிரத்தி சொச்சம் இருக்கு.. செலவுக்கு வச்சுக்க.." என்று அவனது கையில் பணத்தைத் திணித்தார்.
தந்தை கூறிய பத்தாயிரம் நினைவிற்கு வர, தாயின் 'அடுக்களைச் சிறுசேமிப்பு' பணமாக இருக்கக்கூடும் என்று மனதிற்குள் நினைத்தவனது கண்கள் லேசாகக் கலங்கின.
அவன், "ஏற்கனவே இருக்கேம்மா.." என்று மறுக்க, அவனது தாய், "முன்ன பின்ன தெரியாத எடத்துக்கு போறவன்... வெச்சுக்கோ ராசா.. இன்னும் தேவப்பட்டா கூட கூச்ச படாம கேளு, பேங்க்குல போட்டு விடுறோம்..
உடம்ப பாத்துக்கோ.. நித்தமும் போன் பண்ணு.. நல்லா படிச்சு, பெரிய வேலைக்கு போவணும் என்ன?? நாம்பங்குட்ட அய்யனாரய்யா, நீதான் எம்புள்ளைக்கி தொண.." என்று கூறி துருவின் நெற்றியில் விபூதி இட்டுவிட்டார்.
துருவின் தந்தைவழிப் பாட்டியும் தன் பங்கிற்கு அவனது கையில் ஐநூறு ரூபாயைத் திணித்து, "ஆஸ்டல் சாப்பாடு நல்லா இருக்குமோ என்னமோ, வெளிய கடகன்னியில புடிச்சத வாங்கி வகுருக்கு வஞ்சன இல்லாம நல்லா சாப்புடுய்யா... அப்பத்தாக்கு போன் பண்ணு.. என் ராசா.. மவராசனா போயிட்டு வா.." என்று அவன் கன்னம் தடவி கொஞ்சினார்.
பேருந்தில் அமர்ந்தவாறு அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனது மூடிய கண்களிலிருந்து லேசாகக் கண்ணீர் வழிந்தது.
அதைத் தன் கைகளால் அழுந்தத் துடைத்துக்கொண்டவன், தன் கவனத்தைச் சாலையில் செலுத்த, எப்போது உறங்கினானென அவனுக்கே தெரியவில்லை.
அடுத்தநாள் காலை துருவ் தன் கல்லூரியை அடைந்தான். அவனுக்கென்ன ஒதுக்கப்பட்ட மாணவர் விடுதி அறையினுள் நுழைந்தான்.
அங்கு இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருக்க, ஒன்றில் ஏற்கனவே சில பைகளும், துணிமணிகளும் இரைந்து கிடந்தன.
மற்றோரு கட்டிலின் மீது அவன் தன் பைகளை வைத்துவிட்டு, குளித்து வந்தான். தன் துணிமணிகளையும் புத்தகங்களையும் எடுத்து அங்கிருந்த அலமாரியில் நேர்த்தியாக அடுக்கிவைத்தான்.
தன் வெற்றுப்பைகளைக் கட்டிலின் கீழே வைத்தவன், கட்டிலில் அமர்ந்தான். அப்போது அந்த அறைக்குள் நுழைந்தவன், "ஓ, நீதான் அந்த துருவ்வா?" என்றான்.
அவனை ஆச்சரியமாகப் பார்த்த துருவ், "ஆமா.. உங்களுக்கு எப்டிடிடிடி??" என்று இழுக்க, மற்றவனோ, "ஆமா நீ பெரிய கலெக்டரு.. ஊருக்கே தெரிய.. ஹாஸ்டல் ரிஜிஸ்டர்ல பாத்தேன்.." என்றவாறே தன் செருப்புகளை இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீசியபடி கழற்ற, ஒன்று துருவின் கட்டிலருகே வந்து விழுந்தது.
அதைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாதவனாய் தன் சட்டையைக் கழற்றியவன், "பை தி வே, ஐ அம் பிரவீன்.." என்றவாறு அலமாரியைத் திறந்தான்.
அவன், "இது என் சைட், உன்னுதுலாம் எடுத்து அந்தப் பக்கம் வச்சுக்கோ.." என்றவாறு அந்த அழுக்குச் சட்டையை துருவ் பொருட்களை வைத்திருந்த இடத்திலேயே தொங்கவிட்டான்.
துருவிற்கு மனதிற்குள் கோவம் எழுந்தாலும், முதல் நாளே சண்டை வேண்டாமென நினைத்தவன், அமைதியாகத் தன் பொருட்களை எடுத்து மறுபக்கம் வைத்தான்.
இப்படியே ஒரு மாதம் செல்ல, ஒரு மாலை துருவ் தன் அறையிலிருந்த மேசையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான்.
பிரவீன் கட்டிலில் படுத்தபடி அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காணொளி சத்தமாக ஒலிக்க, அவன் சத்தத்தைக் குறைத்துவிடுவான் என்று சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்தான் துருவ்.
ஆனால் பிரவீன் அதைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
துருவ், "பிரவீன், ஃபோன் சவுண்ட் கொஞ்சம் கொறைச்சுக்கோயேன்.. டிஸ்டர்ப் ஆகுது, படிக்க கஷ்டமா இருக்கு.." என்று மென்மையாகக் கூறினான்.
பிரவீன், "இது ஒன்னும் உங்க ஆயா வீடு இல்ல சார்.. அண்ட் நானும் உங்க வேலக்காரன் இல்ல, ஆர்டர் போடுறதுக்கு.. நீ கூடத்தான் எப்போப்பாரு நொணநொணன்னு படிக்குற.. நான் என்னைக்காச்சு சொல்லிருக்கனா??
இந்த ரூம்ல உனக்கு எவ்ளோ ரைட்ஸ் இருக்கோ அது மாதிரி எனக்கும் இருக்கு.. நான் எவளோ சத்தமா வேணும்னாலும் பாப்பேன்.. முடிலேன்னா பஞ்சு வச்சு அடச்சிக்கோ.." என்றான்.
அதைக் கேட்ட துருவிற்கு சுறுசுறுவெனக் கோவம் எழ, "படிக்குற டைம்ல ஃபோன் பாக்குறது நீ.. இதுல நான் காத அடச்சுக்கணுமா? வார்டன் சாருட்ட கம்பிளைன் பண்ணா ஃபோன புடுங்கி வெச்சிருவாரு தெரியும்ல..
ராத்திரியும் சத்தமா படம் பாக்குறது, விடிய விடிய லைட்ட போட்டுக்கிட்டு கூத்தடிக்குறது.. நானும் வந்ததுல இருந்து பொறுத்து பொறுத்து போனா, ரொம்ப ஓவரா போற நீ.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.." என்றான் பற்களைக் கடித்தவாறு.
பிரவீன், "தோ பார்ரா.. சிட்டிக்கு கோவம் வந்துருச்சு.. அச்சச்சோ பயமா இருக்கே.. போடா.. போய் கம்பிளைன் பண்ணு, இல்ல அந்த ஆள காதல் கூட பண்ணு.. வந்துட்டான் பெரிய கலெக்டரு.." என்றவாறே கால்மேல் கால் போட்டபடி மேலும் சத்தத்தைக் கூட்டி வைத்துப் பார்க்கத் துவங்கினான்.
கடுப்படைந்த துருவ் வேகமாக வெளியேறி அந்த விடுதியின் வார்டனிடம் சென்று முறையிட்டான். அவரும் அவனுடன் அவனது அறைக்கு வந்தார்.
பிரவீன் தன் அலைபேசியைக் காது அருகே வைத்துக்கொண்டு, ஒரு கையில் பேனாவும், மடியில் புத்தகமுமாக பவ்வியமாய் அமர்ந்திருந்தான்.
வார்டன், "என்ன தம்பி.. படிக்குற நேரத்துல சத்தமா சினிமா வச்சு பாக்குறியாமே??" என்று பிரவீனிடம் வினவினார்.
அதற்கு பிரவீன், "சினிமாவா?? சார், நாளைக்கு யூனிட் டெஸ்ட் இருக்கு.. அது சம்பந்தமா நெட்டுல தேடி நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன்.. ஹெட்செட்ல சார்ஜ் போயிருச்சு, கொஞ்ச நேரம் சார்ஜ் ஆகட்டும்டா அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்லி ரொம்ப கம்மியா சவுண்ட் வச்சுதான் கேட்டுட்டு இருந்தேன்..
அதுக்குள்ள உங்கட்ட வந்து கம்பிளைன் பண்ணிட்டான் சார்.. என்ட்ட சொல்லிருந்தா நானே ஃபோன ஆஃப் பண்ணிருப்பேன்.." என்றான்.
துருவிடம் திரும்பிய வார்டன், "என்ன தம்பி, ஸ்கூல் பிள்ளைக மாதிரி இதுக்கெல்லாமா என்ன கூப்புட்றது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போப்பா.." என்றுவிட்டு வெளியேறினார்.
அவர் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்ட பிரவீன், மடியிலிருந்த புத்தகத்தை வீசிவிட்டு, மீண்டும் சத்தமாகக் காணொளியைப் பார்க்கத் துவங்கினான்.
அதைக் கண்ட துருவின் மனம் கனலாய்க் கொதிக்க, தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.
ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த கல் திட்டில் அமர்ந்தவன், கண்களை மூடிக்கொண்டு தன் குடும்ப சூழலை நினைத்துப் பார்த்தான்.
சிறு ஓட்டு வீடுதான் என்றாலும், துருவ் படிக்கும்போது வீடு அமைதியாக இருக்கும். அவனுக்கு தொந்தரவு தரக்கூடாதென அவனது பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதைக் கூட தவிர்ப்பர்.
'கொஞ்சம் செரமமாத்தேன் இருக்கும்.. பல்ல கடிச்சு நல்லா படிச்சுப்புடுய்யா' என்ற தாயின் குரல் மனதிற்குள் ஓடியது.
இனி தன்னைக் கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொண்டு, பிரவீனைச் சட்டை செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான்.
மாலை நேரங்களில் படிப்பதற்கு அறையிலிருந்து வெளியேறி, கல்லூரியில் எங்காவது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து கொண்டான்.
இரவு, அறையில் விளக்குகள் ஒளிர்ந்தாலும் அந்த வெளிச்சத்தில் தூங்கப் பழகிக்கொண்டான்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிய, பிரவீனின் அட்டகாசங்களும் தொடர்ந்தன.
அவன் மட்டுமல்லாது, அதே விடுதியில் தங்கியிருக்கும் அவனது நண்பர்கள் சிலரும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்கள் அவனுடைய அறையிலேயே திரைப்படம், சீட்டாட்டம், அலைபேசி விளையாட்டுகள் என்று பொழுதைக் கழித்தனர்.
அவர்கள் போடும் கூச்சலில் துருவால் அந்த அறையில் சிறிது நேரம்கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.
வெளியே உணவு வாங்கி உண்டுவிட்டு, குப்பைகளை அப்படியே அறையில் போட்டுவிட்டுச் செல்வர்.
ஒருமுறை துருவ் இல்லாத சமயம், வார்டன் பிரவீனிடம் அதைப் பற்றி விசாரித்தபோது, அவன் துருவ் தான் அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை எனவும், தான் எவ்வளவு கூறியும் அவன் கேட்பதில்லை எனவும் கூறிவிட்டான்.
துருவை தன் அறைக்கு அழைத்த வார்டன், இனி அவன் அறை சுத்தமாக இல்லையென்றால் அபராதம் விதித்து விடுவேனென அவனை எச்சரித்து அனுப்பினார்.
வேறு வழியின்றி துருவ் தங்கள் அறையை அவ்வப்போது அவனே சுத்தம் செய்தான்.
ஊரில் வீட்டிற்குச் செல்லும் வேளைகளிலும், தாயிடமும் அப்பத்தாவிடமும் அலைபேசியில் பேசும்போதும் துருவ் இதுபற்றி பெரிதாகச் சொல்லிக்கொண்டதில்லை. தான் நன்றாக இருப்பதாகக் கூறிவிடுவான்.
அவர்களது மூன்றாம் வருட முடிவில், புகைப் பழக்கத்தையும் மது பழக்கத்தையும் ஒட்டவைத்துக்கொண்டான் பிரவீன். அவ்வப்போது அவனது நண்பர்களும் இணைந்துகொள்வர்.
அவர்களது அறையிலிருந்து காலி மது பாட்டில்களையும், சிகரெட் துண்டுகளையும் கண்டெடுத்த வார்டன், இருவரையும் கல்லூரி முதல்வர் முன் நிறுத்தினார்.
பிரவீன், "சார் எனக்கு எதுவுமே தெரியாது சார்.. நான் உண்டு என் வேல உண்டுன்னு இருப்பேன்.. இதெல்லாம் செய்யுறது இவன்தான்.. நான் தப்புன்னு சொன்னா கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறான்..
வார்டன் சார்கிட்ட சொல்லிருவேன்னு சொன்னதுக்கு அடிச்சு போட்டுருவேன்னு மெரட்டுனான்.. வேணும்னா பக்கத்து ரூம் பசங்ககிட்ட கூட விசாரிச்சு பாருங்க சார்.." என்று வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
அதேபோல அவனது நண்பர்களும் துருவிற்கு எதிராகச் சாட்சி சொல்ல, வார்டானும், "இந்த பையன் மொதோ வருஷத்துல இருந்தே சரி கெடையாது சார்.. கூட இருக்குறவங்கள மதிக்க மாட்டான், ரூம நீட்டா வச்சுக்க மாட்டான்.. இப்போ தண்ணி, தம்மு.." என்று தன்னுடைய கருத்துகளையும் அடுக்கினார்.
அனைத்தையும் விசாரித்த முதல்வர், துருவின் பெற்றோருக்கு அழைத்து விஷயத்தைக் கூறி, அவனை இரண்டு வாரங்கள் கல்லூரியிலிருந்தும், விடுதியிலிருந்தும் இடைநீக்கம் செய்தார்.
வேறுவழியின்றி ஊருக்குச் சென்ற துருவை அவனது தாயின் கலங்கிய முகமே வரவேற்றது.
தந்தையோ என்ன ஏதென்று விசாரிக்காமல், "இருக்க நஞ்ச புஞ்சையெல்லாம் அடமானம் வச்சு படிக்க அனுப்புனா, தொரைக்கு சாராயம் கேக்குதோ சாராயம்.." என்று பிரம்பை வைத்து வெளுத்தெடுத்தார்.
அவர் சென்றபின் தாயிடம் திரும்பியவன், "ம்மா.. நான் தப்பு செய்யலம்மா.." என்று கண்கலங்கக் கூறினான்.
அவனது தாயோ அவன் முகத்தைக் கூட பாராமல், "உன்ன எப்புடி நெனச்சிருந்தேன், இப்புடி பண்ணிப்புட்டியேய்யா.." என்றதுடன் உள்ளே சென்றுவிட்டார்.
அந்த இரண்டு வாரங்களும் தந்தையின் குத்தல் பேச்சுகளும், தாயின் பாராமுகமுமாகச் சென்றது துருவிற்கு. தன் பெற்றோர் கூட தன்னை நம்பவில்லையே என்று பெரிதும் வருந்தினான்.
பேரனின் மீதிருந்த அளவுகடந்த அன்பில் அப்பத்தா, "விடு ராசா.. அதையே நெனச்சுக்கிட்டு இருக்காத.. அப்பத்தாக்காக ஒருவா சாப்புடுப்பு..." என்று வேளைதவறாமல் அவனுக்கு உணவை ஊட்ட, அவனும் அவருக்காக அரைகுறையாகச் சாப்பிட்டான்.
அதன்பின் கல்லூரி வந்தவன், வேறுவழியின்றி பிரவீனின் செயல்களைத் தாங்கிக்கொண்டு, தன்னால் முடிந்தவரை முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினான்.
தன் தாயும் சரியாக அலைபேசியில் பேசாதுபோக, தன் வேதனையைக் குறைக்க வழியின்றி, மனவலிகளைக் கூறுவதற்கும் யாருமின்றி தனியாகச் சென்று துக்கம் கரையும்வரை அழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
பயணம் தொடரும்..!!