DEENADAYALAN N

Comedy Horror Thriller

3.9  

DEENADAYALAN N

Comedy Horror Thriller

ஜாக்கிரதை… இது பேய்களின் நேரம்!கோவை என். தீனதயாளன்

ஜாக்கிரதை… இது பேய்களின் நேரம்!கோவை என். தீனதயாளன்

7 mins
331


ஜாக்கிரதை… இது பேய்களின் நேரம்!

கோவை என். தீனதயாளன்

 

 

அன்பு வாசகர்களே.. வணக்கம்!


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற சந்தேகம் எனக்கு இல்லை. ஏனெனில் ‘கடவுள் இருக்கிறார்’ என்று பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.


ஆனால் பேய் இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் மட்டும் எனக்கு தீர்ந்தபாடில்லை. பல பேர் பல பேய் கதைகளை சொல்லக் கேட்டிருக்கிறேன். கதைகள் என்று சொல்வதை விட சம்பவங்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த சம்பவங்கள் உண்மையா அல்லது மனப் பிரம்மையா என்று எப்போதும் ஒரு சந்தேகம் என் மனதில் தொக்கி நிற்கும்.


சென்ற என் பேய்க் கதையில் சில வகைப் பேய்களைப் பற்றி பிரஸ்தாபமாக விளக்கி இருந்தேன். அத்தோடு, அவைகளை எப்படி பொரி, பிய்ந்த விளக்குமாறு, பிய்ந்த செருப்பு இவைகளை வைத்து விரட்டுவது என்றும் விவரமாக சம்பங்களுடன் விளக்கி இருந்தேன்

. link:

 https://storymirror.com/read/tamil/story/peeykllinnn-caamraajjiym-koovaiennn-tiinnntyaallnnn/hcnnmswf


அந்த வகையில் சென்ற என் பேய்க் கதையைப் படித்து விட்டு பேயன் என்று ஒரு இளம் வாலிபர் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் சொன்னதையும் அதில் அவர் சொன்ன பேய்களின் வகைகளைப் பற்றியும் பார்ப்போம்!


தைரியம் இருப்பவர்கள் மட்டும் என்னோடு இணைந்து கொள்ளுங்கள்!



இரவு இரண்டு மணி. நைட் ஷிஃப்ட் முடிந்து கிளம்பிய பேயன், வழக்கம் போல மருதுவை நோக்கி சென்றான். மருது சீனியர் மெக்கானிக். எப்போதும் பேயன் ‘டூட்டி’ முடிந்து கிளம்பும் முன் மருதுவிடம் சொல்லி விட்டுதான் கிளம்புவான்.


‘மருது அண்ணே… நான் கெளம்பறேன்..’ என்றான்.


‘கெளம்பீட்டியாடா பேயா.. பாத்துப் போடா.. நீ போற ‘ரூட்’டு கொஞ்சம் பிரச்சினை உள்ள ‘ரூட்’டுடா’.. ஜாக்கிரத..’ என்று அக்கறையாய் சொல்லி அனுப்பினாr மருது அண்ணன்.


அப்பொழுதுதான் பேயனுக்கு ‘கருக்’ என்றது.


ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து இன்றுதான் மீண்டும் நைட் ஷிஃப்ட ஆரம்பம் ஆகி இருந்தது.


மருது அண்ணன் சொன்னது போல் போகிற பாதை அவ்வளவு எளிதானதல்ல. பகலிலேயே பேய்ப் பிசாசு நடமாடும் என்பார்கள். இப்பொழுது இரவில் போவதென்றால்… குண்டும், குழியும், மணலும், சகதியும், கள்ளிச் செடுகளும், புதர்களும் பாம்புப் புத்துகளும் நிறைந்த பாதை. போதாக் குறைக்கு இடையிடயே சுடுகாடு, கரும்புக்காடு, வயக்காடு, சைத்தான் தோட்டம்னு, வழி நெடுக அச்சம் தரும் மிக பயங்கரமான சூழல் நிரம்பி வழியும்.


ஆனால் வேறு வழி..? பேயன் கிளம்பினான்.


மிதிவண்டி சவாரிதான். சற்று தூரத்திற்கு கம்பெனிக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கு, வெளிச்சம் காட்டியது. அதன் பின் ஒரு மேடு ஏறியவுடன் பத்தடிப் பாதை! பேயனின் சைக்கிள் ‘க்கர்ர்ச்ச்… க்கிர்ச்ச்ச்… க்கர்ர்ச்ச்… க்கிர்ச்ச்ச்…’ என சத்தம் போட்டுக் கொண்டு அந்தப் பத்தடிப் பாதையில் முக்கி முனகி ஏறி ஓடத் தொடங்கியது.


அந்த கரிகும்மிருட்டில்.. சற்று தூரத்தில் இருந்து பார்த்தால், ஏதோ எமன், எருமை மாட்டின் மேல் ஏறி ஊர்ந்து வருவதைப் போல் பேயன் சைக்கிளின் மேல் ஏறி ஊர்ந்து வந்து கொண்டிருந்தான்.


‘விஸ்..ஸ்..ஸ்…’ என்று மெலிதாக இருந்த காற்றின் போக்கு சற்று அதிகமாகி ‘z..z..z..’ என்று பெரிதாகிக் கொண்டிருந்தது. நிமிடத்திற்கு ஒரு முறை மின்னல் மின்னிக் கொண்டிருக்க, ‘நான் இங்கே இருக்கிறேன்..’ என்று வானம் தன் தோற்றத்தைக் காட்டி காட்டி மறைத்துக் கொண்டிருந்தது.


இருளும் அமானுஷ்யமும் சூழச் சூழ பேயன் பயத்தில் உறைய ஆரம்பித்தான். ஒரு சிறிய பாராங்கல் வடிவில் அந்த பயம் அவன் நெஞ்சில் உட்கார்ந்து அழுத்த ஆரம்பித்தது.


அங்கொன்றும் இங்கொன்றுமாக, அவ்வப்போது, அவன் புறங்கை, உதடு, காதுமடல், பின்கழுத்து என இவற்றின் மீது ஓரிரு மெல்லிய சாரல் துளிகள் பட்டு சிதறி ‘வந்தாலும் வந்து விடுவேன்..’ என்று மழை ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருந்தது.


பையில் மழைக் கோட்டு இருக்கிறது. ஆனால் நின்று, அதை எடுத்து, பிரித்து, போட்டுக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.


அப்படியே, கொஞ்ச நேரத்தில் சைத்தான் தோட்டம் வந்திருந்தான். அது பல ஏக்கரில் விரிந்து பரந்த பெரிய தோட்டம். பேயன் சற்று உற்று நோக்கினான். நெடுந்தூ…ரம் தள்ளி, தோட்டத்தின் நட்ட நடுவில், ஒரு புள்ளி வடிவில், ஒரு தீக்கங்கு கனன்று கனன்று பொங்குவதும் பின் அடங்குவதும் சற்று பெருகுவதுமாக இருந்தது. பயம் ஒரு தீப்பந்து வடிவில், பேயனின் அடி வயிற்றில் போய் ‘லபக்’ என்று சிம்மாசனமிட்டது.


சைத்தான் தோட்டத்தில் நள்ளிரவு நேரங்களில் கொள்ளிவாய்ப் பிசாசுகள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருப்பதாக என்றோ சுப்பன் சொல்லிக் கொண்டிருந்தது இப்போது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘புலிய கொன்ன சுப்பன்’ என்னும் அடைமொழியை பெற்றிருந்த, சுப்பன் சரியான புருடா மன்னன். பொய்ப் புரட்டி. அதனால் பேயன் அவனது பேச்சை அப்பொழுது பெரிதாய் உள் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது சுப்பனின் ஒவ்வொரு வார்த்தையும் காதுகளில் surround sound effect உடன் உள் நுழைந்து அவனை வாட்டி வளவெடுத்தது. அந்தத் தீக்கங்குகள் அந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளின் வேலைதான் என்று உறுதியாகத் தெரிந்தது. சைக்கிளை அசுர வேகத்தில் மிதிக்கத் தொடங்கினான். ‘யா..ய்.. யா..ய்.. ‘ என தீனமாக என ஏதோ ஒரு சத்தம் அவனை அங்கே நிற்க விடாமல் துரத்தியது.


பேயன் சைக்கிள் பெடலை அமுக்கி.. அமுக்கி தலை தெறிக்க ஓட்டினான்.


எப்படியோ சற்று நேரத்தில், ஒரு வழியாக சைத்தான் தோட்டத்திலிருந்து தப்பித்து, பரந்து விரிந்த வயக்காட்டுப் பக்கம் நெருங்கி வந்து விட்டிருந்தான்.


எப்பவுமே வயக்காட்டு நடுவுலே ஒரு சோளக்கொல்லை பொம்மை கட்டப் பட்டிருக்கும் என பேயன் கேள்விப் பட்டிருந்தான். இருட்டில் கண்களை உருட்டி தேடிய போது அங்கே ஒரு பொம்மையைப் போல் ஏதோ தென்பட்டது.


ஆனால்… ஆனால்.. என்ன..? அது சற்றே அசைவது போல் இருக்கிறதே.. அது எப்படி பொம்மை அசையும்.? ‘ஒரு வேளை எனக்கு மனப்ரம்மையாக இருக்கலாம்…‘ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.


ஆனால் அந்த எண்ணம் நீடிக்கவில்லை. உருவத்தின் கைகள் மேலேயும் கீழேயும் ஆடியது. சற்று முன்னால் வருவதும் சற்று பின்னால் போவதுமாக இருந்தது. அது பொம்மை அல்ல.. ஏதோ பேய்தான் அசைகிறது என்று தோன்றியது.



அப்போதுதான் பேயனுக்கு நினைவு வந்தது. ஆறு மாசத்துக்கு முன்னாலேதான் கோடாறிக் காம்பனோட பொஞ்சாதி நமுச்சியக்கா இங்க வந்து புளிய மரத்துலே சேலைய கட்டி தூக்குலே தொங்கிட்டான்னு சொல்லியிருந்தாங்க. இப்பொ நாலு நாளைக்கு முன்னால, பகல் சரியா பன்னண்டு மணிக்கு நம்ம ஒச்சாயி புருஷன இங்க வெச்சி அந்த நமுச்சியக்கா ஆவி தொரத்திகிட்டு வந்துதாம். ஆனா நல்ல நேரமா ஒச்சாயி புருஷன் கால்லே இருந்த செருப்பக் கழட்டி அந்த ஆவி மேலே வீசிட்டு, ஓடி வந்துட்டானாம். நமுச்சியக்கா ஆவி அத்தோட விட்டுட்டு போயிருச்சாம்.


இந்த நினைவு வந்தவுடன் பேயனுக்கு பயத்தில் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. இவன் வேறு கல்யாணமாகாத கன்னிப்பையன். ஒரு வேளை நமுச்சியக்கா ஆவி வந்து இவனப் புடிச்சா அவ்வளவுதான். உசுரு காவுதான்! 


பேயன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நைசாக மீண்டும் ஒரு முறை அந்தப் பக்கம் பார்வையை செலுத்தினான். அந்த வயக்காட்டு உருவம், கையை ஆட்டிக் கொண்டு, அசைந்து.. அசைந்து.. ஒரு வேளை தன்னை..தன்னை.. நோக்கி..,,!


அவ்வளவுதான். பேயன் எடுத்தான் சைக்கிளெ. புடிச்சான் ஓட்டம்.. அப்பொ அவன் சைக்கிள ஓட்டிய வேகம் சொல்லி அடங்காது. வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம். ஏதோ ஒலிம்பிக் போட்டிக்கு ஓட்டுவதைப் போல தெறிக்க தெறிக்க ஓட்டினான்.


ஒரு வழியாக அங்கிருந்து அவன் தப்பி வந்து நிமிர்ந்த போது இன்னொரு பெரிய கண்டம் அவன் முன்னாடி ‘ஜங்’குனு குதிச்சுது. ஆமா அவன் இப்பொ சுடுகாட்டுப் பகுதிக்கு வந்து விட்டிருந்தான்.


அதே பயத்தில் அவன் சைக்கிள் பெடலை காலை ஓங்கி ஒரு அழுத்து அழுத்தி மிதிக்க, சைக்கிள் செயின் கட்டாகி தொபுக்கடீர்னு கீழே விழுந்தான்.


தட்டுத்தடுமாறி எழுந்தான். சுடுகாட்டுக்குள் ‘தகதக’ன்னு ஒரு பொணம் எரிஞ்சிகிட்டு இருந்தது. சுடுகாட்டுக் கதவு தெறக்கறதும் மூடுறதுமாக பயங்கர சத்தத்தை எழுப்பி அவன் ஈரக்குலையை நடுங்கச் செய்தது.


கதவோட சத்தத்துலையே ஒருத்தன் உசுர விட்ருவான் போல அவ்வளவு பயங்கர சத்தம். ஆனா கண்டிப்பா இது யாரோ உள்ளே இருந்து திறக்கறதும் மூடுறதுமா இருக்காங்க.. ஆனா மனுசங்க இங்க இருந்து இந்த நேரத்துக்கு இவ்வளவு வேகமா இதை செய்யறதுக்கு வாய்ப்பே இல்லே.. அப்பிடீன்னா.. இது ஆவிகளோட வேலைதான். எத்தனை ஆவிகள் இந்த சுடுகாட்டை சுத்திகிட்டிருக்கும்..? இது கண்டிப்பா அதுங்களோட வேலைதான்.


அந்த எண்ணம் உறுதி ஆன உடன், பேயன் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓடத் தொடங்கினான். ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்.. எவ்வளவு நேரம் ஓடினான் தெரியாது.. பயத்தை அவனாலே துரத்த முடியல.. ஆனா பயம் அவனை துரத்தோ துரத்தென்று துரத்தியது.


எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது இன்று வரை பேயனுக்கு பிடிபடவில்லை. ‘அந்த சுடுகாட்டுக் கதவு ஆவிகள்லே ஒன்னுதான் பேயனை அடிச்சு கொண்டு வந்து இங்க வீட்டு வாசல்ல போட்டுட்டு போயிருக்கணும். பேயனோட நல்ல நேரம்.. எப்பிடியோ பேயிடம் அடி பட்டும் பிழைச்சிகிட்டான்’ என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள்.


இரண்டு நாட்கள் பித்தனைப் போல் யாரைப் பார்த்தாலும் ‘பேந்தப் பேந்த’ விழித்தான் பேயன். மூன்றாம் நாள் சில நண்பர்களின் உதவியுடன் பகலில் போய்ப் பார்த்த போது அவன் சைக்கிள் அங்கேயே அனாதையாய் கிடந்தது.


அடுத்த இரண்டு மூன்று நாட்களும் ஊரே பேயனின் ஆவி அனுபவத்தைப் பற்றி ஆங்காங்கே கூடி, பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தது. வழக்கம் போல் பேயனின் பேய் அனுபவத்தை ஒட்டி, பல பேய் சம்பவங்கள் கிளர்ந்தெழுந்தன. 


இது ஆவிகளின் வேலை என்று ஒரு சிலரும், இது பேய்களின் லீலை என்று ஒரு சிலரும், மல்லிப்பட்டியில் நடந்த ‘கொள்ளிவாய்ப் பிசாசு’க் கதை இப்படி என்று ஒரு சிலரும், அல்லிப்பட்டியில் நடந்த ‘பத்துகண்ணுப் பேய்’ சம்பவம் அப்படி என்று ஒரு சிலரும், ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


பேயனின் பேய் அனுபவங்கள் அவன் அலுவலகம் வரை பரவி இருந்தது. நான்காம் நாள் வேலைக்கு திரும்பிய பேயனை எல்லோரும் சுழ்ந்து கொண்டார்கள். விலாவாரியாகக் கேட்டு விட்டு, ‘எப்படியோ முழுசா திரும்பி வந்துட்டியே அது போதும்’ என்று அவனுக்கு சிலர் ஆறுதல் சொன்னார்கள்.


மருது மட்டும் உணவு இடை வேளையின் போது பேயனை தனியாய் அழைத்துக் கொண்டு போனான். நடந்தவற்றை வார்த்தை வார்த்தையாகக் கேட்டறிந்தான். 


‘அப்பொ இனிமே எந்த ரூட்டுலே போவே..?’


‘கிஸ்தாபுரம் ரூட்டுலே போய்டுவேன் அண்ணே’


‘ஐயோ.. அதுலே போனா இருபது கிலோ மீட்டர் சுத்திகிட்டு போகணுமே..’


‘என்னண்ணே பண்றது? மறுபடியும் சுடுகாட்டு ‘ரூட்’லே போக பயமா இருக்கண்ணே..’


‘அது மட்டுமில்லே கிஸ்தாபுரம் ‘ரூட்’லே நாய்த் தொல்லை வேற பயங்கரமா இருக்குமே..?’


‘என்ன அண்ணே பண்றது..’ கவலையாக சொன்னான் பேயன்.


‘சரி.. இன்னிக்கு ஒரு நாளைக்கு கிஸ்தாபுரம் வழியா போ.. நாளைக்குள்ளே இதுக்கு ஒரு வழி பண்ணலாம்..’ என்று தைரியம் சொல்லி அனுப்பினார் மருது அண்ணன்.


அடுத்த நாள்!


‘பேயா, சுடுகாட்டு ‘ரூட்’லே உனக்கு என்னென்ன பயம்னு சொல்லு?’ – மருது அண்ணன் கேட்க ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் பேயன்.


‘முதல் பயம் கொள்ளிவாய்ப் பிசாசு அண்ணே…’


‘அதப் பத்தி நான் இன்னக்கி பகல்லே சைத்தான் தோட்டத்துலே போயி விசாரிச்சுட்டண்டா.. அங்க காவலுக்கு இருக்கிற கெழவன் எப்பவுமே பெரிய புனையூர் சுருட்டுதான் புடிப்பானாமா.. அவன் அப்பிடி சுருட்டு பிடிச்சிட்டு இருந்தப்பொதான் அதப் பார்த்து கொள்ளிவாய்ப் பிசாசுன்னு பயந்திருக்கே..’


‘ஆங்.. அப்பிடியா…அப்பொ வயக்காட்லே பார்த்த அசையற உருவம்..’


‘அடேய்.. அது சோளக்கொல்லை பொம்மைதாண்டா.. ரெண்டு நாள் முன்னதான் அத டவுன்லே இருந்து வாங்கிட்டு வந்தாங்களாம்.. அதுலெ ஒரு மோட்டார் பொருத்தி இருக்காங்களாம்.. அந்த மோட்டார் ‘ஸ்விட்சை’ப் போட்டு விட்டுட்டா அந்த பொம்மை கையையும் காலையையும் மேலே, கீழே, ‘சைட்’லேன்னு ஆட்டிகிட்டே இருக்குமாம்.. அஞ்சடி தூரத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் நடந்துகிட்டே இருக்குமாம்.. இருட்லே பார்த்தா அசல் மனுசன் மாதிரியே இருக்குமாம். அதப் பார்த்துதான் நீ பேயி.. ஆவின்னு.. பயந்து ஓடி வந்திருக்கே..’


‘அப்பொ அந்த நமுச்சியக்காவோட ஆவி, ஒச்சாயி புருஷனே பகல் பன்னண்டு மணிக்கு துரத்துனது..’


‘அடேய்.. அந்தப் பய பொஞ்சாதிக்கு பயந்துட்டு தினமும் பகல் பன்னண்டு மணிக்கு சரக்கு வாங்கிட்டு அவனோட கூட்டாளி ராசு கூட தண்ணியடிக்க நேரா அங்கதான் போவானாமா.. அந்த நேரத்துலே மத்த யாரும் அங்கே வரக் கூடாதுங்கறதுக்காக அவன் கட்டி விட்ட புருடாக் கதைடா அது. இதெ அந்த ராசுவே ‘டாஸ்மாக்’லே உக்காந்துகிட்டு தண்ணியப் போட்டுகிட்டு உளறிக் கொட்டிட்டானாமா.. எனக்கு நம்ம அங்கூரான் மூலமா தகவல் வந்துது.’


‘அடப்பாவி.. ஆனா அண்ணே.. இந்த சுடுகாட்டுக் கதவு போட்ட ஆட்டத்துக்கும், அது கெளப்பிய சத்தத்துக்கும் நிச்சியமா மனுசங்க அங்கே இல்லண்ணே.. நான் அதை உறுதியா சொல்லுவேன்.. நிச்சயமா அது ஆவிகளோட வேலதான்ணே..’


‘அப்பிடியா.. சரி இன்னைக்கி தைரியமா போ.. நான் சொல்ற மாதிரி செய்.. எப்பேர்ப்பட்ட ஆவியா இருந்தாலும் சரி.. பேயா இருந்தாலும் சரி.. அதுக்கப்புறம் உங்கிட்டே நெருங்காது..’


மருது அண்ணன் சில விவரங்களை பேயனிடம் விவரமாக சொன்னார். பேயனும் கண்ணும் கருத்துமாக ‘சரிண்ணே… சரிண்ணே..’ என்று கேட்டுக் கொண்டான்.


‘பயமாத்தான்ணே இருக்கு… இருந்தாலும் இன்னக்கி முயற்சி பண்ணி பாக்கறேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் பேயன்.


இரவு ஷிஃப்ட் முடிந்து பேயன் கிளம்பினான். மருது அவனிடம், ‘கவலைப் படாதடா.. நான் சொன்ன மாதிரி இதைக் கொண்டு போய் கதவுலே போட்டுடு.. அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் வராது.’ என்று அவன் கையில் எதையோ திணித்தார்.


பேயன் ‘தடக்.. தடக்’ மனதுடன் புறப்பட்டான். சம்பவங்கள் நடந்த அன்று போலவே இன்றும் . மெல்லிய தூறல்.. ‘விஸ்ஸ்..’ காற்று..! சைத்தான் தோட்டம், வயக்காடு என எல்லாம் இருந்தது. ஆனால் எந்த அசம்பாவிதமும் இன்றி கடந்தது.


ஆனால் சுடுகாட்டின் அருகில் வந்த போது மட்டும், அன்றைக்குப் போலவே இன்றும், அந்தப் பெரும் ராட்சக் கதவுகள் படபடத்து பயங்கர சத்தத்தையும் அசைவையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.


பேயன் மெதுவாக மிதிவண்டியை நிறுத்தினான். பயம் அடி வயிற்றில் புகுந்து பாடாய்ப் படுத்தியது. பயத்துடனேயே மெதுமெதுவாக சுடுகாட்டு கதவருகில் சென்றான். எங்கிருந்தோ ஒரு நரி ‘ஓ…’ வென ஓலமிட்டது. சுடுகாட்டின் உள்பக்கத்திலிருந்து ஒரு ஆந்தையின் அலறல் சத்தம் திடீரென்று கிளம்பியது.


சுற்றுமுற்றும் பார்த்தான். மருது அண்ணன் கொடுத்ததை அவர் சொன்னது போலவே கதவில் போட்டான். கதவுகளை மூடி அவர் சொன்ன படியே செய்தான்!


சில வினாடிகளில் கதவின் படபட சத்தம் ஒடுங்கியது. ‘க்ரீச்.. க்ரீச்’ சத்தம் அடங்கியது. அசைவுகள் அப்படியே நின்று போயின.


சுற்றுமுற்றும் பார்த்தான். எந்த ஆவியோ, பேயோ, பிசாசோ எதுவும் தென்படவில்லை.


நிம்மதி அடைந்த பேயன் காலியான ‘க்ரீஸ் (grease)’ டப்பாவை தூக்கி எறிந்தான். இரண்டு கதவுகளின் தாழ்ப்பாளையும் இணைத்து மாட்டும் ஒரு கொக்கியை ஒரு உறையில் போட்டுக் கொடுத்திருந்தார் மருதண்ணன். அந்த உறையையும் தூக்கி எறிந்தான்.  


மிதிவண்டியில் ஏறிக் கொண்டான். ‘நானே வருவேன் இங்கும் அங்கும் ‘ என்னும் யார் நீ படப் பாடலை அவன் வாய் முணு முணுத்தது.



இப்போது அந்த அளவிற்கு அவன் மன தைரியம் அடைந்திருந்தான்.



சற்று நேரத்தில் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.


அதைப் பார்த்ததும்...


பயமா..? பேயனுக்கா..? ம்.. மூச்..!


பீடிபிடித்தால் பரவாயில்லை போல் தோன்றியது பேயனுக்கு. நேராக மரக் கிளையை நோக்கி போனான்..


‘அண்ணே.. பீடி பிடிக்கணும்,, தீப்பெட்டி இருக்குமா?’ மரக் கிளையில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான் பேயன்.


‘எங்கிட்டே ஏது தம்பி தீப்பெட்டி... நான் செத்தே நாலு வருஷம் ஆகுது’ என்று சாதாரணமாக சொன்னான் அவன்.


ஆனால் பேயன் அசரவில்லை!


‘போண்ணே இது ரொம்ப பழைய ‘ஜோக்’கு! புதுசா ஏதாவது இருந்தா சொல்லு..’ என்று வீரமாக சொல்லி விட்டு நகர்ந்தான்.


இன்னும் சற்று தூரத்தில் ஒரு கிழவி தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.


‘என்ன பாட்டி… தூக்கம் வரலையா..?’ பரிவுடன் கேட்டான் பேயன்.


‘இல்ல தம்பி ரொம்ப புழுக்கமா இருக்குன்னு இப்பொதான் குழிக்குள்ளே இருந்து, கொஞ்ச நேரம் காத்து வாங்கலாமின்னு, வெளில வந்து உக்காந்திருக்கேன்..’


‘இந்த வயசுலையும் உனக்கு குசும்பு போகலையே பாட்டி..’ என்று நக்கலாக சொல்லி விட்டு மேலும் நகர்ந்தான் பேயன்.


பத்தடி தூரம் சென்று விட்டு, ஏதோ பொறி தட்டியது போல், சடாரென்று திரும்பிப் பார்த்தான் பேயன்.


அங்கே… பாட்டியைக் காணவில்லை!





Rate this content
Log in

Similar tamil story from Comedy