யார் அவள்? பாகம் 1
யார் அவள்? பாகம் 1
அன்று இரவு அந்த தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இரவு பகலாக ஆட்டமும் பாட்டும் கலை கட்டியது. காரணம் அன்று ஆகாஷின் பிறந்தநாள் விருந்து. அவனுடைய ஆண் பெண் நண்பர்கள் அனைவரும் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் தள்ளாடியப்படி அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். ஆனால் தருண் மட்டும் ஆகாஷோடு இருந்தான்.
ஆகாஷின் நெருங்கிய நண்பன் தருண், ஏன் தருணை அண்ணன் என்று கூட சொல்லலாம். அந்தளவு ஆகாஷ் எல்லை மீறும் போதெல்லாம் ஆகாஷை தவறான வழியில் செல்லாமல் பாதுகாத்துக்கொண்டு இருப்பவன் தான் தருண்.
தருண் ஆகாஷை கவனமாக அழைத்து சென்று அவனுடைய படுக்கையில் படுக்க வைத்தான். ஆம்! ஆகாஷ் அந்த அளவிற்கு குடித்து போதையாய் இருந்தான். ஆகாஷை படுக்க வைத்துவிட்டு தன் வீட்டிற்கு புறப்பட்டான் தருண். தருண் சில சமயங்களில் வெளியூர் சென்று வரும்போதெல்லாம் ஆகாஷ் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு இருப்பான் இல்லை இவனை சுற்றி பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.தருண் மொபைலில் கால் செய்து ஆகாஷ் எடுக்கவில்லை எனில் ஏதோ வம்பிழுத்து கொண்டு இருக்கின்றான் என்று நினைத்து கொள்வான்.
ஆகாஷின் பிறந்தநாளில் அடுத்த நாள் அன்றும் அப்படிதான் வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட்டான் தருண். திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்று காலையிலேயே போன் செய்து ஆகாஷிடம் கூறியிருந்தான். ஆகாஷ் போதை குறையாமல் படுக்கையில் உருண்டு கொண்டு இருந்தான். மதியம் இரண்டு மணியளவில் போதை இறங்கி எழுந்து குளித்து முடித்து அவனின் பெண் நண்பர்களை வழக்கம் போல தேடி சென்றான்.
அவனுடைய கடற்கரை பங்களாவிற்கு செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அவன் செல்லும் போது சாலை காலியாக இருந்தது அதனால் காரை பேய் வேகத்தில் செலுத்தினான். போகும் வழியில் வேறு ஒரு சொகுசு கார் இவனை விட வேகமாக வந்து இவனது காரை உரசி காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு சீறிக்கொண்டு சென்றது. இருவரும் வேகமாக வந்ததால் உரசியவுடன் சற்று நிலை தடுமாறினான் ஆகாஷ், ஆனால் கார் ஓட்டுவதில் சிறந்தவன் என்பதால் சுதாரித்துக்கொண்டு மீண்டும் சீராக்கினான். பிறகு மிகுந்த கோபத்துடன் உரசி சென்ற காரை பார்த்தான் அது வந்த வேகத்தில் தொலைவில் சிறியதாய் தெரிந்தது.
ஆகாஷ் மிகுந்த கோபத்துடன் காரின் வேகத்தை கூட்டினான் இடித்து சென்ற காரை பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு. சிறிதி நேரத்திலேயே அவன் அந்த காரை நெருங்கிவிட்டான். பார்ப்பதற்கே வெளிநாட்டு சொகுசு காரை போல இருந்தது. உள்ளே இருப்பது யார் என்று தெரியவில்லை. இவன் துரத்துவதை பார்த்த அந்த கார் உடனே வேகமெடுத்தது. அவனை விட்டு விலகி சென்றது. இவர்களின் துரத்தலில் ஆகாஷ் தன் கடற்கரை பங்களாவை தாண்டி வந்துவிட்டான். ஆனால் அதை உணராதவனாய் அந்த காரை பிடிப்பதிலேயே குறியாக இருந்தான்.
அப்போது ஆரம்பம் முதலே இவனை உரசி சென்ற காரை பின்தொடர்ந்து வந்த இன்னொரு கார் ஆகாஷ் அறியாத வண்ணம் இருவரையும் பின்தொடர்ந்தது. ஆகாஷ் அந்த காரை பிடிக்கும் நேரம் பார்த்து சட்டென்று குறுக்கே வந்து நின்றது அந்த கார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆகாஷ் பிறகு சுதாரித்து காரை பெரும் சிரமத்துடன் நிறுத்தினான். குறுக்கே நின்ற காரில் இருந்து மூன்று ஆண்கள், பார்ப்பதற்கே விசித்திரமாய் இருந்தார்கள்.
ஆனால் ஆகாஷ் அவனை உரசிய காரையே பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை இடித்த கார் தொலைவில் சென்று நின்றது உள்ளே இருந்து ஒரு பெண் இறங்கினாள். இறங்கியவளை பார்த்ததும் ஆகாஷ் அப்படியே வாயை பிளந்து அதிசியத்து போனான். இறங்கியவள் அழகை பார்த்ததும் இவனுடைய நினைவுகள் அனைத்தும் அவளையே சுற்றி வந்தது. இதற்கேற்றாற் போல் இறங்கியவள் இவனுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்தாள். பிறகு வா வா என்று சைகையால் கூப்பிட்டு கார் நம்பரை இரண்டு முறை காண்பித்து மூன்றாவது முறை காண்பிக்கும் போது பாதி என்பது போல் காதில் போன் போல சைகை செய்து காரில் மீண்டும் ஏறி சீறிக்கொண்டு சென்றாள். அவள் ஏறி சென்ற காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.
இதற்கிடையில் இவனிடம் வந்தவர்கள்," தம்பி, போதும் பார்த்தது எங்களை பார். வீணாக உயிரை விட்டுவிடாதே அந்த காரை துரத்துவதை இதோடு விட்டுவிடு இனி அந்த கார் பக்கமே நீ போக கூடாது. உன் வழியை பார்த்துட்டு போ. இந்தா அந்த கார் உன் கார் கண்ணாடியை உடைச்சதற்கு பணம்",என்று அவசர அவசரமாய் மிரட்டும் தொனியில் கூறிவிட்டு நாலு கட்டு பணத்தை அவன் கையில் திணித்தனர். கார் கண்ணாடியை உடைத்ததற்கு இவ்வளவு பணமா என்று ஆச்சரியத்துடனும் சற்று பயத்துடனும் இருந்தபோதே, வந்தவர்கள் அவசர அவசரமாய் ஓடிப்போய் அவர்கள் வந்த காரில் ஏறி ஆகாஷின் காரை உரசி சென்ற காரை பின்தொடருமாறு டிரைவருக்கு கட்டளையிட்டார்கள். டிரைவரோ " இதோ பார்த்துக்கொண்டு தான் இருக்கேன் பிடித்துவிடலாம் "என்று கூறி காரை கிளப்ப புயல் வேகத்தில் சென்று மறைந்தது.
அவர்கள் மிரட்டி விட்டு போனாலும் ஆகாஷின் மனம் அந்த அழகியையே நினைத்து கனவு உலகில் மிதந்தது. கடற்கரை பங்களாவில் வந்து காத்திருந்த பெண் நண்பர்கள் போன் செய்தும் அவன் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அந்த காரில் வந்த அழகியையே நினைத்துக்கொண்டு இருந்தான்.
காரை மெதுவாக இயக்கியவன் கார் ஓட்டும் போதும் கூட அவளின் நினைவாகவே இருந்தான். அவளின் அழகு அவன் கண்களை விட்டு அகலவில்லை. ஏன் பல முறை எதிரே வந்த வாகனத்தில் கூட இடித்தான். மெதுவாக காரை ஓட்டி வந்ததால் சேதாரம் எதுவும் இல்லை.ஆனால் பலர் இவனை கண்டப்படி திட்டிதீர்த்தனர். ஒரு இடத்தில் டிராபிக் போலீஸிடம் சிக்கினான்.
அங்கிருந்த டிராபிக் போலீஸ் இவனை பார்த்ததும்," இவனா இவனுக்கு இதே பொழப்பு இன்னைக்கு இவனை யார் வந்தாலும் விட கூடாது " என்று கூறியவாறே ஆகாஷின் காரை நிறுத்தி அவனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். ஆகாஷ் ஏற்கனவே பலமுறை படுவேகமாக செல்வது, பிற வண்டிகளை இடித்துவிட்டு நிற்காமல் போவதும், பார்ட்டி சென்று பிறகு திரும்பும் போது குடி போதையில் சாலையில் ரகளையில் ஈடுபடுவதும் அவனை கைது செய்வதும் தருண் வந்து போலீஸிடம் கெஞ்சி கூத்தாடி போலீஸை சரிகட்டி ஆகாஷை வீட்டிற்கு அழைத்து வருவதும் மாதத்திற்கு ஒரு முறையேனும் நடந்துறும். போன தடவை இவனை கைது செய்த போது அடுத்த முறை சிக்கினால் கண்டிப்பாக ஜெயில்தான் என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
தருணும் வெளியூர் போகும் போது எச்சரித்துவிட்டே சென்றான். ஆனால் ஆகாஷ் காரில் வந்தவளின் அழகில் மயங்கி எண்ணங்கள் இதுவரை அவளை சுற்றியே அலைபாய்ந்துக்கொண்டு இருந்தது. இப்போது கூட தான் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று அறியாது அந்த அழகியின் அழகை நினைத்தப்படியே உட்கார்ந்துக்கொண்டு இருந்தான். அங்கு வந்த இன்ஸ்பெக்டர்," இவன் திரும்ப வந்துட்டானா ? இவனை ஜெயிலுக்கு அனுப்பினால் தான் திருந்துவான்" என்று சொன்னவர் அவனை பார்த்து ஏதோ சிந்தித்தார். பிறகு," கான்ஸ்டபிள் ! ஏன்யா இவன் பித்துபிடிச்ச மாதிரி இருக்கான் இன்னைக்கு ரொம்ப ஓவரோ ? எத்தனை பேர் மேல் இடிச்சான். இல்லை ரோட்டுல ரகளை பண்ணானா? " என்று கேட்டார்.
அதற்கு அவர்," இல்லை சார்! இவன் குடிக்கவில்லை போதையில்லை இன்னைக்கு இவன் மிக மெதுவாக தான் காரை ஓட்டி வந்தான். ஆனால் எதிரே வருபவர்களை பார்க்காமல் கனவு உலகில் இருக்கிற மாதிரி ஓட்டி வந்தான். இவனது காரை நிறுத்தி இவனை திட்டியவர்களிடமும் இப்படி எதையோ நினைத்து எதை எதையோ உளறினான் " என்றார்.
இவனை அப்படி ஓரமாக உட்கார வை இவன் பித்து பிடிச்சவன் மாதிரி இருக்கான். காலையிலே பார்க்கலாம் என்று கூறி இன்ஸ்பெக்டர் சென்றுவிட்டார்.
காலை விடிந்தது. ஆகாஷ் அப்படியே ஒரு மூலையில் தூங்கி போயிருந்தான் சூரியனின் ஒளி அவன் மீது படர பிரம்மையிலிருந்து விடுபட்டவன் போல அடிச்சி பிடிச்சு எழுந்தான். தான் எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல் "நான் எங்கே இருக்கிறேன் என் காரை இடிச்சுட்டு போன கார் எங்கே" என்று பிதற்றினான்.
பிறகு தான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்து தூக்கி வாரி போட்டது, காரணம் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை. பதறி போனான்.
அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு பேப்பரும் டீயும் எடுத்து வந்தான் ஒருவன். அவன் கையில் இருந்த பேப்பரில் முதல் பக்கத்தில் இதுவரை யாரும் பார்த்திராத கேள்வியேப்பட்டிராத கொடூர கொலைகள். நால்வர் மரணம். கொலையாளி யார்? என்று தலைப்பு செய்தியும் கீழே இறந்தவர்களின் புகைப்படம் போட்டு இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை என்ற செய்தி இருந்தது.
அந்த புகைப்படத்தை பார்த்தவனுக்கு இடி தலையில் இறங்கியதை போல உணர்ந்தான். பிறகு சட்டென்று அந்த பேப்பரை பிடுங்கி படித்தான். ஆம்! அவர்கள் இவனை நேற்று எச்சரித்த அதே 3 பேர். 4 வது ஆள் அவர்களின் டிரைவர். இப்போதுதான் அவன் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. யார் அந்த பெண் அத்தனை அழகாக இருந்தாள். இவர்கள் என்னை எச்சரித்து விட்டு அவள் பின்னால் தானே சென்றார்கள். இவர்களுக்கு இந்த நிலை என்றால் அந்த பெண் என்ன ஆனாள்? இவர்களை இப்படி கொடூரமாக கொன்றது யார்? என்று பல கேள்விகள் அவன் மூளையை குதறின.
உடனே கிளம்ப வேண்டும் என்று அங்கிருந்த கான்ஸ்டபிளை கூப்பிட்டு ," நான் எப்படி எப்போது இங்கே வந்தேன்," என்று கேட்டான். அவரோ," நீ நல்லாதான் இருந்தே ஆனா பித்து புடிச்சவன் மாதிரி இல்ல நடந்துகிட்ட அதான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தோம். இரவு முழுவதும் அழகி பேரழகி என்று ஏதோ ஏதோ உளறிட்டு இருந்த 2 மணிக்குதான் தூங்கின. அப்படி போய் உட்கார் இன்ஸ்பெக்டர் வருவார் கைல கால்ல விழுந்தாவது தப்பிச்சுடு. இல்லை ஜெயில்தான் பா" என்றார்.
அவனுக்கு எல்லாம் நினைவு இருந்தது ஆனால் அந்த அழகியை பார்த்த எட்டாவது நிமிடத்திலிருந்து அவனுக்கு எதுவுமே நினைவில்லை என்பதை உணர்ந்தான். அப்போது இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். அவரிடம் வேகமாக சென்றவன் ," சார் !சார்! நேற்று ஏதோ தப்பு பண்ணிட்டேன் தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க சார் இனி ஒருதரம் இப்படி நடந்தா நானே வந்து ஜெயில்ல உட்கார்ந்து கொள்கிறேன். இப்போ என்னை மன்னிச்சு விட்டுங்க சார்" என்று பதற்றத்தோடும் ஏதோ அவசரத்தோடும் கெஞ்சினான்.
இன்ஸ்பெக்டருக்கோ இவனின் செயல் ஆச்சரியமாக இருந்தது ஏன் என்றால் இவன் இதற்கு முன் இப்படி பலதடவை வந்து இருந்தாலும் ஒருதரம் கூட இப்படி கெஞ்சியது இல்லை. மேலும் பேப்பரில் வந்த கொலை சம்பவம் இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி என்பதாலும் அவர் சற்று டென்ஷனாகவே இருந்தார். ஆகாஷை பார்த்து" நீ இதற்கு முன் இதைவிட பெரிய தப்பு எல்லாம் செஞ்சுருக்க நேற்று பண்ணினது ஒன்றும் பெரிய தப்பு இல்ல போ இனி தவறி கூட இங்க வராதே" என்று அவனின் கார் சாவியையும் அவனுடைய போனையும் அவனிடம் கொடுக்க கான்ஸ்டபிளுக்கு கட்டளையிட்டார். கான்ஸ்டபிளும் ," இந்தாப்பா உன் போன் இரவு முழுவதும் அடிச்சது அடிச்சப்படியே இருந்தது. இதை ஆஃப் செய்யகூட எனக்கு தெரியல, நீ வேற புல் போதை, எனக்கு நேற்று தூக்கமே போச்சு.இந்தா சாவியும் பிடி. தயவு செய்து இங்கிருந்து ஓடிடு" என்று சாவியையும் போனையும் நீட்டினார்.ஆகாஷ் அவன் இருந்த குழப்ப நிலையில் அந்த போன்கால்களை பற்றி அவ்வளவுவாக கண்டுக்கொள்ளாமல் சாவியையும் போனையும் வாங்கி கொண்டான்.
உடனே ," தேங்க்யூ வெரி மச் சார்! என்று கூறிவிட்டு சிட்டாய் ஓடினான். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை பார்த்து," இவன் ஏன் இப்படி இருக்கிறான் நேற்று ஒரு மாதிரி இருந்தான் இன்று எப்பவும் இல்லாத மாதிரி இருக்கிறான் இருக்கிற டென்ஷன் பத்தாதுன்னு இவன் வேற" என்று நொந்துக்கொண்டார்.
அப்போது கான்ஸ்டபிள்," காலையில் துடிச்சு புடிச்சு எழுந்தான் பிறகு டீ பாய் கொண்டு வந்த பேப்பரை பிடுங்கி முதல் பக்கத்தை பார்த்தான். பிறகு தான் இப்படி" என்றார். உடனே இன்ஸ்பெக்டர் டேபிளில் இருந்த பேப்பரை பார்த்தார். அதில் முதல் பக்கத்தில் அந்த கொடூர கொலை பற்றி போட்டிருந்தது. அவர் சிந்திக்க ஆரம்பிச்ச போதே " சார்! இந்தாங்க கொலையான நபர்களின் கார் பற்றிய சிசிடிவி ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளது. இது அந்த காரை நேற்று மாலை கடற்கரை சாலையில் பார்த்ததாக விசாரணையில் மக்கள் சொன்ன போது அங்கிருந்து வாங்கிய சிசிடிவி வீடியோ பதிவுகள்" என்று ஒரு பென்டிரைவை நீட்டினார் உள்ளே வந்த சக இன்ஸ்பெக்டர் ஒருவர். உடனே அவர் அந்த பென்டிரைவை எடுத்து டேபிளில் இருந்த லேப்டாப்பை ஆன் செய்து போட்டு பார்த்தார். பார்த்துக்கொண்டு வந்தவர் சட்டென்று எழுந்து " கான்ஸ்டபிள் உடனடியாக எந்த வேலையா இருந்தாலும் அதை விட்டுட்டு அந்த பையன் ஆகாஷை அவனுக்கு தெரியாமல் பின்தொடருங்கள். ஹரியப்! குயிக்! என்று கான்ஸ்டபிளை விரட்டினார், காரணம் அந்த வீடியோவில் இறந்து போனவர்கள் ஆகாஷின் காரை நிறுத்தி அவனிடம் பணத்தை கொடுத்தது எல்லாம் பதிவாகி இருந்தது.
இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சென்ற ஆகாஷ் என்ன நடந்து இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அதே சமயம் போலீஸிடம் இன்னொரு முறை சிக்க கூடாது என்று கவனமாகவும் காரை செலுத்தினான். சட்டென்று அந்த பெண் தனக்கு கால் செய்யுமாறு அவளுடைய காரின் நம்பர் பிளேட்டை இரண்டு முறை மற்றும் பாதி என சைகை செய்தது ஞாபகம் வந்தது. அப்போது சட்டென்று நேற்று வந்த காரை போலவே இன்னொரே கார் அவன் முன்னே சர்ரென்று குறுக்கே வந்து நின்றது. அதில் இருந்து நான்கு பேர் இறங்கி இவனை நோக்கி வந்தனர். வந்தவர்களில் ஒருவன் சட்டென்று ஆகாஷை வெளியே இழுத்து " பேசுவதற்கு நேரம் இல்லை முரண்டு பிடிக்காமல் எங்களோடு வாப்பா! இல்லை " என்று துப்பாக்கியை காண்பித்து இழுத்து,"எங்கள் கூட வந்துடு போகும் போது எல்லாம் பேசிக்கலாம்." என்று ஆகாஷிடமும், டேய்! இந்த வண்டியை ஓரமாக பார்க் பண்ணிட்டு வந்து ஏறு" என்று தன்னோடு வந்தவனிடமும் சொல்லிவிட்டு ஆகாஷிடம் பதிலை கூட எதிர்பாராமல் இழுத்துக்கொண்டு அவர்கள் வண்டியில் ஏற்றிவிட்டு கிளம்பினார்கள்.
ஆகாஷோ , என்னடா இது நேற்று வந்தவர்கள் மாதிரியே இருக்கிறார்கள். ஏன் எதற்கு என்னை இப்படி வலுக்கட்டாயமாக துப்பாக்கி காண்பித்து இழுத்து செல்கிறார்கள் என்று மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க. அதில் ஒருவன்," தம்பி! நேற்று எங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை பிடிக்க தொடர்ந்து வந்தார்கள். அவள் உன்னை தான் குறி வைத்துள்ளாள். நேற்று நீ அவளை தொடர்ந்து செல்வதை கண்டு எங்கள் ஆட்கள் உன்னை தடுத்து மேற்கொண்டு அவளை பிடிக்க அவள் காரை பின்தொடர்ந்து சென்றார்கள். ஆனால் இன்று நால்வரும் கொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அதற்கு முழு காரணம் அந்த பெண்தான் " என்றதும் அவ்வளவுதான், ஆகாஷிற்கு ஏழு உலகம் தன் தலையை சுற்றி வட்டமிடுவது கண்ணிற்கு தெரிந்தது.
பிறகு அவன் மிரட்சி மாறாதவனாய் " யார் அவள்? அவள் ஏன் எதற்காக என்னை குறி வைத்துள்ளாள்? நீங்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் ஏன் அவளை பிடிக்க பாடுபடுகிறீர்கள்? அவள் என்னை தான் குறி வைத்துள்ளாள் என்று எப்படி சொல்கிறீர்கள்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்தான்.
அதற்கு அதில் ஒருவன்," அவள் தேடி வந்தது உன்னை அல்ல உன்னை வைத்து உன் நண்பனை கொலை செய்ய" என்றதும் ஆகாஷிற்கு கண்கள் இருட்டின தலை கிறுகிறுத்தது." தருணா? அவனை ஏன் கொல்ல வேண்டும்? அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் என்ன? அவன் என்னை மாதிரி அல்ல ரொம்ப நல்லவன்" என்று அழுதேவிட்டான்.அதற்கு அவர்களில் ஒருவன்," மனிதனுக்கு எப்போதும் யாருமறியா முகம் ஒன்று இருக்கும் உன் நண்பனுக்கும் அது உண்டு அதை நீ பார்த்து இருக்க மாட்டாய். இப்போது சொல் நீங்கள் எப்போது எதற்கு காட்டுப்பகுதியில் உள்ள பொன்னூஞ்சல் கிராமத்திற்கு சென்றீர்கள் அங்கு கிராமத்தின் ஆற்றங்கரைக்கு அந்த பக்கம் உள்ள சுடுகாட்டில் உள்ள புளியமரத்து அடியில் உள்ள சின்ன வீடு போன்ற சமாதியை என்ன செய்தீர்கள்" என்று கேட்டார்.
ஆகாஷோ," நானும் என் ஆண் மற்றும் பெண் நண்பர்கள் அனைவரும் கூடவே தருணும் ஒரு உல்லாச பயணம் சென்றிருந்தோம். தருணிற்கு இதெல்லாம் பிடிக்காது இருந்தாலும் எங்கள் கூட எனக்காக வந்தான். போகும் வழியில் காட்டு நடுவில் உள்ள கிராமத்தை கேள்விபட்டதும் அங்கு சென்றோம். நல்ல அழகான கிராமம். நல்ல விருந்தோம்பல் உடைய மக்கள். எங்களை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள்.
அப்போது அவர்கள் இன்று அமாவாசை வரப்போகுது அந்த சுடுகாட்டு பக்கம் போக வேண்டாமென்று கேட்டுக்கொண்டனர்.நாங்கள் அவர்களுக்கு மதிப்பளித்து நல்லபடியாக நடந்துக் கொண்டு அடுத்த நாள் திரும்பிவிட்டோம்.
ஆனால் நான் மட்டும் தருணை அழைத்துக்கொண்டு அன்று இரவு கிராமத்தில் உள்ளவர்களை பற்றி பேசியபடியே ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்றோம். நான் எப்போதும் இரவில் மது அருந்துவதால் கூட மது பாட்டில் மூன்று எடுத்து சென்றேன். அப்படி போகும் போதுதான் சுடுகாட்டை பார்த்தோம் அதற்குண்டான வழி ஆற்றின் குறுக்கே செல்வதையும் பார்த்தோம். அங்கு செல்லலாம் என்று கூறினேன் அதற்கு வழக்கம் போல தருண் ," டேய் ஆகாஷ் ! இது நம்மூர் இல்லை, சிக்கலில் மாட்டினால் அவ்வளவுதான்" என்று கூறி என்னை தடுத்து விட்டான். பிறகு நானும் இரண்டு பாட்டிலை குடித்துவிட்டு மட்டையாக, வந்த தூரம் அதிகமாக இருந்ததால் அவனும் ஆற்றங்கரையிலேயே படுத்து தூங்கினான். இதுதான் நடந்தது " என்று கூறி முடித்தான்.
உடனே ஒருவன் மறித்து," இல்லை உன் நண்பன், நீ போதையில் தூங்கிய பிறகு அவன் உனக்கு தெரியாமல் ஏதோ செய்து இருக்கிறான். "அவனை கூப்பிட்டு என்ன நடந்தது என்று கேள். நீ தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் உங்கள் உயிருக்கும் எங்கள் உயிருக்கும் ஆபத்து" என்று அவசரப்படுத்தினர். மேலும்," அந்த பெண்ணை மீண்டும் பார்த்தியா? இன்னொரு முறை பார்த்தால் எங்களுக்கு தகவல் தர வேண்டும். எங்களால் மட்டும் தான் உன்னையும் உன் நண்பனையும் காப்பாற்ற முடியும்." என்றவர் மேலும் ஒரு புது குண்டை தூக்கி போட்டார். ஆம் அவர் சொன்னது," நாங்களும் நாளை இறந்து போகலாம் ஆனால் உன் நண்பன் வரும் வரை அவள் உன்னை கொல்ல மாட்டாள் அதனால் அவள் உன்னை நெருங்கியதும் இந்த மந்திரத்தை கூறு நாங்கள் வருவோம்" என்றார்.
ஆகாஷ் உடனே," யோவ்! இந்த காலத்துல மந்திரமாவது மாயமாவது இவ்வளவு நேரம் எல்லாவித பயத்தையும் காட்டிட்டு இப்போ மந்திரம் தந்திரம்னு உளறுகிறீர்கள்", என்று கடுப்பானான். உடனே," அவர்களில் ஒருவன்," டேய்! நீங்க செஞ்சிட்டு வந்தது சாதாரண தப்பில்லை. பார்க்க போனால் உன்னை நாங்கள் கொன்று போட்டுட்டு போகனும். ஆனால் நீங்கள் செய்த தவறை நீங்கள் மட்டுமே சரி செய்ய முடியும். பேசாமல் நாங்கள் சொல்லுவதை செய். இல்லை நீயும் உன் நண்பனும் சின்னாபின்னமாகிவிடுவீர்கள்" என்று கத்தினான்.
பிறகு ஏதோ யோசித்தவன்," சரி! நான் தருணை வரவழைத்தால் அவள் எங்களை உடனே கொன்றுவிடுவாளே! அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்" என்று கேட்டான்.
அதற்கு ஒருவன்," நாங்கள் சொல்கிற வகையில் நீ சரியாக செயல்பட்டால் அவளை நாங்கள் பிடித்து விடுவோம். பிறகு நீ உன் நண்பனை வரவழை என்ன நடந்தது என்று கேட்போம்" என்றான்.
நேரம் சென்றது சூரியன் மறைந்து கொண்டு இருந்தான். "சரி ! இரவு நெருங்குகிறது அவள் இரவில் தான் வேட்டையாடுவாள். இப்போது கூட அவள் உன்னை தான் தேடி வருவாள். நேற்று உனக்கு தூண்டில் போட்டாள். நல்லவேளை நீ போலீஸில் மாட்டிக்கொண்டது நல்லதாய் போச்சு.ஆனால் இன்று நீ வெளியே இருக்கிறாய் கண்டிப்பாக உன்னை தேடி வருவாள்" என்றார்.
" உனக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை என்றால், இதோ பார் நீங்கள் கிராமத்தை விட்டு வந்த பிறகு அந்த கிராமத்தில் உள்ள எங்கள் ஆட்கள் அவளை பிடிக்க நினைத்து அவசரப்பட்டு எப்படி இறந்துகிடக்கிறார்கள் என்று" சில பேப்பர்களை அவன் முன் தூக்கி போட்டனர். அதை எடுத்து பார்த்தவன் அப்படியே உறைந்து போனான். அதில் இருந்தது அவனையும் அவன் ஆண், பெண் நண்பர்களை வரவேற்று உபசரித்த அக்கிராம பஞ்சாயத்து ஊர் பெரியவர்களும், பெண் பூசாரிகளும் தான் அதில் மிக கொடூரமாக இறந்து கிடந்தது.
" யார் அவள்? எதற்காக இதெல்லாம் செய்கிறாள்? அவளுக்கும் எங்களுக்கும் என்ன பகை. எங்களை ஏன் கொல்ல அலைகிறாள் குறிப்பாக தருணை"என்று கேள்வி கேட்டான். அதற்கு அவர்கள்," உன் நண்பன் வந்தால் தான் உனக்கு தெரியும், புரியும். ஆனால் அவளை பிடிக்காமல் அவன் இங்கு வருவது சாத்தியமில்லை மற்றும் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை" என்றார்.
" சரி! நீங்கள் சொல்வதை போல நான் செய்கிறேன். நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை இருந்தாலும் இந்த கொலைகள் நிற்கும் என்றால் நான் உதவ தயார்" என்று சொன்னவன். " அவள் செய்கையால் தன் கார் நம்பரை இரண்டு முறையும் மூன்றாவது பாதியையும் காண்பித்து போன் செய்ய சொன்னாள்" என்று அவர்களுக்கு தெரியப்படுத்தினான்.
" நல்லவேளை அவளை சந்திக்கும் முன் நாங்கள் உன்னை தூக்கி வந்தோம். இல்லை நீ அவளுக்கு அடிமையாகி அவள் சொல்வதை எல்லாம் கேட்டு திரிந்துக் கொண்டு இருப்பாய் உன் நண்பனை வரவழைத்து இருப்பாய் " என்றனர்.
பிறகு அவர்களில் ஒருவன் ," இந்தா இதை உன் மார்பில் பூசி கொள்" என்று ஒரு பொடியை தந்தான். ஒரு கண்ணாடியையும் தந்தான். அந்த கண்ணாடியை இவர்களுக்கு தகவல் தந்து அவர்கள் வந்த பிறகே அணிய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து தந்தனர். எதற்கு இதெல்லாம் என்று கேட்டவனிடம் "இது இல்லை எனில் நீ அவளுடைய மாய வலையில் விழுவாய்.பிறகு நீ அவள் ஆடும் ஆட்டத்திற்கு துணை போவாய்" என்றனர்.
எல்லாம் முடிந்து அவர்கள் அவனை அவன் காருக்கு அருகில் விட்டுவிட்டு ," ஜாக்கிரதை! சொதப்பினால் எங்கள் உயிர் உன் உயிர் உடலில் தங்காது" என்று கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் சென்றதும் ஒரு முடிவிற்கு வந்தவனாய் அந்த பொடியை பூசிக்கொண்டு அந்த அழகிக்கு போன் செய்தான். அவன் போன் காலை எதிர்ப்பார்த்தவளாய் எதிர்முனையில் உடனே எடுக்கப்பட்டது" ஹலோ! சீக்கிரமே கால் பண்ணீட்டீங்க? அவ்வளவு அவசரமா! " என்ற குரல் அவனை அந்த பொடியை மீறி வசீகரித்தது. உடனே ஆகாஷ்," நீங்கள் யார்? நான்தான் போனில் கால் செய்வேன் என்று எப்படி உங்களுக்கு தெரியும். எதற்காக நீங்கள் கால் செய்ய சொன்னீர்கள்" என்று கேள்விகளை அடுக்கினான்.
அதற்கு எதிர்முனையில் அவள்," ஒரு பெண் ஒரு ஆணிடம் வலிய தனக்கு கால் பண்ண சொல்லி கொடுக்கிறாள் என்றால் அனைவரிடமா தருவாள்? தனக்கு வேண்டியவர்களிடம் தேவைப்படுவோர்களிடம் மட்டும் தானே தருவாள். உங்கள் போன்காலும் அப்படிதான்." என்று கூறினாள். மேலும்," என் பெயர் மாயா. நான் நிறைய உங்களிடம் பேச வேண்டியுள்ளது. உங்களை எனக்கு தெரியும் என்னை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டாமா" என்றாள்.
ஆகாஷோ மனதில் நினைத்துக் கொண்டான்" உன்னை பற்றி அவர்கள் சொன்னதும் கண்டதும் நீ எவ்வளவு பெரிய கொலைகாரி என்று தெரியும் ஆனால் அவர்கள் உன்னை இந்தளவு பிடிக்க பாடுபடுகிறார்கள் என்றால் இன்னும் என்னென்ன இருக்கோ? ".அவன் மனம் பயத்தில் உள்ளுக்குள் நடுங்கியது. அவள் குறுக்கிட்டு," என்ன? சத்தமே வரவில்லை. என்னை பார்க்க கொஞ்சம் எனக்காக வர முடியுமா?" என்றாள்.
உடனே ஆகாஷ்," இப்போது என்னால் வரமுடியாதே! வேண்டுமானால் நீங்கள் நான் சொல்லும் இடத்திற்கு வர முடியுமா?" என்றான்.
எதிர்முனையில் சிறிது மவுனத்திற்கு பிறகு," சரிங்க! வருகிறேன் .ஆனால் நீங்கள் தனியாக இருப்பது நல்லது. இரவு 2 மணி வரைதான் இருப்பேன்" என்றாள். ஆகாஷ்," சரிங்க மாயா! வாங்க என்ன பேசனுமோ மனம் விட்டு பேசுங்க, எனக்கும் ஒரு பெண்ணிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைச்சிருக்கு" என்று செயற்கையாக சிரித்தான். உடனே அவளும் எதிர்முனையில் சிரித்தாள். பிறகு," காத்திருங்கள். இதுவரை கண்டிராத அனுபவத்தை காண. இன்னும்அரைமணிநேரத்தில் அங்கு இருப்பேன்" என்று கூறி போன்காலை துண்டித்தாள்.
உடனடியாக ஆகாஷ் தன்னை எச்சரிக்கை செய்த நபர்களுக்கு போன்கால் செய்து விசயத்தை சொல்லி இடத்தையும் சொன்னான். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவர்கள் அவன்முன்னே தோன்றினார்கள். ஆகாஷ் ஆடி போய்விட்டான். " எப்படி வந்தீர்கள். என்னையே பின்தொடர்ந்து கண்கானித்தீர்களா? என்று கேட்டான். " அதற்கு அவர்கள்," அதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போற. நாங்கள் சொல்வதை அவள் வருவதற்குள் செய்து முடிக்க உதவி செய்" என்று கூறினான் ஒருவன்.
என்னென்னமோ செய்தார்கள் அந்த இடத்தை சுற்றி, செய்யும் போது ஏகப்பட்ட மந்திரம் பூஜை பொருட்கள் என்று உபயோகித்தனர். "ஏன்டா ஒரு கொலைகாரியை அதுவும் ஒரு அழகிய பெண்ணை பிடிக்க என்னென்னவோ செய்யுறானுங்க, இவர்கள் என்னதான் செய்கிறார்கள்? இதில் நம்மளை வேற கொல்ல வருகிறாள் என்கிறார்கள். இவர்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருந்தாலும் ஒருவேளை உண்மையிலேயே நம்மை கொல்ல வந்தால்? அத்தனை பேரை கொன்றவளுக்கு நான் எம்மாத்திரம்? பார்ப்போம் என்னதான் நடக்கிறது" என்று மனதில் நினைத்து அமைதியாக அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தான். இறுதியில் அந்த இடம் எதுவுமே செய்யாததை போல வழக்கம் போல காட்சி தந்தது. அவர்களும்," நாங்கள் சென்று மறைந்துக்கொள்கிறோம் நீ அவள் வந்தவுடன் அவளை இங்கே அதிக நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்"என்று கூறிவிட்டு இரண்டு நிமிடத்தில் மறைந்து போயினர்.
அப்போது அந்த கார் அதே கார் வந்தது. ஆகாஷின் இதயம் அதிகமாக துடித்தது. அவள் காரில் இருந்து இறங்கினாள். ஆகாஷ் அந்த பொது இடத்தின் உள்ளே இருந்து அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவ்வளவு அழகு! ஆகாஷ் ," அடிப்பாவி! இப்படி மனுஷன தள்ளாடவிடுறீயே" என்று இப்போதும் மனதிற்குள் அவளின் அழகை நினைத்து பெருமூச்சு விட்டான். அவள் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவன் அருகே வந்து அவனிடம் கைகுலுக்கினாள். ஆகாஷும் கைநீட்டி கை குலுக்கினான். " ஐ ஆம் ஆகாஷ் " என்று சொல்ல அவள் நிறுத்துங்க என்பது போல் சைகை செய்து," உங்களை பற்றி எனக்கு தெரியும். என்னை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்' என்றவள், அங்கு ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள். அதை கவனித்த ஆகாஷோ புரிந்துக்கொண்டு சட்டென்று ," உங்கள் பெயர் மாயா என்றீர்கள். அவ்வளவுதான். என்னை பற்றி தெரியும் என்றீர்கள்! எப்படி தெரியும்? எங்கே தெரியும்" என்று அவளின் கவனத்தை திசை திருப்பினான்.
அவளும் அது பொது இடம் என்பதாலும், நேரம் கடந்துவிட்டதால் அங்கு ஆள்நடமாட்டம் இல்லை என்பதை அறிந்து சந்தேகத்தை வெளிக்காட்டாமல் ஆகாஷுடன் பேசினாள். ஆகாஷின் ஒவ்வொரு அசைவையும் நேரில் பார்த்த மாதிரியே ஒவ்வொன்றாக சொன்னாள்.ஆகாஷே ஒரு கணம் பிரமித்து போனான். தருணுக்கு தெரியாத விஷயம் கூட அவள் சொன்னதை கேட்டு. அவளை பற்றி ஆரம்பிக்கும் முன்," இங்கேயே இருங்க! ஒரு டூ மினிட்ஸ். இதோ வந்துடுறேன்" என்று கூறிவிட்டு ரெஸ்டு ரூம் பக்கம் ஓடினான்.
அவள் அங்கே ஆகாஷுக்காக காத்திருந்தாள். அப்போது சட்டென்று அவளை ஆகாஷிடம் எச்சரிக்கை செய்த கும்பல் மந்திரங்களை ஓதியப்படி சுற்று போட்டது. இங்கே வெளியே ரெஸ்டு ரூம் சென்று வந்தவனை அந்த இன்ஸ்பெக்டர் மடக்கினார். ஆம்! இன்ஸ்பெக்டர் அனுப்பிய கான்ஸ்டபிள் இவனை அவனுக்கு தெரியாமல் தொடர்ந்து சென்று கண்கானித்துள்ளார். அப்படி அவனை தொடர்ந்து வந்த போது இவனை சுற்றி நடந்தவைகளை இன்ஸ்பெக்டரிடம் கூற, இதோ மாட்டிக்கிட்டான் ஆகாஷ்." ஏன்டா! உன்னை சுற்றி மர்மமான ஆட்கள் வருகிறார்களாம்? ஏதேதோ செய்கிறார்களாம். ஒரு பெண் இந்த நேரத்தில் உன்னை பார்க்க வந்தாளாம். எங்கடா அவள்? அவளை என்ன பண்ண? அந்த ஆட்கள் எல்லாம் எங்கே" என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அவளின் அலறல் கேட்டது.
ஆம்! அவளை சுற்று போட்ட கும்பல் ஏற்கனவே செய்து வைத்திருந்த மந்திர பூஜைகளாலும் தற்போதும் பல மந்திரங்களை சொல்ல சொல்ல அந்த அழகி வலியால் துடித்தாள், அலறினாள். அதை கேட்ட இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் அந்த இடத்திற்கு உள்ளே ஓடினார்கள். உள்ளே அவர்கள் கண்ட காட்சி இரண்டு பேரையும் மிரள வைத்தது. அந்த அளவிற்கு அந்த கும்பல் பயங்கரமாய் மந்திரங்களை கூறி அப்பெண்ணை ஒரு கயிற்றால் அவளை கட்டி போட்டு கொடூரமாக அடித்து உதைத்துக்கொண்டு இருந்தனர்.
புதியதாக பார்ப்பவர்களுக்கு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்குவது போல தான் இருக்கும். இன்ஸ்பெக்டர் சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து சுட போக ஆகாஷ் பட்டென்று அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கி," சார்! சார்! கொஞ்சம் சொல்றதை கேளுங்க சார்! அவர்கள் அந்த பெண்ணை சித்திரவதை செய்யவில்லை . அவளை சிறை பிடிக்கிறார்கள். அவள் சாதாரண பெண் இல்லை. பயங்கர கொலைகாரி" என்று கத்தினான். " என்னங்கடா? கதை மேலே கதை விடுற. அந்த பெண் பார்க்க பெரிய இடத்து பெண் போல இருக்கிறாள் இவனுங்க மந்திரக்காரனுங்க போல இருக்கிறானுங்க ? அவளை என்னடா பண்ண போறீங்க? யார்ரா அவள்?" என்று கத்திக்கொண்டே ஆகாஷை அடிக்க பாய, அங்க இருந்த கான்ஸ்டபிள் ஆகாஷிடம் இருந்த துப்பாக்கியை காலால் எட்டி உதைத்தான். துப்பாக்கி எகிறி இருட்டில் எங்கேயோ விழுந்தது.
இதற்கிடையில் அந்த கும்பல் தங்கள் மந்திரங்களால் அந்த அழகியை பெரும்முயற்சியுடன் கட்டி போட போராடிக்கொண்டு இருந்தனர். அவளும் அந்த மந்திரத்திற்கு கட்டுப்படாமல் அலறிக்கொண்டு திமிறிகொண்டு இருந்தாள்.
ஒருபக்கம் இன்ஸ்பெக்டர், ஆகாஷ், கான்ஸ்டபிள் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். உண்மையறியாத இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அந்த கும்பலை தடுத்து அந்த பெண்ணை விடுவிக்க பார்க்கிறார். ஆனால் உண்மையறிந்த ஆகாஷ் அவர்கள்அந்த கும்பலை தடுக்காத வண்ணம் இரண்டு பேருடனும் சண்டையிட்டு கொண்டு இருந்தான். விட்டால் போதும் இன்ஸ்பெக்டர் அந்த கும்பலின் பூஜைகளை மந்திரங்களை தடுத்துவிடுவர் அது அனைவரின் உயிருக்கும் ஆபத்து என்பதை அறிந்த ஆகாஷ் கத்தினான்.
" என்னால் இவர்களை தடுக்கமுடியாது போலிருக்கே! ஏதாவது சீக்கிரம் பண்ணுங்கள்." என்று கத்தினான். நடுநிசியில் இவர்களது போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் ஒரு வழியாக அந்த அழகி அடங்கி மயங்கி போனாள். அழகியை கட்டி போடுவதில் வெற்றி பெற்ற அந்த கும்பலில் ஒருவன் மட்டும் மந்திரத்தை ஓதுவதை நிறுத்தவில்லை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தான்ஆனால் அதை பார்த்த இன்ஸ்பெக்டர் ஆவேசம் கொண்டவராய் அந்த பெண்ணை காப்பாற்ற, ஆகாஷை கான்ஸ்டபிளோடு சேர்ந்து தாக்கினார்.இதை பார்த்து உடனே அதில் ஒருவன்," அந்த கண்ணாடியை அவர் முகத்தில் மாட்டி அவரை அந்த பெண்ணின் பக்கம் திருப்பு" என்றான். உடனே ஆகாஷ் அவன் சொன்னதை கேட்டு, கான்ஸ்டபிளை தள்ளிவிட்டு இன்ஸ்பெக்டரை பலமாக தாக்கி அவர் சற்று பின்வாங்கிய தருணத்தில் அவரின் முகத்தில் அந்த கண்ணாடியை மாட்டிவிட்டு அவரிடம்," யோவ்! இப்போது அந்த பெண்ணை பார்" என்று கத்தினான்.
இப்போது இன்ஸ்பெக்டர் பலமிழந்தவராய் அந்த பெண்ணின் பக்கம் திரும்ப அவருக்கு பேரதிர்ச்சி. ஆம் ! அவர் பார்த்த இடத்தில் அந்த அழகிய பெண்ணிற்கு பதில் உடம்பெல்லாம் ரத்தத்தோடு ஒரு கொடூரமான உருவம் கொண்ட சூன்யகாரி மாய கயிறுகளால் கட்டுண்டு இருப்பதை கண்டு அலறினார். ஆகாஷிற்கே என்னவென்று புரியவில்லை. இப்போது அந்த கும்பலில் ஒருவர் ஆகாஷை நோக்கி," எங்களை நம்பியதற்கு நன்றி! இப்போது நீ அந்த கண்ணாடியை வாங்கி போட்டு பார் உண்மை என்னவென்று புரியும்" என்றான்.
ஏற்கனவே அந்த கொடூர காட்சியை பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியிலும், சண்டையிட்டதாலும் மயங்கி இருந்தார். கான்ஸ்டபிளும் ஆகாஷ் பலமாக தள்ளியதில் தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்தார். ஆகாஷ் இன்ஸ்பெக்டர் முகத்தில் இருந்த கண்ணாடியை உருவி தனக்கு போட்டு அந்த பெண்ணை பார்த்தான். அவ்வளவுதான் அவன் கண்ட உருவம், பாதி எரிந்து கருகிய உடலும் எரிந்த மண்டை ஓடு போன்ற முகமும் பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாய் இருந்தாள் அந்த அழகிய பெண். அதுதான் அவளுடைய உண்மை உருவம்.
அப்போதுதான் அவனுக்கு ஏன் இவளை பிடிக்க இவர்கள் இவ்வளவு மெனக்கெட்டார்கள், ஏன் இவ்வளவு மந்திரங்களை, பூஜைகளை செய்தார்கள் என்று புரிந்தது. நமக்கு எதுவும் ஆக கூடாது என்ற சுயநலத்தில்தான் இவ்வளவு தூரம் இவர்களுக்கு உதவி செய்தோமே தவிர சங்கதி இப்படி இருக்கே. தருண் எப்படி இவளுக்கு தெரியும்? நான் என்ன செய்தேன்? யார் இவள்? இத்தனை கொடூர கொலைகளை ஏன் செய்தாள்? எங்கள் பக்கம் இவள் கவனம் பெற என்ன காரணம் ? என்று அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாய் உறைந்து நின்றான்.
தொடரும்....

