நீயா?
நீயா?
நீயா?
நிலாவூரில், அந்த பௌர்ணமி இரவு ஊரே விழாக்கோலம் கொண்டிருக்க, அந்த தரிசு காட்டில், ஒரு பிணம் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது.
ஒருவாரம் சென்றது, இங்கே நவீன் வேலை நிமித்தமாக சென்று வந்ததில், அலைச்சல் அதிகமாக இருந்ததால், அசந்து தூங்கி கொண்டு இருந்தான். அப்போது, அவன் மேலே யாரோ ஊர்ந்து வருவது போன்ற உணர்வு.ஆழ்ந்த தூக்கத்தில் கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்க்க, அடுத்த கணம் அரண்டு போனான். ஆம்! அவன் மேலே கொடூரமான உருவம் நிழல்போல கத்திக்கொண்டு அவனை பயமுறுத்தியது.
அலறியடித்துக்கொண்டு எழுந்தவன், கீழே விழுந்து, தட்டுதடுமாறி ஒரு மூலையில் பயந்துக்கொண்டு உட்கார்ந்தான். இப்போது அங்கே யாரும் இல்லை. அப்பாடா கெட்ட கனவு போல என்று அவன் எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டே அங்கே இருந்த கண்ணாடியை பார்த்தவன் அப்படியே அதிரந்து போனான். அந்த கண்ணாடியில் அதே உருவம்.
அலறியடித்துக்கொண்டு வாசல் கதவை நோக்கி ஓடியவனுக்கு, அங்கேயும் அந்த நிழல் உருவம் அவனுக்கு பயத்தை காட்டியது. கர்ணகொடூரமாய் சிரித்தது. பயந்து போய் பாத்ரூம் போய் ஓடி ஒளிய நினைத்தவன், பாத்ரூம் பக்கம் ஓடி அங்கே ஒளிந்துக்கொண்டான். அப்போது திடீரென விளக்கு எரிந்து எரிந்து அணைந்தது. நவீனுக்கு இதயமே நின்றுவிடும் அளவிற்கு பயம் தொற்றியது.
எரிந்தெரிந்தணைந்த விளக்கு ஒளியில் அந்த உருவமும் வந்து வந்து போனது. அதை பார்த்த நவீன் மூர்ச்சையாகி போனான். நவீன் மூர்ச்சையாகி, அங்கே கிடந்த பாத்டப்பில் அப்படியே விழுந்தான். நல்லவேளை அதில் தணணீர் நிரம்பியிருக்கவில்லை.
இதற்கிடையில்,ஒருவாரம் சென்ற நிலையில், நிலாவூரில், காலையில் தரிசு நிலத்தின் பக்கம் தன் ஆட்டை தேடி வந்த ஆடு மேய்ப்பவர், அங்கே பாதி அரைகுறையாக எரிந்த நிலையில் ஒரு பிணம் இருப்பதை கண்டு போலீஸிற்கு தகவல் தந்தார்.
அங்கே விசாரனைக்கு வந்தது, காவல்துறை அதிகாரி ஈஸ்வரன். அவர் இது போன்ற கொலைகளை துப்பறிவதில் வல்லவர். பாரப்பட்சம் பார்க்காமல் துப்பறியும் நேர்மையான அதிகாரி. இவரின் நேர்மையால் பாதிப்படைந்த பலர் செய்த சதியால் இவரின் பல வருட நேர்மை இவரை இந்த இடத்தில் வந்து நிறுத்தி இருந்தது. ஆனால் ஈஸ்வரன், அதை பற்றி எல்லாம் கவலைப்படும் ஆள் இல்லை. அவருக்கு தேவையெல்லாம் குற்றவாளிகளை கண்டுப்பிடித்து தண்டனை வழங்க வேண்டும்.
அவர் நிலாவூருக்கு வந்து அந்த பிணத்தை பார்த்தார். அது ஒரு பெண்பிணம். அங்கே ஆராய்ந்ததில், அந்த பிணத்தை இழுத்து வந்து இங்கே எரித்து இருக்கின்றனர். அந்த பிணத்தை நான்கு சக்கர வாகனத்தில் இருந்து எடுத்து இழுத்து வந்துள்ளனர். தடயங்கள் அதை உறுதிப்படுத்தியது. பிணத்தின் எரியாத பகுதிகளை ஆராய்ந்த போது, ஒரு தங்கச்சங்கிலி கிடைத்தது. அதை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த ஊரில் நடந்த திருவிழாவை பயன்படுத்தி பிணத்தை இங்கே கொண்டு வந்து எரித்து இருக்கின்றனர் என்பதை யூகித்தார்.
அந்த தங்கச்சங்கிலியை தடவியல் நிபுணர்களிடம் தந்து, அதில் உள்ள நகைக்கடை பெயரை கண்டுப்பிடித்தார்.
அது சிட்டியில் உள்ள பிரபலமான நகைக்கடை. அவருக்கு மேலும் ஆச்சரியம். இது சாதாரணமான வழக்கு இல்லை போலயே என்று நினைத்துக்கொண்டார்.
அந்த நகையை வாங்கிய கடைக்கு சென்றார். அந்த நகையை காட்டி, ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதன் ரசீதை வாங்கினார். அதில் அமிர்தா என்று பெயர் போடப்பட்டிருந்தது.
அந்த நகை வாங்கியது சமீபத்தில்தான் என்பதால், அந்த ரசீதில் உள்ள தேதியின் சிசிடிவி காட்சிகளை கேட்டார். நல்ல வேளை சமீபத்திய தேதி என்பதால் அதன் காட்சிகளை அழிக்காமல் வைத்திருந்தனர் நகை கடை ஊழியர்கள்.
அந்த சிசிடிவி காட்சிகளை நகைக்கடை ஊழியர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆராய்ந்தார் ஈஸ்வரன். அந்த நகையை வாங்கியது இரண்டு பெண்கள் என்றும் அவர்கள் அந்த ஊரில் உள்ள பிரபல ஐடி பார்க்கில் உள்ள ஒரு கம்பெனியின் சீருடையை அணிந்திருந்தனர். அதை குறித்துக்கொண்டு அந்த கம்பெனிக்கு சென்றார்.
அந்த சிசிடிவியில் உள்ள இரு பெண்களை பற்றி விசாரித்தார். அதில் உள்ளவர்கள் அமிர்தா, ஆடிட்டர் என்றும் ஸ்மிதா, செக்ரட்டரி என்றும் அறிந்தார்.
அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரித்தார். அமிர்தா நிலாவூரை சேர்ந்தவர் என்றும், ஸ்மிதா இதே ஊரை சேர்ந்தவர் என்றும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்றும் அமிர்தா ஸ்மிதாவுடன் இணைந்து ரூம் எடுத்து தங்கியுள்ளனர் என்றும் அறிந்தார்.
குற்றவாளி யார் என்பதை விசாரனையின் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்தவர், அவர் ஒருவராக இதை செய்து இருக்க முடியாது யார் துணையுடன இதை செய்திருப்பார் என்று கண்டுப்பிடிக்க ஆயுத்தமானார்.
அமிர்தா ஸ்மிதா எப்போது வருவார்கள் என்று ஏதும் தெரியாதது போல் கேட்டார்.
அவர்கள் இருவரும், ஒருவார காலமாக அறிவிப்பில்லாத விடுமுறையில் உள்ளனர் என்று கூறினார்கள் அங்கிருந்தவர்கள். குற்றவாளிகளின் திட்டம் ஈஸ்வரனுக்கு புரிந்துவிட்டது.
உடனே அவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா விசாரிக்க என்றார்? அதற்கு அந்த கம்பெனியின் மேனேஜர் கிஷோர், நவீன் ஒருவர் தான் இருக்கிறார். ஆனால், அவரும், நேற்றும் இன்றும் வரவில்லை முன்னதாக எதுவும் கூறவில்லை என்றார். ஃபோன் போகிறது ஆனால் ரெஸ்பான்ஸ் இல்லை என்றார்.
சிறிது யோசித்த ஈஸ்வரன், நவீனின் அட்ரஸை கேட்டு வாங்கிக்கொண்டார். அவர் விடைப்பெற்று கிளம்பிய பிறகு, கிஷோர் யாருக்கோ போன் செய்து இங்கு என்ன நடக்கிறது என்று பதற்றமாக சொல்லிக்கொண்டு இருந்தான். அப்போது வெளியே போன ஈஸ்வரன் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் கிஷோருக்கு தூக்கிவாரி போட்டது. அந்த ஏசி குளிரிலும் கிஷோருக்கு வியர்த்துக்கொட்டியது.
உள்ளே வந்த ஈஸ்வரன், நவீனின் அட்ரஸ் கார்டை இங்கே வைத்துவிட்டதாக கூறி, டேபிளின் மேல் வைத்திருந்த அந்த கார்டை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
கிஷோருக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது, ஈஸ்வரன் அவனை கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால், உள்ளே அட்ரஸ் எடுக்க சென்ற ஈஸ்வரன், கிஷோரின் ஒவ்வொரு அசைவையும் நோட் பண்ணியிருந்தார். ஆனால் அதை வெளியே காட்டாமல் வந்திருந்தார்.
இதற்கிடையில், அங்கே பாத்ரூமில் மயங்கி விழுந்த நவீன், மயக்கம் தெளிந்து எழுந்திருந்தான். பொழுது விடிந்து மதியம் ஆகியிருந்தது. அலறியடித்துக்கொண்டு அந்த ஊரில் உள்ள ஒரு சாமியாரிடம் சென்று நடந்ததை கூறி, தன்னை காப்பாற்றும்படி கதறினான். பாவம் நவீனுக்கு தெரியாது அவன் போலி சாமியார் என்று. பல வருடமாக அவன் சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாத்திட்டு இருப்பவன் என்று.
போலி சாமியாரோ இதுதான் சந்தர்ப்பம் என்று 2 லட்சம் கேட்டான். நவீனும், உயிர் முக்கியம் என்பதால் தர ஒப்புக்கொண்டான். இரவு வருவதாக கூறி சந்தோஷத்தில் சென்றான் போலி சாமியார். நவீனோ அங்கு இருந்த மரத்தடியிலேயே இரவு வரை உணவில்லாமல் படுத்திருந்தான்.
இரவு அந்த போலி சாமியார் காசுக்காக நேரம் தவறாமல் வந்திருந்தான் சில பல பூஜை சாமான்களுடன். இருவரும் நவீனின் வீட்டிற்கு சென்றனர்.
அந்த போலி சாமியாரோ, இந்த காலத்தில் பேயாம் பிசாசாம். இவனை போன்றவர்கள் இருந்தால் சரிதான். அப்போ தான் நம்ம பொழப்பு ஓடும், என்று மகிழ்ச்சியாக நவீனை வெளியே இருக்கவைத்துவிட்டு உள்ளே பெரிய பையுடன் சென்றான்.
உள்ளே சென்றவன் அவன் கொண்டு வந்த பூஜை சாமான்களை கீழே கொட்டிவிட்டு வீட்டிலிருந்த உயர்ந்த பொருட்களை ஆட்டையபோட்டான். அப்போது விளக்கு அணைந்தணைந்து எரிந்தது. ஏதோ கரண்ட் பிரச்சினைனு தன்வேலையிலேயே குறியாக இருந்தான். அப்போது," நிறுத்துடா! " என்று கொடூரமாக கத்தியது.
அந்த சத்தத்தில் போலி சாமியார் அலறினான். அவன் முன்னே திடீரென்று வந்து அவனை ஓங்கி ஒரு அடி அடித்தது
அவ்வளவுதான், உண்மையில் பேய் இருப்பதை உணர்ந்தவன் வெளியே ஓடினான் ஆனால், அந்த பேய் அவனை சின்னாபின்னமாக்கி கொன்றது.
உள்ளே போன சாமியார் பல நேரமாகியும் வெளியே வராததால் நவீன் உள்ளே சென்றான். சாமியாரை தேடி தேடி வீட்டின் உள்ளே வந்தான். ஆனால் அவன் அங்கு கண்ட காட்சி அவனை உறைய வைத்தது. ஆம்! அந்த சாமியாரின் உடல் இரத்த வெள்ளத்தில் இழுத்து செல்லப்படுவதை பார்த்தான். அப்படியே அலறியவன், தப்பித்து செல்ல வெளியே ஓடப்பார்த்தான். ஆனால், திடீரென்று அவன் முன் தோன்றிய பேயை பார்த்து ,"நீயா?" என்றவனை, கர்ணகொடூரமாய் கத்தியவாறு அவனை தலையை நசுக்கி கொன்றது.
ஈஸ்வரன் நவீனின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு ஏற்கனவே போலீஸ் கூட்டமாய் இருப்பதை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். தான் யார் என்று கூறி, என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆனால் அங்கு இருந்த அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை. இரட்டை கொலை நடந்திருக்கிறது என்று மட்டும் தான் கூறினார்கள். சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறி ஆதங்கப்பட்டனர். உள்ளே சென்று பார்த்தார், சாமியாரும் நவீனும் கொடூரமாக இறந்து கிடந்தனர்.
அப்போ உண்மையான குற்றவாளியான அவள், எங்கே இருக்கிறாள் என்று யோசித்தவாரே காரில் ஏறி ஸ்டார்ட் செய்தார். அப்போது, அவர் கண்ணாடி வழியே பார்த்தார் அங்கே, பின் சீட்டில் ஒரு அருவம் உருவமாய் தெரிந்தது.
என்னதான் நடக்க போகிறது பார்க்கலாம் என்று காரை செலுத்தினார். நடு இரவு ஆகியது.
போகும் வழியில் ஒரு பாழடைந்த கம்பெனிக்குள் ஓர் ஆண் பதுங்கி பதுங்கி செல்வதை பார்த்தார். காரை நிறுத்திவிட்டு அவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தார். ஓர்இடத்தில் அது அந்த ஐடி பார்க்கில் உள்ள ஒரு கம்பெனியின் மேனேஜர் கிஷோர் என்பதை அறிந்து இவன் எதற்கு நடுநிசியில் இந்த பக்கம். யாரை பார்க்க இப்படி பூனை மாதிரி போகிறான் என்று யோசித்தார். ஒருவேளை இவனும் அந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பானோ? என்று யோசித்தவாரே அவனை பின்தொடர்ந்து அந்த பாழடைந்த கம்பெனிக்குள் பாதி தூரம் வந்துவிட்டார்.
அப்போது, அவர் தலையில் இடி இறங்கியதை போல ஒரு அடி விழுந்தது. அவ்வளவுதான் தலையில் காயத்துடன் மயக்கமானார் ஈஸ்வரன். இன்னொரு பக்கம் கிஷோர் இங்கே நடப்பதை கவனிக்காமல், ரொம்ப தூரம் போயிருந்தான். இறுதியில் ஒரு பெண்ணை சந்தித்தான். அவள் வேறு யாருமில்லை அமிர்தாதான். ஆம்! ஸ்மிதாவை கடத்திட்டு வரும்போது கிஷோர் தன் மனைவியுடன் அந்த பக்கம் போனான். அவன் இவர்களை பின்தொடர்ந்து வந்து ஸ்மிதாவை கொலை செய்ததை பார்த்துவிட்டான். அப்போது இவனை பின்தொடர்ந்து வந்த இவனின் மனைவியை பிணைய கைதியாக பிடித்துவைத்துக்கொண்டு கிஷோரை மிரட்டிப் கொண்டு இருந்தனர். அடிக்கடி இடத்தை மாற்றி கிஷோரை அழைத்து வாரம் ஒருமுறை காட்டி மிரட்டி வந்தார்கள். போலீஸிடம் சென்றால் அவனின் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டினாள்.
இன்றும் அப்படிதான் ! திடீரென்று போன் செய்து கிஷோர் அவன் மனைவியை காண அழைத்தாள். ஆனால் கிஷோர் வரும் வழியில் ஈஸ்வரன் கண்ணில்பட்டுவிட்டான்.
கிஷோரை கூட்டிட்டு போய் அவன் மனைவியையும் ஈஸ்வரனையும் காட்டினாள் அமிர்தா. கிஷோர் அதிர்ச்சி அடைந்தான். ஏன் தப்பு மேல் தப்பு செய்கிறீர்கள் என்றும் அவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன், அவனையும் அவன் மனைவியையும் விட்டுவிடவும் கெஞ்சினான்.
பேசிக்கொண்டே இருந்தவனை திடீரென்று தாக்கி அடித்து உதைத்தாள். எதிர்பாராத தாக்குதலால் கிஷோர் தடுமாறி கீழே விழுந்து, அடி வாங்கி மயங்கி போனான்.
இந்நிலையில், ஈஸ்வரன் கண்விழித்தார். தலையில் அடிப்பட்டதால், மிகவும் சிரமப்பட்டு பார்த்தார். அங்கே, அமிர்தா, மயங்கிய கிஷோரை வெறியோடு அடித்து உதைத்துக்கொண்டு இருந்தாள்.
கண்விழித்த இவரை பார்த்த அமிர்தா, ஹலோ! பரவாயில்லையே! அவ்வளவு பலமாக தலையில் அடி விழுந்தும் தெளிவா முழிச்சிட்டீங்களே! உண்மையிலேயே போலீஸ் போலீஸ்தான்! என்று கிண்டலடித்தாள்.
ஈஸ்வரன் அவளை பார்த்து,"அமிர்தா நீதான் குற்றவாளின்னு அப்போவே கண்டுபிடிச்சுட்டேன் ஆனால் உனக்கு கூட இருந்து உதவியது யார் என்பதை அறிய தான் உன்னை தேடி அலைந்தேன். கிஷோர் தான் அது என்று சந்தேகித்தேன் ஆனால் அது நவீன்தான் என்பதை நேற்று கண்டுப்பிடித்துவிட்டேன். பிறகு உன்னை எப்படி கண்டுப்பிடிப்பது என்று யோசித்தவாரே வரும்போது தான் இந்த கிஷோரை பார்த்தேன். சந்தேகத்திற்கிடமாக இவன் நடந்து வருவதை பார்த்து இவனை பின்தொடர்ந்தேன். இவன் பார்க்க வந்தது உன்னைத்தானா? எலி கடைசியில் தானா வந்து பொறியில் சிக்கிவிட்டதே" என்று சிரித்தார்.
அமிர்தா அதிர்ச்சி அடைந்தாள்," எப்படி கண்டுப்பிடித்தீர்கள்? அப்போ நான்தான் குற்றவாளி என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டதா? என்று கத்தினாள்.
ஈஸ்வரன்," எல்லா குற்றவாளியும் ஒரு தடயத்தை விட்டு செல்வான் என்பது குற்றவாளிகளின் விதி. நீயும் நவீனும் எவ்வளவு தான் சாமர்த்தியமாக காயை நகர்த்தி விளையாடினாலும் இறுதியில் நீ அந்த நகைக்கடை சிசிடிவியில் சிக்கிவிட்டாய். நீ ஸ்மிதா வாங்கின நகைக்கு உன் பெயரில் பில்லை போட்டு இருக்கின்றாய். அதைவிட பெரிய தப்பு நீ உன் கம்பெனியின் சீருடையில் சென்றது. நீ அவளின் நகைக்கு அவளுக்கு தெரியாமல் உன் பெயரை போடச் சொன்னதை அந்த நகை கடை ஊழியர் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்லாமல் உன் செயல்கள் அனைத்தும் அதில் பதிவாயிருந்தது. நீ ஐடி செக்டரில் வேலை பார்த்தாலும், இதை மறந்துவிட்டாயே? அதான் குற்றவாளி எதிலாவது முட்டாளாகி போவான். நீ இதில் முட்டாளாகிவிட்டாய். நீ இதை பல நாட்களாக திட்டம் போட்டு செயல்படுத்தியிருக்கிறாய்."
என்றார்.
அமிர்தவோ, "சபாஷ்! உங்க துப்பறியும் அறிவுக்கு முன்னாடி தலைவணங்குகிறேன். ஆனால் என்ன நீங்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சாக போறீங்க இந்த கிஷோருடனும் அவன் மனைவியுடனும். அப்படியே, நவீனும் நானும் ஸ்மிதாவை கொன்றது ஏன் எப்படி என்று சொல்கிறேன். இவ்வளவு கண்டுப்பிடிச்ச நீங்க இது தெரியாம செத்து போனா, அப்புறம் பேயா வந்து தொந்தரவு செஞ்சாலும் செய்வீங்க" என்று கிண்டலடித்தாள் அமிர்தா.
நானும் நவீனும் கம்பெனி பணத்தை கூட்டு சேர்ந்து ஆட்டைய போட்டோம். ஒரு பெரிய தொகைக்கு குறி வைத்து காய்நகர்த்திய போது இந்த ஸ்மிதா, குறுக்கே வந்து நீதி, நேர்மை, நியாயம்னு என்னவோ அதுக்காகவே பிறந்த மாதிரி குதிச்சா. வேலைக்கு வந்தோமா, சம்பளம் வாங்கினோமான்னு இல்லாம, எங்க விஷயத்துல தலையிட்டா. அவ என் தோழி தான் என்று எவ்வளவு சொல்லியும் கேட்கல வேறு வழி தெரியல இது மாதிரி ஒரு இடத்துல தூக்கிட்டு போய் அவளை கொலை செஞ்சி, அவ உடலை என் ஊர்ல திருவிழா நடக்கும் போது, யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் எரித்துவிட்டோம். கொலை பண்ணும் போது இந்த முட்டாள் கிஷோர் அவன் மனைவியுடன் எப்படி வந்தான்னே தெரியல. ஆனா எங்கிட்ட வசமா சிக்கிட்டான். இவன் மனைவியை வச்சு இவனை சரிகட்டிட்டோம். ஆனா ரொம்ப நாள் நீடிக்காதுன்னு இவிங்கள இன்னைக்கு போட்டுதள்ளிட்டு கம்பெனி பணத்தை ஆட்டைய போட்டுட்டு போலாம்னு இருந்தா, இவன் அன்னைக்கு வந்த மாதிரி, இன்னைக்கு நீங்க. சரி! நேரம் ஆச்சு கடவுளை வேண்டிக்கோங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நவீன் வந்தவுடன் மூனு பேரையும் ஸ்மிதாகிட்ட அனுப்ப போறேன்" என்று கூறிவிட்டு சிரித்தாள்.
அமிர்தா கூட ஈஸ்வரனும் வாய்விட்டு சிரித்தார். அமிர்தா," என்ன சார்! சாகுறத நினைச்சு பைத்தியம் பிடிச்சுட்டதா? என்று கிண்டலடித்தாள்.
ஈஸ்வரன்," முட்டாள்! சாகப்போறது யார்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுடும். உனக்கு ஒன்னு தெரியுமா? நவீன் செத்துபோய் இரண்டு நாளாகிறது. " என்றார்.
இதை கேட்ட அமிர்தாவிற்கு ஷாக்!
அப்போது அங்கிருந்த எல்லா விளக்குகளும், அணைந்தணைந்து எரிந்தன. சில்லென்ற காற்று வீசியது.
அமிர்தா சற்று பயந்தாள்.
அதை பார்த்த ஈஸ்வரன்," இதுக்கே பயந்துட்டா எப்படி? நவீனை கொன்னவங்க உன்னை கொல்ல இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வந்து விடுவார். முடிஞ்சா ஓடி போயி தப்பிக்க பார்" என்று கூறி சிரித்தார்.
அமிர்தாவோ, பயந்தாலும் பயத்தை வெளியே காட்டிக்காமல்," என்ன சார்! கதை விடுறீங்க. இந்த இடம் நவீனுக்கே தெரியாது அப்படியிருக்க யார் என்னை கொல்ல போகிறார்கள் அதுவும் இங்க வந்து" என்று கூறி சிரமப்பட்டு சிரித்தாள்.
சொல்லிக்கொண்டிருக்கும் போதே விளக்குகள் தூரத்தில் இருந்து ஒவ்வொன்றாக அணைந்துக்கொண்டு வந்தது ஒவ்வொரு நிமிடத்திற்கும். இருந்தாலும் வீராப்பாக பேசி சிரமப்பட்டு சிரித்தாள் அமிர்தா.
ஈஸ்வரன்," அப்படியா! இதோ அவிங்களே வந்துட்டாங்களே! நீ அவங்கிட்டயே பேசிக்கோ. அதோ வந்துட்டாங்க பார்" என்றார்.
அவர் சொல்லி முடிக்கவும், அமிர்தா திரும்பி பார்க்கவும் அனைத்து விளக்குகளும் அணைந்து ஒரே ஒரு விளக்கு வெளிச்சத்தில் ஸ்மிதா பேயாய் நின்றிருந்தாள்.
" நீயா?" என்றவள் தலையில், இடிபோல ஒரு அடி இறங்கியது தலை சிதறியது.அந்த ஒரு விளக்கும் அணைந்தது.

