Gowthaman V

Horror Crime

3.9  

Gowthaman V

Horror Crime

இப்படிக்கு பேய்!

இப்படிக்கு பேய்!

4 mins
795



                          பேயூர் கிராமம், சாலையில் வயல்களின் ஓரம், அந்த ஊர் வட்டிகாரர், வட்டி வரதராஜன் தலை, கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்தார்.

                           ஊருக்குள்ளோ, வழக்கம் போல் சேவல் கூவிட, குருவிகள் கீச்சிட, மாடுகள் அம்மாக்களை கூப்பிட, இயற்கை இருள் போர்வையை மடித்து பச்சை போர்வையை விரித்திட, காலை தென்றல் சில்லிட பொழுது விடிந்தது.கிராமம் என்பதால் மக்கள்‌ அனைவரும் விடிந்த சிலமணி நேரங்களில் சுறுசுறுப்பாகினர்.

     

                           மாணிக்கம், எப்பொழுதும் போல் எல்லோரையும் விட சீக்கிரமாகவே தன் வயலில் வேலை பார்க்க ஆயுத்தமாகி கிளம்பினான். தன் மகளிடம், " இந்தாத்தா ! நான் வயக்காட்டு பக்கம் போறேன், மதிய சாப்பாட்டுக்கு பச்சைமிளகாயும் போர் சாதமும் எடுத்துக்கிட்டேன் உனக்கு மீதம் வச்சிருக்கேன், சீக்கிரம் சாப்பிடு, வீட்டு வேலைனு வயித்த காய போடாதே புள்ள " என்று கூறிவிட்டு சென்றான். அவன் மகள் தனலட்சுமி, " ஊர் நிலைமை தெரியும் தானே! சீக்கிரம் பொழுது சாய்வதற்குள் வீடு வந்து சேரும் ஐயா" என்றாள். மாணிக்கம்," சரி ஆத்தா! இதென்ன புதுசா, தினமும் சொல்றது தானே" என்று அலுத்துக்கொண்டு கிளம்பினான்.

                             ஊரைவிட்டு சில அரைமணி தூரம் கடந்தால் தான் அந்த ஊர் மக்களின் வயல்கள் கண்ணில்படும். அந்த ஊருக்கு வரும்போது வயல்கள் தாம் முதலில் வரவேற்கும். ஆனால் மக்கள் தங்களின் வயலே என்றாலும் இரவில் ஊரைவிட்டு வருவதில்லை.

                                எல்லோருடைய வயல்களுக்கு மத்தியில் தான் ரத்தினத்தின் வயலும் மாணிக்கத்தின் வயலும் இருந்தது. ரத்தினமும் மாணிக்கமும் நல்ல உழைப்பாளிகள் மட்டுமல்ல உயிருக்கு உயிரான தோழர்களும் தான். ரத்தினம் கடந்த 7 வருடத்திற்கு முன், கடன் தொல்லை தாங்காமல் தன் வயலிலேயே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டான். அந்த ஊருக்கு அன்று பிடித்தது ஏழரை. அன்றிலிருந்து பொழுது சாய்ந்தால் போதும் வயலின் ஓரத்தில் வாரம் ஒரு பிணம் கண்டு எடுக்கப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது.

                                 ரத்தினத்தின் வயலை ஒட்டிய எல்லா வயல்களின் சொந்தக்காரர்கள் எல்லாம்

இதனாலேயே தம்தம் வயல்களை விற்கத் தொடங்கினர். அந்த வயல்களை வாங்கும் வெளியூர்காரர்கள் ஆகட்டும், உள்ளூர் ஆட்களாக இருக்கட்டும் அடுத்த ஒரு மாதத்தில் பிணமாக கை வேறு கால் வேறு தலை வேறாக கிடப்பர். அவர்கள் பக்கத்தில் பாதி எரிந்து முடிந்த காகிதத்தில், " இப்படிக்கு பேய்.... " என்று ரத்தத்தில் எழுதி இருக்கும். இது ஏதோ கொடூர குற்றவாளிகளின் சூழ்ச்சி என்று இதை ஆய்வு செய்ய வரும் காவல்துறை அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் இங்கு வரவே காவல்துறையினர் பயப்படுவார்கள். ஆனால் மாணிக்கம் மட்டும் தன் வயலை விற்க மனமில்லாமல் நேரத்தை குறைத்து வயலில் வேலை செய்து ஜுவனம் செய்து வந்தான்.

                                   நட்டத்தில் உழன்றாலும் தன் வயலை விற்பதாக இல்லை. ரத்தினத்தின் வயலை சுற்றிய எல்லா வயல்களும் தரிசாய் காட்சி அளித்தது, மாணிக்கத்தின் வயல் மட்டும் பச்சை பட்டாடை உடுத்தியது போல் காட்சியளித்தது. இதனால் ஆரம்பத்தில் மாணிக்கத்தினை சந்தேகப்பட்டு காவல்துறையினர் அடித்து உதைத்து விசாரனை என்ற பெயரில் கொடுமைகள் செய்தனர். ஆனால் மாணிக்கம் பொழுது சாய்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியே போகாதது ஊர் முழுக்க தெரியும் என்பதால் அவரை விட்டுவிட்டனர். இந்த நிகழ்வுகள் அந்த ஊரின் வார செய்தி போல் நிகழும்.

                            சிலர் மாணிக்கத்தை ," ஏம்பா! உன் நண்பன் ரத்தினத்தை என்னான்னு கேட்க மாட்டியா? இப்படி பேயா மாறி ஊரையே முடக்கி வச்சுட்டானே" என்று கிண்டலடித்து வம்பு இழுப்பர். மாணிக்கம் இதனாலேயே சீக்கிரம் எழுந்து வயலுக்கு சென்று வேலை செய்துவிட்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்துவிடுவான். இன்று அப்படிதான், ஆனால் இன்று பிணம் கிடந்தது, மாணிக்கத்தின் வயலின் ஓரம். வயலுக்கு போனவன் அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தான். அவன் அலறிய அலறல் எல்லா மக்களையும் இவன் வீட்டின் முன் கூட்டியது. மாணிக்கத்தின் மகளோ அப்பாவை அந்த கோலத்தில் கண்டதும் பதறி துடித்து விட்டாள்.

                            இவன் வீட்டின் முன் கூடிய மக்கள் என்ன ஏது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கமோ ஒன்று சொல்ல முடியாமல் நடுநடுங்கி விசும்பிக்கொண்டிருந்தான். மாணிக்கத்தின் மகளோ," வழக்கம் போல காலம்பரமே வயலுக்கு போச்சு, போன ஒரு மணி நேரத்தில இப்படி அலறிட்டு வந்து உக்காந்து இருக்கு, என்னன்னு தெரியல" என்றாள். ஊர் தலைவர் சக்கரபாணி, ஆட்களை அழைத்து," அவன் காலையில் வயலுக்கு தான் போயிருக்கான், அங்கு போய் என்ன நடந்தது என்று பார்த்து வாருங்கள் " என்று கட்டளையிட்டார்.

                             அவரின் கட்டளைக்கு பணிந்த வேலையாட்கள் தண்டபானி, கருப்பன், கரிகாலன், தாஸ் நால்வரும் சென்று பார்த்துவிட்டு முகத்தில் பயம் கலந்த கலவரத்தோடு மூச்சிரைக்க ஓடி வந்தனர்.

                              சக்கரபாணி," ஏன்டா கருப்பா! என்னதான்டா நடந்துச்சு இப்படி பேய் அறைஞ்ச மாதிரி ஓடி வாரீங்க" என்றார். அதற்கு தாஸ்," ஐயா, உங்க நண்பர் வட்டி வரதராஜன் துண்டு துண்டாக மாணிக்கத்தின் வயல் பக்கம் கிடக்கிறார் அய்யா!" என்று பயத்தில் கதறினான். " ஐயா! இன்னொரு விஷயம், அவரையும் ரத்தினம் பேய்தான் கொன்றிருக்கு போல, பக்கத்தில இப்படிக்கு பேய்னு காகிதம் இருக்கு" என்று கூறினான்.

                              அவன் கூறியதை கேட்டதும் சக்கரபாணி மயங்கி சரிந்தார். இதை பார்த்து ஊரே வாயடைத்து போயினர். அதுவரை அழுதுக்கொண்டு இருந்த மாணிக்கமும் செய்வது அறியாது திகைத்தான்.

                              காவல்துறைக்கு தகவல் சொல்ல அந்த ஊர் இளவட்டங்கள் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டனர். அதற்கு அவர்களோ," அட சும்மா இருங்கப்பா! உயிருக்கு பயந்து எந்த போலீஸ்காரனும் வரமாட்டேங்கிறாங்க நீங்க வேற கடைசலை குடுத்துக்கிட்டு" என்று கோபம் கொண்டனர். ஆம் இதுவரை விசாரிக்க வந்தவர்கள் வந்த வேகத்தில் மரணத்தை தழுவியதன் பலன் இங்கு காவல்துறை வருவதில்லை. வந்தாலும் பிணத்தை அப்புறப்படுத்திவிட்டு போவார்கள் திரும்பி வருவது குறைவே. ஏன் இங்கு திருடர்களும் வருவதில்லை, இந்த கொலைகளை தவிர எந்த ஒரு குற்றமும் நடப்பதில்லை. இதனால் ஏற்படும் ஒரே தடை அந்த கிராமம் இதுவரை வளர்ச்சி அடையவில்லை, ஏன் அந்த ஊருக்கு கைப்பேசி டவர் இல்லாததால் அங்கு ஒரு கைப்பேசியும் இல்லை வெறும் பஞ்சாயத்து தொலைப்பேசி மட்டுமே. அதுவும் சக்கரபாணி வீட்டில் மட்டுமே. அரசு அலுவலகங்கள் என்றாவது மூன்று நாட்கள் பகலில் மட்டும் இருக்கும். அந்த கிராமம் பழங்கால கிராமங்களை நினைவூட்டும்.

                               மயங்கி விழுந்த சக்கரபாணியை அவரின் ஆட்கள் தூக்கி வண்டியில் கிடத்தினர். இவரை வீட்டிற்கு கூட்டி செல்கிறோம். நேரம் கடந்தால் தானா எந்திரிப்பார் கவலை வேணடாம்னு சொல்லிட்டு யாருடைய பதிலையும் எதிர்ப்பாராமல் சென்று விட்டனர்.

                               அப்போது சிலர்,"அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில மாணிக்கத்தையே கலங்க வச்சுட்டானே ரத்தினம், என்ன நண்பனோ என்னவோ! இவ்வளவு நாள் கொலை செஞ்சு செஞ்சு ரத்தவெறி பிடிச்ச காட்டேரி ஆயிட்டான் போல! " என்று கிண்டலடித்து சென்றனர்.

                              அனைவரும் கலைந்து சென்றனர். அதற்குள் ஊர் இளவட்டங்கள்," இதை இப்படியே விட்டால் இந்த ஊரே சுடுகாடு ஆகிடும். மற்ற ஊர்கள் எல்லாம் சிங்கப்பூர் மாதிரி மாறிட்டு வருது நம்ம ஊர் மட்டும் பேய் பூதம்னு 6மணிக்கு மேல் முடங்கி போகுது. இதற்கு ஒரு வழி பண்ணனும்" என்று சூளுரைத்து ஒரு குழுவாய் சேர்ந்து காவல்துறைக்கு தகவல் சொல்ல கலைந்து சென்றனர்.

                               போலீஸ்காரர்கள் மருத்துவமனை அமரர் ஊர்தியுடன் வந்தனர். மாணிக்கத்தின் வயலின் ஓரம் வட்டி வரதராஜனின் பிணம் துண்டு துண்டாக கிடந்தன. வந்த போலீஸ்காரர் மக்களிடம் இனி நாங்கள் திரும்ப வரும்வரை இந்த வயலில் வேலை செய்ய கூடாது என்று மட்டும் கூறிவிட்டு பிணத்தை மூட்டை கட்டி எடுத்து சென்றனர். இதை கேட்ட மாணிக்கமோ வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார். தனலட்சுமி அவரை தேற்றி வீடு திரும்பினர்.

                                இவர்கள் பேசியதையும் அங்கு நடந்ததையும், யாரும் அறியாமல் ஒரு நிழல் உருவம் பம்ப்செட் அறையிலிருந்து மறைந்து கவனித்துக்கொண்டு இருந்தது. அதன் கண்கள் ரத்த நிறத்தில் கோபத்தை கக்கிக்கொண்டு மிளிரியது.

                                                              - தொடரும்

                                                 

                                 

                              



Rate this content
Log in

Similar tamil story from Horror