எல்லாம் கடந்த காதல்
எல்லாம் கடந்த காதல்
மாறா! மாறா! குரல் கேட்டு அடித்து பிடித்து எழுந்து போய் அப்பா ராகவனின் மேல் விழுந்து, முத்தம் கொடுத்து, முகம் மீது முகம் தேய்த்து, தன் காதலை சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் மாறா. ராகவன்," வாடா மாறா! நாம் கொஞ்சம் வெளியே போய் வரலாம்" என்றார். உடனே மாறா ராகவனுக்கு நடக்க ஊன்றுகோலையும் செருப்பையும் எடுத்து கொடுத்தான். ராகவன் சிரித்துக்கொண்டே," மாறா, வெளியே வானம் இருண்டு இருக்கிறது குடை எடுத்து வா" என்றார்.
மாறா எடுத்து வந்து தந்தான். இருவரும் வெளியே கிளம்பினார்கள். மாறா, வீடு பூட்டியிருப்பதையும் எல்லாம் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்தான். இருவரும் நடந்து சென்றார்கள். மாறா முன்னே செல்ல ராகவன் பின் தொடர்ந்தார். மாறா நேராக ஒரு டீக்கடை முன் சென்று உட்கார்ந்தான்.
டீக்கடைக்காரர் நடராஜன்,"வா மாறா! கரெக்டா ஐயாவ கூட்டிட்டு வந்துட்ட. வழக்கம் போல உனக்கு பால் ஐயாவிற்கு டீ தான?" என்றார்.
உடனே ராகவன்," இன்னைக்கு எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. ஒரு இஞ்சி டீ போடுப்பா. மாறாவுக்கு வழக்கம் போல பாலே கொடுத்திரு" என்றார். நடராஜன்," என்னங்க ஐயா ! என்னாச்சு? " என்றார்.
ராகவன்," வயசாகுதில்ல அதான், வேற எதுவும் இல்லை" என்று கூறினார். நடராஜன் இஞ்சி டீயை ராகவனுக்கும், பாலை மாறா விற்கும் தந்துவிட்டு," ஐயா! மாறாவிற்காக மட்டுமாவது நீங்க நிறைய நாள் வாழனும். நீங்க இல்லைனா குழந்தை தவிச்சு போய்டும்" என்றார். மாறா அன்றைய பேப்பரை எடுத்து வந்து ராகவன்கிட்ட கொடுத்தான்.
" நம்மகிட்ட ஏதும் இல்லையப்பா, எல்லாம் மேலே இருக்கிறான் பாரு அவன்கிட்ட இருக்கு" என்று பதிலளித்து மாறா கொடுத்த பேப்பரை படிச்சுட்டே டீயை சுவைத்தார். மாறாவும் பாலை குடிக்க ஆரம்பித்தான்.
மாறாவும், ராகவனும் வந்த வேலையை முடித்து வீடு திரும்பினர். மாறாவிடம் எப்போதும் போல் சில நேரம் விளையாடிவிட்டு, சென்று குளித்து முடித்து வந்தார். மாறாவும் ராகவனும் சேர்ந்தே சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவர்," மாறா! நான் போய் சிறிது நேரம் படுக்கிறேன். நீயும் போய் ஓய்வெடு. சாயங்காலம் மீண்டும் நாம் வெளியே போகலாம்" என்று கூறிவிட்டு படுத்தவர் மாலை 5.00 மணி தாண்டியும் எழவில்லை. மாறா ஓடிச்சென்று ராகவனை பார்த்து கூப்பிட்டான்.
ஆனால் ராகவன் எழவில்லை. உடனே மாறா ஓடிச்சென்று டீக்கடைக்காரரை அழைத்தது. நடராஜனோ என்ன இது மாறா மட்டும் வந்து இருக்கானே என்று யோசித்தவன் "என்ன ஆச்சு ? ஐயா எங்கே?" என்று கேட்டான். உடனே மாறா அவனின் வேட்டியை இழுத்தான்.
உடனே, ஏதோ ஆபத்து என்று உணர்ந்தவர் மாறாவை கூட்டிட்டு ராகவன் வீட்டிற்கு ஓடினார். அங்கே ராகவன் மூச்சு பேச்சின்றி கிடந்தார். உடனே நடராஜன் ஆம்பலன்ஸிற்கு போன் செய்து ராகவனை மருத்துவமனைக்கு கொண்டே சென்றார். மாறா என்ன ஏது என்று அறியாமல் அவர்களை பின்தொடர்ந்தான்.
மருத்துவமனையில் டாக்டர் , ராகவனை பரிசோதித்து விட்டு உயிர் இருப்பதை உறுதி செய்தார். நடராஜன் நிம்மதி அடைந்தார். நடராஜனுக்கு டீக்கடை வைத்து கொடுத்ததே ராகவன் தான். மாறாவை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தார்கள். அப்புறம் ராகவன் மாறா உறவு முறையை எடுத்து சொல்லி நடராஜன் தான் அனுமதி வாங்கினார்.
ராகவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மாறா ராகவன் இருந்த அறையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான். நடராஜனுக்கோ மாறாவின் நிலை ஒரு பக்கம் கவலை அளித்தது. ராகவன் திரும்பி நல்ல நிலை பெற்று வர கடவுளை வேண்டினான்.
டாக்டர் வெளியே வந்து," அவருக்கு சின்ன மைல்டு அட்டாக் தான். நல்ல வேளை அட்டாக் வந்த சில நிமிடங்களிலேயே கவனித்து அழைத்து வந்ததால் உயிரை காப்பாற்ற முடிந்தது. ஒரு வாரம் நாங்களே இங்க வச்சு பாத்துக்கறோம். நீங்க அப்பப்ப வந்து பார்த்துட்டு ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு போங்க. இப்ப அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் கண் முழிக்க ஒருநாள் ஆகும் " என்றார்.
டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு, மாறாவிடம் ராகவனுக்கு ஒன்றுமில்லை சீக்கிரம் வந்துவிடுவார் என்றார். மாறாவோ நடப்பதை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, தன்னை விட்டு சில காலம் அவர் பிரிந்து இருக்க போகிறார் என்று. இப்போதே கவலை அவன் கண்களில் ததும்பியது.
நடராஜன் மாறாவை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தார். மாறா ராகவனை பிரிய மனமில்லாமல் முரண்டு பிடித்தான். மருத்துவமனையில் எல்லோரும் அவனின் பாசத்தை கண்டு மலைத்து போய்விட்டார்கள். வேறு வழி இல்லாமல் தூக்கி கொண்டு வந்து விட்டான். வந்தவன் படுத்து கொண்டு கண்களில் கண்ணீரோடு எதையோ ஏங்கி தவித்தான்,சாப்பாடு தண்ணீர் இன்றி.இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. மாறா மாறவில்லை. உடல் மெலிந்தான்.
மூன்றாவது நாள் நடராஜன் மாமாவிடம் ராகவனை பார்க்க போவதாக கூறினார். உடனே மாறா துள்ளி குதித்து எழுந்து தானும் கூட வருவேன்னு நடராஜன் வண்டியில் ஏறிக்கொண்டான். நடராஜன் அவனையும் கூட்டிட்டு போகத்தான் இருந்தார் ஆனால் மாறா முந்திக்கொண்டான்.
அங்கே மருத்துவமனையில் ராகவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உடல்நலம் தேறி எழுந்து உட்கார்ந்து இருந்தார். நடராஜன் வண்டியை மருத்துவமனை வாசலில் நிற்க வைத்தவுடன் மாறா எகிறி குதித்து ராகவனை பார்க்க ஓடியது யாரையும் தொந்தரவு செய்யாமல். மாறா அவர் உட்கார்ந்து இருந்ததை பார்த்ததும் தன்னை மறந்து ஊளையிட தொடங்கினான் சந்தோஷத்தில். ஒரே இடத்தில் சுத்தி சுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். ராகவன்," மாறா! போதும் போதும் இது ஹாஸ்பிடல் இங்க இப்படி பண்ணா மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ண மாதிரி இருக்கும்" என்றார்.
ஆம் மாறா, ராகவன் பத்து வருடங்களாக வளர்க்கும் நாய். ஒருநாள் வழக்கம் போல் டீ குடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஒரு நாய்க்குட்டி ஒன்று காலில் அடிப்பட்டு கத்திக்கொண்டு இருந்தது. ராகவனை பார்த்ததும் நொண்டிக் கொண்டே அவரிடம் வந்து காலை காண்பித்து கத்தியது. ராகவனுக்கோ யாரும் இல்லை. மனைவி இறந்து இரண்டு வருடம் ஆகிறது. அந்த குட்டியை பார்த்ததும் எடுத்து, வீட்டுக்கு சென்று வைத்தியம் பார்த்தார்.
நாய்க்குட்டிக்கு கால் சரியானதும் அது அவரை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடித்தது. அன்றிலிருந்து இன்று வரை ராகவன் முகத்தை பார்க்காமல் தண்ணீர் கூட குடிக்காது. ராகவன் மீது அவ்வளவு அன்பு, காதல். அதனால் தான் ராகவன் ஹாஸ்பிடலில் இருந்த போது இரண்டு நாள் எதுவும் சாப்பிடாமல் இருந்தது.
இப்போது அவரை பார்த்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறது.
நடராஜன் சொன்னார்," மாறா, நீங்கள் இல்லாமல் மிகவும் நொடிந்து விட்டான். இரண்டு நாள் பச்சை தண்ணி கூட பல்லுல படல. இப்ப உங்க முகத்தை பார்த்ததும் தான் அவன் முகத்துல சந்தோஷமே வந்திருக்கு. நான் போய் பால் வாங்கிட்டு வாரேன். அவனுக்கு நீங்க தந்தால்தான் சாப்பிடுவான்". என்று சொல்லிவிட்டு சென்றார்.
அப்போது டாக்டர் வந்து," எப்படி இருக்கீங்க ராகவன் " என்றார். ராகவன்," இப்ப நல்லா இருக்கேன் டாக்டர், இன்னும் 10 வருஷத்திற்கு எனக்கு ஒன்னும் ஆகாதே" என்று கூறி சிரித்தார்.
டாக்டரோ,"இவன் உங்க பிள்ளையா? நீங்க இங்க அட்மிட் ஆனதும் இவன உங்கள விட்டு பிரிக்க பெரிய போராட்டமே நடந்து விட்டது." " நாங்கள் பிள்ளைகள் பெற்றோர் மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒரு நாய் இத்தனை காதல் உங்கள் மீது வைத்துள்ளது என்றால், என்னால் நம்பவும் நம்பாமலும் இருக்க முடியவில்லை."
இவன் உங்கள் மீது வைத்துள்ள அன்பு எல்லா காதலையும் கடந்த வேறுவிதமான உன்னத காதல். இது மனித காதல் அல்ல அதை விட உயர்ந்த தூய்மையான அன்பை தவிர வேறு எதையும் எதிர்ப்பார்க்காத தூய காதல். நீங்கள் இல்லை எனில் இவன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவன் இருக்கும் வரையில் நீங்கள் இவனை பிரியக்கூடாது" என்று கூறிவிட்டு மாறாவை தடவிக் கொடுத்து ," உன் உயிர் உன்னிடம் வந்துவிட்டது எப்போதும் போல் கவனித்துக்கொள் " என்று கூறிவிட்டு சென்றார்.
நடராஜன் பால் வாங்கி வந்தான். ராகவன் மாறாவை கூப்பிட்டு பால் கொடுத்தார். மாறாவோ பாலை குடிக்காமல் ராகவனின் முகத்தையே பார்த்து சிரித்தது போல் இருந்தது.
மாறாவின் காதல்
" மனித காதல் அல்ல
உண்மையான உயிர் காதல்"
ஒருவாரம் கழித்து மீண்டும் காலை மாறாவும் ராகவனும் டீக்கடை நோக்கி வாக்கிங் புறப்பட்டனர்.
இப்போது மாறா முன்னாடி செல்லவில்லை ராகவனுக்கு பாதுகாப்பாய் அவர் பக்கத்திலேயே நடந்து வந்தது.
மாறாவின் உயிர் காதல் அவன் உயிர் இருக்கும் வரை தொடரும்.
