Gowthaman V

Horror Thriller

4  

Gowthaman V

Horror Thriller

எனக்கு பின் நீ !

எனக்கு பின் நீ !

5 mins
334


            அமிர்தன் தன் அலுவலக வேலையாக தன் காரில் சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தான். போகும் வழியில் மூங்கில் காடு வளைவுகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். மூங்கில் காட்டை நெருங்கும் போது திடீரென்று வானம் இருண்டது. மழை வர ஆரம்பித்தது. மூங்கில் காட்டை நெருங்க‌ நெருங்க மழை அதிகமாக இடியும் மின்னலும் மிரட்டின.

           வேறுவழியில்லை சேலம் சென்றே ஆக வேண்டும் அமிர்தனுக்கு. வேறுவழியில்லாமல் காரை கவனமாக செலுத்தினான். அவனுடைய பயத்திற்கு‌ காரணமும் உண்டு. ஆம்! அந்த மூங்கில் காட்டு பகுதியில் ஒரு கதை பிரபலம். 

           அந்த கதை என்னவென்றால், மாலையில் மழைக்காலத்தில் மூங்கில் காடு நோக்கி செல்லும் போது, வானம் இருண்டு, மழை இடி மின்னலுடன் பொழியுமாம். பிறகு  அந்த வழியே செல்லும் தனிநபர் வாகனங்களை வழிமறித்து ஒரு பெண் தனக்கு லிப்ட் கேட்பாளாம். பிறகு லிப்ட் கேட்டு எந்த வாகனத்தில் ஏறுகிறாளோ, அந்த வாகனத்தில் உள்ளவர்கள் அடுத்த நாள் சாலையில் இறந்து கிடப்பார்களாம். 

          இதனால் அந்த குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் போலீஸ் காவல் போட்டு இருந்தார்கள், இரவில் தனிநபர் போக்குவரத்தை தடை செய்து இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக காவல் தளர்த்தப்பட்டு இரவு, தனிநபர் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்டிருந்தான்.

         வானம் இருண்டதும், அவன் பயந்ததுக்கான காரணம் இதுதான். அப்போது தொலைவில், ஒரு கார் பிரேக் டவுன் ஆகி நிற்பதை பார்த்தான். அதன் அருகே ஒரு பெண், கொடையுடன் வெளியே நின்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள். அமிர்தனின் காரை பார்த்ததும், கொடையை கீழே போட்டுவிட்டு சாலை குறுக்கே வந்து இரு கைகளையும் அசைத்து அசைத்து லிப்ட் கேட்டாள். அமிர்தனுக்கு ஒரு பக்கம், அந்த கதை திகிலை தந்தது. இன்னொரு பக்கம், அந்த பெண், பார்க்க கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்பவள் போல உடையணிந்து மிகவும் பதற்றத்தோடும், பயத்தோடும் நின்று லிப்ட் கேட்டுக்கொண்டு இருந்தாள். ஆவி, பேய் என்ன காரோடவா வந்து லிப்ட் கேட்கும்? இவள் உண்மையிலேயே தவறி வந்து மாட்டிக்கொண்டவள் போல தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே, அந்த பெண்ணை சோதித்து வண்டியில் ஏற்றிக் கொள்ள திட்டம் போட்டு , அவள் குறுக்கே வந்தாலும் லாவகமாக அவளை தாண்டி வண்டியை செலுத்தினான். அவன் வண்டி நிறுத்தாததை கண்டு அந்த பெண் கதறினாள். 

           அவளை தாண்டி சென்ற அமிர்தன், கொஞ்சம் தூரம் சென்று காரின் கண்ணாடி வழியே பார்த்தான். அந்த பெண் நடுசாலையில் முட்டி போட்டு மழையில் நனைந்தப்படியே கதறிக்கொண்டு இருந்தாள். பரிதாபம் கொண்டு, அந்த பெண் உண்மையில் தவறி வந்து சிக்கி கொண்டவள் என்று தெரிந்து, தன் காரை நிறுத்தி பின்னோக்கி இயக்கினான்.கார் தன்னை நோக்கி பின்னோக்கி வருவதை பார்த்ததும் அவள் எழுந்து காரை நோக்கி ஓடினாள். ஓடியவள் காரை சீக்கிரம் அடைந்தாள். பின்னர் கார் கதவை தன் பலங்கொண்டு தட்டினாள். " சார்! சார்! கதவை திறந்துவிடுங்க! தயவு செய்து இந்த காட்டுல இருந்து வேறு எங்கேயாச்சும் இறக்கிவிட்டுடுங்க, ப்ளீஸ்!. இங்க இருக்கிற ஒவ்வொரு நொடியும், எனக்கு நரகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு!" என்று கதறினாள்.

              அமிர்தன் கார் கதவை திறந்து சீக்கிரம் உள்ளே வந்து அமருங்கள். நீங்கள் கூறியது போல, இங்கே நிற்கிற ஒவ்வொரு நொடியும் ஆபத்து" என்று கூறி முடிப்பதற்குள், கதவு திறந்ததுதான் உடனே உள்ளே ஏறி பின்சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் அவள். அவள் முகமெல்லாம் அவளுடைய நீளமான கூந்தல் மழையில் நனைந்து முகத்தை மூடி இருந்தது. அமிர்தன் காரின் கதவை மூடிவிட்டு காரை கிளப்பினான். "நல்ல வேளை! இப்படி இந்த இடத்துலே அதுவும் அந்த பேய் மூங்கில் காட்டுல, என் கார் என் கழுத்தை அறுக்கும்னு நினைச்சு கூட பார்க்கல. அரைமணி நேரம் இருந்ததுக்கே எனக்கு ஏதோ முள்ளு மேல் நிக்கிற மாதிரி, ஒரே பயமாக, வலி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் மட்டும் வரவில்லை என்றால் அவ்வளவுதான்! எனக்கு இதயமே நின்றிருக்கும் " என்று சற்று பயம் குறைந்தவளாய் பதற்றத்துடன் கூறினாள். அமிர்தன் கண்ணாடி வழியே அவளை பார்த்தப்படி கவனமாக காரை செலுத்திக்கொண்டு சென்றான். அவளுடைய முகம் அவனுக்கு சரியாக தெரியவில்லை. இருந்தாலும் பயத்தை வெளிக்காட்டாமல் இருந்தான்.

           சில நொடி மவுனங்களுக்கு பிறகு அமிர்தன்," ஆமா! உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு பேய், ஆவி என்றால் அவ்வளவு பயமா? அவ்வளவு பயம் இருக்கிறவர்கள், ஏன் இந்த மழைவரும் நேரத்தில் இப்படியான திகிலான காட்டுவழியே வர வேண்டும்? " என்று கேட்டான். 

           அதற்கு அவள்," என் பெயர் சல்மா. நான் கம்பெனி பிராஜெக்ட் விஷயமா சேலம் வரை போக வேண்டி வந்தது. நான் சென்னையிலிருந்து வருகிறேன். ஏற்கனவே நான் ஆவி, பேய் என்றால் அலறிக்கொண்டு ஓடுவேன். இதில் நான் உணவு அருந்தும் போது, அங்கு ஒருத்தரிடம் விசாரித்தேன், ஏதாவது குறுக்கு வழி இருக்குமா என்று. ஆனால் அவர் ஒரு பேய் கதையை சொல்லி எனக்குள் பயத்தை கிளப்பிவிட்டுட்டார். நான் அவரை நம்பாமல் வழியில் பல மக்களிடம் விசாரித்தேன். எல்லோரும் சொல்லி வைத்தார் போல ஒரே கதையை சொன்னார்கள்." என்று அந்த பிரபலமான கதையை கூறினாள் . மேலும் ," ஒரு சில நல்லவர்கள் சீக்கிரம் அந்த மூங்கில் காட்டை கடந்து போய்விடுங்கள் என்றும் கூறினர். ஆனால் என் நேரம் இப்படி மாட்டிக்கொண்டேன்" என்றாள்

           மேலும் அவள்," ஆமாம்! உங்களுக்கே இந்த இடத்தை பற்றி தெரியாதா? இந்த நேரத்தில் இப்படி வந்து சிக்கி கொண்டால் என்ன ஆகும்னு தெரியாதா? பேய், ஆவி என்றால் உங்களுக்கு பயமில்லையா?" என்று அவள் சற்று பயமுறுத்தும் கரகரப்பான குரலில் கேட்டாள்.

          அமிர்தன் சற்று பயந்துவிட்டான். பிறகு சுதாரித்துக்கொண்டவன்," நான் இந்த மாதிரி இடங்களை, அதாவது பேய், ஆவி இருக்கிறதா சொல்லப்படும் இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்து பேய், ஆவி இருப்பது உண்மையா? அதற்கு பின்னால் சொல்லப்படும் கதை உண்மையா? என்று ஆராய்ச்சி செய்பவன். ஆனால் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் போது பயமாக தான் இருக்கும், இருந்தாலும் ஒரு அசட்டு துணிச்சல் தான். இதோ இங்கே வந்துட்டேன். இந்த இடத்தை பற்றி எல்லாம் விசாரித்து விட்டேன். இன்றுடன் இது முடிவடைகிறது இன்று விட்டால் பிறகு அடுத்த மழைக்காலம் வரை காத்திருக்க வேண்டுமாம். அதான், எது நடந்தாலும் பரவாயில்லை என்று வந்துட்டேன்" என்றான்.

           அமிர்தன் தொடர்ந்தான்," உங்களுக்கு சொன்னதை போலவே பலர் என்னிடம் அதே கதையை கூறினர், ஆனால், அந்த கதை உண்மையானது அல்ல. அது பலரால் திரித்துவிடப்பட்டது. உண்மை கதையை அதில் சம்பந்தப்பட்டவரே எனக்கு கூறினார். மேலும் அந்த பேயின் போட்டோவையும் எனக்கு கொடுத்து இருக்கிறார். இப்போ கூட போட்டோவில் இருக்கும் நபரின் வீட்டிற்கு சென்று ஒரு பேட்டி எடுத்தால் இந்த ஆராய்ச்சி இதோடு முடிவடைந்துவிடும்" என்றான்.

             பின்னாடி உட்கார்ந்திருந்த அவள் கரகரப்பான குரலில்," நான் கேட்ட கதை உண்மையில்லை எனில் எது உண்மை கதை?" என்று காரின் பின்சீட்டின் மேல் ஏறி அமிர்தனின் பக்கவாட்டில் வந்து கேட்டாள். அமிர்தன் பயந்துவிட்டான். அவள் இருந்த நிலை அப்படி.இப்போது தலைமுடியை பின்னுக்கு தள்ளியிருந்தாள் ஆனால் தலைவிரிகோலமாய் மழையில் நனைந்து அவளுடைய உதட்டில் இருந்த லிப்ஸ்டிக் அழிந்து வழிந்துக்கொண்டு இரத்தம் வழிவது போல முகமே கோரமாய் காட்சியளித்தது.  

          அமிர்தன்," என்னங்க? இப்படி இந்த நடுக்காட்டில் என்னை பயமுறுத்துறீங்க! நான் இருந்ததை விட உங்களுக்கு, அந்த கதையை அறிந்துக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறதே? என்று கூறி, அந்த கதையை கூறத்தொடங்கினான்.

" இந்த மூங்கில் காட்டில் பேய், ஆவி இருப்பது உண்மைதான். ஆனால் அந்த கதை இப்போது ஆரம்பித்தது இல்லை. பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகிறது. இங்கே தவம் செய்த முனிவரை கொன்றதால் வந்த சாபத்தால் ஒரு வேட்டைக்காரனிடம் இருந்து ஆரம்பித்தது. அது எப்போதும் ஒருவரை தாக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட வருடம் வரை இந்த மூங்கில் காட்டில் சுத்துமாம். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம், திதி வருகிற மழைக்கால நாளில் இந்த காட்டுவழியே வரும் தனிநபரை கொன்றால் தான் அந்த பேய் தன் அரூப உருவத்தை துறந்து விண்ணுலகம் அடையுமாம். ஆனால் கொன்றவனுக்கு விண்ணுலகம், கொல்லப்பட்டவனுக்கு பேய் உருவம் வந்து விடுமாம். மீண்டும் அதே திதி, நட்சத்திரம் கூடும் மழைக்கால வேளையில் இந்த வழி வரும் தனிநபரை குறிவைத்து அந்த பேய் தாக்கி அது விண்ணுலகம் அடையும் கொல்லப்பட்டவர் பேயாக அலைவர். இதுதான் காலம் காலமாக நடப்பது. கடந்த பல வருடங்களாக இறந்தவர்களின் போட்டோவை சேகரித்துள்ளேன். அதில் கடைசியாக இறந்தவரின் போட்டோவும் அடங்கும். இதோ பாருங்கள்," என்று கூறி பல போட்டோக்களை வரிசையாக‌ ஆண்டுவாரியாக இறந்தவர்களின் போட்டோவை கொடுத்துவிட்டு தொடரந்து பேசினான்.

           " கடைசியாக இறந்த நபரின் போட்டோ என்னிடம் இருப்பதால் நீங்கள் அந்த பேய் இல்லை என்பதாலேயே நான் உங்களை காருக்குள் ஏற அனுமதித்தேன். உங்களுக்கு தெரியுமா அந்த போட்டோவில் இறந்தவர் எல்லாம் ஒரே திதி, ஒரே நட்சத்திரம் கூடிய மழைக்காலம் இன்றும் அதே திதி, நட்சத்திரம் கூடிய மழைக்கால வேளை தான்." என்று சொல்லிக்கொண்டு, தன் காரை மூங்கில் காடு முடிய ஒரு 500 மீட்டர் இருக்கும்போதே நிறுத்தினான். பிறகு மெதுவாக திரும்பி பார்த்தான்.

          இதற்கிடையில் அந்த போட்டோக்களை வாங்கி பார்த்துக்கொண்டு வந்தவள் கடைசியாக பார்த்த போட்டோ உச்சக்கட்ட பயத்தை தந்தது. ஆம்! அதில் இருந்தது அவளுக்கு லிப்ட் கொடுத்த அமிர்தனின் போட்டோ தான். அதே உச்சக்கட்ட பயத்தோடு உடல் நடுங்கியப்படி கார் நின்றதை உணர்ந்து மேலே நிமிர்ந்தவள், அப்படியே எதிரே அமிர்தனின் பேய் உருவத்தை கண்டு காடே கேட்கும்படி அலறினாள். அவ்வளவுதான் அனைத்தும் இருண்டது. 

         பிறகு பல மாதங்கள் கடந்து இன்று! 

        அதே திதி அதே நட்சத்திரம் கூடிய மழைக்கால வேளை!

        சல்மா தன் அலுவலக வேலையாக மூங்கில் காட்டின் வழியே சென்று கொண்டு இருந்தாள்....

        

           

            



Rate this content
Log in

Similar tamil story from Horror