STORYMIRROR

Gowthaman Vinayagasundaram

Classics Others

4  

Gowthaman Vinayagasundaram

Classics Others

காதல் இல்லாதோர் இல்லை

காதல் இல்லாதோர் இல்லை

9 mins
431


            ராக்கி அந்த பெரிய பங்களா வீட்டில் தத்துபிள்ளையாய் வளர்ந்தவன். மிகவும் அழகாக இருந்தான். அவனுடைய தந்தை ஒரு டாக்டர், தாயார் வீட்டை நிர்வகிப்பவர். அவனுடைய அண்ணன் கிஷோர், இப்போதுதான் காதல் அரும்பும் வயது.ராக்கியின் மேல் அனைவரும் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பமே அல்லோல்பட்டுவிடும். அந்த அளவிற்கு ராக்கியின் மேல் அவர்களின் பாசம் அளவு கடந்து இருந்தது.

              ராக்கி தன் தந்தையுடன் காலையிலும், அண்ணனுடன் தினமும் மாலையிலும் வாக்கிங் என்ற பெயரில் ஜாலியாக வெளியே சென்று வருவது வழக்கம். ராக்கி தன் தாயையும் கொஞ்சி கேட்பான் கூட வர வேண்டும் என்று. ஆனால் தாய் அவனுக்கு தினமும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அனுப்பி வைப்பாள். ராக்கி அந்த சுற்றுவட்டாரத்திடமும் மிகவும் அன்பு செலுத்தியதால் அனைவரிடமும் அவனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.

              ராக்கி வாலிப வயதை அடைந்தாலும் தினமும் வாக்கிங் தன் தந்தையுடனும் அண்ணனுடனும் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

             வாழ்க்கை ராக்கிக்கு அழகாக சென்று கொண்டு இருந்தது. ராக்கிக்கு அந்த சுற்றுவட்டாரம் பரீட்சியம் என்பதால் அவனுடைய தந்தை ராக்கியை அந்த சுற்று வட்டாரத்தில் எங்கு வேண்டுமானாலும் பத்திரமாக சென்று வர அனுமதி தந்து இருந்தார். சுற்று வட்டார மக்களும் ராக்கியின் அன்பான குணத்திற்கும் அவனுடைய அன்பிலும் மகிழ்ந்து அவன் வீடு திரும்பும் வரை அவன் மேல் அக்கறையுடன் இருப்பர்.

              ஒருநாள் ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டிருப்பதை பார்த்து கோபம் கொண்டவனாய் அந்த பையனை விரட்டி அடித்தான் மக்களும் ராக்கிக்கு ஆதரவாய் அந்த தவறு செய்த பையனை கண்டித்து அனுப்பி வைத்தனர்.அன்றிலிருந்து மக்களுக்கு ராக்கியின் மேலிருந்த அன்பு பலமடங்கானது. இந்த செய்தியை கேட்டு ராக்கியின் குடும்பமே அவனை நினைத்து பூரிப்பு அடைந்தனர்.

              ஒருநாள் ராக்கி காலையில், தன் தந்தையுடன் வாக்கிங் சென்ற போது ரோஸியை பார்த்தான். ரோஸி தன் அக்காளுடன் வாக்கிங் வந்து இருந்தாள். கண்டதும் காதல் அரும்பியது, இதயம் படபடவென்று பட்டாம்பூச்சியாய் துடித்தது, இவ்வளவு நாள் அவளை பார்த்ததில்லையே இவள் எங்கிருந்து வருகிறாள் என்று எண்ணினான் ராக்கி. இருந்தாலும் தந்தையுடன் செல்வதால் அடக்கி வாசித்தான். 

             ரோஸியும் ராக்கியின் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி புதிதாய் தன் குடும்பத்தினருடன் வீடு வாங்கி குடி வந்து இருக்கிறாள். ராக்கிக்கு அவன் குடும்பம் எப்படியோ, ரோஸிக்கு அவள் குடும்பமும் அப்படிதான். 

            ரோஸியும் ராக்கியை பார்த்து பார்க்காத மாதிரி சென்றிருந்தாலும் ராக்கியிடம் மனதை பறிகொடுத்துவிட்டாள். பெண்கள் குணமே அதுதான! ஆனால் ராக்கியை திரும்ப எப்ப பார்ப்போம் என்றிருந்தாள்.

            ராக்கி அங்கே ரோஸி நினைப்பாகவே மற்ற எதிலும் கவனம் இல்லாதவனாய் இருந்தான். அதை அவன் அண்ணன் கண்டுபிடித்துவிட்டான். ராக்கியிடம் வந்து என்ன ஏது என்று கேட்டான், தலை கோதியப்படி. ராக்கி இன்னும் காதல் உலகத்திலேயே மிதந்துக்கொண்டு இருந்தான். அவனுடைய அண்ணன் அவனை உசுப்பி விட்டான். அப்போதுதான் ராக்கி சுயநினைவிற்கு வந்து பேந்த பேந்த முழித்தான். 

              மாலை நேரமும் வந்தது. அதற்குதான் காத்திருந்தது போல வாக்கிங் போக ரெடியானான் ராக்கி.அவன் அண்ணனும்‌ ,"என்ன இவன் இன்றைக்கு வேறுமாதிரி நடந்துக்கொள்கிறான்.இதை கண்டுப்பிடித்தே ஆக வேண்டும்"என்று ராக்கியுடன் கிளம்பினார்.

            ராக்கி விழிகள் ரோஸியை தேடியப்படியே அண்ணனுடன் சென்றது. ஒரு தெருமுனையில் மனதிற்குள் மணி அடித்தது, பட்சிகள் பறந்தன,"ஆஹா! நம்ம ஆள் பக்கத்துல தான் இருக்கா",என்று மனது பரப்பரத்தது. கொஞ்சம் தூரத்தில் ரோஸி தன் தாயாருடன் வந்து இருந்தாள்.உடனே ராக்கிக்கு கோடி பட்டாம்பூச்சிகள் இவன் உலகத்தில் பறந்தன.

            அந்த பக்கம் ரோஸிக்கும் காதல் அலை மோதியது. என்னதான் பக்கத்தில் அம்மா இருந்தாலும், கண்கள் காதல் மொழி பேசியது. ராக்கிக்கோ ரோஸி பச்சை கொடி காண்பித்தது வானத்தில் சிறகடித்து பறப்பது போல் இருந்தது. 

          ரோஸி யின் அம்மா ஒன்றை கவனித்தார். அது, அங்கிருந்த அனைவரும் ராக்கியை மரியாதையுடன் நடத்துவதை தான்.உடனே அதை பற்றி ஒரு கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் ராக்கியின் பராக்கிரமங்களையும் ராக்கி சிறு வயது முதல் தற்போது வரை தங்கள் மீது காட்டும் அன்பையும் அவர்கள் ராக்கி யின் மேல் வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதையையும் விவரித்தார். ரோஸியின் அம்மாவிற்கு வியப்பு.உடனே தன் குடும்பத்தை ராக்கியிடம் அறிமுகம் செய்ய அவன் அண்ணனை நோக்கி நடந்தார்.

         இதற்கிடையில் ராக்கி வச்ச கண் வாங்காமல், சுற்றி என்ன நடக்கிறது பக்கத்தில் அண்ணன் உள்ளான் என்று கூட நினைக்காமல் கண்களில் காதல் வழிய காதல் உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான். ராக்கியின் அண்ணனோ ,"தம்பி! இன்று நீ இப்படி இருப்பதற்கு இதுதான் காரணமா? பார்த்துடா அவிங்க அம்மா பார்த்தா கோபக்காரங்க மாதிரி இருக்கு"என்று ராக்கியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே," தம்பி! என் பெயர் வசந்தா! இவ பெயர் ரோஸி! நாங்க புதுசா இரண்டு தெரு தள்ளி வீடு வாங்கி குடி வந்து இருக்கோம். உன் தம்பி ராக்கியை பற்றி சுற்றி இருப்பவர்களிடம் பெருமையாக கேள்விப்பட்டேன். அதான் உங்களிடம் ஒரு அறிமுகம் செய்துக்கொள்ளலாம் என்று வந்தேன்"என்றார்.

         "அப்படியா ஆண்டி!வெல்கம் டு அவர் ஏரியா! ரொம்ப சந்தோஷம்! என் பெயர்‌ கிஷோர் இவன் தான் என் தம்பி ராக்கி! ராக்கி இவங்க வசந்தா ஆண்டி அவங்க பொண்ணு ரோஸிடா, ரோஸி!" என்றான். ராக்கியோ காதல் அலைகளில் மிதந்துக்கொண்டு இருந்தான். சும்மா பெயருக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பழையபடி காதலில் மிதந்தான். ரோஸி! ஆஹா! என்ன பொருத்தம்! ராக்கி- ரோஸி சும்மா அள்ளுவது என்று மனதில் காதல் அலை அடித்தது. 

          ரோஸியும் தன்னுடைய வெட்கத்தை எல்லாம் ராக்கியிடம் அடகு வைத்தாள். அவளின் கண்கள் காதல் அம்புகளை எய்துக்கொண்டு இருந்தது. அதில் ராக்கி சுற்றி இருப்பவர்களை மறந்து அந்த அம்புகள் அவனின் இதயத்தை பதம் பார்ப்பதை உணர்ந்தவனாய் காதல் ரசம் சொட்ட சொட்ட ரோஸியிடம் அடிமையானான். இதை கவனித்த அவன் அண்ணன் இதற்கு மேல் தாங்காது என்று எண்ணி " ஆண்டி வீட்டிற்கு திரும்ப நேரம் ஆயிடுச்சு காலை அப்பா தினமும் தம்பியுடன் வருவார் நான் மாலை வருவேன்" என்று ரோஸிக்கு ஹிண்ட் தந்தான். 

         ராக்கி உடனே," அப்பா புண்ணியவானே! நல்லாயிருப்ப அவளிடம் நான் சொல்ல நினைத்தை நீ சொல்லிவிட்டாய்" என்று மனதிற்குள் அண்ணனுக்கு ஆயிரம் நன்றி சொன்னான். ரோஸியின் அம்மாவோ,"என் பொண்ணு ரேஷ்மாதான் அவ தங்கச்சியுடன் வருவாள். இன்று அவளுக்கு உடம்பு சரியில்லை அதான் நான் வந்தேன்" என்றார்.

         உடனே கிஷோர் ராக்கியை பார்த்து கண்ணடித்தான். உடனே ராக்கி," டேய்," எனக்கு ரோஸியை செட்டப் பண்ணிட்டு நீ அவ அக்காகிட்ட போ" என்பது போல பார்த்தான். கிஷோர் உடனே சுதாரித்தவனாய," ஆண்டி! சரிங்க நாங்க கிளமபுறோம். முடிஞ்சா நாளை பார்க்கலாம்" என்று கூறி விடைப்பெற்றான்.

         ரோஸியும் ராக்கியும் எதிர் எதிர் திசையில் சென்றனர்.ஆனால் ராக்கியோ ரோஸியை பார்த்தவாறு பின்னோக்கி நடந்தான். அதை பார்த்த ரோஸியோ அழகாய் கண்களில் காதலை உதிர்த்து தன் அன்னையுடன் ஆவல் இருந்தாலும் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.என்ன இருந்தாலும் பெண் தானே அச்சம்.மடம், நாணம், பயிர்ப்பு இருக்கும் தானே!

         இங்கே ராக்கி பின்னால் நடப்பதை பார்த்தே கிஷோர்," டேய் தம்பி! மானத்தை வாங்காதடா! எல்லோரும் பார்க்கிறார்கள்! நீ அப்பாவோடு வரும் போது அவளை‌ ஒரு வேளை பார்க்கலாம் அதுவரை அடக்கி வாசிடா! இப்படி எல்லாம் பண்ண அண்ணனுக்கு அவ அக்காவ பார்க்க கூட முடியாம போயிடும்" என்றான்.

        அதுவரை காதல் போதையில் பின்னால் நடந்து வந்த ராக்கி இதை கேட்டவுடன் ஒரு கணம் திகைத்து நின்றான். கிஷோரோ என்னடா என்றான்! ராக்கியோ," அடப்பாவி! என் ஆசையில் மண் அள்ளி போட்டுற போறடா! முதல்ல எனக்கு ரோஸி அப்புறம் தான் உனக்கு அவ அக்கா" என்பது போல முறைத்ததை உணர்ந்தவனாய் கிஷோர்," சரி!சரி! முறைக்காதே, உனக்கு ரோஸி அப்புறம் தான்‌ எனக்கு அவ அக்கா" என்று தலையில் அடித்துக்கொண்டான்.

         நல்ல அண்ணன் நல்ல தம்பி விளங்கிடும்! என்று நினைக்க தோன்றுதல்லவா! 

         இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். என்ன தான் ரோஸியின் காதல் அலைகளில் மிதந்து கொண்டு இருந்தாலும், ராக்கி அவன் தாயின் முத்தத்தை மிஸ் பண்ணவில்லை, போகும் போதும் சரி வந்த பிறகும் சரி அம்மாவின் அன்பை பெற்று முத்தம் வாங்கி கொண்டான். என்ன ஆனாலும் தாய் அல்லவா!

        இங்கே எப்படி ராக்கியோ அங்கே இவனை போலவே ரோஸியும் தன்‌ குடும்பத்தின் அன்பின் சமரசம் செய்யவில்லை ராக்கியின் காதலால்.

        அடுத்த நாள்‌ காலையில் ராக்கி அவன் தந்தைக்கு முன்னாடி ரெடியாகி வாக்கிங் போக தயாராக இருந்தான். அப்போதும் கூட தாயின் முத்தத்தை மறக்கவில்லை. என்ன இருந்தாலும் தாயின் காதலே அனைவரும் உணர்ந்த முதல் காதல் அல்லவா!

        பெரிய எதிர்ப்பார்ப்பில் தந்தையுடன் வழக்கம் போல ஜாலியாக சென்றான். அவன் தந்தையோ ராக்கி வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக இருப்பதை உணர்ந்தார். வாக்கிங் சென்றவர்கள் வீடு திரும்பும் நேரமும் வந்துவிட்டது. ஆனால் ரோஸியை காணவில்லை. ராக்கிக்கு ஒரே குழப்பம் கூடவே வருத்தமும் தொற்றியது. 

        அப்பாவுடன் வீடு திரும்பினான். அவன் தந்தை, காலையில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை அவனிடம் என்பதை உணர்ந்தார். ராக்கியிடம்," டேய் ராக்கி என்ன ஆச்சு"என்று கேட்டார். ராக்கி ஒன்றுமில்லை என்பது போல சகஜமாக வீடு நோக்கி நடந்தான். ஆனால் முகத்தில் சந்தோஷம் இல்லை.அதை அவன் தந்தையும் கவனித்தார்.

        வீடு வந்தவுடன் வழக்கம் போல் அம்மாவின் முத்தத்தை வாங்கி கொண்டான். போய் அவன் ரூம்மில் தனியாக படுத்துக்கொண்டான். அவன் தந்தை கிஷோரை கூப்பிட்டு விசாரித்தார். கிஷோர் நடந்த அனைத்தையும் சொன்னான். 

        அவன் தந்தைக்கோ ஆச்சரியம்! ராக்கியா இப்படி என்று? தாயோ," என் பிள்ளைக்கு காதல் வந்து விட்டது அவன் சந்தோஷமே நம் சந்தோஷம்" என்றாள். ராக்கியின் தந்தையோ," எங்களுக்கு மட்டும் என்ன? அவனை கஷ்டப்படுத்தி பார்க்க ஆசையா? நாளையே நாம் அந்த ரோஸி வீட்டிற்கு சென்று பெண் கேட்போம்" என்றார். மேலும் "இது ராக்கிக்கு தெரிய வேண்டாம் அவனுக்கு இது ஒரு பிறந்த நாள் பரிசாக தருவோம்" என்றார்.

        ராக்கியின் தாயாரோ," ஆமாம்! ராக்கியின் பிறந்த நாள் அடுத்த இரண்டு வாரங்களில் வருகிறது" என்றார்.

        இது எதுவும் தெரியாமல் ராக்கி கவலையாய் படுத்துக்கொண்டு இருந்தான் அவன் ரூம்மில்.

        அவன் அண்ணன் விடுவானா? உயிருக்கு உயிரான தம்பி இப்படி இருப்பதை பார்த்து. நடந்த அனைத்தையும் ராக்கியிடம் கூறிவிட்டான். அவ்வளவுதான் இருந்த கவலை எல்லாம் மறந்து போய் காதல் வானில் பறக்க ஆரம்பித்துவிட்டான் ராக்கி.

        மாலை ஆக இன்னும் நேரம் இருந்தது. ஆனால் ராக்கிக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை. வெளியே போகலாம் என்று எழுந்தவனை அவன் அம்மா," ராக்கி! இன்னைக்கு வெளியே போக வேண்டாம் கண்ணு! மாலை அண்ணனுடன் சென்று வா! இப்போ அம்மாவிற்கு வந்து உதவி செய்" என்றாள். அம்மாவின் காதல் தானே முதலில்.அதனால் மாலை பார்த்துக்கலாம் அதுவரை அம்மாவுக்கு உதவியாய் இருப்போம்! டைம் போறதே தெரியாது! என்று அம்மாவிடம் சென்று முத்தமிட்டான்.

         அவன் நினைத்தது போலவே நேரம் சீக்கிரம் சென்றது.மாலை வந்தது ராக்கி சுறுசுறுப்பானான். கிஷோரோ," எனக்கு உடம்பு சரியில்லை நாளை போகலாம்" என்றான். ராக்கி அருகில் வந்து பார்த்துவிட்டு," பொய்யாடா சொல்ற! வா எழு போகலாம்" என்று இழுத்தான்."சரி!சரி! சும்மா சொன்னேன். வரேன் வரேன்" என்றவன்,கிளம்பினான்.

         அம்மாவிடம் முத்தம் வாங்கி கொண்டான். பிறகு வானில் பறக்கும பட்டாம்பூச்சியை போல சிறகடித்து பறந்தான்.

          இறைவன் எப்போதும் என்ன சந்தோஷத்தை மட்டுமேவா தருவார் அதுவும் இதுவரை துன்பத்தையே அனுபவித்திராத ராக்கி மட்டும் விதிவிலக்கா என்ன?

          வாக்கிங் வந்தவர்கள் அங்கே கூட்டமாய் மக்கள் நின்று கொண்டு இருப்பதை கவனித்தார்கள். ரோஸியை கூட்டத்தில் தேடினான் ராக்கி, அவள் இல்லை. என்ன ஏது என்று கிஷோர் அங்கிருந்தவரிடம் கேட்டுக்கொண்டு இருந்தார். அதற்குள் ராக்கி கூட்டத்திற்குள் நுழைந்தான்.

           அங்கு அவன் கண்ட காட்சி அவன் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. ஆம்! அங்கு ரோஸியின் அக்கா ரேஷ்மா ரோஸியை ரத்த வெள்ளத்தில் மடியில் போட்டு கதறிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த ராக்கியோ காதல் வலியை தாங்காமல் கதறினான் ஆரம்பித்தான் சுற்றி சுற்றி வந்து அழுதான். தன் காதலை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த தவறி இன்று துன்பத்தில் தன் காதலை வெளிப்படுத்தினான். ரேஷ்மாவிற்கு அப்போதுதான் புரிந்தது, ரோஸி இன்று ஏன் தன்னை வலுக்கட்டாயமாக வாக்கிங் போக அழைத்தாள் என்று.

            ஆம் ரோஸி ராக்கியின் மேல் உள்ள காதலால் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தன் அக்காவை வலுக்கட்டாயமாக சீக்கிரமாகவே வாக்கிங் கூட்டி வந்தாள். வந்த இடத்தில் ராக்கியை தேடியபடி அக்காவை விட மூன்று அடி முன்னதாக சென்றாள். சென்றவள் சாலையை கடக்கும்போது காரை கவனிக்காமல் அடிப்பட்டாள். ரத்த வெள்ளத்தில் துடித்தாள்.

          இதனை கண்ட அவள் அக்கா ரேஷ்மா ரோஸியை மடியில் கிடத்தி கதறி அழுதால் துடித்தாள். 

            ராக்கியின் அலறல் கதறல் கேட்டு அங்கு விசாரித்துக்கொண்டு இருந்தவன் பதறியடித்து ஓடி வந்தான். வந்தவன் அங்கு ராக்கி ரோஸியை சுற்றி சுற்றி வந்து அவளை எழுப்ப முயற்சித்து முயற்சித்து அழுது புரண்டுக்கொண்டு இருந்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் கொட்டியது.

            இதை பார்த்த அனைவருக்கும் அன்று ராக்கி ஏன் பின்னோக்கி நடந்தான். அவன் ஏன் அன்று தங்களிடம் முகம் கொடுத்து பேசாமல் ரோஸியின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான் என்பதை உணர்ந்தனர். ராக்கியின் காதல் அனைவரின் கண்களிலும் நீர் வார்த்தது.ராக்கிக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.

            அப்போது ரோஸியின் உடம்பில் சின்னதாய் அசைவு, உடனே ராக்கி கிஷோரை பார்த்தான். கிஷோர் புரிந்தவனாய் ரோஸியை வாரி அணைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடினான். ஆம் அவன் தந்தை மருத்துவர் அல்லவா!

          மூச்சிறைக்க ஓடியவன், ராக்கி கால்நடை மருத்துவமனையின் உள்ளே ஓடினான். 

           இன்னுமா புரியவில்லை ரோஸியும் ராக்கியும் வீட்டில் வளர்க்கும் நாய்கள். 

           ஒரு சின்ன பிளாஷ்பேக்.

          கிஷோர் சின்ன வயதில் நடக்கமுடியாத குழந்தையாய் பிறந்தான்.அதனால் அவன் ஆசைப்பட்டு கேட்டதை எல்லாம் வாங்கி தந்தனர் அவனின் அப்பா அம்மா. அவன் பிரியப்பட்டு கேட்டதில், தெருவில் போகும் போது அவனிடம் வந்து விளையாடிய நாய்க்குட்டி ராக்கியும் ஒன்று. நாளடைவில் ராக்கியின் சுட்டித்தனத்தாலும் அன்பினாலும் நடக்க முடியாத கிஷோர் நடக்க ஆரம்பித்தான். ஓடினான் விளையாடினான். 

          ராக்கியின் வருகை தன் மகன் சரியாகி விட்டதை உணர்ந்தனர் கிஷோரின் பெற்றோர். ஆரம்பம் முதலே ராக்கியை தம்பி ராக்கி என்றுதான் அழைத்தான். ராக்கி அவர்களின் சின்ன பிள்ளை ஆனான். ராக்கியும் அவர்களின் செல்ல பிள்ளையாக சமத்து பிள்ளையாகவே வளர்ந்தான்.

            ராக்கியின் மேலுள்ள அன்பால் காதலால் தன் கால்நடை மருத்துவமனைக்கு ராக்கி கால்நடை மருத்துவமனை என்றே பெயர் வைத்தார் கிஷோரின் தந்தை.ஆம் ராக்கியின் தந்தை ஒரு கால்நடை மருத்துவர். பின்ன ராக்கியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள இதை விட வேறு தகுதி வேண்டுமா என்ன?

           சரி! மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவோம்

           ரோஸியை எடுத்துக்கொண்டு கிஷோர் ஓடி வருவதையும் அவனுக்கு முன்னால் கண்களில் கண்ணீர் வடிய ராக்கி வருவதையும் பார்த்து திகைத்து நின்றார் ராக்கியின் தந்தை. 

            தங்களை இதுநாள்வரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ராக்கி இன்று உருக்குலைந்து கண்ணீரும் கவலையுமாய் அழுவதை கண்டு அவரின் மனம் கணத்தது. மேலும் தன் மகனின் காதலை எண்ணி பெருமைக்கொண்டார்.

ராக்கி," கவலைப்படாதே! என் உயிரை தந்தாவது உனக்கு உன் காதலியை திருப்பி தருகிறேன்" என்று கூறியவர் சிறிதும் தாமதிக்காமல் ரோஸிக்கு சிகிச்சை அளிக்க உள்ளே சென்றார். ஒரு அரைமணிநேரம் கழித்து வந்தவர், நேராக கண்களில் கண்ணீர் வழிய நின்ற ராக்கியிடம்," ரோஸிக்கு ஒரு சிறிய ஆப்ரேஷன் செய்யனும்.கவலைப்படாதே அவளுக்கு ஆயுசு கெட்டி. உன் காதலை , அன்பை அனுபவிக்காமல் அவள் சாக மாட்டாள். அவளை சரியான நேரத்தில் கொண்டு வந்துட்டான் உன் கிஷோர். கூடிய விரைவில் உன் ரோஸி உன்னிடம் வருவாள்" என்று கூறியவர் உடனடியாக ஆப்ரேஷனுக்கு ஆக வேண்டியதை தயார் செய்ய உள்ளே சென்றார்.

             இதற்கிடையே ரோஸிக்கு இப்படி நடந்ததை எண்ணி அழுதுக்கொண்டு இருந்தாள் ரேஷ்மா. கிஷோர் அவளிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறி , எல்லாம் சரியாகி விடும் கவலைப்படாதீர்கள் என்று தேற்றினான். கூடவே அவளின் பெற்றோர் தகவல் அறிந்து வந்திருந்தனர்.

           ராக்கி ஓடி வந்து கிஷோரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். கிஷோரும்," டேய் தம்பி அழாதே! அப்பா கண்டிப்பாக ரோஸியை உனக்கு திருப்பி தருவார்" என்றான்.

          ராக்கி அந்த சூழ்நிலையிலும் தன் தாயின் காதல் முத்தத்தை பெற துடித்தான். 

           அதை தெரிந்தோ என்னவோ அவன் தாய் அங்கு வந்து நின்றார். ராக்கியை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

          தாயின் முத்தம் அவனை கொஞ்சம் சீராக்கியது.

          ராக்கியின் காதலை இறைவன் ஏற்றுக்கொண்டுவிட்டார் போலும்! ஆம்! ரோஸிக்கு வெற்றிக்கரமாக ஆப்ரேஷன் முடிந்தது.

         அன்றும் அடுத்த நாளும் டாக்டர் கவனிப்பில் இருந்தாள் ரோஸி.

         வெளியில் வாக்கிங் மறந்து கிஷோரும் ராக்கியும் காவல் காத்தனர் ரோஸியின் பெற்றோருடன்.

          ராக்கி அயர்ந்து தூங்கிவிட்டான். அவனை எழுப்ப சென்ற கிஷோரை அவன் தந்தை தடுத்து ராக்கியை தூக்கி கொண்டு போய் ரோஸியின் பக்கத்தில் படுக்க வைத்தார்.

         ரோஸியின் பெற்றோர் என்ன நடக்கிறது என்பது போல் பார்ப்பதை பார்த்த கிஷோரின் தந்தையும் ரேஷ்மாவும் நடந்ததை எல்லாம் விவரித்தனர். கூடவே ராக்கிக்கு ரோஸியை திருமணம் செய்து வைக்க சம்மதம் கேட்டார். ரோஸியின் பெற்றோரும் ராக்கியின் உன்னதமான காதலை ஏற்று சம்மதித்தனர்.

         உள்ளே, தூங்கிய ராக்கிக்கு கனவு வந்தது. அங்கு தன்னை சுற்றி ஒரே சோலைவனமும் ஆங்காங்கே பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன, பறவைகள் சத்தம் இனிமையாய் இருந்தது அங்கு உட்கார்ந்து இருந்தவனின் தோளில் ஒரு கை அணைத்தது. அது வேறு யாருமில்லை தன் உயிருக்கே உயிரான காதல் ரோஸி தான்.திடுக்கிட்டு எழுந்தவன் பெட்டில் இருப்பதை உணர்ந்தான் அப்போது உண்மையிலேயே அவனை ஒரு கை அணைத்து இருந்தது அது வேறு யாருமில்லை ரோஸி தான்.

          அதுவரை அவளுக்காக ஏங்கியவன் அழுதவன் அவளின் கை பட்டவுடன் அவன் இதயம் படபடக்க ஆரம்பித்தது அவனின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன. அதற்குள் சுதாரித்தவன் ரோஸிக்கு ஒரு முத்தம் தந்தான். அந்த நிலையிலும் அழகாக வெட்கப்பட்டாள் ரோஸி.

          அங்கே இதை பார்த்தவர்களாய் நின்ற கிஷோர் ரேஷ்மாவிடம் தனுடைய காதலையும் சொன்னான். கிஷோரின் குடும்பத்தை போன்ற குடும்பம் இவ்வுலகில் சல்லடை போட்டாலும் கிடைக்காது என்பதாலும் தன் ரோஸியை காப்பாற்ற கிஷோர் செய்ததை எல்லாம் நினைத்து கிஷோரிடம் ஏற்கனவே தன் மனதை பறிக்கொடுத்து இருந்தாள் ரேஷ்மா, அதை அவள் பெற்றோருக்கும் சொல்லி இருந்தாள். 

           கிஷோர் தன் காதலை வெளிப்படுத்தியவுடன் ரேஷ்மா கிஷோரை கட்டியணைத்துக்கொண்டாள். இதை பார்த்த ராக்கி சந்தோஷத்தில் ஊளையிட்டான் கூடவே ரோஸியும்.

           மூன்று மாதங்கள் கழித்து 

ராக்கி-ரோஸி

கிஷோர்- ரேஷ்மா

திருமணம் அந்த ஊரே மெச்சும்படி நடந்து முடிந்தது.

           ரேஷ்மாவின் குடும்பமும் கிஷோர் வீட்டிற்கே வந்து குடியேறினர்.இனி அனைவரும் ஒன்று.

           ராக்கியின் உண்மையான அன்பு காதல் பல அதிசயங்களை நிகழ்த்தி ஒரு காதலையும் உருவாக்கியது.

          இன்றளவும் ராக்கி எதை மறந்தாலும் தன் தாயின் காதல் முத்தத்தை மறக்க மாட்டான்.

          அன்று காலை வழக்கம்போல் முத்தத்தை வாங்கி கொண்டு தந்தையுடன் வாக்கிங் செல்ல தயாராகினர், இம்முறை தம்பதிகளாக ராக்கியும்- ரோஸியும். வழியெங்கும் மக்கள் இவர்களின் காதல் வாழ்க என்று மலர் தூவி வாழ்த்தினர். ராக்கியும் அன்புடன் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தான் தன் காதல் மனைவியுடன்.

          மாலையும் வருவான் வாக்கிங் கிஷோர்- ரேஷ்மாவுடன். 

      

          காதல் என்பது இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். காதலுக்கு வேறுபாடு கிடையாது. 

          காதல் என்றுமே காதல் தான். இவ்வுலகில்

காதல் இல்லாதோர் இல்லை....

          


Rate this content
Log in

Similar tamil story from Classics