Siva Kamal

Comedy Drama

4.3  

Siva Kamal

Comedy Drama

பிரமை

பிரமை

5 mins
266


புத்தகத்தை தூக்கி எறிந்தான்.


அவ்வளவுதான் . இனிமேல் படிக்க முடியாது ஆபிஸ் நினைப்பு வந்திருச்சு . என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி ,எங்கே உட்கார்ந்திருந்தாலும் சரி , யாரோட இருந்தாலும் சரி , ஆயிஸைப்பற்றி நினைப்பு வந்துட்டா போச்சு . அவனால் அப்புறம் எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது . கொஞ்ச நாளாகத்தான் இப்படி . நண்பர்களோடு உற்சாகமாகப் பேசியபடி பேக்கரியில் உட்கார்ந்திருப்பான் . பேச்சின் போக்கில் எங்காவது ஆபீஸ் நினைவு வந்துவிடும் . போச்சு , அப்புறம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்து விடுவான் . 'திடும் திடும் ' என கிணற்றில் ஆட்கள் குதிக்கிற மாதிரி ஒரு சத்தம் மனசுக்குள் கேட்கும் . சமயத்தில் லேசாய் நெஞ்சை வலிக்கும் .


வீட்டில் உட்கார்ந்து எவளையாவது நினைத்து உருகிக் கொண்டிருப்பான்.பால்யத்து நினைவுகளில் ஆழ்ந்து போயிருப்பான் . திடீரென கிணற்றில் ஒரு கல்விழும் -திடுமென ஆபிஸ் . அப்புறம் தொடர்ந்து ' திடும் திடும்' தான் !


இப்போதும் அப்படித்தான் . இனிமேல் படிக்க முடியாது . ஏன் தான் இப்படி ஆகிறது ? எப்போதிருந்து இப்படி ஆனது ? என்று இவனுக்குப் புரியவில்லை ஒவ்வொரு முறையும் யோசித்துப் பார்க்கும்போதும் ஆபிஸ் மேனேஜர் தான் கடைசியில் நிற்பார் . அந்த ஆள் கூட தகராறு பண்ணின நாளில் இருந்துதான் இப்படி ஆச்சோ என்று தோன்றும் .


அதுகூட இவனாக வேண்டுமென்று இழுத்த தகராறில்லை . இந்த மேனேஜர் வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாகத்தான் நடந்து கொண்டார் . வேலை பார்க்கிற யாரையும் மனுஷனாகவே மதிக்கிறதில்லை ஒவ்வொருத்தரையும் அவன் வீட்டு சேவகனாகத்தான் நினைத்துக் கொண்டான் . ஒரு மட்டு மரியாதை இல்லாமத்தான் பேசுவது . ஆபிஸ்லேயே சீனியர் கோபால்சாமி , அவரைக்கூட " என்ன மிஸ்டர் " என்று தான் கூப்பிடுவது . லேபர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் . " ஏய் . . வா . . . போ " தான் .


எல்லாரும் மனசில் கறுவிக்கொண்டுதான் இருந்தார்கள் . அவன் சிகரெட்டை பிடித்துக் கொண்டு விடைத்த மூக்கோடு அலட்சியமாய் யாரையும் பார்க்கிற பார்வை , நினைத்தாலே பற்றிக் கொண்டு வரும்.


கேண்டீனிலோ டைம் ஆபிஸிலோ நாலு பேர் சேர்ந்துவிட்டால் போதும் மேனேஜர் புராணம் தான் .


" இவனெல்லாம் என்னய்யா மனுஷன் "


“ அவனும் அவன் மண்டையும் தீயை வைக்க "


" இவனையெல்லாம் செருப்பைக் கொண்டே அடிக்கணுமுய்யா "


" குஷ்டம் வந்து தான் சாவான் "


இப்படியாக தங்கள் ஆசைகளை பரஸ்பரம் வெளியிட்டுக் கொள்வார்கள் . அனால் அபீசுக்குள்ளே நுழைந்து விட்டால் மூச்சுக்காட்ட மாட்டார்கள் ! ஹி.... என்று மேனேஜரிடம் பல்லை இளித்துக்கொண்டு

நிற்பார்கள் . இவனுக்குப் பற்றிக்கொண்டு வரும். முதுகெலும்பில்லாத பிராணிகள்.


அன்றைக்கு இவனுடைய வீரத்தையும் இளமை வேகத்தையும் காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது . இவனுடைய பிரிவிலிருந்து ஒரு ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டியிருந்தது . போன மாதமே அனுப்ப வேண்டியது . மேனேஜர் தன் சீட்டிலிருந்தபடியே இவனிடம் விசாரித்தார் .


" என்ன மிஸ்டர் . எப்பத்தான் அதப்போடறதா உத்தேசம் ?" கையில் பிரம்புடன் பையனை மிரட்டுகிற வாத்தியாரின் தோரணை.


இவனுக்கு சுருக் கென்றது உட்கார்ந்தபடியே இங்கிருந்து இவனும் பேசினான் . " எல்லாம் போட்ருவம் சார் "


" ஒரு மாசமாசத்தான் போடுறிக பாத்துக்கிட்டுத்தான் இருக்கன் "


" போடுவம் , போடுவம் . . ரெண்டு மாசமா ரெண்டு செக்ஷன் சேர்த்துல்லா பாத்திருக்கேன் "


“அது போன வருஷமில்ல . . . இன்னும் எத்தனை நாளக்கித்தான் அதையே சொல்லிக்கிட்டிருப்பிக “


“ எந்த வருஷமானாலும் அந்த பெண்டிங் எல்லாம் நாந்தானே பாக்கணும் பதில் ஆளா குடுத்திருக்கீக "


“ ஓவர் டைம் போட்டு பாக்க வேண்டியதுதானே மிஸ்ட ர் "


" இன்ஸ்பெக்ஷன் ஓர்க் பாக்கவா ? பெண்டிங் ஒர்க் பாக்கவா ? எத்தனையைத்தான் ஓவர் டயத்திலே பார்க்க ....இல்லாட்டாலும் ஓவர் டயம் பார்த்தா அந்தமானக்கி கைமேலே காசைக் குடுக்கப் போறிங்களாக்கும் போனவருஷம் ஜனவரியிலே பார்த்த வேலைக்கே இன்னும் காசைக்காணோம்..."


"இப்ப அதெல்லாம் எதுக்கு மிஸ்டர் இந்த ஸ்டேட்மெண்டை நாளைக்குள்ள போட்றணும் அவ்வளவு தான்..."


" நாளைக்கெல்லாம் போட முடியாது "


" போட . . . முடியாதா . . . நான் ஆர்டர் புக்கிலே எழுதி வைக்கிறேன் . நீர் சொல்றதை அதில் எழுதிக் கொடும் பாப்பம் . . . . "


" நீரு H.Rக்கு மெயில் போடும், எதிலே வேணாலும் எழுதிவய்யும் "


பேச்சு அதோடு முடிந்து போயிற்று . வேலை நடக்கத்தான் செய்தது . ஆனால் இவன் ஆபீஸில் " ஹீரோ " ஆகிவிட்டான் . மேனேஜரிடம் பேசுவது போலவே இவனிடமும் எல்லோரும் மரியாதையுடன் பேச ஆரம்பித்துவிட்டார்கள் . இவனுக்கு பெரிய கஷ்டமாயிருந்தது .


இப்படி ஆபீஸில் பெரிய மனுஷனாகிவிட்டது தான் மனசைச் சங்கடப்படுத்துகிறதோ ? அல்லது மேனேஜர் மோதிக் கொண்டது தான் காரணமோ ? எதுவென்று புரியவில்லை . ஆபீஸ் என்றதும் மனம் கலவரப்படுகிறதற்கான காரணம் தெளிவாகப் புரியவில்லை . எத்தனையோ தடவை யோசித்துப் பார்த்து விட்டான் .


எழுந்து லுங்கியை உதறிக்கொண்டு எறிந்த புத்தகத்தை எடுத்து மேஜையில் போட்டு மணி பார்த்தான் . ஏழு . ஆபிஸ் எட்டு மணிக்குத்தான் . இனிமேல் படிக்கவும் ஓடாது . ஒரு வேலையும் ஓடாது . பேசாமல் கிளம்பலாம் அபிசுக்கே போய் வேலை பார்த்துவிட்டு மதியம் அரைநாள் லீவு போடணும் , திருச்சி போய் மாமாவைப் பார்த்து விட்டு அப்படியே வனிதாவையும் பார்த்து வரனும்.மண்டைக்குள் அவசரம் ஏறியது . உடை மாற்றிக் கிளம்பினான் .


ஆபீசுக்குள் நுழையவும் மேனேஜர்

நிமிர்ந்து இவனை பார்த்தார் . இவன் கண்டுக்காத மாதிரி நேராகப் பார்த்தபடி நெஞ்சை விறைத்துக் கொண்டு நடந்தான் . அவரைக் கடந்த போது ' ம்க்குக்ம் ' என்று செருமினார் .

இவன் ' குட்மார்னிங்

சொல்லவில்லையாம் ( போடா . . . மனசுக்குள் திட்டிக் கொண்டான் ) சீட்டில் உட்கார்ந்த

பிறகும் மேனேஜர் இவனையே முறைத்துக் கொண்டிருந்தார் . ( சர்த்தான் போடா நாயே )

தினமும் நாம தான் முதலில் ' குட்மார்னிங்

சொல்லி சலாம் போடணுமாம் . இவன் என்ன பெரிய இவனா ? கிடக்கிறான் . அரை நாள்

லீவுக்கு அப்ளிகேஷனை எழுதிக் கொடுத்துவிட்டு வேலையில் மூழ்கினான் . ஒண்ணரை மணி பஸ்ஸைப் பிடித்தால் இரவு சாப்பாட்டுக்கு மாமா வீட்டுக்கே போயிறலாம் . இன்னக்கி எப்பிடியும் இந்த வேலையை முடிச்சாகணும் .


மணி ஒன்று . எல்லோரும் சாப்பிடக் கிளம்பிவிட்டார்கள் . லீவு அப்ளிகேஷன் என்னவாயிற்று : ஹெட் மேனேஜர்டமிருந்து ஃபைல் வரவேயில்லை ப்யூனைக் கூப்பிட்டு " லீவு ஃபைல் என்ன ஆச்சென்று கேட்டான் . உங்க லீவு ஃபைல் உள்ளே போயிருக்கு சார் என்று M.D அறையைக் காட்டினான் . ஆத்திரம் பொங்கியது . அடேய் ! மேனேஜர்ர்..! பழிவாங்கறியா இரு உன்னை....நீ போட வேண்டியதை உள்ளேயா அனுப்பிட்டே . இப்போ என்ன செய்வது ? மணி ஒண்ணாச்சு . நேரடியாக உள்ளே போய் M.D கிட்டயே கேட்டு விட்டுப் போகவேண்டியதுதான் . அவசியமின்றி அவர் அறைக்குள் யாரும் போவதுல்லை . இப்போது வேறு வழியில்லை .


லேசாய் கண்ணாடிகதவில் தட்டி

" மே ஐ கம் இன் சார் . . . " 'கிரீச்' என்ற நாற்காலி சத்தத்தோடு " யெஸ் ". . . என்ற மிடுக்கான பதில் வந்தது . ' புஷ் பேக் கதவைத் திறக்கும் சத்தம் எழாதபடி எழுந்தது. மெதுவாக தள்ளி உள்ளே நுழைந்தான் . நீண்ட அறை . ஏ.சி குளிர் அதிகமாக இருந்தது.மிகப்பெரிய மேஜை, மானிட்டர் .டெலிபோன்கள் கிழே நீண்டு செல்லும் மெத்தென்ற பெரிய கார்பெட் எல்லாம் ஒரு மன்னனின் தர்பார் மண்டபத்துக்குள் நுழைகிற பிரமையை ஏற்படுத்தின . மனசில் திடும் திடும் , பவ்யமாய் நின்றான்.


" யெஸ் ? "


“ சார் . . . ஒரு அரைநாள் லீவு கேட்டிருந்தேன் . "


" லீவா ? " சட்டென கூர்மையாக இவனை நோக்கினார் . ஒரு பிரபு தன் அடிமையை நோக்குகிற அருவருப்பான அலட்சியமான பார்வை . புகை சூழ்கிற மாதிரி கண்ணில் ஒரு தோற்றம் இவனுக்கு ,


 " அவசரமாக திருச்சி வரைக்கும்... "


" அதுசரி மிஸ்டர்... ரெக்ரூட்மெண்ட் ஃபைலிலே ஒரு லெட்டர் எழுதச் சொன்னேனே ..." திடீரென புகை நடுவிலிருந்து ஒரு சிம்மாசனம் கிளம்பி வந்தது . அதில் கையில் சவுக்குடன் பிரபுவாக M.D க்கு கீழே கைகட்டி வாய் பொத்தி இவன்.


“ என்ன மிஸ்டர் . . . அந்த லெட்டரை எழுதினிங்களா இல்லையா " (என்னடா குதிரை லாயத்தை கழுவி சுத்தம் பண்ணிட்டியா - இவன் காதில் இப்படி ஒலித்தது )


" எழுதி டெஸ்பாட்ச் கூட பண்ணிட்டேன் சார் " (கழுவி விட்டு சாம்பிராணி புகைகூட காட்டிட்டேன் பிரபு)


" ம் . . . மேனேஜரோட ஸ்மூத் ரிலேஷன் வச்சுக்கிற தில்லையாமே அப்படியா . . . . " ( சின்ன துரையோட உள்ளாடைகள் எல்லாம் நீ சரியாகத் துவைக்கிறதில்லையாமே அப்படியா)


" நோ . . . நோ . . . அப்படி எல்லாம் ஒண்ணுமில்லே சார்" ( ஐயையோ . அப்படியெல்லாம் இல்லை பிரபோ )


"அதென்னமோ

மிஸ்டர் உங்க ஒர்க் பற்றி எனக்கு திருப்தியில்லை . "


" நீங்க அப்படிச் சொல்லக்கூடாது பிரபோ.... தவறான தகவல் யாரோ தங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்... " உங்க ஆபிஸர் ஏதாச்சும் சொன்னா உடனே அவரை எதிர்த்து சண்டையா போடறது மிஸ்டர் " ( மேஸ்திரி லேசாய் ஒரு சவுக்கடி கொடுத்தால் எதிர்த்து நிமிரவா செய்யிறே நீ . . . )


 " அடி தாங்க மாட்டாமல் லேசாய் முணகினேன் அதைப் போயி பெரிய சண்டைன்னு தப்பாய் நினைச்சு...“


“ சரி சரி . ரிப்போர்ட் எதுவும் வராம வேலையைப் பாரும் . எங்க வீட்டு உத்தியோகமா பார்க்கிறீர்... ஆபிஸ் வேலைதானே ..”


“ ......... “


" என்ன "


"இந்த . . . லீவு விஷயம் . . . . "


“ லீவா ..... போட்ருவோம்...

போறும்....போறும் ( போய்த் தொலை சனியனே )


" தேங்க்ஸ் . . . சார் "


கட்டி வைத்து சவுக்கால் செமையடி வாங்கிய களைப்பு உடம்பெல்லாம் . மெல்லத் திரும்பினான் . புஷ்பேக் கதவை சத்தம் எழாமல் மெல்லத் திறந்தான் . வெளியே ஓரடி எடுத்து வைத்தான் . ' சரக் ' கென்று ஒரு சத்தம் கால்களில் இரும்புச் சங்கிலி விலங்கு இழுபடுகிற ஓசை பதறித் திடுக்கிட்டு குனிந்து பார்த்தான் , ஒன்றுமில்லை .


வெறும் பிரமைதான் .


Rate this content
Log in

Similar tamil story from Comedy