Siva Kamal

Abstract Children Stories Drama

5.0  

Siva Kamal

Abstract Children Stories Drama

வார்த்தை

வார்த்தை

6 mins
1.3K


அநேகமாய் எல்லாம் தயார் பண்ணியாச்சு . செந்திலுக்கு ரொம்ப சந்தோஷமும் திருப்தியும் . இருப்பதில் நல்லதாக கிழியாததாக இரண்டு டவுசரும் , எல்லா பட்டனும் இருக்கிற ஒரு சட்டையும் , துவைத்து , மடித்து மடிப்பு நல்லா விழுவதற்காக ' டிரங்க் ' குப் பெட்டிக்கு அடியில் வைத்தாயிற்று . மாமா வீட்டிலிருந்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பையும் வாங்கி வந்து தூசியெல்லாம் தட்டி ஈரத்துணியால் துடைத்து ஒட்டியிருந்த அழுக்கெல்லாம் நீக்கியாச்சு - இனி போவதற்கு முதல்நாள் இந்தப்பையைக் கொஞ்சம் எண்ணெயில் முக்கிய துணியால் துடைத்துவிட்டால் போதும் . புதுசு மாதிரியாகி விடும் . இதில் கொஞ்சம் அவனுக்கு மனக்குறைதான் . தோளில் தொங்கப்போடுகிற மாதிரி பளபளன்னு ஒரு பேக் மாமா வீட்டில் இருக்கத்தான் செய்கிறது . தூசி படாமலிருக்க அதை துணியால் சுற்றி வீட்டில் குறுக்குவிட்டத்தில் ஒரு கம்பியில் தொங்கவிட்டுத்தான் வைத்திருக்கிறார் . ஆனால் அதை அவர் தரவில்லை . இவன் கேட்டுக் கூடப்பார்த்து விட்டான் . " ச்சே அதத் தந்துரலாம் ? இன்னைக்கு ஒனக்கு குடுத்தம்னா நாளைக்கு ஆள் ஆளுக்கு கேக்க ஆரம்பிச்சிருவாக . நீ சும்மா இதவே கொண்டுபோ..” என்று சொல்லி பரண் மேலே ஏறி தேடி எடுத்து இந்தப் பையை கொடுத்துவிட்டார் . அதில் இவனுக்கு அவர் மேலே வருத்தம் தான் . அவர் இந்தப்பையைக் கொடுத்ததும் அவனுக்கு லேசாய் அழுகை கூட வந்துவிட்டது .


அப்புறம் ஒரு பழைய தைலபாட்டிலையும் கழுவித் துடைத்து துப்புரவு பண்ணி வைத்துக்கொண்டான் . அது தேங்காய் எண்ணெய் கொண்டு போக .எலுமிச்சம் பழம் ஒன்று எடுத்து வைத்துக்கொண்டான் பயணத்தில் வாந்தி ஏதேனும் வந்தால் உதவும்.. கண்ணாடியும் சீப்பும் போகிற இடத்தில் இவனுக்கும் தருவதாக செவன்த் பி ' கனேசன் உறுதியளித்திருக்கிறான் . அதுபோதும் . கடைக்குப்போய் ' நியூஸ் பேப்பர் மூன்று வாங்கி வந்துவிட்டான் . கட்டுச்சோறு கட்ட ஆறு பொட்டணம் போடணுமே , ரெண்டு நாளைக்கில்ல வேணும் . இந்தப்பை ஆறு பொட்டணமும் சட்டை , டவுசரும் வைக்கப் போதுமா என்றொரு சந்தேகம் இவனுக்கு வந்து கொண்டேயிருந்தது . பத்துத் தடவையாவது அம்மாவிடம் கேட்டிருப்பான் . அவளென்னமோ கொஞ்சங்கூட சந்தேகமில்லாமல் " ஏ . . . யப்பா . . . இதுல வைக்கலாமே எம்புட்டுச் சாமான் " என்று ரொம்ப உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் .


இப்போது நாலைந்து தரமாக , காலேஜ் படித்துவிட்டு சும்மாயிருக்கிற முருகேச அண்ணன் வீட்டுக்கு நடையாக நடந்து கொண்டிருந்தான் . அந்த அண்ணனிடம் ' கூலிங் களாஸ் ' இருக்கு . அதுக்காகத்தான் .தாரேன்னுதான் சொல்லியிருக்கு . இருந்தாலும் கையிலே வாங்குகிற வரைக்கும் மனசு நிக்குமா.. இந்தத் தடவை ஏ... சத்தியமா தாரேம்ப்பா. போற அன்னைக்கு காலையிலேயே வேணுமின்னாலும் வாங்கிக்கோடா " என்று இவன் தலையிலே அடித்துச் சொல்லி விட்டதும் ரொம்ப திருப்தியுடன் திரும்பினான் செந்தில் .


முருகேச அண்ணன் ரொம்ப நல்ல குணம் . அவனுக்கு அப்பப்போ இங்கிலீஷ் , கணக்கு சொல்லித் தருவதும் அவருதான் . அவருகிட்ட படிக்கிறதுனாலே தான் இப்ப இவன் ஒவ்வொரு மாசமும் எல்லாப் பாடத்திலேயும் பாஸ் பண்ணி விடுவதோடு ஆறு அல்லது ஏழாவது ரேங்க்கிலேயே இருந்து கொண்டுமிருக்கிறான் . ரொம்ப முக்கியமாக அந்த குருநாதனை பீட் பண்ணிவிட்டான் .


பனியன் கம்பனிக்கு வேலைக்குப் போனவர்களை திருப்பிக் கொண்டு வந்து விடுகிற பஸ் வருகிற வரைக்கும் சிம்னி விளக்கின் முன்னால் காலை மடித்து வாகாய் உட்கார்ந்து கொண்டு தெருப்பூரா கேட்கும்படியாக சத்தம் போட்டு ஒவ்வொரு பாடமாக படிக்கிற அவனுடைய குரல் இன்றைக்குக் கேட்கவில்லை . புஸ்தகம் விரித்திருக்க பார்வை அதில் நிலைத்திருக்க நினைவுமட்டும் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது . கொஞ்ச நேரத்தில் புத்தகத்தை மூடிவிட்டு விளக்கையும் அணைத்துவிட்டு வெளித்திண்டில் காற்றாட படுத்திருந்த தாத்தாவோடு சேர்ந்து ஒட்டிப்படுத்துக் கொண்டான் . ஆனால் தூக்கமும் வரவில்லை . செந்தில் கண்களைத் திறந்தபடியே கனவு கண்டு கொண்டிருந்தான் . பள்ளிக்கூடத்தில் ஒரு வாரமாக இதே பேச்சுதான்.

 

“ கன்னியாகுமரியிலே வேறே என்ன சார் இருக்கு"


" காந்தி மண்டபம் இருக்கு . அது மேலே ஏறி நின்று பாத்தா மூணு கடலும் சங்கமமாகிறது தெரியும் . மண்டபத்துக்குள்ளே காந்தி நின்ன இடம் ஒரு பீடம் மாதிரி இருக்கும் . காந்தி ஜெயந்தியன்னிக்கு மாத்திரம் அதுமேலே சூரிய ஒளி விழுகும் ”


 " அதெப்பிடி சார் அன்னிக்கு மட்டும் விழுகும் ”


" அது அப்பிடித்தாம்லே மூதி .... சரி சரி பாடத்தக் கவனி . ' மிச்சமெல்லாம் நாளைக்கு.. "


பள்ளிக்கூடத்தில் மட்டுமில்லை .ஊருக்கு வந்தும் பலபேரிடம் பலமுறை திரும்பத் திரும்ப இதே பேச்சுதான் கன்னியாகுமரி , திருவனந்தபுரம் , கொல்லம் , குற்றாலம் என்று இன்னும் ஒரே ஒரு நாள் தான் இடையில் இருக்கிறது . யப்பா ! நினைத்தாலே செந்திலுக்கு எப்படியோ இருந்தது . நாளைக்கழிச்சு இந்நேரம் உல்லாசப் பயணம் . நாளை கழிச்சு சாயந்தரமே சாப்பிட்டுட்டு சாப்பாடு , துணிமணியோடு பள்ளிக்கூடத்திலே போய் படுத்துக்கிறணுமாம் . ஏழு மணிக்குள்ள பஸ் வந்திரும் . உடனே கிளம்பி அதிகாலை சூரிய உதயம் பாக்க கன்னியாகுமரி போயிறணுமாம் . பிறகு அங்கே எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு சுசீந்திரம் போய்விட்டு - திருவனந்தபுரம் , அங்கே மிருகக் காட்சிசாலை . மீன் காட்சி மூசியம் . கோவளம் , பத்மநாபசாமி கோயில் எல்லாம் பார்க்கணும் . கோயிலுக்குள்ளே சட்டை போடாமத்தான் போகணுமாம் . சட்டை போடாம நம்ம கிளாஸ் பொண்ணுங்க முன்னாடி எப்படி என்று செந்தில் கவலைப்பட்டுக் கொண்டான் . அதற்கென்ன உள்ளே போகாமல் இருந்து விட்டு போகிறது என்று சமாதானமும் சொல்லிக் கொண்டான் . செந்தில் இதுவரை கடல் பார்த்ததில்லை . அதை நினைக்கும் போதே கற்பனையிலேயே பிரமிப்பாக இருந்தது . தாத்தாவிடம் நூறுவாட்டமாவது கேட்டிருப்பான் . கையை விரித்து விரித்துக்காட்டி இவ்வளவு பெரிசு இருக்குமா இவ்வளவு பெரிசு இருக்குமா என்று .


அப்புறம் கேரளாவிலே மலையாளம் தானே பேசுவார்களாம் . அங்கே யாரிடமாவது பேச வேண்டி வந்தால் என்ன செய்வதென்று யோசித்து பலமுறை மனசுக்குள் பலவிதமாக இங்கிலீஷில் பேசிப் பார்த்துக் கொண்டான் . " வாட் இஸ்யுவர் நேம் ? வாட் ஆர் யூ டுயிங் மை நேம் இஸ் M.செந்தில் சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு ' . கவர்ன்மெண்ட் ஹைஸ்கூல் மேட்டுப்பட்டி மை நேடிவ் ப்ளேஸ் இஸ் கே . சிவந்தியாபுரம் . இட் இஸ் எ ப்யூட்டிபுல் வில்லேஸ் , மை பாதர் இஸ் எ ஒர்க்கர் " இது மட்டுமல்லாமல் முருகேச அண்ணனிடம் கேட்டு விசாரித்து " வேர் இஸ் ஓட்டல் ? " " வாட் ப்ரைஸ் இஸ் திஸ் " " எண்டபேரு செந்தில் " என்பது மாதிரி சில புது விஷயங்களையும் மனசில் தயார் பண்ணிக் கொண்டான் .


அப்புறம் திடீரென்று கொண்டு போக வேண்டிய சாமான்கள் எல்லாம் தயாராகிவிட்டதா என்று மனசில் சரிபார்க்க ஆரம்பித்து விட்டான் . பல்பொடி தாளில் மடித்து வைக்கணும் . மறந்து விடக் கூடாது . துண்டை வாங்கி துவைத்து விடணும் நாளை சோறு கட்டுவதற்கு இலை அப்பா வாங்கிட்டு வந்திருவார் . , கட்டுச்சோற்றை நினைத்தால் இப்பவே நாக்கில் எச்சில் ஊறி ' கிளுகிளுப்பாய் " இருந்தது . காலையின் ஏறு வெயிலில் பள்ளிக்கூடத்திலிருந்து தன் ஊரை நோக்கி லொங்கு லொங்கு ' என்று தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தான் செந்தில் . முதல் பீரியடுதான் முடிந்திருந்தது . வந்த உடனேயே ' கிளாஸ் டீச்சர் ' சொல்லிவிட்டார் . " உல்லாச பயணத்துக்கு இன்னும் ரூவா குடுக்காதவனெல்லாம் எந்திரி . இன்னைக்கு மத்தியானம் ஒரு மணிக்குள் எல்லாம் ரூவாயை P.T சார்கிட்ட குடுத்திறணும் . அப்பிடிக் குடுக்காதவங்க சாயந்திரம் டூர் கிளம்பையில் வரவேண்டியதில்லை . "


ரூபாய் கொடுக்காத மற்ற ஏழெட்டுப் பையன்களைப் போல செந்திலும் ஊரைப் பார்த்து ஓடிக் கொண்டிருந்தான் . செந்தில் நூறு ரூபாய் ஏற்கனவே கொடுத்துவிட்டான் . இன்னும் முன்னூறு ரூபாய் தரவேண்டும் . ராத்திரி கிளம்பு முன்னே கொடுத்துவிடலாம் என்று அப்பா சொல்லியிருந்தார் . வேர்க்க விறுவிறுக்க மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்து " யம்மோவ் . " என்று கத்தியபடி வீட்டுப்படி ஏறினான் . வீடு நாதங்கி போட்டுப் பூட்டியிருந்தது . கதவை ஒரு எத்து எத்திவிட்டு தெருவில் இறங்கி ஓடினான். முதலாளி தோட்டத்துக்கு களையெடுக்க அவள் போயிருப்பதாக முத்துப்பாட்டி சொன்னதும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான் முதலாளி தோட்டத்துக்கு.


இவன் ஓடி வருவதைக் கண்டதும் அம்மா வேலையை விட்டு எழுந்து எதிர்கொண்டு “ என்னய்யா வந்துட்டே " என்று கேட்டாள் . அம்மாளைக் கண்டதும் முதலில் அவனுக்கு அழுகைதான் உடைத்துக்கொண்டு வந்தது . அம்மா அவனை இழுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு " ஏன்யா... எதுக்குய்யா... அழுவுரே ...' என்று கேட்டாள் . அழுகையினூடே விக்கி விக்கி , மத்தியானத்துக்குள் ரூபாய் கொடுக்க வேண்டிய விஷயத்தைச் சொன்னான் . அம்மாள் அவனை அணைத்தபடி முதுகைத் தடவிக் கொடுத்து " சரி அதுக்காக அழுகாதய்யா - ராசால்ல மத்தியானத்துக்குள்ள மொதலாளிட்டேயிருந்து ரூவா வாங்கிட்டு வந்துருதேன்னு அப்பா சொல்லிட்டு போயிருக்காக . . . அழுவாதேய்யா . . . " என்று அவனைத் தேற்றினாள் , சற்று நேரத்தில் அழுகையை அவன் நிறுத்திவிட்டாலும் " இப்பவே வந்து ரூவா வாங்கிக் கொடு " என்று அவளை அனத்த ஆரம்பித்துவிட்டான் . அவளோ இவனை வரப்பு மேட்டில் இருத்தி விட்டு வேகமாய் களை எடுக்க ஆரம்பித்து விட்டாள் . தன் நிரையை வேகமாக முடித்துவிட்டு மத்தியானத்துக்குள்ளே மகனோடு கிளம்பினாள் முதலாளி வீட்டுக்கு . அங்கே தான் அப்பா கூலிக்கு நிற்கிறார் .


போன நேரத்தில் செந்தில் அப்பாவும் அங்கே இல்லை . முதலாளியும் இல்லை . நெல் அறைக்க வண்டியைப் போட்டு டவுனுக்கு போயிருப்பதாகவும் , ரூபாய் விஷயமெல்லாம் தனக்கொன்றும் தெரியாதென்றும் அதெல்லாம் அவரிடம் தான் கேட்க வேண்டுமென்றும் முதலாளியம்மா சொன்ன போது அம்மாளின் சேலையை பிடித்தபடி அவள் பின்னால் நின்று கொண்டிருந்த செந்தில் மறுபடியும் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டான் . வீடு திரும்பியதும் அம்மா தெரிந்த வீடுகளிலெல்லாம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள் . அவ்வளவு பெரிய தொகையை அவளால் எங்கிருந்து புரட்ட முடியும்? முடியவில்லை . வீட்டு வாசலில் உட்கார்ந்து உடைந்து உடைந்து செந்தில் ஏற்கனவே அழ ஆரம்பித்திருந்தான் . அம்மாளும் தவியாய்த் தவித்தாள் . இருந்தாலும் அவளால் என்ன செய்து விடமுடியும்? நேரம் ஆக ஆக அழுகை பெரிதாகி ராத்திரி உல்லாசப் பயணம் போகிற பயல்களெல்லாம் " டேய் செந்தில் வல்லியாடா . . " என்று கேட்டுப்போனதும் வெடித்துக் கதறினான் . கண்ணெல்லாம் வீங்கி தொண்டை கட்டிப்போன பிறகும்கூட அவன் விசும்பிக் கொண்டுதான் இருந்தான் .


அம்மாளும் முதலில் பலவாறு அவனைத் தேற்றிப் பார்த்துவிட்டு " என் ராசா அழுவாதய்யா இங்கரு கண்ணெல்லாம் வீங்கிப் போச்சு பாரு . வேண்டாய்யா நம்ம தைபூசத்துக்கு திருச்செந்தூர் போவமில்ல . . . என்ன அழுவாதே . . " என்று தேற்றிப் பார்த்து முடியாமல் கொஞ்ச நேரத்தில் அவளுக்கும் அழுகை உடைத்துக் கொண்டு வந்தது . அவனை இழுத்து தன் வயிற்றோடு கட்டிக் கொண்டு விசும்பி விசும்பி சத்தமில்லாமல் அழுதாள் . சாப்பிடாமலே ரெண்டு பேரும் ராத்திரி படுத்து விட்டனர் . தூங்குகிற அவனை அணைத்தபடி அவள் அழுது கொண்டிருந்தாள் .


ராத்திரி வீட்டுக்கு வராமல் தெருமடத்திலேயே அய்யா படுத்துக் கொண்டார் . எல்லா வேலையும் முடித்தபிறகு சாயந்திரமாக " இப்ப இவ்வளவுதான் இருக்கப்பா இத வச்சி சமாளிச்சிக்க . . . இன்னும் ரெண்டு நாள் கழிச்சி பாப்பம் " என்று மொதலாளி அவனிடம் ஒரு நூறு ரூபாயை மட்டும் கொடுத்திருந்தார் . பழைய பாக்கியையும் அவர் ஞாபகப்படுத்தினார் . இத்தோடு வருகிற வழியிலேயே செந்தில் அழுது புரளுவதை கேள்விப்பட்டு வீட்டுக்குப் போகாமல் அப்படியே திரும்பி அவனும் பலபேரிடம் கேட்டுப் பார்த்தான் . எல்லாரும் கையை விரித்தார்கள் . அல்லது ' நாளைத் தாரேன் ' என்றார்கள் . எப்படி செந்தில் மூஞ்சியைப் போய்ப் பார்ப்பது என்று மனம் வெதும்பி மடத்தில் முடங்கிக் கிடந்தான் . வயிறு பசித்தது . இருந்தாலும் செந்தில் முகத்தைப் பார்க்கிற தைரியத்தையும், பார்த்ததும் சமாதானமாகச் சொல்வதற்கு ஒரு வார்த்தையையும் கண்டுபிடித்த பிறகுதான் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியும் .Rate this content
Log in

Similar tamil story from Abstract