Siva Kamal

Action Romance Tragedy

4.1  

Siva Kamal

Action Romance Tragedy

கேள்வி

கேள்வி

5 mins
1.5K


அன்று மதியம் அருணிடமிருந்து வந்த அழைப்பு எனக்கொரு புதிய புரிதலை ஏற்படுத்தும் என்பது நான் எதிர்பாராதது. கண்ணன் மரணத்தைப் பற்றிய அறிவிப்பு அது. அலுவலகத்திலிருந்த குமரனிடம் இந்த செய்தியை தெரிவித்ததும் கண்ணீர் பஞ்சத்தோடு மேனேஜரிடம் எங்களுக்கு விடுமுறை வழங்கினார்.கண்ணன் இறந்த செய்தியைவிட அதற்கான காரணம் தான் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

காதல் தோல்வி !

கண்ணன் ஒரு வாசகன். நல்ல படங்களை மட்டும் பார்ப்பவன். சமூகத்தின் மீதும் அரசியல் மீதும் ஒரு தெளிவான பார்வை கொண்டவன். புத்திசாலியானவன். கண்ணனைப் போல் ஒருவன் ஒரு பெண்ணுக்காக தற்கொலை செய்து கொண்டான் என்பதே ஒரு புதிர் தான்.

கண்ணனை நினைத்தால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது அவன் சொன்ன சூனியக் காரி கிழவி கதை. முடிவெடுக்கும் உரிமையை பெண்ணிடம் கொடுத்தால் அவளின் எல்லாமும் தானாகவே கிட்டும் என்பது அந்த கதையின் மூலம். அப்படிப்பட்ட கதையை சொன்ன கண்ணன் எப்படி ஒரு பெண்ணின் அன்பு காரணத்தால் தன் உயிரை பறித்துக் கொண்டான்?

ஜோக்கர் படம் பார்க்க சென்றுவிட்டு படம் முடிந்தவுடன் கலந்துரையாடினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை சொன்னார்கள். கண்ணனிடம் கேட்டதற்கு 'நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்' என்றான். தன் கருத்தை வெளியிடுவதில் கூட கவனம் செலுத்திய கண்ணன் கவலையோடு தன்னை மாய்த்துக் கொண்டது ஏன்?

முந்தாநாள் அழைத்து நன்றாக தான் பேசினான். Charlie படம் இறக்கி தருமாறு கேட்டான். மனித மனதில் இரண்டே நாளில் மரணத்தின் வாசல் திறக்கும் அளவிற்கு மாற்றங்கள் நிகழுமா என்ன? அல்லது கண்ணன் தன் மனதில் சோகத்தை புதைத்துக் கொண்டு எங்களிடம் இயல்பாக இருப்பதுப் போல் நடித்தானா? இப்போது அவன் கேட்ட Charlie படத்தின் பதிவிறக்க விவரத்தை பார்க்கிறேன். 22%-ல் அப்படியே நிற்கிறது.

கால் நூற்றாண்டு கூட காலெடுத்து வைக்காமல் காதலின் காரணத்தால் காலமானான் கண்ணன். நான் இந்த சேதியை தினேஷிடம் தெரிவித்தேன். அவன் ஆச்சரியப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கண்ணனின் பிரேத சடங்குக்காக அவனுடைய பெயர் தெரியாத கிராமத்திற்கு நாங்கள் சென்றோம்.

என்றுமில்லாமல் எங்களுக்கிடையில் ஒரு நிசப்தம் நிலவியிருந்தது. கண்ணனின் வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்து சேர்ந்தோம். அவனுடைய உடல் மதியம் தான் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்படுவதாக பேசிக்கொண்டனர்.

அந்த தெருவில் ஆம்புலன்ஸ் நுழையும்பொழுது அதன் சைரனை விட உரக்க ஒலித்தது கண்ணன் தாயாரின் அழுகுரல். அவருடைய கர்பப்பையிலிருந்து கண்ணன் வெளிவந்தபோது கூட இப்படி தான் அழுதிருப்பார் என்பதை யோசிக்கையில் தான் கண்ணீருக்கு சுவையுண்டு என்பதை உணர்ந்தேன்.

நண்பன் கண்ணனை பிணமாக பார்க்கும்பொழுது இயல்பு நிலை கடந்து எங்கிருந்தோ வந்ததொரு துக்கம். அத்துணை பேருடைய அழுகுரலுக்கு மத்தியில் நாங்கள் தாமதமாக அழுதாலும் அன்று கண்ணன் தாயாருக்கு அடுத்தபடியாக அதிகமாக அழுதது நாங்கள் தான்.

நாள் முழுக்க அழுத களைப்பில் அடுத்த நாள் மதியம் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஒரு மரத்தடியில் உறங்கினோம்.அந்த கிராமமே வெக்கையில் வெந்து தணிந்தாலும் வந்து வீசிய மரத்தடி காற்றில் நாங்கள் நன்றாகவே இளைப்பாறினோம். காற்றில் அந்த மரத்தின் இலைகள் எழுப்பிய சலசல ஓசை எங்களை தாலாட்டியது. அந்த மதிய தூக்க கனவில் கண்ணன் வந்தான். நான் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தேன்.    

"என்னடா பாக்குற? Shareit on பண்ணி Charlie படத்த அனுப்பி விடு"

"கண்ணா நீ..."    

"ம்ம்.. நான் விருப்பப்பட்டு எடுத்த முடிவு தாண்டா. ஒன்னு மட்டும் மனசுல வெச்சிக்கோ. நமக்கு இந்த காதல் கருவேப்பிலையெல்லாம் வேணாம். புரிஞ்சிதா?"

"ம்ம்.. ஆனா நீ இப்படி பண்ணுவேன்னு"    

"எனக்கு புரிது. ஆனா நா அவள அளவுக்கு மீறி லவ் பண்ணிட்டேன் மாம்ஸ். அதே அளவுக்கு அவள வெறுக்கவும் செஞ்சிட்டேன். அவள என் lifeல இருந்து மொத்தமா அழிக்கணும்னா நான் தான் அழியனும்.அதான்.. அவ influenceல வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம். அதுக்கு தான் சொல்றேன். உனக்கு இந்த காதல் வேணாம்"

உயிரோடு இருக்கும்போதும் சரி, இறந்து கனவில் பேசும்போதும் சரி.. கண்ணனின் பேச்சில் ஆழம் குறையவில்லை. ஆனால் இந்த கனவில் அவன் சொன்னதெல்லாம் உண்மையில் அவனுடைய கருத்துக்களா அல்லது நான் என்றோ வாசித்த வரியா? தெரியவில்லை.இதை சொல்லிவிட்டு கண்ணன் மறைய, உறக்கம் களைய டீயுடன் வந்தான் தினேஷ்.

அருண் அங்கிருந்த ஒரு பாறையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தான். அங்கே நாற்காலி போல பல பாறைகள் இருந்தது. நானும் தினேஷும் அங்கே சென்றோம். தூரத்தில் இருந்த ஒரு மலைத்தொடரில் மறைந்த சூரியனில் நாங்கள் கண்ணனை உணர்ந்தோம்.

சிறிது நேரம் கழித்து குமரன் எங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தான். பயங்கரமான பசியில் இருந்த எனக்கு அதை எப்பொழுது பிரித்து சாப்பிட போகிறோம் என்று இருந்தது. "ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? Deathக்கு வந்திருக்கோம், நீ என்னடானா சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்க?" என்றான் அருண்.    

"சாப்பாட்டுக்கும் சாவுக்கும் ஒரு தொடர்பும் இல்ல. ரெண்டும் இயல்பான விஷயம் தான். நேரத்துக்கு பசிக்கும், நேரம் வந்தா போயிடுவோம். அதுனால மூடிட்டு தின்னு. உனக்கு பசிக்குதுன்னு உன் மூஞ்சிலையே எழுதி ஒட்டிருக்கு".

சாப்பிட்டு முடித்ததும் நான் கண்ட கனவை எல்லோரிடமும் சொன்னேன். கண்ணனைப் பற்றிய கனவென்பதால் கண்கொட்டாமல் கேட்டனர். ஒருவேளை கண்ணன் தான் சொல்ல நினைத்ததை தான் என் கனவில் வந்து சொன்னானென்று தினேஷ் நம்பினான்.

ஆனால் குமரன்    "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இவனோட Subconsious காதல மறுக்குது. கண்ணன் இறந்ததுக்கு இது காரணமா இருந்திருக்குமோன்னு இவனோட ஆழ்மனம் நெனச்சிருக்கலாம். அதான் கண்ணன் அப்படி பேசுற மாதிரி கனவு கண்டிருக்கான்" என்று என் கனவை விமர்சித்தான்.

"ஆனா கண்ணன் இப்டி முட்டாள்தனமான முடிவெடுப்பான்னு நான் நினைக்கவே இல்ல" என்றான் அருண்.    

"எது முட்டாள்தனம்? தற்கொலையா? போடா லூசு ! அது ஒரு கலை டா. அந்த கலைய செய்ய ஒரு தைரியம் வேணும். அத அவன் சரியாவே செஞ்சிருக்கான். தற்கொலை பண்றவங்கள முட்டாள் listல சேர்க்காத. அவங்களால பொறப்ப தான் தேர்ந்தெடுக்க முடியாம போச்சி. Atleast மரணத்தையாவது தேர்ந்தெடுக்க முடிஞ்சிதே" என்றான் குமரன். 

  "வாழ விருப்பம் இல்லாம போலியா வாழ்ந்திட்டு இருக்குறவங்க மத்தியில கண்ணன் எவ்ளவோ பரவாயில்ல" "ஆமாண்டா ! வாழ தைரியம் இல்லாம தற்கொலை பண்ணிகிட்ட கோழைக்கு நீ வக்காளத்து வாங்கிட்டு இருக்க" என்றான் அருண்.    

"உங்களுக்கு தான் அவங்க வாழ தைரியம் இல்லாத கோழைங்க, ஆனா அவங்க Perspectiveல நம்ம சாக தைரியம் இல்லாத கோழைங்க".

"வாழ்க்கைல எவ்ளோ சிக்கல் வந்தாலும் அத போராடி வாழறவங்க உனக்கு கோழையா? நல்லாருக்கு டா" என்றான் தினேஷ்.    

"நா உங்கள தப்பு சொல்லல. ஆனா தற்கொலை பண்றவங்கள ஏன் முட்டாள் பட்டியல்ல சேக்குறீங்கன்னு தான் கேக்குறேன்".

"அப்போ கண்ணன் பண்ணது சரினு சொல்ல வரியா?" என்றேன்.   

 "நான் தற்கொலை பண்ணிகிட்டத தப்பு சொல்லல. ஆனா காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டான் பாரு. அதுல தான் எனக்கு உடன்பாடு இல்ல" குமரனின் இந்த பார்வை எங்களுக்கு புதிதாக இருந்தது.

கண்ணனின் காதல் சிக்கலை எங்களால் அறிய முடியவில்லை. முடிந்திருந்தால் அந்த உரையாடல் அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்திருக்காது.

"ஏன் காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிறது அவ்வளவு கேவலமா?" தற்கொலையே முட்டாள்தனம் என்ற அருண் இப்போது காதல் தற்கொலை கேவலமா என்கிறான். மாற்று சிந்தனையுள்ள ஒருவனுக்கு மாற்று கருத்துக்கள் எழாமல் இருக்காது.    

"காதலுக்காக சாகுறது கேவலம் இல்ல. ஆனா அவன் பண்ணதுக்கு பேரு காதலே இல்லனு தெரியாமலேயே செத்துட்டான்".

"அவன் உணர்வ ஏன் கொச்சைப்படுத்துற?" என்றான் தினேஷ்.  

  "அவன மட்டும் சொல்லல. நம்ப எல்லாரும் இப்போ பண்ணிக்கிட்டு இருக்குறதுக்கு பேரு லவ்வே இல்ல"

"புரியல"    

"நம்ம யாருமே நேசிக்கிறது இல்ல. எல்லாரும் யாரையாவது சொந்தம் கொண்டாடத்தான் நினைக்கிறோம். தினேஷ்க்கு ஒரு பொண்ண புடிச்சிதுன்னு கொஞ்ச நாள் அவ கூட Friend-ஆ பழகுனான். திடீர்னு அவ கூட பேச்ச நிப்பாட்டிட்டான். ஏன்னு கேட்டா அவ Already Committed-ஆம்.

இப்போல்லாம் ஒரு பொண்ண நெருங்கவே அவளோட Relationship Status முக்கியமா இருக்கு"

"Committed-னு தெரிஞ்சதும் வெலகிருக்கான். இதுல என்ன தப்பு?" என்றான் அருண்.    

"இவன் பண்ணதெல்லாம் Romanticize பண்ணிட்டு இருக்காத. இவனுக்கு தேவ இவன் சொல்றத கேட்டுட்டு இவனையே நெனச்சுக்கிட்டு இவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொண்ணு, அவ்ளோதான்.

அதுக்கு காதல்னு ஒரு பேரை வெச்சிக்குறானுங்க. இவன் பேசாத நாள்ல இருந்து அந்த பொண்ணு என்ன ஏதுன்னு புரியாம இருக்கா தெரியுமா?"

குமரனின் சொற்கள் தினேஷ்வை சுட்டிருக்க கூடும். அவன் தலை தாழ்த்தியபடி எதுவும் பேசாமல் இருந்தான்.குமரனின் வார்த்தையில் உள்ள உண்மையை உணர்கிறானோ என்னவோ !

குமரன் என்னை நோக்கி தொடர்ந்தான்.    "அருணுக்கும் அவன் Girlfriend-க்கும் சண்டை ! ஏன்னு தெரியுமா? தெரிஞ்சா சிரிப்ப ! அவ கூட நைட் 12 மணி வரை Phone பேசிருக்கான். ஆனா அவ 2 மணி வர Onlineல இருந்தாளாம். இந்த நாய் சந்தேகப்பட்டு அவள திட்டிருக்கான். இவருகிட்ட Good Night சொல்லிட்டா உடனே அவங்க தூங்க போய்டணுமாம்.இதுக்கு பேரு Love-ஆ Dominance-ஆ?"

"நாங்க இன்னைக்கு சண்டை போட்டுப்போம், நாளைக்கு கொஞ்சிப்போம். அதுக்குலாம் உன்கிட்ட காரணம் சொல்லிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல. என் லவ்வுக்கு யாரும் Certificate கொடுக்க வேணாம்" கோபமடைந்தான் அருண்.

"டேய் குமரா. நீ நெனைக்குற மாரி அவன் Relationshipல Just like thatனுலாம் இல்ல" என்றேன்.

நான் சொன்னதை கேட்ட குமரன் இப்போது அருணிடம் திரும்பி    "ஓ ! அப்போ நீ Sincere-ஆ Love பண்ற?"

"ஆமா"    

"in that sense, அவளோட ஆசை, கனவு, குடும்பம், லட்சியம் எல்லாத்தையும் சேர்த்து?".

"Yes. அது மட்டும் இல்லாம I'm not Dominating Her. அவளுக்கு Freedom கொடுக்குறேன்".

"சரி அப்போ ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் அருண். உனக்கு மட்டுமில்ல, உங்க எல்லாருக்கும் தான். நீங்க காதலிக்கிற பொண்ணு உங்களுக்கு ரொம்ப தூரத்துல இருந்துகிட்டு உங்களுக்கு Phone பண்ணி 'எனக்கு இப்போ Sex வெச்சுக்கணும் போல இருக்கு. என் Friend ஒருத்தன் இருக்கான். May I?'னு உங்ககிட்ட உங்கள மதிச்சு Permission கேட்டா....Mostly யாரும் அப்படி கேக்க மாட்டாங்க, They just go on but ஒருவேளை அப்படி உங்ககிட்ட கேட்டா... அவளோட ஆசைய மதிக்கிற காதலனா What will you say?"

குமரனுடைய இந்த கேள்வி எங்களை அதிர வைத்தது. யாரோ ஒருவர் கலவி கொள்ளும் சத்தத்தை முதல்முறையாக மொபைலில் கேட்கும் பதின்பருவ குழந்தையை போல இந்த கேள்வி எனக்கு அப்பட்டமாக இருந்தது.செவி கூச வைத்த இந்த கனமான கேள்வி தான் எங்கள் உரையாடலின் முடிவுரை. அந்த கேள்விக்கு ஒரு நீண்ட மௌனத்தை தான் நாங்கள் பதிலாக கூறினோம். அந்த கிராமத்தை விட்டு வெளியேறும்பொழுது எல்லோரும் ஒரு இறுக்கத்தோடு தான் போனோம்.

கண்ணன் மரணத்தை விட குமரனின் கேள்வி தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை நான் காதலிக்கும் பெண் அப்படி கேட்டால் நான் எப்படி எதிர்கொள்வேன்? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. காதலுக்காக (அதன் பெயரில் நிகழ்த்தப்படும் சம்பாஷணைக்காக) இன்னொரு தற்கொலை எங்களுக்கிடையில் நிகழாது.


Rate this content
Log in

Similar tamil story from Action