Siva Kamal

Drama

4.5  

Siva Kamal

Drama

பாவனைகள்

பாவனைகள்

9 mins
23.4K


குதிங்காலிட்டு உட்கார்ந்தான். சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான். ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டி - இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான். ம்கூம்...எப்படி உட்கார்ந்தாலும் - பசித்தது.


குதிங்காலிட்டு வயிற்றில் முழங்கால்கள் அழுத்த உட்கார்வதில்தான் கொஞ்சம் பசியும் வலியும் தெரியாமலிருந்தது.


சனி, ஞாயிறுகிழமைகளில் பனியன் துணியில் கல் பாசி, ஜிகினா வைத்துக்கொடுத்தால் ஒரு பீஸ் 10பைசா.அந்த கல்வைத்த ஜிகினா பாசிகள் பனியன் துணிக்கு ரொம்ப சொர சொரப்பாயிருந்தது. பசையை இழுக்கு முன்பே விரலோடு வந்தது. எரிச்சல். துணி 'வழவழ ' வென்று இருந்தால்தான் ஒட்டுறதுக்கும் வேகம் வரும். இடையிலே ரெண்டு கட்டு இப்படி மட்டமான கல் பாசி இருந்துட்டா கேட்க வேண்டாம். ஒட்ட எரிச்சல் எரிச்சலா வரும்.பனியன் துணியில் வரையப்பட்ட டிசைனில் பாசி வைப்பது சிறிது மாறினாலும் அந்த சனியன் புடுச்ச கான்ட்ராக்ட்காரன் பீஸ் ரேட் கம்மி பண்ணீறுவான்.


ஒட்டவேண்டிய பனியன் கட்டுகள் இன்னும் ரெண்டு தான் இருந்தது. இந்த ரெண்டையும் ஒட்டி முடிச்சுட்டா கையைக் கழுவிறலாம். பிறகு , நைட்டு சாப்பிட்ட பிறகு உட்கார்ந்தா முடிச்சிறலாம் இதில் ஒரு கட்டு ஒட்டி முடிக்கு முன்னமே மாலை வெளிச்சம் மங்கி விடும் போலிருந்தது. விளக்கைத் துடைத்துப் பொருத்தணும்.


இருட்டி விட்டாலும் கூட வேலை முடியப் போகிற சிறு சந்தோஷத்திலும் உற்சாகத்திலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்றாலும் அப்பா வந்துவிட்டால் " வெளக்கைப் பொருத்தி வச்சிட்டு வேலையைப் பாரு , மூதேவி வந்து அடையப் போட்ருக்க ” - என்று சத்தம் போடுவார். அப்பா , வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரும்போது விளக்கெல்லாம் துடைத்து ஏற்றியிருக்கணும். குளிக்க பக்கெட்டில் தண்ணி இருக்கணும். சோறு பொங்கி ரெடியா இருக்கணும். இல்லாட்டா வசவுதான் யார் இருந்தாலும் சரி.


ஆனால் , அப்பா வருமுன்னே அம்மா வந்து விடுவாள். அவளே விளக்கைத் துடைச்சு ஏத்தட்டும். ராத்திரிக்கு ஒட்ட அம்மா எத்தனை கட்டு வாங்கிட்டு வாராளோ.... என்றைக்கும் போல இருவத்தி ஒண்ணு வாங்கிட்டு வந்தாளானால் , இன்னைக்கும் படுக்க பன்னிரண்டு மணிக்கு மேலே ஆயிரும். நேத்து ஒட்டி முடியும் போது அம்மா சொல்லி வந்த கதை பாதியிலேயே நின்று விட்டது. அந்த அரக்கன் தன் உயிரை எங்கு தான் வைத்திருப்பான்?...இன்றைக்கு சாப்பிட்டு முடிந்து கட்டு ஒட்ட ஆரம்பிக்கவுமே அம்மாவை கதையை ஆரம்பிக்கச் சொல்லணும்.


தெருவில் விளையாடி முடித்த குட்டித் தம்பி வீட்டுக்கு ஓடி வந்தான். அடுப்பங்கரை வரை வேகமாய் ஓடி அம்மாவைக் காணாமல் கொஞ்சம் நின்று திகைத்து பின் திரும்பி ஒட்டிக் கொண்டிருந்த இவனருகில் வந்து நின்று “க்கும்... க்க்கும் " என்று மெல்ல சிணுங்கினான்.


அரைஞாண் கயிற்றோடு அம்மணமாய் நின்ற அவன் மேலெல்லாம் தெருப்புழுதி , அவன் சிணுங்கல் பாஷை இவனுக்கு புரிந்தது.


" என்னலே பசிக்குதா "


" ம்.. ம்க்கும் "


" சித்த இரு....அம்மா வந்துருவா "


இந்த பதில் போதுமானதாயில்லை. அவன் மீண்டும் கொஞ்சம் பெரிதாகவே - சிணுங்க ஆரம்பித்தான். அது ஒரு பெரிய அழுகைக்கு முஸ்தீபு. இது அவனுக்கு சாப்பாட்டு நேரம்.


விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் எல்லோரும் “ அவுங்க அவுங்க வீட்லே போயி சாப்பிட்டுட்டு வாங்க ” என்று கோரஸ் பாடி விளையாட்டுக்கு இடைவேளை விட்டிருக்கும் நேரம் இது.

அங்கிருந்து வேகமாய் ஓடி வந்து சோற்றில் விழுந்து எழுந்து மறுபடி போய் தெருவிளக்கு அடியில் ஆட்டம் போட வேண்டும். இன்னும் அம்மாவையே காணோம்.ஒட்டிக் கொண்டிருந்த இவன் எழுந்து நின்று உடம்பை முறுக்கி 'ங்ங்ங்க்.... ' என்று சோம்பல் முறித்தான். லேசாய் அவிழ்ந்திருந்த பித்தானில்லாத டவுசரை கொஞ்சம் இறுக்கி முடிந்து வயிற்றில் செருகினான். தம்பி இன்னும் அழுது கொண்டுதான் இருந்தான். இந்நேரம் அம்மா மட்டும் வீட்டில் இருந்தாளென்றால் பெரிய ஒப்பாரியே வைத்திருப்பான்.


"அழாதேடா... " என்று சொல்லி தம்பியை ஆதரவாய் அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே இருள் மண்டிக்கிடந்தது. ஒன்றும் தெரிய வில்லை. தெளிவாய் ஏதாச்சும் தின்பதற்கு லாயக்காய் இருக்கிறதாவென்று தேடிப்பார்த்தான். சட்டிகள் , டப்பாக்கள் , டின்களில் துழாவினான். ஒரு டின்னில் கொஞ்சம் அரிசி கிடந்தது. ஒரு கை அள்ளி தம்பியின் வாயில்போட்டு " இதத் தின்னுகிட்டே சித்த நேரம் வெளாடிட்டு வா... அதுக்குள்ளே அம்மா வந்துருவா... " என்று சொல்லி முதுகில் தட்டினான்..!

அவனும் 'சரி இவனிடம் அழுது லாபமில்லை' என்று முடிவு செய்து வெளியே ஓடினான். தானும் ஒருகை அரிசியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் ஒதுக்கியபடி திரும்ப வந்து ஒட்ட உட்கார்ந்தான்.


சும்மா அரிசியைத் தின்னா வாய்ப்புண் வரும் என்று அம்மா சொல்வாள். தினமும் தின்னாத்தானே!...


முழங்கால் மூட்டில் வலி , மடக்க முடியாமல். இதுக்குத் தான் ஒரேயடியாக ஒட்டி முடிச்சிட்டு எழுந்திருக்கணும்ங்றது. ஒரு தடவை லேசாய் இடையில் சோம்பல் முறிச்சுட்டா பிறகு உடம்பு 'மக்கர்' பண்ண ஆரம்பிச்சுரும்.


வாயில் ஒதுக்கியிருந்த அரிசி ஊறிப்போய் மெல்வதற்கு வாகாய் ஆகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மெல்ல ஆரம்பிக்கவும் சுகமாய் சுவையாய் இருந்தது. அந்தச் சுவை தந்த வேகத்திலேயே பனியன் துணிகளை ஒட்டி எறிய ஆரம்பித்தான். அம்மாவை என்ன இன்னும் காணோம். நைட்டுக்கு பீஸ் கட்டு வாங்கிக் கொண்டு வழியில் அப்படியே கடைக்கும் போயிருப்பாளோ. வீட்டின் சிறு ஜன்னல் வழியே தெரு விளக்கின் வெளிச்சம் சதுரமாய் இவன் பக்கத்தில் வந்து விழுந்தது. பசைப்பலகை மீது வெளிச்சம் படுமாறு நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். வாசலில் அம்மா வந்து நின்றாள். பெட்டியை இறக்கி வைத்து விட்டு அவசரமாய் உள்ளே நுழைந்தாள்.


"அப்பா வந்துருச்சாடா "


"இல்லம்மா.... எத்தனை கட்டு வாங்கியாந்த... "


"அந்த எடுபட்டபய இன்னைக்கு பதினாலு கட்டுக்கு மேல தரமாட்டேனுட்டான்... "


"பசைக்கு என்ன மாவு என்னம்மா முக்கா டப்பாதான் இருக்கு..."


"ஆமா... அவன் தான் பாசி,பசையெல்லாம் தங்கத்தை நிறுக்கிற மாதிரியல்ல நிறுத்துப் போடுறான்... தம்பி வந்தானா.. "


"பசிக்குதுன்னு வந்தான். இம்புட்டு அரிசியைக் குடுத்து வௌயாட அனுப்பினேன்.... "


"சரி சரி. வெளாடிட்டு வரட்டும். நீ சட்டுன்னு ஒட்டிட்டு எந்திரி , நான் உலையை வைக்கற"


உலை கொதித்துக் கொண்டிருந்தது. அம்மா அம்மியில் அரைத்துக் கொண்டிருந்தாள். கையை கழுவிய பிறகும் விரலில் சிக்கென ஒட்டியிருந்த பசையை நகத்தால் சுரண்டிப் பிய்த்துக் கொண்டிருந்தான். அப்பா ரொம்ப அவசரமாய் வந்தார்.


"என்னடி இன்னும் சோறாக்கலையா "


"மத்தியானம் ஒட்டி முடிக்க கொஞ்சம் லேட்டாயிப் போச்சுங்க. அதனாலே சாயந்திரம் பனியன் கம்பெனி போயிட்டுவர நேரமாவிப் போச்சு... நீங்க குளிங்களேன் , அதுக்குள்ளே வடிச்சிர்றேன்"


"குளிக்கல்லாம் நேரமில்லடி.... இப்பப் போகணும் இன்னைக்கு நைட்டு வேலை இருக்கு..."


அவசர அவசரமாய் கைகால் அலம்பி ரெண்டு டம்ளர் நீச்சத் தண்ணியைக் குடித்து விட்டு "சோத்தப் பொங்கி பயகிட்ட குடுத்துவிடு , வாரேன்... " என்று சொல்லி விட்டு வேகமாகப் போனார்.


பசையைப் பிய்த்துக் கொண்டிருந்த இவனுக்கு சந்தோஷம். அப்பா வேலை பார்க்கிற அந்த ஆயில் மில்லுக்கு போவதென்றாலே இவனுக்கு படு உற்சாகம்தான். இந்த பனியன் துணி , பசைகளின் நெடியிலேயே மூழ்கிச் சலித்துப் போன மூக்கு வித்தியாசமான எண்ணெய் , கடலை , புண்ணாக்கு மணத்தில் சந்தோஷம் கொள்ளும்.


டிபன் பாக்ஸில் கொண்டு போன சோற்றை அப்பா சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் மலை போல குவித்து கிடக்கும் புண்ணாக்கு , கடல்போல சிமிட்டித் தளத்தில் விரித்துக் கிடக்கும் கடலைப்பருப்பு , தூரத்தில் ஆபீஸுக்குள் அழகாக சிகப்பு டெலிபோன் , வாசலில் நிற்கும் அழகான குட்டி பிளஷர் கார் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நேரம் போறதே தெரியாது.

பிறகு திரும்பி வரும் போது யாருக்கும் தெரியாமல் கம்பெனி தோட்டத்தில் இருக்கும் கொய்யாக்காவை பறித்து வாயில் குதப்பிக் கொண்டு ஜாலியாக பாக்ஸில் தம்பிக்காகவும் கொஞ்சம் கொய்யாக்கா ஒளித்துக் கொண்டு வரலாம். ஆனால் என்ன. ஒரு கஷ்டம். போய் திரும்பி வந்து நைட்டு பனியன் பீஸ் ஒட்டி முடிக்க நேரமாகும்.


"ஏலே.... ரெண்டு விறகு எடுத்துட்டுவா... " அடுப்பருகேயிருந்து அம்மா குரல் கொடுத்தாள். வாசலில் ஓரமாய் கட்டிக் கிடந்த வேலி முள் விறகில் ரெண்டு குச்சியை உருவினான். உருவிய வேகத்தில் சிறுமுள் விரலில் குத்தியது. ச்சி.... என்று எரிச்சலுடன் விறகை எறிந்துவிட்டு விரலை வாயில் வைத்து சப்பினான்


தெருக்கோடியில் 'டைண் டைண் ' என்று மணியடிக்கிற சப்தம் கேட்டது. ஆமா. இது அந்த மிக்சர் வண்டியோட சத்தம்தான். அவனுக்கு நல்லாத் தெரியும். அந்த மணிச்சத்தம் இல்லா விட்டாலும் கூட அந்த வண்டியின் சக்கர டயர்கள் மண்ணில் "நெறுநெறு ” வென்று உராய்கிற சத்தத்தை வைத்தே கூடச் சொல்லிவிடுவான். மணிச்சத்தம் கேட்டதும் டவுசரைக் கையால் பிடித்துக் கொண்டு தெருவுக்கு வேகமாய் ஓடினான்.


"ஏ....எங்கடா போற" என்று அம்மா அலறியது கூட செவியில் விழவில்லை. அந்தத் தெருவைச் சேர்ந்த இவனைப் போன்ற இவன் தம்பியைப் போன்ற இன்னும் நிறையச் சிறுவர்கள் அரைகுறை ஆடையோடும் அம்மணமாயும் ' ஹைய்ய் ' என்ற கூப்பாடுடன் மிக்சர் வண்டியை நோக்கி ஓடினர். தினமும் இந்நேரம் இந்தத் தெருவில் நுழைகிற அந்த வண்டியை தெருக்கோடியிலேயே வரவேற்று அதனோடு கூடவே நகர்ந்து அந்தக் கோடி வரை சென்று வழியனுப்புவார்கள் அந்தச் சிறுவர்கள்.


நாலு சக்கர தள்ளுவண்டி. வகை வகையான பண்டங்கள். அழகழகாய் அடுக்கியிருக்கும். சுற்றிலும் கண்ணாடி அடைந்திருக்கும். உள்ளே எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பண்டங்களெல்லாம் கண்ணாடி வழியே வெளித் தெரியும். தேர் போல மெல்ல நின்று அசைந்து நகரும்.


"டேய் இன்னைக்கு பதினெட்டு ஜிலேபி தாண்டா இருக்கு... நாலு வித்துப்போச்சுடா.... ”


"ஆமா யாருடா ஜிலேபி வாங்கியிருப்பாங்க... ”


"மூர்த்தி தெருவிலே யாராச்சும் வாங்கியிருப்பாங்க... "


"ஜிலேபியிலிருந்து என்னமோ வடிஞ்சிக்கிட்டிருக்கே என்னடா அது..."


"அதா , அது , தேன்... "


"ஏ... இவனைப்பாரு... தேனாம்.... அது நெய்யிடா... "


"போடா இவனே... நெய்யாம். நெய் செகப்பாவாடா இருக்கும்.... "


"மாவு , சீனி , கலர்ப்பொடியெல்லாம் போட்டா சிகப்பா ஆகாதோ.. "


"ஆமா... இவந்தான் கண்டான்... "


"நீ கண்டியோ.. "


" ஏ... தூரப் போங்கலே.... மூதிகளா.. " என்று வண்டிக் காரன் விரட்டினான். பிள்ளைகள் வண்டியை விட்டு தள்ளி இரண்டடி போய் - இரு பக்கமாய் முற்றுகையிட்டது போல கூடவே நகர்ந்தனர்.


'ஏ... இடிக்காதடா... தள்ளாதடி.... எங்கம்மாட்ட சொல்லிருவேன்.. '


ஒரு பையன் திடீரென சத்தமாய் 'ஓரம்போ ஓரம்போ ' என்று அடிக்குதித்தபடி பாட ஆரம்பித்தான். எல்லாப் பிள்ளைகளும் சிரித்தன. நாலைந்து பேர் கூடச் சேர்ந்து பாடி ஆடினார்கள். எல்லாருடைய முகத்திலும் சிரிப்பு சந்தோஷம் யாரோ ஏதோ பண்டம் வாங்கினார்கள். வண்டி நின்றது. நின்றதும் பிள்ளைகள் வண்டியுடன் ஒட்டிக் கொள்வது போல நெருங்கி இடித்துக்கொண்டு நின்றார்கள்.


அவரவர்களுக்குப் பிரியமான பண்டத்தை கண்ணாடி வழியே பார்த்தபடி , ஒருத்தன் மணியை இழுத்து ' டைண் ' என்று ஒரு அடி அடித்தான். சத்தமாய் சிரிப்பு கிளம்பியது , கண்ணாடிக்கு வெளியே தெரிகிற லட்டுக்கு நேராய் ஒருத்தன் கையை நீட்டி ஒரு லட்டை எடுப்பது போல பாவனை செய்து வாயைப் பெரிசாகத் திறந்து லட்டை உள்ளே திணிப்பது போலக் காட்டி "ஞ்- - -ஞம் - ஞ்ஞம் - ஞம்..." என்று சத்தமிட்டு மெல்லுவதாகப் பாவனை செய்தான். எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். மென்று முடித்து விழுங்குவது போல கழுத்தை ஆட்டி எச்சிலை விழுங்கி விட்டு அவனும் பலமாய்ச் சிரித்தான்.


அவ்வளவுதான் எல்லாப் பிள்ளைகளும் ஆள் ஆளுக்கு கையை நீட்டி அவரவர்களுக்குப் பிரியமான பண்டத்தை லட்டு , அல்வா , ஜிலேபி என்று வாயில் எடுத்துப் போடுவது போல பாவனை பண்ணி மெல்ல ஆரம்பித்தார்கள். "ஞ்ஞம்.... ஞ்ஞம்... ஞ்ஞம்... ' என்ற சத்தம் பெருங்கூப் பாடாய்க் கிளம்பியது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.


இவனது குட்டித் தம்பியும் அவனைப் போல சில சிறு குழந்தைகளும் கையை உயர்த்தி நீட்டியும் பண்டத்துக்கு நேராய் எட்டுகிற அளவுக்கு உயரவில்லை. காலை எக்கி எக்கி எப்படியாவது தாங்களும் மற்றவர்களைப் போல செய்துவிட வேண்டுமென பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இதில் முயன்று சலித்துப்போன ஒரு சிறுவன் எம்பிக் குதித்து லட்டைப் பிடித்தான். அவசரத்தில் கண்ணாடியில் கை பலமாய்ப் பட்டு 'டப்' என்று சத்தம் வந்தது. வந்ததே கோபம் வண்டிக்காரனுக்கு!


“ நானும் பார்த்துக் கிட்டு இருக்கேன் கழுதைக..." என்றபடி கையை ஓங்கிக் கொண்டு இவர்களை அடிக்க வருகிறவன் போல வந்தான்.


'ஹே...' என்று கத்தியபடி பிள்ளைகள் சிதறி ஓடினார்கள். இவனது குட்டித் தம்பி மட்டும் வண்டிக்காரன் கையில் அகப்பட்டுக் கொண்டான். அவன் காதைப் பிடித்து திருகினான். அழக் கூடத் தோன்றாமல் தம்பி திகைத்து நின்றான். கூட்டத்தோடு சிதறிய இவன், தம்பி அகப்பட்டுவிட்டதைக் கண்டு மீண்டும் ஓடி வந்தான்.


"யோவ்.... விடுய்யா என் தம்பியை..."


வண்டிக்காரன் இவன் மண்டையிலும் ரெண்டு தட்டுத் தட்டினான். "ஆள் எம்புட்டுக்கானு இருந்துகிட்டு யோவ்...போட்டா பேசுறே.. ஒடுங்கடா..." என்று இருவரையும் விரட்டி விட்டான்.


தம்பியோடு கொஞ்சதூரம் ஓடி , நின்று , பின்திரும்பி , வண்டிக்காரனைப் பார்த்து பலமாய் "போடா..." என்று கத்திவிட்டு தம்பியை இழுத்துக் கொண்டு திரும்பிப் பாராமல் வீட்டுக்கு ஓடினான்.


அம்மா சோற்றை வடித்துக் கொண்டிருந்தாள். தம்பி அம்மாவிடம் ஓடி அவள் முதுகைப் பற்றியபடி பெரிதாகச் சிணுங்க ஆரம்பித்தான்.

"சித்த பொறுத்துக்கடா என் கண்ணுல்ல... " அம்மா சமாதானப்படுத்த ஆரம்பிக்கவும் இவன் இன்னும் பெரிசாய் சிணுங்கலானான்.


"சொன்னாக் கேளு" என்று உருட்டினாள் அம்மா. தம்பி பிறகும் அடங்காமல் சிணுங்கியபடி அம்மாவின் சேலையைப் பிடித்து இழுத்தான்.


"என்ன... சொல்லிக்கிட்டே இருக்கேன்... சோத்தை வடிக்கமுன்ன என்ன உனக்கு...." என்றபடி அவன் முதுகில் ஒன்று வைத்தாள். உடனே வீலென்று அலறியபடி வாசலுக்கு ஓடி கீழே விழுந்து புரண்டு அழுதான். கொஞ்ச நேரம் புரண்டும் தேற்றுவதற்கு யாரும் வராதது கண்டு எழுந்து உட்கார்ந்து அழத்துவங்கினான்.


அதுவரைப் பார்த்துக் கொண்டிருந்த இவன், தம்பியிடம் போய் "அழாதேடா.... அப்பாகிட்ட சொல்லிருவோம்..."


"..........."


"நாளைக்கி அப்பாகிட்ட சொல்லி அல்வா வாங்கித் திம்போம் அழுகாத... "


அல்வாவைச் சொன்னதும் ஒரு கணம் அழுகையை நிறுத்தினான்.காய்ச்சல் வந்து ஒரு தடவை ஆஸ்பத்திரி போன போது இவனுக்கு அப்பா அல்வா வாங்கிக் கொடுத்தார். அந்த சுவையை கொஞ்சம் நினைத்துப் பார்த்தான். மிக்சர் வண்டிக்குள் அகலத் தட்டில் இருந்த அல்வா நினைவுக்கு வந்தது. தொடர்ந்து வண்டிக்காரனிடம் சற்றுமுன் தனியாக அகப்பட்டுக கொண்டது நினைப்பில் வந்தது. அதை நினைத்ததும் மீண்டும் அழத் தொடங்கினான்.


"டேய். அழாதடா...இப்ப நான் அப்பாவுக்கு சோறு கொண்டுட்டுப் போவன்ல அப்ப வரும் போது உனக்கு திங்க கொய்யாக்கா கொண்டாரேன். என்ன "


இதைச் சொன்னதும் மீண்டும் அழுகையை நிறுத்தினான். அல்வாவை நம்புவதைவிட கொய்யாக்காவை நம்பலாம். இது நிச்சயம் கிடைக்கும். அண்ணனால் இதைக் கொண்டு வர முடியும்.


ஆனால் உடனே அழுகையை நிறுத்த வேண்டாம். அம்மா வந்து சமாதானப்படுத்தட்டுமே. அவதானே அடிச்சா.


மீண்டும் அழ ஆரம்பித்தான். ஆனால் சுருதி குறைந்திருந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama