Siva Kamal

Abstract Drama

4.4  

Siva Kamal

Abstract Drama

வெற்றிடம்

வெற்றிடம்

8 mins
797


முதல் முத்தம் பற்றி சங்கர் ஆயிரம் கதைகளில் படித்திருக்கிறான் படங்களில் பார்த்திருக்கிறான் என்றாலும் அவனுடைய அனுபவம் அதில் எது மாதிரியாகவும் இல்லை . ஒரு வேளை கால அவகாசம் வாய்த்த இடம் காரணமாக இருக்கலாம்.


ஓட்டலில் பேமிலி அறையின் மங்கிய வெளிச்சத்தில் ஆர்டர் செய்த பலகாரம் வருவதற்குள் வேறு எவரும் பேமிலி ரூமில் நுழைவதற்குள் என்று நொடிக்கணக்கில்தான் அவனுக்கு அவகாசம் இருந்தது. அதிலும் அவன் கீதாவின் பக்கம் திரும்பிய நிமிடம் அவள் கவனித்து அவனுடைய உத்தேசத்தை ஊகித்து அவள் முகத்தை இவன் பக்கம் திருப்ப அதை இவன் எதிர்பாராததால் குறி தப்பி பாதி காது பாதி கன்னம் நடுவில் அவளுடைய கேசம் என ஆகி விட்டது. அதற்கே பெரும் மன அவஸ்தையாகி விட்டது.


“ஒழுங்கா ஒரு முத்தம் கூட கொடுக்கத் தெரியலே.நீங்கள்ளாம்..காதலிச்சு...” என்று கீதா வெளியே வந்து சீண்டினாள். அவன் ரொம்ப நொந்து போனான்.


என்றாலும் அதையும் மீறி முதல் முத்தம் ஈரமாய் நினைவில் வருடிக் கொண்டுதான் இருந்தது.


அடிக்கடி கீதா இதைச் சுட்டி கேலி செய்து கொண்டிருக்கவும் சங்கர் "சரி.நீ தான் ஒழுங்கா ஒண்ணு குடுத்துக் காட்டேன்" என்றான். ஆசை தோசை அதெல்லாம் கலியாணத்துக்குப் பிறகுதான் என்று புத்திசாலித்தனமாக தப்பித்தாள். சங்கருக்கு பல் நற நற என்று இருந்தது. பூங்காவின் புல்லைப் பிடுங்கிக் கடித்து மென்றான்.


கலியாண விஷயத்தை யார் முதலில் அவரவர் வீட்டில் தைரியமாகச் சொல்கிறார்கள் பார்க்கலாமா என்று ஒரு நாள் பேச்சு வந்துவிட்டது. அங்கு சுற்றி இங்கு சுற்றி பேச்சு இங்கு வந்து நின்றதும் சங்கர்தான் முதலில் திகைத்தது. அப்பாவை நினைத்தாலே நாக்கு உலர்ந்தது. ரொம்பக் கரெக்ட்டான ஆசாமி அவர். சாதி விட்டுக் கலியாணம் என்ற பேச்சை எப்படி எடுப்பது? அந்தக் கடுவன் மீசையே மிரட்டுமே.


கீதா மறுவாரம் தன் அண்ணனோடு பூங்காவுக்கு வந்து இவர்தான் அவர் என்று அண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டாள். எப்படி? என்று அண்ணன் போனதும் கண்ணைச் சிமிட்டினாள்.


ஏதாவது செய்தாக வேண்டுமென்று சங்கர் சூடாக “வர்ற புதன்கிழமை நமக்கு கல்யாணம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு, தயாராக இரு” என்று ஓங்கி அடித்தான்.


அவள் எதிர்பார்க்கவே இல்லை. இதை அண்ணனிடம் சொல்லியிருக்கலாமே என்று முனகினாள்.


சங்கர் அன்று இரவே நண்பர்கள் கையைப் பிடித்து காலைப்பிடித்து புதன்கிழமை ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டான். கை தட்டல்களுடன் தாலி கட்டி மாலை மாற்றப்போகும் நேரம் டாண் என்று கீதாவின் அண்ணன் ஆட்டோவில் வந்து இறங்கி விட்டான். கீதாவின் அப்பா அம்மாவுடன் கீதாவுக்கு தலை கால் புரியவில்லை. எங்க அண்ணன் ஆகுமா என்று சங்கரின் கையை அழுத்தினாள்.சங்கர் மூக்கு சுறு சுறு என்றது.


ரெண்டாவது நாள் கீதாவின் அப்பா உங்க அப்பா,அம்மா சரி சொல்றவரைக்கும் நீங்க நம்ம வீட்டிலேயே இருக்கலாம். மாடி அறையை ஒதுக்கிக் கொடுத்து விடுகிறோம் என்றார். கீதா பூரிப்பில் சிரித்து நின்றாள்.

எங்க அப்பான்னா அப்பாதான். சங்கர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்" நோ நோ. வீடெல்லாம் பாத்தாச்சு.வெள்ளிக்கிழமை பால் காய்ச்சணும்" என்று ஒரே போடாகப் போட்டான்.


கீதா "எங்கிட்ட கூட சொல்லவே இல்லியே" என்று சிணுங்கியதற்கு "இதெல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம், சொல்லிட்டா செய்யணும்" என்று கிண்டலாக சமாளித்தான்.


மறுபடி ராவும், பகலும் அலைந்து ஒரு வீட்டைப் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு "அப்பாடா உயிர் வந்தது” என்று வீடு வந்தான்.


கீதாவுக்கு வீடு ரொம்ப பிடித்து விட்டது. சின்னதாக கச்சிதமாக எல்லா வசதிகளும் உள்ளடக்கிய வீடு, வாடகை ஜாஸ்தி என்ற ஒன்றைத் தவிர வேறு ஒரு குறையும் அவளால் சொல்ல முடியவில்லை.


புது வீட்டில் தனித்து விடப்பட்ட இரவில் இருவரும் ரொம்பப் பிரியமாக இருந்தார்கள். கொஞ்சிச் கொஞ்சிப் பேசினார்கள். வாடா போடா என்று செல்லமாகக் கூப்பிட்டுக் கொண்டார்கள். ஒரே தலையணையில் இருவரும் தலை வைத்துக் கொண்டார்கள். அப்பதானே தலையணை மந்திரம் ஓத முடியும் என்று சங்கர் சொன்னான். ஏற்கனவே ததும்பியிருந்ததால் இதைக் கேட்டதும் கீதா விழுந்து விழுந்து சிரித்தாள். இருவரும் சிரித்தார்கள். அன்று ராத்திரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சிரித்தார்கள்.


ஆனால் ஒவ்வொரு சிரிப்பு முடிந்ததும் சிரிப்புக்கு அடியில் ஒளிந்திருக்கும் வெற்றிடம் வெளிப்பட்டு இருவரையும் மருட்டும். எதையாவது பேசி அதைக் கலைக்க முற்படுவார்கள். அல்லது பேசாமல் முத்தமிட்டு உடம்பின் உலகத்தில் சென்று மறைந்து கொள்வார்கள்.


அவன் புது வீட்டிலிருந்து ஆபீஸ் போக ஆரம்பித்தான். லீவு முடிந்திருந்தது. காலையில் டிபன் செய்து மதியத்துக்கு சேர்த்து சமைத்து டிபன் கேரியர் தந்து அவரை அனுப்பி என ஆரம்பிக்கும் நாட்கள் காலை இரவு காலை இரவு என கதவை பூட்டித் திறந்து பூட்டித் திறப்பது போல துரிதமாக கடந்து கொண்டிருந்தன.


ஆனால் அலுப்பு மிகுந்த பகல் முடிந்து வருகிற இரவுகள் முழுக்க முழுக்க இருவருக்கு மட்டுமாக இருந்தன.தூக்கமே வராது இருவருக்கும். தூங்கினால் அவரவர் உலகம் தனித்தனி என்று ஆகிவிடுமே என்று அஞ்சி ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் விழித்துக் கிடப்பார்கள், ஆனால் பிறகு எப்படியும் தூக்கம் வந்துதானே தீரும். மறுநாளே நீதான் முதலில் தூங்கிட்டே என்று பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வார்கள்.


முதலில் தூங்குகிறவர் பிரியம் குறைந்தவர் என்று எப்படியோ ஒரு விதி உருவாகி விட்டது. அதிலிருந்து தப்பிக்க பெரும் போட்டி ஆகிவிட்டது. பகலில் தூங்க நேரம் கிடைத்த நாட்களில் அவள் தாக்கு பிடித்தாள். சில நாள் அவன்.


ஆனால் ஆபீஸில் ஆடிட் இன்ஸ்பெக்ஷன் என்று அந்த சமயம் தொடர்ச்சியாக கனத்த வேலைகள் வந்தபோது அவன் தான் திணறிப்போனான், லேட்டாக வீடு வந்து சேருவான். செருப்பைக் கழற்றும் போது பிரியம் ஞாபகம் வந்து விடும். உடனே நேராகச் சென்று அவளை முத்த மிட்டு அவள் போட்டுத் தரும் வெந்நீரில் குளிக்க சாப்பிடும் போதே-கவனம் இடையிடையே இரண்டு வாய் அவளுக்கும் ஊட்டி சாப்பிடும் போதே கொட்டாவி வரும். கொட்டாவி வரவிடாமல் வாயை மென்று சமாளிப்பான். அல்லது முகத்தை அந்தப் பக்கம் திரும்பி அவள் பாக்காத சமயம் கொட்டாவி விடுவான். தாடையெல்லாம் வலிக்கும்.


அவள் சாயங்காலமே குளித்து உடை மாற்றி பூ வைத்து காத்திருப்பாள். நிறைய பேச வேண்டியிருக்கிறது போல் நிதானமாக ஆரம்பிப்பாள். அவன் சீக்கிரம் முத்தமிடுவான். அவள் கழுத்தை பின்னுக்கிழுத்து என்ன அவசரம் என்பாள். தூக்கம் வராமலிருக்க அவன் காலை காலை ஆட்டுவான். தண்ணீர் குடிப்பான். சரி ம்..சொல்லு என்று எழுந்து உட்காருவான்.படுப்பான். அவன் வருகிற வரத்தைப் பார்த்து சலிப்புடன் ம்.. என்று பேச்சை நிறுத்துவாள். அவளை முத்தமிட்ட நாலாவது நிமிஷம் அவன் தூங்கி இருப்பான்.


ஒரு நாள் இரவில் "வர வர உங்களுக்கு பிரியமே இல்லாம போச்சு' என்று லேசாய் அழுதாள். "ஏ மக்கு மக்கு.. எனக்கு உன்னை விட்டா இந்த உலகத்திலே யார்டி இருக்கா என்று அவள் எலும்புகள் நொறுங்கும்படி அணைப்பான். ஒரு நிமிஷம். ரெண்டு நிமிஷம். மூன்று நிமிஷம். எவ்வளவு நேரம் அப்படியே அதே இறுக்கத்துடன இருக்க முடியும். கை வலிக்கும் அல்லவா. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு இறுக்கமாக அதிக நேரம் அப்படியே இருக்கிறாயோ அந்த அளவு உன் அன்பு நெருக்கமானது என்று விதி உள்ளதல்லவா. கை வலிக்க ஆரம்பித்ததும் பிடி தளரும். இவ்வளவுதானா நம்ம பிரியம் என்று அவனுக்கே வருத்தமாயிருக்கும்.


தினமும் வீட்டு வாசலுக்கு பூக்காரன் வந்தான் என்றாலும் சங்கர் ஏன் சாயந்திரம் வரும்போது வாங்கி வரக்கூடாது?


வேறு என்ன நான் கேட்கிறேன்? ஒரு முழம் பூ, என் ஞாபகம் இருந்தால்தானே வாங்கி வருவீங்க.


ஆபீஸில் வேலை பெண்டு எடுத்தது. ஒருநாள் மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு ஆபீஸில் உட்கார்ந்தபடி கீதாவை நினைத்துப் பார்த்தான். பாவம். அவள் வேறு என்ன கேட்கிறாள்? என் அன்பைத்தானே கேட்கிறாள். அவள் முகம் மனத்திரையில் விழாமல் அவள் பேசிய வார்த்தைகள் மட்டும் விழுந்து கொண்டிருந்தன. யோசித்து யோசித்துப் பார்த்தும் கீதாவின் முகம் ஞாபகமே வரவில்லை. ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது. தலையை வறட்டு வறட்டென்று சொரிந்து பார்த்தான். கீதாவின் புடவை அவள் கழுத்து,ஏன் கன்னக்குழி மட்டும் கூட ஞாபகம் வந்தது. அவள் முகம் மட்டும் ஞாபகமே வரவில்லை .


மறுநாள் காலை ஆபீஸ் கிளம்பும்போது கீதாவின் புகைப்படம் ஒன்றை கேட்டு வாங்கி மணிபர்ஸில் வைத்துக் கொண்டான். அது அவளை உருக்கி விட்டது.அன்று பூராவும் அந்த மிதப்பிலேயே இருந்தாள். என்ன இருந்தாலும் அவர் என் பேபி தான என்று நெஞ்சுக்குள் நினைத்துக்கொண்டாள்.


ஆபீசுக்கு மதியம் போன் வந்தது. உடனே புறப்பட்டு வாங்கனு. ஆஸ்பத்திரிக்கு ஓடினான். கீதா அட்மிட் ஆகியிருந்தாள். அவளுடைய அம்மா பக்கத்தில் இருந்தார். தற்செயலா நாங்க கீதாவை பார்க்கப் போயிருந்தோம். எல்லாம் ஆண்டவன் செயல் என்று மாமியார் கண்ணை கசக்கிக் கொண்டு மேலே கையைக் காட்டினார்.


நாலாவது மாதத்தில் கருச்சிதைவு. டாக்டரம்மா ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரைகள் எழுதித் தந்தாள். மாமியாரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டான். நீங்க பாவம் ஆஸ்த்துமாவோட இங்க எதுக்கு நான் பாத்துக்கிடறேன். ஒரு வாரம் லீவு போட்டு கீதா பக்கத்திலேயே இருந்தான். ராத்திரி இடையில் மருந்து ஏதும் கொடுக்கணுமா டாக்டர் என்று கேட்டு வந்தான்.


ரொம்ப பெயின் இருந்தா மட்டும் நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவை இந்த மாத்திரை தரணும் என்றாள்.


கீதாவோ அவ்வளவா பெயின் இல்லே. தூங்கிடுவேன் மருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். சங்கருக்கு ஏமாற்றமாகி விட்டது. இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து கொடுத்து-அவளுக்கு உயிரைத் தரவும்...ம்...அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.


வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் நின்றாள் கீதா.அவ்வளவுதான் உன் டைம் ஓவர் என்று கண்ணாடி சிரித்தது. கீதாவா இது? ஒரு பக்கம் பார்க்கிறவர்கள் எல்லோரும் கீதாவா இது இப்படி இளைச்சுப் போயிட்டாளே என்று இரக்கப்படுவது இதமாக இருந்தாலும் கன்னம் குழி விழ சிரித்த சிரிப்பு போச்சு. சங்கர் வியந்து மயங்கிய கன்னக் கதுப்புகள் வற்றிப் போச்சே என்றிருந்தது. வயசான பொம்பிளை மாதிரி ஆயிட்டமே என்ற பெரும் சோகம் வந்து குவிந்தது


துருத்திய கன்ன எலும்புகளை மூடியிருக்கும் சதையின் அளவைப் பொறுத்துதான் முக லட்சணம். அழகு எல்லாம் ஒரு 200 கிராம் தசை வற்றினால் அவ்வளவுதான் என்று தத்துவம் பேசியது கண்ணாடி.


அடுத்த மாதம் மறுபடி உண்டாகி விட்டாள். வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. எந்நேரமும் புளிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் போல இருந்தது. அவள் மாங்காயும் ஐஸ் க்ரீமும் வாங்கி வர சொல்லி இரண்டு நாளாகிவிட்டது.அவளை அன்று ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவும் மறந்து விட்டது.வேலை மறதியில் இவனும் இருந்து விட்டான்.நாளை மறக்காமல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது வாங்கி தருதாய் உறுதியளித்தான்.


அவளுக்கு உடனே அழுகை வந்தது. உங்களுக்கு என் மேலே பிரியமே இல்லை. என்று விசும்பி விசும்பி சிறுபிள்ளை மாதிரி அழுதாள். அட கடவுளே எது சொன்னாலும் ஏன் இப்படி... சே... உன் இஷ்டப்படி செய் என்று வெளியே போய்விட்டான்.


திரும்பி வரும் போது மனசை நன்றாக தயார் செய்து கொண்டு வந்தான். வந்ததே சரி என்று அடுப்படியில் நின்று கொண்டிருந்த அவளை பின்புறமாக சேர்த்துக் கட்டிக் கொண்டான்.


"போதும் போதும். உங்க நடிப்பெல்லாம் இங்க வேண்டாம்" என்று அவனைத் தள்ளினாள். அவனுக்கு ரொம்ப ஆச்சர்யமாகி விட்டது. எப்படி கண்டு பிடித்தாள்?.சரியாக நடிக்கத் தெரியாமல் அவசரப்பட்டு விட்டேனா அல்லது நடிப்பை பெண்கள் லேசாக கண்டு பிடித்து விடுவார்களோ?


இரவு என்ன செய்வது என்று அவனுக்குக் குழப்பமாகி விட்டது. அவனுக்கு முதுகு காட்டி அப்புறம் திரும்பி படுத்திருந்தாள். தூங்கி விட்டாளா சும்மா கண்ணை முடி இருக்கிறாளா? எழுப்பலாமா? எழுப்பட்டும் என்று இருக்கிறாளா? அல்லது உண்மயிலேயே கோபமாய் இருக்கிறாளா? |


என்ன ஆனாலும் சரி என்று இடுப்பில் கையை வளைத்தான் மிக ஜாக்கிரதையாக மிக அன்பாக. ச்சீ என்று அவள் கையை எடுத்து எறிந்தாள். அவன் உடைந்து சுக்கு நூறாகிப் போனான். இப்புறம் இற்று விழுந்தான்.


ஒருமுறை மறந்தது ஒரு குற்றமா?அதனால் நான் அன்பில்லாதவன் ஆகி விடுவேனா?அழுகை வந்தது. ஆனால் கண்ணீர் வரவில்லை. கண்ணீர் வந்து அழுதாலாவது அவள் இரக்கப்படலாம். கண்ணீரே வரவில்லை.சும்மா பெருமூச்சுகளாக விட்டுத் தள்ளினான்.உண்மையிலேயே எனக்கு அவள் மேல் அன்பே இல்லையா?


மூன்று இரவுகள் இப்படியே கழிய நாலாவது நாள் தனிப் படுக்கை போட்டாள். இனிமே உங்களுக்கும் எனக்கும் என்ன? இருக்கு? குளிக்க டிரஸ் மாத்த தூங்க வீடு வேணும் உங்களுக்கு. ஒரு லாட்ஜ், அவ்வளவுதானே. உங்களுக்கு பணிவிடை செய்ய நான் ஒரு வேலைக்காரி. கூர்மையான தாக்குதல். அவன் ஏதோ சற்று உளறிப் பார்த்தான். ஒன்றும் எடுபடவில்லை. தோற்று கை கால் சோர்ந்து விழுந்தான்.


தூக்கமே வரவில்லை. எவ்வளவோ புத்தகம் படிக்கிறோம். இதற்கு தீர்வு எழுதியவன் எவனும் இல்லையா? இரவு நெடு நேரக் குழப்பத்திற்குப் பிறகு துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து முரட்டுத்தனமாக அவளை ஆக்கிரமித்தான். சீ. தொடாதீங்க சொன்னா கேளுங்க. என்று எதிர்ப்பு சொல்லிக் கொண்டே அவள் வரவேற்றாள். இந்த விஷயம் தெரியாமல் இத்தனை நாள் முட்டாளாக இருந்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டான். அப்படி கொஞ்ச நாள் ஓடியது. ஆனால், நாளுக்கு நாள் இருவருக்கிடையில் வெளிச்சம் மங்கி வருவதை கீதாதான் உணர்ந்து அவ்வப்போது அழுதுகொண்டாள். மக்கு.


தலைப்பிள்ளை ஆண் பிள்ளை என்தால் சங்கர் வீட்டிலும் சந்தோஷம். வராத சங்கரின் அப்பா வந்துவிட்டார் ஆனால் வந்த அப்பா ஒரு கேள்விக்குண்டு வைத்துப் போனார். காதல் திருமணம் ஆனால் என்ன? குழந்தைக்கு செய்ய வேண்டிய அவர்கள் செய்ய வேண்டாமா? அவர் பேசியதை கீதாவின் அண்ணன் முகத்தில் சலனமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.


நகைநட்டு எதுவும் இதுவரை கேட்காத சங்கர் பரிதாபமானவனாகவும் உயர்ந்தவனாகவும் தியாகியாகவும் ஒன்றும் செய்யாத கீதா வீட்டார் குற்றவாளிகளாகவும் ஒரே நாளில் ஆகி விட்டார்கள்.


கீதா இன்னும் கொஞ்சம் கோபமானாள். அப்பா பேசியதற்கு நான் என்ன செய்வேன் என்று இவன் புலம்பினான்.


குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று வாரத்தில் ரெண்டு நாளாவது போன் வருவது வழக்கமாயிற்று.ஆபீசிலிருந்து பதற்றத்துடன் வீடு போய் ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்வான்.


கீதாவுக்கு தைரியமே கிடையாது.சின்ன விஷயத்துக்கெல்லாம் உடனே ஆஸ்பத்திரி என்றால் எப்படி? அல்லது அவளாகப் போகணும். அதுக்கும் தைரியமில்லை. கீதாவின் அப்பாவிடம் இவன் தற்செயலாக ஒரு நாள் பேசியது கீதாவின் அம்மா வழியாக கீதாவிடமே போய்ச் சேர்ந்தது. இது அவனுக்குத் தெரியாது.


"தைரியமானவளா ஒருத்திய பாத்து இழுத்துட்டுப் போயிருக்க வேண்டியதுதானே? ராத்திரி இரும்" கீதாவின் கேள்வி செவிப்பறைகளில் விழுந்து அதிர்ந்து ரீங்கரித்தது. நாளுக்கு நாள் அவளுடைய கோபம் அதிகமானது.


ரொம்ப பேசினே நாக்கை இழுத்து வச்சி அறுத்துடுவேன் என்று ஒரு நாள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.


இப்போது பேச்சு வார்த்தை கிடையாது. அவள் வேலைகளை அவள் செய்வாள். அவன் வேலைகளை அவன் செய்வான். குழந்தையின் வேலைகளை இருவரும் செய்வார்கள். ஆனால் ஒரு வார்த்தை பேச்சு கிடையாது.


ராத்திரி குழந்தை அழுதால் அவன் எழுந்திருக்கட்டுமே.அவனுக்கும் தானே அது குழந்தை, தினமும் நான்தான் சாகணுமா என்று அவள் அசந்து தூங்குவது போல கிடப்பாள். எப்படியும் அவள் எழுந்துதானே தீரணும் என்று அவனும் கிடப்பான். கடைசியில் அவள் தான் எழுந்து “கடவுளே என்னைக் கொண்டு போக மாட்டியா” என்று உரத்த வேண்டுகோளுடன் பால் பாட்டிலை எடுத்து குழந்தையை தூங்க வைப்பாள்.


“சும்மா அலட்டாதே. நேத்து நைட் முழுக்க குழந்தையை நான் தான் பாத்துருக்கேன். ஒரு நிமிஷம் தூங்கவிடலை அவன். என்னமோ இவதான் கிடந்து சாகிற மாதிரி புலம்புறா”.


மறு ஞாயிற்றுக்கிழமை சொந்தகார்ர்கள் குடும்பத்துடன் குழந்தையை பார்க்க வந்திருந்தனர்.குழந்தைக்கு அழகான 'ஸ்வெட்டர்' ஒன்று வாங்கி வந்திருந்தார்கள். கீதா சங்கரை ஒரு பார்வை பார்த்தாள். குழந்தைக்கு ஸ்வெட்டர் வேண்டுமென ஒரு மாசமாக அவளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.கல்யாணத்தின் போது பக்கபலமாக நின்ற சொந்தம் ஆன படியால் இருவரும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.சங்கர்-கீதா என்றில்லாமல் ஊரார் வீட்டு கதைகள் என பேச்சு சுற்றிச் சுற்றி வந்தது.


அவர்கள் நாள் முழுக்கச் சிரித்துவிட்டுப் போனதால் சிரிப்புக்கு அடியிலிருந்து வெற்றிடம் ஒட்டு மொத்தமாக வீட்டைச் சூழ்ந்திருந்தது. நடுவில் குழந்தை உறங்க இருவரும் கட்டிலில் படுத்திருந்தார்கள். ஃபேன் வேகமாய் சுற்றியும் காற்று வரவில்லை .


விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. அவள் எழுந்து எப்படியும் அணைத்து விடுவாள். அவன் எப்படியும் எழுந்து அணைத்து விடுவான்.Rate this content
Log in

Similar tamil story from Abstract