Siva Kamal

Children Stories Romance Children

4  

Siva Kamal

Children Stories Romance Children

தேனும் கனியும்

தேனும் கனியும்

3 mins
1.1K


நாங்கள் இருபாலர் பள்ளியில்தான் படித்தாலும் ஹார்மோன்களின் பொங்குதலை பத்தாம் வகுப்பில் தான் கண்டு கொண்டோம்...எங்கள் வகுப்பை ஒட்டிதான் 11,12ஆவது ஆய்வக அறை... எங்களை விட ஒரு வயது அல்லது ரெண்டு வயது மூத்த பெண்களை ரகசியமாய்க் காதலித்துக் கொண்டிருந்தோம் . உற்றுப் பார்ப்பதெல்லாம் கிடையாது. அந்த ரூமுக்கும், எங்கள் வகுப்பும் இடையே ஒரு தட்டி மட்டுமே இருந்தது.. நாங்கள் சரியாக இதய வடிவத்தில் ஒரு ஓட்டை போட்டோம்... அதைச் செய்து முடித்த நண்பன் இப்போது ராணுவத்தில் தேசசேவையாற்றிக் கொண்டிருக்கிறான். 

இரண்டு பெண்களை மட்டும் எல்லோரும் காதலித்தோம். ஒரு பெண்ணுக்குத் 'தேன்' என்றும் இன்னொரு பெண்ணுக்குக் 'கனி' என்றும் பெயர் வைத்திருந்தோம்.. மதியங்களில் எங்கள் கச்சேரி துவங்கி விடும். இருவரையும் 6 பேர் காதலித்தோம். மற்றவர்கள் காதலின் துணைவர்கள்.. 6 பேருமே தேன், கனி இருவரையுமே காதலித்தோம். பாடல்களின் வழியாகவே எங்கள் 'தெய்வீகக் காதலை' சொல்லிக் கொண்டிருந்தோம். அவர்களும் அதை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

நாங்கள் பாட ஆரம்பித்தால் அங்கு சபை அமைதியாகி விடும். ரெண்டு பேர் பாடுவோம். நானும் கிருஷ்ணாவும் ... சிலநேரங்களில் பாடலோடு நிறுத்த மாட்டோம். 'சித்தத்தினால் , கொண்ட பித்தத்தினால் , காதல் யுத்தத்தினால் , எனது ரத்தத்தினால் , கவிதை எழுதி வைத்தேன்' தோழி !இரு கண்ணிருந்தால் வாசித்துப் போடி!' என்று நான் வைரமுத்துவாகி முழங்குவேன்.தாமரையின் திருமகளே! என் தாய்க்கு மருமகளே!' என்று எக்ஸ்ட்ராவாகச் சேர்த்துக் கொண்ட காப்பிய வரிகளும் அவ்வப்போது வந்து விழும்... சிலசமயம் கை தட்டுவார்கள்.. அதில் எந்தக் கை தட்டல் தேனுடையது ?எது கனியுடையது? என்பதை எங்களால் பிரித்தறிய முடியவில்லை.. இருவரும் கண்டிப்பாகக் கை தட்டியிருப்பார்கள் என்றே எங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டோம். 

இடையிலேயே பாட்டு, கவிதை போன்ற வேறு திறமைகள் இல்லாததால் அறுவரில் நால்வர் எங்களோடு சண்டையிட்டனர் . பாடாமல், கவிதை சொல்லாமல் ப்ரபோஸ் பண்ணுவோம் என்று அடம் பிடித்தனர்.. 'எப்படி ? 'என்று கேட்டதற்கு டிபன் பாக்ஸ் கேட்போம், லெட்டர் தருவோம், யாரிடமாவது சொல்லியனுப்புவோம் ...'யாருக்கு அமையுதோ?பாத்துக்கலாம்' என்று தங்கள் வியூகத்தைத் தெரிவித்தனர் ... எங்களுக்கு இது போன்ற வன்முறைகளில் ஈடுபாடு இல்லை. 

எங்கள் பாடல்களை, கவிதைகளை , செல்லக் கிண்டல்களை தேனும், கனியும் கேட்கிறார்கள் என்பதே போதுமானதாயிருந்தது. நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டோம் ...எப்போதாவது தேனோ, கனியோ எங்களைப் பார்த்தால் சிரிப்பது போல் தோன்றும்... அதற்கே ஆகாயத்தில் பறப்போம்...இடையில் நாலு நண்பர்களும் தங்கள் வன்முறை நடவடிக்கைகளால் ஹெச்.எம்மிடம் மாட்டிக் கொண்டு அப்பாவோடு வந்து மன்னிப்புக் கேட்டனர்...அதற்குப் பிறகு ஜோதியிலிருந்து விலகி பெண் வெறுப்பாளர்களாகி விட்டனர் .

இப்போது நானும், கிருஷ்ணாவும் மட்டும்தான் ... நண்பன் சமீர் அவ்வப்போது ஆட்டையைக் கலைப்பான்... அவன் பாங்கன்தான். ஆனாலும் செல்லமாய்த் தொந்தரவு செய்வான்..இதய வடிவில் குடையப்பட்ட தட்டிக்கு நடுவில் தலையை விட்டு 'கொடுக்குறது' என்பான் . முத்தம் கேக்குறாராம்... ஒருபெண் 'எதடா கொடுக்க எருமை?' என்று கத்திய பிறகுதான் அமைதியாவான்... ஆனாலும் சில நண்பர்கள் தேனோ, கனியோ நடந்து போனால் என் பெயரையும், கிருஷ்ணா பெயரையும் சத்தமாகச் சொல்வார்கள் ...அப்போது அவர்கள் வெட்கப்படுவதாகச் சொல்லி சில விஷப்பயல்கள் எங்களை உசுப்பேற்றுவார்கள்...

 அந்த வருடம் ஆண்டு விழாவில் பாட்டு, கவிதை, கட்டுரை எல்லாவற்றிலும் நான்தான் முதல் பரிசு. பேச்சுப் போட்டியில் கிருஷ்ணா முதல் பரிசு...தேனும், கனியும் சேர்ந்து வந்து எங்கள் இருவரையும் பாராட்டினார்கள்... நாங்கள் சட்டையைக் கிழித்துக் கொள்ளாத குறைதான். முன்னிரவு வரை வீட்டுக்குப் போகாமல் பைபாஸில் நின்று இதையே பேசிக் கொண்டிருந்தோம்...கனி, தேன் இருவரும் சேர்ந்து வந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இத்தனைக்கும் தேன் 12ம் வகுப்பு...கனி பதினொன்றாம் வகுப்பு.. விடைபெறுகிற போது கிருஷ்ணாதான் சொன்னான் .மாப்ள செட்டாயிடுச்சு... ஆனால் இனியும் இப்டி இருக்க முடியாது. நாம பிரிச்சுக்கலாம். 'உனக்கு யார் வேணும்? தேனா? கனியா?'.... எனக்கு உலகமே சுழல்வது போலிருந்தது. இதற்கென்ன பதில் சொல்வது? இரண்டு கண்களில் எது வேண்டும்? என்று கேட்கிறான். இரண்டும்தான். ஆனால் அவன் கேள்வியில் இருந்த நியாயமும் புரிந்தது... 'யோசிச்சு காலைல சொல்லு'என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

எனக்கு இரவெல்லாம் ஒரே குழப்பம்... இந்தப் பக்கம் தேன்... அந்தப் பக்கம் கனி... மாறி, மாறி கையைப் பிடித்து, மாறி மாறித் தொட்டு, மாறி மாறி முத்தம் கொடுத்து , கல்யாணம் கட்டி, கண்ணீர் விட்டு, பிள்ளை பெற்று..தேனையும், கனியையும் நரை வந்தது வரை கற்பனை செய்து விட்டேன்... முடிவு மட்டும் எடுக்க முடியவில்லை.  

இது ஒரு புதிய பிரச்சினை. இதற்கென்று ரெஃபரன்ஸ் கூட இல்லை. அப்போது காதல் பற்றி அவ்வளவு புரிதல் வந்திருக்கவில்லை.. யோசிக்க யோசிக்கத் தலை வெடித்தது. மணி பார்த்தேன். ஆறாகியிருந்தது ...

அன்று கிருஷ்ணா கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தான்... 'முடிவெடுத்தாச்சா ?' என்று கேட்க வந்தவன் என் முகத்தை உற்றுப் பார்த்தான் . 'நீயும் தூங்கலையா?' மையமாகத் தலையாட்டினேன்.‌‌. 'சரி மாப்ள ஒண்ணு செய்வோம். யாராவது ஒருத்தர் நேரா வகுப்புக்கு போவோம். யார் முதல்ல கண்ல படறாங்களோ அவங்கதான் நம்ம ஆளு.... யார பாக்கலயோ அது மத்தவனுக்கு ஓகேயா?' என்று கேட்டான்...நான் தலையாட்டினேன்... யார் முதலில் உள்ளே போவது? என்பதற்காக டாஸ் போட்டோம் .

நான் கேட்ட தலை தான் விழுந்திருந்தது. ஒரு பதட்டத்தோடு உள்ளே போனேன்... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அந்த அதிர்ச்சி காத்திருந்தது . தட்டி இருந்த இடத்தில் இப்போது சுவர் எழுப்பப்பட்டிருந்தது ... 'ஹெச்.எம் ரூம் இங்க வரப்போகுதா?' வெளியில் யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது... இது எதுவுமே தெரியாத 'பூ விழுந்த' கிருஷ்ணா மனசுக்குள் முருகனை வணங்கிக் கொண்டிருந்தான்.கிருஷ்ணா அதிர்ஷ்டக்காரன் தான்.


Rate this content
Log in