Siva Kamal

Tragedy Action Classics

4.5  

Siva Kamal

Tragedy Action Classics

சொல்லாத அன்பு

சொல்லாத அன்பு

5 mins
23K


அஸ்லாம் இன்று ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் முதலாளி.பள்ளியில் அவன் என் பெஞ்ச் நண்பன்.நாங்கள் அன்று சண்டை போட்டுக் கொண்டது மட்டும் ராணிகளுக்காக.அது வரலாறு வகுப்பு.நான் புத்தகத்தை பிரித்தேன்.எடுத்த எடுப்பில் நூர்ஜஹான் படமொன்று இருந்த பக்கம்.ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட முதல் முகலாய ராணி.நான் அவளுக்கு மீசை இழுத்தேன்.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அஸ்லாம் என்னைக் குத்தினான்.

'டேய்’ என்றேன்.

"நீ உங்க ராணிகளுக்கு மீசை போட்டுக் கொள்" என்றான் 


இந்த மாதிரி எண்ணங்களைக் கொடுத்ததற்கு அந்த புத்தகமே காரணமாயிருந்திருக்கக் கூடும்.இருந்த நூறு பக்கங்களை மூன்றாகப் பிரித்து ஹிந்துக் காலம்,முஸ்லிம் காலம் ஆங்கிலேயர் காலம்,என்று தலைப்பிட்டிருந்தது.எங்கள் வரலாறு வகுப்பு ஆசிரியரும் இந்த ஒரு அம்சத்தைப் பற்றிச் சற்று அதிகமாகவே பேசி விட்டார்.நான் ஐந்தாறு பக்கங்களைப் புரட்டி அங்கிருந்த இன்னொரு படத்துக்கும் மீசை இழுத்தேன்.அது ராணி பத்மினியுடையது.அப்படத்தில் அவள் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருந்தாள்.பின்னால் ஒரு கதவு ஓரத்தில் இருந்து ஒருவன்,அதுதான் அலாவுதீன் கில்ஜி,அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.வரலாற்றின்படி அவன் அவளுடைய பிம்பத்தைத்தான் பார்த்தான்.ஆனால் அந்தப் படத்தின்படி அவனால் அவளை நேரடியாகவே பார்க்க முடியும்.முதலில் கண்ணாடியில் அவளைப் பார் என்று சொன்ன பத்மினியின் கணவனையும் பிடிக்கவில்லை.புத்தகத்தில் அவனுக்கு படம் கிடையாது.இருந்தாலும் என்ன செய்திருக்க முடியும்?அவனுக்கு மீசை தாடி போடுவது அவனுக்கு எந்த விதத்திலும் தாழ்வு ஏற்படுத்தாது,வேண்டுமானால் அவனுக்குக் கழுதைக் காதுகள் போலப் போடலாம் சரியா?' பத்மினி ரொம்ப அழகா இருக்கா அவளுக்கு வேணாம் என்றேன்.


"நூர்ஜஹான்தான் உலகத்திலேயே மிக அழகான ராணி அவள் முன்னால் பத்மினி எல்லாம் நிற்க முடியாது"என்றான் அஸ்லாம்.


"நீ பார்த்தாயா? "நீ பார்த்தாயா?"

நாங்கள் ஆளுக்கொரு அடி அடித்துக் கொண்டு விட்டோம்.அவன் மேற்கொண்டு சண்டை போட்டால் நான்தான் அதிகம் அடி வாங்குவேன் என் புத்தகப்பையை அப்படியே டெஸ்க்கிலிருந்து கீழே தள்ளினேன்.அந்த சத்தத்தால் எங்கள் பக்கம் பார்த்த ஆசிரியர்,' என்னடா?' என்றார் ஒன்றுமில்லை,சார் ' புத்தகப் பை கீழேவிழுந்து விட்டது.என்றேன்.

இந்த தடையால் எங்கள் சண்டை வகுப்பு வரையில் நின்று விட்டது.ஆனால் வகுப்பு முடிந்து வெளியே வந்த போது அஸ்லாம் மீண்டும் என்னை அடித்தான்,நான் அவனுடைய இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டேன் ஐநூறு பையன்கள் படிக்கும் பள்ளியில் படித்தால் சண்டை அடிக்கடி வரத்தான் செய்யும்,எனக்கு சண்டை போடுவதில் அதிகத் தேர்ச்சி வரவில்லை.


ஆதலால் சண்டையென்று வந்தால் சண்டை போட்ட மாதிரியாகவும் தோன்றி நானும் அதிகம் அடிபடாமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தேன். எடுத்த எடுப்பிலேயே எதிராளியின் இரு கைகளையும் மணிக்கட்டு அருகில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவது.அவன் திணறி விடுவித்துக் கொள்ள எப்படியும் சிறிது நேரம் ஆகும்.அதற்குள் இதர பையன்கள் எங்களை விடுவித்து விடுவார்கள்,அப்புறம் யாருக்கும் அடிபடாது.இதில் முக்கியம்,நான் எதிராளியிடம் தனியான இடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது.அன்றும் அஸ்லாமுடன் என் சண்டை மற்றவர் வந்து கலைத்ததோடு முடிந்து விட்டது.


அன்று மாலையே பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது நானும் அவனுமாகத்தான் சேர்ந்து போனோம்.நான் அவனை கேட்டேன்.'நிஜமாகவே நூர்ஜகான்தான் உலகத்திலேயே மிக அழகானவளா?' 


"சந்தேகமென்ன?உலகத்திலேயே முஸ்லிம் பெண்கள்தான் மிக அழகு அவர்களில் நூர்ஜகான்தான் ரொம்ப அழகு"


"அழகானவர்கள் எல்லா இடத்திலேயும்தான் இருக்கிறார்கள்"


"இருக்கிறார்கள்,சரி,ஆனால் நூர்ஜகான் மாதிரிக் கிடையாது இன்றைக்குக் கூட உலகத்திலேயே மிக அழகான பெண் யார் தெரியுமா?' 


"தெரியாது"


"நம் அரண்மனை நிஜாமுடைய மகள்"


"அப்படி என்ன அழகு? "


"ஆமாம்.அவள் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு சாறை விழுங்கினால் கூட அது சிவப்பாக தொண்டையில் இறங்குவதை நீ அப்படியே பார்க்கலாமாம்.அவள் அவ்வளவு அழகுனு சொல்வாங்க"


"அவள் பெயர் தெரியுமா?... ரேஷ்மா." 


‘ஓ...ரேஷ்மா ....ரேஷ்மா ரேஷ்மா' நான் அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன். அது ஒரு மந்திரம் மாதிரியும் இருந்தது.வசவு மாதிரியும் இருந்தது.

பள்ளி விடுமுறை நாட்களில் நானும் அஸ்லாமும்தான் ஒன்றாக ஊர் சுற்றுவோம்.கடைக்கு செல்வது கூட தினமும் அவன் வீட்டு வழியாகத்தான் ஒரு முறையாவது போவேன்,

வீட்டு வாசலில் அவனுடைய தங்கை தொள தொளவென்று ஓர் மினுமினு கவுனைப் போட்டுக் கொண்டுக் கொண்டு நிற்பாள்.என்னைக் கண்டவுடன் அவள்தான் ஓடிப் போய் அஸ்லாமை அழைத்து வருவாள்.நான் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு விட்டேன்.ஆறு மாதங்களுக்குப் பிறகு பச்சை மிளகாய் வாங்கி வருவது போன்ற முக்கியப் பணிகளை சைக்கிளில் சென்று முடிக்க ஆரம்பித்தேன்.இரு நாட்களுக்கு ஒரு முறை அப்பாதான் வாங்கி வருவார்.முழு பூசணிக்காய்,புடலங்காய் போன்றவை கூட அவர் வாங்கி வருவார்.ஒரு ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி வர மட்டும் மறந்து விடுவார்.அன்றும் பச்சை மிளகாய் வாங்கத்தான் நான் சென்றிருந்தேன், 

பேருந்து நிலையத்திலிருந்து மார்க்கெட்டுக்குச் செல்லும் சாலையின் பெயர் மரக்கடை ரோடு,முதலில் சில கஜ தூரம் நெருக்கடி இருக்காது.ஏனெனில் அங்கு சாலையின் ஒரு புறத்தில் ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் ஒரு சர்ச் சாலையின் இப்பக்கம் ஊரின் பெரிய ஆஸ்பத்திரி,இவற்றை தாண்டிய பிறகு நிறைய கடைகள் வந்து விடும்.ஜன நடமாட்டமும் அதிகம் இருக்கும்.

நான் கடைகளை பார்த்தபடியே சைக்கிளை ஓட்டி வந்தேன்.திடீரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து வந்து என்னை நிறுத்தி என்னையும் சைக்கிளையும் ஒரு கடை பக்கமாக தள்ளினான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஒரு பெரிய கார் சாலை நடுவில் வந்து நின்றது.அதற்கு நம்பர் பிளேட் இருக்கவில்லை காரோட்டி கீழே இறங்கி ஒரு கடையினுள் சென்றான்.

சில விநாடிகளுக்குப் பிறகு காரிடம் ஓடி வந்தான்.கார் கண்ணாடி கதவு கீழே இறங்கியது.அதன் வழியாக கிட்டத்தட்ட என் வயதுள்ள ஒரு சிறுமி தலையை நீட்டினாள்.காரோட்டி அவளிடம் ஏதோ சொன்னான்.அவள் சில விநாடி யோசித்த பிறகு தலையை அசைத்தாள் காரோட்டி மீண்டும் கடைக்கு ஓடினான்.அந்த சிறுமி தெருவில் ஒதுங்கி கொண்டிருந்தவர்கள் பக்கம் பார்வையை ஓட்டினாள்.

சரியாக வாரப்படாத அவளுடைய தலைமுடி ஒரு விநோதச் சிவப்பு நிறமுடையதாக இருந்தது.அவள் உயரமாக குதிரைக்குட்டி போல வளர்ந்திருந்தாள்.முகத்தின் சருமத்திலேயே வெண்ணிறமாக ஒருவித தேஜஸ் காணப்பட்டது.அவளுடைய கண்கள் பரபரத்த வண்ணம் இருந்தன.காரோட்டி ஒரு சிறிய Tin-coke கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.அவன் வண்டியில் ஏறியவுடன் மீண்டும் போலீஸ்காரன் சாலைப் போக்குவரத்தைச் சிதற அடித்தபடி முன்னால் ஓடினான்.

திரும்பி வந்த என் சைக்கிளின் மட்கார்டு நசுங்கியிருப்பதை பக்கத்து வீட்டு மாமா தான் முதலில் கவனித்தார்.’ஏண்டா,கீழே எங்கேயாவது விழுந்தயா?' என்று கேட்டார். 

"என்னை ஒரு போலீஸ்காரன் பிடிச்சு தள்ளிட்டான்"

"ஏன்? "

"யாரோ பெரிய கார்லே வந்தா.அவளுக்காக எல்லோரையும் விரட்டி அடிச்சான்."

"காருக்கு நம்பர் பிளேட் இருந்ததா"

"இல்லயே."


"அப்போ அது அரண்மனை கார்.அதுலே யார் இருந்தா?"

"யாரோ ஒருத்தித் தலையை விரிச்சுப் போட்டுண்டு பிசாசு மாதிரி இருந்தா"


"அவ பிசாசு இல்ல.அவ ஒரு ராணி,நிஜாமுடைய ராணிகள்லே அவளும் ஒருத்தி".

"ராணியெல்லாம் இப்படியா இருப்பா? ஏன் மாமா,முஸ்லீம்கள்தான் ரொம்ப அழகா? "

"இருக்கும்.அந்த நாளிலே,உலகத்திலே அந்த ராணிதான் ரொம்ப அழகுன்னு சொல்லுவாங்க.அவ துருக்கி தேசத்து ராஜகுமாரி.

"இப்ப யாரு மாமா உலகத்திலேயே ரொம்ப அழகு?"

“அரண்மனை நிஜாம் ராணி ரேஷ்மா”

உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த நான் சடாரென்று எழுந்தேன்.

இதை முதலில் அஸ்லாமிடம் சொல்லியே ஆகவேண்டுமென தோன்றியது.சைக்கிளை எடுத்து அவன் வீட்டுக்கு போய் அவளை பார்த்ததை சொன்னபோதே அஸ்லாம் கண்களில் காதல் மின்னியது.ரேஷ்மாவுக்கு மனதில் ஒரு கோட்டை கட்டி வைத்திருந்தவனுக்கு அந்த கோட்டைக்குள் அவளை எப்படியாவது கூட்டி வந்து விடவேண்டுமென்று ஆசை குதூகலமானது

இப்பொழுதுபோல மொபைல் வாட்ஸ் அப் என்று தகவல் சாதனைகள் இல்லாத காலம் .சட்டென காதலை சொல்ல முடியாது .

போட்டோ?

வாய்ப்பே இல்லை ...

அஸ்லாமுக்கு ரேஷ்மா மீது இருந்த கண்மூடித்தனமான காதல் ...சொல்ல வழி இல்லை. புலம்பிக்கொண்டே இருந்தான்.குறைந்தபட்சம் அவளுடைய போட்டோ ஒன்று கிடைக்குமா என்று அலையாய் அலைந்தான் ..

அவள் படிக்கும் பள்ளியில் ஒருவனை பிடித்து ஒரு ஆண்டு விழா புகை படத்தில் கூட்டத்தில் ஒரு புள்ளியாக அவள் இருப்பதை கண்டுவிட்டான்.

போட்டோ கிளப் ப்ரெசிடென்ட்டிடம் ஆண்டு விழா போட்டோக்கள் சில பிரதிகள் எடுக்க வேண்டுமென்று சொல்லி நெகட்டிவ் வாங்கியாகி விட்டது .

என்னையும் அழைத்தான். இருவரும் இரவு ஒரு மணிக்கு மேல டார்க் ரூமுக்கு சென்றோம்   

என்லார்ஜரில் அந்த நெகட்டிவ்வை லோடு செய்து மாக்ஸிமம் பெரிதாக்கினாலும் அந்த முகம் கொஞ்சம் பெரிய புள்ளியாகத்தான் தெரிந்தது..

என்ன செய்வது...?

focal டிஸ்டன்ஸ் அதிகரிக்க ஒரு அதிரடி வேலை செய்தோம்...

வெர்ட்டிகலான என்லார்ஜ்ரை ஹரிசாண்டலாக்கி screw வை கழற்றி ..-அனுமதிக்கப்படாத வேலை அது -சுவற்றில் போகஸ் அடித்து ...exposure நேரத்தை கண்ணா பின்னாவென்று அதிகரித்து நான்கைந்து ப்ரோமேடு தாள்கள் வேஸ்ட் பண்ணி ஒருவழியாக பிரிண்ட் எடுத்தோம் .

ஒரு போஸ்ட் கார்ட் சைஸில் கிடைத்த அந்த போட்டோ வை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அவன் பண்ணிய அலம்பல் இருக்கிறதே....

கொஞ்ச நாளைக்கு முன்னால்தான் சூர்யா பாட்டு வந்திருந்தது ....

"சட்டை பையில் உன் படம் 

தொட்டு தொட்டு உரச ..."

என அவள் வீீ்ட்டு தெருவில் சைக்கிளை எடுத்துக்கொண்டு நானும் அவனும் சுற்றினோம்.ஆனால் அந்த பெண் இவனை திரும்பி பார்ப்பதாக இல்லை ..

அவள் காரில் போகும்போது வேண்டுமென்றே இவன் பெயரை சொல்லி சத்தமாக கூப்பிட்டு எல்லாம் பார்த்தோம்...வேலைக்கே ஆகவில்லை 

வருடத்தின்- இறுதித் தேர்வின் கடைசி நாள்….

பள்ளியில் நிறைய பேர் அவரவர் கடைசி லேப் எக்ஸாம் பொறுத்து கிளம்பியாகிவிட்டது 

நாங்கள் பிரிய வேண்டிய நாளும் வந்தது ...

போகும்முன் இவன் மூட் பார்து கிளம்பலாம் என்று அவன் வீட்டுக்கு போனால் ...

சகஜமாக பேசி "நான் நாளைக்கு ஊருக்கு போகிறேன்"என்றான் .

விடை பெறும்முன் "டேய் அவளை எல்லாம் மறந்துவிடு "என்று நான் புன்னகைக்க 

அவனும் புன்னகைத்து" சே அதெல்லாம் சும்மா ஒரு ஜாலி டா.நீ கிளம்பு" என்றான் ...


கிளம்பியவன் போகும்முன் கடைசி க்ளான்ஸ் பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால்... இலேசாக நாசுக்காக கண்ணை துடைத்து கொண்டிருந்தான் இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி அஸ்லாம். 

அன்று நான் என் வீட்டிற்கு திரும்பி வந்து இவன் ஏன் சொல்லாத காதலுக்கு இப்படி அழுகிறான் யோசனையிலே இருந்தேன்.பிறக்காத குழந்தைக்கு யாராவது அழுவார்களா? என்று அன்று எழுந்த கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்தது.

still born baby மீதுதான் அதிக அன்பு இருந்திருக்கும் என்று எங்கோ படித்த நியாபகம்...


Rate this content
Log in

Similar tamil story from Tragedy