Siva Kamal

Tragedy

4.3  

Siva Kamal

Tragedy

வடு

வடு

5 mins
23.7K


"ஃப்ரண்டு ஃப்ரண்டுன்னு சொல்லிட்டு கடைசில காதல்கீதல்ன்னு சொல்லிக்கிட்டு வந்தன்னா கால தரிச்சிடுவேன் பார்த்துக்கோ".. அம்மாக்காரி அரற்றிக்கொண்டிருந்தாள்.


ஆடையின் நூல்வெடிப்புகள் திரிபோல ஒலிசெய்து சடசடவென எரிய, எரிவதை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமுதா, தீயின் அலையொளி அவளின் மீது உருக்கியூற்றிய தங்கத்தை போல ஓடிக்கொண்டிருந்தது.

ஏங்க இங்க வாங்க உங்க பொண்ணு பண்ற காரியத்த பாருங்க.பேய்-கீது பிடிச்சி போச்சாடி உனக்கு.

 

அமுதாவின் அப்பா விறுவிறு என்று வந்தார்.


"என்ன? ஏன் கத்திட்டு இருக்கற?"


இந்த தீவாளிக்கி தான் வாங்கிச்சு. செவப்பு கலர் சுடிதார். அவ கலருக்கு அம்சமா இருக்குன்னு சொன்னிங்ளே அதைத்தான் போட்டு எரிச்சிட்டு இருக்கு கழுத. ஏத்தம் கூடிப்போச்சி என்னடி உனக்கு.

ஃப்ரண்டு எவனோ இந்த சுடிதார் நல்லா இல்லைன்னு சொல்லிட்டானாம், அதுக்கு உக்காந்து எரிச்சிட்டு இருக்காங்கேன்.


அமுதாவைக் கூர்மையாகப் பார்த்தார். அவள் பெரும் குழப்பத்தில் இருப்பதாகப் பட்டது, குழப்பத்தின் ரேகைகள் தீயலைகளாக முகத்தில் ஆடுவது போலிருந்தது. கடைசி நூலும் எரிந்து சாம்பலாகும் வரை அவள் அங்கேயே பின்வாசலில்தான் இருக்கப்போகிறாள் என்பது தெரிந்து போயிற்று.


அவளை எதுவும் சொல்லாதே என்பதாக சைகை செய்தார். 


மகள் பெரிய பெண் என்பதே அப்போதுதான் இருவருக்கும் உறைக்கிறது, கல்லூரியில் ஃப்ரண்டு நல்லாயில்லை என்று சொன்னதற்கெல்லாமா ஆடையை எரிப்பார்கள்? அதுவும் அவளுக்கு மிகப்பிடித்த சுடிதாரை. எனில் அவன் வெறும் ஃப்ரண்டு மட்டுமல்ல. அதற்கும் கூடிய ஒருவன்.


ஏங்க! சொல்ல வாயெடுத்தவளை நிறுத்தி ராத்திரி பேசிக்கொள்ளலாம் என்றார்.


இதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரிவருமா? உங்க அக்காவுக்கு தெரிஞ்சா அவ்வளோதான் சும்மாவே எப்ப எப்பன்னு காத்திருக்கறா இது மட்டும் தெரிஞ்சா வெறும்வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆகிடும்.


"அவ தூங்கிட்டாளான்னு பாரு." அது தனியறை இல்லாத நீளமாகக் கட்டப்பட்ட வீடு. மூவரும் நடு ஹாலில் தான் உறங்க வேண்டும். 


தூங்கிட்டாள்.


"நாளைக்கு இவ சேக்காளி பார்வதிக்கிட்ட பட்டும்படாம விசாரி. உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத"


நம்ம சாதிசனமா இருந்தா கூட பரவால்ல. ஏதாச்சி சொல்லி நம்ம சனத்த சமாளிச்சிடலாம். வயித்தில கியித்துல வாங்கிட்டு வந்துடுவாளோ. அது வேற பயமா இருக்குங்க. நாண்டுக்கிட்டு செத்துடுவேன். ஒருநிமிசம் இருங்க என்று எழுந்து அலமாரியைத் திறந்து நாப்கின் எண்ணிக்கையை சரிபார்த்தாள். நெஞ்சில் கைவைத்து நிம்மதி அடைந்தாள். 


"என்ன தேடுற?"


ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல. 


"உங்க அண்ணன வரச்சொல்லு கல்யாணத்துக்கு மாப்ள ஏதும் பார்க்கலியான்னு போற போக்குல அவன்தான் கேப்பான். அவன் கேட்கட்டும் அப்பறம் நான் மிச்சத்த பார்த்துக்கறேன்"


இவளுக்கு போன் செஞ்சா காதல் சொல்ல நேரமில்லை காதல் சொல்ல நேரமில்லைன்னே பாட்டு வரும் அப்பவே நான் சுதாரிச்சி இருக்கனும்.


இரண்டொரு நாளில் விசாரித்ததில் பார்வதியிடம் எந்த சரியாக தகவலும் கிடைக்க வில்லை.


"ஞாயித்துக்கிழமையில மட்டும்தா வூட்டுக்கு வருவியாண்ணே..வாண்ணே.!"


"நான் வரது இருக்கட்டும் மொதல்ல தண்ணி கொண்டு வா உன் பிள்ளை திண்ணைல மயங்கி கிடக்கு." 


யாத்தே என் புள்ள என்று பதறி திண்ணைக்கு ஓடிவந்து தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து எழுப்பினாள். அமுதாவின் உடல் தந்திக்கம்பியை போல் அதிர்ந்து பின் சமநிலைக்கு வர முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்போது அம்மாஅவளுக்கு தலைசுற்றிக்கொண்டு வந்தது.  


"ஏத்தா பிள்ளையை ஏதும் திட்டினியா பிள்ள? சாப்பிடாம இருந்து பசில மயங்கி இருக்கும் போல. சாப்பாடு கொடு ஒழுங்கா" அண்ணன் கடிந்துகொண்டார். 


"நான் எதுக்கு உன் மருமகளை திட்டப்போறேன். அவ எங்களை பாடா படுத்தாம இருந்தா சரி."


கால்கட்டுப் போட்டாத்தான் சரியா வரும். அண்ணனிடம் இருந்து இந்த சொல்லத்தான் அவள் எதிர்பார்த்தாள். 


"தரகர்கிட்ட ஜாதகத்தை கொடுத்திருக்கேன் மாப்ள. அப்பாவும் இணைந்து கொண்டார். சீக்கிரமா ஒரு நல்ல வரனா பார்த்து சொல்றேன்னு சொல்லி இருக்கார். நல்ல இடமா அமையனும்ல."


"பார்றா! பொறவென்னத்தா. கல்யாணம் முடிக்கப்போற குமரி ஆயிட்டியா நீ!"


அமுதா மூவரையும் முறைத்தாள். அம்மாவுக்கு அவள் முறைப்பது போலத்தான் தெரிந்தது. 


ஏதோ எண்ணத்திலிருந்தவள் மீண்டும் ஒருமுறை அலமாரியைத் திறந்து பார்த்துவிட்டு நீண்ட யோசனைக்குப் பிறகும் அவளுக்கு இரண்டு மனமாக இருந்தது. நான்கு வீடு தள்ளி நாடிபிடித்து பார்க்கும் வயதானவள் ஒருத்தியை அழைத்து வரவா வேண்டாமா? என்பது தான் அது. ஒருவேளை நான் நினைப்பது சரியாக இருந்தால் அது ஊருக்கே தெரிய இதுவே ஒரு வாய்ப்பாக ஆகிடுமே! 


"ஏண்ணே! ஒரு எட்டு இவளைக் கூட்டிட்டு டாக்டரை பார்த்துட்டு வந்துடேன்."


''எதுக்கு? நல்லா திமுதிமுன்னு தான இருக்கா. இவளுக்கு என்ன நோவு வரப்போவுது?" தாய்மாமான்களுக்கு தங்கை மகளை வம்புக்கு இழுப்பதென்றால் கொள்ளை பிரியம். இவள் அதிலும் மாமாசெல்லம். ஒரு முறை அமுதா கேட்டாள் 

"ஏன் மாமா நீ அம்மாவையும் என்னையும் ஒரே மாதிரியே ஏத்தா ன்னே கூப்பிடற.?" 


"எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னுதானத்தா."


"அப்ப நான் என்ன உனக்கு தங்கச்சியா?" 


"இருந்துட்டு போயேன் இப்ப என்ன? தங்கச்சியா இரு! தங்கச்சி மகளா இரு! எங்க ஆத்தாளா கூட இரு" சொல்லும் போது கலங்கினார். 


ஆத்தா சொல்றேன்ல அழக்கூடாது என்று மாமாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்ட போது அம்மா திட்டினாள். முழுமாடு மாதிரி இருந்துக்கிட்டு எங்க அண்ணன் மடில உட்காருற, எறங்குடி. பச்சப்புள்ளைய ஏசாத கழுத என்று அண்ணன் சுணங்குவார். அத்தனை இணக்கம் மாமாவோடு அமுதாவுக்கு. அதனால் எப்போதும் அவளை விட்டுத்தர மாட்டார். 

ஆஸ்பத்திரிக்குலாம் வேண்டாம் அவனுக இல்லாத வியாதிய சொல்வாங்க.


"அதுக்கில்லண்ணே, மயங்கி விழுந்துட்டுல்ல அதான் உடம்பு சரியில்லாம இருக்குமோன்னு."


"அதுலாம் ஒன்னுமில்ல சாப்பாடு கொடு சரியாகிடும். சோலி கிடக்கு நான் கிளம்பறேன். புள்ளைய பார்த்துக்க"


அமுதாவின் நடவடிக்கைளில் மாற்றத்தை கவனித்துக்கொண்டே இருந்தாள் அம்மா. எதுவும் முன் போல இல்லை எல்லாம் மாறி இருந்தது. அவளின் நடை உடை பேச்சு பாவனை எல்லாம் வேறு ஒரு பெண்ணாக இருந்தது. ஒரு நேரம் சொந்தக்காரங்க என்ன சொன்னால் என்ன நம்ம பொண்ணு சந்தோசம் தானே முக்கியம் என்றும், மற்றொரு நேரம் நம்மை இனி எல்லா சொந்தங்களும் ஒதுக்கி வச்சிடுவாங்களே என்ற பயமும் அவள் மனதில் மாறி மாறி வந்து போயின. 


"நாம சம்மதிக்க மாட்டோம்னு அமுதாவுக்கு தெரியுதுங்க. அதான் பிள்ளை எப்பவுமே வாடிப் போயி இருக்குது. நான் வேணா அந்த பையன கூட்டிட்டு வா பேசி முடிச்சிடலாம்ன்னு சொல்லிடவாங்க."


"எதுக்கு பறக்குற. அவளே சொல்லட்டும். சொல்லும்போது பார்த்துக்கலாம்."


மறுநாள் கல்லூரியில் இருந்து தொலைபேசி வந்தது. உங்கள் மகள் மயங்கி விட்டாள். வந்து கூட்டிட்டு போங்க


கல்லூரி வராந்தாவில் அமர்ந்திருந்தாள், 

அம்மா வந்ததும் வராததுமாக "கிளம்பு ஆஸ்பத்திரி போகணும்" 


எனக்கு ஒன்னும் இல்லம்மா. 


"எல்லாம் எனக்குத் தெரியும். நீ வா என்கூட. யாரடி ஏமாத்துற நீ? எத்தன நாளுக்கு ஏமாத்துவ?"


என்னம்மா சொல்ற எனக்குப் புரியல


"இவ்வளோ ஆனதுக்கு அப்பறமும் நீ என்கிட்டயே நடிக்கிற" வரும் வழியெல்லாம் வசைபாடிக்கொண்டே வந்தாள். 


மகப்பேறு மருத்துவமனை. ஊரில் பிரசித்தி பெற்ற கருக்கலைப்பு இடமும் அதுதான். 

அமுதா அதிர்ந்து போயிருந்தாள். இங்க எதுக்குமா கூட்டி வந்த? லூசா நீ? 


பேசாம வா. 


என்ன பிரச்னை?. மருத்துவர்.


"ரெண்டு தடவ மயக்கம் போட்டு விழுந்துடுச்சு அதான்."


கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது? 


"கல்யாணம் ஆகல டாக்டர்"


இருவரையும் விகற்பமாகப் பார்த்தாள். லாஸ்ட் பீரியட் டேட் எப்ப? 


டாக்டர் ப்ளீஸ். எங்க அம்மா ஏதோ உளறுறாங்க? எனக்கு சாதாரண மயக்கம் தான். 


"இல்ல டாக்டர் இவ பொய் சொல்றா. செக் பண்ணுங்க."


கொஞ்ச நேரம் நீங்க வெளிய இருங்கம்மா செக் பண்ணிட்டு சொல்றேன்.


சிறிது நேரம் கழித்து.

உங்க பொண்ணு கர்ப்பம்லா இல்ல, இன்ஃபேக்ட் ஷி இஸ் எ விர்ஜின். 


"அப்படினா?"


உங்க பொண்ணு கன்னிகழியலன்னு சொல்றேன் புரிஞ்சுதா?


அம்மாவைப் பார்ப்பதற்கே அமுதாவுக்கு அருவருப்பாக இருந்தது. ஏன்மா? என்று மட்டும் கேட்டாள். அவளின் கேள்வியில் நம்பிக்கையிழப்பும் அத்தனை விரக்தியும் குடிகொண்டிருந்தது.


"நீ யாரையாவது காதல்கீதல் செய்றியாடி?"


அய்யோ இல்லம்மா.


ஒரு பெரிய நிம்மதி மகளை இத்தனை காயப்படுத்திக் கிடைத்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டாள். இந்த நிலை சந்தோசமா அல்லது தூக்கமா என்று அவளால் இனம்காண முடியவில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பு முடிகிறது கல்யாணம் செய்து அனுப்பி வைத்துவிட்டால் பாரம் குறையும் என்று எண்ணினாள். படிப்பு முடிந்து, சொந்த ஜாதியிலேயே வரன்பார்த்து, அவர்கள் வரம்புக்கு உட்பட்டு தாயமாமனின் மேற்பார்வையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. நல்ல குணமான பையன், படிப்பு, வேலை எதற்கும் குறைவில்லை. திருமணம் முடிந்த மறுவாரம் ஊட்டிக்கு தேனிலவு ஏற்பாடு ஆகி இருந்தது.


ஊட்டியில் இருந்து மருமகன் தான் அழைத்திருந்தான். அத்தே உங்க பொண்ணு இங்க அடிக்கடி மயக்கம் போட்டு விழுது என்ன ஆச்சு அவளுக்கு? 


"அம்மாவுக்கு கால்களில் தீப்பிடித்தது போல உணர்வு. வார்த்தைகள் குழறின, இல்ல மாப்ள ஒண்ணுமில்லயே. கல்யாணத்துக்கு மூனு மாசம் முன்ன இங்க பசில ரெண்டு தடவ மயங்கி விழுந்தா அத தவிர வேற ஒன்னும் பிரச்சனை இல்லயே மாப்ள."


இல்ல அத்தே மூனு தடவ ஆகிடுச்சு. அழறா. அதான் கேட்டேன்.


அவளின் உள்ளில் எங்கோ ஆணி வைத்து அடித்தது போல உணர்ந்தாள். இல்லை! அப்படி இருக்கக்கூடாது. குலதெய்வத்தை வேண்டிக்கொண்டாள் 

அண்ணனுக்கு வேக வேகமாக போன் செய்தாள். 

"ஏண்ணே திண்ணைல புள்ள மயங்கி கிடந்துச்சுல்ல அன்னிக்கி நீ எப்பண்ணே வந்த?"


நான் வந்த அப்பறம் தானே மயங்குச்சு. வழக்கம் போல பின்னாடி இருந்து பூம்ன்னு பயம் காட்டுனேன் மயங்கிடிச்சு. ஏன் என்ன ஆச்சு?


ஒண்ணுமில்லண்ணே. 

அடுத்ததாக அமுதாவின் தோழி பார்வதிக்கு போன் செய்தாள். 


"ஏத்தா காலேஜ்ல வச்சு அமுதா மயங்கி விழுந்தாள்ல அன்னிக்கி நீ கூட இருந்தியா? என்ன நடந்துச்சு ன்னு தெளிவா சொல்லேன்."


நாங்க கேண்டீன்ல டீ குடிச்சுட்டு இருந்தோம், சீனியர் அக்கா ஒருத்தங்க வந்து அமுதா கண்ண பின்னாடி இருந்து பொத்துனாங்க. அமுதா மயங்கி விழுந்துட்டா ஆன்ட்டி.


அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உலகம் ஒரு குமிழாகி அவள் காலடியில் உடைந்தது.

யாத்தே என் புள்ள என்ன சிரமத்தலாம் அனுபவிச்சு இருக்கும்.. மனசு உடைஞ்சு போயி வந்து சுடிதார எரிச்சிருக்கே எஞ்சாமி.. குரல் ஒடுங்கி தரையில் முழங்காலிட்டு கதறினாள். அது ஓலம்.


அமுதா தன் கணவனிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டிருந்தாள்.

"இனி எப்போதுமே எனக்குத்தெரியாம வந்து பின்னாடி இருந்து கட்டிப்பிடிக்காதிங்க ப்ளீஸ்"


Rate this content
Log in

Similar tamil story from Tragedy