Siva Kumar

Tragedy

5  

Siva Kumar

Tragedy

பெற்ற மனம் பித்து.....!

பெற்ற மனம் பித்து.....!

6 mins
487


கோவை மாநகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஒன்று திருச்சி சாலை

அதில் ரெயில்வே ஸ்டேசன் கடந்து திரும்பி 

அரசு மருத்துவமனை வளாகத்தை தாண்டி

ரோட்டை ஒட்டி இருக்கும் சாலையோர திண்ணையில் நிறைய வயது முதிர்ந்த ஆண்களும்,பெண்களும் அழுக்கேறிய உடைகளுடன் கையிலோ காலிலோ புண்களுக்கு கட்டுப் போட்டாே,மனநிலை பாதிக்கப்பட்டோ, ஆதரவற்றவர்களாகவோ, வீட்டைவிட்டு, துரத்தப்பட்டவர்களாகவோ, ஊன முற்றவர்களாகவோ படுத்துக் கிடக்கிறார்கள்.


அங்கு தாடி மீசையெல்லாம் வெள்ளையும் 

செம்பட்டையுமாக நரைத்து போயிருக்க 

உடல் மெலிந்து மேல்சட்டை கூட இல்லாமல் 

ஒரு அழக்கேறிய மூட்டை கட்டுடன் எங்கெங்கோ சுற்றி அலைந்து அந்த சாலையோர திண்ணைக்கு வந்து தங்குகிறார் ஒரு பெரியவர். அங்குள்ளவர்கள் எவ்வளவோ கேட்டும் ஒன்றும் சொல்லாமல் எங்கோ வெறித்தமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அங்குள்ளவர் தங்களுக்கு கிடைத்த உணவுகளை ஆளுக்கு கொஞ்சம் கொடுக்க

அதை வாங்கி உண்டவர் மீண்டும் தன் பழைய நிலைக்கு செல்கிறார்.


ரோட்டில் யாராவது குடும்பத்தோடு மகன்களை கூட்டிச் செல்லும் போது மட்டும் அவர்களை நோக்கி சிரிக்கிறார், பிறகு என்ன நினைத்தாரோ குழுங்கிக் குழுங்கி அழுகிறார், அவர் மனக்கண்ணில் கடந்தகால நினைவுகள் ஓடுகிறது.


தருமன் விவசாயி கோவை புறநகரை ஒட்டிய சொந்த விவசாய நிலம் ஐந்து ஏக்கர் 

உள்ளது மழை பொய்த்து போனதால் தனது நிலத்திலேயே போர்போட்டு, போரில் ஓரளவு தண்ணீர் கிடைக்க ஐந்து ஏக்கரையும் தென்னந்தோப்பாக மாற்றி இருந்தார், சொட்டுநீர் பாசனம் போட்டதால் 

இருக்கும் நீரை சிக்கனமாக ஐந்து ஏக்கருக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது.

மரங்களும் காய்புக்கு வந்து வருமானம் சேர

தோப்புக்குள்ளேயே கோழிப்பண்ணையும் அமைத்தார்.


தருமனுக்கு செண்பகம் என்ற மனைவியும் மணியான இரண்டு ஆண் பிள்ளைகளும், தாய் ,தந்தை வயது மூப்புகாரணமாக இறந்துவிட அவர்கள் இறப்புவரை தருமனும் 

செண்பகமும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். தான் சிறிதாக இருக்கும் போது அப்பா அம்மா கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வானம் பார்த்த பூமியாய் இருந்ததை

இன்று தான் கஷ்டப்பட்டு தோப்பாக மாற்றி 

தன் இரு பிள்ளைகளான பெரியவன் மருதனையும் இளையவன் அமுதனையும் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து ராஜா வீட்டுப்பிள்ளைகளைப் போல் பார்த்துக்கொண்டான்.


சிறுவயது பிள்ளைகள் ஏக்கத்தோடு பார்க்கும் எல்லா விசயங்களும் மருதனுக்கும் அமுதனுக்கும் எளிமையாக கிட்டின.ஆறாவது ஏழாவது படிக்கும் போதே அவர்கள் கேட்காமலேயே சைக்கிளும் ,மொபைல் போனும், கழுத்தில் செயினும் நல்ல ஆடைகளும் வாங்கிக்கொடுக்க, பிள்ளைகள் வளர நல்ல தரமான கல்வியையும் கொடுத்தான், மிக ஆடம்பரமாக கஷ்டம் என்பதே என்ன என்று அறியாத அளவுக்கு மருதனையும் அமுதனையும் வளர்த்தான்.

மருதனும் அமுதனும் கல்லூரியை எட்டும் வரை நல்லபிள்ளைகளாகவே வளர்ந்தனர் .


கல்லூரியில் சேர்க்கும்போதே விளையுயர்ந்த பைக்குகளும்,லேப்டாப்பும், கிரிடிட் ,டெபிட் கார்டுகளும் கொடுக்க, கல்லூரியில் கெட்ட நண்பர்களின் சாகவாசத்தால் குடி, பெண்கள் சாகவாசம் என அவர்கள் வாழ்க்கை திசை திரும்பியது, 

தருமனும் கேட்டபோதெல்லாம் பணத்தை அக்கவுண்டில் இட , அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. செண்பகத்துக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், தருமனிடம் சொல்லவில்லை. இடையில் போதை பழக்கமும் சேர்ந்து கொள்ள தருமன் கஷ்டபட்டு உண்டாக்கியதை மருதனும் அமுதனும் கங்கணம் கட்டி செலவு செய்து கொண்டிருந்தார்கள்.


கல்லூரி படிப்பு முடிந்ததும் கல்லூரியில் காம்பவுண்டுக்கு வெளியே கிடைப்பது போல் போதை பொருள் வெளியே கிடைக்க சிரமப்பட அண்ணணும் தம்பியும் குடித்துவிட்டுவந்து , வீட்டில் ஒரே ரெகளை செய்ய ஆரம்பித்தபோதுதான் தருமனுக்கு விசயம் தெரிய அதற்குள் நிலமை கட்டுக்கடங்காமல் போயிற்று. ஏண்டி இது உனக்கு இதுக்கு முன்னமே தெரியுமா என செண்பகத்தை கேட்க , தெரியும் ஆன உங்ககிட்ட சொல்லி நீங்க கோவத்துல ஏதாவது பசங்கள அடிச்சுக்கிடிச்சு அவங்க தவறான முடிவுக்கு போயிட்டா என்ன பண்றதுன்னு நெனச்சு நானே அவுங்ககிட்ட

பல முறை எச்சரித்து திட்டினேன், உங்ககிட்ட மறச்சுட்டேன் என்று சொல்ல பளார் என்று ஒரு அறை விழுகிறது.


அடியே அப்பவே தெரிஞ்சிருந்தா சொல்லிகிள்ளி, இல்ல காலேஜ் விட்டு நிறுத்திக்கூட முளையிலேயே அந்த பழக்கத்தை தடுத்திருக்கலாமே, இல்ல டிரீட்மெண்ட் எடுத்து கவுன்சிலிங் கொடுத்திருந்தாக் கூட சரியாகி இருப்பாங்களே, நீ மறைச்சு வச்சு மறைச்சு வச்சு மூணுவருசமா அவுங்க போதையிலேயே ஊரிப்போய் இப்ப அது கிடைக்காம வெறிபுடுச்சு அலையுறானுவ அது ஒருத்தன்னா கூட பறவாயில்லை ரெண்டும் கூட்டுக் களவாணிகளாவல்ல இருக்கு இப்ப என்னடி பண்ணுறது நெலமை கைமீறிப்போச்சே என்று செண்பகத்தை இன்னும் ரெண்டு வாங்கு வாங்கினான்.


செண்பகம் ஐயோ அவுங்க திருந்திருவாங்கன்னு நெனச்சேனே இந்தளவுக்கு விபரீதமா ஆகும்னு நெனக்கலீங்க என்ன மன்னிச்சுறுங்க என் பசங்க வாழ்க்கைக்கு நானே எமனா போயிட்டனே என்று அழுக, மருதனும் அமுதனும் டெய்லி குடித்துவிட்டு வந்து அக்கவுண்டில் பணமிடசொல்லி அப்பா அம்மாவை அடிக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள்.


தருமனுக்கு இப்பொழுதான் தான் செய்த தவறு புரிந்தது. பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுத்து அவர்களுக்கு தகுதிக்கு மீரிய பொருள்களை அவர்கள் கேட்காமலே வாங்கிக்கொடுத்து, வீட்டின் கஷ்ட நஷ்டம் தெரியாமல் கேட்டபோதெல்லாம் பணத்தை பேங்க் அக்கவுண்டில் போட்டு, அவர்கள் எதுக்கு செலவளிக்கிறார்கள் என்ன செலவளிக்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று விளங்கியது.


தான் செய்த தவறுக்கு தன் பிள்ளைகளிடமே இரண்டு மூன்று முறை அடியும் வாங்கியாகி விட்டது. அதை விட அவமானம் வேறு உண்டா, தான் செய்த தவறை தான் தானே சரிசெய்ய வேண்டும் என்று தன் பிள்ளைகள் போதையில் இல்லாத போது அவர்களுக்கு கல்யாண வயசாகிவிட்டது இப்படியிருந்தா யாரு பொண்ணு கொடுப்பாங்க, எங்களுக்கும் வயசாகுது செண்பகத்துக்கு உங்கள நெனச்சு நெனச்சு, அவ எங்கிட்ட சொல்லாதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சுன்னு புளுங்கிப்புளுங்கி இரத்த அழுத்தம் அதிகமாகி, சுகரும் சேர அடிக்கடி ஒடம்பு சரி இல்லாம மயங்கி விழுந்தர்றா.


நீங்களும் இப்படி இருந்தா நாளைக்கு அவளுக்கு ஒன்னுன்னா நம்ப குடும்பம் என்னாகும் என்ன விடுங்க உங்க ரெண்டு பேர் வாழ்க்கை என்னாகும், உங்கள இதுல இருந்து விடுவிச்சு ஒங்களுக்கு ஒரு கல்யாணம்காட்சி பண்ணிவச்சுட்டு சொத்தையும் பிரிச்சுக்குடுத்தா எங்க கடமை முடிஞ்சுடும் என்று எடுத்துக்கூறி, மருதனையும் அமுதனையும் காரில் ஒரு நல்ல டாக்டரிடம் கவுன்சிலிங் கூட்டி செல்ல டாக்டர் நான்கைந்துமுறை கவுன்சிலிங் கொடுத்து சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க, தருமன் தானும் தந்தையும் கஷ்டப்பட்டு சேர்த்த ஐந்து ஏக்கரில் ஒரு ஏக்கரை விற்று மருதனுக்கும் அமுதனுக்கும் செலவளிக்க ஆறுமாத சிகிச்சையில் போதைப் பழக்கத்திலிருந்து விடு பட, அதற்குள் செண்பகத்தின் நிலமை

மோசமாகிக் கொண்டே வர செண்பகத்திற்கு சிகிச்சை அளித்தும் மகன்களை பற்றிய கவலையில் உடம்பு தேரவில்லை.


செண்பகம் தன் மகன்களுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துப்பார்க்க ஆசைப்பட, தருமனும் ஒரே வீட்டில் அக்கா தங்கச்சியா இருக்கும் பிள்ளைகளான மங்களத்தை மருதனுக்கும் அமுதாவை அமுதனுக்கும் பார்த்து வெகு விமரிசையாக அடுத்தடுத்து ஒரே முகூர்த்தத்தில் ஒரே மணமேடையில் திருமணம் செய்து வைக்கிறார். தங்களுக்கு இணையான விவசாய குடும்பமது. மங்களமும் அமுதாவும் மிகவும் ஒற்றுமையான நல்ல பிள்ளைகள்.மங்களம், அமுதாவின் அம்மா செல்வியும், அப்பா மாறனும் கடினமாக உழைக்கும் விவசாயிகள், தங்கள் மகள்கள் ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ந்தனர். புதுகுடித்தனம் மிகவும் இனிமையாக போக தருமனும் செண்பகமும் சற்று நிம்மதி அடைந்தனர் .


ஒரு வருடம் குடிக்காமல் போதைபொருளை தொடாமல் மருதனும் தருமனும் தோப்பை கவனிக்க , தங்கள் பிள்ளைகள் இப்படியே கடைசிவரை ஒற்றுமையாய் இருக்கவேண்டுமென தருமனும்,செண்பகமும் வேண்டினார்கள், அதற்குள் மங்களமும் அமுதாவும் கருத்தரிக்க பேரப்பிள்ளைகள் வரப்போவதை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள். காலங்கள் செல்ல வளைகாப்பு முடிந்து மங்களமும் அமுதாவும் தாய்வீடு செல்லகிறார்கள் , வீட்டின் தனிமை மீண்டும் மருதனையும்,அமுதனையும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குகிறது.


மங்களத்துக்கும், அமுதாவிற்கும் அடுத்தடுத்த வாரங்களில் குழந்தை பிறக்கிறது, மங்களத்திற்கு ஆண் பிள்ளையும், அமுதாவிற்கு பெண்பிள்ளையும். பேரனும் பேத்தியும் ஒரு சேரக்கிடைத்தது தருமனுக்கும் செண்பகத்திற்கும்,செல்விக்கும், மாறனுக்கும் பெரும்மகிழ்ச்சியைத் தந்தது. தங்கள் பிள்ளைகளை போய் பார்த்து விட்டு வந்த மகிழ்ச்சியில் மருதனும் அமுதனும் குடித்து கும்மாளம் போடுகிறார்கள் . தருமனும் செண்பகமும் தங்களால் ஆன மட்டும் எடுத்துரைத்தும் கேட்கவில்லை.


மூன்றுமாதத்தில் மங்களமும் அமுதாவும் 

பிள்ளைகளுடன் புகுந்தவீடு வர , மருதனும் அமுதனும் குடிப்பது தெரியவர அவர்களுடன் சண்டையிட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்ல. மருதனும் குமுதனும் குடித்துவிட்டு வந்து நீங்க நிறுத்தச்சொன்னா நாங்க நிறுத்தனமாடி , நாங்க இப்ப மட்டும் குடிக்கலடி காலேஜ் இருந்தே, குடியும்,குடித்தனமுமாவும், போதை பழக்கத்துடனும் தாண்டி இருக்கிறோம், டிரீட்மெண்ட் எல்லாம் குடுத்தும் விடாதவங்க நீங்க நிறுத்தச்சொன்னா நிறுத்தனமாடி , என்னடி செய்யப்போறீங்க என இருவரும் போதையில் உளறிக்கொட்ட , அதுவரை செண்பகத்தின் மேலும் தருமன் மேலும் மாமியார் மாமனார் என்ற நிலையைக் கடந்து தாய், தகப்பனாய் நினைத்து மரியாதை வைத்திருந்தவர்கள்.

செண்பகமும் தருமனும் மகன்கள் போதை பழக்கத்திற்கு அடிமையான குடிகாரர்கள் என மறைத்து கல்யாணம் செய்து வைத்து தங்கள் இருவரது வாழ்க்கையையும் சீரழித்து விட்டதாக கூறி வெறுக்கிறார்கள்.


மகன்கள் குடித்துவிட்டு சொத்தை பிரித்துத்தரச் சொல்லி துன்புறுத்த, மருமகள்களும் வெறுக்க , சரியாக கவனிக்காததால் தோப்பும் காய்விழுவது கம்மியாகி காயத்தொடங்க, மருதன் மங்களத்திடமும் அமுதன் அமுதாவிடமும் 

அவர்கள் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி பிள்ளை பெற்ற பச்சை ஒடம்புக்காரி என்று கூட பார்காமல் அடித்து துன்புறுத்த, செண்பகமும் தருமனும் தடுத்தும் அவர்களுக்கும் அடி விழுந்ததுதான் மிச்சம்.


மகன்களின் நடவடிக்கையிலும் மருமகள்கள் வெறுப்பிலும் வெகுவாய் உடைந்து போன செண்பகம் ஒரு நாள் காலை நெஞ்சைப்பிடித்துக்கொண்டே உயிரை விடுகிறாள். செண்பகம் உயிரை விட்டது தருமனை நிலைகுழையச் செய்தது. செண்பகம் இறந்ததிலிருந்து தருமன் யாரிடமும் பேசாமல் இருக்க.செண்பகத்தின் காரியங்கள் முடிந்தகையோடு அம்மா இறந்த துக்கம் ஏதுமில்லாமல்,எந்த கவலையுமில்லாமல் வக்கீலைக் கூட்டிவந்து சொத்துக்களை சரிபாதியாக பிரிக்கச்சொல்கிறார்கள் மருதனும் அமுதனும்.


வேறுவழியில்லாது தருமன் இருவருக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் தோப்பையும், ஏற்கனவே மகன்களுக்காக இரண்டு போர்சனாக கட்டிய வீட்டை பாதி பாதியாக எழுதிக்கொடுத்து, மருதனும் அமுதனும் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது தானும் செண்பகமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவையும் தன் துணிமணிகளையும் எடுத்துக்கொண்டு. தோப்புக்குள் உள்ள கோழிப்பண்ணை பொருட்கள் வைப்பதற்காக கட்டப்பட்ட அறையில் கயிற்றுக் கட்டிலைப்போட்டு படுத்துக்கொண்டார்.


தருமனை யார் பார்ப்பது என்றுகேள்வி வந்த போது மருதனும் அமுதனும் ஆளுக்கு ஒரு மாசம் பார்த்துக்கொள்வதாய் கூறி மங்களத்திடமும் அமுதாவிடமும் ஆளுக்கு ஒரு மாசம் சோறு கொண்டுபோய் வைக்கச்சொன்னார்கள். ஒன்றிரண்டு மாதம் ஒழுங்காய் சோறு கொடுத்தவர்கள் , பிறகு கல்யாணத்துக்கு போனேன், காட்சிக்கு போனேன், ஊருக்கு போனேன் என்று இருந்த நாட்கள் மட்டும் சோறு வைக்க. ஏற்கனவே மனஉழைச்சலில் இருந்த தருமன் சோறும் கிடைக்காமல் மகன்களிடம் முறையிட, ஒரு நாள் இரண்டு நாள் சோறு கிடைக்கலைனா நீ ஒன்னும் சாகமாட்டே என அடிச்சு துறத்த மனசு விட்டுப்போய் மனநிலை வெகுவாய் பாதிக்கப்பட்டு போட்டோ உள்ள துணிமூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு தருமன் கால்போன போக்கிலே போகிறார்.


இரண்டு மகன்களை பெற்று செல்லமாய் வளர்த்து ,கேட்காமலேயே அளவுக்கு அதிகமாய் வாங்கிக்கொடுத்து, நான்கு ஏக்கர் தோப்பையும் உருவாக்கி தாரைவார்த்து மகன்களுக்காய் உழைத்த ஒரு அப்பனுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்காமல் விரட்டியடித்தால் மனைவியையும் இழந்த அந்த தகப்பனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.


மருதனும் அமுதனும் தொலைந்தது சனியன் என்று தந்தை எங்குபோனார் என்ன ஆனார் என்று தேடிப்பார்க்கவோ, போலீசில் கம்ளெய்ண்ட் கொடுக்கவோ செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர்.

தோப்பை சரியாக கவனிக்காமல் போரில் தண்ணியும் வற்றிப்போக, தென்னந்தோப்பு முற்றிலும் காய்ந்து போகிறது. வருமானத்துக்கு வழியில்லாமல் மங்களத்தையும் அமுதாவையும் தாய்வீட்டில் வாங்கிவரச்சொல்லி அடிக்க, ஒன்றிரண்டு முறை வாங்கி வந்தவர்கள்,

பிறகு தொல்லை பொருக்காமல் அவர்கள் சாவகாசமே வேண்டாம் என்று குழந்தையை தூக்கிக்கொண்டு தாய்வீடு செல்கிறார்கள். மருதனும் அமுதனும் சாப்பாட்டுக்கு வழியின்றி இருக்கும் சொத்தை ஒவ்வொன்றாக விற்று குடித்தே அழிக்கிறார்கள், இறுதியில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குடித்து குடித்து குடலும் வெந்துபோக கேட்க நாதியற்று சாகிறார்கள். அப்பனுக்கு ஒரு வாய் சாப்பாடு கொடுக்காமல் விரட்டியவர்கள் அனாதை பொணமாக எரிக்கப்படுகிறார்கள்.


மனக்கண்ணில் ஓடிய காட்சியில் குலுங்கியபடி அழுத பெரியவர் தனது மூட்டைக்குள்ளிருந்த போட்டோவை எடுத்துப்பார்த்து செண்பகம் என்ன தனியா விட்டுட்டு போயிட்டையே என ஓவென அழுகிறார். அருகிலிருந்தவர்கள் அந்த போட்டோவை கவனிக்க அடப்பாவமே இரண்டு மகன்கள் இருந்துமா உங்களை கவனிக்காம வீட்ட விட்டு தொறத்திட்டாங்க , தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீருங்கறது சரியாத்தானே இருக்கு என்று அதிலிருந்த ஒரு பாட்டி சொல்ல,

இப்பொழுது அவர்களுக்கு மகன்களை அழைத்துச் செல்லும் பெற்றவர்களைப் பார்த்து பெரியவர் ஏன் சிரிக்கிறார் என அர்த்தம் விளங்கியது. நாளை உங்களுக்கும் இந்த நிலை வரலாம் பிள்ளைக்களுக்கு செல்லம் குடுக்காதீங்க, காசு பணம் குடுக்காதீங்க, எது வேணும்னாலும் நீங்களே வாங்கிக் கொடுங்க, பிள்ளைங்க என்ன செய்யறாங்க ஏது செய்யறாங்கன்னு கவனிங்க, கஷ்ட நஷ்டங்களை சொல்லிக்கொடுத்து வளருங்க இல்லாட்டி என் நிலைமைதான் இதையே திரும்பத் திரும்ப பைத்தியம் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார் தருமன் , தான் பெற்ற மகன்கள் இறந்தது கூட தெரியாமல். தருமனின் நிலைகண்டு வருந்திய அங்குள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் ஒருவராக தருமனையும் சேர்த்து கொள்கிறார்கள்.பெற்ற மகன்கள் வீட்டைவிட்டு விரட்டினார்கள், எல்லாம் இழந்து ரோட்டில் வசிப்பவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள் இதுதான் வாழ்க்கை.....எவ்வளவு பெரிய பாடத்தை நடத்தியிருக்கிறது.


(முற்றும்)........!



Rate this content
Log in

Similar tamil story from Tragedy