வேலுநாச்சி 13
வேலுநாச்சி 13
அத்தியாயம் 25 சூழ்ச்சியால் வீழ்ச்சி
நாளுக்கு நாள் மருதிருவரின் கொட்டங்கள் அதிகரித்த வண்ணமே இருந்தது. மேலும் புதிதாக பொறுப்பேற்ற அரசியின் கணவர் வேங்கன் பெரிய உடையாத்தேவரும் மருதிருவரின் சொல்பேச்சைக் கேட்டே எதையும் செய்தார். வெள்ளச்சிக்கும் வேங்கனுக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் எழுந்தன. இருவரும் ஒற்றுமை இழந்து எப்போதும் சண்டை சண்டை என்றே நாட்களைக் கடத்தினர். இது வேலுநாச்சியாருக்கு பெரிய கலக்கத்தைக் கொடுத்தது.
வெள்ளச்சிக்குப் பிறந்த குழந்தையும் உடலளவில் மிகவும் பலவீனமான இருந்தது. வெள்ளச்சிக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாது போனது. இதோடு வெள்ளச்சி நாச்சியார் பதவியேற்று மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் சொல்லுமளவு எந்த நிகழ்வும் இல்லை, எல்லாம் பெரும்பாலும் மருதிருவரின் செய்கைப்படியே நடந்தது.
அன்றைக்கு என்னவோ தாயும் மகளும் மிகவும் உடல் முடியாது சோர்ந்து ஒடுங்கி படுத்திருந்தனர். வேலுநாச்சி மகளையும் பெயர்த்தியையும் அருகே இருந்தே கவனித்துக் கொண்டு இருந்தார்.
அன்று இரவு திடீரென வெள்ளச்சிக்கு தூக்கித் தூக்கிப் போட்டது, அவசர அவசரமாக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். தன்னால் முடிந்த சிகிச்சைகளை எல்லாம் செய்து மருந்துகள், பச்சிலைச் சாறுகள், கசாயங்கள் என எல்லாமே கொடுத்து பெரும் பிரயத்தப்பட்டார். அவ்வளவு செய்தும் ஒன்றுமாகவில்லை... கொடுத்த மருந்துகள் சிறிதும் பிரயோஜனப்படவில்லை, என்ன ஏதென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை... வெள்ளச்சியின் உயிர் உடலை விட்டு சிறிது சிறிதாக காற்றோடு கலக்க ஆரம்பித்தது.
வேலுநாச்சியின் கையைப் பிடித்துக் கொண்ட வெள்ளச்சி... கண்களில் நீர் கசிய அம்மா அம்மா என்று அழுகொண்டே... என் மகளை நன்கு பார்த்துக் கெள்ளுங்கள், அவளை எப்போதும் தனியாகவிட்டுவிட வேண்டாம், அவள் இனி உங்கள் பொறுப்பு என்று சுமைகளை எளிதில் வேலுநாச்சியாரின் தலையில் சேர்த்துவிட்டு மகராசி நிம்மதியாக மேலும் நடக்கும் கொடுமைகளைப் பார்க்க வேண்டாம் என்று முந்திச் சென்றுவிட்டாள் இந்த உலகைவிட்டு.
வேலுநாச்சியின் உலகே இருண்டுவிட்டது. எந்த ஒரு உயிரின் மேல் இருந்த பிடிப்பால் இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் கடந்து பெரும் போர் நடத்தி வெற்றி வாகை சூடினாரோ அந்த ஒற்றை உயிர், ஒரே பற்றுதலும் இன்று எமனுடைய பாசக்கயிற்றின் இரையாக சென்று சேர்ந்துவிட்டது. இனி எந்த பிடிப்பைப் பற்றி இவ்வுலகில் இருக்க முடியும் என்று நினைக்கையில் தொட்டிலில் கிடந்து அழுதாள் பச்சைக் குழந்தை தன் தாய் இறந்ததுகூட தெரியாது பசி தாளாமல்.
தான் பெற்று சீராட்டி பாராட்டி ஊர் மெச்ச வளர்த்தி, நாடே மூக்கின் மேல் விரல் வைக்கும்படி கல்யாணம் பண்ணி மூன்றே ஆண்டுகளில் எமனுக்கு வாரிக் கொடுத்த சோகம் எந்த தாயைத்தான் விட்டுவைக்கும். உயிரைத் தூரோடு பிடுங்கி எறியும் வலி, உயிர் நாளங்கள் ஒவ்வொன்றாய் அற்று சுண்டி இழுக்கும் வலி. வெளியே சொல்ல முடியாத ஒரு ரணமான வலி அது, அதனை எப்படித் தாங்கி உயிர் வாழ்ந்து இந்த பிஞ்சை கரையேற்றுவது என்ற பெரும் ஆழ்ந்த யோசனைகள் கண்களில் படர வெள்ளச்சியின் உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார் வேலுநாச்சியார்.
பெரும் சோகம் அரண்மனையையும் ஊரையும் சூழ்ந்துகொண்டது. இளவயது இராணி அதிகமான எந்த ஒரு நோயும் இல்லாமல் படுத்த ஒரே நாளிலே எப்படி இறந்தார் என்றும் மக்களுக்குள் பலவாறு கேள்வி எழுந்து ஊர் முழுதும் பேச்சு வளர்ந்தது. வேலுநாச்சியாருக்கும் மருதிருவருக்கும் இருந்த பூசல்கள் மக்களிடமும் வெழிப்பட்டன, மக்களும் அவரவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஆதரவு வழங்க இரு அணியாக பிரிந்தனர். நாடே நிம்மதி இழந்து சுடுகாட்டின் சாயம் பூசி இருந்தது.
அந்த இரண்டு வயது பிஞ்சின் உடல்நிலையும் தாயை இழந்த சோகத்தில் அழுது அழுது சாப்பிடாமல் மிகவும் மோசமானது. குழந்தையை தாய் இல்லாமல் சமாளிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம்.
இப்படியே பத்துப் பதினைந்து நாட்கள் கடந்திருக்கும், குழந்தை ஒழுங்காக சாப்பிடாமல், உறங்காமல் அழுது அழுது மிகவும் பலவீனமாக ஆகிவிட்டாள், அவள் நிலைமையைக் கண்டு வேலுநாச்சியின் மனம் இன்னும் துன்பத்தில் உழன்றது.
ஆகாரம் இல்லாது எத்தனை நாட்கள் அந்த பிஞ்சு உடல் தாங்கும், அந்த பச்சைக் குழந்தையும் தன் தாயிடம் செல்லவேண்டும் என்று ஆசை கொண்டுவிட்டாள்ளோ என்னவோ!
அந்த பிஞ்சும் தன் தாயை அடைந்துவிட்டது, அழுது அழுது கரகரத்த தொண்டை இன்று கம்மி இறுகி மூடிவிட்டது. கண்ணீர் தளும்பி வறண்டு விழிகளும் மூடிவிட்டது. அய்யோ நான் என்ன செய்வேன்..! இறைவனே ஏன் எனக்கு இந்த நிலை, ஏன் என்னை மட்டும் இன்னும் உயிருடன் விட்டுவிட்டாய்? என்னையும் அழைத்துக்கொள் என்று அழுது புலம்பினார் வேலுநாச்சியார்.
அடுத்தடுத்து பெருஞ் சோகங்கள், தாங்கமுடியாத பாரம், மனசு கனத்து வெடித்துவிடும் போல... எவ்வளவுக்கு எவ்வளவு வைராக்கியமாக இருந்த வேலுநாச்சியின் வைர நெஞ்சையும் பொடியாக செய்துவிட்டது.
கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையையும் இழந்த சோகம் சிறிதும் வேங்கன் முகத்தில் இல்லை, ஏதோ ஒன்றுமே தெரியாத ஆளாக அமைதியாக இருந்தான்.
மனைவி இழந்த சோகம் இன்னும் மறையவில்லை, அதற்குள் அடுத்த திருமணத்துக்கு ஆலோசனைகளை ஆரம்பித்துவிட்டனர் மருது சகோதரர்கள். இதில் வேங்கனும் உடன்பட்டுவிட்டான். இதுவே மக்களுக்கும் வேலுநாச்சியாருக்கும் பெரிய சந்தேகத்தை உருவாக்கியது.
அரசியலில் பெரும் குழப்பங்கள், அடிமையாக சொன்ன வேலைகளைச் செய்துகொண்டு இருந்த அண்ணன் தம்பி இருவரும் இன்று இந்த அரசையே ஆட்டம் காணவைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள். தங்களுக்கென்று சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள் எல்லாம் உள்ள ஒரு வலிமையான அரசை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. சூழ்ச்சிகளாலும் சந்தர்ப்பங்களாலும் அரசைக் கைப்பற்ற மருதிருவர் பெரும் பிரயத்தனம் செய்தனர்.
இதனைப் பொறுக்க முடியாக வேலுநாச்சியார் ஆற்காட்டு நவாப்பிடமே உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் மருது சகோதரர்கள் செய்யும் காரியங்கள் எதுவும் சரியில்லை அவர்கள் உங்களுக்குப் பாதகமாக நிறைய சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என் சொந்த நாட்டிலேயே என் உரிமைகளை முடக்கிவிட்டனர். அவர்களுக்கு உங்களால் தான் தக்க பாடம் புகட்ட முடியும் என்று தன் மனப் பொறுமல்களை எழுதி அனுப்பினார்.
இதற்கான பதில் சீக்கிரமே வந்துவிட்டது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே. எப்போது எப்போது என்று காத்திருந்தவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் சும்மா விடுவானா என்ன? வரிந்துகட்டி உதவி செய்ய தயாராய் வந்தான் நவாப்.
சிவகங்கை மீது முறையாக வரி செலுத்தவில்லை என்று போர் அளிவித்தான். போரும் நடந்தது, அதில் வெற்றி தோல்வி இன்றி இரண்டு பக்கமும் சம இழப்புகள். இது மருது சகோதரர்களுக்கு எதிர்பாரா அடியாக விழுந்தது. ஆனாலும் சுதாரித்து எழுந்து நின்றுவிட்டனர்.
இதன்பின் அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் மிக தீர்க்கமாக, அமைதியாக யாருக்கும் தெரியாது நிதானமாக வைத்தனர்.
சிறிதும் நன்றி என்ற உணர்வு இல்லாமல் தங்களது சுயநலன் என்ற உணர்வுடன் மக்களையும் வேலுநாச்சியாரையும் மிகப்பெரும் துன்பங்களுக்கும் களங்கங்களுக்கும் ஆளாக்கினார்கள் அண்ணன் தம்பி இருவரும்.
அத்தியாயம் 26 துரோகம்
பதவியேற்ற சில வருடங்களுக்குள்ளாக அரசி வெள்ளச்சியும் அவளது குழந்தையும் அடுத்தடுத்து இறந்தது நாட்டில் பெரும் குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியது. வேலுநாச்சியாரின் மனம் முற்றிலும் சிதைந்து விட்டிருந்தது. எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் தனியே ஒதுங்கி சோகக்கடலில் மூழ்கி இருந்தார்.
இந்த நேரத்தில்தான் வேங்கன் பெரிய உடையாத்தேவருக்கு மறுமணம் செய்வது குறித்த பேச்சு எழுந்தது. வேலுநாச்சியாருக்கு இதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை, ஏனென்றால் அடுத்த வாரிசு என்று ஒன்று கண்டிப்பாக நாட்டுக்குத் தேவை, ஆனால் அதில் பெரிய மருதுவின் சூழ்ச்சி இருப்பதை அறிந்ததும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மருது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெரும் சதி ஆலோசனை செய்து, பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை வேங்கனுக்குத் திருமணம் செய்வித்தால் கொஞ்ச கொஞ்சமாக நாட்டை நாம் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணினர். இந்த திட்டம் வேலுநாச்சிக்கு இடியாய் இருந்தது. பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் அற்பம் நாட்டின் கட்டுப்பாட்டுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக சிந்திப்பார்கள் என்று சிறிதும் யோசிக்கவில்லை.
இந்த திருமணத்துக்கு வேலுநாச்சியால் மறுப்பு சொல்ல இயலவில்லை. ஏனென்றால் எல்லா முடிவுகளையும் செயல்படுத்துகின்ற இடத்தில் மருது சகோதரர்களே இருந்தனர். தான் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை என்பதை நினைக்கும் போதே அவரின் உள்ளம் குமைந்தது.
எட்டு ஆண்டுகள் மறைந்து மறைந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மாற்றார் கோட்டைகளில் ஒழிந்து படை திரட்டி, பயிற்சி அளித்து, கணவனுக்கு அளித்த வாக்கைக் காப்பாற்ற போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டு கடைசியில் இந்த நாட்டில் சொந்தமாக ஒரு முடிவு எடுக்கக்கூட உரிமையின்றி இருப்பதை நினைத்தால் உடல் அவமானத்தால் கூசுகிறது என்று வேதனைப்பட்டார்.
வேலுநாச்சியாரின் எதிர்ப்பை மீறி வேங்கன் பெரிய உடையாத்தேவருக்கு பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளுடன் திருமணம் நிறைவடைந்தது.
ஏற்கனவே கணவனை இழந்து இப்போது பெற்ற மகளையும் இழந்து பெயர்த்தியையும் இழந்து இன்னும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார் வேலுநாச்சியார்.
தனக்கு ஆறுதல் சொல்லக்கூட நாதியில்லாத இந்த இடத்தில் இருப்பதைவிட விருப்பாச்சி பாளையம் சென்று கோபால நாயக்கரிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசினால் சிறு மாறுதலாவது ஏற்படும் என்று தோன்ற வேலுநாச்சியார் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.
மருதிருவர் நினைத்தபடி திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இனி அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல வேங்கனிடம் செலுத்த ஆரம்பித்தனர். மகுடிக்கு அடிபணியும் பாம்பாக மருதிருவரின் கட்டளைக்குப் பணிந்தான் வேங்கன். வேங்கன் பெயரளவுக்கே மன்னனாக இருந்தான், ஆட்சி அதிகார கட்டுப்பாடுகள் எல்லாம் மருது சகோதரர்களிடம் தான் இருந்தது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக மற்ற பாளையக்காரர்களையும் ஒன்று திரட்ட விழைந்தனர். ஆனால் அதில் அவர்கள் வேங்கன் தலைமையிலான கூட்டணி என்று அவனை முன்னிருத்தி தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். நாட்டின் செல்வங்களை அவர்கள் இந்த கூட்டணி திரட்டுவதிலே செலவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேலுநாச்சியார் விருப்பாச்சி சென்றது மருது சகோதரர்களுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. இதையெல்லாம் விருப்பாச்சியில் இருந்தவண்ணமே ஒற்றர்கள் மூலம் அறிந்த வேலுநாச்சியார் மேலும் மனமுடைந்து போனார்.
அத்தியாயம் 27 சுயநலக் கயவர்கள்
யார் என்ன செய்தாலும் தங்கள் நலனிலே குறியாக இருப்பவர்கள் என்றும் மாறவேமாட்டார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக அணி திரட்டி போராடினால் எவ்வளவு சேதங்கள் ஏற்படும் என்பது மருதிருவர் அறிந்த உண்மையே இருந்தாலும் அவர்கள் பிடித்த பிடியிலேயே நிற்பது எந்த காரணம் என்று யாரும் அறியமாட்டார்கள்.
வேலுநாச்சியும் தனக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகளால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு நீங்கி விருப்பாச்சி கோட்டைக்குச் சென்றுவிட்டார். செய்வது எதையும் ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லை. அண்ணன் அமைச்சர் தம்பி தளபதி அவர்கள் வைத்ததே சட்டம், அவர்கள் எடுப்பதே முடிவு... பக்கத்து பாளையங்களான சிலவற்றுடன் இரகசியக் கூட்டணி ஏற்படுத்தி வெள்ளையர்களை வெளியேற்ற பெரும் படை திரட்ட ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றன.
மேலும் தங்கள் மகளை மன்னருக்கு மணம் முடித்துக் கொடுத்ததில் இருந்து இருவருக்கும் தாங்களே அரசை ஏற்று நடத்தும் பொறுப்பு உடையவர்கள் என்ற எண்ணமும் வந்து தொற்றிக்கொண்டது. யாராக இருந்தாலும் அவர்களின் அழிவுக்குக் காரணமாக அவர்களது ஆசையே அமைந்துவிடுகிறது. உலகின் நியதி இது தானே.
தங்கள் நோக்கம் நிறைவேற எத்தகைய பாவத்தையும் செய்யும் துணிவிற்கு வந்துவிட்டனர் மருது சகோதரர்கள்.
நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் ஏற்கனவே அவர்கள் கையில் வந்துவிட்டன, வேங்கன் பெயரளவுக்கே மருதிருவரின் கைப்பாவையாக மட்டுமே இருந்தான். அவனை கேடயமாக முன்வைத்து இவர்கள் செயல்பட்டார்கள். மேலும் நாட்டின் அதிகாரங்கள் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்ட அவர்கள் பெரும் சதி ஒன்றை உருவாக்கினார்கள்.
தாங்களே அரியணைக்கு முழு சொந்தக்காரர்களாக மாற வேண்டும், வேறு யாரும் பங்குபோட வாரிசு என்று வரக்கூடாது என்பது. அதற்காகத்தான் மருதாத்தாளை வேங்கனுக்கு மணம் முடித்ததும். இருந்தாலும் இன்னும் ஆழமாக இதனை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த வேண்டுமானால் அதற்காக வேறு ஒரு திட்டத்தையும் செயல்படுத்த இருவரும் துணிந்துவிட்டனர். ஆம் படுபாதகச் செயல் ஒன்றைச் செய்ய துணிந்துவிட்டனர்.
தாயினும் மேலாக பாசம் காட்டி உரிமையுடன் பிள்ளைகள் போல வளர்த்து ஆளாக்கிவிட்ட வேலுநாச்சியின் கற்பின் மீது பழி சுமத்தத் தயாராகிவிட்டனர் அவ்விருவர். அந்த சண்டாளப்பாவிகள் வேலுநாச்சியார் பெரிய மருதுவுடன் இரகசியத் திருமணம் செய்துகொண்டார், கணவனை இழந்த கைம்பெண் இராணி பெரிய மருதுவுடன் நெருக்கமாக இருந்தார் என்று ஊர் அறிய பேசும்படி செய்து வேலுநாச்சி என்ற கட்டுக்கடங்க நெருப்பை நீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். இந்த அபத்தமான பொய்களை நம்புவாரில்லை. மூடர்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற இத்தகைய இழி செயல் செய்யக்கூட தயங்கமாட்டார்கள் போல. விலங்குகளுக்குத்தான் தாய் தமக்கை உறவு கிடையாது, ஆனால் இந்த மனித மிருகங்கள் அதைவிட கீழான செயல்களைச் செய்துவிட்டனர். இந்த செயல் வேலுநாச்சியை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை சிறிதும் கருதாது தங்கள் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருந்தனர் மருதிருவர்.
விருப்பாச்சி கோட்டையில் இந்த அநியாயமான செயல்களை கண் கொண்டு காண இயலாமல் தனித்து அந்தப்புரத்தின் குளத்தின் அருகே பூத்திருந்த தாமரையின் இதழ்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் வேலுநாச்சியார். கோபால நாயக்கர் தாயே என்று அழைத்தவர் மெதுவாக உள்ளே வந்தார். வாருங்கள் நாயக்கரே என்ன செய்தி? ஏன் முகத்தில் வாட்டம்? அது ஒன்றுமில்லை தாயே தங்களைப் பற்றி சில கயவர்கள் தவறான செய்திகளை ஊர் முழுதும் பரப்புகின்றனர். இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக ஒற்றர்கள் முலம் அறிந்தேன். இது எங்கு சென்று முடியும் என்பது தெரியவில்லை... என்ன சொல்கிறீர்கள் நாயக்கரே அப்படி என்ன தவறான செய்தி என்னைப்பற்றி பரவுகிறது? அது வந்து தாயே... ம்ம் சொல்லுங்கள் நாயக்கரே! அம்மா அந்த மருது சகோதரர்கள் இருவரும் தங்கள் கற்பின் மீது கலங்கம் ஏற்படுத்திவிட்டனர், பெரிய மருதுவுடன் தாங்கள் தவறான உறவில் இருந்து இரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரப்பி மக்களைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
குட்டையில் உள்ள மீன்களை ஒரு கல் எடுத்துப் போட்டு நீரை குழம்ப வைத்து பிடிப்பது போல மருதிருவரும் மக்களின் மனக்குட்டையில் கலங்கம் எனும் கல்லை எறிந்து அதிகாரம் என்ற மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்துக்கிடக்கின்றனர். கல்லெறிந்தவன் காத்திருக்க அறியா மீன்கள் முன்டியடித்து ஒன்றையொன்று மோதித் தள்ளி ஓடுகின்றன தூண்டிலில் மாட்டிக்கொள்ள.
இந்த இழி செயலை அறிந்ததும் வேலுநாச்சியாரின் கண்கள் கனலைக் கக்கும் கொல்லனின் உலைக்கலன் போல செக்கச்சிவந்து மின்னின, அப்படியே பார்வையாலே பொசுக்கிவிடுவது போல அந்த கண்கள் அனலைக் கக்கின, மூச்சின் வெம்மை எதிரே வருபவர்களை அப்படியே பொசுக்கி விடும் போல தகித்தது. எத்தனை தைரியம் அந்த கயவர்களுக்கு பிள்ளைகள் போல வளர்த்த என்னை சற்றும் வைத்துப் பார்க்காமல் இப்படி கேவலமான புரளியைக் கட்டிவிட்டுள்ளனர். என் கற்பையே கேள்விக்குறியாக்க எவ்வளவு துணிச்சல் அவர்களுக்கு? நான் நிறைய செயல்களில் மனம் ஒத்துப்போகாத ஒரே காரத்தால்தான் உங்கள் கோட்டைக்கு அமைதியைத் தேடி வந்தேன்.
என் மகளையும் பெயர்த்தியையும் கொன்றுவிட்டு, மருமகனை கைக்குள் வைத்துக்கொண்டு பண்ணாத கூத்தெல்லாம் பண்ணினார்கள், அத்தனையும் பொறுத்துக்கொண்டேன் ஆனால் இன்று கடைசியில் என்னையே பதம் பார்க்க துணிந்துவிட்டனர் கேடுகெட்டவர்கள்.
மிகுந்த ஆவேசத்துக்கு உள்ளான வேலுநாச்சியார் பேசிக்கொண்டு இருந்தபோதே கண்கள் சொருகி அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.
pan> அத்தியாயம் 28 வேங்கை வீழ்த்தப்பட்டது சிலரின் கேடுகெட்ட செயல்கள் அவர்களைப் பாதிப்பதைவிட அவர்களைச் சூழ்ந்து இருப்பவர்களையே பெரிதும் பாதிக்கின்றன. மருது சகோதரர்களின் இந்த இழிவான செயல் அவர்களை எள்ளளவும் பாதிக்கவில்லை ஆனால் வேலுநாச்சியாரின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்துவிட்டது. எதற்கும் அஞ்சாத வேங்கையாக இருந்த ஒரு வீராங்கனையை இன்று ஊர் பழிக்கு அஞ்சி அடங்கும்படி செய்துவிட்டனர் அய்யோக்கியர்கள். எல்லோருமே நல்லவர்கள் என்று நம்பிக்கை வைத்து நாம் அவர்களை மதித்துப் போற்றும் நேரத்தில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டி நீங்கள் நினைத்த அளவுக்கு நாங்கள் அவ்வளவு உயர்வானவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டிச் சென்றுவிடுவார்கள். மருது சகோதரர்களும் போரில் பேருதவியாக இருந்து நாட்டை மீட்க உதவியதில் பெரிதும் அவர்கள் மீது மதிப்பு வைத்திருந்த வேலுநாச்சியின் நம்பிக்கையை படீரென உடைத்து நாங்கள் அப்படி இல்லை, எங்களுக்குத் தேவை அந்த சிம்மாசனம் என்று நிரூபித்துவிட்டனர். கோபால நாயக்கர் நடந்தவற்றை சொல்லச் சொல்ல மருது சகோதரர்கள் மீதான நம்பிக்கை ஒவ்வொன்றாக பட்பட்டென அறுந்து, அவரின் உயிரையும் அறுத்துவிட்டது. அந்த அதிர்ச்சியிலே இதயத்துடிப்பு உச்சத்தை எட்டி மயக்க நிலையையும் அடைந்துவிட்டார் அரசியார். கீழே மயங்கி விழுந்த அரசியாரை சேடிப்பெண்கள் மெல்ல தூக்கி பஞ்சணையில் கிடத்தினர். வைத்தியர் விரைந்து வரவழைக்கப்பட்டார், வந்து நாடியைப் பிடித்துப் பார்த்தவர் இதயத்துடிப்பின் வேகம் அளவுக்கு மீறி இருப்பதை உணர்ந்தார். அடுத்து அதற்கான சில மூலிகைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அரசியாருக்கு பாலில் கலந்து கொடுத்தார். வெளியே வந்த வைத்தியர் நாயக்கரிடம் நிலைமை ஒன்றும் நமக்குச் சாதகமாக இல்லை எந்த நேரம் என்ன ஆகும் என்பது தெரியாது என்று தலையில் இடி விழுவது போல சொல்லிவிட்டார். ஆமாம் நாயக்கரே அவர் உடலும் வயோதிகத்தால் பலம் இன்றி இருக்கிறது, மேலும் மனம் அடுத்தடுத்து ஏற்பட்ட வரிசையான மரணங்களைத் தாங்கமுடியாது இன்னும் பலவீனமாக உள்ளது. உடலில் குறை இருந்தால் மனதை வைத்து அதனை நிவர்த்தி செய்யலாம், ஆனால் உடலிலும் பலமில்லை, மனதிலும் வலுவில்லை. எனவே நிலைமை மிகவும் மோசம்தான் என்று கைவிரித்துவிட்டார். மயங்கி விழுந்ததில் இருந்து இப்போதுவரை எந்த நினைவும் இல்லாது குழந்தை போல உலகம் மறந்து படுத்துக்கிடக்கிறார் வேலுநாச்சியார். பெரிய மறவர் தேசத்தில் ஒற்றை பெண்புலியாய் பிறந்து நாட்டைக் கட்டி ஆண்ட இளவரசி, சிறிய மறவர் தேசத்து முத்துவடுகரைத் திருமணம் செய்து சிவகங்கை மகாராணியாக வலம் வந்து எட்டுத்திக்கும் கட்டியாண்ட தேவி இன்று மழலை போல மல்லாந்து படுத்துக்கிடக்கிறார். கண்கள் இந்த நிலையைக் காண அஞ்சி இமைகளைத் திறக்க மறுக்கின்றன, இருக்கும் திசை நோக்கி கால்கள் நடைபோட மறுக்கின்றன அந்த அவல காட்சியைக் காணச் சகியாமல். எப்பேர்பட்ட ஆளுமையாக இருந்தாலும் தாங்கிக்கொள்ள முடியாத பல இழப்புகளை ஒரே நேரத்தில் எப்படி ஏற்று அதில் இருந்து வெளியே வரமுடியும்? அடி மேல் அடியாக மகள் பெயர்த்தி இப்பொழுது தான் உயிரினும் மேலாக பாதுகாத்து வந்த தன் கற்பு... இவையெல்லாம் தான் நம்பி வளர்த்த இரு நயவஞ்சகர்களால் என்பதை அறியும் போது மனது இன்னும் கனத்தது. வளர்த்த கிடா மாரிலே பாய்ந்தால் கூட பரவாயில்லை ஆனால் கீழ்த்தரமாக முதுகில் பாய்ந்து உயிரைக் குடிக்கிறது என்பதைத்தான் தாங்க முடியவில்லை. எட்டு தேசம் கட்டி ஆண்ட வீர மறவச்சி, வெள்ளையனைப் பின்னங்கால் பிடரியில் பட தலைதெறிக்க ஓடவைத்த புலி, எதிர்க்க வேண்டும் என்று நினைத்தவனெல்லாம் இருந்த இடம் தெரியாமல் செய்த பெண்ணரசி, பன்மெழிப் புலமை வாய்ந்த பைங்கிளி, தனிமையின் துக்கங்களை வைராக்கியமாக மாற்றி எட்டாண்டுகள் தவ வாழ்வு வாழ்ந்து வஞ்சம் தீர்த்த வன்புலி அவள். இன்றைக்கோ அவள் நிலையை? கடல் போல அரண்மனை அங்கே ஆள் இன்றி ஏங்கிக்கிடக்க, தன் இடத்தில் இருக்க வகையில்லை இன்று, இருபது மைல் தள்ளி மாற்றார் கோட்டையில் விருந்தாளியாக இருக்கும் நிலை... ஏன் இந்த சோதனை... இறைவன் வாழ்வின் எல்லைவரை நல்லவர்களை தன் சோதனைகளால் வாட்டி வதைத்துதான் கூட்டிச்செல்வான் போல. சொந்த பந்தங்கள் கூடி இருந்து எப்போதும் நிறைந்திருந்த வேலுநாச்சியின் மனது இன்று பெருந்தனிமையால் ஆட்கொள்ளப்பட்டு களக்கத்தில் உள்ளது. தனக்கென உறவு என்று சொல்லிக்கொள்ளக்கூட ஒருவருமில்லையே... உயிருக்கு உயிராய் இருந்த கணவன், கௌரி, வெள்ளச்சி, என் பெயர்த்தி என அத்தனைப் பேரையும் அழைத்துக்கொண்டாய், ஏன் என்னை மட்டும் இந்த பாசாங்கு உலகில் தனிமையில் விட்டுவிட்டுச் சென்றனர், ஏன் என்னை இந்த இழிநிலைக்கு ஆளாக்கினார்கள் என்று மனம் குமைந்துக் கொண்டே இருந்தார். சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை, இரண்டு கவலங்களுக்கு மேல் உள்ளே செல்ல மறுக்கின்றது. உடல் சிறிது சிறிதாக உணவை குறைக்கிறது. கண்களைச் சுற்றி பெரிய கருவளையம். வயோதிகத்தால் சுருங்கிய தோல்கள். அழகு... என்ன அழகு... ஒரு காலத்தில் கண்ணுக்குத் தீட்டாத மையா? இன்று மை இன்றியே கண்களைச் சுற்றி கருமை பெருமையாகப் படரந்துள்ளது. இந்தத் அறுபது வயது கிழவியின் கற்பில் குற்றம் கற்பிக்கின்றனர் அந்த படுபாதகர்கள். இப்போதெல்லாம் உடல் முன்பு போல இல்லை, நீண்ட நேரம் உட்காருவதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. கண்களின் பார்வை திறன் வேறு குறைந்துகொண்டே வருகிறது. தூரத்தில் இருப்பது எதுவும் தெரியவில்லை, அன்று ஒரு காத தூரத்தில் வரும் சத்தத்தை வைத்து எது என்று ஊகிக்கும் காதும் இன்று அருகில் கேட்கும் வார்த்தைகளைக்கூட உணருவது இல்லை. நீண்டு கருத்திருந்த கேசம் இன்று வெள்ளை நுரை போல வெளுத்துப்போய் உள்ளது. ஈட்டி பிடித்து எறிந்த கைகளும், குதிரை ஏறி பறந்த கால்களும் சிறிதும் வலுவில்லாமல் குடுகுடுவென நடுங்குகின்றன. ஆமாம் வயோதிகம் மிகவும் கொடுமையானது, அதுவும் தனிமையில் துணையற்ற வயோதிகம் சகித்துக்கொள்ள முடியாத துக்கத்தை உடையது. தனக்கென ஒரு தனி நாடே இருந்தும் அந்த நாட்டிற்காக எத்தனை போராட்டங்கள் எத்தனை உயிர் பலிகள், அதுவும் குயிலியின் தியாகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. மேலும் அதோ இப்போது நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறாளே வெட்டுடையாள்... கடைசியில் அடுத்த வேளை சோற்றுக்கு இன்று அடுத்தவர் நிழலை நாடும் நிலையில் நிற்கிறேன், என் அரண்மனை அடுப்பு அணையாது எரிந்து வந்தோருக்கு எல்லாம் வயிறு நிரப்பி அனுப்பியது. என் உயிரை என் சொந்த மண்ணில் விடக்கூட உரிமை இல்லாது, அடுத்தவர் இல்லத்தில் அடைக்கலமாக இருக்கிறேன். இந்த விருப்பாச்சி கோபால நாயக்கர் மட்டும் இல்லை என்றால் நான் இன்றைக்கு எந்த நிலையில் இருந்திருப்பேன் என்பதை என்னாலும் கணிக்க முடியாது. என் மகளுக்கு ஒரு நல்ல ஆசானாகவும் எனக்கு தந்தை போலவும் அரவணைத்த கருணை உள்ளம் கொண்டவர். என்னதான் இந்த உலகம் சூழ்ச்சி நிறைந்த கயவர்களால் சூழப்பட்டு இருந்தாலும் உண்மையான நேர்மையான சில உயிர்களும் என்றும் இருக்கின்றனர். அவர்களாலே இந்த உலகம் இன்னும் சுற்றிக்கொண்டு இருக்கிறது போல. நிலையில்லாத இந்த உலகில் யாரையும் நம்புவது நம் முட்டாள்தனம், அதற்க்கு நம்மை நாமேதான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும். சிலநாட்கள் உடல்நிலையும் மனநிலையும் சரியில்லாது பெரிய துன்பத்தை அனுபவித்தார். உடலுக்கு பலம் சேரக்க உணவும் உள்ளே போகவில்லை, மனதின் கனம் குறைக்க தேவையற்ற நினைவுகளும் வெளியேறவில்லை. இவை மேலும் உடலின் நிலையை பாதித்தன. மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் எளிதில் மைறயக்கூடியவை அல்ல, ஆனால் இந்த பாதிப்பு உடலின் நிலையையும் வேகமாக குலைத்தது. நாளுக்குநாள் வேலுநாச்சியாரின் உடல் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தது. அன்று இரவு ஏனோ என்றைக்கும் இல்லாத விதமாக வயிறு நிறைய என்ன வேண்டுமோ கேட்டு வாங்கி உண்டார். நாயக்கருக்கு இதைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. எதுவேமே உட்கொள்ளாது இருந்தவர் இன்று நன்கு சாப்பிடுகிறாரே என்று. சாப்பிட்டு முடித்தபின்னர் வேலுநாச்சி நீண்ட நேரம் கோபால நாயக்கருடன் உரையாடினார். பாதி இரவுக்கு மேல்தான் உறங்கச் சென்றனர். அடுத்தநாள் காலை ஏனோ கதிரவன் வர மனமே இல்லாமல் மேகங்களுக்குள் ஒழிந்து ஒழிந்து எட்டிப் பார்த்துக் கொண்டே எழுந்தான், பறவைகள் கூட எந்த சப்தமும் இல்லாது அமைதியாக இருக்கின்றன என்னவென்றே தெரியவில்லை... அப்படி ஒரு மந்தமான நாளின் தொடக்கம். பாதி இரவுக்கு மேல் தன் அறைக்கு உறங்கச் சென்ற வேலுநாச்சி காலை வெகுநேரம் ஆகியும் எழுந்து வெளியே வரவில்லை. சரி என்ன என்று பார்த்துவர சென்றார் நாயக்கர். படுக்கையில் நன்கு உறங்குவது போல இருந்தார் வேலுநாச்சியார்... அருகே சென்று தாயே நேரமாகிவிட்டது எழுந்திருங்கள் என்று கூப்பிட்டும் எந்த அசைவும் இல்லை, மெல்ல வந்து கை வைத்து எழுப்ப முயற்சித்தார், உடலைத் தெட்டதும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆம் உடல் அப்படி சில்லிட்டு குளிர்ந்துபோய் சூடே இல்லாமல் இருந்தது. ஒருவாறு சுதாரித்து நின்ற நாயக்கர் ஒரு யூகத்துக்கு வந்தாலும் எதற்கும் வைத்தியரை வரவழைப்பது என்று அழைப்புவிட்டிருந்தார். வந்த வைத்தியர் பார்த்த மாத்திரத்திலேயே உண்மையை உணர்ந்துவிட்டார், இருப்பினும் நாயக்கருக்கு புரியவைக்க வேண்டும் என்று ஒரு முறை பரிசோதனை செய்து அதன்பின் கூறினார். ஆம் யாருடைய கட்டுகளுக்கும் அடங்காத பெண்புலி, எதிரியை தவிடு பொடியாக அடிக்கும் வேங்கை, கருணையின் சாகரம், தியாகத்தின் சிகரம் இன்று சிந்தை இழந்து உயிர் நீத்து பட்டுமெத்தையில் வெற்றுடலாக கிடக்கிறது. அத்தனை கம்பீரமாக இருந்த பெண்ணரசி குழந்தை போல சிரித்துக் கிடக்கிறாள் உயிரற்ற உடலாக. விருப்பாச்சி கோட்டையே சோகத்தில் மூழ்கியது. செய்தி சிவகங்கைக்கும் அனுப்பப்பட்டது, ஆனால் முறைக்குக்கூட ஒருவரும் வந்து செய்யவேண்டிய செய்முறைகளைக்கூட செய்யவில்லை. அனைத்து இறுதி காரியங்களையும் கோபாலநாயக்கரே முன்னின்று நடத்தினார். தன் மகள் போல இருந்த வேலுநாச்சிக்கு தந்தை இடத்தில் எல்லா செய்முறைகளையும் செய்தார் அவர். வேங்கையாய் பீடுகொண்டு வீறுநடையுடன் இருந்த வேலுநாச்சி இன்று தகிக்கும் நெருப்புக்குள் தணலாக எரிந்து கொண்டு இருக்கிறாள். அந்த பெண்ணரசி கற்பை இழந்த காரணத்தால் அந்த படுபாதகர்களின் வம்சம் சடுதியில் அழிந்துபட்டதோ தெரியவில்லை. அரசன் அன்று கொன்றாலும், தெய்வம் நின்று கொன்றுவிட்டது போலும். வேலுநாச்சியின் மீதான களங்கங்களை யாரும் ஒருபோதும் நம்பவில்லை, மருது சகோதரர்களின் ஆதரவாளர்களைத் தவிர. நெடும்பெரு வாழ்வின் எல்லா நிலைகளையும் அனுபவித்து, தனிமையில் உழன்று தனியொரு பெண்ணாக முன்னின்று ஒரு படையை நடத்தி சிம்ம சொப்பனமாக இருந்த வெள்ளையர்களை தன் உத்தியால் புறமுதுகிட்டு ஓடச்செய்த வீராங்கனை, பெண்ணியத்துக்கு முன்னோடி, சுதந்தர போருக்கு முன்னோடி என்று பல துறைகளில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்த இருக்கின்ற வேலுநாச்சியார் புகழ் என்றும் ஓங்குக...! ஜெய் பவானி! வெற்றி வேல்! வீரவேல்! ***முற்றும்.*** பின்குறிப்பு வரலாற்றின் பக்கங்கள் மிகவும் கறை படிந்தவை. இதுவரை நாம் அறிந்தவை எல்லாமே பல ஆளுமைகளின் நேர்மறையான பக்கங்கள் மட்டுமே. அவர்களின் மற்றொரு பக்கம் என்பது நலன் கருதி மறைத்தே வைக்கப்பட்டிருந்தது. மருது சகோதரர்களும் பெரிய ஆளுமைகள் தான் ஆனால் அவர்கள் செய்த பெருஞ்சதிகள் ஏராளம். எதிர்மறையான பக்கங்கள் வெளிவரும் போது நாம் அதனை ஏற்று ஆதரிக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு மாறாக எப்படி நீங்கள் இப்படி எழுதலாம் என்ற கேள்வியே எழும். பெரும்பாலான வரலாற்று நாவல்களில் முக்கிய ஆளுமைகள் பற்றிய தவறான விசயங்கள் சிறிதும் பேசப்பட்டிருக்கமாட்டாது. ஆனால் இங்கு அவற்றை நான் வெளிப்படையாக எழுதியுள்ளேன். இந்த நாவலை எழுத எனக்கு முழு ஆதாரமாக இருந்தது டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்கள் எழுதிய சீர்மிகு சிவகங்கைச் சீமை என்ற ஆராய்ச்சி நூல் தான். மேலும் பல இணையதள செய்திகள் பெரிதும் உதவின. 1736ம் ஆண்டு வேலுநாச்சியார் இராமநாதபுரத்தில் பிறந்தார், 1746ல் முத்துவடுகநாதருக்கு மணம்புரிந்து கொடுக்கப்பட்டார். அவருக்கு குழந்தை எப்போது பிறந்தது என்ற குறிப்பு எங்கும் சரிவர கொடுக்கப்படவில்லை. 1772ல் ஏற்பட்ட போர் ஒன்றில் வெள்ளையர்களின் சூழ்ச்சியால் முத்துவடுகநாத தேவர் கொல்லப்பட்டார். பின்னர் எட்டு ஆண்டுகள் விருப்பாச்சி கோட்டையில் தங்கி தனக்குத் தேவையான படைகளைத் திரட்டியும், மற்ற மன்னர்களின் உதவியைப் பெற்றும் நாட்டை மீட்க முனைந்து போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டு 1780ல் சிவகங்கையின் இராணியாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருக்குத் திருமணம் செய்வித்து அரச பெறுப்பை விடுத்து மகளுக்கு பிராதிணியாக இருந்துவந்தார். அந்த சமயங்களில் மருது சேர்வைக்காரர்களுடன் ஏற்பட்ட முரண் அதிகமாகி நவாப்பின் உதவி நாடி அவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். ஆனால் அவர்களின் ஒரே எண்ணம் வேலுநாச்சியார் அரச பதவியை துறந்து வேங்கன் மன்னன் ஆகவேண்டும் என்பது. அதையும் வேலுநாச்சியார் செய்தார். பின் சிலநாட்களில் குழந்தை பெற்றெடுத்த வெள்ளச்சி குழந்தையுடன் திடீரென இறந்தது ஒரு அரசியல் படுகொலையாக எண்ணப்பட்டது. ஏனெனில் அதன் பின் நடந்த காரணங்கள் சந்தேகத்தைத் தூண்டின. பெரிய மருதுவின் மகள்களுள் ஒருவள் வேங்கனுக்கு இரண்டாம் தாரமாக மணம் முடிக்கப்பட்டதும், அதன் பின்னான மருது சேர்வைக்காரர்களின் மாறுபட்ட செயல்பாடுகளுமே. மருது சகோதரர்களின் தொல்லைகளப் பொறுக்க முடியாத வேலுநாச்சி 1789ம் ஆண்டு ஆற்காட்டு நவாப்பிடம் முறையிட்டு வெள்ளையர்களின் படை உதவி பெற்று அவர்களை வெற்றிகொண்டார். மகள் இறந்த சோகம், மருது சகோதரர்களின் துரோகம் என மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உடல் நலிந்த வேலுநாச்சியார் விருப்பாச்சி கோட்டையில் 1796ம் ஆண்டு இறந்துவிட்டார். மருது சேர்வைக்கார்களின் நடவடிக்கை இன்னது என்பதை தீர்மானிப்பது பெரும் சவாலாக இருந்தது. உறவினர்கள் ஆகையால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் பக்கத்து நாடுகளுடன் தேவையில்லாத பல சிக்கல்களை உருவாக்கிக்கொண்டே இருந்தனர். இது மன்னர் வேங்கனின் நிலையை பெரிதும் பாதித்தது. ராஜ விசுவாசத்தின் உச்சியையும் , ராஜ துரோகத்தின் வேரையும் ஒருங்கே காட்டிச் சென்றனர் மருது சகோதரர்கள். இப்படியாக பல பிரச்சினைகளை வளர்த்து பெரும் இன்னலுக்கு உள்ளாக்கிய மருது சகோதரர்களை வெள்ளையர்களின் படை 1801ம் ஆண்டு திருப்பத்தூர் கோட்டையில் தூக்கில் இட்டது. வேங்கன் பெரிய உடையாத் தேவர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டு 1802ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாது உயிரிழந்துவிட்டார். இந்த நாவல் முழுவதும் வேலுநாச்சியாரின் பார்வையில் எழுதப்பட்டது. வரலாற்றுப் பாத்திரங்களுடன் தேவைக்காக இராக்கம்மாள் என்ற பாத்திரம் இணைக்கப்பட்டது.