வல்லன் (Vallan)

Drama Classics

4  

வல்லன் (Vallan)

Drama Classics

வேலுநாச்சி 6

வேலுநாச்சி 6

3 mins
952


முந்தைய அத்தியாத்துக்கான இணைப்பு


https://storymirror.com/read/story/tamil/vi6yd3rt/veelunaacci/detail


அத்தியாயம் 8 வெள்ளச்சி நாச்சியார்


எத்தனை ஆண்டுகள் கழித்து தாயாகும் பாக்கியம் கிடைத்த பெண்ணின் மனநிலை என்ன நாம் சொல்லவா வேண்டும்... ஆடாத தசைகளும் ஆடிவிட்டது, எதற்கும் அஞ்சாத பெண் புலி அப்படியே அமைதியாய் அமர்ந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல மனதின் பூரிப்பு அலாதியாகிக்கொண்டே உச்சத்தை நோக்கிப் பயனப்படத் தொடங்கியது. 


மாதங்கள் கண் சிமிட்டி விழிப்பதற்குள் வெகு வேகமாக உருண்டோடிவிட்டது. ஒன்பதாவது மாதம் வந்துவிட்டது. கருவுற்ற பெண்ணின் கர்ப்ப காலத்தினை முழுமையாக்குவது வளைகாப்பு தானே. பிறந்த வீட்டில் இருந்து நல்ல நாள் பார்த்து வளைகாப்புக்கு நாள் குறித்து செல்ல மகளைக் கண்டு ஆனந்தக் கூத்தாட வருகிறார் இராமநாதபுர மன்னர் செல்லமுத்து தேவர். 


ஆமை வடை, உளுந்துவடை, அரிசி மாவு போண்டா, ஒப்புட்டு, முறுக்கு, சீடை, பொரித்த அவல், லட்டு இன்னும் எண்ணிலடங்கா பலகாரங்கள், பல்வேறு சீமைகளில் இருந்து பல வகைப் பழங்கள், மசக்கையை சமன் செய்யும் புளிப்புச் சுவை கொண்ட மாங்காய்களை துருவி சோறு கிளறி ஒரு கட்டு, எழுமிச்சை சாறு பிழிந்து சோறு கிளறி ஒரு கட்டு, புளித்த தக்காளி தாளித்து சோறு கிளறி ஒரு கட்டு, தேங்காய்ப் பூ போட்டு கிளறி ஒரு கட்டு, பாலைச் சுண்ட காய்ச்சி சோற்றிலே ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் தட்டி போட்டு கொஞ்சம் உறை ஊற்றி கிளறி ஒரு கட்டு, நல்ல கரும்புளியைக் கரைத்து சாறு எடுத்து பூண்டு, மிளகாய் எல்லாம் சேர்த்து கொதிக்கக் காய்ச்சி கிளறி ஒரு கட்டு, எல்லா காய்கறிகள் சேர்த்து செய்த கலவை சோறு ஒரு கட்டு என ஏழு கட்டு சோறுகளுடன், சொந்த பந்தம் எல்லாரும் உடன் வர ஊரே வாய் பொத்தி வேடிக்கைப் பார்க்கும் வண்ணம் சீரும் சிறப்புமாக கொண்டு வந்தனர்.


தேவி ராஜேஸ்வரி சன்னிதியில் கொழுமுகமாய் அமர்ந்திருக்கின்றனர் எல்லாரும். வண்ண வண்ண குஞ்சரமாய் வளையப் புடவை கட்டி பெற்ற வீட்டு உறவெல்லாம் மங்கலம் பாடி இராணி அவளுக்கு வளையல் சூட்ட வஞ்சிகள் கும்மாளமாய் வந்தார்கள். முத்தாத்தாள் தன் மகளை உச்சி முகர்ந்து கட்டி அழுது முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்து பேசும் சக்தியற்று விக்கித்து நிற்கிறார். இருக்காதா பின்னே எத்தனை வசவுகளை காதில் வாங்கியிருப்பார் தன் பிள்ளையைப் பற்றி, பெற்ற வயிறு எப்படி எரிந்திருக்கும்... எல்லாவற்றுக்கும் ஒரே விடிவாக அல்லவா வேலுநாச்சி வரம் வாங்கி வந்திருக்கிறார். 


அது வளைகாப்பா இல்லை வளையல் கடையா என்ற அளவுக்கு அத்தனை விதவிதமான வளையல்களை கொண்டு குவித்திருக்கின்றனர் பெற்ற வீட்டுக்காரர்கள். வீர மங்கையாக இருந்தாலும் இந்த நேரத்தில் அவர் விளையாட்டுப் பெண்ணாகிப் போனார். வண்ண வண்ணமாய் வளையல்கள், என்ன தான் பொன் வளையல் பூண்டாலும் கண்ணாடி வளையலுக்கு இணை ஆகுமா, கையில் மாட்டிய வளைகளை குலுக்கி குலுக்கி வரும் ஓசையை கேட்டு கேட்டு பூரித்து தோழிகளுடன் சிரித்து‌ பேசி கன்னங்கள் சிவக்க பூசிய மஞ்சளையும் மீறி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. 


தன் வாழ்வில் நடக்குமா என ஏங்கி தவித்து அழுது புலம்பி தவித்திருந்த நாச்சியாருக்கு இன்றைக்கு எந்த குறையும் இல்லாமல் நினைத்ததை விட சிறப்பாக நடத்திக்காட்டினார் செல்லமுத்துத் தேவர். வளைகாப்பு முடித்து எல்லோரும் ஊர் திரும்ப தாய் முத்தாத்தாள் மட்டும் இங்கேயே தன் மகளுக்குத் துணையாக இருக்கிறேன் என சொல்லிவிட்டார். மாதங்கள் கடந்து இப்போது மெல்ல நாட்களை என்று என எண்ணி எண்ணி கடத்திக்கொண்டு இருக்கிறார், எப்போது வலி வரும் என எதிர்பார்த்து. அன்று நடு சாமத்தையும் தாண்டி திடீரென வலி எடுக்கத் தொடங்கியது, நேரம் போக போக வலி அதிகரித்துக் கொண்டே போகிறது, அந்நேரத்துக்கு அரண்மனை கலேபரமாய் இருக்கிறது. மருத்துவச்சி, அரசி முத்தாத்தாள், பணிப்பெண்கள் என எல்லாரும் சூழ்ந்து இருக்க முத்துவடுகநாத தேவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. 


உயிர் போய்விடுவது போல வலி, பிள்ளை உதைப்பது ஒரு பக்கம் என தாங்கமுடியாமல் கத்தி கத்தி தொண்டை நீர் வற்றி கத்த தெம்பில்லாமல் சோர்ந்து இன்னும் கத்த முயற்சிக்கும் நாச்சியார், இந்த நேரத்தில் பனிக்குடமும் உடைந்துவிட்டது, அவரை ஆசுவாசப்படுத்த மருத்துவச்சியும் தோழிகளும் தலையை நீவி விட்டு, வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளையையும் வெள்யே தள்ள உதவினர். 


ஒரு வழியாக பெரிய போராட்டத்துக்குப் பின் பிள்ளையின் தலை வெளியே வர, சுற்றி இருந்தவர்கள் மேலும் ஊக்குவிக்க சற்று நேரத்தில் பிள்ளையை பெற்றெடுத்தார் வேலுநாச்சியார். உடல் சக்தி எல்லாம் நீங்கி ஸ்மரனை இழந்து கிடக்கிறார். கொஞ்ச நேரத்தில் நினைவு திரும்பி குழந்தை எங்கே அம்மா என கேட்க, பேரப்பிள்ளையை எடுத்து தன் மகள் கைகளில் வைக்க வாரி இழுத்து முத்தமழை பொழிந்து நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டார். தாய் வாசம் கண்டதும் மழலை முகத்தில் என்ன சிரிப்பு என்ன சிரிப்பு... அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை இவ்வுலகில். 

அடுத்த நாள் காலை தேவி ராஜேஷ்வரி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு குட்டி இளவரசிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, அதுவே பேர் சூட்டும் விழாவாகவும் நிறைவுற்றது. ஆம் குழந்தை நல்ல நிறமாக இருக்க அப்படியே அவளை வெள்ளச்சி என கூப்பிட்டு அதனையே பேராக வைத்துவிட்டார் தந்தையான முத்துவடுகநாத தேவர். அவள் கொடுத்து வைத்தவள் ஒன்றுக்கு ரெண்டு அம்மா. எள் கேட்டாள் எண்ணெய் கொடுக்க ஆள் உண்டு, காய் கேட்டால் கனி கொடுக்க ஆளுண்டு. எது கேட்டாலும் அதை கொடுக்க திராணியும், வண்மையும், வீரமும் கொண்ட தாயும் உண்டு, உலகையே காலின் கீழ் வைக்கும் தந்தையும் உண்டு. 


எல்லார் வாழ்விலும் இன்பம் துன்பம் சமபங்காய் வந்து செல்லும் பங்காளிகள், இன்பமாகவே இவ்வளவு நாள் கழிகிறதே, நானும் விரைவில் வருகிறேன் என்று கட்டியம் கூறும் விதமாக துன்பத்தின் சில ரேகைகள் வெள்ளையன் டீகார்டு மூலம் வந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Drama