வல்லன் (Vallan)

Classics

4  

வல்லன் (Vallan)

Classics

வேலுநாச்சி 7

வேலுநாச்சி 7

3 mins
614


அத்தியாயம் 9 வெறிநாய்க் கூட்டம் 


குழந்தை இல்லாத குடியில் குலம் தழைக்க வந்து உதித்தாள் வெள்ளச்சி நாச்சியார். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சீராட்டி பாராட்டி ஏகசக்ரவர்தினியாக சிவகங்கை ‌சீமை அரண்மனையில் வளர்ந்து வருகிறாள் இளவரசி.


இதற்கிடையில் சேதுபதி சீமையில் வேலுநாச்சியின் தந்தை இறந்ததை அடுத்து செல்லமுத்து தேவரின் தங்கையாகிய முத்துத்திருவாயி நாச்சியாரின் மகன் முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியை பன்னிரண்டு வயது பாலகனை மன்னராகவும், அவரது நிர்வாகப் பொறுப்புகளை திருவாயி நாச்சியார் ஏற்று நடத்தும் வகையாக இராமநாதபுர ஆட்சி அமைத்தது. 


ஆதரவு இல்லாத நிர்வாக காப்பாளர், அறியா பாலகன் மன்னன் இதை சாதகமாகப் பயன்படுத்த ஆற்காட்டு நவாப் பரங்கியருடன் கூட்டுச்சதி தீட்ட தொடங்கிவிட்டான். தஞ்சை மராட்டியர்கள் ஒருபுறம் சூழ்ச்சி செய்து எப்படி நாட்டைப் பிடிப்பது என வஞ்சக வலையால் சூழ்ந்து தனித்தீவாக இருக்கிறது இராமநாதபுரம். 


திருவாயி நாச்சியார் ஒன்றும் சளைத்தவர் அல்ல, அதேபோல் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் துணை பெரும் பலமாக இருந்தது இராமநாதபுர சமஸ்தானத்துக்கு போர்‌ வியூகம் வகுக்க, மன்னரின் பாதுகாப்புக்கு என. 


தஞ்சையில் இருந்து மராட்டிய மன்னன் துல்லாஜி தானே தலைமை ஏற்று படை நடத்தி வந்தார், இந்த போர் முப்பது நாட்கள் நீடித்தது. இராணி திருவாயி நாச்சியார் கோட்டையின் உள்ளிருந்தே மராட்டியப் படைகளை திறமையாக சமாளித்தார். 


கோட்டையை முற்றுகையிட்ட தஞ்சைப் படையை அழிக்க ஒரு திட்டம் தீட்டினர் திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைப் பிள்ளையும். அதாவது இராமநாதபுரத்துக்கு மேற்கே இருந்த பெரிய கண்மாயில் நிறைந்த நீர்‌ இருக்கிறது, கண்மாயில் சிறு உடைப்பை ஏற்படுத்துவது மூலம் பெரிய வெள்ளத்தை உண்டு பண்ணிணால் அது தெற்கு வடக்காக கோட்டையைச் சுற்றி கிழக்காக வந்து படைகளை அழித்திடும் என வியூகம் வகுத்தனர். இந்தத் திட்டம் நினைத்தது போலவே வெற்றியடைந்தது. படையின் பெரும் பகுதி வெள்ளத்தில் சிதையுண்டு போனது. 


தஞ்சை மன்னர் துல்லாஜி சரணடைந்து நடந்த இழப்புகளுக்கு நஷ்ட ஈடு பெற்று திரும்ப தன் நாடு புறப்பட்டார். அதன் பின் சில நாட்கள் அமைதி நிலை நின்றது மறவர் சீமையில். 


அப்போது தெற்கத்திய சீமையின் பெரும்பாலான பாளையங்களை அடக்கி கப்பம் வசூலித்தான் நவாப், ஆனால் நான்கு சமஸ்தானங்கள் நவாப்பை பொருட்டாகக்கூட எண்ணுவதில்லை, அதுவும் இராமநாதபுரமும் சிவகங்கையும் மிகவும் எல்லை மீறி அவமதிப்புகளை மட்டுமே ஆற்காட்டு நவாப்புக்கு அளித்திருந்தன. இந்நிலையில் ஆற்காட்டு நவாப் தன் மகன் உம் தத்துல் உம்ரான் மற்றும் பரங்கிப்படை தளபதி ஸ்மித் தலைமையில் திருச்சியில் படை திரட்டி இராமநாதபுரம் மீது அடுத்த ஆண்டே போர் அறிவித்தான். 


மூன்று நாட்கள் கோட்டையை முற்றுகையிட்டு இராணி திருவாயி நாச்சியாருடன் நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது , ஆனால் இராணி பேஷ் மற்றும் குஷ் வரிகளைக் கட்ட ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கோவம் கொண்ட உம் தத்துல் உம்ரான் கோட்டையைச் சுற்றி நின்ற பீரங்கிப் படைகளுக்கு உத்தரவிடுகிறான், குண்டு மழை பொழிகிறது. கோட்டையின் கிழக்கு மதிலில் உடைசல் ஏற்பட்டு உடைந்து விழுந்தது. மறவர் சீமைப் படைகளுக்கும் நவாப்பின் படைகளுக்கும் பெரும்போர் நடந்தது. போரின் முடிவில் மூவாயிரம் மறவர்களை இழந்து இராமநாதபுர சமஸ்தானம் சரணடைவதாக அறிவித்தது. 


பதிமூன்று வயதான மன்னன் முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, அவரது தாய் முத்துத் திருவாயி நாச்சியார், மற்றும் அவரது இரண்டு சகோதரிகள் உட்பட பாதகாப்புக் கைதியாக திருச்சி கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டு இராமநாதபுரத்தில் நவாப் ஆட்சி அறிவிக்கப்பட்டது. 


சிவகங்கை சீமை வெள்ளையர்களுடன் நட்பு பாராட்டுவதைவிட டச்சு நாட்டாருடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தனர். இது பரங்கியருக்கும் நவாப்புக்கும் பெரும் சினத்தைத் தூண்டியது. அடுத்ததாக ஆற்காட்டு நவாப் மற்றும் பரங்கிகளின் அடுத்த இலக்காக சிவகங்கை மாறியது. பரங்கிப்படைத் தளபதி ஸ்மித் மற்றும் பான்ஞ்சோர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்ட எத்தனித்தார். 

நேரே போர்க்களத்தில் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவரை சமாளிக்க முடியாது, அதுவும் அவரது இரண்டு பக்கத்தூண்களாகிய வெள்ளை மருதுவும் சின்ன மருதுவும் உடன் இருக்கையில் சிவகங்கையைக் கைப்பற்றுவது என்பது இயலாத காரியம். சூழ்ச்சியாலேயே இதனை சாதிக்க முடியும் என திட்டமாய் எண்ணி காலத்துக்கு காத்திருந்தனர் வெள்ளையரும் நவாப்பும்.



Rate this content
Log in

Similar tamil story from Classics