Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

வல்லன் (Vallan)

Others


4  

வல்லன் (Vallan)

Others


வேலுநாச்சி 11

வேலுநாச்சி 11

10 mins 22.8K 10 mins 22.8K

அத்தியாயம் 17 வேங்கையின் வேட்டை வாழ்வின் ஓட்டத்தில் நாம் எவ்வளவு பத்திரமாக இழுத்துப்பிடித்து வைத்திருந்தாலும் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். நமக்கென்று எது இருக்குமோ அதை மட்டுமே சுவடாக விட்டுச்சென்றிருக்கும். தளவாய் தாண்டவராயன் பிள்ளையின் இழப்பு பெரும் வெறுமையை உருவாக்கினாலும் அதில் இருந்து சிறிது சிறிதாய் வெறியேறவும் அந்த காலியிடத்தை நிரப்பவும் கோபால நாயக்கர் பெரிய ஆதரவாக இருந்தார். நாட்டில் மருது சகோதரர்களும் வெள்ளச்சி நாச்சியாரும் ஓரளவுக்கு அதிகாரங்களைக் கைவசப்படுத்தி இருந்தனர். இருப்பினும் கோட்டையின் பாதுகாப்பு வெள்ளையர்களிடமே இருந்தது. ஆற்காட்டு நவாப்பிடம் இருந்து வெள்ளையர்கள் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். இதனால் நேரடி மோதல்கள் பல நேரங்களில் ஏற்பட்டது. வேலுநாச்சியாரும் தன் கணவனைக் கொன்ற பாஞ்சோரை பழி தீர்க்கும் நாளை எண்ணி வெகு ஆவலாக காத்திருக்கிறார். எட்டு ஆண்டுகள்... ஒன்றல்ல இரண்டல்ல எட்டு ஆண்டுகள்... நாடிழந்து, துணையிழந்து, மக்களை இழந்து கானகக் கோட்டைகளிலும் அடைக்கலம் தரும் அன்பர்களின் இல்லங்களிலும் ஒழிந்து மறைந்து உயிர் தப்பி படை திரட்டி பயிற்சி அளித்து ஆயுதம் வார்த்து, மனதைக் கட்டுப்படுத்தி காத்திருந்தது என்பதைவிட தவமாக இருந்தேன் என்பதே தகும். இத்தகைய கடுந்தவத்தின் பலனை விரைவில் அடையும் நாளும் கூடி வந்துவிட்டது. கொலைகாரனை, தூரோகிகளை, சண்டாளப்பாவிகளை கருவறுக்கும் அந்த நன்நேரத்தை எண்ணி பார்த்திருக்கிறேன். எங்கிருந்தோ இங்கு வந்து எக்காளமிடும் பரங்கியனுக்கே இவ்வளவு குரூரம் இருந்தால் இம்மண்ணிலே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்து இங்கேயே மண்ணுக்கு உரமாக காத்திருக்கும் என் இரத்தம் சளைத்ததா? ஒருநாளும் இல்லை, பண்ணிய கேடுகளுக்கெல்லாம் அவன் பெருங்கேடாய் அனுபவித்தே போவான்... இது தாய் ராஜேஸ்வரி மேல் ஆணை! தாயே ! கோபால நாயக்கர் மெதுவாக அழைத்தார். அம்மா சிவகங்கையில் இருந்து செய்தி வந்துள்ளது. அதிமுக்கியமான செய்தி, நம் கனவுகளை நனவாக்கும் செய்தி அது. வருகின்ற விஜயதசமி நன்னாளில் ஆலய வழிபாட்டைக் காரணமாகக் கொண்டு கோட்டையின் பாதுகாப்புகள் தளர்த்தப்பட இருக்கின்றன. அன்று பெண்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கோட்டைக்குள் போகலாம் வரலாம். இதுவே நமக்கான தருணம், இதைப் பிசகில்லாமல் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கூறுவதும் உண்மைதான் இத்தனை ஆண்டு காத்திருப்பும் வீண் போகக்கூடாது... ஆலோசனைக் கூட்டத்தை இன்று மாலையே கூட்டுங்கள். மைசூரு சுல்தானுக்கு ஒரு முக்கிய செய்தி அனுப்ப வேண்டும், அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள். அப்படியே செய்கிறேன் தாயே... மாலை விருப்பாச்சி கோட்டையின் உள்கட்டில் முக்கியமான தலைமைகளும் படைத்தளபதிகளும் சுற்றி அமர்ந்திருந்தனர். ஆலோசனைக்கூடம் மிகுந்த அமைதியாய் இருந்தது, ஒருவர் முகத்தை ஒருவர் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தனர். வேலுநாச்சியோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். சற்றே நிதானத்துக்கு வந்த அரசி... நாம் எட்டு ஆண்டுகள் எதற்காக காத்திருந்தோமோ அந்த நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்க நாம் அந்த ஒரு நாளை துளியும் வீணாக்காமல் சிந்தித்து சிரத்தையுடன் திட்டம் தீட்டி பண்படுத்தினால் பின்னாளில் நம் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நமக்கு வாய்ப்பளிக்கும் அந்த நாள் விஜயதசமி நன்னாள். தேவி மகிஷனை வதம் செய்தது போல நாம் பாஞ்சோரை வதம் செய்ய வேண்டுமென வீராவேசமாக பேசி சற்றே அமைதியானார் அரசியார். அனைவரும் வேலுநாச்சியின் பேச்சை ஆமோதித்தனர். இனி வியூகங்கள் வகுப்பது எப்படி என ஆலோசனை செய்ய வேண்டும். நமது செய்கையின் ஒரு சிறு பொறி வெளியே தெரிந்தாலும் பாதிப்பு நமக்கே எனவே நம்பகமானவர்களை மட்டுமே இங்கே அழைத்துள்ளோம், நீங்களும் இதை யாரிடமும் வெளிக்காட்ட வேண்டாம் என்றார் நாயக்கர். சின்ன மருது பேசலானார், நாம் நேரடியாக சிவகங்கை கோட்டையினுள் நூழைவது அத்தனை சுலபமான காரியமில்லை, பெண்கள் வேண்டுமானால் எளிதில் செல்லலாம் ஏனெனில் அன்று அன்னை ராஜேஷ்வரி பூஜை இருப்பதால் பெண்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை சோதனையும் இருக்காது, எனவே உடையாள் படை மக்களோடு மக்களாக உள்ளே சென்று பாதுகாப்பைத் தகர்த்து ஆண்கள் படைக்கு உள்ளிருந்து சைகை செய்ய வேண்டும். அதனைக் கொண்டு நாம் முன்னேறி வெள்ளையர்களின் படையை துவம்சம் செய்து கோட்டையைக் கைப்பற்றிடைலாம் என்றார். சிறிது சிந்தனையில் ஆழ்ந்த வேலுநாச்சி சின்ன மருதுவை அழைத்து, நம் படைகளை ஏன் இரண்டாகப் பிரிக்கக்கூடாது? அதாவது ஒரு படைக்கு நீங்கள் இருவரும் தலைமை வகித்து காளையார் கோயிலைக் கைப்பற்றுங்கள். என் தலைமையில் இன்னொரு படை சிவகங்கையை நோக்கி செல்லட்டும். நீங்கள் போர் முடித்து கோட்டையில் வந்து என்னுடன் இணைந்து கொண்டால் இன்னும் சுலபமாகிவிடும்‌. பலத்தை ஒரே இடத்தில் காட்டுவதைவிட பிரித்துச் செயல்படுத்தினால் எதிரிகளை இணையவிடாமல் தடுக்கலாம். அடுத்து முதலாம் மைசூர் போரிலே வெள்ளையர்கள் ஹைதருக்கு அளித்த வாக்கை காப்பாற்றவில்லை, அதாவது மற்ற நாட்டுப் படைகள் மைசூரைத் தாக்கும் போது பாதுகாப்பு அளிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டவன் அதைச் செய்யவில்லை, இதையே காரணமாகக் கொண்டு மீண்டும் ஹைதரை வெள்ளையர் மீது போர் அறிவிக்கச் செய்யலாம். இது மும்முனைத் தாக்குதலாக இருக்கும். ஒரே நேரத்தில் இதனை எதிர்பார்க்காத அவர்கள் செய்வதறியாது ஸ்தம்பிக்கும் அந்த சிறு வேளை நமக்கானது அதை நாம் வெற்றிக்கனி பறிக்கும் நொடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது எனது எண்ணத்தில் உதித்த வியூகம். இதனை பின்பற்ற யாருக்கேனும் ஆட்சோபனை இருந்தால் சொல்லுங்கள்... என்று முடித்தார்.     பலே... பலே.‌.. அரசியாரே இந்த திட்டத்தில் எந்த குறையும் இல்லை நாங்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என ஏகோபித்த குரல் வந்தது.     யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு (புலி தானே ) ஒரு காலம் வராமலா போய்விடும். இந்த பெண்புலி எட்டு ஆண்டுகள் பதுங்கிப் பதுங்கி மறைந்து வாழ்ந்தது எல்லாம் வரும் அந்த ஒரு நாள் பாய்ச்சலுக்குத்தான். குறி வைத்தாயிற்று, இனி இரையும் தப்ப முடியாது...     புலி எப்படி வேட்டையாடுகிறது என்று இனி காண்போம் வாருங்கள்... அத்தியாயம் 18 மைசூர் போர் திட்டங்களும், தீர்க்கமான முடிவுகளும் ஆழமான உள்ளுணர்வின் பேரிலே எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலான நபர்களுக்குப் பொருந்தும். வேலுநாச்சியின் செயல்களும் அவர் உள்ளுணர்வு சார்ந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அவர் எண்ணங்களின் மீது ஆழமான நம்பிக்கையைக் கொண்டவர். எண்ணங்களின் சக்தி வலியது. எண்ணங்கள் எதையும் மாற்றும் வல்லமை பெற்றது என்பது நிதர்சனமான உண்மை என்றுணர்ந்தவர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு திட்டங்களை எப்படி செயலாக்குவது என விவரித்து முடித்து, எடுத்து வைக்கப்போகும் முதல் அடி எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்தனர். இப்போது நடக்கவிருப்பது போட்டியும் அல்ல விளையாட்டும் அல்ல, தீராத வஞ்சம்... மறையாத துரோகம்... மாளாத பகை... வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக நிலையாக இறுகப்பற்றி இருக்க வேண்டும். ஹைதர் அலிக்கு வேலுநாச்சிடம் இருந்து இரண்டாம் மைசூர் போரை அறிவிக்கும்படியான செய்தி அனுப்பப்பட்டது. அந்த துணி ஓலையிலேயே எல்லா விவரங்களும் புரியும்படி தீர்க்கமாக எழுதி வேறு யாரையும் நம்பாது மருதிருவரிடமே கொடுத்தனுப்பி உதவிக்குக் கோரிய படைகளையும் மீண்டும் நினைவுபடுத்தச் சொல்லி அனுப்பினார். வேலுநாச்சியின் இந்த போர் நேரடியாக பார்த்தால் சுயவஞ்சம் தீர்க்கும் போராகத் தெரியும், ஆனால் இதில் பல மக்களின் சுதந்தரமும் அடங்கியுள்ளது. மேலும் இது மைசூர் போரின் ஒரு அங்கமாகவே செயல்படவுள்ளது. வேலுநாச்சியின் ஓலை மைசூரு அரண்மனையை அடைந்தது. அந்த ஓலையைப் படித்த ஹைதரின் புருவங்கள் நெருங்கி உயர்ந்தன, ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு போர் திறமைகளா, பேசுவதில் மட்டுமல்ல திட்டத்ம் தீட்டுவதிலும் மிக கெட்டிதான் போல. இந்த மாதிரியான பெண்கள் நாட்டுக்கு மிக அவசியம். செய்யும் செயல்கள் அத்தனையிலும் ஒரு தெளிவு நேர்த்தி, எதிலுமே சிறு பிசிறுகூட இல்லை இவ்வாறு மனதினுள் எண்ணி பெருமிதம் கொண்டார். வடக்கே இருந்த மராட்டியர்கள் மைசூர் மீது படையெடுத்தனர். அந்த சமயத்தில் வெள்ளையர்கள் ஹைதருக்கு கொட்டுத்த வாக்கையும் முதல் மைசூர் போரின் முடிவில் கையெழுத்தான ஒப்பந்தத்தையும் காப்பாற்றவில்லை. மைசூருக்கு உதவியாக வரவில்லை. அந்த கோபமும் சேர்ந்துகொண்டது ஹைதருக்கு. ஓலை பெற்ற சில வாரங்களுக்குள் ஆற்காட்டு நவாப் மீதும் வெள்ளையர்கள் மீதும் போரை அறிவித்தார். முன்னர் நடந்த போரிலேயே ஹைதரின் பலத்தைக் கண்கூடாகக் கண்டனர், அப்போதே வெள்ளையரின் படையை முறியடித்து மதராசின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினார். இந்த முறை அந்த பயம் முன்னமே தொற்றிக்கொண்டது நவாப்புக்கும் வெள்ளையர்களுக்கும். அப்போது ஹைதருக்கு பெரும் உறுதுணையாக இருந்தது அவரது மகன் திப்பு. இளம் இரத்தம் துடிக்காதா பின்னே? தனியே படை நடத்தி பரங்கிப்படைகளை ஆட்டம் காணச் செய்து வெற்றிவாகை சூடிய இளவரசன். இவர்களை சமாளிப்பதே இருவருக்கும் பெரும் பிரம்ம பிரயத்தனமாக இருக்கும். மைசூருக்கு பிரெஞ்சு ஆளுநரின் உதவியும் உண்டு, மேலும் ஹைதருக்கு வெள்ளையர்களின் எதிரிகளான அத்தனை நாடுகளும் அதாவது துருக்கி ஜெர்மனி என எல்லாருமே நட்புறவு உள்ளவர்களாக இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரை ஹைதர் அலி 1779ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். நான்கு ஆண்டுகள் நடைபெற்றது இந்த போர். இந்த போரும் வேலுநாச்சியாரின் வெற்றிக்கு ஒரு காரணம். வலிமை வாய்ந்த இரு பெரும் கூட்டுப் படைகளுடன் வரும் எதிரியை கையாள்வதே முக்கியம் என்ற காரணத்தால் அவர்கள் சிவகங்கையைப் பொருட்படுத்தவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் படைகள் மதராசு நோக்கி வந்து கூடின. போட்ட திட்டத்தின்படி ஹைதர் முதலில் போரைத் தொடங்கினார், மைசூர் படைகள் மிகுந்த அசுர வேகத்தில் முன்னேறியது. ஹைதரின் படை காஞ்சிபுரத்தை அடுத்த வந்தவாசி வரை வந்து வெற்றி கண்டது. பீரங்கிகள் தடதடவென குண்டு மழை பொழிந்து வெள்ளையர்களை பின்னடையச் செய்தது. களத்தில் இருபுறமும் உயிர்ச்சேதங்கள் இல்லாமலில்லை. இருப்பினும் மிகுந்த வீரியத்துடன் மைசூர் படைகள் முன்னேறின. வெள்ளையர்கள் சற்று பின்வாங்கும் நிலையில் ஆற்றமுடியாத கோபத்துடன் இருந்தனர். இந்த நேரத்தில் யாருமே சற்றும் எதிர் பார்த்திராத விதமாக வேலுநாச்சியார் சிவகங்கையின் மீதும் காளையார் கோயில் மீதும் போர் அறிவித்தார். ஒரு பக்கம் பிரெஞ்சுப் படைகள், ஹைதரின் படைகள் மறு பக்கம் வேலுநாச்சியாரின் போர் அறிவிப்பு... என்ன செய்வதென்றே தெரியாது இடையில் மாட்டிக்கொண்டு இக்கரையும் செல்ல முடியாது அக்கரையும் செல்லமுடியாது தண்ணீர் குட்டைக்குள் இருக்கும் மண்மேட்டில் இருக்கும் இருதலைக் கொள்ளி எறும்பாக படாதபாடு பட்டனர். போரின் போக்கில் பல மாற்றங்களும் சுவாரசியங்களும் நிரப்பி வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்போகும் நிகழ்வுகள் பல இனிதாய் ஈடேறும். அத்தியாயம் 19 வெற்றி நமதே! ஒரு பொது எதிரியை நிர்மூலமாக்க அவனது பல எதிரிகள் ஒன்று சேர்ந்து காய் நகர்த்துவது ஒன்றும் புதிதல்ல. சூழ்நிலையும் தற்காப்பும் சமயத்துக்கு ஏற்றாற்போல கூட்டணிகளையும் நட்புகளையும் அரசியலில் அமைந்துவிடும். அப்படி அமைந்ததுதான் வேலுநாச்சி மற்றும் ஹைதருக்கு இடையேயான வலுவான கூட்டணியை நவாப்பும் வெள்ளையர்களும் சேர்ந்தே உருவாக்கினர். அது ஆலவிருட்சம் போல பல ஆண்டுகளாக நீடித்தது வேரூன்றி கிளை பரப்பி வித்து நட்டவனுக்கே கேடாய் வந்து நின்றது இன்று. மைசூர் போரும் தொடங்கியாயிற்று, பிரெஞ்சுப் படைகளும் மைசூர் படைகளும் வெள்ளையர்களையும் நவாப்பையும் உண்டா இல்லையா எனப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. திப்புவின் இளமை பயமறியாத ஒன்று, அதன் முன் அவர்களால் நேருக்கு நேர் நின்று எதிர்க்க முடியவில்லை. தந்தை மகன் இருவரும் இரண்டு புறமும் படைகளை நெருக்கி சாறு பிழிந்துவிட்டனர். இந்த எதிர்பாராத போர் பெருத்த அடியாக இருந்த அதே நேரத்தில் வேலுநாச்சியாரும் கமுக்கமாக போர் அறிவித்து அதனை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார். சிவகங்கையை கோட்டைக்குள் இருந்த உடையாள் பிரிவின் பெண்கள் உள்ளிருந்தே சில ஏற்பாடுகளை மேற்கொண்டனர். வேலுநாச்சியாரின் படைகள் தயார்.‌.‌. ஆண்கள் பெண்கள் என எல்லோரும் அணிவகுத்து நின்றனர். அவர்கள் கண்களில் கோவம் கொப்பளித்தது, வெறி தாண்டவமாடியது, சுதந்தர தாகம் நிறைந்து இருந்தது. என் மக்களே! எட்டு ஆண்டுகள் நாம் எதை நோக்கி காத்திருந்தோமோ, யாரை அழிக்க நேரம் பார்த்திருந்தோமோ, எதற்காக அவ்வளவு பயிற்சிகள் செய்தோமோ, எவன் நம் உடைமைகளைக் கொள்ளையடித்தானோ அவனை ஒழிக்கவும், நம் சுதந்தரத்தை உறிஞ்சிக் குடித்த அரக்கர்களை கொன்றழிக்கும் அந்த நாள் மகிட வதம் நடந்த நன்னாள் இரண்டு நாட்களில் வரவிருக்கிறது. இன்று மாலை நாம் அனைவரும் புறப்படப் போகிறோம்... தயாராய் இருங்கள்... நான் என்றுமே உங்களில் ஒருவள், உங்களுடனே என்றும் இருப்பேன்... வெற்றிவேல்... வீரவேல்... வெற்றிவேல்.‌. வீரவேல்... தன் உணர்ச்சி மிகுந்த பேச்சால் படையினரின் கோவத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டிருந்தார் வேலுநாச்சி. தளபதிகளுக்கான கட்டளை தனித்தனியே பிறப்பிக்கப்பட்டது. படையானது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மருதிருவர் தலைமையில் ஒரு பிரிவு காளையார்கோவில் நோக்கியும் மற்றொரு பிரிவு வேலுநாச்சியாரின் தலைமையில் சிவகங்கையை நோக்கியும் சொல்ல வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் தாக்கினால் நாம் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம். வெள்ளையரின் பிரித்தாளும் கொள்கையை அவர்களுக்கே பரிசாய் தருவோம். சிவகங்கையில் வேலுநாச்சி தலைமையிலான உடையாள் பிரிவு ஆயுதங்களை மறைத்து கோட்டையில் உள்ள கோயில் பூஜைக்கு செல்வது போல உள்ளே சென்று பாதுகாப்புப் படைகளைத் தகர்த்து சைகை தெரிவித்தால் வாயிலில் உள்ள மற்ற படைகளுடன் நான் உள்நுழைந்துவிடுவேன். இரண்டு பிரிவுகளில் யார் முதலில் வெற்றி பெற்றாலும் அடுத்துள்ள பிரிவுக்கு உதவ வர வேண்டும். இந்த முறையில் நாம் அவர்களை எளிதில் வெல்லலாம். மைசூர் படையின் ஐயாயிரம் குதிரை வீரர்கள் நம்முடன் பாதி வழியில் இணைந்துகொள்வார்கள் என ஹைதரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அவர்களும் வந்துவிட்டால் நமது வேலை மிக சுலபம். நமக்கு படை உதவி கிட்டிவிட்டால் திருப்பத்தூரையும் ஒரேயடியா மீட்டுவிட வேண்டும். இதுவே நம் ஒரே எண்ணம். சரி ஆயத்தமாகுங்கள். ஒவ்வொருவருக்கும் உண்டான வேலைகளைப் பற்றி விளக்கிவிட்டு கோபால நாயக்கரைக் காணச் சென்றார். விருப்பாச்சி நாயக்கரே நான் உங்களுக்கு மிக்க கடமைப்பட்டவள், எந்தவிதம் நன்றி சொல்வது என்று தெரியவில்லை... என்னை உங்கள் மகள் போல கவனித்துக்கொண்டீர்கள், என் மகளையும் அப்படியே நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். போரில் எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், நீங்கள் அவளுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இது என் அன்புக்கட்டளை என தழுதழுத்த குறலில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே கூறினார். அம்மா கவலை வேண்டாம், உங்களுக்கு எதுவும் நேராது... நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வெள்ளச்சி என் பெயர்த்தி தான். அவளை நான் பார்த்துக்கொள்வேன். ஆனாலும் போரில் நம் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று திண்ணமாக கூறுகிறேன். இதோ இன்னும் சற்று நேரத்துக்குள் ஐயாயிரம் குதிரை வீரர்களுடன் திப்பு திண்டுக்கல்லை அடைந்து விடுவார். கவலை வேண்டாம் தாயே... வெற்றி நமதே! சென்று வென்று வாருங்கள். இந்த விருப்பாச்சி கோட்டையின் கதவு என்றுமே உங்களுக்காக திறந்திருக்கும், ஜெய் பவ! வீஜயீ பவ! இதோ வந்துவிட்டது குதிரைப்படை மைசூரில் இருந்து, ஹைதர் வாக்கு தவறா மனிதராயிற்றே! திப்பு தான் படைகளை வழிநடத்தி வந்தார். இப்போது வெள்ளையர்களுக்கு திரும்பிய திசையெல்லாம் ஈட்டி முனைகளும் வாள் முனைகளும் நெருங்கிய வண்ணமும், பீரங்கிகள் எந்நேரமும் வாய் பிளந்து நெருப்பு குண்டுகளைத் துப்பிய வண்ணமாகவே இருந்தது. படைகள் புறப்பட தயாராய் நிற்கின்றன... வாருங்கள் போவோம்... வெற்றியைச் சுவைத்து சுதந்தரக் காற்றை சுவாசித்து குருதி குடித்து களித்தாடுவோம்... வாருங்கள் போவோம்...      ஜெய் பவானி! வெற்றிவேல்! வீரவேல்!... படைகள் விருப்பாச்சியில் இருந்து புறப்பட்டன, படைகள் அரியாக்குறிச்சியை வந்தடைந்தன. ஓய்வெடுக்கும் பொருட்டு அங்கே சிறிது நேரம் தங்கினர். இதே ஊரில்தான் அன்று தாகம் தீர்க்க ஒரு சிறுமி தண்ணீர் கொடுத்தாள் அவள் இன்று எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை என்று நினைக்கையில் அங்கே இருவர் பேசிக்கொண்டதைக் கேட்டார், இந்த ஊரிலே எட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு சிறுமியை வெள்ளையர்கள் துண்டு துண்டாக வெட்டி கொன்றுள்ளனர், எதற்காக தெரியுமோ? நம் அரசியைக் காட்டிககொடுக்காத காரணத்தால்... என்று. ஆற்றவொன்னா பெருந்துயர் சுற்றிச் சூழ்ந்துகொண்டது. மனம் பெரிய பாறாங்கல்லை முழுங்கியது போல பாரம், அருகில் இருந்தவர்களைக் கேட்டு உடையாள் வெட்டுண்ட இடத்திற்குச் சென்றார். கண்களில் அருவி பெருக்கெடுத்து வழிந்தது. கூடியிருந்த படையின் முன் நின்று, வீரர்களே! இதோ இங்கே இந்த இடத்தில் தான் ஒரு பச்சிளம் சிறுமி வெட்டுண்டாள் அதுவும் என் பொருட்டு... என்னைப் பொறுத்தவரை அவள் தான் இனி என் காவல் தெய்வம் இனி அவள் பெயர் வெட்டுடையாள்... இதோ என் தாலியே அவளுக்கு முதல் காணிக்கை என்று முந்தானையில் முடிந்திருந்த தாலியை அவிழ்த்து எடுத்து அங்கே வைத்து உடையாளை நினைத்து வணங்கினார். இதே இடத்தில் நாம் வெற்றி பெற்றதும் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும். நாம் இன்று இரவு இங்கே கழித்து நாளை காலை நம் இலக்கை நோக்கி புறப்படுவோம். நினைவில் கொள்ளுங்கள் மக்களே நாளை மறுநாள் நாம் இத்தனை காலம் எண்ணியிருந்த அந்த ஒரு நாள்... அதனை நோக்கி பயணப்படுகிறோம். வெற்றி நமக்கு உரித்தானது, மறவர்களே மறவாதீர் வெற்றி நமதே!        அத்தியாயம் 20 அரை வெற்றி அரியாக்குறிச்சியில் இரவு முழுதும் தங்கிவிட்டு பொழுது நன்கு புலரும் முன்னே இருட்டோடு படைகள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி மூன்றாகப் பிரிந்து சிவகங்கையை நோக்கி வேலுநாச்சியின் தலைமையில் குயிலியுடன் பெரும்படையும், காளையார்கோவில் நோக்கி மருது சகோதரர்கள் தலைமையில் ஒரு படையும், திருப்பத்தூர் நோக்கி நள்ளியம்பலம் என்பவரின் தலைமையிலும் பிரிந்து சென்றன. இடையிலேயே வெள்ளையர் மற்றும் நவாப்பின் படைகளை மூவரும் சந்திக்க நேர்ந்தது, வாளின் ஒவ்வொரு வீச்சுக்கும் தலையோ குடலோ மண்ணில் சரிந்தது. வெள்ளையர்களின் படையும் நவாப்பின் படையும் பின்வாங்கின. அவரவர் இலக்கை நோக்கி படைகள் நகர்ந்தன. உடையாள் படை முன்னமே சிவகங்கை கோட்டைக்குள் மறைத்து வைத்த ஆயுதங்களுடன் உள்ளே சென்றுவிட்டனர். அங்கே சில முன்னேர்பாடுகளையும் கோட்டையின் கதவைத் திறக்கும் சமயத்திற்கும் ஏற்பாடுகள் நடந்தன. வேலுநாச்சியாரின் படைகள் கோட்டைக்கு வெளியே காடுகளுக்குள் மறைந்திருந்தனர். காளையார்கோவிலை அடைந்திருந்த மருது சகோதரர்களின் படைக்கு சிறிய சிறிய தடைகளை ஏற்படுத்தியிருந்தனர் நாவாப்பின் படைகள். அந்த தடைகளை எல்லாம் தூசி போல ஊதித்தள்ளி முன்னேறி சென்றனர் மறவர் தேசத்து வீரர்கள். மைசூர் போரின் காரணமாக வெள்ளையர்களின் ஆட்களின் எண்ணிக்கை குறைவே. கோட்டைக்கு சற்று முன்னமே நின்றனர் வீரர்கள், வேற்படை கேடயங்களுடன் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க, நடுவில் நின்ற வில் வீரர்கள் கோட்டையின் பாதுகாப்பிற்கு மதில் மேல் நின்ற வீரர்கள் நோக்கி குறி வைத்து நாணை இழுத்து அம்பை ஏற்றி எறிந்தனர்... சரசரவென சீறிப்பாய்ந்தது அம்பு மழை... மதிலில் காவலில் இருந்த பாதி வீரர்கள் மாண்டனர். இன்னும் சற்று பாதுகாப்பு வளையத்துடனே முன்னேறி நெருங்கி கோட்டையின் கதவை இடிமரம் கொண்டு இடித்தனர். வலுவான கதவுதான், இருந்தாலும் தொடர்ந்த பல இடிகளுக்குப் பிறகு உள்ளே அச்சு முறிந்து திறந்துகொண்டது அந்த கதவு. வீரர்கள் எதிரியின் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, மருது சகோதரர்கள் கோட்டையின் தலைவனைத் தேடி சென்றனர். தலைவனைப் பிடித்தால் அதன்பின் ஆகவேண்டியது ஒன்றுமில்லை அல்லவா! இரண்டு பக்கமும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன, இருந்தாலும் நவாப்பின் படைகளின் பாதி வீரர்களுக்கு மேல் உயிரிழந்தனர். கோட்டையில் இருந்த மற்ற எதிரி வீரர்களையும் சுற்றி வளைத்தனர், கோட்டைத் தலைவனையும் மருதிருவர் பிடித்து கைது செய்துவிட்டனர். காளையார்கோவில் கைப்பற்றப்பட்டது. மீண்டும் வேலுநாச்சியாரின் கீழ் எல்லை மீட்கப்பட்டது. திருப்பத்தூரை நோக்கி சென்ற படைகளுக்கு சவால் ஒன்றும் அவ்வளவாக இல்லை. கோட்டையில் இருந்த வீரர்களின் எண்ணிக்கையும் குறைவு, தலைவனாக இருந்தவனின் வீரமும் அத்தனை அழகாய் இருந்தது அதனால் நள்ளியம்பலத்தின் தலைமையிலான படையில் உயிர் சேதங்கள் மிக குறைவு. திருப்பத்தூர் கோட்டையின் தலைவன் எளிதில் சரணடைந்துவிட்டான். இப்போது திருப்பத்தூரையும் கைப்பற்றியாயிற்று. பாதிக்குப் பாதி வெற்றி கண்டாயிற்று. இன்னும் சிவகங்கையை கைப்பற்றினால் முழு வெற்றிதான். இப்போது மீதமுள்ள மற்ற படைகளும் சிவகங்கையை நோக்கி விரைந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதற்குள் உள்ளே சென்ற பெண்கள் பின்னால் வரும் ஆண்களுக்கு நிறைய வசதிகளை ஏற்படுத்திவிட்டிருந்தனர். ஒரே நாளில் இரண்டு கோட்டைகளை கைப்பற்றியாகிவிட்டது. ஏனென்றால் ஹைதர் தொடுத்த மைசூர் போரால் வெள்ளையர்களின் கவனமும் நவாப்பின் கவனமும் அங்கு திரும்பிற்று, அதனால் படைகளின் எண்ணிக்கை குறைந்துபோயிற்று. இதனை சமயமாகக் கொண்டு சமயோசிதமாக திட்டம் தீட்டி வெற்றிக்கனியை வசமாக்குவதில் வேலுநாச்சி குறியா இருந்தார். மாலை நெருங்கிற்று, கோட்டைக்குள் இருக்கும் ராஜேஷ்வரி ஆலயத்தில் இன்று நவராத்திரி நிறைவு நாள் சூர வதம் நிகழ்வு, பெண்கள் எல்லாம் படை படையாக கிளம்பி உள்நுழைகின்றனர். மருது சகோதரர்களின் படையும் நள்ளியம்லத்தின் படைகளும் அருகே வந்து சேர்ந்துவிட்டன. இனி சிவகங்கை கோட்டையை மீட்க முழுமையாக ஆயத்தமாக வேண்டும். எட்டு வருட கனவு இன்று நனவாக போகும் தருணம். கடைசியாக கணவனுக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றும் இந்த நாள்... இதை உபயோகமாய் பயன்படுத்த வேண்டும். இன்று கோட்டைவிட்டால் பின்னர் பெருங்கடினமாய் போய் முடிந்துவிடும். பாஞ்சோரை பழி தீர்க்க இன்றைய தினத்தை விட்டால் முடியாது. ஆக மொத்தம் இன்றைய நாளை நமது வசமாக மாற்ற வேண்டும். இவ்வாறு பல எண்ணங்கள் மனதை நிறைத்திருந்தன வேலுநாச்சிக்கு.    வெளியே இருக்கும் படைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உள்ளே வருவதற்கு சைகை செய்ய வேண்டும், கோட்டையின் உயர்ந்த சுவரின் மீது தீப்பந்தம் ஏற்றப்படும் அதுவே அடையாளம் என்றும் அறிவிக்கப்பட்டது. கோட்டையின் பாதுகாப்பை தளர்த்த பல வீரர்களைக் கொன்று இருந்த தடம் தெரியாது செய்துவிட்டனர் உடையாள் படை வீராங்கனைகள். நவராத்திரி பூஜையின் உற்சாக கொண்டாட்டத்தில் இந்த வீரர்களை யார் தேடப்போகிறார்கள்.    சிலவற்றை இழந்தால் தான் சில நேரங்களில் நாம் நம் வெற்றியை சுவைக்க முடியும். இழப்புகள் நமக்கு எப்போதும் இழப்புகளாக இல்லாமல் பெரும் பாடமாகவே இருக்கும். இழப்புககளே இல்லாத வாழ்வு அனர்த்தமானது. சில இழப்புகள் சிந்திப்பதற்குள் நிகழந்துவிடும். அப்படி வேலுநாச்சி சந்திக்கப்போகும் இழப்பு பேரிழப்பாக இருப்பினும் அது மிகப்பெரிய படிப்பினையைத் தரவல்லது.


Rate this content
Log in