வல்லன் (Vallan)

Tragedy Inspirational

4.2  

வல்லன் (Vallan)

Tragedy Inspirational

வேலுநாச்சி 12

வேலுநாச்சி 12

11 mins
34.9K


அத்தியாயம் 21 வெற்றி! வெற்றி!


சென்ற பக்கமெல்லாம் சரிவாய் உள்ளது, எங்கே போனாலும் அடி மீது அடி விழுகின்றது. எவ்வளவு வலிமையான கூட்டணியாக இருந்தாலும் எதிர்பாராத தாக்குதல் சற்று நிலைகுலைய வைத்துவிடும். இதே நிலைதான் இப்போது வெள்ளையர்களுக்கும் நவாப்புக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஹைதர் அலியின் படைகள் இன்னொரு பக்கம் வேலுநாச்சியாரின் படைகள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி தானே... அந்த கதைதான்.


போரின் ஆரம்பத்தில் ஹைதரிடமும் பேரடி, இங்கே வேலுநாச்சியிடமும் இரண்டு கோட்டைகளைப் பறிகொடுத்தாயிற்று. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த நிகழ்வும் சற்றும் யோசிக்கக்கூட நேரம் தரவில்லை. கண் இமைக்கும் நேரத்துக்குள் எல்லாம் தொடர் வினைகளாக நிகழ்ந்துவிட்டன. திருப்பத்தூர் கோட்டையும், காளையார்கோவிலும் வேலுநாச்சியாரின் கட்டுப்பாட்டில் முழுவதும் வந்துவிட்டது. சிவகங்கை கோட்டை மட்டுமே மிச்சம். ஆனால் அங்கு தாக்குதல் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியுமே இதுவரை தென்படவில்லை. 

எதிர்பாராத நேரத்தில் எதிரியைத் தாக்கி நிலைகுலையச் செய்யும் இந்த போர் முறையையே மராத்தியர்கள் பெரிதும் பயன்படுத்தி வெற்றியைக் கண்டனர். இந்த போர் முறையை கொரில்லா போர் முறை என்பர். இதனைத்தான் இன்று வேலுநாச்சியாரின் படைகளும் பயன்படுத்தி இரண்டு கோட்டைகளை எளிதில் கைப்பற்றிவிட்டனர். மீதம் உள்ளது சிவகங்கை பெரிய கோட்டை மட்டுமே. வெள்ளையர்கள் மற்றும் நவாப்பின் படைகள் சுதாரித்துக்கொள்ளும் முன்னரே தாக்குதலைத் தொடங்க வேண்டும். 


நவராத்திரி விழாவின் பொருட்டு வாயிலில் காவல் தளர்த்தப்பட்டு இருந்தது, குயிலியும் சில வீரர்களைக் கொன்றது பாதுகாப்பை இன்னும் பலவீனமாக மாற்றியது. மற்ற பெண்கள் எல்லாரும் பூஜையில் இருக்க உடையாள் படையினர் சுற்றுமுற்றும் இருந்த வீரர்களை பின்னால் இருந்து கழுத்தை அறுத்தும், தலையில் பலமாக தாக்கியும் கொன்று வெளியேற்றினர். இந்த நேரத்தில் கையில் பிடித்த தீப்பந்தத்துடன் உயரிந்த சுவர் இருந்த திசை நோக்கி சென்றாள் ராக்கம்மா.


கோட்டையின் உயர்ந்த சுவர் பக்கம் ஒரு நாலைந்து பேர் காவல் இருந்தனர். ராக்கம்மாள் கவனித்தது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவள் உடன் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு தொடர்ந்தாள். அவர்களுடன் துவந்தம் செய்துவிடுவது சீலைக்குள் மறைத்து இடையில் செருகியிருந்த வாளை லாவகமாக உருவி எடுத்தாள் அந்த வீரர்கள் ஒரு கணம் திகைத்தார்கள் இருப்பினும் சுதாரித்துக்கொண்டு வெகு எளிதில் அவளின் வாள் வீச்சுக்கு ஈடு கொடுக்கத்தொடங்கினர். இது இப்படியே போனால் சரியாயிராது என்று உடன் வந்த பெண் உள்ளே புகுந்து அவளுக்கு உதவ அவர்களைப் பிரித்து தானும் சண்டையிட்டாள். இதற்குள் இந்த கலவரத்தின் செய்தி பாஞ்சோரை எட்டிவிட்டது. 


ராக்கம்மாவுடன் வந்த பெண் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தனியே தப்பித்து கோட்டைச் சுவரை நோக்கிச் சென்றுவிட்டாள். தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்து வெளியே இருந்த வீரர்களுக்கு அடையாளம் காட்டினாள்.


வெற்றிவேல்! வீரவேல் என்று சந்நதம் வந்தது போல கத்தி தீப்பந்தத்தைக் காட்ட வேலுநாச்சிக்கு இந்த ஒலி சைகையாக தோன்ற படைகள் புறப்பட்டன... எள் விழுந்தால் எள் எடுக்கமுடியாத அளவு அத்தனை வீரர்களின் கூட்டம் தங்கள் நாட்டை மீட்பதின் கனவுடன் வீரநடை போட்டு சென்றுகொண்டு இருந்தனர். 


பெருந்திரளான கட்டிலடங்க வீரர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் கோட்டையின் வாயிலுள் நுழைந்தது பாஞ்சோருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் இத்தனை வீரர்களைச் சமாளிக்க போதுமான வீரர்கள் இல்லை. கண்ணில் பட்ட வெள்ளை வீரர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். 

ஆயுதங்களுக்கு வழி இல்லை, எல்லாமே மைசூர் போருக்கு சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. எரியும் வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயாம் என்ற பழமொழிக்கு ஏற்ப முடிந்தவரை ஆயுதங்களை எடுக்க முயற்சித்தனர். 

இருந்த பீரங்கிகள் கோட்டைக்குள் இருந்தவர்கள் மீது திருப்பப்பட்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்தது. குண்டின் முனையில் நெருப்பும் பற்றவைக்கப்பட்டது. பெருஞ்சத்தத்துடன் வெடித்து வெடித்த வேகத்தில் முன்னேறி பீரங்கியினுள் இருந்து சீறிப் பாய்ந்து எதிரே இருந்தவர்களை துளைத்து அப்புறம் சென்று விழுந்தது. அந்த குண்டிற்கு யார் எந்த படை என்று தெரியாது, யார் இருந்தாலும் தாக்கிவிடும். இதனால் சில வெள்ளை வீரர்களும் நவாப்பின் வீரர்களும் மாண்டனர். இருந்த போதும் வேலுநாச்சியாரின் படையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. மருது சகோதரர்கள் துணையுடன் சில வீரர்களையு உடன் அழைத்துக்கொண்டு வேலுநாச்சி கோட்டையின் தற்போதைய தலைவனானா பாஞ்சோரை தேடி விரைந்தனர். 


போரின் முடிவை ஓரளவு யூகித்த பாஞ்சோர் எப்படி தப்புவது என்ற எண்ணத்திலேயே முழுவதும் மூழ்கியிருந்தான். ஒருவழியே அதற்கும் முடிவு பண்ணி புதுக்கோட்டை சென்றுவிடலாம் என்று பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தான். 


அவன் தப்பிவிடதான் முடியுமா என்ன? போருக்கு முக்கிய காரணமாக இருந்தவனே இந்த பாஞ்சோர் தானே... அன்று போர் ஞாயம் ஏதுமில்லாது நிராயுதபாணியாக இருந்த முத்துவடுகநாதரை கொன்றது இவன்தானே, பெண் என்றும் பாராது கௌரியைக் கொன்றதும் இவன்தானே. அப்பேர்ப்பட்ட நயவஞ்சகனை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? 


அதோ இடையில் இருந்த வளரியை எடுத்தார் சின்ன மருது, பாஞ்சோரின் கால் தான் குறி... விசிறி எறிந்தார்... சீறிப் பறந்து காலைத் தடுக்கி மீண்டும் வந்தது சின்ன மருதுவின் கைக்கு. 


உடன் வந்த வீரர்கள் போஞ்சோரின் பாதுகாப்புக்கு வந்த வீரர்களை அடித்துத் துவைத்து எடுத்தனர். அதற்குள் பெரிய மருது சென்று பாஞ்சோரைப் பிடித்து கைகளைக் கட்டி தரதரவென இழுத்து வந்து கோட்டையின் முன்புறம் நிறுத்திக் காட்டி இதோ உங்கள் தலைவன் பாஞ்சோரைப் பிடித்துவிட்டோம், இனி நீங்களாக சரணடைந்துவிடுங்கள் என்று இடியென அறிவித்தார். 

தலைவன் பிடிபட்ட பதற்றத்தில் ஆயுதங்களை அப்படியே கீழே போட்டவண்ணம் சிதறி ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர். கோட்டையின் கட்டுப்பாடு முழுவதும் வேலுநாச்சியாரின் கையில். கதவுகள் சடசடவென்ற சத்தத்துடன் அடைக்கப்பட்டன. யாரும் தப்பி வெளியே ஓடமுடியாது. 

கம்பீரமாக கோட்டையின் முகப்பு மண்டபத்தில் முன் வந்து நின்ற வேலுநாச்சி, இதோ என் எட்டாண்டு கனவு நனவாகியது... என் வாழ்வின் பெருந்தவம் அது இன்று வரமளித்தது. என் கணவனைக் கொன்ற கயவனையும், நாட்டை ஆக்கிரமித்த வெள்ளையர்களையும் நவாப்பையும் நாட்டை விட்டே துரத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதோ அந்த கயவர்களின் தலை கொய்து கோட்டை மதிலில் முண்டம் ஒரு பக்கமும் தலை ஒரு பக்கமும் தொங்கவிடவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதுவரை நீங்கள் பட்ட துன்பம் இன்றோடு முடிந்து இனிமேல் உங்களுக்கு விடிவுதான். கவலை துறந்து களிப்பு கொள்ளுங்கள் என் மக்களே..! 


இந்த வெற்றியின் முக்கிய காரணமாக இருந்தவர்கள் அண்ணன் தம்பியான மருதிருவரும், விருப்பாச்சி கோபால நாயக்கரும், மைசூரு சுல்தான் ஹைதரும் தான். அவர்களுக்கு இந்த வெற்றியை அற்பணிக்கிறோம்... கடைசியில் படை அனுப்பி பேருதவியாய் இருந்ததை நாம் வாழ்வில் என்றும் மறக்கக்கூடாது.


இப்படியாக வெற்றியுரை ஆற்றி அனைவரையும் முன் அழைத்தார் அரசியார் வேலுநாச்சியார், சிங்கங்கள் போல உடன்பிறந்தார் இருவரும் வந்து நின்றனர்.அத்தியாயம் 22 முடிசூட்டு விழாவிஜயதசமித் திருநாளில் நாட்டையே அழித்த அரக்கர்களான வெள்ளையர்களையும் நவாப்பையும் அடியோடு அழித்து வீறுநடை போட்டு உறுமும் புலியென தன் இடத்தை மீட்டார் வேலுநாச்சியார். வெற்றிகள் எப்போதும் யாருக்கும் அவ்வளவு எளிதிலும் கிடைத்திடுவதில்லை, சில இழப்புகளும் பல வலிகளும் பரிசாக வந்த பின்னே வெற்றி என்ற இன்பக்கனி தேடி வரும். அதுபோல தான் இந்த போரின் வெற்றியிலும் இழப்பும் ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருந்தது. 


இப்போது தான் போர் முடிந்து மெல்ல மெல்ல ஊர் இயல்பு நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. இருந்தாலும் போர் பாதிப்பை அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாதல்லவா... அதற்காக இதோ ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன, ஆம் வேலுநாச்சியாருக்கு முடிசூட்டு விழா... நடந்த சோகங்களை மறைக்க மீண்டும் ஊரே விழாக்கோலம் பூண்டு புதுப்பெண் போல தயாராகிக் கொண்டு இருக்கிறது.

 ஐப்பசி மாத நன்னாளில் அதிகாலை நேரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க மக்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே பெரிய மறவர் தேசத்து செல்லமுத்துத் தேவரின் மகளுமான சின்ன மறவர் தேசமான சிவகங்கையின் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவரின் மனைவியுமான வேலுநாச்சியார் அதிகார பட்டத்து அரசியாக பொறுப்பேற்றார். 


முதல் வேலையாக சீர்குலைந்து சிதிலமடைந்த நாட்டின் பொருளாதார நிலையையும், மக்களின் வாழ்க்கை முறையையும் சீர்படுத்தும் பணியைத் தொடங்கினார். பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரை முதன்மை அமைச்சர்களாகவும் படைத் தளபதிகளாவும் நியமித்து பெரும் பொறுப்புகளை வழங்கினார். தன் மகள் வெள்ளச்சிக்கும் அரசியல் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். 


நாட்கள் செல்ல செல்ல நாட்டின் நிலை இயல்புக்குத் திரும்பியது. இந்த அரசியல் மேலும் மேலும் பெரும் பாரமாக உயர்வதாய் உணர்ந்தார் வேலுநாச்சியார். பெரும்பாலான பொறுப்புகளை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசியார் ராஜ காரியங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்தார். வருடங்கள் மெல்ல மெல்ல உருண்டோட வேலுநாச்சி பெயரளவில் மட்டுமே அரசியாக இருந்து வந்தார், மற்றபடி ராஜரீக காரியங்களில் மருதிருவரின் ஆதிக்கமே பெரியதாக இருந்தது. அவர்களின் அதிகாரமே செல்லுபடியாகும் சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் வெள்ளச்சிக்கும் திருமண வயதும் தொட்டுவிட்டது, நல்ல மணாளனைக் கண்டுபிடித்து கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஓங்கி நின்றது. இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் யார் தொந்தரவுகளும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றோம். இந்த நேரத்தில் வெள்ளச்சியின் திருமண நிகழ்வை விழாவாக நடத்தி ஊர் மெச்ச கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் ஓங்கியது. 

   ஏற்கனவே தனது உறவுப் பையனான கௌரி வல்லபன் என்ற இளைஞனை தத்தெடுத்து வளர்த்து வந்தார் அரசியார். அவன் கல்வி கேள்விகளில் சிறந்த கெட்டிக்காரன். அவனுக்கு வெள்ளச்சியை மணம் முடிக்கலாம் என்று விரும்பினார் வேலுநாச்சி. 

அதற்காக கௌரி வல்லபனை அறிமுகம் செய்யும் கூட்டம் ஒன்றை காளையார் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தார். அதே கூட்டத்திலும் கௌரி வல்லபனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி மகிழ்ந்தார். ஆனால் இது மருதிருவருக்கு பிடிக்கவில்லை. தன்னிச்சையாக செயல்படும் ஒருவன் மன்னராக வந்தால் தங்கள் சலுகைகள் அனைத்தும் மறுக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்த திருமணத்தை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்றே இருந்தனர். மேலும் கௌரி வல்லபனின் தந்தையான ஒய்யாத் தேவருக்கும் மருதிருவரின் தந்தைக்கும் இருந்த பகையும் காரணமாகும்.


இந்த நிலையில் கௌரி வல்லபனை தனியே காளையார் கோயிலில் சிறை வைத்து கொல்ல முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த செய்தி வேலுநாச்சியாரின் காதுக்கு எட்டி பெரும் விசாரணைக்கு ஏற்பாடாயிற்று. ஆனால் மருதிருவர் வல்லபன் மீது கூச்சமே இல்லாது பழி சுமத்தினர். இராமநாதபுர அரசுடன் சேர்ந்து சிவகங்கையை இராமநாதபுரத்துடன் இணைக்கும் சதியாலோசணையில் ஈடுபட்டான் என்று கூறினர். 

வேலுநாச்சியாரால் இதற்கு மறுத்தும் பேசமுடியவில்லை, அதனால் அதை அப்படியே ஒத்திபோட்டுவிட்டார். கௌரி வல்லபன் காளையார் கோயில் சிறையில் இருந்து தப்பி புத்துக்கோட்டை தொண்டைமானிடம் அடைக்கலமாக புகுந்து தன்னைக் காத்துக்கொண்டான். 

இந்த கலேபரங்கள் முடிந்து மீண்டும் மாப்பிள்ளை தேடத் தொடங்கிய நேரம் சக்கந்தி தேவரின் மகன் வேங்கன் பெரிய உடையாத்தேவர் பற்றி மருது சகோதரர்கள் சொன்னார்கள். வெள்ளச்சிக்கு ஏற்ற கணவனாக இருப்பார் எனவும் சொல்ல வேலுநாச்சியும் தீர விசாரித்து சம்பந்தம் பேச ஏற்பாடுகள் செய்ய தொடங்கிவிட்டார். கல்யாணப் பேச்சு எடுத்தாலே கன்னிகளுக்குக் கல்யாணக்கலை வந்துவிடும் போல, தாவி விளையாடும் சிறுபிள்ளையாக இருந்தவள் இன்னும் சில நாட்களில் மணவாழ்க்கையைத் தொடங்கப்போகிறாள். காலம் எவ்வளவு வேகமானது. 


மருதிருவர் நாட்டில் பெற்ற அத்தனை செல்வாக்கையும் இந்த சில ஆண்டுகளில் பயமாக மாற்றிவிட்டார்கள். வேலுநாச்சியாருக்குத் தெரியாமல் வெள்ளையர்களை எதிர்க்க மற்ற பாளையக்காரர்களுடன் கூட்டணி வைத்து இரகசியப் படைகளையும் திரட்டிக்கொண்டு இருந்தனர். இதுவரை அரசிக்கு விசுவாசமாக இருந்தவர்கள் இன்று கைக்கு அதிகாரம் வந்ததும் அதனை பல தவறான வழிகளிலும் பயன்படுத்தினர். இதையெல்லாம் அரசியார் கண்டும் காணாது போல இருந்துவிட்டார். 


சக்கந்தி தேவரிடம் திருமணம் செய்வது குறித்த ஆலோசனையில் பேசி முடிவெடுத்து திருமண நாளும் நிச்சயிக்கபட்டுவிட்டது. இனி ஊரே விழாக்கோலம் தான். பத்து பதினைந்து நாட்கள் நல்ல திருவிழா போல ஏற்பாடுகளுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. கல்யாண ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக செய்யும் போது தான் வேலுநாச்சியார் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். சும்மாவா சொன்னார்கள் வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார் என்று.
அத்தியாயம் 23 பெருமிதப் பேரின்பம்


முடி சூட்டி, பொருளாதாரத்தை சீர் பண்ணி, மக்களை மகிழ்வித்து பத்தாண்டு அரசாட்சி செய்து, சிறிது சிறிதாக அரசியலில் நாட்டமிழந்து மருது சகோதரர்களிடம் பொறுப்பை விட்டு தன் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணம் வந்து அதில் கவனம் செலுத்தி சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத்தேவருடன் வெள்ளச்சிக்குத் திருமணம் நிச்சயிக்கபட்டும் விட்டது. 

அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் மிக மும்முரமாக நடக்க ஆரம்பித்தன. சிவகங்கை அரசின் ஒரே வாரிசு, நாளை நாட்டை ஆளவிருக்கும் மகாராணி... திருமணத்துக்குப் பின் தம்பதிகள் இருவருக்கும் முடி சூட்டி சிங்காதனம் ஏற்றி அழகு பார்க்க முடிவு செய்துவிட்டார் வேலுநாச்சியார். அதற்குரிய ஏற்பாடுகளும் சேர்ந்தே நடந்துகொண்டு இருந்தது. ஊரே திருவிழா மயமாக மாறியிருந்தது. திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னே ஊர் முழுதும் மூன்று வேளை சோறு போட்டு உபச்சாரமெல்லாம் நடந்தது. 

திருமணம் என்றால் என்ன சும்மாவா, நான்கு நாட்கள் முன்னமே பலகாரம், பட்சனங்கள் எல்லாம் செய்யத் தொடங்கியாகிற்று. நன்கு பாகு காய்ச்சி பொரித்து எடுத்த பூந்தியைப் போட்டு ஊறவைத்து நல்ல பசு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை எல்லாம் போட்டு ஏலக்காய் பொடித்து போட்டு ஒரே மணம், இது ஒருபுறம் இருக்க முழுக்க முழுக்க நெய்யிலே ஊறி ஊறி குழைய குழைய கிளறி தட்டில் வழித்து வைத்து அட அட பார்க்கும் போதே கரைந்துவிடும் போல மைசூர்பாகு. அடுத்து உளுந்தை நன்கு கெட்டிப் பதத்தில் அரைத்து எண்ணெயில் போட்டு எடுத்து பாகில் ஊறவைத்த ஜலேபி ஒரு பக்கம். அரிசி மாவில் கலந்து செய்த கார, இனிப்பு சீடைகள் ஒரு பக்கம், அரிசிமாவும் பொட்டுக்கடலை மாவும் சேர்த்து எள் ஓமம் ஒன்றுகுத்தலாக இடித்த மிளகாய் தூள் சேர்த்து நல்ல பொறுபொறுவென்று சுட்டு அடுக்கிய முருக்கு ஒரு பக்கம் இப்படி எல்லாம் விதவிதமாக செய்து மலைமையாக குவித்து வைத்திருக்கின்றனர் அரண்மனை சமையல் கட்டில்.

நாடே ஒரே மகிழ்ச்சியின் அமர்களத்தில் இருந்தது அந்த ஒரு வாரம் முழுவதும். 

இவ்வளவு ஆர்ப்பாட்டமாக திருமண ஏற்பாடுகள் நடக்கும் வேளையிலும் மருது சகோதரர்கள் தங்கள் வேலையில் கண்ணாக இருந்தனர். அதாவது வெள்ளையர்களுக்கு எதிராக அணி திரட்டுவதில். அவர்கள் நோக்கமும் ஒரு விதத்தில் நிறைவேறித்தான் இருந்தது. 

இந்தத் திருமணம் ராஜரீகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ஏனென்றால் இரண்டு நாட்டவர்களும் உற்றார் உறவினர்கள், மேலும் ஒரே எதிரியான வெள்ளையர்களை எதிர்ப்பவர்கள். 

திருமண நாளும் வந்தது, மேளதாளங்கள் மங்கல ஒலி எழுப்ப அன்னை ராஜேஸ்வரி ஆலயத்தில் ஊர் மக்கள் சொந்த பந்தங்கள் வேண்டப்பட்ட அரசியல் காரணாதிகாரிகள் எல்லாம் கூடி நிற்க மணப்பெண்ணும் மணமகனும் மனையில் அமர்ந்தனர். அழகே வடிவான வெள்ளச்சி இன்றைக்கு அலங்காரத்தில் அப்படியே கோயில் சிலை போல இருந்தாள் நெத்திச்சுட்டியும் முடிகளும் நெத்தியில் கோலமிட, வளைந்த வில் புருவங்களுக்கு அஞ்சனம் தீட்டி, மூக்குத்தி ஒளிர தீப ஒளியில் கொள்ளை அழகாய் இருந்தாள். வேங்கனும் வெள்ளச்சிக்கு சளைத்தவன் அல்லன். நல்ல திடகாத்திரமான உடல் கருத்த மயிர் பருத்த தோள்கள், விரிந்த மார்புமாக எப்பேர்ப்பட்ட அதிரூப சுந்தரியும் பார்த்ததும் விழுந்திடும் அழகுடன் வெள்ளச்சியின் அருகில் அமர்ந்திருந்தான். 

வேலுநாச்சியாரின் முகத்தில் தாயாக ஒரு பெருமிதம், குழந்தையே இல்லாமல் தவமிருந்து பெற்று, பாதகர்களால் கணவனை இழந்து தனியே மறைந்து மறைந்து சீராட்டி வளர்த்த செல்வமகள் இன்று திருமடத்துக்குத் தயாராகி மனையில் அமர்ந்திருக்கிறாள் அல்லவா... பெருமிதம் இல்லாது எங்கே போய்விடும். 

மங்கல நேரமும் வந்தது, தாலியை வேலுநாச்சி எடுத்துக் கொடுக்க அதனை வாங்கிய வேங்கன் பெருமகிழ்வுடன் வெள்ளச்சியின் கழுத்தில் கட்டினான், அவளும் அழகிய மயில் தலை கவிந்து காட்டுவது போல் அவனுக்கு வாட்டமாக குணிந்துகொண்டாள். 

மலரும் மஞ்சள் கலந்த அரிசியையும் தூவி மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். திருமத்துடனே அடுத்த நல்ல காரியமான முடிசூட்டு விழாவும் ஏற்பாடாகி இருந்தது. ஆம் இன்றைக்கே அரசியல் பொறுப்புகளை வெள்ளச்சியிடமும் வேங்கனிடமும் ஒப்படைத்து முழுவதும் ஓய்வு பெறும் முடிவை முன்னமே எடுத்துவிட்டார் வேலுநாச்சியார்.

அனைவரது வாழ்த்துகளுடனும் சிவகங்கை சீமையின் மன்னராக வேங்கன் பெரிய உடையாத்தேவரும் மகாராணியாக வெள்ளச்சி நாச்சியும் பதவி ஏற்று வேலுநாச்சியை பெரும் பொறுப்புகள் என்னும் தளையில் இருந்து விடுவித்தனர்.

மகிழ்வாக முடிசூட்டி அழகு பார்த்தாயிற்று. இனி கவலையில்லை என்று மனநிம்மதியுடன் ஆசுவாசமானார் வேலுநாச்சியார். 

ஆனால் பின்னால் வரும் பல கசப்பான செயல்கள் மிகவும் நெருங்கியவர்களால் ஏற்படும் என்றும் அது தன்னை எந்த அளவிற்கு பாதிக்கும் என்றும், இன்று மன்னராக பொறுப்பேற்றவர் எப்படி ஆட்சி செய்வார் என்று எதுவும் அறியாது அனைவரும் பேரின்பத்தில் முழ்கியுள்ளனர். 

விதி வலியது, காலம் கொடியது அவரவருக்கான வினைகளின் பயன்களை கொடுக்கத்தவறுவது இல்லை. நாமும் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.அத்தியாயம் 24 சஞ்சலங்கள்


ஆசை மகளின் திருமணமும் முடிசூட்டு விழாவும் இனிதே எந்தவித இடர்பாடுகளும் இன்றி நடந்து முடிந்துவிட்டது. இனி நமக்கு ஓய்வு தான் தேவை என்று வேலுநாச்சி அமைதியாக இருந்திட விரும்பினார். ஆனால் சூழ்நிலை அவரை விடவில்லை, முக்கியமான அரசியல் காரியங்களில் வேள்ளச்சிக்கு பெருந்துணையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அதுமட்டுமல்ல திருமணமான இளஞ்சோடிகள் அல்லவா அதனால் அவர்களுக்கும் நிறைய தனிமையும் அமைதியும் தேவைப்பட்டது. அதனால் சில காலங்கள் வேலுநாச்சியே பொறுப்பு பாரத்தை மீண்டும் ஏற்கவேண்டி வந்தது. 

புதுவாழ்வு இனிமையாக நகரந்தது இருவருக்கும். ஒருவர் மேல் ஒருவருக்கு அவ்வளவு பாசம் அக்கறை என மகிழ்வாக கழிந்தன நாட்கள். திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாக வெள்ளச்சி நாச்சியார் கருவுற்றார். உண்மையிலேயே மிக மகிழ்வான செய்தி தான். 

ஆனால் மருது சகோதரர்கள் மற்றும் வேங்கன் பெரிய உடையாத்தேவர் ஆகியோரின் நெருங்கிய பழக்கவழக்கங்கள் ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் நடவடிக்கைகள் மிகுந்த ஐயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே மருது சகோதரர்களின் தன்னிச்சையான செயல்களால் அதிருப்தி அடைந்திருந்த வேலுநாச்சியாருக்கு இது மேலும் கலக்கத்தை உருவாக்கியது. 

ஏற்கனவே தான் பார்த்து முடிவு செய்திருந்த வல்லபன் மீது பழி சொல்லி தடை செய்தது இன்னும் மனதுக்குள்ளே அணையா நெருப்பாக கனன்றுகொண்டு இருக்கிறது. இதற்குள் இப்போது வந்த மருமகனும் மருது சகோதரர்களுடன் சேர்ந்துகொண்டால் நாட்டுக்கு பெரும் ஆபத்துதான் என்று உள்ளூர கலக்கத்தில் ஆழந்தார். 

மாதங்கள் உருண்டோடின, வெள்ளச்சிக்கு பேறுகால வலி வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது முன்னிரவில் இருந்தே வலி ஆரம்பித்துவிட்டது. நேரம் செல்லச் செல்ல வலி கூடிக்கொண்டே போனது. அதிகாலை நேரம் நெருங்கிவிட்டது, வலி தாளாமல் அலறி துடித்துப்போனாள் வெள்ளச்சி. வேலுநாச்சியார் தலைமாட்டில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு தலையை நீவிட்டுக்கொண்டே இருந்தார். மருத்துவச்சியும் ஆகவேண்டிய காரியங்களை வேகமாக பார்த்தாள், தொப்புள் கொடி அறுக்க கத்தி, இரத்தத்தை துடைக்க துணி, குழந்தையை வெளியே எடுத்ததும் பனிக்குடத்தை எடுத்துவிட்டு துடைத்துவிட வெந்நீர் என எல்லா ஏற்பாடுகளையும் செய்தாயிற்று. நீண்டநேர போராட்டத்துக்குப்பின் வெளியேறி வந்துவிட்டது அந்த பச்சிளங்குழந்தை. 

வீழ் வீழ் என அழுத்துக்கொண்டே கண்களைத் திறக்காமல் இருந்தாள் அந்த பேரழகி. ஆமாம் அடுத்த வாரிசும் பெண் தான். குழந்தை பிறந்தவுடன் களைப்பில் சோர்ந்து ஒடுங்கி படுத்திருந்தாள் வெள்ளச்சி. வேலுநாச்சியார் குழந்தையைக் கொஞ்சுவதை சற்றும் நிறுத்தவே இல்லை. 

குழந்தை பிறந்ததும் அரண்மனையே குதூகலத்தில் இருந்தது. வேலுநாச்சியாருக்கு இந்த நேரத்தில் வெள்ளச்சி பிறந்த காட்சிதான் கண்முன் வந்தது. எவ்வளவு கொண்டாட்டம், எவ்வளவு ஆனந்தம்... மன்னரும் என் உடன் இருந்தாரே அன்று, இன்று இருந்திருந்தால் இன்னும் அமர்களமாய் இருந்திருக்கும் அரண்மனை என்று மனது கனத்து விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். 

மாதங்கள் கடக்க கடக்க ஏதோ ஒரு பிரச்சினை மாறி மாறி வந்துகொண்டே இருந்தது. குழந்தை பிறந்ததில் இருந்து வெள்ளச்சியின் உடலுக்கு அடிக்கடி சுகவீனம் உண்டானது. குழ்ந்தைக்கும் உடம்பு ஒன்றும் அவ்வளவாக தேறவில்லை. அரசியலில் வேறு முக்கியமான காரியங்களில் மருது சகோதரர்கள் எதையும் கலந்து பேசாது தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதுவும் சரியில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் நிம்மதியைக் குழைத்தன. 

இதற்கிடையே புதுக்கோட்டை தொண்டைமானுடம் ஏற்பட்ட எல்லைத் தகராறில் வேலுநாச்சியை கலந்தாலோசிக்காமல் தானே படை எடுத்துச் சென்றார் சின்ன மருது. இதனை வேலுநாச்சியால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. எவ்வளவு முக்கியமான காரியத்தில் இப்படி அசாதாரணமாக படையெடுத்து விட்டு வந்தவிட்டீர், இதனால் எவ்வளவு பிரச்சினைகள் எழும்? தொண்டைமான் நாட்டு மக்களுடன் நம் நாட்டு மக்கள் திருமண உறவில் உள்ளவர்கள், யாரையும் ஆலோசிக்காமல் போர் தொடுக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்குக் கொடுத்தது என்று சீறிப் பார்த்தார் வேலுநாச்சியார்.

எவ்வளவு ஆத்திரம் வந்தாலும் மருதிருவர் பல நேரங்களில் செய்த உதவிகளை மறவாது அவர்களை மன்னித்து மீண்டும் ஒரு முறை கண்டித்து அனுப்பிவிட்டார். 

நாளுக்கு நாள் மருது சகோதரர்களுக்கும் வேலுநாச்சிக்கும் இருந்த சுமூகமான உறவு மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியது. 


மருது சகோதரர்களின் இப்படியான தான்தோன்றித்தனமான போக்கால் என்ன என்ன விபரீதங்கள் வரப்போகின்றன என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.Rate this content
Log in

Similar tamil story from Tragedy