வெளிநாட்டு பறவை
வெளிநாட்டு பறவை


வெளிநாட்டு வாழ்க்கை பயணம்
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
உலகத்தில் பொறுப்புள்ள பெரியவர்கள் பலர் சிறுவர்கள் போல சிந்திக்கும் போது சில சிறுவர்கள் பெரியவர்கள் போல சிந்திப்பதில் என்ன பிழை??
எல்லாரும் குறைகளை சொல்ல முடியும் ..! தீர்வு சொல்ல முடியுமா.....!
முடிந்த அளவு அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கை கழுவலாமே - corona awareness
விமான அறிவிப்பு (flight announcement) :-
விமான ஓட்டுநர் (நான்) ; பயணம் செய்பவர்கள் (கட்டுரை வாசிப்பவர்கள்- நீங்கள்) ; உங்கள் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் வாருங்கள் பயணிப்போம் !
"திரைக்கடல் ஓடி திரவியம் தேடு "என்றார்கள் முன்னோர்கள் ....
என்னதான் சொந்த ஊரில் படித்து வளர்ந்தாலும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாடு செல்கிறார்கள்..., பிறந்த ஊரில் 15000 ஊதியத்திற்கு 12 மணி நேரம் மாடு மாறி உழைக்கின்றோம்...,
அதே இந்த வேலைக்கு வெளிநாட்டில் 50 அல்லது 80 கொடுக்கிறார்கள் என்ற அல்பாசையில் செல்கிறோம் ..., ஆயுள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்தாலும் சேமிக்க முடியாத இந்த பண காகிதத்தை ஐந்து வருடங்களில் சம்பாதித்து விடலாம் என்ற ஆசையில் பயணம் செய்யத் தூண்டுகிறது, அயல்நாட்டுக்கு இதை ஏற்றத்தை பற்றி சொல்லி விட்டேன் ..,
இன்னொருபுறம் இறக்கும் ஒன்று உள்ளது அதற்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை கட்டுரை..,
படிப்பு முடிந்தவுடனே பெற்றோர்கள் ஜாதகம் பார்க்க சென்றார்கள்.,
திருமணத்துக்கு என்று தவறாக எண்ண வேண்டாம்.! வேலை வாய்ப்பு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்வதற்காக ..!
ஜோதிடம் பார்க்க ரெண்டே விஷயத்தைத்தான் ஒன்னு நல்லதுக்கு ...!இன்னும் ஒன்னு கேட்டதுக்கும் ..!
நல்ல விஷயம்னா சந்தோசமா போவோம் ; கெட்ட விஷயமோ சோகத்தோட செல்வோம் ; இப்படிப்பட்ட மனநிலை வைத்து அனைத்தையும் சொல்வார் ஜோதிடர்...,
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
இது தான் ஜோதிடர்த்தின் வாழ்வாதார மொழி..,நமக்கு பழமொழி...
ஜோதிடர்கள் பார்க்க வந்தவர்கள் ஒரு நம்பிக்கையுடன் மற்றும் திருப்தியுடன் செல்ல வேண்டுமென்று.., சூரியன், சந்திரன், குரு ,புதன்.., மேற்கொண்ட கிரகங்கள் 9 ,12 மேலும் பயண கிரகங்களான சந்திரனும் மற்றும் சனி தசை நடைபெறுவதால்.., கடல்கடந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளது.., முயற்சி பண்ணால் கிடைத்துவிடும் என்றார் ஜோதிட சக்கரவர்த்தி பெருமாள் ..,
இவள் இப்படி சொன்னது 1962ல் சீனா- இந்தியாவின் மீது போட்ட குண்டு இப்ப என் தலையில் விழுந்தது..
இருந்தபோதிலும் வெளிநாடு என்ற மோகத்தில் என்னை ஆழ்த்தியது..! ஆராய்ச்சி மற்றும் அதற்கான பணிகளை வெகுவாக தொடங்கிவிட்டேன்..,
அப்படி ஒரு நாளும் வந்தது.., கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது ., பிரசவா வலி எடுத்த மாதிரி ..,மழை அப்பவோ ,இப்பவோனு பிறக்க தயாராகி கொண்டிருந்தது ..,
மகனே ! யார் சொல்றதையும் கேட்காத உன் உள் மனசுக்கு எது சரிப்படுதோ அதையே செய் ...!! நாங்க தடுக்கல ..! வடக்கு ,தெற்கு தெரியாது என் தாத்தா ...! உன்
தாத்தா ரயில் பார்த்தாரு ... நான் விமானம் பார்த்தேன் ... ஆனா யாரும் பயணம் செய்யல .... நீயாச்சும் உலகத்தை சுற்றி வீடு வந்து சேரு.....
அப்போதான் முதல் முறை கண்டேன் ! கடலில் கப்பல் மிதப்பது போல் விமான நிலையமும் மிதந்தது கண்ணீர் கடலில் ...
முதல் தடவை விமானத்தில் பயணம் செய்வதை நினைக்க நினைக்க..,மகிழ்ச்சியாக இருந்தது பயணிக்கும் போது தான் தெரிந்தது ...!
பறவைகளை நாடு கடத்தும் பேருந்து என்று..!
அருகில் இருந்த பயணி ஒருவர் கூறினார்.., நானும் முதல் தடவை வரும்போது மகிழ்ச்சியாக தான் இருந்தேன் ..! ஏறும் போது மட்டும்தான் நினைவிருக்கு 15 வருஷம் ஓடிருச்சு தம்பி என்றார்..,
ஆகாயத்தில் விழுந்த இடி விமானத்தை தாக்கியது இல்லையோ என் மனதைத் தாக்கியது ..,
விமான நிலையத்திலிருந்து செல்லும்போது பார்த்தேன் ..,அந்தக்காட்சி சுற்றி முற்றிலும் பாலைவனம் நம்ம ஊர்ல தோண்டினால் தண்ணி வரும் ..!அதனால் மரம் நிறைய பார்க்கலாம்..., ஆனால் இங்கேயோ தோண்டினால் கச்சா எண்ணெய் தான் வருது எப்படி வளரும் மரம்??? என்று மனதுக்குள் கேள்வியும் பதிலுமாக ஓடிக்கொண்டிருந்தது..,
இந்தப் பாலைவனத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டகம் மந்தையில் ( workers camp) ஒரு அறை கொடுக்கப்படுகிறது.., இந்த மந்தையில் ஜாதி ,மதம் , எதுவும் இல்லை.., பாகிஸ்தான் ஒட்டகம் தான் என் அறை நண
்பன்..!
இந்தக் கந்தக பூமியில் கச்சாஎண்ணெய் பாலைவனத்தில் ஒளிச்சு வச்ச மாதிரி- இங்கு இருக்கிற அனைவரும் பந்தம் ;பாசம்; வைராக்கியம் ;-எல்லாத்தையும் ஒளிச்சு வச்சு பாலைவனத்தில் முளைக்கின்ற பாறை தான் இருக்கு இந்த மனசு..!
தாங்கமுடியாத வெப்பமும் , குளிர் காலமும் குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் அவமானங்கள் நினைத்து தாங்க செய்கிறது..! பாறை ஆச்சே..!
ஊர்ல முதல் மாதம் ஊதியம் rs.15000 வாங்குகிற சந்தோசம் இருக்கே..! படுக்கை அறையில் காபி ,தேனீர் ,அம்மா ;சம்பாதிச்சாலும் அப்பாகிட்ட கேட்கிற காசு; இந்தியா- பாகிஸ்தான் மாதிரி தம்பி சண்டை ;
இதெல்லாம் இங்கே முதல் மாதம் சம்பளம் வாங்கும் போது இந்த சந்தோஷத்தை தான் நினைச்சு பாக்குது மனசு..! எதுவும் பக்கத்திலிருந்த அருமை புரியாது ..!அதை அனுபவிக்கும் போது தான் புரிந்தது..!
ஆடு ,கோழி, மீன் இதுதான் வியாழகிழமை இரவு ஆரம்பிக்கிற சந்தோஷம்.., இதுல என்னன்னா..! அந்த நாள்ல ஊர்ல உறவுக்கு விசேஷம் நடக்குதுன ...! குழம்பு கொதிக்கிற மாதிரி கறித் துண்டு மாதிரி துடியாய் துடிக்குது இந்த மணம் (மனம்) ..!வெள்ளிக்கிழமை மதியம் முடிந்து போகுது அந்த சந்தோசம்...
பொங்கல்., தீபாவளி வாழ்த்து உதடு சந்தோசமாக எல்லார்கிட்டயும் பகிர்கிறது..! ஆனா மனசுக்கு ..?? கச்சா எண்ணெய் எடுக்க பூமியைத் துளைக்கும் போது அந்த பூமித்தாயோட வலி இருக்கே ..!அந்த வலி தான் இந்த மனசுக்கு..!
உறவுகள் யாரும் உயிர் துறந்தால் கைப்பேசியில் ஆறுதல் சொல்வது; தொழிற்சாலையில் மணி (சங்கு) அடிக்குது; மனசு ஓ... கதறுது ..; பாலைவனத்தில் இரண்டு சொட்டு தண்ணி வடியுது..; இந்த பூமா தேவி நனையுது கண்ணீர் மழைல ..; இவ்வளவு தான் எங்கள் துக்கம் முடித்து வைக்குது..;
இதையெல்லாம் தாங்கிய பின் வேலை செய்கிற இடத்துல ஒரு அரசியல் இருக்கே..!
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கூட தீர்ந்துவிடும் ..
இந்த கேரளா-தமிழ் அரசியல் முல்லைப்பெரியாறு மாறி நீளமா போய்க்கிட்டே இருக்கு...!
இதற்கு இடையில் குத்துனது கட்டப்பா யாருன்னு பார்த்தா...? நம்ம தமிழினம் தான்..!
எம்தேசத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய, சோழ வம்சங்கள் அழிந்தது..! என்று நினைத்தேன்.., இங்கு வந்தபின் தன் தெரிந்தது ....தமிழ் கலாச்சாரத்தையும் , மொழியையும் ,பண்பாட்டையும் ஆங்காங்கே தமிழ் சங்கத்தை வைத்து வங்காள விரிகுடாவில் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்... இந்த வம்சத்தை நினைத்து யாரும் "அழிக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்" ..!என்று மனதுக்குள் ஓலமிட்டுக் கொண்டது..,
ஊர்ல விமான வந்தா ஓடி ..ஓடி பார்த்த கண்கள்..! இப்போது காலண்டர் தேதி எண்ணி ...,எண்ணி..பார்க்குது எனக்கான பயணம் எப்போது என்று..!
விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் தேதி அருகில் வரும்போது ..,பாலைவனத்தில் விளைகிற பேரிச்சம்பழம் மாதிரி இனிப்பாய் ..,இனிக்குது..
ஒவ்வொரு தடவையும் விடுமுறைக்கு இதுதாண்டா கடைசி பயணம் நினைத்து ஊருக்கு போவது மனசு..!
அங்க போன பின்பு தான் தெரியுது ..! கிராமத்துல பஞ்சாயத்தில் ஊரே தள்ளி வைத்த ஒரு குடும்பம் ..! திடீரென்று பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான ஒரு மரியாதை... அந்த வரட்டு மரியாதை கௌரவத்துக்காக இழக்கக்கூடாது.., மீண்டும் ஏறுது மனசு விமானத்துல.. ( கிராமத்து பஞ்சாயத்து - அக்கம்பக்கத்தினர் சொந்தம் பந்தம்)
வந்தோம்! பொருள் இழந்து கடல்கடந்து ;
வாழ்கிறோம் ! உறவுகளைப் பிரிந்து இயந்திரமாய் ;
உண்டோம் ! நினைவுகள் எல்லாம் ஊரில் வைத்து விட்டு உணவென்று ;
தூங்குவோம் !அடசா இவ்வளவுதானா வாழ்க்கை என்று..;
வாழ்வோம் ! இனி அடுத்த தலைமறையாவது சொந்த மண்ணில் உழைத்து வாழ வேண்டும் என்று ஆணவத்துடன்..;
ஏங்குவோம் ! இவ்வளவையும் தாங்கிய பின் மாதக்கடைசியில் கைபேசியில் ஒரு ஒலி..,ஊதியம் வந்துவிட்டதா என்று ..; - இது தான் வெளிநாடு வாழ்க்கை
கைப்பேசி மற்றும் வலைதளம் உள்ள காலங்களில் இப்படி இருக்குன ; இதற்கு முன் இங்கு 80..,90.., காலங்களில் பயணித்த நிலைமையை நினைத்தால்...
இந்த வெளிநாட்டு வாழ்க்கை வரமா? சாபமா??
விமான அறிவிப்பு (flight announcement)
உங்கள் பயணம் இனிதாக நிறைவுற்றது..;
மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.;
இதில் பயணித்த அனைத்து பயணிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.