Dr.PadminiPhD Kumar

Tragedy

4.8  

Dr.PadminiPhD Kumar

Tragedy

ஞாயிறுதோறும் சிறுகதை - சுதந்திரம்

ஞாயிறுதோறும் சிறுகதை - சுதந்திரம்

3 mins
306



                             சுதந்திரம் என்பது நம்மோடு இணைந்து பிறப்பது தானே! அது மற்றவர்களிடம் யாசித்துப் பெற வேண்டியதோ, தேடித்தேடி அலைந்து பெற வேண்டிய ஒன்றோ இல்லை; அது,”நான் தான் சுதந்திரம்” என்று சொல்லி நம் கைகளில் வந்து சேர்வதும் இல்லை; சுதந்திரம் நமது பிறப்புரிமை. ஆனால் பெண்கள் அந்த சுதந்திரத்தை சரிவரப் புரிந்து கொள்ளாமல் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என சொல்வது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தி தான் ரமணனின் சித்தி ராதை.


        ரமணன் மதுரையின் மிகப் பிரபலமான ஜவுளிக்கடை முதலாளியின் மகன். அவனது அப்பாவுடன் பிறந்த தம்பி ராமானுஜர். அண்ணன் தம்பி இருவருடனும் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள் - அம்புஜம் அத்தையும், அலமேலு அத்தையும். அத்தைகள் இருவரையும் மதுரையிலேயே கட்டிக் கொடுத்ததால் அவர்கள் தினமும் அம்மா வீட்டிற்கு வந்து போவது குடும்ப வழக்கமாகவே இருந்தது. அத்தைகள் இருவரும் காலையில் வந்து இங்கே டிபன் சாப்பிடுவார்கள்; மதிய சாப்பாட்டிற்கு அவர்கள் மாப்பிள்ளைகளும் இங்கேயே சாப்பிட வந்துவிடுவார்கள்; இரவு சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்படுவார்கள்.


       ரமணின் அம்மா வீட்டிற்கு மூத்த மருமகள் என்பதால் அனைவருக்கும் சமைத்துப் போடுவதில் கை தேர்ந்த பெண்ணாக மாறி விட்டார், இளைய மருமகள் ராதை வீட்டிற்கு வந்ததும் அனைவரும் குடும்ப பாரத்தை அவள் மீது சுமத்த தயாராகினர். ரமணன் அப்போது பள்ளிக்குச் செல்லும் பாலகன். தங்கள் வீட்டிற்கு சித்தப்பாவுடன் புதிதாக சித்தி வந்ததில் அவனுக்கு மிகவும் சந்தோஷம். சித்தியை தன்னுடன் விளையாட கூப்பிட்டான் ராதை கிராமத்தில் ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக வளர்ந்ததால் வீட்டு வேலைகளில் ஒன்றிப் போக முடியாமல் திணறினாள்.


           கல்யாணமான மறுவாரத்தில் கூட்டுக் குடும்பத்தி ற்குள் அழைத்து வரப்பட்டாள் ராதை. அன்று மொட்டை மாடியில் வடு மாங்காய், எலுமிச்சை என விதவிதமான ஊறுகாய்கள் பெரிய பெரிய பீங்கான் ஜாடிகளில் வெயிலில் காய வைக்கப்பட்டு இருந்தன. ரமணன் சித்தியை மொட்டை மாடிக்கு அழைத்து வந்து ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தான்.


அங்கே அத்தைகளும் அம்மாவும் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஓடிய வேகத்தில் ராதை தடுமாறி ஊறுகாய் ஜாடிகளின் மேல் விழ, அவைகள் உருண்டு, உடைந்து, ஊறுகாய்கள் சிதறி கொட்டின. கொட்டிய ஊறுகாய்களின் சிவப்பு மிளகாய் மசாலாக்களில் சிவப்பு ரத்தமும் கலந்ததை யாரும் கவனிக்கவில்லை.ஆம், ஓடிய வேகத்தில் ராதையின் காலில் உடைந்த ஜாடியின் ஒரு துண்டு ஆழமாக இறங்கியதும் ரத்தம் பீறிட்டு வந்தது.


           அத்தைகளும், ரமணனின் அம்மாவும் ஊறுகாய்கள் வீணானதைப் பெரிதுபடுத்தி ராதையை திட்டிக் கொண்டிருந்தனர். பாரம்பரிய ஊறுகாய் ஜாடிகள் உடைந்ததை அபசகுனமாகக் கூறி வீட்டுப்பெண்கள் பேசவும் ஆண்களும் ராதையிடம் அந்நியோன்யமாக பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தனர். ராமானுஜம் ஏற்கனவே ஒரு சங்கோஜி; யாரிடமும் அதிகம் பேசமாட்டார்; ராதையிடமும் அப்படித்தான்.


ஒருநாள் வீட்டுப் பெண்கள் மூவரும் கோவிலுக்கு போய் இருந்தனர்.”நீ ஏன் போகவில்லை, சித்தி?” என ரமணன் கேட்டதற்கு,”கால் வலி;அதனால் போகவில்லை” என ராதை சொன்ன பிறகுதான் ரமணனுக்கு தெரியவந்தது பீங்கான் துண்டு குத்திய இடம் செப்டிக் ஆகி விட்டது என்பது. சித்தப்பாவிடம் சென்று விஷயத்தைக் கூறி உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும் என வற்புறுத்தினான். சித்தப்பாவும் நிலைமையைப் புரிந்துகொண்டு ராதையை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ரமணனும் உடன் சென்றான்.


        டாக்டர் காயத்தை சுத்தம் செய்து, மருந்து போட்டு கட்டிய பின்,”தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி சில மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்தார். தண்ணீரில் புழங்காமல் நாட்களை நகர்த்துவது பாரத வீட்டுப் பெண்களுக்கு இயலாத காரியம். ராதை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன! மேலும் டாக்டரிடம் காண்பித்ததில் தன் கடமை அத்தோடு முடிந்தது என்று ராமானுஜர் நினைத்தார். அதன்பின் ராதையின் காலை பற்றி அவர் அக்கறை கொள்ளவே இல்லை. ராதையும் மாத்திரைகள் சாப்பிட்டதில் வலி குறைந்ததால் இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் மெத்தனமாக இருந்து விட்டாள்.


         ரமணனின் ஸ்கூல் படிப்பு முடிந்து சென்னை அடையாறில் உள்ள ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் எல்லோரிடமும் விடைபெற்று சென்று விட்டான். கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் ஆனது. அவனைப் பார்க்க அவன் அப்பா மதுரையில் இருந்து வந்திருந்தார். மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்று தன் கல்லூரி அனுபவங்களைச் சொன்னவன் குடும்பத்தில் எல்லோரையும் விசாரிக்க ஆரம்பித்தான்.


அம்மா,அத்தை, அவர்கள் குழந்தைகள் என சொல்லிக்கொண்டு வந்த அப்பா தன் தம்பி பற்றி பேச ஆரம்பிக்கும்போது தயங்கினார்.”சித்தப்பா, சித்தி எப்படி இருக்கிறார்கள்?” என ரமணன் மிகவும் ஆவலாக கேட்கவும், இனியும் சொல்லாமல் மறைக்க முடியாது என்பதால்,”சித்தி ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். சித்தப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. ஏதோ எலும்பு புற்றுநோய் என்று கூறுகிறார்களாம்.”என சொன்னதும் ரமணனுக்கு அதிர்ச்சி. அப்பாவுடன் சித்தியை பார்க்க தான் மதுரை வருவதாக சொன்னதும் மறுக்க முடியாமல் இருவருமாக மதுரை திரும்பினர்.


      வீட்டுப்பெண்கள் இப்போதும் ராதையைப் பற்றி குடும்பத்திற்கு ஆகாதவள் என பேசினார்களே தவிர யாருமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.ரமணன் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சித்தியைப் பார்த்தான். அழகு, இளமை என அனைத்து பொலிவையும் இழந்து கிழிந்த நாராய் கட்டிலில் இருந்தாள் ராதை.


டாக்டர்களிடம் கேட்டதில்,” அடிபட்ட காலை ஆரம்பத்திலேயே கவனித்து இருந்தால் இந்த அளவுக்கு புரையேறி இருக்காது. இப்போது எலும்பை தாக்கியதில் புற்றுநோய் ஆகிவிட்டது. வீட்டில் யாரும் கவனிக்காததால் மிகவும் சீரியஸ் ஆகிவிட்டது. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தான் கொடுக்க வேண்டியிருக்கிறது.” என சொன்னதும் ரமணனுக்கு முதலில் குடும்பத்தினரின் மீது அதிக கோபம் ஏற்பட்டது.


    அமைதியாக சித்தியின் அருகில் அமர்ந்து அவளை பார்க்கும் போது தான் தோன்றியது இவள் ஏன் தன்னை இப்படி வருத்திக் கொண்டிருந்திருக்கிறாள்? தானே முன்வந்து தன்னை கவனித்துக் கொண்டிருந்திருக்கலாம். சுதந்திரப் பறவையாக தன்னை நினைக்காமல் சிறகொடிந்த பறவையாக அவள் ஏன் தன்னை மாய்த்துக் கொண்டாள் என்று சித்தி மீது பச்சாதாபம் கொண்டான்.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy