நான் பற்ற வைத்த நெருப்பு
நான் பற்ற வைத்த நெருப்பு
இரு விரல்களால் பிடித்து...
இதழ்களால் கடித்து....
நெருப்பினால் உனைப் பற்ற வைத்து..
புகையை உள்ளிழுத்து....
உள்ளிழுத்ததை வளையம் வளையமாய்....
வாயால் ஊதும் போது ....
வந்த சுகம் அம்மம்மா!
கண்ட சுகம் ஆஹா! வார்த்தையில்லை!
நெஞ்சிலிருந்த பாரமெல்லாம் ....
பஞ்சாய் பறந்து போகும்!
உணவை ருசித்ததைவிட...
உன்னை ருசித்ததே அதிகம்!
உலகை ரசித்ததை விட....
உன்னை ரசித்ததே அதிகம்!
மனைவியின் நெற்றியில் இதழ் பதித்ததை விட....
உன் நெற்றியில் முத்தமிட்டதே அதிகம்!உன் வாசம் கொள்ளாது....
என் நாசி தாங்காது!
உன்னை ரசிக்காது என் விழிகள் உறங்காது!
உன்னைத் தொடாது....
என் விரல்கள் விடாது!
நீயின்றி நானில்லை!
உன் வாசமின்றி என் சுவாசமில்லை!
காலங்கள் கரைந்தன....
என் தேகமும் குறைந்தது!
கரித்துகள்களால் என் காற்றுப்பையை நிறைத்தாய்!&n
bsp;
இரும்பை போன்ற என் எலும்பு தேய்ந்து கிடக்கிறது!
ஓடியாடி உழைத்த என்னுடம்பு ஓய்ந்து கிடக்கிறது!
முறுக்கேறி கிடந்த நாடி நரம்பெல்லாம் ....
உருக்குலைந்து தளர்ந்தே போனது!
பஞ்சு மெத்தையெல்லாம் முள்ளாய் போனது!
படுத்துக்கிடந்தே படுக்கையும் பகையானது!
புண்கள் புரையோடிப் போனது!
ஆஸ்துமாவால் என் ஆன்மாவைப் பறிக்கிறாய்!
கபத்தினால் என் கபாலம் உடைக்கிறாய்!
புற்றுநோயால் என் ஊனை கொறிக்கிறாய்...
உடல் மட்டுமல்ல...என் சுவாசமும் பாரமானது!
என் வாழ்நாள் இன்னும் கொஞ்ச தூரமேயானது!
நான் பற்ற வைத்த நெருப்பு எனை மட்டுமல்ல.....
என் குடும்பத்தையும் பற்றி எரிக்கிறது!
என் கண்முன்னே உதிரும் சாம்பல்
என் எதிர்காலத்தை விவரிக்கிறது
காதலியாய் கண்ட உனை
காலனாய் காண்கிறேன்!
புகை நமக்கு பகை....
சுகங்கள் ஆயிரம் வகை!
தேர்வு செய்வோம் நல்வகை!
நம் வாழ்க்கை நம் கையில்!