தடம் மாறாத காதல்...
தடம் மாறாத காதல்...
வண்ணத்து பூச்சியாய்..
துள்ளிச் சிறகடித்து
விழிகளின் வழியே
இதயம் நுழைந்த
பிசிரில்லாமல்
பிரம்மன் வரைந்த
பிரம்மிக்க வைக்கும்
உயிர் சுமந்த ஓவியம்..
உள்ளத்தை ஊசலாட்டும்
விழிகளின் விசாலமான
ஒளி முற்றத்தில்
மின்னலாய் நுழைந்த
மறுகணமே
மூளையின் உள் மூலையில்
சின்னதாய் ஏற்பட்ட
பெரிய பாதிப்பால்
விழிகள் இரண்டும்
இமைக்க மறந்து
கிறங்கடிக்கும்
அழகிய அழகினை
ஆராதிக்கும்
ஆசையை உந்தவைத்து
மனதின் சிறகுகளை
பெரிதாய் விரிய வைத்து
கிளர்ச்சியில் உள்ளத்தை
உற்சாகத்தின் விளிம்பில்
ஊசலாடி லயிக்கச் வி்ட்டது..
விழிகளின் வலையில்
வீழ்ந்த இருவிழிக்கயல்கள்
வீசிய வசியப்பார்வை
பேசாமல் பேசிய
விழி வழி மொழி
காதலுக்கு வழியமைக்க...
குவிந்து இணைந்த
சிவந்த இதழ்கள்
இடைவெளியில்
பாண்டிய நாட்டு
முத்துப்பற்கள்
சிதறிய மின்னலின்
வெட்கிச் சிந்திய
மெல்லிய புன்னகை
பெண்மையின் நாணத்தையும்
மென்மையான காதவையும்
ஒருசேர தாங்கி வர...
தங்க சிலையின்
தலைமுதல் தரைவரை
அங்கம் முழுவதும்
தழுவிய நாணம்..
அவளின் அழகிற்கு
மகுடமாகி அழகின்
அளவினை அதிகமாக்கி
விழிகளின் வழியே
இதயத்தில் நுழைய
விழிகள் இமைகளை
இணைய விடாமல்
விழித்துக்கிடந்தன
மீண்டும் காணும்
தருணத்திற்காக...
மீண்டும் மீண்டும்
கண்ட போதெல்லாம்
கண்கள் பார்வையால்
காதலை பரிமாறிக்
கொண்ட வேளையில்
விழி வழி மொழியால்
ஏதோ ஒரு புதுவித புரிதல்..
அடுத்த கனத்தில்
காதல் கனிந்த
கனத்த மனதில்
விழிகளின் மொழிகள்
நெருங்கிப் பழகிட
ஏங்கிய மனது
மூளையின் செவிக்குள்
மெள்ள முனுமுனுத்தது..
மனதினை புரிந்த
மூளையின் இயக்கம்
இதயத்தின் தயக்கத்தை
மாற்றிய போது
இதயத்தின் இயக்கத்தில்
இதுவரையில்லாத
சின்னதோர் மயக்கம்..
இதுவரையில்லா
இதுவரை உணரா
ஏதோ உணர்வு..
இதயத்தின்
இதயத்தில்
அன்பு மிகையுற
அழுத்தம் உயர்ந்திட
இதயத்தில் தொடங்கி
உடலெங்கும் படர்ந்த
உதிரத்தை சுமந்திடும்
நாளங்களெல்லாம்
புலன்கள் ஐந்தினில்
உணர்ச்சியை மீட்டிட.
வாழ்வின் இலக்கினை
அடைந்திடும் வேளை
வந்ததாய் எண்ணி..
மகிழ்ந்து மிதந்திருந்த
வேளையில் எங்கிருந்தோ
பறந்து வந்த கரப்பான்
பூச்சியைப் பார்த்து
அதிர்ந்து துள்ளிக்
குதித்த அழகுச்சிலையின்
கொலுசணிந்த கால்
விரலின் புதிய மெட்டி
என் பார்வையே
(ஏ)மாற்றியது..
- இரா.பெரியசாமி..