கோடையின் அழகு..
கோடையின் அழகு..
சித்திரை மாதத்து தெய்வீகப்
பெளர்ணமியில் வானத்தில்
மிதந்து புன்னகைக்கும் தங்க
வெண்ணிலவின் முகம் அழகு..
கோடை வெப்பத்தின் தாக்கத்தைப்
போக்கிட சுவைத்திடும் தித்திக்கும்
வெண்பனி வண்ணத்து ஆழ்குளிர்
வெண்ணிலா பனிக் கூழினிப்பு
பங்குனி கழிந்ததும் திரும்பிடும்
திசையெங்கும் விழி, நா, மூக்கு
முப்புலனை மயக்கும் மாங்கனியின்
மணமும் சுவையும் தனிச்சிறப்பு..
கொளுத்தும் வெயிலில் இலைகளை
உதிர்த்த மரங்களிலும் உதிர்த்தபின்
துளிர்த்த கிளைகளிலும் பூத்துக்
குலுங்கும் பலவண்ண மலர்களழகு..
கோடை விடுமுறையில் கட்டுப்பாடும்
பள்ளிக்கூடமும், வீட்டுப்பாடமும்
இல்லாது சுதந்திரமாய் குதூகலித்து
விளையாடும் குழந்தைகள் வேறழகு..
பூங்காக்களின் பசும் புல்வெளியிலும்
மரங்களின் கீழும் ஓய்வாக அமர்ந்து
மகிழ்கின்ற அனைத்து வயதிலுள்ள
ஆண்களும் பெண்களும் பேரழகு..
கடற்கரை மணல் மேல் கைகோர்த்து
ஒருசேர சிரித்து இடையே இடமின்றி
தோள்கள் உரசிட ஆடி ஓடி நடக்கின்ற
இளம்காதலர்களின் நடையழகு..
பொறுமைமிகு பூமிமீது வெப்பமிகு
வெண்கதிர் கொண்டு தாக்குகின்ற
கதிரவனின் கடுங் கோடையும் ஏதோ
சிலவகையில் அழகுதான்...
இரா. பெரியசாமி..