மழை
மழை
வான் முத்துக்களை பார்த்து பார்த்து
பத்திரமாய் பொதிந்து வைத்த போதிலும்,
பூவுலகுக்காக கார் மேகங்களுடன் போர் செய்து
முட்டி மோதி பூமியைத் தொடும் நீர்ப்பூக்களே,
உன் அழகை என் சொல்லி போற்றுவேன்!
உன் வரவைக் கண்டு பூக்களும் புன்சிரிக்கும்,
நண்டுகளும் நாட்டியம் ஆடும்!
பூவுலகம் மகிழ்ச்சியில் திளைக்கும்
உன் வருகையைப் பார்த்த உழவாளியின்
முகத்தில் தான் எத்தனை ஆனந்தம்!
அடடா, உன்னைப் பார்க்கவே தவம் இருந்தது போல!!
நதிகள் உன் வருகையைக் கண்டு ஆனந்தப்
பெருக்கெடுத்து மெல்லிசை பாடி கொலுசணிந்து ஆடி ஓடும்!
அமிர்தமுண்டால் அமரராகலாம் என்பதை அறிந்து நீ,
வானிலிருந்து அந்த அமிர்த கலசத்தை பூமியெங்கும்
அள்ளித் தெளிக்கின்றாய்!!
தாயாகிய நீ அந்த முறை மட்டும் என்
மகளாகி நான் தூக்க என் உள்ள
ங்கையில்
நிறைந்து விடுகிறாய், அம்மா !!
இந்தப் புல்லின் மேல் விளைந்த வைரம் தான் எத்துணை விலை போகுமோ !!
மண்வாசணையையும், மழைச் சாரலுடன் பேசிக் கொண்டிருக்கும்,
சில்லென்ற தென்றலையும் உணர்கையில்,
மீண்டும் புதிதாய் பிறந்தது போல
தோன்ற வைக்கின்றாய்!
சொர்க்கமா! அது யாருக்கு வேண்டும்?
சொர்க்கத்திற்கே கிடைக்காத பேரின்பத்தை நீ
எங்களுக்காக வாரி இறைக்கின்றாய்!!
பறவைகள் பாட்டிசைக்க,
வானவில் கோலம் போட,
காற்று வாசிக்கும் இசையில்
மரங்கள் ஆனந்தக் கூத்தாட,
பூமியெங்கும் பூத்துக் குலுங்க,
வான் துளி என் மேல் வந்து விழ,
என்னை மறந்து நான் துள்ளி ஆட,
அப்பப்பா! இத்தணை இன்பம் கிட்ட எத்தணை
பாக்கியம் செய்தேனோ நானறியேன்!!!